வியாழன், பிப்ரவரி 08, 2018

ஒரு கதை சொல்லட்டா.


ஒரு கதை சொல்லட்டா.கட் அவுட் பிலிம்ஸ் என்ற பெயர் பலகை இருந்த அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது, "நான் கெட் அவுட் சொல்றதுக்கு முன்னாடியே வெளில போயிடு" என்ற வார்த்தைகள் அசரீரியாக ஒலித்தது கண்டு திடுக்கிட்டான் அருண். அந்த அறையில் நடு நாயகமாக பெரிய டேபிள் போட்டு அமர்ந்திருந்த தயாரிப்பாளர் செல் போனில் யாரிடமோ கத்தி கொண்டிருந்தார்.
கட் அவுட் கெட் அவுட் ரைமிங்கை ரசிக்க முடியாத படிக்கு அந்த தயாரிப்பாளர்
"யாருப்பா நீ ?" என்றார் அதட்டலாக. அவரது கம்பெனி பட போஸ்டர்களில் இருந்த அவரது ட்ரேட் மார்க் சிரித்த முகம் இப்போது சிரிப்பை துறந்திருந்தது.

"கதை சொல்ல வந்திருக்கேன் சார். பாலு அனுப்பிச்சு வச்சாரு"

" ஒரு நாளைக்கு எத்தனை பேரை தான் கதை சொல்ல அனுப்பிச்சு வைப்பான் அவன்"
அந்த தயாரிப்பாளரின் பேச்சுக்கு, ஒரு அசட்டு புன்னகையை மட்டும் வெளியிட்டான்.
எனக்கு அங்க எவ்வளவு மரியாதை இருக்கு தெரியுமா என்ற பாலுவின் காலர் தூக்கல் பேச்சு ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது.

"நீ என்ன பண்றே. போயிட்டு இன்னொரு நாள் வந்து பாரு" வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி சகிதம் வேட்டி விளம்பரத்திற்கு வருபவரை  போல் இருந்த அந்த தயாரிப்பாளர் சிகரெட்டை ஆஸ்ட்ரேயில் அழுத்தி அணைத்தார்.

இன்னொரு நாள் என்பது எந்த தேதியில் என்பது  புரியாமல் அவரை பார்த்தான்.
அவன் மன ஓட்டத்தை அறிந்து கொண்ட அவர் "அடுத்த வாரம் வாப்பா"  என்றார்.
"சார். இன்னிக்கு வரதுக்கே ஆபீஸ் க்கு அரை நாள் லீவ் போட்டுட்டு வந்திருக்கேன் " தயக்கமாய் சொன்னான்.

"யோவ். இங்க அவனவன் 24 மணி நேரம்  உருண்டு புரண்டும்  வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குதேன்னு அலைஞ்சிட்டிருக்கான். நீ என்னடான்னா பார்ட் டைம் ஜாப் கணக்கா கதை சொல்ல வந்திருக்கேன்னு சொல்றே"

"சார். அது வீட்டுக்காக .இது என் ஆசைக்காக" வால்யூமை குறைத்த படி சொன்னான்.
"எத்தனை கதை வச்சிருக்கே"

"ரெண்டு மூணு  கதை இருக்கு சார்' தன் பேகை திறந்து பேப்பர்களை வெளியே எடுத்தான்.
"அதெல்லாம் வேண்டாம். ஷார்ட் பிலிம் எதுனா எடுத்திருக்கியா?"

"இல்ல சார்"
முகவாயை தேய்த்து கொண்ட படி யோசிக்க ஆரம்பித்தார்.
இன்னொரு நாள் பார்க்கலாம்னு அனுப்பி வைச்சிடுவாரோ என்ற பதைப்பில்
"கதை மைண்ட்லேயே இருக்கு. சொல்லட்டா சார்" என்றான்.

"முதல்ல நான் சொல்ற ஒன் லைன்க்கு சீன் சொல்லு பார்க்கலாம் "

"சரி சார் " என்ற படி உற்சாகமானான்.

"முதல்ல உட்காரு"
திகில் படம் பார்ப்பது போல் சீட் நுனியில் அமர்ந்தான்.

"அதாவது  நம்ம கதையோட ஹீரோ சினிமா நடிகர். ஒரு மாஸ் ஹீரோ அவர் வர்ற முதல் சீன் எப்படி வைக்கலாம்னு சொல்லு பார்ப்போம்"

"சார் ஒரு நிமிஷம்" என்ற படி அவன் யோசித்தான். அந்த தயாரிப்பாளர் அவனை கவனித்த படியே அடுத்த சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்தார். அருண் தொண்டையை செருமி கொண்டு சொல்ல ஆரம்பித்தான்.

"ஓப்பன் பண்ணா ஒரு தியேட்டர் சார். அதுல  நம்ம ஹீரோவோட படம் ரிலீஸ் ஆகியிருக்கு. எங்க பார்த்தாலும் போஸ்டர்கள் கட் அவுட் னு ஒரே கொண்டாட்டமா இருக்கு. கூட்டம் அலை மோதுது.  அப்ப ஒரு கார் வருது காரை விட்டு இறங்கறார் ஹீரோ. அவரை பார்த்தவுடன் கூட்டம் தியேட்டரை விட்டுட்டு அவரை மொய்ச்சுக்குது. அவர் போஸ்டருக்கு, கட்வுட்டுக்கு  போட வச்சிருந்த மாலைகளை எல்லாம் அவருக்கு போட கூட்டம் அலை மோதுது. கட் அவுட் மேல ஊத்தறதுக்கு வச்சிருந்த பால் குடங்களை இப்ப அவர் முன்னாடி கொண்டு வராங்க. கக்கத்துல வச்சிருந்த குழந்தை அழுவறதை கூட கவனிக்காம ஒரு பொண்ணு  கூட்டத்திலே சிக்கினாலும் பரவாயில்லன்னு ஹீரோவை நெருங்கி போயிட்டிருக்கு.
கூட்டத்தை அமைதிபடுத்திய ஹீரோ  "எதுக்கு இதெல்லாம் பண்றீங்க" னு  கேட்கிறார்.

"எங்க உற்சாகமே நீ தான் தலைவா" என்கிறான் ஒரு ரசிகன்.

"இதில் எல்லாம் எனக்கு உடன்பாடும் இல்ல. உற்சாகமும் இல்ல. நீங்க இதெல்லாம் பண்றதால பப்ளிக்  எல்லாம் என்னை தான் திட்டறாங்க" னு ஹீரோ சொல்றார்.

"இந்த பப்ளிக்குக்கு யார் கொண்டாட்டமா இருந்தாலும் பிடிக்காது தலைவா" ஒருத்தன் சொல்லி கொண்டே ஹீரோவுடன் செலஃபி எடுக்கிறான்.

"நோ நோ நம்மை விமர்சனம் பண்றவங்க சொல்றதிலயும் ஒரு நியாயமிருக்கே. எதுக்கு வேஸ்டா பாலை கட்அவுட்டுக்கு ஊத்தணும். அது மண்ணுல விழுந்து யாருக்குமே  பயனில்லாம தானே போகுது" னு ஹீரோ சொல்றாரு.

"இது எங்க ஆசை சந்தோஷம். இதை கண்ட்ரோல் பண்ணாதீங்க தலைவா ப்ளீஸ்"
ஒரு இளைஞன் சொல்கிறான்.

"எத்தனையோ அனாதை இல்லங்கள் இருக்கு. மாலைக்கு போஸ்டருக்கு பண்ற செலவை அங்க செலவு பண்ணலாம். இந்த பாலை கஷ்டப்படற குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.இத பண்ணீங்கன்னா என்னை பிடிக்காதவங்களுக்கு கூட என்னை புடிச்சு போயிடும். அவ்வளவு ஏன் நான் ஒரு வார்த்தை சொன்னா அதை மீறாதவங்க என் ரசிகர்கள்னு பேர் கூட உங்களுக்கு கிடைக்கும். செஞ்சுதான் பாருங்களேன்" ஹீரோ சொல்றாரு.

ரசிகர்கள் ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்து கொள்கின்றனர். அவர்களுக்குள் பேசி கொள்கிறார்கள். ஒருவன் முன்னே வந்து சொல்கிறான்.

"தலைவா. பாலுக்காக தான் ஒரு குழந்தை அழுகுது அப்படிங்கிற வார்த்தை இனி நியூசா தமிழ்நாட்டிலே வராது. அத நாங்க பார்த்துக்கிறோம் போதுமா "

"குட் இப்ப தான் எனக்கு சந்தோசமே ஆரம்பிக்குது" என்று புன்னகைக்கும் ஹீரோ அவனை நெருங்கி விட்டிருந்த பெண்ணின் கைகளில் அழுது கொண்டிருந்த குழந்தையை வாங்கி கொள்கிறான். அழுது கொண்டிருந்த குழந்தையின் முகத்தில் புன்னகை தவழ்கிறது. இங்க டைட்டிலை ஆரம்பிக்கிறோம். சார்." 
என்று சொல்லி முடித்த அருணை பார்த்த தயாரிப்பாளர் சொன்னார்.

"சரி .சினிமா நடிகன் நல்லவனா இருந்தா இந்த சீன் ஓகே. இதுவே கெட்டவனா இருந்தா?"
"கெட்டவனா இருந்தா...."  என்று யோசிக்க ஆரம்பித்த அருண்  விரல்களை சொடக்கு போட்ட படி சொன்னான்

"சிம்பிள் சார். குழந்தையை வாங்கி கொண்ட  ஹீரோ அது சிரிப்பதை பார்த்து ரசிக்கிறப்ப  டைரக்டர் கட் னு சொல்றாரு. இது வரைக்கும் நடநதது ஷூட்டிங் னு ஆடியன்ஸுக்கு லாங் ஷாட்ல காட்டறோம்.  கேரவன் நோக்கி நடக்கிறார் ஹீரோ. ஷூட்டிங் பார்க்க கூடியிருக்கிற ரசிகர்கள் தலைவானு கத்தறாங்க.

"ரசிகர்கள் உங்களை பார்க்கிறதுக்கு வெயிட் பண்ணிட்டிருக்காங்க. ஷூட்டிங் முடிய லேட்டாகும் போல தெரியுது. நாளைக்கு வர சொல்லிடவா " உதவியாளர் ஹீரோ கிட்டே கேட்கிறார். ஹீரோ அவங்க பாட்டுக்கு  காத்துகிட்டு இருக்கட்டும். அப்படி இருந்தா  தான் நமக்கு மாஸ்" னு சொல்லிகிட்டே குளிரூட்டப்பட்ட கேரவனுக்குள் நுழைகிறார் ஹீரோ.  

வெயில்ல நின்ன படி வாழ்க கோஷம் போட்டுகிட்டு இருக்கிற ரசிகர்களை காட்டறோம்.  அங்க டைட்டில் போட்டு படத்தை ஆரம்பிக்கலாம் சார்." என்று சொல்லி முடித்த அருண் தயாரிப்பாளரை பார்த்தான்.

தயாரிப்பாளர் சொன்னார்.

"உனக்கு ஒரு டீ சொல்லட்டா"

ஆர்.வி.சரவணன்

தகவல் பலகை பிப்ரவரி மாத இணைய இதழில் இந்த சிறுகதை வெளியாகியிருக்கிறது.
வெளியிட்ட தகவல் பலகை ஆசிரியர் குழுவிற்கு நன்றி. உங்கள் சிறுகதை ஒன்று வேண்டும் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி அனுப்பி வைத்த  நண்பர் அரசனுக்கு நன்றியும் அன்பும்.

திங்கள், பிப்ரவரி 05, 2018

டெஸ்ட்

டெஸ்ட் 
சிறுகதை 

ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திருந்தார் ஆங்கில ஆசிரியர். மாதா மாதம்   நடைபெறும் டெஸ்ட் தான் அது. அன்றைய டெஸ்ட்டுக்கு  நான் படித்து கொண்டு வரவில்லை.  காரணம் சோம்பல், திமிர் இதில் ஏதேனும் ஒன்றை போட்டு கொள்ளலாம்.  டிக்கெட் புக் பண்ணவங்க வந்தாலும் வரலேன்னாலும் ரயில் டயத்துக்கு கிளம்பிடற மாதிரி எவன் படிச்சிட்டு வந்தா என்ன? வரலேன்னா தான் என்ன ? என்பது போல் அன்றைய டெஸ்ட் தொடங்கியது. விடை என்ன எழுதுவது என்றே தெரியாமல் நான் முழித்து கொண்டிருக்க, எல்லாரும் எழுதி கொண்டிருந்தார்கள். 

டேய் எவனாவது இன்னிக்கு எனக்கு துணை இருங்கடா. என்னை தனி ஒருவனா விட்டுராதீங்க என்ற எனது மைண்ட் வாய்ஸ் எனக்கு மட்டுமே கேட்டது.  பக்கத்து சீட் மாணவன் சுரேஷை பார்த்து எழுதலாம் என்றால் அவன் என்னை திரும்பி பார்க்கவேயில்லை. இதுவே ஒரு குற்ற உணர்ச்சி போல் தோன்றியது. வேறு யாரேனும் இது போல் எழுதாமலிருந்தால் சேம் பிளட் என்று உற்சாகமாகி கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ள மற்ற மாணவ மாணவிகளை கவனித்தேன். எல்லாரும் இன்றே நூற்றுக்கு நூறு எடுத்து விடும் உறுதி எடுத்து கொண்டது போல் எழுதி கொண்டிருந்தார்கள்.  

காலையில் செய்ய தவறிய  நடைப்பயிற்சியை ஹால் முழுக்க ஆசிரியர் இப்போது செய்து கொண்டிருந்தார். காலில் இடறிய சிறு குப்பையை தன் கால்களாலே வகுப்பறைக்கு வெளியே தள்ளி கொண்டிருந்தார்.இன்னும் சிறிது நேரத்தில்  என்னையும் அது போல் தான் வெளியேற்றுவார் என்பது சிம்பாலிக்காக தெரிந்து போயிற்று. அங்குமிங்கும் திரும்பி பார்த்தேன். சேகர் எழுதுவதை விட்டு விட்டு ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்பாடா நமக்கு ஒரு துணை கிடைச்சாச்சு என்ற நிம்மதி பெருமூச்சை விட்டேன். கமலா கூட எழுதாமல் எல்லாரையும் பார்த்து கொண்டிருந்தாள். அவளை பார்த்து  எழுதலையா என்பதை நான் கண்களால் கேட்பதை கவனித்த ஆசிரியர், பல்லை கடித்த படி சாக்பீஸை என் மேல் விட்டெறிந்தார். நான் நோட்டில் பார்வையை பதித்தேன். எழுதுவது போல் பாசாங்கு காட்டி ரூல்டு நோட் கோடுகளை எண்ண ஆரம்பித்தேன். மணித்துளிகளையும் தான். டெஸ்ட் நோட்டில்  என் பெயரின் மேல் மீண்டும் மீண்டும் எழுத ஆரம்பித்தேன். 

டெஸ்ட் முடிந்ததன் அறிகுறியாக ஆசிரியர் கையில் இருந்த ரூல் தடியை மேஜையில் ஒரு அடி அடித்தார். என் முதுகில் விழுந்தார் போல் விர்ரென்றது. "எல்லாரும் டெஸ்ட் நோட்டை டேபிள்ல கொண்டாந்து வைங்க" என்ற ஆசிரியரின் உத்தரவுக்கு கீழ் படிந்து டெஸ்ட் நோட்டை சக மாணவ மாணவிகள் எழுந்து சென்று அடுக்க ஆரம்பித்தனர். விரைவாக கொண்டு சென்று வைப்பவர்கள் நன்றாக எழுதியிருக்கிறார்கள் என்பது உடனே தெரிந்து போயிற்று.  சிலர் சரியாக எழுதவில்லை என்பது வேண்டா வெறுப்புடன்  மெதுவாகவே மேஜையை நோக்கி அவர்கள் நகர்ந்ததில் தெரிந்தது. 
சிலர் எழுந்திருக்கலாமா  வேண்டாமா என்ற நிலையிலிருந்தனர்.  சில நொடிகளில் மேஜையில் டெஸ்ட் நோட்டுகளால் ஒரு பைசா கோபுரம் உதயமாகி இருந்தது. 

எனக்கு டெஸ்ட் நோட்டை ஆசிரியரின் டேபிளில் வைக்கும் தைரியம் வரவில்லை. ஆனால் இன்னொரு தைரியம் முளைத்தது. அது, டெஸ்ட் நோட்டே வைக்காமல் விட்டு விட்டால் என்ன என்பது. அதன் மூலம் ஆசிரியரது திட்டுக்களில் இருந்து தப்பி விடலாம் என்றே நினைத்தேன்.  நீ தவறு செய்கிறாய் என்று  பிரம்பு கொண்டு மிரட்டிய மனசாட்சியை சாரி என்ற ஒற்றை வார்த்தையால் அடக்கி விட்டு  டெஸ்ட் நோட் வைக்காமலே விட்டு விட்டேன். இதை கவனித்து கேட்ட சுரேஷை இதுக்கு மட்டும் என் பக்கம் திரும்புறியா நீ  வடிவேலு போல் முறைக்க ஆரம்பித்தேன்.

ஆசிரியர், டேபிளில் இருக்கும் டெஸ்ட் நோட்களை மட்டும் திருத்தி  கொடுத்து விடுவார் என்று நான் நினைத்திருக்க,  அவரோ கிளாஸ் லீடரை அழைத்தார். அன்று வந்திருந்த மாணவர்கள் எண்ணிக்கையையும் டெஸ்ட் நோட்டுகள் எண்ணிக்கையும் ஒப்பிட சொன்னார். ஒரு டெஸ்ட் நோட் மட்டும் குறைந்தது தெரிய வந்தது. அது யாரென்பதை கிளாஸ் லீடர் அட்டெண்டென்ஸ் பார்த்து என் பெயரை உச்சரிக்கும் முன்னே படபடப்புடன் எழுந்து நிற்க தயாரானேன்.

ரகு என்ற பெயர் அறிவித்தவுடன் எல்லோரது பார்வையும் என் பக்கம் திரும்பியது.பிறகென்ன. அரசன் அன்றே கொள்வான். தெய்வம் நின்றே கொள்ளும். ஆசிரியர் அடுத்த நொடியே தண்டனை கொடுத்தார். அந்த பீரியட் முழுதும் பெஞ்சு மேல் ஏறி நிற்க வேண்டும் என்று சொன்ன போது அழுகையும் அவமானமும் ஒன்று சேர பெஞ்சு மேல் ஏறி நின்றேன்.  ஏன்டா எழுதாதது மாதிரி எல்லாம் சீன் போட்டீங்களேடா. நீங்க எழுதி முடிச்சிட்டு தான் உட்கார்ந்திருந்தீங்களா என்று உள்ளுக்குள் புலம்ப தான் முடிந்தது. 

ஆசிரியர் சொன்னார். "அவன் எழுதாம அங்க இங்க வேடிக்கை பார்த்துகிட்டிருக்கிறப்பவே எனக்கு டவுட் வந்துச்சு. மார்க் கம்மியா எடுத்தவங்க, ௦ மார்க் எடுத்தவங்க இவங்களை இன்னிக்கு நான் திட்ட போறதில்ல. ரகுவால் நீங்க தப்பிச்சீங்க" என்றார். மார்க் கம்மியா எடுத்த மாணவர்கள் என்னை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்கள். "டேய் உங்களுக்கும் சேர்த்து தான் தண்டனை எனக்கு கிடைச்சிருக்கு" வகுப்பு முடிந்தவுடன் அவர்களை பார்த்து கத்த வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். மதிப்பெண் எடுக்கலைனா கூட அதில் ஒரு நேர்மை இருக்கு. டெஸ்ட் நோட்டே வைக்காமல் இருப்பதில் என்னடா நேர்மை இருக்க போகிறது. கமலா என்னை பார்த்து சிரித்த சிரிப்பில் இருந்த செய்தி இது தான்.


இதோ இன்று அந்த கமலா தான் என்னை பார்த்து சிரித்து கொண்டிருக்கிறாள்.  கையில் பைலுடன் நான் அவள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன் . நான் பணி புரியும்  நிறுவனத்தில் பொது மேலாளராக பொறுப்பேற்று கொண்ட கமலாவின் முன் தான் தற்போது நின்று கொண்டிருக்கிறேன். பழைய ஞாபகங்களுக்கு நான் சென்று வந்தது போலவே அவளும் சென்று வந்திருக்க வேண்டும். அப்போது வெளிப்படுத்திய அதே சிரிப்பு இப்போதும் இருந்தது.
 சிரிப்பினூடே வார்த்தைகளை வெளியிட்டாள்.

"இப்பயும் ஆபீஸ்ல வேலை செய்து முடிக்க முடியாத பைல்களை கொடுக்காம கையோட தான் வச்சிக்கறீங்களா ரகு ?"

ஆர்.வி.சரவணன் 

பிரதிலிபியின் "நினைவுப்பாதை" சிறுகதை போட்டிக்கு இந்த சிறுகதை அனுப்பி வைத்திருந்தேன்.டெஸ்டில் தேர்வாகவில்லை. இருந்தும் கலந்து கொண்ட திருப்தியுடன் இங்கே நம் தளத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி.