வெள்ளி, டிசம்பர் 08, 2017

திருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள்
திருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள் 

திருமண ஒத்திகை கதை எழுத ஆரம்பிக்கும் போது, எங்கள் ஆசான் திரு கே. பாக்யராஜ் அவர்களின் வாழ்த்துரையோடு் தான் இந்த கதையை புத்தகமாக வெளியிடணும்னு ஆசைப்பட்டு எழுத ஆரம்பித்தேன். அவரது வாழ்த்துரை இந்த நாவலுக்கு கிடைத்தது மட்டுமல்லாது, பாக்யா வார இதழில் தொடர்கதையாகவும் வெளியாகி இதன் நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திரு. பாக்யராஜ் அவர்களே கலந்து கொண்டு நூலை வெளியிடும் பாக்யமும் ஒருங்கே எனக்கு கிடைத்திருக்கிறது.
இந்த இனிய நிகழ்வில் பங்கு கொண்டு, உடனிருந்து வாழ்த்திய தயாரிப்பாளர், இயக்குனர் திரு. சுரேஷ் காமாட்சி, இயக்குனர் நடிகர் திரு. E .ராம்தாஸ்,  இயக்குனர், தயாரிப்பாளர் திரு .மீரா கதிரவன், நண்பர் திரு .வினோ ஜாசன், வி.கே.சுந்தர்  மற்றும் விழாவை தன் தொகுப்புரையால் சுவாரஸ்யமாக்கிய நண்பர் சுரேகா சுந்தர், மற்றும்  அரசன், கோவை ஆவி , பாலகணேஷ்,   எஸ்கா கார்த்திகேயன், பாப்பனப்பட்டு ட்டு வ.முருகன், மூர்த்தி நடராஜன் ஆகியோருக்கும் இதயம் நிறைந்த நன்றி.
"இந்த கதையில் நாயகன் நாயகி ஹோட்டலில் காபி சாப்பிடுவதாக ஒரு காட்சி வருகிறது. இது சரவணனுக்கு உண்மையா நடந்திருக்கலாம்னு நினைக்கிறேன்.         அந்த அனுபவத்தை தான் அவர் காட்சியா வச்சிட்டார் போலிருக்கு"
திருமண ஒத்திகை புத்தக வெளியீட்டு நிகழ்வில் பேசுகையில் நடிகர் இயக்குனர்         திரு. E .ராம்தாஸ் அவர்கள் சிரித்த படி இப்படி குறிப்பிட்டார்.இது பற்றி ஒரு விளக்கம் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
தேநீரில் சர்க்கரை இல்லை என்ற போது 
வாங்கி சுவைத்தவள் இருக்கிறதே
என்ற படி திருப்பி தருகிறாள்.
இப்போது இனிக்கிறது.
ஏற்கனவே நான் எழுதியிருந்த இந்த வரிகளை தான், கதையில் நாயகன் நாயகியின் முதல் சந்திப்புக்காக எடுத்து கொண்டேன். எழுதி முடிக்கையில் என்னடா இது ரசனைனு சொல்லி விடுவார்களோ என்ற தயக்கமும் கூடவே இருந்தது. ஆனால் கதையை படித்தவர்கள் அதை பற்றி குறிப்பிடுகையில் தான் திருப்தியே வந்தது.
"ஒரு விஷயத்தை ஒரு காட்சியோடு விட்டு விடாமல் இடைஇடையே மத்தியிலும் நினைவூட்டி இறுதியிலும் அதனை தொடர்புபடுத்தி முற்றுப்பெற செய்வது ஒரு கதையின் நேர்த்தியான அம்சம். சரவணன் அந்த காப்பி விஷயத்தை கடைசி வரை திறம்பட கையாண்டுள்ளார். "
நடிகர் இயக்குனர் திரு .கே.பாக்யராஜ் அவர்கள் தனது மதிப்புரையில் குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகள் இவை. நாவலின் அட்டை படமாக காபி கப் தேர்வானதன் காரணமும் இது தான்.

கதைக்குத் தேவையான சில கதாபாத்திரங்களை மட்டும் வைத்து எழுதப்படும் கதைகளே சிறப்பாய் அமையும். கதாபாத்திரங்கள் பேசுவதாய் அமைவதைவிட முக்கிய கதாபாத்திரத்தைச்சுற்றி கதையை நகர்த்தி, நிறைய இடங்களில் காட்சிப்படுத்தினால் கதை சிறப்பாக அமைந்து படிப்பவர்களையும் ரசிக்க வைக்கும் என்று எனது கல்வித் தந்தையான பேராசான் மு.பழனி இராகுலதாசன் அடிக்கடி சொல்வதுண்டு. அப்படியான கதைகளை வாசிக்கும் போதெல்லாம் அதனுள் பயணிக்கும் கதாபாத்திரங்களோடு நானும் பயணித்த அனுபவத்தை உணர்ந்திருக்கிறேன்.அப்படியான கதை நகர்த்தலோடு கதாபாத்திரங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தியிருக்கும்
ஆசிரியர், அவர்களை அழகாக வெளியேற்றி சில இடங்களில் மிக நுணுக்கமாக காட்சிப்படுத்தி வாசிக்கும் நம்மை மெல்ல மெல்ல வசீகரித்து கதையோடு ஆழ்ந்து பயணிக்க வைத்து விடுகிறார். இன்று நிச்சயம் செய்த உடனேயே பெண்ணும்
மாப்பிள்ளையும் செல்போனில் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். மேலும் வாட்ஸ் அப் முகநூல் என ஏகப்பட்ட வசதிகள் வேறு. இன்றைய இளம் தலைமுறைக்கு சொல்லவா வேண்டும்..? அவையெல்லாம் இந்த நாவலில் இடம் பிடித்திருக்கிறது.
திருமண ஒத்திகை புத்தக அணிந்துரையில் நண்பர் திரு . பரிவை சே.குமார் அவர்கள்.


நண்பர் ஹரிஹரன் விஸ்வநாதன் சார் எழுதிய நூல் விமர்சனம் 
காதல் என்பது கண்ணும் கண்ணும் நோக்கினாலே தோன்றும். அது பல நாள் பழகிய உணர்வை தரும்...
சில பேருக்கு தாலாட்ட நான் பொறந்தேன் மாதிரியும் , சிலருக்கு மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ மாதிரியும் அமையும்....
ஆனால் பலர் நினைப்பது வெள்ளி பனி உருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன் போல இருக்கனும் என.... இந்தக் கதையில் வரும் வருணும் அதே ஆசையுடன் சென்று பெண் பார்க்கும் படலத்தில் ஆரம்பிக்கும் கதை,சில பல பிரச்சனைகளோடு எப்படி சுபமாச்சு என்பது தான் #திருமண_ஒத்திகை.
தலைவர் ஆர்.வி.சரவணன் குடந்தை பாக்யாவில் தொடராக எழுதிய கதை.
கதிர், காதலர் தினத்தில் ஆரம்பித்த முகநூல், தனுஷ் படங்களில் குரூப்பாக வடிவெடுத்தது இவரால் இந்தக் கதையிலும் வெகு சாமர்த்தியமாக புகுத்தப்பட்டது.
விருமாண்டி இருவரின் பார்வைகளை பதிவு செய்த படம். முதல் பாதி வில்லன்,மறு பாதி ஹீரோ..கிளைமேக்ஸ் சொதப்பல்... அதை விடுங்க. அது போல இதில் மூன்று பார்வைகள். வருண்,சஞ்சனா மற்றும் எழுத்தாளர் பார்வையில்...
முன்னேல்லாம் ரேடியோவில் கதை சொல்லுவாங்க... ஒருத்தரே எல்லா கேரக்டராகவும் மாறி பேசுவாங்க. அது போல இதில் ஆசிரியர் பல அவதாரம் எடுத்து அந்தந்த கேரக்டராகவே மாறி எழுதியுள்ளார்.
எனக்கு புடிச்ச கேரக்டர் வருணின் நண்பன் மதி... புரோட்டா சூரியை மனசுல வச்சு எழுதியிருப்பது போல தோனுது. என்ன சரிதானே தலைவரே?.... 
கடைசில வாட்சப் வெறியர்கள் மீதுள்ள பயம்தான் விஜயனை மாற்றுகிறது.. 😂
என்னையும் மதிச்சு புத்தகத்தை அனுப்பியதற்கு நன்றி தலைவரே... செம ரைட்அப்... இல்லைனா பாக்யராஜ் சார் கையால முன்னுரை கிடைக்குமா?.
136 பக்கங்கள்
விலை:₹125/-
பதிப்பு: ஜனனி பதிப்பகம் ,சென்னை
மொபைல்:09444675913
வாங்கி படிக்கவும்.... 
விழாவில் தயாரிப்பாளர், இயக்குனர் திரு. சுரேஷ் காமாட்சி அவர்களின்  வாழ்த்துரை. 
நடிகர், இயக்குனர் திரு. E .ராம்தாஸ்   அவர்களின் வாழ்த்துரை 
திரு. கே பாக்யராஜ் அவர்களின் வாழ்த்துரை 

இந்த இனிய தருணம் உருவாக என்னோடு ஒத்துழைத்து ஊக்கப்படுத்திய அனைத்து இணைய நண்பர்களுக்கும், என் உறவுகளுக்கும், நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றியும் அன்பும் என்றென்றும்.

ஆர்.வி.சரவணன்