புதன், செப்டம்பர் 21, 2011

என் கேள்விக்கு எனது பதில்


என் கேள்விக்கு எனது பதில்


அப்ப பதிவையும் நீயே படிச்சிக்க அப்படின்னு நீங்க சொல்லாம, படிச்சிட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க.



கேள்வி : இவ்வுலகில் விலை மதிப்பில்லாதது எது ?

பதில் : கண்டிப்பாக மனித உயிர் தாங்க ஏன்னா ஒரு மனிதன் உயிர் போய்விட்டால் அதற்கு பின் அவரை நாம் எங்குமே எப்போதுமே பார்க்க முடியாது ஆகவே ஒவ்வொரு மனிதனின் உயிரும் விலை மதிப்பில்லாதது

கூடங்குளம் அணு மின் நிலையம், மனித உயிர்களுக்கு பாதிப்பு என்று நெல்லை மாவட்டம் இடிந்த கரையில் உள்ள மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அணு உலை என்பது மனித உயிருக்கு உலையாகி விட கூடாது. மக்களின் உயிருக்கும் உணர்வுக்கும் மதிப்பளித்து மத்திய அரசு அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்
இந்த அறப்போராட்டம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்

------

கேள்வி : ஒரு பெண் உங்களை பார்த்து நீங்கள் அழகாக இருக்கீறீர்கள் என்று சொன்னால் உங்கள் ரியாக்சன் என்னவாக இருக்கும் ?

பதில் : உங்க கண் பார்வையில் ஏதோ கோளாறு இருக்கு எனவே டாக்டரை பார்க்க சொல்லி சிபாரிசு செய்வேன் ஹா....ஹா....

------

கேள்வி: எங்கள் பகுதியில் உள்ளவர் இப்போது என்னை பார்க்கும் போதெல்லாம் வணக்கம் வைக்கிறார் ஏன் என்று புரியவில்லையே ?

பதில் : தேர்தல் வருகிறதே அதனால் கூட இருக்கலாம்

------

கேள்வி : ஒரு பத்திரிகையின் சந்தாவை அதிகரிக்க என்ன ஐடியா பண்ணலாம் ?

பதில் : அதுக்கு என் கிட்டே ஐடியா இல்லே ஆனா சந்தா பற்றி சுஜாதா அவர்கள், கணையாழி ஏப்ரல் 1975 இதழில் கணையாழியின் கடைசி பக்கங்கள் பகுதியில் எழுதியிருந்த ஒரு சுவையான நிகழ்ச்சி ஒன்றை இங்கே தருகிறேன்

அமெரிக்காவில் ஒரு சிறிய பத்திரிகை ஆசிரியர் ஒரு வாசகரிடம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார் .நீர் சந்தா கொடும். ஒரு வருஷம் படித்து பாரும் .பத்திரிகை நன்றாக இல்லை என்றால் வந்து சொல்லும். உடனே உன் பணம் வாபஸ் என்றார். ஒப்புக்கொண்டு சந்தா செலுத்திய வாசகர், ஒரு வருஷம் இதழ்களை படித்து விட்டு ஆசிரியரிடம் வந்து படித்து பார்த்தேன் நன்றாக இல்லை என்றார் . ஆசிரியர் ஒப்பந்தப்படி பர்சிலிருந்து பணம் எடுக்கும் போது, வாசகர் எனக்கு பணமாக வேண்டாம். அதற்கு பதில் இன்னொரு வருஷம்
எனக்கு பத்திரிகை அனுப்பி விடுங்கள் என்றாராம் .


கேள்வி பதில்கள் தொடரும் .... (உங்கள் விருப்பத்தை பொறுத்து)


படம் நன்றி என்வழி


ஆர்.வி.சரவணன்

புதன், செப்டம்பர் 14, 2011

தல WIN மங்காத்தா ஒரு பகிர்வு



தல WIN மங்காத்தா ஒரு பகிர்வு


இந்த படத்தை நான் எனது ஊரான கும்பகோணத்தில் பார்த்தேன் ஆனால் பாருங்க ,நான் செல்லும் போது படம் ஆரம்பித்து கொஞ்சம் நேரமாகி விட்டது ஆகவே என்னால் படத்தில் சரியாக ஒன்ற முடியவில்லை எனவே மீண்டும் சென்னை வந்தவுடன் சென்று பார்த்தேன். படத்துக்கு நான் லேட்டா போனது போல் , படத்தை பற்றிய பகிர்வும் சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு


அஜித் நடிப்பு இந்த படத்தில் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது (ஏற்கனவே அவரது படங்களில் ஆசை, அமர்க்களம், வாலி,காதல் கோட்டை, எனக்கு பிடித்த படங்கள் அதற்காக மற்ற படங்கள் பிடிக்காது என்று அர்த்தமல்ல கதையும் அவரது கேரக்டரும் இந்த படங்களில் அவர் மேல் ஒரு ஈர்ப்பை கொடுக்கும் வண்ணம் இருக்கும் )



அஜித் முழுக்க முழுக்க இதில் வில்லனாகவே நடித்திருக்கிறார் நான் எப்படியும் கடைசியில் அவர் நல்லவனாகி விடுவதாக கதை முடியும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நடப்பதே வேறு.



மணி....மணி.... என்று சொல்வது

ஆக்சன் கிங் என்று உச்சரிப்பது

அர்ஜுன் மனைவியை தன் பிடிக்குள் வைத்துகொண்டு அர்ஜுனிடம் பேரம் பேசுவது,

பணம் காணவில்லை என்றவுடன் கோபத்தில் தன் கன்னத்தில் தானே அறைந்து கொள்வது

அலட்டி கொள்ளாமலே சண்டை செய்வது

பிரேம்ஜி யை கொல்லுவது பற்றி அவர் தின்க் பண்ணும் போது இவன் இப்படி சொல்ல மாட்டானே என்று யோசிப்பது,

துப்பாக்கி முனையில் த்ரிஷா அப்பாவை casual ஆக அழைத்து வருவது என்று

இப்படி படம் முழுக்க அஜித் அமர்க்களம் செய்திருக்கிறார்



த்ரிஷா அப்பாவை காரிலிருந்து கீழே தள்ளி விட்டு அதை பற்றி ஒன்றும் அலட்டி கொள்ளாமல் செல்வதை அஜித்தின் வில்லன் நடிப்புக்கு ஒரு உதாரணமாக சொல்லலாம்




வெங்கட்பிரபு படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார் அதே போல் அனைத்து கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்தும், எடுத்து சென்றிருக்கிறார்.அஜித்தின் வசனம், நடை, உடை, பாவனை என்று அனைத்திலும் அக்கறை கொண்டு அவரது கேரக்டரை வடிவமைத்திருக்கிறார். இருந்தும் அஜித் ஏன் இந்த சாதாரண கூட்டணியோடு பணம் கொள்ளை அடிக்க முடிவு செய்கிறார் என்பதற்கு சரியான விளக்கமில்லை


த்ரிஷா கேரக்டர் கொஞ்சம் தான் என்றாலும் அஜித்தின் சுயரூபம் தெரிந்து திகைக்கும் போது அந்த கேரக்டர் மேல் ஒரு பரிதாபம் தோன்றுகிறது


அந்த நால்வர் கூட்டணி யில் வைபவ் ஓகே


பாடல்கள் சூப்பர் ஹிட் என்றாலும் பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா முன்னணி வகிக்கிறார்


ஐம்பதை வெற்றியுடன் தொட்டதற்கு வாழ்த்துக்கள் அஜித் சார்

ஆர்.வி.சரவணன்

செவ்வாய், செப்டம்பர் 13, 2011

நிலவு ஒரு அட்சய பாத்திரம்




நிலவு ஒரு அட்சய பாத்திரம்


அம்மாவாசையன்று வாராது வெண்ணிலவு
அதனாலென்ன இதோ உலா வருகிறது என் நிலவு



அன்பே உனை பார்த்து கண் சிமிட்ட காத்திருக்கிறோம்
நிலவின் துணையுடன் விண்மீன்களும் நானும்



என்னவள் வீட்டின் ஜன்னலில் நுழையும் நிலவே
என் காத்திருப்பை சொல்வாயா
எனக்காக தூது செல்வாயா


அமைதியான இரவில் அன்பாய் உரையாடும் நம்மை
நிலவு மேக திரையில் ஒளிந்து ஒளிந்து பார்க்கிறதோ



நிலவுக்கு தேய்பிறை வளர்பிறை இருந்தாலும் அன்பே
நம் காதலுக்கு வளர்பிறை மட்டும் இருக்கட்டும்


நிலவு நமக்கொரு அட்சய பாத்திரம்
அன்பே நித்தம் எனக்கது கவிதை தரும்



ஆர்.வி.சரவணன்


இந்த கவிதையும் தளம் ஆரம்பித்த புதிதில் நான் வெளியிட்டது தான்

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

மருமகளான மாமியார்




மருமகளான மாமியார்


"வாம்மா இப்ப தான் உனக்கு பொழுது விடிஞ்சுதா"

குளித்து முடித்து பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு காபி போட்டு எடுத்து கொண்டு தன் மாமியாரின் அறைக்குள் நுழைந்த உமாவை தான் இவ்வாறு வரவேற்றது மாமியாரின் குரல்

இதை கேட்டு திடுக்கிட்ட உமா கடிகாரத்தை பார்த்தாள். ஆறு மணி

"சீக்கிரமே தானே அத்தை காபி போட்டு எடுத்துட்டு வரேன்"

என்று பதில் சொன்னவளை முறைத்து கொண்டே மாமியார்

"பதிலுக்கு பதில் பேசாதே "என்றார்

இதற்கு பதில் ஒன்றும் சொல்லாமல்

உமா காபி யை கட்டிலுக்கு அருகே இருந்த ஸ்டூலில் பணிவுடன் வைத்தாள்

"என் கண்ணாடியை எடு " என்ற அடுத்த அதட்டலுக்கு செவி சாய்த்தவள் உடனே கொண்டு வந்து நீட்டினாள்.

பாத்ரூமிலிருந்து வெளி வந்த மாமனார் " குட் மார்னிங் மா "என்றவர்

அவள் கொடுத்த காபி யை வாங்கி பருகி கொண்டே

"உன் புருஷன் எழுந்துட்டானா "என்று கேட்டார்

"இல்லை மாமா நைட் லேட்டா தான் வந்தார் தூங்கிட்டிருக்கார்"

"வளவளனு என்ன பேச்சு டிபனுக்கு ரெடி பண்ணிட்டியா" இது மாமியாரின் அடுத்த ஏவுகணை

"இதோ ஆரம்பிக்க போறேன் அத்தை"

"இனிமே தான் செய்யனுமா நானெல்லாம் அந்த காலத்திலே எள்ளுன்னா எண்ணையா நிப்பேன் என் மாமியார் கேட்கிறதுக்கு முன்னாடியே எல்லாம் ரெடியாகி டேபிள் லே இருக்கும் இந்த காலத்து பொண்ணுங்களும் தான் இருக்கே ஹூம்" என்றவள்

"என்னை பார்த்துட்டே நின்னா வேலை ஆகிடுமா" என்று சொன்னவுடன் அறையை விட்டு அகன்றாள் உமா கடுப்புடன்


மாமனார் தன் மனைவியிடம் "ஏன் அந்த பெண்ணை போட்டு இப்படி படுத்தறே" என்றார்

"நீங்க சும்மாருங்க மருமகளுக்கு என்ன சப்போர்ட் வேண்டி கிடக்கு" என்று அதட்டினாள்

"இது சப்போர்ட் இல்லே இன்னும் வீட்டிலே யாருமே எழுந்திருக்கலே ஆறு மணிக்கே டிபன் ரெடி பண்ணி யார் சாப்பிட போறா சொல்லு அதட்டனும்னு
நினைச்சுகிட்டு நீயா எதுனா பேசாதே"

"உங்களுக்கு ஒண்ணும் தெரியாது அப்படி பேசி தான் மருமகளை அப்பப்ப அதட்டி வைக்கணும் இல்லாட்டி அவங்க கிட்டே நாம தான் கை கட்டி நிக்க வேண்டியிருக்கும்"

அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பேரன் விக்னேஷ், " பாட்டி உங்களை பாட்டிம்மா கூப்பிடறாங்க" என்று சொல்லியவாறு அவரது கையை பிடித்து இழுத்தான்

இதை கேட்டவுடன் "வேற வேலை இல்லே" என்று சலிப்புடன் சொல்லி கொண்டே உடனே வேகமாய் எழுந்து தனது தாயாரின் அறை நோக்கி செல்லும் தனது மனைவியின் அவசரத்தை பார்த்து மெல்ல சிரித்து கொண்டார் மாமனார்

தனது வயதான மாமியாரின் அறைக்குள் சென்றவர் காதில் விழுந்தன அந்த வார்த்தைகள்

"நான் கூப்பிடலேன்னா ஒழியட்டும்னு விட்டுடுவா போலிருக்கு என் மருமகள் ஏதோ சொத்து என் கிட்டே இருக்கிறதினாலே என் பொழப்பு இங்கே ஓடுது" என்று கோபமாய் சொல்லி கொண்டிருந்த தன் மாமியாரின் அருகில் சென்று

"என்ன அத்தை என்ன வேண்டும் "என்று பணிவுடன் கேட்டார்

நிமிர்ந்து பார்த்த அந்த வயதான மாமியார் கேட்டார்

"வாம்மா இப்ப தான் உனக்கு பொழுது விடிஞ்சுதா"

ஆர்.வி.சரவணன்