வெள்ளி, செப்டம்பர் 27, 2013

புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை




புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை 

எனக்கு சுற்றுலா செல்வதென்றால் கொள்ளை பிரியம். எந்த ஊர் சென்றாலும் அந்த ஊரின் சிறப்புகள் வரலாறு போன்றவற்றை 
ஆர்வமுடன் தெரிந்து வைத்து கொள்வேன். அது சின்ன ஊராக 
இருந்தாலும் சரி. அப்படிப்பட்ட எனக்கு புண்ணிய ஸ்தலங்களை 
நோக்கி ஒரு பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்க பெற்றால்  
எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் இதோ அதை பற்றிய தொடர் 
பதிவு தான் இது

என் அலுவலகத்தில் நான் என் நண்பரிடம் ஷிர்டி செல்ல வேண்டும் 
என்று ஆர்வமாய் சொல்லி கொண்டிருந்தேன். ஒரு நாள் திடீரென்று
முடிவெடுத்தோம் செல்லலாம் என்று. அதன் படி அலுவலக நண்பர்கள் மூவருடன் சேர்ந்து நானும்  இன்று இரவு ரயிலில் ஆன்மீக சுற்றுலா கிளம்புகிறோம் 

 நாங்கள் செல்லும் ஸ்தலங்கள்

ஷிர்டி சாய்பாபா கோவில் ,பண்டரிபுரம்,சனிசிக்னாபூர், நாசிக் கோயில்கள், (இவற்றுடன் அஜந்தா எல்லோரா ) சென்று விட்டு பின் மும்பை 
வந்து அங்கிருந்து சென்னை வருகிறோம்.

பரபரப்பான வாழ்க்கை சூழலில் சலித்து நிற்கும் போது இது போன்ற பயணங்கள் வாழ்க்கை மேல் ஒரு பிடிப்பினை ஏற்படுத்தும் என்பது 
என் எண்ணம் 


ஒரு நல்ல ஆன்மீக பயண கட்டுரை எழுதும் வாய்ப்பு இதன் மூலம் 
அமையும் என நினைக்கிறேன். ஆண்டவன் அருளுடன் உங்களின் 
அன்பும் ஆதரவும் சேர்ந்தால் இப் பதிவை வெற்றிகரமாய் தொடர வாய்ப்பிருக்கிறது

ஆர்.வி.சரவணன் 

புதன், செப்டம்பர் 25, 2013

குடிக்காதது குத்தமாய்யா








குடிக்காதது குத்தமாய்யா 


சரக்கை பற்றிய  ஜாலியான ஒரு அனுபவ பதிவு இது. அதாவது சரக்கு 
அடிச்ச நண்பர்கள் இடையிலே சரக்கு அடிக்காம மாட்டிய  என்னோட 
போதை சீ கதை வாங்க பாட்டில் ஓபன் பண்ணுவோம் 



சின்ன வயசுலே தண்ணி அடிச்சிட்டு பேசறவங்களை பார்த்தாலே  எனக்கு பயம். ரோட்டிலே ஒருத்தர் குடிச்சிட்டு  நடந்து வந்தா கூட பம்மி ஒதுங்கிடுவேன். போதை ஏற ஏற சீ வயசு ஏற ஏற  பயம் போயிடுச்சு. 
கல்லூரி வாழ்க்கையில்  நண்பர்கள் எப்படியாவது எனக்கு புனல் வச்சாவது வாயில சரக்கை ஊத்திடணும்  னு முடிவு பண்ணி அலைஞ்சாங்க. நான் சிக்கலை இப்படியே போயிகிட்டிருக்குமா வாழ்க்கை.

வேலைக்கு வந்த பின்னாடி இது விஷயமா நான் பட்ட பாடு இருக்கே 
அது சொல்லி மாளாது (இருந்தாலும் சொல்றேன்) ஒரு நாள் படத்துக்கு போலாம் னு கிளம்பறப்ப என் அலுவலக நண்பன் நானும்  வரேண்டா 
என்று சொன்னான். சரி என்று வர சொல்லி விட்டு  மவுண்ட் ரோடு 
வந்தேன். நான் பஸ்ஸை விட்டு இறங்கறப்ப  ஒரு நண்பர்கள் படையோட 
என் நண்பன் வெயிட்டா  வரவேற்பு கொடுத்தான்." மச்சி சும்மா படத்துக்கு 
போனா ஒன்னும் எபக்ட் இல்லே. கொஞ்சம் ஸ்மால் விட்டுட்டு 
போலாம் "  னு அவன் சொன்னவுடன் ஆஹா ஆரம்பத்திலேயே வா  என்று 
உள்ளுக்குள்  கலங்கியவன் மறுக்க முடியாமல்  அவர்கள் சரக்குடன் 
வாட்டர் கலக்குவதை பார்த்து கொண்டிருந்தேன். ஸ்மால்  என்பது லார்ஜ்  ஆகி போனது

அவர்கள் செய்த அலப்பறையை அடக்கி வெளியில் கொண்டு வந்தேன்.தெருவையே அளந்து கொண்டு அவர்கள் சென்று கொண்டிருக்க அந்த பக்கம் வந்த ஒரு பெண்ணின் தோள் மேல் கை போட்டு விட்டான் நண்பன் அந்த பெண்ணும் கூட வந்த பையனும்  சண்டைக்கு வர நான் மன்னிப்பு கேட்டு  அவர்களை தியேட்டருக்கு அழைத்து கொண்டு வந்தேன்.

டிக்கெட் வாங்கி சீட்டில் அவர்களை அமர வைப்பதற்குள் எனக்கு கண்ணுல தண்ணி வராத குறை. தூங்கி போனவர்களை படம் முடிஞ்சவுடன் எழுப்பிய போது "என்னது படம் முடிஞ்சிடுச்சா விளம்பரம் தானே ஓடுதுன்னு தூங்கினோம். எழுப்ப வேண்டியது தானேடா"  என்று நண்பன் முறைக்க நான் பதிலுக்கு முறைத்தவுடன் அனைவரும் பெட்டி பாம்பாய் அடங்கினர்

இத்தோடு நான் ஒதுங்கியிருக்க வேண்டும் முடிந்ததா இல்லியே 

அடுத்ததாக ஒரு  நண்பருக்கு கல்யாணம் என்று பார்ட்டி ஏற்பாடானது
என்னை என் நண்பன் அழைக்க  நான் மறுக்க, விடாமல் என்னை அழைத்து சென்றான். அங்கு பெரிய ஹோட்டலில் பார்ட்டி நடந்தது. எல்லோரும் சரக்கு சாப்பிட நான் கூல் ட்ரிங்க்ஸ் சாப்பிட்டேன் அப்போது அறிமுகமான நண்பர்கள் என்னை ஒரு உலக அதிசயம் போல் பார்த்தனர் நேர் காணலும்  நடத்தினர்

"நீங்க ஏன் சாப்பிடறதில்ல"

"பிடிக்கலை"

"சரி ஒரு வாட்டி டேஸ்ட் பார்க்கலாம் ல "

"வேணாம் ப்ளீஸ்"

 இப்படி போய்கிட்டிருந்த உரையாடல் போதை ஏற ஏற பாதை மாறியது
எப்படி

"என்ன  மச்சி உன் ப்ரெண்ட் தனியா நமக்கு தெரியாம சாப்ட்டுட்டு இங்க நல்லவன்  மாதிரி ஆக்டு  குடுக்குறாரோ"

"சீ ச் சீ அவன் சுத்தமானவன்"

"தம்மடிப்பாரோ"

"நோ"

"சைட்"

"தண்ணி அடிக்கிற நேரத்துல கூட சைட் அடிக்கிறது  கட் ஆகிட கூடாது னு தான் அவன் தண்ணி அடிக்கிறது இல்லேன்னு நினைக்கிறேன்"

"அட இங்க பார்ரா என்ன   தலைவா அப்படியா"

நான் நண்பனை முறைக்க அவன்  ஜாலிக்கு  மச்சி என்றவன் திடீரென்று பேச்சை  மாற்றி

"நம்ம ப்ரெண்ட் பாரதிராஜா  குரல்ல முதல் மரியாதை டையலாக் பேசுவான் தெரியுமா. பாக்யராஜ் டி.ராஜேந்தர்  மாதிரி  டான்ஸ் பண்ணுவான். மச்சி என் பிரெண்ட்ஸ் க்காக சொல்லேன் " என்று போட்டு கொடுக்க நான் மறுக்க,

அவர்கள் "பாஸ் நாங்க என்ன நீங்க பண்றதை ரசிக்கிற அளவுக்கு ரசனை இல்லாதவங்களா"என்று டபாய்க்க ஆரம்பித்தனர்.

 நான் வேறு வழியில்லாமல்  டான்ஸ் ஆடி காட்டினேன் பேசி
காண்பித்தேன்.ஓகே ஓகே படத்தில் சந்தனம் மிமிக்ரி செய்வது போல் 
ஆகி விட்டது என் நிலைமை.  திரும்ப திரும்ப பண்ண சொல்லி அவர்கள் போதைக்கு அன்று என்னை ஊறுகாய் ஆக்கி விட்டனர்

அடுத்து வந்த நாட்களில்  பார்ட்டி ஏற்பாடாகி என்னை கூப்பிட, நான் 
மறுத்தேன் மேலும், இப்ப எதுக்காக பார்ட்டி என்று கேட்டேன்.மச்சி நம்ம பிரெண்டு பொண்ணு பார்க்க போறான் அதுக்காக கொடுக்கிறான் என்றனர்

இதுக்கெலாம் ஒரு பார்ட்டி யாடா என்று நான் பல்லை கடிக்க, அவர்கள் 
"நீ வரலைனா பார்ட்டி கான்ஸல்" என்று அடம் பிடித்தனர்

"பாசக்கார  பயலுங்களா இருக்காங்கலே. நம்மை  கூப்பிடாம ஒரு 
பார்ட்டி  கூட இவங்க நடத்தறதில்ல  பாரு" என்று நான் நெகிழ்ந்தேன். 
ஏன் நெகிழ்ந்தோம் என்றாகி விட்டது.

 அன்றைய போதையில் ":மச்சான் உன்னை எதுக்கு அழைச்சிட்டு வரோம் தெரியுமா. நாங்க மட்டையானா எங்களை வீட்டில் கொண்டு போய் சேர்க்க ஆள் வேணும்ல அதுக்கு தான்"  என்றான்.

" டேய் பார்ட்டி க்கு ஹோட்டல் புக் பண்ணிட்டு செக்யூரிட்டி க்கு  என்னை புக் பண்றீங்களா" என்றதற்கு 

"நான் சொல்லல மச்சான் கற்பூரம் மாதிரி. படக்குன்னு பிடிச்சுக்குவான்"
என்றான் 

அந்த பார்ட்டியில், அன்று தான் அறிமுகமாகி இருந்த ஒரு நண்பர் கை குலுக்கி வெரி டீசண்டா பேசினார். இந்த காலத்தில இப்படி ஒருத்தரா ஆச்சரியமா இருக்கு ஐ லைக் யுவர் காரெக்டர்  என்றெல்லாம் சொன்னவர் 
போதை அதிகமானவுடன் " கடைக்கு போய் எனக்கு சிகரெட் வாங்கி வாங்க" என்றார் எனது நண்பன் பயந்து போய் தடை செய்வது போல் கை உயர்த்த அவர், "நம்ம பயடா இவன் மாட்டேன்னா சொல்லிடுவான்" என்று 
அவர்   வடிவேலு பாணியில் சொன்னார்

"டேய் என் ப்ரெண்ட் நட்புக்காக உயிரே கொடுப்பான் ஒரு சிகரெட் வாங்கி
கொடுக்க மாட்டானா. மச்சான் நீ போய் வாங்கிட்டு வாடா"என்று சொல்ல எனது நிலவரம் கலவரமானது 

 நண்பர்களை சொல்லி குற்றமில்லை.  நாம் கலந்து கொள்வது தவறு என்று முடிவு செய்து அன்றிலிருந்து அவர்களுடன் செல்வதை தவிர்த்தேன்

அப்படியே காலங்கள் உருண்டோட அந்த நண்பர்கள் பிரிந்து வேறு நண்பர்கள் வேறு அலுவலகம் என்று மாறினாலும் பார்ட்டி என்று எனக்கு அழைப்பு வருவதும், நான் மறுப்பதும், அவர்கள் ஏன் என்று அதிசயபடுவதும் 
 கிண்டலடிப்பதும் தொடர்ந்த வண்ணமாய் இருக்கிறது. இதில் அவர்கள் சொல்லும் மெசேஜ்  என்ன தெரியுமா. 

" உன்னுடைய காலேஜ் பிரெண்ட்ஸ் சரியில்ல ஒரு தண்ணி அடிக்க கூட 
கத்து குடுக்கலை பாரு" என்று படிப்பு முடிந்து வேலைக்கு வந்த போது  அறிமுகமான நண்பர்கள் சொன்னார்கள்

 "இப்பயும் நீ குடிக்கலைனா வருங்காலத்தில் உனக்கு வர போற பிரெண்ட்ஸ் எங்களை திட்டுவாங்கடா என்று இப்போதைய நண்பர்கள் சொல்கிறார்கள்.
(குடிக்காதது ஒரு குத்தமாய்யா)


FINAL PUNCH 

இந்த கட்டுரை டைம் பாஸ் 20-07-2013 இதழில் 
வெளியானது. நன்றி டைம் பாஸ் 






ஆர்.வி.சரவணன்

ஞாயிறு, செப்டம்பர் 22, 2013

மூடர் கூடம்




மூடர் கூடம்

 இந்த படத்தின்  வித்தியாசமான டீசர் தான் என்னை படம் பார்க்க 
தூண்டியது. வேலையில்லாமல் ஏன் தங்களுக்கென்று குடும்பமே 
இல்லாமல் சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் நால்வர்,  வெளியூர் 
கிளம்பி செல்ல இருக்கும்  குடும்பத்தினரின் வீட்டில் கொள்ளையடிக்க 
திட்டம் போடுகிறார்கள் அவர்கள் வெளியூர் கிளம்பும் முன்பே இவர்கள் சென்று விடுவதால் நடைபெறும் களேபரங்கள் தான் படம். ஒரு பங்களாவுக்குள் தான் முழு கதையே  நடக்கிறது (சில காட்சிகள் தவிர்த்து)  

நால்வரில் சென்றாயன் பின்னி எடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் அவர் கேரக்டரை  பார்க்கும் போது சாதாரணமாக தான் அந்த கேரக்டரை கடக்க நினைப்போம். ஆனால் அவருக்கு  தான் செம கேரக்டரே. ஓவியாவை பார்த்தவுடன் அவர் கண்கள் ஆச்சரியத்தில் விரிவதும், கோபத்தில் செல் போன்களை உடைத்து போடுவதும், ஓவியாவின் காதலனின் சட்டை ரெண்டாயிரம் என்றவுடன் பொறாமையில் கிழிப்பதும், பின் நெகிழ்ந்து 
போய் தன் சட்டையை கழட்டி கொடுத்து அனுப்புவதும் என்று அவர் 
செய்யும் அனைத்தும் தியேட்டரில் சிரிப்பலை ஏற்படுத்துகிறது 

அடுத்து இயக்குனர் நவீன் நண்பர்களுக்கு ஐடியா கொடுப்பது 
முதல் அவர்களின் முட்டாள் தனத்தை கண்டு கோபப்பட்டு கத்தாமல்  
டியுஷன் எடுப்பது போல் ட்ரை பண்ணுங்க என்று அழகாக தன் 
கோபத்தை வெளிபடுத்துவது என்று ஆச்சரியபடுத்துகிறார்.அவர் 
தன்னை முன்னிலைபடுத்தி கொள்ளாமல் மற்ற மூவருக்கும் 
சரியான பங்களிப்பு காட்சிகளில் தந்திருக்கிறார்

முட்டாள் என்ற வார்த்தையே கெட்ட வார்த்தை என்று போட்டு புரட்டி எடுப்பவர் முட்டாள் என்று சிறுவனை திட்டும் தந்தையிடம் கோபப்பட்டு 
அச் சிறுவனை ஆதரவுடன் அணுகுவதும், தன் மாமன் வீட்டில் ஒரு காபி தந்து தன்னை அனுப்பி விட்டார்களே என்று நொந்து கொள்பவர் சிறுவன் தன்னை தாக்கிய கடுப்பில் அவனை நினைச்ச நேரத்தில் அடிப்பதும் ஓவியாவை அவர் காதலுடன் சேர்த்து வைப்பதும் என்று மற்ற இருவரும் 
சுவாரஸ்ய படுத்துகிறார்கள் 

ஓவியவிற்கு  பயப்படுவதும் அடிக்கடி சீ என்று சலித்து கொள்வதும் தான் வேலையே. இருந்தும் அவர் சென்ட்ரயனை கட்டி அணைத்து கொள்ளும் இடம் ஒரு நெகிழ்ச்சி


 இதே போல் சாப்பிடும் பொருட்களின் பட்டியலை செல் போனில் 
வாசிக்கும் சிறுமி, பயம் காட்டி  பின் பதுங்கும் ஆட்டோ காரர், ஜாப் 
எதிக்ஸ் பேசும் அந்த திருடன், வித்தியாச அணுகுமுறையுடன் உள்ள 
வட இந்திய தாதா, தன்னை நம்பி பொறுப்பு ஒப்படைக்கப்படும் போது 
அவன் அதை சந்தோசமாக சிரமேற் கொண்டு தன பெற்றோரையே  
மிரட்டும் சிறுவன்  ஏற்ற இறக்குமுடன் ஆங்கிலம் பேசும் சிறுமி தன் பார்வையால் நவீனை  அம்பேல் ஆக்குவது  என்று  ஒவ்வொரு கேரக்டரையும் ரசிக்க முடிகிறது. இயக்குனர் முழுக்க முழுக்க நகைச்சுவை  துணை கொண்டு உருவாக்கிய திரைக்கதை யில் வசனங்கள் படத்துக்கு மிக பெரிய பலம். தமிழ் தெரியாத இங்க்லீஷ் காரன் கிட்டே இங்க்லீஷ் மட்டும் பேசும் நீ, இங்க்லீஷ் தெரியாத தமிழன் கிட்டே இங்க்லீஷ் பேச கூடாது னு ஏன்டா தெரியல டயலாக் ஒரு சாம்பிள் (சில இடங்களில் மட்டும் ஓவர் டோஸ்) 


தாதா வரும் காட்சிகள் அந்த பாத்திர  படைப்பு எல்லாம் நன்றாக இருந்தாலும் அவ்வளவு பில்டப்  கொடுக்கப்பட்டவர் இப்படி  வந்து மாட்டி கொண்டு செத்து போவாரா என்று தோன்றுகிறது 

பங்களாவுக்குள் நடக்கும் கதை களம் அதை நாம் அங்கிருந்த படியே பார்ப்பது போன்ற உணர்வை தந்திருக்கிறது ஒளிப்பதிவு 


பணம் வந்தவுடன் அதை அவர்கள் உதவி  செய்ய போகிறார்கள் என்பது 
நமக்கு முன்பே தெரிந்து போகும் வகையில்  காட்சி அமைத்திருப்பது கொஞ்சம் மைனஸ். அவர்களின் உதவும் மனப்பான்மையை நாம் கை தட்டி வரவேற்கும் வண்ணம்  அமைந்திருக்க வேண்டும் அந்த காட்சி. (பண தேவை எதிர்பார்த்து  வரும்  பெண்மணியை முன்பே கதைக்குள் கொண்டு வந்து விடாமல் அவர்கள் பணம் வாங்கும் நேரத்தில் அந்த பெண்மணி வந்து 
கதறி அழ அதை பார்த்து அவர்கள் இரக்கம் கொண்டு உதவுவதாக இருந்திருக்கலாம்). முன் கதைகள் அவசியம் தான் இருந்தும் எல்லா கேரக்டர்களுக்குமா.(அந்த கார்ட்டூன் முன் கதை நல்லாருக்கு)
 கிளைமாக்ஸ் காட்சி கொஞ்சம் நாடக தனமாய் 
அமைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம் 

படத்தின் இடைவேளையின் போது நமக்கு அருகாமையில்
அமர்ந்திருப்பவர்களின் முகங்களில் தென்படும் சிரிப்பு   
இயக்குனர் நவீனுக்கு கிடைத்திருக்கும் வெற்றி 

(புத்திசாலி தனமான)  மூடர் கூடம் 

FINAL PUNCH

இந்த படத்தின் பதிவு எழுதி முடித்து வெளியிடும் நேரத்தில் ஒரு 
கொரிய மொழி படத்தை இது நினைவு படுத்துவதாக முக நூலில் 
செய்தி வந்திருக்கிறது

ஆர்.வி.சரவணன் 

செவ்வாய், செப்டம்பர் 17, 2013

பல நேரங்களில் சில மனிதர்கள்







பல நேரங்களில் சில மனிதர்கள்-1



என்னதிது டைட்டில் என்று நினைப்பீங்களே (நன்றி திரு .ஜெயகாந்தன் சார் )
நான் பொது வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களில் பலர்  என் மனதை
வருடியும் இருக்கிறார்கள்.சிலர் மனதை கீரியும்  இருக்கிறார்கள்.இந்த அனுபவங்கள் எனக்கு பலவற்றை கற்று கொடுத்திருக்கிறது. இதை அவ்வப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் 
தான் இந்த தலைப்பில் ஒரு தொடர் பதிவு ஆரம்பிக்கிறேன். 

நான் காணும் நிகழ்வுகளில் மனிதாபிமானத்துடன் நடப்பவர்களை தட்டி கொடுப்பதும், அப்படி இல்லாதவர்களை ஏன் இப்படி என்று ஆதங்கத்துடன் அங்கலாய்க்கும் எண்ணமும் மட்டுமே  இந்த பதிவின் நோக்கம்.முதலில் 
என் மனதை வருடிய ஒருவரை பற்றி பார்ப்போம் 



மூன்று வருடங்களுக்கு முன், நான் சபரிமலை சென்று திரும்பி கொண்டிருக்கிறேன். எர்ணாகுளத்தில் ரயில் ஏற வேண்டும். மதியம் ரயில் நிலையம் வந்த நாங்கள் அங்கிருக்கும் ஹோட்டலில் சாப்பிட சென்றோம்.
சரியான பசி எனக்கு.லிமிடெட் சாப்பாடு வந்தது எனக்கு சாம்பார், ரசத்தை விட தயிர் சாதம் சாப்பிட வேண்டும் என்று தான் ஆசை இருந்தது.அதனால் கொஞ்சமே கொஞ்சம் பேருக்கு சாம்பார் ரசம் ஊற்றி சாப்பிட்டு விட்டு மற்ற சாதத்தில் தயிர் கிண்ணத்தை கவிழ்த்தேன் .

அவ்வளவு சாதத்திற்கு தயிர் பத்தவில்லை.  தண்ணீர் ஊற்றி பிசைந்து 
சாப்பிட ஆரம்பித்தேன். என்னை கவனித்து கொண்டிருந்த ஹோட்டல் முதலாளி (இவர் எதுக்கு நம்மை கவனிக்கிறாரு நாம தான் சாப்பாடுக்கு
 பணம் கட்டிட்டோமே ) எழுந்து என்னருகில் வந்தார். "என்ன சார்  தண்ணீர் ஊற்றி சாப்பிடுறீங்க" என்று கேட்டார். நான் சீரியசாக ஏன் என்ன தயிர் பத்தலை அதான் சாப்பிடறேன்" என்றேன் (கொஞ்சம் நக்கல் கலந்து)

அவர், "என்ன தம்பி எங்களை கேட்டால் தயிர் மோர் குடுப்போமில்ல" என்றார் 
சீரியஸ் முகத்துடன்.

"அதுக்கு எக்ஸ்ட்ரா காசு நான் கொடுக்கணுமே" என்றேன் இன்னும் சீரியசாய் 

" என்ன தம்பி இன்னொரு கிண்ணம் தயிர் அல்லது மோர் கொடுப்பதால் 
எனக்கு என்ன நஷ்டம் வந்துட போகுது.அதுல நான் குறைஞ்சா போயிட போறேன். நீங்க தண்ணீர் ஊற்றி சாப்பிடறதை பார்த்தால் கஷ்டமாக இருக்கு "

என்று சொன்னவுடன், நான் ராஜேந்திரகுமார் நாவலில் வரும் "ஙே" எழுத்து போல் விழிக்க ஆரம்பித்தேன். அவர் எனக்கு தயிர் மோர் கொடுக்க சொல்லி பணியாளரிடம் உத்தரவிட்டார்.  பின்னே என்ன ஆச்சு என்கிறீர்களா. நான் தயிரில் உருண்டு புரண்டு எழுந்தேன். விடைபெற்று கிளம்பும் போது சொன்னார் அவர் ஊர் நாகர்கோவில் என்று. 

அந்த ஹோட்டல் பேரு கூட மறந்து போச்சுங்க. அந்த சாப்பாடு அப்போது என்ன விலை  என்பது கூட மறந்து போச்சுங்க.அவ்வளவு ஏன்  அவர் முகம் கூட மறந்து போச்சுங்க. ஆனால் இன்னிக்கும் அவரோட அந்த உபசரிப்பு ஞாபகத்தில் இருக்குங்க. என்னிக்கும் இருக்கும்

அடுத்த வாரம் நெஞ்சை கீறியவர் பற்றி பார்ப்போம்

ஆர்.வி.சரவணன் 

சனி, செப்டம்பர் 07, 2013

பதிவர் திருவிழா 2013 ஒரு பார்வை






பதிவர் திருவிழா 2013 - ஒரு பார்வை 

இதை பத்தி எல்லாரும் தான் எழுதுவாங்களே நாம புதுசா என்னத்தை 
எழுதிட போறோம்னு நினைச்சேன். ஆனால் அரசன் கண்டிப்பா 
எழுதுங்க சார் என்றார்.  மேலும் முக நூலில் ஒரு வாரத்திற்கு எல்லாரும் 
இதை பத்தி எழுதுவாங்க என்ற பேச்சு வந்த போது  நண்பர் நாஞ்சில் மனோ (எனக்கு இது வரை அறிமுகமில்லை இருந்தும் நண்பருக்கு  
நண்பர்  எனக்கும் நண்பர் தானே )  சொன்னதை படிக்க நேர்ந்தது.



உங்களுக்கு நண்பர்கள், நட்பு, அன்பு பற்றி தெரியலையோ, முகமறியா நண்பர்களை நேரில் பார்க்கும் பரவசம் இருதயத்தின் இன்பம் புரியலையொன்னு நினைக்கிறேன்.

பதிவர் சந்திப்பு பற்றி வரும் பதிவுகளை கிண்டல் செய்யவேணாம் பிளீஸ்... அவரவர் பதிவர் சந்திப்பின் அன்பினை சொல்ல விடுங்கள்.


 
என்று சொல்லியிருந்தார். சரி பதிவர் சந்திப்பை பற்றி படிக்க எல்லாரும் விருப்பமுடன் இருக்கிறார்கள் எனும் போது கண்டிப்பாக எழுத வேண்டும் என்ற  ஆர்வம் வந்து  எழுதிட்டேன். (வேலை பளு மற்றும் நெட் சென்டர் சென்று பதிவு எழுதுவதால்  பதிவு  கொஞ்சம் தாமதம் ஆகிடுச்சு)

இந்த (அவசர கால)  இயந்திர உலகத்தில் ஒவ்வொருவரும் ஒரு கஷ்டத்தை யேனும் அனுபவிச்சு வலம் வந்திட்டிருக்கோம்.அதையெல்லாம் மறந்துட்டு ஒரு நாள் முழுக்க வேறொரு உலகத்தில் சந்தோசமாய் அளவளாவும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் அது தாங்க இந்த பதிவர் சந்திப்பு. இதை இப்படியும் சொல்லலாம். பாலைவனத்தில் கடும் வெயிலில் அவதிப்பட நேர்கையில் எங்கேனும் நிழல் தரும் மரம் தென்பட்டால் விரைவாக 
சென்று நிழலில் இளைபாற தோணுமே. அந்த சூழ்நிலைக்கு ஒப்பானது 
இது.இவ் வரிகள் வார்த்தை அலங்காரத்திற்காக  சொல்லப்பட்டதல்ல.
நான் எப்போதுமே எந்த ஒரு சிறு நிகழ்வானாலும் அதை ஒரு தனி அழகியலுடன் தள்ளி நின்று ரசிப்பதுண்டு. அப்படி ரசித்ததை தான் 
இப்படி குறிப்பிடுகிறேன்


சனியன்று காலை  நண்பர் ராஜ பாட்டை ராஜா "சென்னை மண்ணில் நான்" என்று முக நூலில் ஸ்டேடஸ் போட ,அந்த அதிகாலை தூக்க கலக்கத்திலும் நான் பதிலுக்கு "வெல்கம் ராஜா" என்று போட்டேன். அடுத்து அவர் "எங்க இருக்கீங்க எப்ப வருவீங்க" என்று பதிலிட நான் "மாலை வருகிறேன்" என்று தெரிவித்தேன்.(அரசன் மற்றும் திண்டுக்கல் தனபாலன் சார் சனி மாலையே வந்து விடுங்கள் என்று சொல்லியிருந்தார்கள்) 

மாலை ஹோட்டலுக்கு வந்த போது செல்வின்,பிரபாகரன், ராஜா,
தனபாலன் சார், நக்கீரன் சார் வெற்றிவேல் ,சதீஷ் செல்லதுரை, 
ஆரூர் முனா செந்தில்,ரூபக் ராம் என்று பதிவுலக தோழமைகளை சந்தித்தேன்


செந்திலிடம் நான் சரவணன் என்ற போது தெரியும் சார் என்று  
தோளில் அனைத்து வரவேற்றார். பின் ரூம் நம்பர் சொன்னதுடன்
மட்டுமில்லாமல் அந்த ரூமுக்கு கொண்டு வந்து விட்டுச் சென்றார்
அவரை பற்றி குறிப்பிட வேண்டுமானால், சென்ற வருடம் நான் எடுத்திருந்த அவரது போட்டோவை முகநூலில் வெளியிட்டிருந்தேன் பார்த்து விட்டு நானே பார்க்காத என் போட்டோ நன்றி சரவணன் என்று சொல்லியிருந்தார். அந்த வார்த்தை தான் இப்போதைய திருவிழாவில் நண்பரிடம் கேமரா வாங்கி கொண்டு வந்து படம் எடுக்கும் ஆர்வத்தை எனக்கு தந்தது

பத்து மணிக்கு மேலாகி விடவே, தனபாலன் சார் திருப்பூரிலிருந்து 
ஜோதிஜி வந்து கொண்டிருப்பதாகவும் எப்படி அவரை அழைத்து வருவது  என்று கேட்க, நான் சென்று அழைத்து வருகிறேன் என்று 
சொல்லி விட்டு பேருந்து நிறுத்தம் சென்று அழைத்து வந்தேன். 
இப்போது தான் ஜோதிஜி அறிமுகம் என்பதால் என்னை பற்றி 
முழுதும் அவர் கேட்டறிந்தார்

காலையிலேயே எனக்கு காய்ச்சல் வந்து மாத்திரை எடுத்து கொண்டு 
தான் வந்திருந்தேன்.இருந்தும் இரவு எனக்கு மீண்டும்  காய்ச்சல் எட்டி 
பார்க்க  ஏதடா வம்பா போச்சு இது  நம்மை முடங்க வைத்து விடுமோ 
என்று கலவரமாகி உடனே பார்மசி சென்று மாத்திரை வாங்கி போட்டு கொண்டு அதை விரட்டி அடித்தேன்.

காலையில் நண்பர் சதீஷ் சங்கவி, சேலம் தேவா மற்றும் கோகுலத்தில் சூரியன் வெங்கட் (இவரது சுவாரஸ்யமான எழுத்துக்களை முக நூலில் 
படித்து ரசித்தேன் ) அழைத்து வந்து அறிமுகபடுத்தினார். அவர்களிடம் 
சில நிமிடங்கள் பேசி விட்டு ஜோதிஜி,தனபாலன்
,நான்  மூவரும் கிளம்பினோம்

நாங்கள் அரங்கத்திற்கு வரும் போது தலை கலைந்து  விட்டதால் அதை பார்க்கிங்கில் நின்று சரி செய்து கொண்டோம். யாராவது இதை போட்டோ எடுத்து கலாய்க்க போறாங்க சார் என்று சிரித்து கொண்டே நான் 
சொன்னேன்

உள்ளே நுழையும் போது கோவை நேரம் ஜீவா வரவேற்று நில்லுங்கள் 
என்று சொல்லி போட்டோ எடுத்தார் (சென்ற வருடம் வேட்டி சட்டையில் வந்திருந்தவர் இந்த வருடம் டீ சர்ட் பேன்ட்)

சென்ற வருடம் வருண பகவான் பதிவர் சந்திப்புக்கு வந்திருந்தார்.இந்த வருடமும் வருவார் என்று நான் நினைத்திருக்க மாறாக சூரியன் வந்து 
கலந்து கொண்டார். அவரது ஆர்வம் வியர்வை மழையில் எங்கள் 
எல்லாரையும் நனைய வைத்து விட்டது (ஒரு வேலை இந்த 
வருடம் நான் கலந்து கொள்கிறேன் என்று  இவர் சொல்லி 
விட்டதால் அவர்  வரவில்லை போலிருக்கிறது)

பால கணேஷ் சார், கண்ணா உன் புத்தகமும் வெளியாகி யிருக்க வேண்டியது. இந்த திருவிழாவில் இருந்தாலும் பரவாயில்லை. 
விரைவில் அசத்திடலாம்  என்று என்னை உற்சாகமூட்டினார்

புலவர் அய்யா,சென்னை பித்தன் அவர்களை அருகில் சென்று வணங்கி 
நலம் விசாரித்தேன்

சேட்டைக்காரன் அவர்களிடம் பேசும் போது சமீபத்தில் அவர் எழுதிய பதிவை குறிப்பிட்டு பேசினேன்.சென்ற வருடம் அவரை பற்றி நான் குறிப்பிடும் போது, "உட்கார்ந்து யோசிப்போம் ல என்பது  அவரது தளத்தில் இருக்கும் கேப்சன் வரிகள். ஆனால் அவர் பேசுவதை பார்த்தால் அப்படியெல்லாம் உட்கார்ந்து யோசிச்சு எழுதுபவராக தெரியவில்லை " என்று எழுதியிருந்தேன்
அது இன்னும் உறுதியாகிறது

பெண் பதிவர் தென்றல் சசிகலா அவர்களிடம், உங்களது அடுத்த புத்தக வெளியீடு எப்போது என்று கேட்டதோடு, இன்னும் சிறப்பாய் புத்தகம் வர வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்தேன்.

எனது ஊர் காரரும் பதிவுலக நண்பருமான வீடு திரும்பல் மோகன்குமார்  பார்த்ததும் அவரது புத்தகத்திற்கு வாழ்த்து தெரிவித்தேன். நலம் விசாரித்ததோடு,உங்கள் பிளாக் ல வெற்றி கோடு பற்றி எழுதுங்க சரவணன் என்றார் (எழுதறேன் சார் )

இரவின் புன்னகை வெற்றிவேல் முகத்தில் அப்போதும் (பகலிலும்) 
புன்னகை இருந்தது. பேசும் போது அவர் கவிதைகளை படிப்பதை பற்றி 
கூறி  அவரது ஊர் பெயரை குறிப்பிட்டு சாலையகுறிச்சி எங்கே இருக்கிறது என்று கேட்டேன். (தூத்துக்குடி திருநெல்வேலி பக்கம் என்று நான் நினைத்து கொண்டிருக்க) அவர் அரியலூர் அருகில் எனும் போது ஆச்சரியமாய் 
இருந்தது. என் போட்டோ போடணும் சார் நீங்க என்று அன்பாக 
உத்தரவிட்டார். (போட்டோ வெளியிட்டு விட்டேன் வேல் வேல் 
மன்னிக்கவும் வெற்றி வேல் )

மதுமதி என்னிடம் பேசும் போது என்னை பற்றி
கேட்டறிந்தார். எல்லோருக்கும் அறிமுகபடுத்தறேன் வாங்க 
என்று கை பிடித்து அழைத்து சென்று அறிமுகபடுத்தினார் 

ஸ்கூல் பையன் எனக்கும் அவ்ருக்குமுள்ள சில ஒற்றுமைகளை 
பற்றி என்னிடம் ஆச்சரியமாய் விவரித்தார்

ஜாக்கி சேகர் போன வருடம் பார்த்தது அடுத்து இப்ப தான் 
பார்க்கிறோம்  இல்லையா என்று தொடர்ந்த சிநேகத்துடன் 
புன்னகைத்தார்

பதிவர் அறிமுகத்தில் தைரியமாக மேடை ஏறிய எனக்கு வார்த்தையே வரவில்லை (வெறும் காத்து தாங்க வந்தது)  என் பெயரும் தளத்தின் பெயரும் மட்டும் சொல்லி விட்டு இறங்கி விட்டேன் இன்னும் சில வார்த்தைகள் பேச வேண்டும் என்று தோன்றினாலும் மேடை பயம் என்னை கீழே விரட்டியடித்து விட்டது.





பாமரன் அவர்களின் பேச்சில் அனல் தெரித்தது என்று சொல்வதை 
விட அதில் கிண்டல் தூவப்பட்டு, நகைச்சுவை என்ற கோட்டிங் கொடுக்கபட்டிருந்தது அவரது பேச்சில் மட்டும் விநாடி முள் நிமிட கணக்கில் கடந்ததோ என்று நினைக்க தோன்றியது (டயம் போனதே தெரியலை இதை தான் சுத்தி வளைச்சி சொல்றேன்)
நான்அவருடன் போட்டோ எடுத்து கொண்டு பேசிய போது
பத்திரிகைகள் நம்மை தேடி வரும் படி நம் எழுத்துக்கள் 
இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். 
சிவகுமாரை பார்க்கணும் நான் வரட்டுமா  என்று அனுமதி
போல் கேட்டு  விட்டு அவர் அகன்றது அவர் மேல் இன்னும் 
மரியாதையை ஏற்படுத்தியது



இறைவனடி சேர்ந்த பதிவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது

சாப்பாட்டு இடைவேளை வந்தது நான் தட்டுடன் அருகே செல்ல
கேபிள் சங்கர் சார் வெஜ்ஜா நான் வெஜ்ஜா என்று கேட்டார் நான் வெஜ் என்றேன். வரிகளை சேர்த்து பாஸ்டாக சொல்லியிருந்தால் என் தட்டில் 
நான் வெஜ் வைக்கபட்டிருந்திருக்கும்.


கேபிள் சங்கரிடம் அவர் துவங்கவிருக்கும் படத்துக்கு வாழ்த்து தெரிவித்தேன்
அவரை பற்றி குறிப்பிட வேண்டுமானால் சென்ற வருடம் அவரிடம் என்னை அறிமுகபடுத்தி கொண்ட போது அவர் நீங்கள் என்று கேள்விக்குறியாய் பார்க்கவே, நான் நீங்கள் இப்போது இருக்கும் உயரத்திற்கு வர ஆசைபடும் 
ஒரு சாமான்யன் என்று சொல்லவே  சிரித்த படியே கை குலுக்கி  என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க என்று சொன்னார்

காணாமல் போன கனவுகள் ராஜி அவர்கள் தன் அறிமுகத்தின் போது பலத்த கர கோஷத்துடன் பேசினார்.அதே போல் கூல் ட்ரிங்க்ஸ் கொடுப்பது தண்ணீர் தருவது என்று வேலைகளை அவரே விருப்பமுடன் செய்தார் நான் மேடம் என்று அழைக்க அவர் மேடம் சொல்லாதீங்க அக்கா அல்லது தங்கை னு சொல்லுங்க என்றார் சரிக்கா  என்று நான் சொல்ல, இங்க பாருங்க நான் இவருக்கு அக்காவாம் என்று எல்லோரிடமும் சொன்னார் (என்னை கலாய்ச்சிட்டாங்கலாமாம் )

அதே போல் நண்பர் சதீஷ் செல்லதுரை குடும்பத்துடன்
வந்திருந்தும், பதிவர் சந்திப்பு வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டது வியக்க வைத்தது

தமிழ் வாசி பிரகாஷிடம், அவரது தளத்தில் பதிவு பார்த்து தமிழ் சாப்ட் வேர் என் சிஸ்டத்திற்கு டவுன்லோட் செய்து கொண்டதை குறிப்பிட்டு நன்றி தெரிவித்தேன்

மதியம் சாப்பாட்டுக்கு பின் கவிதை படிக்க மயிலன் தயார் ஆகி கொண்டிருந்தார். (பாராட்டையும் பெற்றார்) நான் பாரதிராஜா 
போல் பேசுவதற்காக மேடை ஏறினேன் பயந்து கொண்டே. தொகுப்பாளர் சுரேகாவிடம்  (இவரது குரலுக்கும் தொகுப்புரைக்கும்
 ரசிகன் நான்) மதுமதி தெரிவிக்க, நான் கொஞ்சம் டென்சன் குறையட்டும் அப்புறம் கூப்பிடுங்க என்றேன். அவர் இல்லே இப்ப பேசுங்க என்று என் பெயரை உடனே அறிவித்தார் ஆகா சிக்கிட்டோம் டா என்று மைக் அருகே வந்தேன். நல்ல வேளை அந்த டேபிள் என்னை தைரியபடுதியது என்று நினைக்கிறேன். கொஞ்சம் டென்சன் குறைந்து பாரதிராஜா குரலில் ஆரம்பித்தேன். போக போக பாரதிராஜா குரல் குறைந்து நம் குரல் வெளிபடுகிறதோ என்ற தயக்கம் தோன்றியது. வடிவேல் காமெடி காட்சி போல் நான் ஒழுங்கா தான் பேசறேனா என்று நான் கேட்பதற்கு அருகில் யாரும் இல்லை. பேசி முடித்து இறங்கினேன் என் திறமையை காட்ட வேண்டும் என்று மேடை ஏறியதை விட என் மேடை பயம் போக வேண்டும் என்பதற்காக தான் ஏறினேன்.( சுரேகா சார் உடனே என் பெயரை அறிவிச்சது பத்தி சொல்லணும் னா, நீச்சல் தெரியாத ஒருத்தன் கரையில நின்னுகிட்டு எப்படி இறங்கறது என்று பயத்தில் இருக்கும் போது தள்ளி விடுவார்களே அது போல் தான் இது. நன்றி சுரேகா சார்)

அடுத்து கண்மணி குணசேகரன் பேச வந்தார் அவரது தமிழ் பேச்சு 
கேட்க நன்றாக இருந்தது அதிகப்படியானது போலவும் இருந்தது 
(ஸ்வீட்டாஇருந்தாலும் ஒரே நேரத்தில் அதிகமா சாப்பிட முடியாதே  
அதனால் இருக்கலாம் )

பின் நடந்த புத்தக வெளியீட்டில் தீஷ் சங்கவி, மோகன் குமார்,சேட்டைக்காரன், யாமிதாஷா,மற்றும் சுரேகா எழுதிய
புத்தகங்கள் வெளியிடப்பட்டன. மொத்தம் ஐந்து புத்தகங்கள் என்பதால் கொஞ்சம் நேரம் அதிகமானது என்றாலும் எழுத்தாளர்களின் பேச்சிலும் முகத்திலும் தெரிந்த சந்தோஷ திருப்தி முக்கியம் அல்லவா.
( நண்பர்கள் அனைவரும் வெற்றி எனும் கோட்டை தொட எனது வாழ்த்துக்களும் அடுத்த நூல் வெளியீட்டிற்கு 
இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்களும் )

 ரஞ்சனி நாராயணன் அவர்கள் என்னை பார்த்தவுடன் பதிவுகள் படிக்கிறேன் நல்லாருக்கு என்று சொன்னது மட்டுமில்லாமல் விழா முடிந்த அடுத்த 
நாள் முக நூலில் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றும்  செய்தி அனுப்பியிருந்தார் (எனக்கும் தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அம்மா ) 

 நண்பர் சீனு பற்றி சொல்வதென்றால் சென்ற பதிவர்திருவிழாவில் 
தான் அறிமுகம் அதற்கு பின் செல் போனிலும் பதிவுகளிலும் 
மட்டுமே பேசியிருக்கிறோம். அன்று நிறைய பேசலாம் என்றிருந்தோம் டயமில்லாததல் முடியவில்லை. இதை நான் சொல்லலீங்க சீனு என்னிடம் சொன்னது.(நான் கிளம்பும் நேரத்தில் கொஞ்ச நேரம் இருங்க சார் போகலாம் என்று அடங கொண்டு எனை நிறுத்தி 
வைத்தது அவரது அன்பு)


தளிர் சுரேஷ் அரங்கத்திற்குள் வர அவரை பார்த்தவுடன் நலம் விசாரித்ததோடு மட்டுமில்லாமல் அவர் பதிவுகள் படிப்பதை யும் 
செல் போன் மற்றும் அலுவலகத்தில் படிப்பதால் தமிழில் கமெண்ட் 
போட முடியவில்லை என்பதையும் தெளிவு படுத்தினேன் 






கோவையிலிருந்து வந்திருந்த நண்பர் ஆனந்தவிஜயராகவன் (கோவை ஆவி) இப்போது தான் அறிமுகம். என்னை கண்டதும் 
நீங்க தானா அது என்று ஆர்வமுடன் பேசினார் கூடவே அவர் 
எழுதி மெட்டமைத்த பாடலை பாடுவதற்கு என்னையும் சேர்த்து கொண்டார்.(அதாவது கோரசுக்கு ஒரு ஆள் குறையுது நீங்களும் 
வாங்க என்று) நானும் நான் எங்க எப்படி இருந்திருக்க வேண்டியவன் என்ற கவுன்டமணி டயலாக் மனதில் தோன்ற அவரிடம் சிக்கினேன். 
பின் அவரிடம் நாங்கள் பயிற்சி எடுத்து கொண்டோம். இருந்தும் மேடையில் ராகம் மறந்துட்டால் என்னாவது என்ற பயம் வந்தது
அந்த பயம் இவனுங்க சொதப்பிட்டால் என்னாவது என்று அவருக்கும் இருந்திருக்கும். இருந்தும் மேடையில் பாடி முடித்த பொது கிடைத்த 
கை தட்டல்கள் அந்த பாடலுக்குண்டான வெற்றி. this credit only goes to 
ஆவி நண்பா இன்னும் சில சரணங்களை சேர்த்து மியூசிக் ஆல்பம் 
மாதிரி போட்டுடுங்க பின்னிடலாம். (எனக்கும் சான்ஸ் உண்டு தானே)

மதுமதியின் குறும்படம் ஒரு வலி மிகுந்த வறுமையை இளமையை   கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது என்பதை அழுத்தமாக பதிவு செய்தது. இருந்தும் அந்த பெண்ணின் பள்ளியில் ஏற்படும் கஷ்டங்களை இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம் என்பது 
எனது தாழ்மையான கருத்து. இருந்தும் கண்டிப்பாக பார்க்கும்
ஒவ்வொருவரின் மனதில் இது பாதிப்பை ஏற்படுத்தும் எனபது 
திண்ணம். வாழ்த்துக்கள் மதுமதி சார்


லியோனி பட்டிமன்றத்தில் பேசும் பட்டிமன்ற பேச்சாளர் திரு .கவிஞர்.முத்துநிலவன் அவர்களை சந்தித்தது ஒரு இனிய அனுபவம். அவரது தளம் பற்றி நான் கேட்டு தெரிந்து கொண்டேன் எனது தளம் பற்றியும் தெரிந்து கொண்டார். அவர் மேடையில் பேசும் போது மதுமதி குறும்படம், பாதிப்பை ஏற்படுத்தியதை பற்றி சொல்லி ஒவ்வொருவரும் அவரவர் தளங்களில் நண்பர்கள் எடுக்கும் குறும்படங்களை பகிர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.அவரை நானும் டி.என்.முரளிதரன் அவர்களும் வழியனுப்பிய போது போட்டோ 
எடுத்து கொண்டோம்



எழுத்தாளர் வா.மு.கோமு சிறுகதைகளை தொடர்ந்து ஆனந்த 
விகடனில் படிப்பதை அவருடன் பேசும் போது தெரிவித்தேன்


ரமணி சார் பற்றி சொல்வதென்றால் நான் மதுரை வந்திருந்த போது தங்களை வந்து பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நேரமின்மையால் முடியவில்லை என்று ஒரு முறை தெரிவித்திருந்தேன். அதற்கு அவர் சொல்லியிருந்தால் நானே உங்களை வந்து பார்த்திருப்பேனே என்றார். அந்த அளவுக்கு அவர் பதிவுலக தோழமை மேல் கொண்டிருக்கும் நட்பு வியக்க வைக்கிறது.கரந்தை ஜெயக்குமார் அவர்களை நான் பார்த்து விட்டு வந்தது பற்றி அவர் குறிப்பிட்டு சந்தோசப்பட்டார் 


நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்கள் எனக்கு அறிமுகமில்லை. இருந்தும் டில்லியிலிருந்து வந்து குடும்பத்துடன் அவர் கலந்து கொண்டது ஒரு சிறப்பான விஷயம் என்றால் அவருடன் அவரது மனைவி மற்றும் 
மகளும் கூட தளம் ஆரம்பித்து எழுதுவது இன்னும் ஒரு சிறப்பு 
பதிவுலகம் மேல் அவர்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு வியக்க 
வைக்கிறது வாழ்த்துக்கள் சார்


கே.ஆர.பி.செந்தில் சைதை அஜீஸ் இந்த விழாவில் தான் 
எனக்கு அறிமுகம் இன்னும் பலருடன் ஒரு ஹலோ மற்றும்
புன்னகையோடு கடந்து சென்றேன் (அறிமுகமில்லாததால்)







இதில் ஒரு முக்கியமான் விஷயம் என்னவென்றால் நான் இதில் கலந்து கொண்டது இத்தனை நண்பர்கள் எனக்கு கிடைத்தது இவையெல்லாம் 
இனிய நண்பர் கரை சேரா அலை அரசனால் தான். மேலும் அவ்வளவு வேலைகளுக்கு இடையிலும் என்னிடம் மாத்திரை எடுத்து கொண்டீர்களா இப்போ எப்படி இருக்கு என்று அவ்வபோது கேட்டவாறே இருந்தார் 

(நன்றி அரசன்) 

குறைகள் ஏதேனும் இல்லியா என்றால் நேரமின்மையும் 
இடமும் மட்டுமே. எந்த ஒரு செயலையும் 100% யாராலும்
சரியாக முடித்து விட முடியாது. ஏதேனும் சில குறைகள் இருக்க 
தான் செய்யும். அவை இந்த விழாவுக்கான திருஷ்டி என்றே எடுத்து கொள்ள வேண்டும். மேலும் நான் மேலே குறிப்பிட்டதை போல் 
நிழல் தரும் மரத்தடியில் இளைப்பாறும் போது மர இலைகளின் 
ஊடே வெளிப்படும் வெயில் வந்து நம் மேல் தாக்கினால் அதற்காக
மரத்தை குற்றம் சொல்ல முடியுமோ 


இப்படி எல்லோருடனும் கலந்துரையாடி விட்டு விழா முடிந்து
கிளம்ப வேண்டிய தருணம் வந்த போது வாசலுக்கு கால்கள் முன்னெடுக்க மறுக்கின்றன.கல்லுரி நாட்களில் என்.எஸ்.எஸ் கேம்ப் முடித்து விட்டு கிளம்புகையில்,வீட்டில் ஒரு கல்யாணம் நடைபெற்று முடிந்த பின், விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து விட்டு கிளம்பும் தருணங்களில்,மனதில் ஒரு இனம்புரியா உணர்வு தோன்றுமே அதே உணர்வு தான் அப்போதும் தோன்றியது.

இந்த இனிய நிகழ்வை ஏற்படுத்தி தந்து உழைத்திட்டவிழா குழுவினருக்குகும் கலந்து கொண்டு சிறப்பித்த பதிவர்களுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள் 
  
FINAL PUNCH 

சென்ற வருடத்தை விட இவ் வருடம் நான் அதிகளவில் எல்லோராலும் அறியபட்டிருக்கிறேன். (சென்ற வருடம் குறிப்பிட்டிருந்தேன் பல 
பேருக்கு என்னை அடையலாம் தெரியல. ஒரு வேலை ஆளில்லாத கடையில் டீ ஆத்திகிட்டு இருக்கோம் போலிருக்கு என்று) நீங்க 
தானா அது என்று ஆச்சரியத்துடன் கை கொடுத்தார்கள். என் எழுத்து எனக்கு கொடுத்திருக்கும் வெளிச்சம் இது. இன்னும் என்னை மேம்படுத்தி 
கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு (என் எழுத்துக்கும்) இருக்கிறது


ஆர்.வி.சரவணன் 

திங்கள், செப்டம்பர் 02, 2013

தமிழ் வலைபதிவர்கள் திருவிழா 2013 மை கிளிக்ஸ்






தமிழ் வலைபதிவர்கள் திருவிழா 2013 மை கிளிக்ஸ் 

நேற்று பதிவர் திருவிழா வெற்றிகரமாக சிறப்பாக இனிதே நடைபெற்றது. அதில் ஆர்வமுடன் கலந்து கொண்ட (நான் நண்பரிடம் கேமரா கடன் வாங்கி) 
ஒரு போட்டோ கிராபர் போல் (?) சுற்றி சுழன்றதில் கிடைத்த படங்களில் சில  உங்கள் பார்வைக்கு.மேடையில் எழுத்தாளர்கள்  
வா .மு.கோமு,பாமரன், உடன் புலவர் அய்யா ,சென்னை பித்தன்,
கேபிள் சங்கர் பாரதி மணி 






 பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் முத்துநிலவன்,
டி .என்.முரளிதரன் 


            சென்னை பித்தன் ,மதுமதி 


வெற்றிவேல் ,அரசன், ஜெய்  


மதுரை சரவணன் ,கவியாழி .கண்ணதாசன்,பாலகணேஷ் ,சேட்டைக்காரன் தமிழ்வாசி பிரகாஷ் 



 சுரேஷ்குமார் ,ஆரூர் மூனா செந்தில் , 
சிவகுமார், கோகுல் 




கேபிள் சங்கர்,திண்டுக்கல் தனபாலன் 


பாலகணேஷ் ,சேட்டைக்காரன், சீனு  




நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சுரேகா 


பதிவுலக நண்பர்கள் 


பதிவர் திருவிழா குறித்த எனது (பார்வை ) பகிர்வை 
விரைவில் தருகிறேன் 

ஆர்.வி.சரவணன்