வியாழன், ஜூன் 22, 2017

முகநூல் குறிப்புகள் - 3
முகநூல் குறிப்புகள் - 3


(இந்த பதிவு முழுக்க சினிமா குறிப்புகள் தான்) 

வாழ்வே மாயம் படத்துல நீல வான ஓடையில்.... னு கமல் ஸ்ரீதேவி யை பார்த்து பாடறப்ப, ஓரிடத்தில் கண்மூடி கற்பனையில் மிதப்பார். அப்ப ஒரு பெரியவர் வந்து அவரை தட்டி எழுப்பி நலம் விசாரிச்சிட்டு போவாரு. அது மாதிரியான அனுபவம் இது.
ஒரு நாள் எங்க வீட்டு பங்சன்ல கண்மூடி கொஞ்சம் சிந்தனைல இருந்தேன். ஒருத்தர் என் தோளில் தட்டி "என்னப்பா பகல்லயே தூங்கறே" னு போற போக்கிலே என் சிந்தனையை கலைச்சு போட்டுட்டு போனாரு.
அவரை இழுத்து வைத்து கொண்டு கவுண்டமணி போல் "நான் தூங்கலீங்க. கொஞ்சம் திங்கிங்ல இருந்தேன்" னு சீரியசா சொன்னேன்.

அவர் சிரித்தபடி கூலாக,

"அட நீ தூங்குப்பா. யாரு வேணாம்னா. ஆனா அத போய் ஏன் திங்கிங்னு சொல்லிட்டிருக்கே?" னு செந்திலாய் மாறி என்னை கடுப்பேத்தி விட்டுட்டாரு.

மீ ஙே.

------

கார்த்திக், இளவரசி, வி.கே. ராமசாமி நடித்த எங்க வீட்டு ராமாயணம் படத்தில் ஒரு காட்சி.
கார்த்திக் : (ரொமாண்டிக் மூடில்) வா அன்னிக்கு பாதியிலே விட்ட பாட்டை 
இன்னிக்கு கன்டின்யூ பண்ணலாம்.
இளவரசி : நீங்க இப்ப பாட ஆரம்பிச்சீங்கன்னா இவங்கெல்லாம் எழுந்தரிச்சு போயிடுவாங்க (ஆடியன்ஸ் பக்கம் கை காட்டுகிறார்)
கார்த்திக் : இவங்க எந்த பாட்டுக்கு தான் எழுந்தரிச்சு போகலே . அதுக்காக நாம 
பாடாம இருக்க முடியுமா. நீ வா
இப்படி சொன்னதும் அடுத்து டூயட் பாடல் தான் வந்து விட்டது என்று நினைத்தால் சாரி. அடுத்த காட்சி வந்து விடுகிறது.
"நாங்க பாரின் போய் பாட்டு பாடிட்டு வர போறோம். அதுக்குள்ள டீ காபி சாப்பிடறதா இருந்தா போய் சாப்பிட்டு வாங்க" என்று  பாடலுக்கு முன் இப்படி ஒரு வசனமும் இனி வரலாம்.

------

சென்னை 28 -II படத்துல, ஜெய் கல்யாணம் நின்னு போன கவலைல பெங்களூர் போக போறதா சொல்லுவாரு. அப்ப இளவரசு, "பெங்களூர் போய் அனுவை அங்க கல்யாணம பண்ணிக்க போறே அப்படி தானே" னு கேட்பார்.
அப்ப, மிர்ச்சி சிவா படத்தின் இடையிடையே படங்களை மேற்கோள் காட்டி பேசற மாதிரி எனக்கு ஒண்ணு தோணுச்சு. அது என்னன்னா,
தென்றலே என்னை தொடு படத்துல மோகனுக்கும் ஜெய்ஸ்ரீக்கும் காதல் வந்து, காதல்ல பிரச்னை வந்து, இன்டர்வெல் வந்து, ( எத்தனை வந்து) மோகன் பீலாகி பெங்களூர்ல போய் வேலைக்கு சேருவாரு. அங்க ஜெய்ஸ்ரீ தற்செயலா வரவே, மோதல் தீர்ந்து காதல் வெற்றியாகிடும்.
கதையின் போக்கு அப்படி போகப்போகுதுனு நான் நினைக்கல. ஆனா சிவா அந்த சீனுக்கு இடையில் இத மேற்கோள் காட்டி சொல்ற மாதிரி ஒரு சீன் இருந்திருக்கலாமேனு நினைச்சேன். 

------

கங்கை அமரன் இயக்கிய படங்களில் கோழி கூவுது அவரது முதல் படம். இதற்கு பிறகு அவர் இயக்கிய படத்திற்கு வைத்திருந்த பெயர் கொக்கரக்கோ. ( கீதம் சங்கீதம் நீ தானே என் காதல் வேதம் .... சூப்பர் ஹிட் பாடல் இந்தப் படத்தில் உண்டு) அதற்கு அடுத்த படத்திற்கு என்ன பெயர் வைத்திருந்தார் தெரியுமா பொழுது விடிஞ்சாச்சு. (பிரபு சுலக்‌ஷனா நடித்தது ) தலைப்புகள் கோர்வையா இருக்குல்ல. அப்போது இது பற்றி பத்திரிகைகளில் கூட வந்த்தாக ஞாபகம். இது இப்படி இருக்கையில்,
அவர் இயக்கிய எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் வரும் செண்பகமே செண்பகமே பாடலை அடுத்த படத்தின் டைட்டில் ஆக வைத்திருந்தார்.
(ராமராஜன் ரேகா நடித்தது)

அதே போல் கரகாட்டக்காரன் படத்தில் வரும் ஊரு விட்டு ஊரு வந்து பாடல் வரிகளை அடுத்த படத்திற்கு டைட்டில் ஆக்கினார். (ராமராஜன் கௌதமி)

நேற்று டிவியில் வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா.... பாடல் பார்த்து கொண்டிருந்த போது இதெல்லாம் ஞாபகத்துக்கு வந்துடுச்சு.

------


டிவியில் பார்த்த இரண்டு திரைப்பட காட்சிகளில் நான் கவனித்த ஒன்று.
படம் : அரசு
வடிவேலுக்கு தபால் கொண்டு வந்து கொடுக்கும் தபால்காரர் "உனக்கு கவர்மெண்ட. வேலை கிடைச்சிருக்கு" என்பார்.
படம் : தங்கமான ராசா
ராமராஜனுக்கு வேலை கிடைத்திருப்பதாக சொல்லி கனகாவிடம் தபால் கொடுத்து கையெழுத்து வாங்கி செல்வார் தபால்காரர்.
யாருக்கு தபால் வந்திருக்கிறதோ அவர்கள் பிரித்து பார்த்தால் தானே விசயம் என்ன என்பது தெரிய வரும். தபால்காரருக்கு முன்பே எப்படி தெரியும் ?

இதெல்லாம் எப்படிய்யா யோசிக்கிறே னு கவுண்டமணி போல் நீங்கள் 
கேட்டீர்களானால் என் பதில் செந்தில் சொல்வது போல் தான்.
அதுவா தோணுதுண்ணே.


ஆர் .வி.சரவணன்