கல்லுரி காலங்களில்
எனது கல்லூரி காலங்களில் கதை கவிதைகள் நான் நிறைய எழுதுவேன் படிப்பை விட சினிமா கதை புத்தகங்கள் தான் வெகு இஷ்டம். படிப்பில் கவனம் வெகு குறைவு ஏனெனில் நாம தான் சினிமாவில் சேர்ந்து டைரக்டர் ஆகபோறோமே அப்புறம் எதுக்கு படிப்புன்னு தான். அந்த அளவுக்கு ஓவர் கான்பிடன்ஸ் (இப்ப நினைச்சா ஆச்சரியமா இருக்கு )
அந்த காலகட்டத்தில் எனது நண்பர்கள் அவர்கள் தெருவில் வருடா வருடம் நாடகம் போடுவார்கள் அந்த வருடம் என்னிடம் வந்து "நீ நாடகத்தை திருத்தி எழுதி தா" என்று சொல்லி ஒரு ஸ்க்ரிப்டை என்னிடம் கொடுத்தார்கள் நானும் உற்சாகமாய் வாங்கி படித்தேன் 13 காட்சிகளில் நாடகம் சாதரணமாக இருந்தது . நான் "என்னப்பா இப்படி எழுதியிருக்கீங்க" என்றேன் அவர்கள் "அதுக்கு தான் உன்கிட்டே கொடுத்திருக்கோம்" என்றனர். நான் சரி வேறு ஒரு கதை எழுதி தருகிறேன் என்றேன் "போஸ்டர் ஒட்டியாச்சு மாற்ற முடியாது "என்றனர்.
சரி என்று அவர்கள் விளம்பரம் செய்த பெரிய வீடு என்ற தலைப்பிலேயே நாடகத்தை உருவாக்கினேன் எப்ப தெரியுமா. விடிகாலை நான்கு மணிக்கு படிக்கிறேன் என்று சொல்லி விட்டு 40 காட்சிகளில் நாடகத்தை எழுதி கொடுத்தேன். ஏற்கெனவே போஸ்டரில் கதை வசனம் என்று வேறு ஒருவனின் பெயர் போட்டாயிற்று எனவே இயக்கம் என்று உன் பெயரை போடுகிறோம் என்றனர் சரி என்றேன் போஸ்டர்களில் என் பெயர் பார்த்து எனக்கு தலை கால் புரியவில்லை ஒத்திகை ஆரம்பமானது. கதைப்படி கிராமம் தான் கதை நிகழுமிடம் ஹீரோ வேட்டி சட்டையில் தான் வர வேண்டும் என்றேன் ஹீரோ முடியாது பேன்ட் போட்டு கொண்டு தான் வருவேன் என்று ஒரே அடம் பிடித்தான். சரி என்று விட்டு விட்டேன்
ஒரு வழியாக நாடகம் அரங்கேறியது. கதாநாயகி , அவரது தோழி யாக நண்பர்களே பெண் வேடமிட்டு நடித்தனர். நானும் ஒரு காட்சியில் கதாநாயகியை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையாக வந்தேன் (ஆசை யாரை விட்டுச்சு ) மேலே உள்ள படம் தான் நான் வரும் காட்சி ஏகப்பட்ட கை தட்டல் கிடைத்தது (எனக்கல்ல நாடகத்திற்கு) ஒரு ஜனரஞ்சகமான நாடகம் இதற்கே இவ்வளவு கை தட்டலா எனும் போது எனக்கு மிகுந்த உற்சாகம் .
நாடகம் முடிவில் எல்லோருக்கும் விழா குழுவினர் நன்றி சொன்னார்கள் என் பெயரை சொல்லவில்லை "சாரி லிஸ்டில் இல்லாததால் சொல்ல மறந்துட்டோம்" என்றார்கள். நான் "அதனாலென்ன பரவாயில்லை "என்றேன் (வேற வழி ) மேடையை விட்டு இறங்கும் போது அந்த நாடகத்திற்கு இசையமைத்த இசை அமைப்பாளர் எனை பார்த்து "சாதாரணமாக ஒரு நாடகம் 20 25 காட்சி அமைப்புகளோடு தான் பொதுவாக நடக்கும். ஆனால் நீங்கள் புது ஆள் 40 காட்சிகளில் கதையை சீன் பை சீன் ஆக சுவாரசியம் குறையாமல் எழுதியுள்ளீர்கள் நாடகம் நல்லாருக்கு உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது " என்றார். கேட்கவா வேண்டும் நான் வானத்தில் பறந்தேன் அதே சந்தோசத்தோடு வீடு வந்தேன்.
வீட்டில் ஏக ரகளை படிப்பை விட்டுட்டு எப்படி நாடகம் போடலாம் என்று சண்டையிட்டார்கள். நான் எதிர்த்து பேச போக , வீட்டை விட்டு வெளியில் போ நீ உருப்படாமல் தான் போக போறே என்று சொல்லி விட மனசு ரொம்பவே கஷ்டமாகி போனது.
வீட்டில் நான் கண்டிப்பாக சினிமா டிராமா என்று அலைந்து உருப்படாமல் தான் போக போறேன் என்று தீர்மானமே போட்டு விட்டதால் நான் அந்த பாதையிலிருந்து விலகி அவர்கள் ஆசைப்பட்டது போல் வேலையில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி வந்திருக்கிறேன் .என் குடும்பத்திற்கு இப்பொழுது சந்தோஷம்.
ஆனால் எனக்கு, எனது திறமைகளை கண்டு வெளிஉலகம் பாராட்டி உற்சாகபடுத்தியது போல் வீட்டில் யாரும் என்னை ஊக்கப்படுத்தவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு இன்று வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது
(அப்பாடா திரையுலகமும் ரசிகர்களும் என் கிட்டேருந்து தப்பிச்சிட்டாங்க )
ஆர்.வி.சரவணன்