புதன், ஜனவரி 28, 2015

திருமண ஒத்திகை-10

திருமண ஒத்திகை-10


பாசத்தின் முன்னே சினமும் கொஞ்சம் 
கை கட்டி நிற்கட்டுமே 

அப்பாவின் கோபம் அண்ணனின் மேல் திரும்புவதற்குள் எதாவது செய்தாக வேண்டும். இப்போது தான் திருமணம் முடிந்து திரும்பியிருக்கிறான் பெண்டாட்டியின் முன்னே கல்யாணம் ஆன அன்றே அண்ணனை 
அடிச்சிட்டார் என்றால் என்ன பண்றது என்ற யோசனையுடன் அப்பா அருகில் வந்தேன்  
ஆர்.வி.சரவணன் 
ஓவியம் திரு.ஷ்யாம் அவர்கள் 

ஞாயிறு, ஜனவரி 25, 2015

இணைய நட்புக்களின் ஊர் பொங்கல் (கும்பகோணம்)
இணைய நட்புக்களின் ஊர் பொங்கல் (கும்பகோணம்)

கும்பகோணத்தில் இருந்து படிக்கும் வரை வராத ஊர் பாசம் சென்னைக்கு வேலைக்கு சென்ற பின் தான் வந்தது. எப்போதுமே அருகில் இருக்கும் வரை அதன் பெருமை புரியாது தூரம் சென்ற பின் தான் தெரிய வரும் என்பது இயல்பு தானே. கும்பகோணம் என்ற பெயர் பலகையுடன் செல்லும் பேருந்துகளை பார்க்கையில் அதை ஏக்கமாய் பார்க்கும் அளவு ஊர் பாசம் (எல்லோருக்கும் போல்) எனக்குமுண்டு . ஊர் பாசம் காரணமாக தான் எனது வலைத்தளம் ஆரம்பிக்கையில்,என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்த போது ஊர் ஞாபகம் வந்து குடந்தையூர் என்றே பெயரிட்டேன். 


சரி விசயத்துக்கு வருவோம். முக நூலில் kumbakonam natives என்ற குழு இருப்பதை பார்த்தவுடன் ஆர்வமுடன் சென்று இணைந்து கொண்டேன். 
 எனது பதிவுகள் நான் எடுக்கும் படங்கள் அங்கே ஷேர் செய்ய ஆரம்பித்த போது நிறைய  நட்புக்கள் கிடைக்க பெற்றேன். இந்த குழு முக நூலில் நட்பு பாராட்டுவதுடன் கடமை முடிந்து விட கூடாது  என்று நமது பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் பொருட்டு ஊர் பொங்கல் கொண்டாட  முடிவெடுத்தார்கள் 
இந்த குழுமத்தின் நண்பர்கள் பலரை இது வரை நான் சந்தித்ததில்லை.நாம் சந்திப்பதற்கு உதவியாக இந்த விழா இருக்கும் என்பதால் இந்த விழாவில் கலந்து கொள்ள ஆர்வமானேன்.
  இந்த குழும நண்பர்களில் நான் இது வரை  சந்தித்த ஒரே நபர் நண்பர்
வேல் முருகவேல் மட்டுமே. அவர்  நீங்க கண்டிப்பா கலந்துக்கணும் சார் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். நான்  என் பெயரை பதிவு செய்ய முகநூல் நண்பர் தீபனை தொடர்பு கொண்ட போது அவரும் கண்டிப்பா நீங்க வரணும் சார் என்று குறிப்பிட்டார்.  யாரையுமே தெரியாதே என்ற என்  
தயக்கம் இந்த இருவரால் விடை பெற்று கொண்டது 

சென்ற ஞாயிறு  (18-01-2015) கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற இந்த திருவிழாவில்  நான் என் குடும்பத்துடன்  கலந்து கொண்டேன். விழா நிகழ்வை பற்றி கீழே குறிப்புகளாகவும் எனது செல் போனில் என் மகன் எடுத்த படங்களுடன் குழு அங்கத்தினர்கள் எடுத்த படங்களையும் சேர்த்து  தந்திருக்கிறேன்.
கார்த்தி வித்யாலயா பள்ளி சென்னை பை பாஸ் ரோட்டில் உள்ளது. பள்ளி கட்டடங்களின் ஊடே பச்சை பசேல் என்று மரங்கள் சூழ அம்மன் கோவிலுடன் இருப்பது பார்க்கவே  ரம்யமாக இருந்தது.  
கோவிலின் அருகே வண்ண கோலங்களிட்டு மாட்டு வண்டியின் சக்கரம் நிறுத்தி வைக்கப்பட்டு கூடவே விவசாயியின் ஏர் கலப்பை பல அளவுகளில் நெல் நிரம்பிய  படிகள் மூங்கில் கூடை உரல் என்று கிராமத்தின் அத்தியாவசிய தேவைகளான பொருட்கள் வைக்கபட்டிருந்தது.
மாட்டு வண்டி கொண்டு வரப்பட்டு  நிறுத்தப்பட்டிருந்தது. கூடவே 
ஆடுகள் ஒரு மரத்தில் கட்டி வைக்கபட்டிருந்தது.பள்ளியின் கம்பவுண்டு  முழுக்க எங்கு திரும்பினாலும் மரங்களின் அணிவகுப்பு என்பதால் எல்லாமுமாக சேர்ந்து ஒரு அழகிய கிராமத்தை  நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது போல் ஒரு பிரமை


முக நூல் நண்பர்கள் பலரும் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்.
காலை டிபனாக விழாவுக்கு முன்னே இட்லி, சுண்டல், பாயசம் 
வழங்கப்பட்டது. விழா தொடங்கியது. கண்மணி பாரதி நிகழ்சிகளை 
தொகுத்து வழங்கினார். விழாவில் பரத நாட்டிய கலை நிகழ்சிகளில் கலந்து கொள்ள வந்திருந்த  பள்ளியின் மாணவிகள் தமிழ்த்தாய் 
வாழ்த்து  பாடினார்கள்.  தேனாம்படுகை ஜீவா குழுவினரின் பறையடித்து ஆடி வந்தார்கள் 


அதனுடன் முக நூல் நண்பர்களும் உற்சாகமாய் பங்கேற்று நடனமாடினார்கள்.
வந்திருந்த மூத்த பெண்கள் பொங்கல் பானைகளை அடுப்பில் ஏற்றி 
வணங்கி பொங்கல் வைத்து   சூரியனை இயற்கையை வழிபட்டார்கள் 


கார்த்திக் வித்யாலயா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட கபடி போட்டி நடந்தது.அதில் வெற்றி பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 


மாணவிகள் கோலாட்டம் மற்றும் முருகனின் பக்தி பாடலுக்கு நடனமாடினார்கள்


ஜெரால்டு என்ற நண்பர் தன் வாயில் மண்ணெண்ணெய் ஊற்றி 
தீ  பற்ற வைத்து நடனமாடினார். மண் பானை எவ்வாறு செய்யபடுகிறது என்பதை மதனதூரிலிருந்து வந்திருந்த வயதான தம்பதிகள் செய்து காட்டினர். நானே இது வரை பார்த்திராதது. களி மண் சில நிமிடங்களில் பானையாவதை  கண்டு  ஆச்சரியப்பட்டோம் 

 மதிய உணவாக கற்கண்டு சாதம் , புளியோதரை தயிர் சாதம், வெஜிடபிள் ரைஸ் வடகம் தயிர்பச்சடி ஊறுகாய் தந்து வந்திருந்தவர்களை உபசரித்தார்கள்.விழாவில் கலந்து கொண்ட நாட்டிய மாணவிகளின் ஆசிரியர் தீபக் வெங்கடேஷ், கமலின் விஸ்வரூபம் படத்தின் உன்னை காணாத பாடலுக்கு நடனமாடினார் பின் உறியடித்தல் உற்சவம் நடைபெற்றது. சிறுவர் சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வமுடன் இதில் பங்கேற்றனர் 

முக நூல் நண்பர் சுரேஷ் குமார் அனைவருக்கும் நன்றியுரைத்து 
விழாவில் கலந்து கொண்டவர்களுக்கும், கலை நிகழ்சிகளில் பங்கேற்றவர்களுக்கும் பரிசு கொடுத்து விழாவுக்கு சிறப்பு சேர்த்தார்கள்.முகநூலில் எனக்கு அறிமுகமான மற்றொரு நண்பர் திரு.நௌஷாத் அலி.இவர் போடோகிராபர். கும்பகோணத்தின் அழகை பல் வேறு கோணங்களில் படம் பிடித்து அவ்வபோது பதிவிடுவார். நானும் அவரும்  
இந்த விழாவில் தான் முதன் முறையாக சந்தித்தோம். விழா பரபரப்பிலும் என்னுடன் அவர் அதிக நேரம் உரையாடியதில் எனக்கு மகிழ்ச்சியுடன் 
 அவர் என்னை படம் எடுத்து தந்தது நிறைவையும் தந்தது.

சுரேஷ்குமார், கண்ணன், வசந்தகுமார், சசிதரன், கிரிதரன் வாசு,அப்புகுமார் குடந்தை செந்தில் நண்பர்களின் அறிமுகம் கிடைத்தது. தீபன் தனது தந்தையிடம் என்னை அறிமுகபடுத்தி வைத்தார்.

காலை 9 மணிக்கு ஆரம்பமான விழா முடிவடைய  3 மணி ஆகி விட்டது
என்றாலும் உற்சாகம் பொங்கலாய் பொங்கி எங்கும் பரவி நிற்க எங்கே அது அகன்று விட போகிறதோ என்று  அதற்கு இடம் கொடுக்காமல் kumbakonam natives மற்றும்  namma kumabakonam  குழுக்கள், நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடைபெற வைத்து  விழாவுக்கு   சிறப்பு சேர்த்தனர்.FINAL TOUCH

நண்பர் சுரேஷ்குமார் தன் நன்றியுரையில், அடுத்து சமூக சேவைக்கு அழைக்கும் போது அனைவரும் இது போல் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். முக நூல் வந்தோமா லைக் போட்டோமா இல்லே 
எதுனா ஸ்டேட்டஸ் போட்டோமா என்றில்லாமல் இப்படி ஒரு விழா 
நடத்தும் எண்ணம் கொண்டமைக்கும் அடுத்து சமூக சேவைகளில் 
கவனம் எடுப்பதற்கும், என் நன்றி மற்றும் அன்பை என் பங்களிப்புடன் 
அளிக்கிறேன்.

ஆர்.வி.சரவணன்


செவ்வாய், ஜனவரி 20, 2015

திருமண ஒத்திகை-9


திருமண ஒத்திகை-9


இரு வீட்டார் அழைப்பு  என்ற வரிகள் அச்சானது 
பெண் வீட்டாரின் செலவில் காலை எழுந்தவுடன் முதலில் அப்பாவிடம் குட் மார்னிங் சொல்வதற்கு பதில் இந்த கேள்வியை தான் கேட்டேன்

"ஏன்பா மாப்பிள்ளையோட அண்ணன் லவ் மேரேஜ் னு சொன்னாங்க . பட் அது அப்பா  அம்மா ஏற்பாடு பண்ண அரேஞ்சுடு மேரேஜ் இல்லியாமே"

ஆர்.வி.சரவணன் 

நன்றி ஓவியர்  திரு.ஷ்யாம் அவர்கள் 

திங்கள், ஜனவரி 12, 2015

வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை குறும்பட சிறுகதை போட்டிவெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை 
குறும்பட சிறுகதை போட்டி 


நம் இணைய நண்பர் கோவை ஆவி அவர்களின் புதிய முயற்சி இது. அவரது தளத்தில் இது பற்றிய முழு விபரங்கள் வந்திருக்கிறது. அவரது இந்த முயற்சி வெற்றி பெற  வாழ்த்துக்கள். இப்  போட்டியை பற்றிய விபரங்கள் இங்கே 

"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..!
குறும்பட- சிறுகதை போட்டி


ஆவி டாக்கீஸ்- வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! குறும்பட - சிறுகதை போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்கண்டவாறு பரிசுகள் உண்டு: முதல் பரிசு பெறும் கதை குறும்படமாக எடுக்கப்படும்.

முதல் பரிசு:      ரூ.2000இரண்டாம் பரிசு: ரூ.1000மூன்றாம் பரிசு:  ரூ.500
ஆறுதல் பரிசு :   ரூ.250   (இரண்டு பரிசுகள்)

தேர்வுக்குழு:

"எங்கள் பிளாக்" ஸ்ரீராம் அவர்கள்,
"வீடு" சுரேஷ்குமார் அவர்கள்,
"மெட்ராஸ்பவன்" சிவகுமார் அவர்கள்,

மற்றும் உங்கள் "ஆவி"


விதிமுறைகளும்நிபந்தனைகளும்:
 • உங்கள் படைப்புகள்  ​​​400 வார்த்தைகளுக்கு குறையாமலும், 600வார்த்தைகளுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

 • கதைகள் நகைச்சுவைகாதல்க்ரைம்சமூக உணர்வுக் கதைகள்,விழிப்புணர்வுக் கதைகள் என எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம். தவறான வார்த்தைகளோயார் மனதையும் புண்படுத்துவதாகவோ இருத்தல் கூடாது.

 • தேர்ந்தெடுக்கப்படும்/ போட்டிக்கு அனுப்பப்பட்ட சிறுகதைகளில் முதல் பரிசு பெறும் கதை குறும்படமாக எடுக்கப்படலாம். அச்சமயம் 'கதை'இன்னாரென்று க்ரெடிட் மட்டுமே மட்டுமே கொடுக்கப்படும். (முதல் பரிசு தவிர வேறு சன்மானங்கள் அளிக்கப்பட மாட்டாது. )

 • கதை உங்கள் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும். வேறு தின,வாரமாத இதழ்களுக்கோஇணைய ஊடகங்களுக்கோ அனுப்பியதாய் இருத்தல் கூடாது.

 • கதை உங்கள் தளங்களிலோவேறு ஊடகங்கள் எதிலாவதோ வெளியாகியிருத்தல் கூடாது.  அப்படித் தெரிந்தால் கதை உடனே போட்டியிலிருந்து நீக்கப்படும்.

 • எந்த ஒரு கதையையும் தேர்ந்தெடுக்கவோநிராகரிக்கவோ போட்டி நடத்துபவருக்கும்தேர்வுக் குழுவுக்கும் மட்டுமே உரிமை உண்டு.

 •  போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் கதைகள் சிறுகதைத் தொகுப்பு நூலாகவும் வெளியிடப்படலாம்.

 • ஒருவர் அதிகபட்சமாக இரண்டு கதைகளை மட்டுமே அனுப்பலாம். (ஒரே மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்புதல் அவசியம்). 

 • கதைகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கதைக்கு தேவையெனில் பிறமொழிச் சொற்கள் பயன்படுத்தலாம். ஆனால் அவை தமிழிலேயே தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

 •            உங்கள் படைப்புகளை அனுப்ப கடைசித் தேதி: ஜனவரி 23, 2015 இரவு12 மணிக்குள் (IST)

 •          போட்டியின் முடிவுகள் ஏப்ரல் 14, 2015 அன்று வெளியாகும்.

 •             தேர்வுக்கு அனுப்பிய கதைகளை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் (ஏப்ரல் 14, 2015 க்கு பிறகு) படைப்பாளி தங்கள் தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

 • .    ​   போட்டி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து போட்டி முடியும் நாள் வரை போட்டியார்கள் தேர்வுக் குழுவை சேர்ந்த யாரையும் போட்டி சம்பந்தமாக அலைபேசியிலோ /முகநூலிலோ  தொடர்பு கொள்ளுதல் கூடாது. போட்டி விதிமுறை குறித்த சந்தேகங்களுக்கு மேலே குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும். ​


கதைகளை அனுப்பும் முறை:


 •    நேர்த்தியாக Format செய்யப்பட்டு MS-Word இல் அனுப்ப வேண்டும். 

 • MS-Word பைலின் பெயரில் உங்கள் கதையின் பெயர் ஆங்கிலத்தில் இடைவெளியின்றி எழுதப்பட்டிருக்க வேண்டும். 

 • (எ.கா)  உங்கள் கதையின் தலைப்பு "காதல் போயின் காதல்" என்றால்MS-Word File, KadhalPoyinKadhal என்ற பெயரில் Save செய்யப்பட்டிருக்க வேண்டும்.

 •  கதைக்கு பொருத்தமான ஏதாவது ஒரு படத்தையோ,  நீங்களே எடுத்த புகைப்படத்தையோ அனுப்பலாம். ஆனால் புகைப்படம் அனுப்புவது கட்டாயமல்ல. (புகைப்படம் தேர்வுக் குழுவுக்கு பிடித்திருந்தால் மட்டுமே வெளியிடப்படும்)

 • MS-Word  பைலையும் புகைப்படத்தையும் (Optional) தனித்தனி Attachment ஆக இணைத்து aaveetalkies@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 •  Subject இல் Aavee Talkies ShortFilm-ShortStory Contest 2015 என்று குறிப்பிடுதல் அவசியம்.

 • Body இல்  பின்வரும் தகவல்கள் உள்ளீடு செய்திருத்தல் அவசியம்.

 •  MS -Word இல் தமிழில் உள்ளீடு செய்ய முடியாதவர்கள் ஒழுங்காக பத்திபிரிக்கப்பட்ட கதையை டைப் செய்து ஈமெயிலின் சப்ஜெக்டில் கீழ்வரும் தகவல்கள் உடன்  சேர்த்து அனுப்பவும்.
 • (PDF வடிவில் அனுப்பப்படும் கதைகள் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டாது.)


பெயர்* : 
புனைபெயர்:
(Optional )
வசிக்கும் நகரம்:
(தமிழ்நாடு அல்லாத வெளியூர்/ வெளிநாட்டு படைப்பாளிகள் உங்கள் நகரம்/  நாடு சேர்த்து குறிப்பிடவும்.)
அலைபேசி எண்* :
வலைத்தளம்:
(Optional )
கதையின் தலைப்பு* :
கதை எண்* : Dates to Remember : 

                  


அனைத்து தகவல்களையும் அவரே சொல்லியிருப்பதால் நான் இதில் சொல்ல போவது 
 ஒன்றே தான். ஆர்வமிருப்பவர்கள் போட்டியில் பங்கு பெறுங்கள் பரிசை வெல்லுங்கள் 
உங்கள் எழுத்தும் கதாபாத்திரமும் திரையில் மின்ன போவதை காணுங்கள் 

FINAL TOUCH 

இதுல நீ டச் கொடுக்கிற அளவுக்கு என்னடா இருக்கு னு சலித்து கொள்ள வேண்டாம்.
நானும் இந்த போட்டியில் மற்ற நண்பர்களுடன் பங்கு கொள்கிறேன் 

ஆர்.வி.சரவணன் வியாழன், ஜனவரி 08, 2015

திருமண ஒத்திகை- 8

திருமண ஒத்திகை- 8

அளவு கடந்த அன்பு கூட  இங்கே 
பரிசொதனைகுரியது.


நான் என்ன சொல்வது என்று கொஞ்சம் தடுமாறினேன்.இப்போதே அக்காவின் கதையை சொல்லி அவரை கஷ்டபடுத்த வேண்டாம் என்று தான் தோன்றியது.
எனவே வார்த்தைகளில் பொய்யை வைத்தேன். ஆர்.வி.சரவணன் 

ஓவியம் நன்றி :திரு.ஷ்யாம் அவர்கள் 

செவ்வாய், ஜனவரி 06, 2015

எங்க சின்ன ராசா


எங்க சின்ன ராசா

பாக்யராஜ் என்ற திரைக்கதை அரசரின்  படங்களை பற்றி எழுதுவதென்றால் அது ஒரு வற்றாத ஜீவ நதி போன்று சென்று கொண்டேயிருக்கும். அழகான 
நதியிலிருந்து தண்ணீரை கைகளில்  ஆசையாய் அள்ளி ஆர்வமுடன் 
பார்ப்பது போன்றது தான் இந்த பதிவு.

அவரது படங்களில் கதாநாயகன் கதாநாயகிக்கு இடையே காதல் 
 உருவாகும் தருணங்களின் காட்சியமைப்பை சிறப்பாக கையாண்டிருப்பார். அதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.  இந்த காதல்
 தருணங்களின் போது  கூடவே இலவச இணைப்பு போல் வரும் பாடல்கள் சரியான சாங்  சிச்சுவேசன் என்று நாம் ரசிக்கும்  வண்ணம் அமைந்திருக்கும்.

மௌன கீதங்கள்

பாக்யராஜை  ஏமாற்றி சரிதா அவருக்கு முன் வேலையில் சேர்ந்து விட்டு பின் அவருக்கு தான் தான் வேலை வாங்கி கொடுத்தது போன்ற பிரமையை உருவாக்கியிருப்பார். ஆனால் தன் தகுதிக்கு தான் வேலை கிடைத்திருக்கிறது என்பதும் சரிதா முன்னமே தனக்கு கிடைக்க வேண்டிய வேலையை ஏமாற்றி பறித்து கொண்டதும் அவருக்கு தெரிய வரும். அப்போது கோபத்துடன் சரிதாவை திட்டுவார். சரிதா கதறி அழ,  அதட்டும் பாக்யராஜ்,  எனக்கு ஒரு கிஸ் கொடு என்று கேட்பார் அழுது  கொண்டிருந்த சரிதா ஒரு கணம் திடுக்கிட்டு அவரை பார்க்க அங்கே புத்தகத்தால் தன் முகத்தை மறைத்து கொண்டிருந்த பாக்யராஜ் புத்தகத்தை கொஞ்சமாக விலக்கி  காதல் பார்வையுடன் சிரிப்பை உதிர்த்த வண்ணம்  பார்ப்பார்.

மூக்குத்தி பூ மேல....... பாடல் தொடங்கும்

அந்த ஏழு நாட்கள்

உங்க ஆசானுக்கு மியூசிக் போட தெரியுமாடா என்று அம்பிகா கேட்க இதை சொல்லி  சிறுவன் ஹாஜா ஷெரிப் பாக்யராஜை உசுப்பி விட, அவர்  (பாலக்காட்டு மாதவன்)  நான் இப்போது பாட போகும் ராகத்தில் அந்த பெண்  ஆட்டோமேடிக்கா மதி மயங்கி  இங்க வரும் பார் என்று ராகம் ஆரம்பிப்பார். அந்த ராகத்தில் மயங்கி அம்பிகா ஏணி வழியாக தன் மனதை அனுப்பி வைப்பார்

கவிதை அரங்கேறும் நேரம்...... பாடல் தொடங்கும்

தூறல் நின்னு போச்சு

சுலக்க்ஷனா வை பெண் பார்த்து விட்டு சென்ற பின் பாக்யராஜ் அவரை பார்ப்பதற்காக ஆற்றங்கரைக்கு வருவார். அவரிடம் நெருங்கி விட முயற்சிப்பார்.இருந்தும் அவர் பிடி கொடுக்க மாட்டார். அப்போது சுலக்க்ஷனா காலில் முள்  குத்தி விடும். பாக்யராஜ் நீ நாளை வரும் போது முள் குத்தாது என்பார்.என்ன மந்திரமா பண்ண போறீங்க என்று கேட்கையில் நீ பாரேன் என்பார். அடுத்த நாள்  அவர் ஆர்வத்துடன் வரும் போது  அவர் வரும் வழியில்  பூக்களால் பாதை அமைத்திருப்பார். பாக்யராஜ்.அதில்  நடந்து வரும் சுலக்க்ஷனா நெகிழ்ச்சியுடன் சென்று அவரை கட்டி கொள்வார்.

பூபாளம் இசைக்கும் பூ மக்கள் ஊர்வலம்...... பாடல் தொடங்கும் 

எங்க சின்ன ராசா

இந்த படத்தில் ராதாவின் போட்டோ பார்த்தவுடன் வரும் கொண்டை சேவல் கூவும் நேரம் பாடலை  விட  அதற்கு அடுத்த சாங் சிச்சுவேசன் தான் கலக்கல். பாக்யராஜ் தனக்கு பார்த்திருந்த பெண்ணான  ராதா வீட்டுக்கு 
மண்ணாங்கட்டியுடன்  சென்று தங்குவார். சண்டையில் பாக்யராஜ் 
முதுகில் காயம் ஏற்பட்டிருக்கும். ராதா அதை கவனித்து பாண்ட் எய்ட் எடுத்து  
வந்து அவருக்கு காயம் பட்ட இடத்தில் போட்டு விட வரும் போது பாக்யராஜ் சந்தோசமாய் சிலிர்த்து கொள்வார். . ராதா தலையில் அடித்து கொண்ட படி பாண்ட் எய்ட்   போட்டு விட்டு தன் விரல்களால் பாக்யராஜ் முதுகில் ஒரு சுண்டு சுண்டுவார். 

மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்...... பாடல் தொடங்கும்

இது நம்ம ஆளு

நான்கைந்து நாட்களாக சாப்பிடாமல் பசியில் இருந்து கூடவே அவமான பட்டிருக்கும் பாக்யராஜை சோமயாஜுலு மனிதாபிமானத்துடன் சாப்பிட வைக்கும் காட்சியில் சாதத்தை பிசைந்து கொண்டிருக்கும்  பாக்யராஜ் கண்களிலிருந்து கண்ணீர் வந்து அவர் கையில் விழும்.  அவரை நெகிழ்ச்சியுடன் கவனித்து கொண்டிருக்கும் சோபனாவின் கண்களில் இருந்தும் கண்ணீர் வந்து அவர் கையில் விழும்.  காதல் மட்டுமல்ல அங்கே பாடலும்  உருவாகும்

அம்மாடி இது தான் காதலா......இப்படி அவரது பட காட்சிகளை பற்றி ரசித்து சொல்லி கொண்டே போகலாம்.
இப்படி பதிவு எழுதிகிட்டே வந்தவன் ஒரு முக்கியமான விசயத்தை பற்றி சொல்லாமல் விட்டுட்டேன் பாருங்க 

இன்று ஜனவரி ஏழு . நடிகர் இயக்குனர் கே. பாக்யராஜ் அவர்களின் பிறந்த நாள்
தங்களை வாழ்த்தும் வயதில்லை தலைவரே. இருந்தும் அன்றும் இன்றும் என்றும் உங்களின் நலம் நாடும் ரசிகனாக இருப்பதில் பெருமைப்படும்  

ஆர்.வி.சரவணன்


FINAL TOUCH

அந்த ஏழு நாட்கள் படத்தில் பூங்காவில் அம்பிகா ஹாஜா செரிப்பிடம் சாப்பிட்டீங்களாடா  என்று விசாரிப்பார். எனக்கு பன்னும் டீயும் வாங்கி கொடுத்துடுவார் அவர் மட்டும் ஈரத் துணியை வயிற்றில் கட்டிய படி பசியை மறைத்து கொள்வார் என்று ஹாஜா செரிப் சொல்ல அம்பிகா பாக்யராஜை ஆச்சரியமாய் கவனிப்பார். அங்கே  டியூன் போட்டு கொண்டிருக்கும் பாக்யராஜ் பாடி கொண்டிருப்பார். அந்த வரிகள்  அந்த காட்சிக்கு சிகரம் வைத்தது போல் இருக்கும் அது 

"ஈரேழு லோகத்துக்கும் ராஜா நான் தானே" 

நீங்கள் என்றென்றும்  ராஜா தான் பாக்யராஜ் சார்.
HAPPY BIRTHDAY TO YOU

பாக்யராஜ் அவர்களை சந்தித்த அனுபவங்களை பதிவுகளாக பகிர்ந்து கொண்டது இங்கே.

இது நம்ம பாக்யராஜ்

இதற்கு தானே ஆசைபட்டாய் சரவணா

வியாழன், ஜனவரி 01, 2015

ஆலயங்கள் தரிசனம்


 திருகண்ண மங்கை 

 ஆலயங்கள் தரிசனம்

கும்பகோணத்தை  சுற்றி எண்ணற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ளன. நண்பர் வினோ சொல்வார் .சரவணன் நீங்க இந்த கோவில்கள் பற்றி குறிப்புகள் தொகுத்து எழுதலாமே  புதிதாக செல்ல விரும்புபவர்களுக்கு பயனுள்ளதாக அமையுமே என்று சொல்லியிருந்தார்.நேரம் கிடைக்கும் போது செல்கிறேன் என்று சொல்லியிருந்தேன். அதற்கான வேளை  வரவே தினம் ஒரு கோவில் என சில கோவில்கள் எனது டூ வீலரிலேயே  சென்று வந்தேன். நான் சென்று வந்த ஆலயங்கள் பற்றிய சிறு குறிப்புகளை இப் பதிவில் தந்திருக்கிறேன்.
(தகவல்கள் அனைத்தும் கோவில் அர்ச்சகர், தகவல் பலகை மற்றும் இணையத்தில் இருந்தும் எடுத்து கொடுத்திருக்கிறேன்)கும்பகோணம் டு திருவாரூர் சாலையில் நான் டூ வீலரில் வந்து கொண்டிருந்த போது திருக்கண்ணமங்கை என்ற ஊர் வந்தது. இங்கே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ பகதவக்சல பெருமாள் ஆலயம் இருப்பதை பார்த்ததும் ஆர்வமாய் ஆலயத்தினுள் சென்றேன்.முகப்பில் மிக பெரிய குளத்துடன் கூடிய கோவில் கோபுரமும்,மூலவரின் தோற்றமும், ஆலயத்தில் இருந்த அமைதியும் என்னை மிகவும் கவர்ந்தது.
ஸ்ரீ வாஞ்சியம்

டுத்து நான் சென்றிருந்த ஸ்தலம் ஸ்ரீ வாஞ்சியம். திருவாரூரில் இருந்து கும்பகோணம் வரும் வழியில் திருகண்ணமங்கைக்கு அடுத்து மணக்கால் என்ற ஊர் வருகிறது. அங்கிருந்து 6 கிலோ மீட்டரில் இந்த புண்ணியஸ்தலம் உள்ளது என்ற நெடுஞ்சாலை அறிவிப்பு பலகையை பார்த்தவுடன் டூ வீலரை இந்த ஊரை நோக்கி திருப்பி விட்டேன்.மிக பெரிய சிவன் கோவில் இது. இறைவனின் பெயர் ஸ்ரீ வாஞ்சிநாதன் தாயார் பெயர் மங்களாம்பிகை. உலகிலேயே எமதர்ம ராஜனுக்கு சன்னதி உள்ள ஒரே கோவில் இது தான். கூடவே சித்திரகுப்தனும் இருக்கிறார்.எமதர்ம ராஜன் உயிர்களை எடுக்கும் பதவியை இறைவன் தனக்கு அளித்திருப்பதை நினைத்து வருந்தி இங்கே வந்து கடும் தவம் புரிய, மகிழ்ந்த இறைவன் மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் காட்சி தந்து, இத் தலத்தின் ஷேத்திர பாலகன் நீ. ஏதோ ஒரு விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இத் தலத்திற்கு வருவார்கள்.உன்னை தரிசித்த பின்பே என்னை தரிசிக்க வருவார்கள் என்று அருளினார். எமன் மகிழ்ந்து இறைவனுக்கு வாகனமாய் மாறினார். எம தீர்த்தம் இங்கே உள்ளது.
ஸ்ரீயை வாஞ்சித்து (ஸ்ரீ என்ற மகாலட்சுமியை அடைய விரும்பி ) திருமால் தவம் இருந்ததால் ஸ்ரீ வாஞ்சியம் என்ற பெயர் கொண்டிருக்கிறது  இத் தலம். 
அன்று காலை வரை இக் கோவில் வர போகிறேன் என்பது எனக்கு தெரியாது. கோவில் விட்டு வெளி வரும் போது,என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியது இறைவன் தான் என்பதை என்னால் உணர முடிந்தது
ஓம் நமச்சிவாய


திருபாம்புரம் 

டுத்த நாள் நான் சென்றிருந்த ஆலயம் திருப்பாம்புரம். திருவாரூர் டு மயிலாடுதுறை சாலையில் பேரளம் என்ற ஊர் வருகிறது. அங்கிருந்து 
6 கிலோ மீட்டரில் உள்ளது. (மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழி ) திருப்பாம்புரம். இறைவனின் பெயர் சேஷபுரிஸ்வரர் பாம்புரநாதர். அம்பாள் வண்டுசேர்குழலி பிரமராம்பிகை.இங்கே ராகுவும் கேதுவும் தனியாக இல்லாமல் ஒரே சரீரமாகி ஈசனை நெஞ்சில் நிறுத்தி அருள் பெற்ற தலம் இது. ராகு கேதுக்கென்று தனி சன்னதி உள்ள பரிகார ஸ்தலம் இது.

கைலாயத்தில் தன் தந்தை சிவபெருமானை விநாயகர் வணங்கிய போது அவர் கழுத்தில் இருந்த பாம்பு தன்னையும் அவர் வழிபட்டதாக நினைத்து கர்வம் கொண்டது. கோபம் கொண்ட சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தியை இழக்குமாறு சாபமிட்டார். அஷ்ட நாகங்களும் ராகுவும் கேதுவும் நாகம்
செய்த தவறுக்கு மன்னிக்கும் படி வேண்ட மகாசிவராத்திரி
அன்று ஆதிசேஷன் தலைமையில் திருப்பாம்புரம் ஸ்தலத்துக்கு வந்து வேண்டி சாப விமோசனம் பெறுமாறு இறைவன் அருளினார். 


இங்கே உள்ள தீர்த்தத்தின் பெயர் ஆதிசேஷ தீர்த்தம். 2004 ஆம் வருடம் நான் இந்த கோவில் பற்றி கேள்விப்பட்டு வந்திருந்து வழிபட்டேன். அதற்கு பிறகு இதோ இப்போது 2014 ஆம் வருடம் இங்கே வரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.பசுமை நிறைந்த வயல்களின் நடுவே கோவில் 
கொண்டு வீற்றிருக்கும் இறைவனை வழிபட்டதில்  ஒரு ஆத்ம திருப்தி இருந்தது.


திருமீயச்சூர்

 நான் பேரளத்தில் இருந்து திருபாம்புரம் கோவிலுக்கு செல்லும் போது இரண்டு கிலோ மீட்டரில் திருமீயச்சூர் என்ற ஊர் வந்தது. திருப்பணி ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் கோவிலின்  கோபுரத்தை பார்த்தவுடன் உடனே கோவிலுக்குள் சென்றேன். இந்த ஆலயம் அருள்மிகு லலிதாம்பாள் சமேத அருள்மிகு மேகநாதசுவாமி திருகோயில்.திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவார பாடல் பெற்ற தலம் இது.சூரியனுக்கு சாப விமோசனம் கிடைத்த தலம். சூரியனுக்கு எமன் சனி ஆகியோர் பிறந்த ஸ்தலம். உலகெங்கும் அனைத்து ஆலயங்களிலும் ஓயாமல் ஒலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் உருவான ஸ்தலம். ஸ்ரீ லலிதாம்பிகை ஸ்ரீ சக்ர பீடத்தில் இரு கரங்களுடன் அமர்ந்து அருள் பாலிக்கிறார். கோவிலின் திருப்பணிகள் முடிந்து கோவில் கும்பாபிஷேகம்  8-2- 2015 ஞாயிறு அன்று நடைபெறுகிறது. (பேரளத்தில் இருந்து திருப்பாம்புரம் செல்லும் வழியில் உள்ளது இக் கோவில்.)திருப்பாம்புரம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தவனை இந்த கோவிலில் கொண்டு நிறுத்தியது நான் தேர்ந்தெடுத்த சாலை தான் என்றாலும், இந்த கோவிலுக்கு என்னை வர வைத்திருப்பது அருள்மிகு மேகநாத சுவாமி லலிதாம்பிகை இருவரின் கருணை என்பதாகவே என்னால் உணர முடிந்தது.


திருகண்ணபுரம் செல்லும் பாதையில் 


டுத்து நான் சென்ற புண்ணிய ஸ்தலம் திருகண்ணபுரம்.ஒரு இடத்திற்கு 
நாம் எப்போது செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்வது நாம் அல்ல கடவுள் தான் என்பது இந்த கோவில் சென்ற போது தான் என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. அதை பற்றி இப் பதிவின் முடிவில் சொல்கிறேன்.


மயிலாடுதுறை டு  திருவாரூர் சாலையில் திருவாரூருக்கு
முன் 10 கிலோ மீட்டரில் ஆண்டி பந்தல் என்ற ஊர் வருகிறது .(மயிலாடுதுறையில் இருந்து 30 கிலோ மீட்டர்)அங்கிருந்து
உள்ளே ஏழு கிலோ மீட்டரில் இருக்கிறது இந்த புண்ணிய ஸ்தலம்.

மூலவர் நீலமேக பெருமாள். தாயார் கண்ணபுர நாயகி உற்சவர் சௌரிராஜ பெருமாள். மூலவர் பூதேவி ஸ்ரீ தேவி சகிதம் நின்ற கோலத்தில் இருக்கிறார். மூலவர் கையில் முழுவதும் திரும்பிய பிரயோக சக்கரத்துடன் காட்சி தருகிறார். விபீஷணனை தம்பியாக ஏற்று கொண்ட ராமபிரான் அவருக்கு இத் தலத்தில் பெருமாளாக நடந்து காட்சி தந்திருக்கிறார். (விபிஷணன் என்ற பெயருடன் ஒரு சன்னதி பார்த்தேன்) சௌரிராஜ பெருமாள் என்ற பெயர் எப்படி வந்தது என்பதை பார்ப்போம்.


 திருகண்ணபுரம் 

முன்னொரு சமயம் அர்ச்சகர் ஒருவர் சுவாமிக்கு சாற்றிய மாலையை தன் காதலிக்கு சூட்டி விட்டார்.மன்னர் கோவிலுக்கு வரவே அவருக்கு மரியாதை செய்ய வேறு மாலை இல்லாததால் காதலிக்கு சூட்டிய மாலையை மன்னருக்கு போட்டு விட்டார். அதில் பெண்ணின் கூந்தல் முடி இருப்பதை பார்த்தவுடன் மன்னர் கேட்க பெருமாளின் தலையில் இருந்த முடி தான் அது என்று சொல்லி விட்டார்.சந்தேகம் கொண்ட மன்னன் மறுநாள் தான் வரும் போது பெருமாளின் தலை முடியை காட்ட வேண்டும் இல்லையேல் தண்டனை கிடைக்கும் என்று மன்னர் சொல்லி சென்று விட கலங்கிய அர்ச்சகர் இறைவனிடம் தன்னை காக்குமாறு வேண்டினார்.மறு நாள் மன்னர் வரும் போது அர்ச்சகர் சுவாமி யின் தலையை மன்னருக்கு காட்ட திருமுடியுடன் காட்சி தந்த பெருமாள், சவுரிராஜ பெருமாள் என்ற பெயர் பெற்றார். இக் கோவில் குறித்து திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடியுள்ளார். இக் கோவிலில் இரவு பூஜையில் பொங்கல் படைக்கும் வழக்கம் உள்ளது.
மற்ற தலங்களில் அபய கட்சியோடு இருக்கும் பெருமாள் இத் தலத்தில் தானம் வாங்கி கொள்வது போன்ற காட்சியுடன் இருக்கிறார்.தீர்த்தம் நித்ய புஷ்கரிணி.மிக பெரிய பிரகாரத்தை சுற்றி வலம் வந்த போது அமைதியின் கை பற்றி கொண்டு செல்வது போன்றதொரு எண்ணமே  தோன்றியது எனக்கு. கோவிலுக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் சன்னதியை ஒட்டி படிக்கட்டுகளுடன் கூடிய குளத்தை பார்க்கையில் இயற்கை அழகை அள்ளி பருகியது போன்ற உணர்விலிருந்தேன்.

ஆரம்பத்தில் நான் சொன்ன விசயத்துக்கு வருவோம். ஒரு வாரமாக நான் கோவில்களை சுற்றி வருகையில் தெரிந்தவர் ஒருவர் இத் தலம் பற்றி சொல்லியிருந்தார். நானும் அதற்கென்ன போகலாம் என்று நினைத்திருந்தேன். சென்ற வாரம் நான் இந்த வழியே தான் திருப்பாம்புரம் கோவிலுக்கு சென்றிருந்தேன்.அப்போது இந்த புண்ணிய தலம் இங்கு தான் இருக்கிறது என்று நான் அறியவில்லை. இன்று காலை இந்த கோவிலுக்கு செல்ல முடிவு செய்து விசாரித்த போது தான் இது எனக்கு தெரிந்தது. 

என் டூ வீலரில் சென்று கொண்டிருக்கும் போது இந்த கோவில் இங்கு தான் இருக்குனு தெரியாமல் போயிடுச்சு பார் நமக்கு என்று நினைத்து எனக்குள்ளே சிரித்து கொண்டேன்.சவுரிராஜ பெருமாள் மற்றும் திருகண்ண புற நாயகி முன் நிற்கும் போதும் இது நினைவுக்கு வந்து விட இறைவனின் திரு முகத்தில் 
 சிறு புன்னகை இருந்ததாய் எனக்கு ஒரு மன பிரமை தோன்றியது.
அந்த புன்னகையில் இருந்த செய்தி இது தானோ.


உனக்கு (பக்தர்களுக்கு) தேவையானதை எப்போது தருவது என்பது எனக்கு தெரியும்.ஓம் நமோ நாராயணாய

அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  

ஆர்.வி.சரவணன்

FINAL TOUCH 
அன்றாட வேலை பரபரப்புகளில் இருந்து சிறிதளவேனும் விடுபட்டு ஆலயங்களை ஆர்வமுடன் சுற்றி வருகையில் ஒவ்வொரு ஆலயத்திலும் குடி கொண்டிருந்த  அமைதியும், மனதுக்குள் தோன்றிய ஒரு நிறைவும் 
அன்றாட பரபரப்பினூடே விலகாமல் என்னுடன் இருக்கிறது.