சனி, அக்டோபர் 30, 2010

உன் இதழ்களின் அசைவில் ....


உன் இதழ்களின் அசைவில் ....


அன்பே நம் முத்த பரிமாற்றங்களில்

பத்துக்கு ஒன்று

என்ற உன் கணக்கு

மிகவும்தவறானது


அன்பே தேநீரில் சர்க்கரை இல்லை என்றேன்

வாங்கி சுவைத்து பார்த்து இருக்கிறதே

என்று தந்தாய்

ஆம்

இப்போது இனிக்கிறது


நீ உதிர்க்கும் சொற்களுக்கு

மயங்காவிடினும்

உன் உதடுகளின்

அசைவிற்கு

நான் மயங்கி தான் ஆக வேண்டும்


நீ வசை பாடினாலும்

உன் இதழ்களின் அசைவில்

எனக்கு அது

நீ இசை பாடுவது

போல் தான்


கைபேசி யில் என்னோடு

நீ பேசினாலும்

வார்த்தைகளுக்கான உதட்டசைவை

இங்கிருந்தே

உணர்கிறேன்


ஆர்.வி.சரவணன்

படம் நன்றி கூகுள்

***********************************************************************

விரைவில் தீபாவளி ஸ்பெஷல்

ரொம்ப எதிர்பார்ப்பு வேண்டாம்

அதற்காக எதிர்பார்ப்பு இல்லாமலும்

இருக்க வேண்டாம்

************************************************************************

புதன், அக்டோபர் 27, 2010

பூபாளம் இசைக்கும் ....


பூபாளம் இசைக்கும் ....

மனம் கவர்ந்த பாடல்கள் 6

என் அலுவலகத்தில் எவ்வளவு வேலை குவிந்திருந்தாலும் சரி ஆரம்பத்தில் ஒரு சலிப்பை தோற்றுவித்தாலும் நான் கேட்கும் இசை களிப்பை கொடுக்க ஆரம்பித்து விடும்

செல் ஆன் செய்து பாடல்களை ஓட விட்டு நான் பாட்டுக்கு வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டிருப்பேன்அந்த வேலைகளை சிரமபடாமல் முடிப்பதற்கு உதவுவது இசை தான்

சரி விசயத்திற்கு வருவோம் பாக்யராஜ் நடித்து இயக்கிய தூறல் நின்னு போச்சு படத்தில் இடம் பெற்ற பூபாளம் இசைக்கும் என்ற பாடல் எப்போதுமே எனக்கு பிடித்த பாடல்

இந்த பாடல் ஆரம்பிக்கும் போது இளையராஜா அவர்களின் மனதை வருடும் இசையுடன் தொடங்கி தந்தனதானா என்று கோரஸ் ஒலிக்க ஜேசுதாஸ் உமாரமணன் குரல்களில் தொடரும் இசை ஜாலத்தில் பல்லவி வரும்போது மட்டும் பின்னணியில் வரும் இசை எப்போதுமே எனை ஈர்க்கும்
எனக்காக ஒருமுறை அந்த ஈர்ப்பை கேளுங்கள்

படம் தூறல் நின்னு போச்சு

நாயகன் நாயகி பாக்யராஜ் சுலக்க்ஷனா

பாடலின் வீடியோ லிங்க்
http://www.google.co.in/url?sa=t&source=web&cd=3&ved=0CB0QtwIwAg&url=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DJ8tN8HfyL0U&ei=JjXITI_yIIzQccDz6LEF&usg=AFQjCNG01l-ze2MruDEkfwD4Jg3SSPyrdA

படம் வெளியான வருடம் 1982

நன்றி கூகுள்

ஆர்.வி.சரவணன்

சனி, அக்டோபர் 23, 2010

மொய் எழுத வாங்க....


மொய் எழுத வாங்க

தலைப்பை பார்த்ததும் பாக்கெட்டை பதம் பார்த்திருமோ னு நினைக்காமே தைரியமா மேல படிக்கலாம் நீங்க

அதாவது எங்களுக்கு சொந்தகாரங்க ரொம்ப ஜாஸ்தி எங்க வீட்டிலே கல்யாணம்னு வந்தா நான் ரெண்டு விசயத்திலே எஸ்கேப் ஆகணும்னு நினைப்பேன் ஒண்ணு சமையல் ஸ்டோர் ரூம் incharge வேலை, இன்னொன்னு மொய் எழுதுவது

ஆனா பாருங்க சமையல் ஸ்டோர் ரூம் incharge வேலையிலிருந்து
நான் தப்பிச்சாலும் மொய் எழுதற விஷயத்துலே தப்பிக்க முடியாது போய் விடும்

ஏன்னா நான் அலுவலகத்தில் காசாளராக இருந்ததாலும் அவ்வபோது இருப்பதாலும் காஷ் கவுன்ட் ஆக இருக்கட்டும் கணக்கு விவரங்களை முடிப்பதாக இருக்கட்டும் விரைவாக முடித்து கொடுத்து விடுவேன் காசு விசயத்தில் நேர்மையாக நாணயமாக இருப்பேன் என்பதால் (நீயே ஒன்னை பத்தி சொல்லிக்கிரியானு கேட்காதீங்க ) என்னிடமே ஒப்படைப்பார்கள்.
அதிலே என்ன கஷ்டம்னா அங்கே இங்கே நகர முடியாது வந்திருக்கும் உறவினர்களிடம் சந்தோசமாய் பேச முடியாது குடும்பத்துடன்
அமர்ந்து சாப்பிட முடியாது மொய் கொண்டு வந்து கொடுப்பவர்களும் நான் கரெக்டா எழுதேறேனா இனிசியல் முதல் கொண்டு சரியா எழுதேறேனா என்று பார்த்து விட்டு தான் நகர்வார்கள். மணமக்கள் கூடவே நான் இருக்க வேண்டும் மாலை வரை மொய் பணத்தை என்னோடு வைத்து கொண்டே திரிய வேண்டும்.

எல்லா வேலையும் முடிந்து கணக்கு வழக்குகளை விவரமாக எழுதி கல்யாணம் நடத்துபவரிடம் கொண்டு போய் கரெக்டா இருக்கானு செக் பண்ணிக்குங்க
என்று ஒப்படைத்தால் அவர் மொய் பையை வாங்கி பீரோவில் அசால்டாக போட்டுவிட்டு அதெல்லாம் எதுக்கு நீ தானே கணக்கு எழுதியிருக்கே எல்லாம் கரெக்டா தான் இருக்கும் என்று கூலாக சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார்கள் நமக்கு அவர்கள் கணக்கு சரிபார்த்து ஓகே சொன்னால் தான் நிம்மதி யாக இருக்கும் ஆனால் நான் என்ன சொல்லியும் கேட்கவும் மாட்டார்கள்

இப்படி இதுலே இவ்வளவு கஷ்டம் இருக்கு

போன மாசம் உறவினர் வீட்டு function போயிருந்தேன் மொய் எழுத வச்சிட்டாங்க அப்ப உறவினர் வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர் என்னிடம் சொன்னார் .நீங்க தான் மொய் எழுத போறீங்கனு ஒரு மாசத்துக்கு முன்னாடியே எனக்கு தெரியும் அவர்கள் என்னிடம் சொன்னங்க அவரை தான் எழுத வைக்க போறோம் அவர் எழுதினால் கரெக்டா இருக்கும் என்று சொன்னதாகவும் சொன்னார் .

ஒரு பக்கம் என் மேல் இவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நினைத்து சந்தோசமாக இருந்தாலும் ஆகா போறபோக்கிலே மண்டபம் சமையல்காரர் புக் பண்ணும் போதே என்னையும் சேர்த்து புக் பண்ணிடுவாங்க போலிருக்கே என்று பீல் பண்ணேன்.

என் நண்பர்களிடம் இதையெல்லாம் சொல்லும் போது அவர்கள் பேசாமே இவ்விடம் மொய் நேர்மையான முறையில் எழுதி கொடுக்கப்படும்னு போர்டு வச்சிரு என்று கூலாக சொல்கிறார்கள்

என் தம்பி ,தங்கை, மச்சினி மாமா பொண்ணு, மாமா பையன் என்று சகல பேருக்கும் மொய் எழுதினது நான் தான்

இந்த இடுகை மூலமா என் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் என் உறவினர்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன்

இதிலே முக்கியமான ஒரு விஷயம் என்னன்னா என் பையன், பொண்ணுக்கு காதணி விழா நடந்துச்சு. அதுக்கு யார் மொய் எழுதினது தெரியுமா

அதுக்கும் நான் தாங்க எழுதினேன்

என்ன கொடுமை சரவணன் இது

ஆர்.வி.சரவணன்


புதன், அக்டோபர் 20, 2010

பரதம்

பரதம்
பரதம் என்பது எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று.என் மகளை பரதம் கற்று கொள்ள வைக்க வேண்டும் என்று மிகவும் விருப்பப்பட்டேன் முடியவில்லை
என் அலுவலக நண்பன் தேவராஜ் மகள் அபர்ணா மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார் .கூடவே மகாலக்ஷ்மி வித்யாலயா மயிலாப்பூரில் பரதம் பயின்று வருகிறார்.

சென்ற வாரம் நவராத்திரி விழாவுக்காக கோயிலில் தன கூட பயில்பவர்களுடன் நடனமாடினார். அதிலிருந்து சில படங்கள் மன்னிக்கவும் சில அபிநயங்கள் உங்கள் பார்வைக்கு

இந்த சிறுமியை வாழ்த்துங்கள் நண்பர்களே


குழலூதும் கிருஷ்ணனா நீநடராஜனின் நவரசங்களில் ஒன்றோ


நாகாராஜனுக்கு அழைப்போ

உலகளந்த பெருமாள் நினைவில்


நடனத்தால் மலரை மலர வைக்கும் முயற்சியோ இது


உன் சலங்கைக்கு பதில் தேவையோ
ஆர்.வி.சரவணன்

சனி, அக்டோபர் 16, 2010

மௌனமான நேரம் .............


மௌனமான நேரம் .............

மனம் கவர்ந்த பாடல்கள் 5

சலங்கை ஒலி படத்தில் வரும் மௌனமான நேரம் .............

இந்த பாடலின் காட்சியில் தன் நண்பனையும் அவன் மனைவியையும் முதலிரவு அறைக்குள் அனுப்பி விட்டு கமலும் ஜெயப்ரதாவும் தங்கள் காதலை எப்படி தங்களுக்குள் பரிமாறி கொள்வது என்ற தவிப்புடன் நடந்து வருவார்கள் ஒருவரை ஒருவர் பார்த்த படி. இளையராஜா இந்த காட்சிக்காக செய்திருக்கும் இசை யாகம் தான் இந்த பாடல் எனலாம் .

S.P.பாலசுப்ரமணியம் ,S. ஜானகி இருவரும் அந்த காதல் தவிப்பை தங்கள் வசீகர குரல்களில் (அந்த இசை யாகத்தில் ஊற்றப்படும் நெய் போல்) அப்படியே பதிவு செய்திருப்பார்கள்

எப்பொழுது கேட்டாலும் நம்மை அமைதியின் சிகரத்திற்கு அழைத்து செல்லும் இந்த ராக தேவனின் இந்த இசை வார்ப்பை நீங்களும் ஒரு முறை எனக்காக கேளுங்கள்

இந்த பாடலின் படம் சலங்கை ஒலி

நாயகன் நாயகி கமல்ஹாசன் ஜெயப்ரதா

இந்த பாடல் எழுதியது வைரமுத்து

பாடல் பாடியவர்கள் S.P.பாலசுப்ரமணியம் ,S. ஜானகி

இயக்கம் கே.விஸ்வநாத்

படம் வெளியான ஆண்டு 1983

ஆர்.வி.சரவணன்

வெள்ளி, அக்டோபர் 15, 2010

விஜயதசமி


விஜயதசமி

நம் மனமெனும் படிகளில்

தீமை எனும் தூசியை அகற்றி

நல்லன யாவற்றையும் கொலுவிருக்க

வைப்போம்


அவை

என்றும் நம்மை

வழிநடத்தட்டும்


இந்த விஜயதசமி திருநாளில் வலைபதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் கலைமகளின் அருள் பூரணமாய் கிடைக்கட்டும்

ஆர்.வி.சரவணன்


திங்கள், அக்டோபர் 11, 2010

புதிய மனிதா


புதிய மனிதா

அந்த electronics சர்வீஸ் கம்பெனியில் சர்வீஸ் மேன் ஆக வேலை செய்யும் ராஜாஎன்பவன் மேனேஜர் அழைப்பதாக தகவல் வந்தவுடன் பார்த்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு மேனேஜர் அறையில் நுழைந்தான்

அவனை பார்த்த மேனேஜர் "என்னப்பா உன்னை பற்றி கம்ப்ளைன்ட் வருது" என்றார்

ராஜா குழப்பமாய் "என்னை பற்றியா இருக்காதே சார்" என்றான்

"நேற்றைக்கு நீ டிவி சர்வீஸ் செய்ய போன இடத்திலே சர்வீஸ் பண்ணி தர மாட்டேன் னு சொல்லிட்டு வந்துட்டியாமே"

"சார் அந்த வீட்டு ஓனர் கிட்டே 1500 ரூபாய் பில் ஆகும்னு சொன்னேன் அவர் பில் போடாமே வேலையை முடிச்சு கொடு 750 ரூபாய் தரேன்னு சொன்னார் சார்
அதான் முடியாதுன்னுட்டேன்"

"நீ கம்பெனிக்கு தெரிஞ்சா என்னாகுமோன்னு பயந்துட்டு வந்துட்டேன்னு நினைக்கிறேன்"

"அந்த வீட்டு ஓனர் ஏற்கனவே இருந்த சர்வீஸ் மேன் இப்படிதான் பில் போடாமே காசு வாங்கினதா சொன்னார் சார்"

"அப்புறமென்ன செஞ்சு தர வேண்டியது தானே கம்பெனியிலே இதெல்லாம் சகஜம்"

"சார் அது கம்பெனிக்கு செய்யற துரோகம் இல்லையா ,பில் மூலமா முறைப்படி காசு வந்தா தானே சார் கம்பெனிக்கு லாபம்"

"நீ வேறே ,நம்ம கம்பெனி ஓனர் பல கோடிக்கு அதிபதி இந்தியாலே எங்கியோ மூலையிலே இருக்கார் சுகபோகமா. பதினைந்துக்கு மேல் கம்பெனி நடத்தறார் அவருக்கு கொள்ளை லாபம் தான் அதனாலே இந்த மாதிரி செய்யறதாலே கம்பெனிக்கு ஒன்னும் நஷ்டம் வந்துடாது நம்ம முதலாளிக்கும் தெரிய போறதும் இல்லை ஆகவே நீ செய்யலாம்"

என்று நீண்ட விளக்கம் கொடுத்த பார்த்த மேனேஜரை யோசனையாய் பார்த்த ராஜா
"இல்லை சார் என்னாலே முடியாது "என்றான்

"ஏன் முதலாளிக்கு தெரிஞ்சுடும்னு பயமா சர்வீஸ் பண்ணி 750 ரூபாய் வாங்கிக்க எனக்கு 250ரூபாய் கொடுத்துடு ஏற்கனவே இருந்த ஆள் இப்படி தான் எனக்கு கொடுப்பான்" என்றார்

"என்னாலே முடியாது"

"உன்கிட்டே நிறைய காசு இருக்குனு நினைக்கிறேன்"

"சம்பளம் பத்தாமே கஷ்டப்படறேன் சார்"

"அப்புறம் ஏன் தயங்கறே"

"தயங்கலே சார் உறுதியா தான் சொல்றேன்"

"நான் முதலாளிக்கு பயப்படலே என் மனசாட்சிக்கும் கடவுளுக்கும் நான் பயப்படறேன்"

"முப்பது நாள் உழைச்சு வியர்வை சிந்தி நான் கஷ்டபட்ட காசை தான் நான் சம்பளமா வாங்கறேன் அந்த சம்பளத்துக்கு நான் கொடுக்கிற மரியாதை சார் இது"

"இந்த மாதிரி வர்ற காசு சம்பளத்தை அவமானபடுத்தற மாதிரி
அந்த சம்பளத்துக்கு துரோகம் பண்ண நான் என்னிக்கும் விரும்பினதில்லை "

என்று சொல்லி விட்டு செல்லும் அவனை அதிசயமாய் பார்த்தார் அந்த மேனேஜர்

படம் நன்றி கூகுள்

ஆர்.வி.சரவணன்

ஞாயிறு, அக்டோபர் 10, 2010

திரு வெண் காடு

திரு வெண் காடு


சென்ற வாரம் மயிலாடுதுறை சென்றிருந்தோம் .அங்கிருந்து அரை மணி நேர பயணத்தில் சீர்காழி க்கு அருகே திரு வெண் காடு என்ற ஊர் உள்ளது அங்கே அருள் மிகு சுவேதாரண்ய சுவாமி திருகோயில் உள்ளது அங்கு குடும்பத்துடன் சென்றிருந்தோம்

ஆயிரம் வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்த ஆலயம் நவகிரகங்களில் புதனுக்குரிய ஸ்தலமாகும் இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக சுவேதாரண்ய சுவாமி என்ற பெயருடனும் அம்பாள் பிரம வித்யா நாயகி என்ற பெயருடனும் அருள் பாலிக்கிறார்கள் அகோர முர்த்தி சன்னதி இங்கு தனி சிறப்பு
புதனுக்கு தனி சன்னதி உள்ளது

கல்வி தொழிலுக்கு அதிபதியான புதன் சன்னதியில் பதினேழு தீபமேற்றி பதினேழு முறை வலம் வந்து வழி பட வேண்டும் நரம்பு சம்பந்தமான நோய்கள் குணமாகும் கல்வியில் மேன்மை , நா வன்மை கிடைக்கும்

இதோ நான் எடுத்த சில படங்கள்


கோயில் நுழைவாயில்

நந்தி

புதன் சன்னதி
மூன்று தீர்த்தங்களில் ஒன்று

நடராஜர் சன்னதி
உள் பிரகாரம்
வெளி பிரகாரம்
புதன் சிவ பெருமானை வழிபட்ட தலம் இது

ஆலயத்தில் நாங்கள் இருந்த இரண்டு மணி நேரம் எங்களுக்கு நல்ல மன நிறைவு கிடைத்தது

ஆர்.வி.சரவணன்

வெள்ளி, அக்டோபர் 08, 2010

ஒரு காதல் என்பது ....


ஒரு காதல் என்பது ....

மனம் கவர்ந்த பாடல்கள் 4

நான் அவ்வபோது என் சொந்த ஊர் செல்வேன் இரவில் பேருந்தில் தான் செல்வேன் அப்படி செல்லும் போது ஜன்னலோரம் சீட் கிடைத்தால் ரொம்ப சந்தோசமாக இருக்கும் கொஞ்ச நேரம் தான் தூங்குவேன்.

பேருந்து செல்லும் வேகத்தில் மரங்கள் வயல்வெளி வழியில் வரும் ஊர்கள் அனைத்தையும் வேடிக்கை பார்த்த படி செல்வேன் . அப்படி செல்லும் போது கூடவே பாடல்கள் கேட்டு கொண்டு செல்வேன் எனது செல் போனில் பாடல்கள் சேமிப்பில் பெரும் பங்கு இளையராஜா மெலோடீஸ் தான் இருக்கும்.

அப்படி ஒரு முறை செல்லும் போது இந்த பாடலை கேட்டேன் பாலசுப்ரமணியம் ஜானகி அவர்களின் வசீகர குரல்களில் டிரம்ஸ் ஒலி எழுப்பும் இன்ப அதிர்வுகள் ,பாடல் முழுவதும் வரும் படி இளையராஜா அவர்கள் செய்திருக்கும் இசை இனிமை அருமையாக இருந்தது

இந்த பாடல் எத்தனையோ முறை கேட்டிருந்தாலும் அந்த இரவில்
அந்த பாடல் என்னை வெகுவாய் கவர்ந்தது

நீங்கள் கேட்டிருப்பீர்கள் இருந்தாலும் எனக்காக ஒரு முறை
இளையராஜா தந்திருக்கும் இந்த இனிமையை கேளுங்கள்

படம் சின்ன தம்பி பெரிய தம்பி

நடிகர் நடிகை சத்யராஜ், பிரபு ,நதியா

இயக்கம் மணிவண்ணன்

பாடல் வாலி

படம் வெளி வந்த ஆண்டு 1987

பாடலின் வீடியோ லிங்க் முகவரி

http://www.youtube.com/watch?v=NRCCjGLyD4o&feature=related

படம் நன்றி கூகுள்

ஆர்.வி.சரவணன்

செவ்வாய், அக்டோபர் 05, 2010

கற்கை நன்றே கற்கை நன்றே


கற்கை நன்றே கற்கை நன்றே

என் கல்லூரி தோழி ஒருவர் வெளியூரில் இருக்கிறார் அவர் ஒரு நாள் காலை எனக்கு போன் செய்து என் பையனுக்கு பள்ளியில் கல்வி பற்றி கவிதை கேட்டுள்ளார்கள் இன்னைக்கே வேண்டும் நீ எழுதி கொடு என்றார். கவிதை எழுதுவதில் நான் பெரிய ஆள் இல்லை உடனே எப்படிப்பா என்றேன் . என் பையன் கிட்டே நீ நல்லா கவிதை எழுதுவேன்னு சொல்லிட்டேன் எனக்கு எழுதி கொடு என்றார்.சரி என்று சொல்லிவிட்டு இரவு வீடு வந்தவுடன் அமர்ந்து எழுதி அவரிடம் நான் போனிலேயே சொல்ல சொல்ல அவர் எழுதி கொண்டார். அவரும் அவர் பையனும் நல்லாருக்கு என்று சொன்னார்கள்
இந்த கவிதை எப்படியிருக்கு என்று நீங்கள் சொல்லுங்களேன்


கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

இது சான்றோர் மொழி


கற்கை நன்றே கற்கை நன்றே


மரிக்கும் தருவாயினும் கற்கை நன்றே


இது எம் மொழி

கல்வியை ஐந்திலும் படிக்கலாம்


ஐம்பதிலும் படிக்கலாம்


வாழ்க்கையில் உயர


இதுவே படிக்கற்கலாம்


மனிதா நீ சேர்த்த செல்வத்தை செலவிடு


கற்ற கல்வியை அனைவர்க்கும் சொல்லி கொடு


இப்போது அளவிடு


செல்வம் காணாது போயிருக்கும்


கல்வியறிவோ குறையாது நிறைந்திருக்கும்


கல்லாதவன் கண்ணிருந்தும் குருடனாகிறான்


கற்றவன் குருடனாயினும் ஆயிரம் கண்ணுடையவனாகிறான்


கல்லாத செல்வந்தனுக்கும் தேவை ஒரு கற்றவன்


கற்ற ஏழைக்கு தேவையில்லை மற்றவன்


கற்றது கையளவு


கல்லாதது உலகளவு


ஆம்


கற்றோம்


கற்போம்


கற்பிப்போம்


இதையே நம் வேத வாக்காய் ஏற்போம்


இன்று ராமலிங்க அடிகள் வள்ளலார் அவர்கள் பிறந்த நாள் நான் நான்காம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை நான்கு வருடங்கள் கும்பகோணம் வள்ளலார் மேனிலை பள்ளியில் படித்தேன்.

இன்று அவரது இந்த பிறந்த நாளில் கல்வி பற்றிய இடுகை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்


ஆர்.வி.சரவணன்

சனி, அக்டோபர் 02, 2010

எந்திர ஜாலம்எந்திர ஜாலம்

எல்லோரும் எழுதியாச்சு நீ என்னத்தை எழுதிட போறேன்னு தானே கேட்கறீங்க
இல்லை சொல்ல வந்ததை சொல்லலேன்னா தலை வெடிச்சுடும் எனக்கு

எந்திரன் படத்தை இன்று காலை என் நண்பர்களுடன் 8 மணி ஷோ பார்த்தேன் சத்யம் எஸ்கேப் தியேட்டரில்

வைரமுத்து புதிய மனிதா பாடலில் எழுதியுள்ளது போல்
கருவில் பிறந்தால் மரிக்கும் அறிவில் பிறந்தால் மரிப்பதே இல்லை
என்பது போல் இயக்குனர் சங்கரின் இந்த படைப்புக்கு அழிவில்லை எனலாம்
சங்கரின் இந்த கனவு உழைப்பு படம் முழுக்க விரவியிருக்கிறது
ஷங்கரின் கனவு வெற்றி கண்டிருக்கிறது ரஜினி யின் துணையோடு

அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த வயதிலும் இப்படி யா என்று கை தட்ட வைக்கிறார் scientist ரஜினி அமைதியின் வடிவம் என்றால் சிட்டி ரஜினி தென்றலாய் மனதில் நுழைகிறார் எங்கும் நிறைகிறார். வில்லன் ரஜினி புயல் இல்லை இல்லை சுனாமி யாய் சுழன்றடிக்கிறார்

அதே அரிமா பாடலில் வரும் வரிகள் ரஜினிக்கு பொருத்தம் என்றால் அது மிகையில்லை
இவன் பேர் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கை தட்டும்
இவன் உலகம் தாண்டிய உயரம்தனை நிலவும் நிலவும் தலை முட்டும்

அடுத்து ஐஸ்வர்யா ராய்
இப்பவும் இன்னிக்கு பூத்த ரோஜா போல இருக்கிற இவங்களை பத்தி எழுதறது ஐஸுக்கு ஐஸை வைத்த கதையாகி விடும் இந்த படத்துக்கு அந்த கேரக்டர்க்கு அவங்க தான் பொருத்தம்

இசை ரகுமான் பாடல்களில் பின்னியிருந்தார் என்றால் பின்னணி இசையில் பட்டையை கிளப்பியிருக்கார் அவருக்கு என் சார்பாக ஒரு ஸ்பெஷல் பொக்கே

ஒளிப்பதிவாளர் ரத்னவேலு பெயருக்கேற்றார் போல் ஒவ்வொரு ஷாட் டையும் ரத்னமாய் ஜொலிக்க வைத்திருக்கார்

அதே போல் வசனங்கள் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது சுஜாதா சுஜாதா தான்

காதல் அணுக்கள் கிளிமஞ்சாரோ அரிமா பாடல்கள் அசத்தலா இருக்கு


என்னடா இவன் நிறையை பத்தி மட்டும் சொல்றான் குறை பத்தி ஒன்னும் சொல்லமாட்டேன்குறான் அப்படின்னு தானே நினைகிறீங்க
சின்ன சின்ன குறைகளே தெரியாத அளவுக்கு

கிளைமாக்ஸ் மிரட்டல் விட்டிருக்கு

பிரமிப்பின் உச்சம் அது

படம் பார்க்கிறப்ப அதை உணர்வீங்க


குடும்பத்தோடு போய் பார்க்கமே விட்டுட்டோம்னு ரொம்ப பீல் பண்ணேன்
(அடுத்த வாரம் போறோம்லே )
நீங்களும் போய் பார்த்துட்டு வாங்க குடும்பத்தோடு

முடிவா சொல்லனும்னா ஏற்கனவே நான் எந்திரன் பற்றிய இடுகையில் குறிப்பிட்டிருந்தது போல் ஒவ்வொரு துறையிலும் உச்சம் தொட்ட சாதனையாளர்கள் இனைந்து உருவாகும் எந்திரன் இந்திய திரையுலகின் உச்சம் தொட வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தேன்

உச்சம் தொட்டிருக்கிறது

எந்திரன் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்

ஆர்.வி .சரவணன்

அவசரமா எழுதியிருக்கேன் முதல் முறையா விமர்சனம் (சரி அனுபவம் )எழுதியிருக்கேன் ஏதேனும் குறையிருந்தால் பொறுத்துக்குங்கோ