ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

பண்ணையாரும் பத்மினியும் (பயணித்த) நானும்
பண்ணையாரும் பத்மினியும் (பயணித்த) நானும்


காரை ஒரு உபயோக பொருளாக, இயந்திரமாக பார்க்கும் திசையிலிருந்து வேறுபட்டு அதை உயிருள்ள ஜீவனாக குடும்பத்தில் ஒரு பிள்ளையை போல் பார்க்கும் பண்ணையாருக்கும் அவர் மனைவிக்கும் அந்த காரின் டிரைவருக்கும் (அவர்களுக்குள்ளும்) உள்ள பாசத்தை மையமாக கொண்ட கதை இல்லை இல்லை முழுக்கவே சொல்லும் கதை இது

நான் இதன் குறும்படத்தை இன்னும் பார்க்கவில்லை. இருந்தும் குறும்படமாக எடுக்கப்பட்டதை பெரிய படமாக எடுக்கும் போது காட்சிகள் சுவாரசியம் குறையாமல் கொடுக்க முடியுமா என்று என்னுள் எழுந்த வினாவுக்கு முடியும் என்ற பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அருண்குமார்  

இந்த படம் ஆரம்பிக்கும் போது அவ்வளவு ஏன், ஜெயப்ரகாஷ் தன் உறவினரிடம் காரை பற்றி பேசும் போது (அவருக்கு காரின் மீது பாசம் உண்டு என்பதை மேற்கோள் காட்டியிருக்கலாம்) என்ன இது காரை பற்றியே பேசுகிறார் என்று எரிச்சலாவார் அந்த உறவினர். அது போல் நானும் கொஞ்சம் எரிச்சலானேன். என்னடா இது தெரியாமல் வந்து உட்கார்ந்துடோமோ என்று. இதை இப்படியும் சொல்லலாம்.தெரு ஓரத்தில் நின்று கொண்டு போனால் போகுது என்பதாக காரை வேடிக்கை பார்ப்பதாக மட்டுமே இருந்தது அப்போதைய என் நிலை. இருந்தும் என்னை எப்போது இயக்குனர் காருக்குள் (கதைக்குள்) இழுத்து போட்டார் என்பதே தெரியாமல் போய் விட்டதை இடைவேளையில் தான் கவனித்தேன்

ஜெயப்ரகாஷ் துளசி ஆதர்ச தம்பதி என்று சொல்வார்களே அது போல்.
 இருவருக்கும் உள்ள அந்த அன்பு காதலை, சின்ன சின்ன வசனங்களில் முக பாவங்களில் அது வெளியாகும்
விதத்தை அசத்தலாய் தந்திருக்கிறார் இயக்குனர்.
உதாரனத்திற்க்கு சொல்ல வேண்டும் என்றால் துளசியை ஊஞ்சலில் உட்கார வைத்து விட்டு ஜெயப்ரகாஷ் பரிமாறி கொண்டிருக்கும் போது வேலையாள் வந்து விட உடனே அவர் பாத்திரத்தை கீழே வைத்து விட்டு மேலும் கீழும் பார்ப்பதும் அவன் சென்றவுடன் மீண்டும் பரிமாறுவதும் அதை துளசி ரசித்து கொண்டே வேண்டாம் என்று சொல்வதும் என்று அவர்கள் இருவருமே தங்கள் கேரக்டரை உள் வாங்கி அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.வயதான தம்பதிகள் பார்த்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் நம் வாழ்க்கை என்று ஏக்கம் கொள்வார்கள். இளவயது தம்பதியர் வருங்காலம் இப்படி தான் வாழ வேண்டும் என்று விரும்புவார்கள்.(எனக்காக பிறந்தாயே பேரழகா பாடல் காட்சி அசத்தல் ரகம் (ராகம்) 

விஜய் சேதுபதி கதையின் நாயகனாக அந்த பத்மினி காரின் டிரைவராக நடித்திருக்கிறார் அந்த கார் மேல் அவர் காட்டும் பாசம் காரை கற்று கொண்டு தன்னை வேலையை விட்டு நீக்கி விடுவாரோ என்ற பயத்தில் முதலாளியையே அதட்டி ஏனோ தானோவென்று கற்று கொடுப்பதும் பின்பு அவர்களின் அன்பு புரிந்து உண்மையாகவே கற்று கொடுப்பதும் என்று தன் பங்குக்கு சூப்பராக ஸ்கோர் செய்திருக்கிறார் (முதலாளி என்றால் இப்படி இருக்கணும்). 

அவரது ஜோடியாக வரும் ஐஸ்வர்யா, ஜோடிக்கு ஒரு ஆள் வேண்டும் என்பதற்காகவே இருப்பது போல் தான் அவரது கேரக்டர். அவர்கள் 
காதல் கதைக்கு அவசியமில்லை தான் இருந்தாலும் காரை சுற்றியே 
வரும் கதைக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ள
பயன்பட்டிருக்கிறது..அவரின் சினிமாஸ்கோப் கண்கள் தன்னை பதிவு செய்யும் காமேரவையே விழுங்கி விடும் போல் அவ்வளவு ஈர்ப்புடன் இருக்கிறது.
 . 
சினேகா ஒரு காட்சி தான் என்றாலும் சுவாரஸ்யம் தான். கார் உங்களுக்கு தான் என்று சொல்லும் போது ஜெயப்ரகாஷ் க்கு வரும் நெகிழ்ச்சி போல்அந்த பீடை பெருச்சாளி சைசில் இருந்து கொண்டு ( படத்தில் அவர் பெயரும் அது தான்) வீட்டு வேலை செய்பவராக வருகிறார் பாலா. ரொம்ப பேசறாங்க நல்லாருங்க னு வாழ்த்திரவா என்று சொல்லும் போது அதிர்கிறது. அவரை வைத்தே செண்டிமெண்டை உடைப்பது கூட நல்ல விஷயம் தான். அவரது பார்வை மற்றும் குரல் மாடுலேஷன் பார்க்கும் போது நீங்க ரொம்ப நல்லா வருவீங்க னு சொல்ல தோணுது (இது அவர் படத்துல சொல்ற தன்மையில் சொல்லலைங்க உண்மையா சொல்றேன் ) 
ஜெயப்ரகாஷ் துளசி இருவரும் விஜய் சேதுபதியிடம் இருவரின் ஆசையை தெரிவிக்கும் போது விஜய் சேதுபதி நெகிழும் இடம் நம்மையும் நெகிழ வைக்கும் ஒன்று.

கார் தான் படத்தின் ஹீரோ என்றே சொல்லலாம். கதையும் கட்சிகளும் முழுக்கவே அதை சுற்றியே பயணிக்கின்றன கூடவே காதல் நகைச்சுவை என்று அழகாக இயக்குனர் அருண்குமார்.
அங்காங்கே சரியான விகிதத்தில் அழகுபடுத்தி இருக்கிறார். கார் ஹீரோ எனும் போது வில்லன் இல்லாமலா ஒரு மினி பஸ் தான் அங்கே வில்லன் போல். அதன் ஓட்டுனர்  நடத்துனர் மற்றும்  விஜய் சேதுபதி அவைகளின் சார்பில் மோதி கொள்வது கூட ரசனையுடன் ரசிக்க வைக்கிறது 

பண்ணையாரின் மகள் வரும் போதெல்லாம் ஏதேனும் ஒரு பொருளை எடுத்து செல்வார் .கண்டிப்பாக அவர் காரை தான் கேட்க போகிறார் என்று நமக்கு தெரிந்து விடுகிறது இருந்தாலும் அது எப்ப என்று நம்மை டென்சனுடன் விடுகிறார் இயக்குனர் 


 நீலிமா காருக்காக தன் தந்தையிடம் பேசும் போது விஜய் சேதுபதி ஊர் சுற்றுவதற்காக எடுத்து சென்றிருப்பதை குறிப்பிட்டு "வேலைகாரனுக்கு கொடுப்பீங்க பொண்ணுக்கு கொடுக்க மாட்டீங்களா" என்று தந்தையை

 லாக் செய்வார். அது போல் விஜய் சேதுபதி காரை கேட்க "ஏன் எங்கப்பாவுக்கு வாயில்ல அவர் கேட்க மாட்டாரா நீ ஊர் சுத்தறதுக்கு
கேட்கறியா  எங்கப்பாவுக்கு யார் யாரை எங்கே வைக்கனும்னு தெரியல" என்பார். இயக்குனர் அங்காங்கே இப்படி லாக் கொடுத்து அதை பின்பு ரீலீஸ் செய்திருப்பார். இது போன்ற சுவாரஸ்யங்களும் உண்டு திரைக்கதையில் 

பாடல்களிலும் பின்னணி இசையிலும் ஜஸ்டின் பிரபாகரன் இயக்குனருக்கு வலது கரமாக செயல்பட்டிருக்கிறார் பின்னணி இசையை ரொம்பவே ரசித்தேன் . கிராமத்தை  கண் முன் நிறுத்தி வைக்கிறது ஒளிப்பதிவு 


அட்ட கத்தி தினேஷ்  கதையை சொல்வதாக படம் நகர்கிறது.  அவரது சின்ன வயசு கேரக்டர் ஒரு அழகிய கவிதை. விஜய் சேது பதி வாங்க நாங்க டிராப் பண்றோம் என்பதாக காட்டாமல் தினேஷ் நின்றிருக்கும் காருக்குள் ஏறி அமர்ந்து கண் மூடி ரசனையுடன் ரசிப்பதாக அமைத்து விஜய் சேதுபதி வந்து பார்த்து விட்டு யாருங்க நீங்க என்று கேட்கும் போது அவர் சிரித்து கொண்டே எழுந்து வெளி வந்து தனது விலையுயர்ந்த காரில் ஏறி கொண்டு செல்ல விஜய் சேதுபதி புரியாமல்  பார்க்கும் படி  முடித்திருந்தால் இன்னும் கவிதையாக இருந்திருக்கும் (மோ)

நான் 42 வயதில் தான் டூ வீலர் ஓட்டவே கற்று கொண்டேன். வண்டி  வாங்கி ஓட்ட கற்று
கொண்டவுடன் எனது உற்சாகம் சொல்லி மாளாது. டூ வீலர் தான் என்றாலும் அதன்மேல் எனக்கு தனி மோகமே உண்டு.
படம் முடிந்தவுடன் எனக்கு உடனே சென்று எனது டூ வீலரை ஆசையுடன் தொட்டு பார்க்க வேண்டும் என்று தோன்றியது. 
இதுவே (இப் படத்தின்) இயக்குனரின் வெற்றி FINAL PUNCH


அந்த கார் வீட்டு வாசலில் மரத்தடியில் நின்றிருக்கும் போது அதன் மேல் மஞ்சள் மலர்கள் விழும். அதை ஜெயப்ரகாஷ் ஆசையாக பார்த்து சந்தோசபடுவார். கார் இல்லாமல் இருக்கும் போது அதே மஞ்சள் மலர்கள் தரையில் விழுந்து கிடக்கும். அது கார் வரவை எதிர்பார்த்திருப்பது போல் தோன்றியது எனக்கு.  இயக்குனர்  அருண்குமாரின் அடுத்த படத்தை இப்படி எதிர்பார்க்க தோன்றுகிறது.  வாழ்த்துக்கள் 

ஆர்.வி.சரவணன் 

சனி, பிப்ரவரி 15, 2014

குடந்தையில் மாசி மக விழா
குடந்தையில் மாசி மக விழா 


பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வருவது மகாமகம்.ஒவ்வொரு வருடமும் வருவது மாசிமகம். முதலில் மகாமகம் பற்றிய வரலாறை பார்ப்போம்

ஊழி பெரு வெள்ளத்தால் அழிய இருந்த உலகம் அழியும் நிலை வந்த போது பிரம்மன் சிவனிடம் கேட்க அவர் பல புண்ணிய ஸ்தலங்களில் இருக்கும் மணலை அமுதத்தோடு சேர்த்து கும்பம் செய்து அதில் அமுதத்தை நிரப்பி பூஜை செய்யும் படி ஆணையிட்டார் .வெள்ளம் வந்து கும்பத்தை அடித்து சென்று ஓரிடத்தில் சேர்த்தது. அங்கு வந்த சிவபெருமான் கும்பத்தில் 
 பானம் எய்தார்.கும்பம் உடைந்து அதிலிருந்த அமுதம் பூமியில் பரவியது அந்த இடமே மகாமக குளம். கும்பம் வந்து சேர்ந்த இடமாதலால் குடமூக்கு என்று பெயராயிற்று. குடம் என்றால் கும்பம் மூக்கு என்றால் கோணம் அதுவே பின் கும்பகோணம் என்ற ஊர் பெயராயிற்று.

குருபகவான் சிம்மராசியில் இருக்கும் போது மாசி மாதத்து பௌர்ணமியும் 
மக நட்சத்திரமும் கூடும் நாள் மகாமக திருநாள். இந்த நாளில் நவ கன்னியரான நதிகள் தங்கள் பாவங்களை போக்கும் விதம் எப்படி என்று சிவபெருமானிடம் கேட்க அவர் மகாமக நாளில் வந்து மகாமக குளத்தில் வந்து நீராடுங்கள் நான் பார்வதியுடன் காட்சி தந்து தங்களின் பாவங்களை பெற்று கொள்கிறேன் என்று உரைக்க அது போல் அவர்கள் வந்து நீராடுவதாக ஐதீகம். மனிதர்களான நாமும் சென்று நீராடினால் நம் பாவங்கள் விலகும் என்று சொல்கிறது தல வரலாறு 

ஒவ்வொரு மாசி மகம் வரும் போதும்  நான் சென்னையில் தான் இருப்பேன் அன்றைய நாள் என் மனம் இங்கேயே தான் இருக்கும். இன்று கும்பகோணத்தில் இருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.கும்பகோணத்தில் உள்ள ஆலயங்களிலிருந்து உற்சவர்கள் திரு வீதி உலா வந்து மகமாக குளத்தில் தீர்த்தம் தரும் நேரத்தில் நான் சென்றிருந்தேன். நான் எடுத்த படங்கள்  இங்கு உற்சவர் தீர்த்தம் கொடுக்க மகாமக குளத்துக்கு வருகை 
சோமேஸ்வரர் கோவில் உற்சவர் 


மகாமக குளம் அருகிலுள்ள அபிமுகேஷ்வர் ஆலயம் 


 நாகேஸ்வரன் கோவில் உற்சவர் 
மகாமக குளம் 

இந்த மகாமக குளம் இருபது ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் இருபது கிணறுகள் உள்ளன. 

ஆர்.வி.சரவணன் 

FINAL PUNCH 

பாவம் செய்தவர்களை காசிக்கு சென்று கங்கையில் நீராடு என்று சொல்வார்கள். ஆனால் காசியில் பாவம் செய்தவர் கும்பகோணத்தில் 
மகாமக குளத்தில் நீராடினால் பாவம் தொலையும் என்கிறது தல வரலாறு 

ஓம் நமசிவாய 

செவ்வாய், பிப்ரவரி 04, 2014

கோலி சோடா
கோலி சோடா

 அனாதை சிறுவர் சிறுமியரை  ரோட்டில் கடந்து செல்லும் போது நின்று அவர்கள் வாழ்க்கையை பிரச்சனைகளை கவனித்திருக்கிறோமா. அப்படி நின்று கவனித்தால் அவர்களிடமும் ஒரு கதை இருக்குமே அதை தான் கோலிசோடா வாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் இயக்குனர் விஜய் மில்டன் 

கோயம்பேடு மார்க்கெட்டில் அனாதை சிறுவர்கள் நான்கு பேர் மூட்டை தூக்குபவர்களாக இருந்து தங்களுக்கு என ஒரு அடையாளம் வேண்டும் என்று ஹோட்டல் ஆரம்பிக்க அந்த இடத்தை கொடுத்தவரின் உறவினர் ( கையாள்)  அங்கே அசிங்கங்களை நிறைவேற்ற பொறுக்காதவர்கள் பொங்கி எழுந்து  அவர்களை எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதே கதை. இவ்வளவு தானா  என்று நினைக்க வைக்காமல் அந்த சிறுவர் சிறுமியரும் இயக்குனரின் திரைக்கதையும் சீட் பெல்ட் போட்டு நம்மை உட்கார வைத்திருக்கிறார்கள் 

பசங்க படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படங்கள்ல ஒண்ணு. அதிலே நடிச்ச பசங்க நான்கு பேரும் இங்கே வளர்ந்த பசங்களாக.  கடற்கரையில் அந்த பெண்ணின் கோலத்தை பார்த்து (சித்தப்பா) பையன்  அழும் காட்சி ஒரு சாம்பிள் 

 அந்த எ டி எம் சிறுமி சூப்பர் கேரக்டர் அந்த பெண்ணும் அதை கரெக்டா மேட்ச் பண்ணிருக்கு.அது ஏதோ காமெடியாய் ஓரிரு காட்சிகள் தான் வர போகிறது என்று நினைத்திருக்கையில் முக்கிய கேரக்டரில்  படம் முழுக்க பட்டையை கிளப்புகிறது அந்த பெண்ணின் பார்வை உடல் மொழி எல்லாம் கலக்கல். 

ஆச்சியின் மகளாக வரும் பெண்ணும் கண்கள் லட்சணமான முகம் என்று தன் பங்குக்கு ஸ்கோர் செய்திருக்கிறது 


நம்ம அண்ணாச்சி போலீஸ் ஸ்டேசனில் பேசும் 
வசனங்கள் சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்று மேலும் கேட்க 
வைக்கும் விதத்தில்.தியேட்டரில் கரவொலி ஏற்படுத்துகின்றன
 \

சுஜாதா ஒரு தாய் போல் அரவணைப்பதிலும் இதுல யாருடா என் மருமகன் என்று கேட்பதிலும்  நான் செத்து ரெண்டு மணி நேரமாச்சு என்று  கொடுக்கும் உருக்கத்திலும்  படு பாந்தம்

அந்த மயில் கேரக்டர் (விஜய் முருகன் )எழுந்து போய் அறையலாமா என்று தோன்ற வைக்கும்  கடுப்பை  நடிப்பில்  தந்திருக்கிறார். நாயுடுவாக வருபவர்  ஆரம்பத்தில் மரியாதையாக பேசுவதாகட்டும் பின் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தன்  சுயரூபம் காட்டுவதாகட்டும்  அதற்கேற்ற குரல் மற்றும் முக பாவங்களில் மிரட்டுகிறார் 

 ஆச்சி திரும்ப வந்திருக்கும் சிறுவர்கள் நான்கு பேரையும் கட்டி பிடித்து கொண்டு அழ, அந்த புள்ளி (கதாநாயகன்)  கை நீட்டி ஆச்சி மகளின் கை பற்றி கொள்வது கிளாஸ்

"ஆசைப்பட்டு அரிவாள் வாங்கி  என்னையே கிழிச்சிகிட்ட மாதிரி என் கிட்டே காசு வாங்கி என் பெண்ணையே டாவடிகிறீங்களா" ,"நல்லா படிக்காதது க்கு தான் நான் கவலைப்படணும் நல்லா பிறக்காத தற்கு நான் ஏன் கவலைப்படணும்"

 பாண்டிராஜ் வசனம் அங்காங்கே நச் சென்று காட்சிகளுக்குள் தன்னை பொருத்தி கொள்கிறது 


ரசிக்க நல்ல விஷயங்கள் நிறைய இருந்தாலும் இடைவேளைக்கு பின் வரும் முதல் சண்டை காட்சி விறுவிறுப்பா இருந்தாலும், சண்டைகள் சிறுவர்கள் சித்ரவதை தொடர்வதை தவிர்த்திருக்கலாம். நாயுடுவின் இடத்தில கடை போடாமல் எதிரிலோ பக்கத்திலோ கடை போட 
அங்கேயும் தொல்லை தொடர்கிறதாக காட்டியிருக்கலாம்.  சின்ன வயசு பையன்கள் காதலை (கொஞ்சம் அவஸ்தையுடன்) ரசிக்க முடிகிறது.கோயம்பேடு தான் கதை களம் எனும் போது இவர்களை தவிர அங்கிருக்கும் மற்றவர்களுக்கும்  கதையில் இடம் கொடுத்திருக்க வேண்டும். 

ஒவ்வொருவருக்கும் அடையாளம்  என்பது எவ்வளவு முக்கியம் 
என்பதே படத்தின் மையக்கருத்து. இந்த படத்தில் நடிதிருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் இயக்குனருக்கும் அடையாளம் தந்திருக்கிறது இந்த 
கோலி சோடா.   FINAL PUNCH

சிறுவர் கதை என்றாலும் அவர்களை குடிப்பவர்கள புகைப்பவர்கள என்றெல்லாம் காட்டாமல் அக்கறையுடன் உழைக்க துடிப்பவர்களாய் காட்டிய விதத்தில் சபாஷ் பெறுகிறார், இயக்குனர் விஜய் மில் டன் 

ஆர்.வி.சரவணன் சனி, பிப்ரவரி 01, 2014

ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோவில்

ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோவில் 


(சிவன் காமனை எரித்து உயிர்ப்பித்த ஸ்தலம்)  

எனது ஊரான கும்பகோணம் கோவில் நகரம் என்று பெயர் பெற்றது.  ஊரை சுற்றி பிரசித்தி பெற்ற கோவில்கள் தான் எவ்வளவு இருக்கின்றன. அதில் சிறப்பு பெற்ற சிவன் கோவில் பற்றிய பதிவு இது 

எங்கள் வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள் இந்த புண்ணிய ஸ்தலத்துக்கு சென்று விட்டு வந்து கோவிலை பற்றியும் அதன் சிறப்பையும் எங்களிடம் தெரிவித்தார்கள். கோவில் செல்லும் ஆர்வம் எழுந்தது.  சென்ற  ஞாயிறு  அன்று கிளம்பினோம் 


கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் மெயின் ரோட்டில் குத்தாலம் 
என்ற ஊர் வருகிறது. அங்கிருந்து உள்ளே திருமணஞ்சேரி செல்லும் பாதையில் சென்றால் 
காளி என்ற  ஊருக்கு அடுத்து வருகிறது இந்த திருகுறுக்கை  ஊர். (மயிலாடுதுறையிலிருந்து நீடூர் வழியாகவும் செல்லலாம் ) 

கோவிலுக்கு அருகில் கடைகள் ஏதும் இல்லை என்று சொன்னதால் குத்தாலத்தில் அர்ச்சனை பொருட்கள் மாலைகள் வாங்கி கொண்டு கிளம்பினோம். செல்லும் பாதை மிககுறுகலாய் கொஞ்சம் மேடு பள்ளத்துடன் தான் இருக்கிறது அதற்காக தயங்க தேவையில்லை. இரு பக்கமும்
இயற்கை வாரி இறைத்திருக்கும் அழகுக்கு முன் அது ஒன்றும் பெரிய விசயமில்லை. பரபரப்பான இந்த உலகத்தில் அந்த பரபரப்பை உள்ளே அனுமதிக்காதது போல் இருக்கும்  இந்த ஊரில் தான்  இறைவன் அருள் பாலிக்கிறார் இறைவனின் திருத்தலம் பார்க்கையில் அதன் எழில் நம்மை பரவசம் கொள்ள வைக்கிறது. கோவிலுக்கு எதிரே  பெரிய குளம் படிக்கட்டுகளுடன் இருக்கிறது. கோவிலுக்குள் நுழைந்தால் அதன் அமைதியே நமக்கு ஒரு அழகை தருகிறது என்றால் அது மிகையல்ல. கோவில் அர்ச்சகரிடம்  கேட்டு கோவில் பற்றிய சிறப்புகளை தெரிந்து கொண்டோம் 

யோக நிலையில் இருக்கும் சிவபெருமானின் 
தவத்தை கலைக்கும் பொருட்டு தேவர்கள் யோசனையின் படி மன்மதன் சிவன் தவம் இருக்கும் இடத்திற்கு ஒரு பர்லாங் தூரத்தில் இருந்து கொண்டு, கரும்பால் வில் செய்து அதில் மலர்கணை  எய்கிறார். சிவன் நிஷ்டை கலைந்ததால் தன் நெற்றி கண்ணை திறந்து பார்க்க,  மன்மதன் எரிந்து  சாம்பலாகிறான். மன்மதன் மனைவி 
ரதி வந்து சிவனிடம் வேண்டி பிரார்த்திக்க மன்மதனை உயிப்பித்து தனது அருள் புரிகிறார் சிவபெருமான்.  இனி உன் கணவன் உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான் மற்றவர் கண்களுக்கு தெரிய மாட்டான் என்றும் உரைக்கிறார். இதுவே இந்த தளத்தின் வரலாறு.உள் பிரகாரத்தில் விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது இவர் குறுங்கை விநாயகர் என்று அழைக்கபடுகிறார்.
இங்குள்ள தீர்த்ததிற்கு சூழ தீர்த்தம் என்று பெயர்  இறைவன் யோகிஸ்வரர் என்ற பெயருடன் மேற்கு நோக்கிய சன்னதியில்
வீற்றிருக்கிறார்.  ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் ஞானாம்பிகா என்ற பெயருடன் தெற்கு நோக்கிய  சன்னதி யில் நின்ற 
கோலம் கொண்டிருக்கிறார் கோவிலை சுற்றி உள் பிரகாரம் மட்டுமில்லாமல் சுற்றி வர வெளி பிரகாரமும் இருக்கிறது


                   கோவில் கோபுரங்களில் உள்ள சிற்பங்கள் 
              அழகுறசெதுக்கப்பட்டுள்ளன 


இது சிவபெருமானின் அஷ்ட வீரட்டான தலங்களில்ஒன்று 


இத் தலத்திற்காக திருநாவுக்கரசர் இரு பதிகங்கள் இயற்றியுள்ளார் இறைவனை தரிசித்து கொண்டிருக்கும் போது வேகமாக பேச கூட கொஞ்சம் தயக்கமாக இருந்தது காரணம் அந்த அமைதி இறைவன் நிஷ்டையில் இருப்பதாய் நமக்கு செய்தி சொல்வது போன்று இருந்தது.  அந்த கோவிலின் (ஊரின்) அழகை பார்க்கும் போது இந்த ஊரில் வாடகைக்கு வீடு கிடைத்தால் சில நாட்கள் தங்கி தினமும் இறைவனையும் தரிசித்து கூடவே இந்த அமைதியையும் ரசிக்கலாமே என்று சொன்னேன். 

மூலவர் லிங்க வடிவில் காட்சி தரும் வீரட்டேஸ்வரர் தியான பலம், மனோபலம் இவற்றுடன் செய்த தவறை மன்னித்தும் அருள்
புரிகிறார். இழந்ததை மீட்டு கொடுக்கும் யோக மூர்த்தி மன்மதனை 
ரதிக்கு மீட்டு தந்திருகின்றன் உண்மை பக்தியுடன் அவர் சன்னதியில் 
சென்று உளமார வழிபட்டால் அவன் அருள் கிடைக்கும் நல்லதே நடக்கும் மன்மதன் எரிக்கபட்ட்ட இடம் இரு தெருக்கள் தள்ளி இருக்கிறது. விபூதி குட்டை செல்லும் வழி என்ற அறிவிப்பு பலகை இருக்கிறது அங்கே சென்றோம் ஒரு தோட்டம் போல் இருந்த இடத்தில் சதுர வடிவில் பெரிய தொட்டி போல் இருந்தது சிறுவர்கள் அழைத்துசென்றார்கள்.
அந்த தொட்டியில் மணல் திருநீறு போன்ற வெண்மையில் இருக்கிறது . (சுற்றியுள்ள இடங்களில் செம்மண் போல் இருந்தாலும்)கோவிலை விட்டு கிளம்பி வருகையில் இறைவனை நேரில் கண்டது 
போன்ற திருப்தி ஏற்பட்டது எங்களுக்கு.  அது மனபிரம்மையாக இருக்கலாம் என்று சொல்லும் போது கூடவே ஏன் இறைவன் ஆசி யால் ஏற்பட்ட திருப்தியாக கூட இருக்கலாமே  என்றும் சொல்ல தோன்றுகிறது   


FINAL PUNCH 

பழைய பக்தி பாடல் ஒன்று உண்டு "எழுதி எழுதி பழகி வந்தேன் எழுத்து கூட்டி பாடி வந்தேன் பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்"  

எனக்கு எழுத்தறிவித்த இறைவன் தன் புண்ணிய பூமிக்கு வர வைத்திருக்கிறார். எழுத வைத்திருக்கிறார். (குருவாய் என்னுள் அமர்ந்து)

ஓம் நமச்சிவாய 

ஆர்.வி.சரவணன்