திங்கள், அக்டோபர் 27, 2014

சில நொடி சிநேகம் - குறும்படம் வெளியீடு
சில நொடி சிநேகம் - குறும்படம் வெளியீடு 


எனது எழுத்து இயக்கத்தில் உருவான ஜனனி ஆர்ட்ஸ் சின் சில நொடி சிநேகம் குறும்படம் நேற்று மதுரையில் நடைபெற்ற 3 வது வலைபதிவர் சந்திப்பில் வெளியிடப்பட்டது. திரு. கோபால் அவர்கள் (துளசிதளம்) வெளியிட திரு.பாலகணேஷ் அவர்கள் பெற்று கொண்டார். குறும்படம் உடனே அரங்கில் 
திரையிடப்பட்டது. உடனே இணையத்திலும் வெளியிடப்பட்டது. 
எழுத்தாளர் திரு.இந்திரா சௌந்தரராஜன், திரு.கோபால், திரு பாலகணேஷ்,
தமிழ்வாசி பிரகாஷ்,சீனா அய்யா மதுரை சரவணன்,கோவிந்தராஜ் ,மற்றும் திரு.கனகராஜ் அவர்கள் 
மேடையில் நான் பேசிய போது 

படத்தில் நடித்திருப்பவர்கள் 

திரு.துளசிதரன்
திரு.அரசன்
திரு.கோவை ஆவி
&
S.பிரபாகரன் 
K.குணசேகரன் 
MASTERS 
S.P.வாசன் 
E.குமரகுரு 
K.K.S.ராஜா 

ஒளிப்பதிவு

ஜோன்ஸ்,கார்த்திக்

எடிட்டிங்

ஜோன்ஸ்

டப்பிங் சவுண்ட் மிக்சிங் 

சாமுவேல் 
V.STUDIO TECH 

DIRECTOR'S CREW

துளசிதரன் 
அரசன் 
கோவை ஆவி 

உதவி இயக்கம் 

திருமதி.கீதா ரங்கன் 

குறும்பட நேரம் 

7 நிமிடம் 6 வினாடிகள் 

தயாரிப்பு

R.V.அரவிந்த்
திருமதி .ராஜி கனகராஜ்
S.A.ஹர்ஷவர்தன்

எழுத்து- இயக்கம்

குடந்தை ஆர்.வி.சரவணன்
நாயகர்கள் 


ரத்னவேல் அய்யா அவர்களுடன் அரசனும் நானும் 

இதற்கு உறுதுணையாய் இருந்த என் குடும்பத்தினருக்கும், குறும்படத்தில் பங்கெடுத்து சிறப்பித்த நண்பர்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றி குறும்படம் லிங்க்

https://www.youtube.com/watch?v=i7uhw4-qgZ8&feature=youtu.be

FINAL TOUCH 

திரைப்பட நுணுக்கங்களை கற்று கொள்ளும் எனது முயற்சியில் உருவான 
முதல் குறும்படம் இது. உங்கள் அனைவரின் ஆதரவுடன்  எனது  கற்று கொள்ளும் முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கும்.

ஆர்.வி.சரவணன் 

வியாழன், அக்டோபர் 23, 2014

திருமண ஒத்திகைதிருமண ஒத்திகை

ஒத்திகை-1 திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகிறது           
வரதட்சணை மட்டும் மனிதர்களால் அச்சடிக்கபடுகிறது                                          
விநாயகர் கோவிலின் மணி எனக்கு அலாரம் அடிப்பது போல். ஆனால் இன்று அம்மாவின் சீக்கிரம் எழுந்திரிடா...... என்ற குரல் தான் அலாரமாய் இரைந்தது. நான் இருளை ஒளி விலக்குவது போல் போர்வையை விலக்கி எழுந்தேன். கண்களில் இருந்த எரிச்சல் நீ ஒரு மணிக்கு தான்டா வந்து படுத்தே என்பதை ஞாபக படுத்தியது. மணி பார்த்தேன்  ஏழு.  
ஓவியம் நன்றி ஷ்யாம் 

ஆர்.வி.சரவணன் 


திங்கள், அக்டோபர் 20, 2014

மூன்றாம் ஆண்டு தமிழ் வலைபதிவர் திருவிழா 2014
மூன்றாம் ஆண்டு  தமிழ் வலைபதிவர் திருவிழா 2014

நதிகள் பலவும் ஒன்றிணைந்து கடலொன்று உதயமாகிறது என்று வலைபதிவர் சந்திப்பை பற்றி முன்பு சொல்லியிருந்தேன். 
 இதோ அந்த கடல் இந்த வருடம் மதுரையில். இரண்டு வருடங்களாக சென்னையில் நடைபெற்ற வலைபதிவர் சந்திப்பு திருவிழா  இவ் வருடம்  மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரையில்  நடைபெறுகிறது.

 தென் தமிழ் மாவட்டங்களில் எனக்கு பிடித்த   ஊர்களில் மதுரையும் ஒன்று. மதுரையில் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இதை நான் சொல்லவில்லை. மதுரை மீனாட்சியம்மன் கோவில் அழகர் மலை பழமுதிர்சோலை திருபரங்குன்றம்,  மாரியம்மன் கோவில் தெப்பக்குளம்
 என்று பிரசித்தி பெற்ற கோவில்கள் ஒரு புறம், வருடா வருடம் வைகையில் அழகர்  இறங்கும் அழகும், அதை தொடர்ந்து அவர் வரும் திருவீதி உலா 
என்று நான் ரசிக்க தூங்கா நகரமான மதுரையில் ஏராளம் உண்டு.  இப்படி எனக்கு பிடித்தமான  மதுரையில் பதிவர் திருவிழா நடைபெறுகிறது எனும் போது மகிழ்ச்சி தானே 

பதிவர் திருவிழா சில்வர் ஜூப்ளி

பதிவர் திருவிழா 2013 - ஒரு பார்வை

சென்ற இரண்டு வருடங்களின் பதிவர் சந்திப்பை பற்றிய என் அனுபவ பதிவுகளை இன்று படித்த போது,  வீட்டில் நடைபெறும் விழாவுக்கு வரும் உறவினர்களை சந்திக்கும் குதூகலத்திற்கு நிகரானது தான் இந்த விழா 
என்றே தோன்றுகிறது.

மூன்றாவது வலைபதிவர் சந்திப்பை பற்றி பார்ப்போம் 

 மதுரை வலைபதிவர் சந்திப்பில் தங்கள் வருகையை பதிவு செய்ய


 நன்கொடை அளிக்க

விழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள்  மற்றும் விழா நிர்வாக குழு பற்றிய விபரங்கள் 
விழாவின் நிகழ்ச்சி நிரல்  


இப் பதிவர் திருவிழாவின் ஏற்பாடுகளை முன்னின்று நடத்தி வரும் 
திரு .சீனா ஐயா , திரு ரமணி, திரு .தமிழ்வாசி பிரகாஷ், திரு திண்டுக்கல் தனபாலன் மற்றும் அனைத்து  நண்பர்களுக்கும் எனது நன்றியும் வாழ்த்தும்

தொழில்நுட்ப பதிவர்களுக்கு பாராட்டு, பதிவர்கள் சுய அறிமுகம், சிறப்பு விருந்தினர்கள் உரை, வலைபதிவ நண்பர்களின் நூல் வெளியீடுகள் என்று 
சிறப்பான அம்சங்கள் கொண்ட இவ் விழாவில் இணையம்  உருவாக்கி தந்த நட்பை கொண்டாடி மகிழ்வோம். வாருங்கள் நண்பர்களே 

வருங்காலம் நமதாகட்டும்
வெற்றி நம் வசமாகட்டும்

FINAL PUNCH


இந்த வருட பதிவர் திருவிழாவில்  எனது குறும்படமான சில நொடி சிநேகம் வெளியிடப் படுகிறது என்பதில் இந்த குறும்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் இனம் புரியாதோரு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது 
என்பதை நான் சொல்லவும் வேண்டுமா.அந்த மகிழ்ச்சியுடன் விழாவில் கலந்து கொள்ள வரும் அனைவரையும் அன்புடன்  வரவேற்கிறோம் ஆர்.வி.சரவணன்


வெள்ளி, அக்டோபர் 17, 2014

சில நொடி சிநேகம் - பல குறிப்புகள் 2சில நொடி சிநேகம் - பல குறிப்புகள் 2

கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் அருள் மிகு சாரங்கபாணி கோவிலும் ஒன்று . அந்த கோபுரத்தின் எழில் தோற்றம் பிரம்மாண்டம் அந்த வழியே செல்லும் என்னை ஈர்க்கும் .நிறைய முறை என் செல் போனில் படம் பிடித்திருக்கிறேன்.  இந்த கோவிலின் கோபுரத்தில் இருந்து முதல் ஷாட் எடுக்கலாம்  என்று முடிவு செய்து ஒளிப்பதிவாளர்களுடன் அங்கே சென்று எடுத்தேன். நான் ஸ்க்ரிப்டில் ஒரு கோவில் கோபுரத்தில் இருந்து படம் ஆரம்பிக்கிறது என்பதாக எழுதியிருந்தேன். அது நான் விரும்பும் கோவில் கோபுரத்தில் இருந்தே ஆரம்பமானதை கடவுள் அருள் என்றே  எடுத்து கொண்டேன்.அரசன், கோவை ஆவி துளசிதர், மூவருக்குமே மேக்கப் வேண்டாம் என்று முடிவு செய்திருந்தோம். கோவை ஆவி தாடியுடன் வந்திருந்தார். நீங்க சொன்னால் எடுத்துடறேன் இல்லேன்னா இப்படியே இருக்கட்டுமா என்று கேட்டார். நான் தாடியை எடுத்துடுங்க என்றேன். (லவ் சப்ஜெக்ட் பண்றப்ப வச்சிக்கலாம்) அது போல் மூவரும் காஸ்ட்யூம் எடுத்து வந்திருந்தார்கள். அவற்றிலிருந்து செலக்ட்செய்தோம்  ஷூட்டிங் தொடங்கிய  அரை மணி நேரத்திற்குள் எனக்கு தோன்றியது  என்ன தெரியுமா. எழுதியதை அப்படியே படம் பிடிப்பது பெரிய சவால்.  ஆம் உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். கேமரா நடு ரோட்டில் மையத்தில் வைக்க பட்டிருக்க இரு புறமும் வாகனங்கள் செல்ல வேண்டும் ஒரு குறிப்பிட்ட நொடிகள் வரை இந்த காட்சி எந்த ஒரு கட் டும் இல்லாமல் வர வேண்டும் என்று நான் எழுதியதை எடுக்க சிரமப்பட வேண்டியிருந்தது. நடுவில் கேமரா வைத்த போது  தான் பெரிய வேன்  ஒன்று தெருவையே அடைத்து கொண்டுவந்தது. வண்டியில் செல்பவர்கள் பார்த்து கொண்டே சென்றார்கள் காட்சியில் வர வேண்டிய வாகனம் சரியான படி வந்து நிற்கவில்லை. மீண்டும் தூரம் சென்று திரும்பி வாருங்கள் என்று  சொல்ல வேண்டியதாயிற்று.ஆரம்ப காட்சி எடுக்கப்பட்ட போது ,இருவரில் ஒருவர் சரியாக வசனம்
சொல்லியிருந்தார். இன்னொருவரிடம் முக பாவம் சரியாக வரவில்லை. இருவரும் சரியாக செய்தால் அந்த காட்சியில் தலை காட்டும் வேறு ஒருவர் சொதப்பி இருப்பார். இப்படியாக நிறைய டேக் போயிற்று. எனக்கு கொஞ்சம் டென்சன் ஆகி விட்டது. காரணம் ஒரே நாள்  படப்பிடிப்பு  அதற்குள் அனைத்தையும் முடித்தாக வேண்டும். அதனால் வந்த டென்சனில் நான் கொஞ்சம் பரபரப்பானேன். அரசனும்  கோவை ஆவியும்   சார் பயங்கர கோபம் வந்துடுச்சு உங்களுக்கு என்று அப்புறம் என்னிடம் சொன்னார்கள்   நான் கோபப்படவில்லை டென்சன் தான் ஆனேன் என்று கோபத்துக்கும் டென்சனுக்கும் உள்ள வித்தியாசங்களை எடுத்து சொன்னேன். இருந்தும் அது கோபம் என்றே பதிவாயிற்று.

ஆரம்பத்தில் இப்படி இருந்தாலும் போக போக சரியாகி விட்டது. ஏனெனில் துளசிதர்  சார் தவிர நாங்கள் எல்லாரும் புதியவர்கள் தானே. அதனால் தொடக்கத்தில் இருந்த சிரமம் குறைந்து பின் வேலை எளிதாக ஆரம்பித்தது. துளசிதரன் அருகில் இருந்தது எங்களுக்கு  ஒரு புதிய பலத்தை கொடுத்திருந்தது என்றே சொல்லலாம்.அந்த இடத்தில காட்சிகள் எடுத்து முடித்த பின்  அடுத்து பேருந்து நிலையம் நோக்கி எல்லாரும் கிளம்பினோம் . அங்கே எப்போதுமே கூட்டமாக இருக்கும். எப்படி எடுக்க போகிறோம் என்று எல்லாருக்குமே ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் நாங்கள் பயந்த அளவிற்கு ஒன்றுமில்லை. பொது மக்கள் யாருமே எங்களை தொந்தரவு செய்யவில்லை சிலர் வேடிக்கை பார்த்தார்கள் பலர் விசாரித்து விட்டு அகன்றார்கள். மேலும் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்து தரும் கே.கே.எஸ் ராஜா அவர்களும் படப்பிடிப்பு முழுவதும் எங்களுடனே இருந்தது எங்களை இன்னும் சுதந்திரமாய் செயல பட வைத்தது.அதற்குள் மதியம் வந்து விட லஞ்ச் ப்ரேக் விடப்பட்டது. பின் மதியம் தொடங்கி நடந்த படபிடிப்பை பார்க்க  தஞ்சாவூரில் உள்ள என் மாமா அத்தை வந்தது ஆச்சரியமாய் இருந்தது.  என் வீட்டில் மனைவி அம்மா எனது மகள் தங்கை வந்திருந்தார்கள்.   என் தங்கை கணவர் 
காலை முதல் எங்கள் கூடவே இருந்து உதவி செய்து கொண்டிருந்தார். என் தம்பி அலுவலகத்திற்கு லீவ் போட்டு விட்டு வந்து கூடவே இருந்து சாப்பாடு ஷூட்டிங் கிற்கு  தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.( இந்த படத்தின் தயாரிப்பாளர் அல்லவா )  அவரும் படத்தில் நடிக்க ஆர்வபட்டார்.  நிறைய டேக் வாங்கினார். என்னிடம்  சலிப்பையும் வாங்கி கொண்டார் . என் மகன் ஹர்ஷவர்தன் ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் உடன் செட்டிலாகி விட்டான் . அவனுக்கு போட்டோகிராபி யில் ஆர்வம் இருக்கிறது. 
மதிய லஞ்ச் ப்ரேக் கிற்கு பின் படபிடிப்பு தொடர்ந்து நடந்தது . படப்பிடிப்பில் எல்லோரும் காட்டிய ஈடுபாடு க்கு ஒரு உதாரணம் பார்ப்போம். அரசனுக்கு நான் வசனம் சொல்லி கொடுத்தேன். அரசன் "சார் நீங்க  எழுதின ஸ்கிரிப்ட் ல வசனம் இப்படி இருக்கு நீங்க மாற்றி சொல்றீங்க" என்றார். தெரியும் இது நல்லாருக்கு அதனால்  இப்படியே சொல்லுங்க" என்றேன். உடனே கீதா ரங்கன் மேடம்  "சார் டப்பிங் ல பிரச்னை  வருமே " என்றார். " இப்ப சொல்ற வசனத்தை நோட் பண்ணிடுங்க"  என்றேன்.கீதா ரங்கன் அவர்கள் இந்த படத்தில் உதவி இயக்குனராக  பணியாற்றியிருக்கிறார் . இந்த படத்தின் சப் டைட்டில் ஆங்கிலத்தில் அவர் தான் மொழி பெயர்த்து எழுதியிருக்கிறார். படத்தின் மீது அவருக்குள்ள ஆர்வம் எங்கள் அனைவருக்கும் உதவியாக இருந்தது. 

பின் மீண்டும் பேருந்து நிலையம் சென்றோம். பேருந்து நிலையத்தின் வாசலில் எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்தோம். ஆறு மணிக்கு மேல் இருட்டி விடும் என்பதால் அதற்குள் எடுத்தாக வேண்டிய கட்டாயம். காலையில் எனக்கிருந்த பரபரப்பு இப்போது அனைவரையும் தொற்றியிருந்தது. பின் நல்ல படியாக படப்பிடிப்பை முடித்த போது . 
 நாங்கள் அனைவரும் மிகவும் களைத்து போயிருந்தோம். இருந்தும் 
அந்த களைப்பை மீறி எங்கள் முகங்களில்  படப்பிடிப்பை முடித்த உற்சாகம் வெளிப்பட்டிருந்தது.

இந்த படப்பிடிப்பில் எங்களோடு இருந்த்து உதவி செய்த இன்னொருவர் என் தம்பியின் நண்பர் பிரபாகரன். அவர் கும்பகோணத்தில் பான்சி ஸ்டோர் கடை வைத்துள்ளார். படப்பிடிப்பு அன்று அவர் கடை திறக்கவில்லை.  எங்களோடு  முழுக்க முழுக்க இருந்து உதவி கொண்டிருந்தார். அவரும் இதில் நடித்திருக்கிறார். இவரது மகனும் என் தம்பியின் இன்னொரு நண்பரின் மகனும் கூட நடித்திருக்கிறார்கள் 

சென்னை வந்தவுடன் இரண்டு நாட்களுக்கு பின்னே  எடிட்டிங் தொடங்கியது. ஜோன்ஸ் நண்பர் கார்த்திக்கின் ஸ்டுடியோ வில் எடிட்டிங் நடந்தது. எல்லோரும் வேலைக்கு போய் விட்டு இரவு வந்து எடிட்டிங்கில் ஈடுபடுவோம்.  நடு நடுவே கேப் விட்டு எடிட்டிங் பத்து நாட்கள் வரை தொடர்ந்தது.


பின் டப்பிங் தொடங்கியது அதை  ஒரே நாளில் முடித்தோம் அதாவது இரவு 8 மணிக்கு தொடங்கி மறு நாள் காலை 5 மணிக்கு முடிந்தது. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் டப்பிங் ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் எல்லோரும் தூங்க ஆரம்பித்து விட்டார்கள் .ஒவ்வொருவராக எழுப்பி டப்பிங் பேச வைத்தோம். கோவை ஆவி ஷூட்டிங் காக கோயம்புத்தூரிலிருந்து வந்தவர் எடிட்டிங் டப்பிங் முடித்த பின்பே ஊருக்கு சென்றார். 


படத்தின் ரஷ் ரெடி யானது . நான் எப்போதுமே எழுதும் முன்  நெருக்கமான ஒன்றிரண்டு அலுவலக நண்பர்களுடன் விவாதிப்பேன். அவர்கள்  சொல்லும்ஆலோசனைகளை கவனத்தில் எடுத்து கொள்வேன் அலுவலக நண்பர்கள் மற்றும்  பாலகணேஷ் சார்,சீனு, ஸ்கூல் பையன் ஆகியோரை அழைத்து படத்தை பார்க்குமாறு சொன்னேன் . அவர்களும் ஆர்வத்துடன்  பார்த்து விட்டு குறைகளை சொன்னார்கள்.  நான் இதனால் வருத்தபட்டேன் என்று அவர்களுக்கு தோன்றியது .குறைகளை சொல்ல சொல்லி தான் நான் அவர்களை படம் பார்க்க சொன்னேன்.  அப்படி இருக்கையில் எப்படி அவர்கள் மீது வருத்தம் வரும். எனது படம் சரியாக வர வேண்டும் என்ற அக்கறையில் சொன்னது அது . ஆனால் எனக்கு வருத்தம் இருந்தது என் மேலே தான் . சரியாக கவனமெடுத்து செய்யவில்லை இன்னும் உழைப்பை  தந்திருக்க வேண்டும் இப்படி  விட்டு விட்டோமே என்று நினைத்து கொண்டேன். ஏனெனில் என் குடும்பத்தில் என் மேல்  நம்பிக்கை வைத்து படம் எடுக்க, செலவு செய்ய அனுமதி அளித்திருந்தார்கள். அப்படி இருக்கையில் படம் சரியாக வரவில்லை என்றால் என்னாவது . 
யோசித்தேன்.ஜோன்ஸ் இந்த விசயத்தில் முழு ஒத்துழைப்பு தந்தார்.. மீண்டும் ஒவ்வொரு காட்சியாக பார்த்து சரி செய்ய ஆரம்பித்தோம் .வேறு ஷாட் பொருத்தி பார்த்தோம். இப்போது திருப்தி வந்தது. மீண்டும் வலைத்தள நண்பர்களும் அலுவலக நண்பர்களும் பார்த்தார்கள். ஓகே என்றார்கள் . பைனல் ரெடியானது.எனக்கு ஒரு ஆசை இருந்தது. எனக்கு பிடித்தமான  நடிகர் இயக்குனர் எனது குரு  திரு கே.பாக்யராஜ் அவர்களை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்பது. நண்பர்களுக்கும் ஆசைபடவே திரைக்கதை அரசனை சென்று சந்தித்தேன். மற்றவர்கள் அலுவலக வேலையில் இருந்து வர முடியவில்லை. கோவை ஆவி கீதா ரங்கன் மேடம் என் தம்பி தம்பி மனைவி வந்தார்கள். ஆசி பெற்றோம் படம் பார்க்குமாறு வேண்டினேன். மறுப்பு சொல்லவில்லை அவர். படம்  பார்த்தார். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்று சொன்னார். அவரிடம் ஆசி பெற்று வந்தது ரொம்ப சந்தோசமாக இருந்தது. (நண்பர் எஸ் .எஸ்.பூங்கதிர் அவர்களுக்கு தான் நன்றி  சொல்ல வேண்டும்) 

 இந்த இனிய தருணத்தில், என் ஆர்வத்துக்கு தடை சொல்லாமல் ஊக்கம் தரும் என் அம்மா என் மனைவி மற்றும் என் உறவினர்களுக்கு  என் இதயம் நிறைந்த அன்பை தெரிவிக்கிறேன் 

நான் இணையத்துக்குள் எழுத ஆரம்பித்து வைத்த  என்  நண்பர் வினோ  மேலும் என் எழுத்துக்களை படித்து எனக்கு தொடர்ந்து ஆலோசனை தந்து வரும் நண்பர் கிரி , மற்றும் நிஜாம் பக்கம் நிஜாமுதீன் மனசு குமார்,  கே.ஆர்.பி செந்தில் மற்றும்  வலைத்தள நண்பர்கள்,முக நூல் நண்பர்கள் அனைவரயும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.

இந்த படம்   தொடங்கியதில் இருந்து இதோ இந்த நிமிடம் வரை என்னுடன் இனைந்து பணியாற்றிய அரசன் கோவை ஆவி மற்றும் துளசிதரன் சகோதரி கீதா ரங்கன் இவர்கள்  இல்லையேல் குறும்படம் சாத்தியமில்லை
சரி எல்லாம் சொல்லிட்டே படம் எப்ப ரீலீஸ் அதை சொல்லு முதல்ல என்று கேட்கிறீர்களா மதுரையில் நடைபெறும் 3 வது வலைபதிவர் சந்திப்பில் சில நொடி சிநேகம் குறும்படம் வெளியிடப்படவிருக்கிறது. அன்றே இணையத்திலும் வெளியிடபடுகிறது. அதற்கு ஒத்துழைப்பு தந்து  வெளியிட விருப்பம் தெரிவித்த நம் நண்பர்கள் திண்டுக்கல் தனபாலன், தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் விழா குழுவினருக்கு எங்கள் ஜனனி ஆர்ட்ஸ் குழு 
சார்பாக  நன்றி 

இன்னும் ஒரு வாரம் இருக்கிறதா என்று நீங்கள் சலித்து கொள்ள கூடாது என்பதால், இன்னொரு டீசர் உங்கள் பார்வைக்கு வருகிறது ஒரு குறும்படத்துக்கு எத்தனை டீசர் டா வெளியிடுவீங்க என்று பல்லை கடிக்காதீர்கள். இது இந்த படத்தின் எடிட்டர் ஜோன்ஸ் ஆர்வத்துடன் உருவாக்கியது. 

சில நொடி சிநேகம் டீசர்


உங்களை போலவே நாங்களும் காத்திருக்கிறோம் எங்கள் 
குறும்படத்திற்கான தங்களின் கருத்துக்களுக்கு 
  

FINAL TOUCH 


அடுத்து என்ன என்று கேட்கின்றீர்களா ? ( என்னது கேட்கலியா நீங்க கேட்கலைனாலும் நான் சொல்லியாக வேண்டும். ஒரு விளம்பரத்திற்காவது ) வரும் தீபாவளி முதல், பத்து வாரங்கள் வரை வரும்  தொடர்கதை ஆரம்பிக்கின்றேன்.  ) தொடர்கதையின் பெயர் 

திருமண ஒத்திகை 

எழுத போவது நான் என்றாலும் அது சிறப்படைய போவது 
தங்களின் ஆதரவினால் மட்டுமே. 

நன்றி 

ஆர்.வி.சரவணன் 


புதன், அக்டோபர் 15, 2014

சில நொடி சிநேகம் - பல குறிப்புகள்

சில நொடி சிநேகம் - பல  குறிப்புகள்

எனக்கு பிடித்த வரிகளில் ஒன்று இருட்டு னு இருட்டு  புலம்பறதை விட உன்னால் முடிந்தால் ஒரு மெழுகுவர்த்தி ஏற்று. இதை எதுக்கு இங்கே  சொல்றேன் . குறும்படம் எடுக்கனும்னு ரெண்டு வருஷமா  சொல்லிட்டு இருந்தேன்.இப்படி சொல்லிட்டே இருப்பதை விட முயற்சி செய்யலாமே என்ற ஆர்வத்தில் நான் செய்திருக்கும் முயற்சி தான் இந்த சில நொடி சிநேகம் என்ற குறும்படம். 

எந்த ஒரு படபிடிப்பையும் நான் வேடிக்கை கூட பார்த்ததில்லை.( யாரு உன்னை பார்க்க வேணாம்னு சொன்னாங்க ) கடந்து சென்றிருக்கிறேன் .எந்த ஒரு குறும்பட ஷூட்டிங் கூட கலந்து கொள்ள முடியவில்லை என்ற நிலையில்  நம் நண்பர் துளசிதரன் தன் குறும்பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வைத்து  அசிஸ்டென்ட் டைரெக்டர் ஆக தன்னுடன் இணைத்து கொண்டார் .அப்போது நான்  அவரிடம் சொன்ன ஒரு கதையை  கேட்டவர், இதையே டெவலப் பண்ணுங்க சார் என்று சொன்னார் . அந்த கதை ஸ்கிரிப்ட் முடித்து நிமிர்ந்த போது படம் அரை மணி நேரம் வரை ஓடும் போல் தெரிந்தது. 

துளசிதரன், அரசன், கோவை ஆவி, கீதா ரங்கன்,  பாலகணேஷ், ஸ்கூல் பையன் படித்து விட்டு  திருப்தியுடன் தலையசைத்தனர். ஆனால் என் நண்பர் வினோ சரவணன் முதல் படமா இந்த சப்ஜெக்டை எடுத்துக்காதீங்க வேற சின்ன சப்ஜெக்ட் எதுனா பண்ணுங்க அப்புறமா இது பண்ணலாம் என்றார்.  இதே கருத்தை தான் நண்பர் கே.ஆர்.பி செந்தில் அவர்களும் சொன்னார். 

அந்த சப்ஜெக்ட் பண்ணியே ஆக வேண்டும் என்ற துடிப்பில் இருந்த நான் இதனால் தளர்ந்து போய் உள்ளே நம்பிக்கை வீழ்ந்து போய்  நிற்கையில்  என் பார்வையில் தெரிந்தது . ஒரு விஷயம். அரசன் கோவை ஆவி துளசிதரன் இவர்கள் மூவருடனும் ஒரு மாதமாக ஸ்கிரிப்ட் விசயமாக பேசி பேசி அவர்களுக்கு குறும்படம் மேல்மிக  பெரிய ஆர்வம்  வந்திருந்தது அதை சிதைக்க போகிறோமே  என்று நினைத்து ரொம்ப கவலைப்பட்டேன். கோவை ஆவி துளசிதரன் சென்னை வருவதற்காக டிரெயின் டிக்கெட் எல்லாம் ரிசர்வ் செய்திருந்தார்கள். எங்கள் வீட்டிலும் எதிர்பார்ப்பு இருந்தது. இப்படி ஒரு சூழ்நிலையில் ப்ரொஜெக்டை தள்ளி போடுவது எப்படி என்று கொஞ்சம் திணறினேன். நண்பர்கள் பரவாயில்ல சார்  டயம் எடுத்து பண்ணலாம் என்றே  சொன்னார்கள். என் அலுவலக நண்பர்கள் "விடாதே வேற சப்ஜெக்ட் உடனே எழுது  நீ படம் பண்ண நினைத்த தேதியில் ஷூட்டிங் பண்ணிடு . அப்புறம் பண்ணலாம் என்று நீ நினைத்து தள்ளி போட்டால்  இந்த ஆர்வம் குறைந்து விடும்" என்றார்கள்.  எனக்கும் அவர்களது கருத்து சரி என்றே பட்டது . விடாபிடியாக வேலையை ஆரம்பித்தேன். எனது ஒரு பக்க சிறுகதை ஒன்றை எடுத்து ஸ்கிரிப்ட் எழுதினேன். அது தான் சில நொடி சிநேகம் 
ஸ்கிரிப்ட் முடித்த பின் ஷட்டிங் எங்கு வைத்து கொள்வது என்ற அடுத்த கேள்வி எழுந்தது கே.ஆர்.பி.செந்தில்  செங்குன்றம் பஸ் ஸ்டான்ட் ல எடுத்துடுங்க என்றார். சரி என்று நானும் என் தம்பியும் அங்கு சென்ற போது அங்கிருந்த டிராபிக் எனை மிரள வைத்தது. இதில் எப்படி ஷூட்டிங் நடத்த முடியும் என்று அதிர்ச்சியானேன். அடுத்த அதிர்ச்சியாக அனுமதி கேட்டு  காவல் நிலையத்தை நாடிய போது 5 இடங்களில் பர்மிசன் வாங்க வேண்டும் வாங்கி வாருங்கள் என்றார்கள். அலுவலக வேலையில்  இருக்கும் நான் 5 அலுவலகங்களுக்கு சென்று அனுமதி வாங்க எது நேரம். எப்படி வாங்குவது என்று மலைப்பானேன். 

  ஒரு மரத்தின் நிழலில் நின்ற படி,  ச்சே என்று  சலித்து கொண்ட படி  குறும்பட ஆசை அவ்வளவு தானா என்ற விரக்தியாய்  இருந்த போது திடீரென்று ஒரு ஐடியா தோன்றியது. கதை நடைபெறும் களமான கும்பகோணத்தில் அதாவது என் ஊரிலேயே எடுத்தால்  என்ன என்று தோன்றியது.  உடனே என் முக நூல் நண்பர்  வேல் முருகவேல் அவர்களுக்கு போன் செய்தேன். அவர் ஸ்ரீதரன் என்ற நண்பரின் எண்ணை கொடுத்தார்.  அவரை தொடர்பு கொண்ட போது அவர் தான் ஊருக்கு செல்வதால் தனது நண்பர் கே.கே.எஸ் ராஜா வின் எண்  கொடுத்தார்.  அவர் அங்கே சினிமா படபிடிப்புக்கு ஏற்பாடு செய்து தந்து வருகிறார். தொடர்ந்த விரக்தியுடன் , நான் அவரை தொடர்பு கொண்ட போது அவர் "ஒண்ணும் பிரச்சனையில்ல நீங்க ஷூட்டிங் குக்கு தயாரா வந்துடுங்க" என்றார்.  

நண்பர்களிடம் சொல்லி சென்னை டிக்கெட் கான்ஸல் செய்து கும்பகோணதிற்கு   டிக்கெட் போட சொன்னேன் நானும் என் தம்பியும் ஒரு நாள் முன்னதாகவே ஊருக்கு சென்றோம்.கே.கே. எஸ் ராஜா அவர்களை சந்தித்தேன். அவர் நகராட்சியிடம் பணம் கட்டி  அனுமதி சீட்டு வாங்கி வைத்திருந்தார். சந்தோசமாய் அவருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினோம்.

தொடர்ந்து படப்பிடிப்பை எங்கெங்கு வைத்து கொள்ளலாம் என்று சுற்றி பார்த்து இடங்களை  தேர்வு செய்து கொண்டோம். படத்திற்கு பேருந்து ஒன்று தேவைப்பட்டது .என் தம்பியின் நண்பர் அழைத்து சென்று தனியார்  பேருந்து முதலாளியிடம் அறிமுகபடுத்தினார். அவரிடம்  3 மணி நேரத்திற்கு  பேருந்து க்கு பேசி அட்வான்ஸ் கொடுத்தோம்.  அவர்  ஒரு அரை மணி நேரம் கூடுதலாக  ஆனாலும் பரவாயில்ல நிதானமா எடுங்க என்று சொன்னதுடன்   நீங்க நல்லா வரணும் வருவீங்க என்றும்  வாழ்த்தினார். அவரிடம் வியாபாரத்தை மீறிய ஒரு மனிதாபிமானம் குடி கொண்டிருந்தது அவருடன்  பேசிய போது தெரிந்தது . 

அங்கு நடந்த விசயங்களை எல்லாம் உடனுக்குடனே  நண்பர்கள் நால்வருக்கும் தொடர்ந்து ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்து கொண்டிருந்தேன். அவ்வபோது நான் சந்தோசத்தில் இது  நிஜம் தானா என்று என் கையை  மட்டும் தான் கிள்ளி  பார்க்கவில்லை. (அடுத்தவங்க கையை கிள்ளியிருக்க போறே ) இப்படியாக அன்றைய பொழுது ஏற்பாடுகளில் செல்ல மறுநாள் அதாவது அதிகாலை 2 மணிக்கு நான் விழித்து விட்டேன். என் செல் போனிலேயே ஸ்கிரிப்ட் ஓபன் செய்து  வைத்து கொண்டு படித்து  மனதிற்குள் குறிப்புகள் எடுத்து கொண்டேன். கொஞ்சம் பயமாக கூட இருந்தது.  (பள்ளி கல்லூரி பரீட்ச்சைக்கு கூட நீ எழுந்து படிக்காதவன்  என்பதை இங்கே  அவசியம் சொல்லிரு )  


பொழுது விடிந்தது. நானும் தம்பியும் கிளம்பி கும்பகோணம் பேருந்து நிலையம் வந்து நண்பர்கள் வருகைக்காக காத்திருந்தோம். என் மகன் ஹர்ஷவர்தன் அப்பா நான்  இன்னிக்கு ஸ்கூல் க்கு லீவ் போடறேன் ப்ளீஸ் என்று சொல்லி படப்பிடிப்புக்கு வருகிறேன் என்று சொன்னான்.  சரி என்று சொல்லி விட்டோம்  அவன் ஆர்வத்துடன் உருவாக்கிய போஸ்டர்கள் தான் இங்கே இருக்கிறது. 

காலையில் தான்  படம் எடுக்கும் விசயத்தை குறித்து முக நூலில் ஸ்டேடஸ் போட்டேன்.


இறை அருளின் துணையுடன், என் வாழ்க்கையின் பெருங் கனவொன்று நான் பிறந்து வளர்ந்த மண்ணிலே நனவாகும் நாள் இன்று.இந்த நாளுக்கு என்னை கொண்டு வந்ததில் என் குடும்பத்தினருடன், வலைப்பதிவு மற்றும் முக நூல் நண்பர்கள் தந்த ஊக்கத்திற்கும் மிக முக்கிய பங்கிருக்கிறது.உங்களின் வாழ்த்துக்களுடன் இனிதே தொடங்குகிறேன் இந்நாளை


துளசிதரன் அவரது மனைவி, அரசன், கோவை ஆவி, கீதா ரங்கன், ஒளிபதிவாளர்கள் ஜோன்ஸ் கார்த்திக் வந்திறங்கினார்கள். அவர்கள் மூவரையும் ஏற்கனவே வீட்டில் வசனங்கள் படித்து ரிகர்சல் பார்த்து விட்டு வாருங்கள் என்று சொல்லியிருந்தேன். இந்த பட விசயமாக செல் போனில் மட்டுமே நாங்கள் டிஸ்கசன் செய்திருந்தோம். நேரில் சந்தித்து கொள்ளாமலே.


எனவே ஹோட்டல் அறையில் ரிகர்சல் பார்த்து கொள்ளலாம் என்றிருந்த எங்களுக்கு  அவர்கள் வந்த பேருந்துகளின் தாமதத்தால் ரிகர்சல் பார்க்காமலே ஷூட்டிங் ஸ்பாட் செல்ல வேண்டி   வந்தது. நாளை இந்த கட்டுரையை முடித்து விடுவேன் (என்று நினைக்கிறேன்) அது வரை  இந்த படத்தின் நாயகர்களில் ஒருவருமான நண்பா கோவை ஆவி ரெடி செய்திருந்த  குறும்பட டீசர் பார்த்து விடுங்கள் 

ஆர்.வி.சரவணன் 

சனி, அக்டோபர் 11, 2014

ஸ்வீட் காரம் காபி
 

ஸ்வீட் காரம் காபி

மேகா படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது புத்தம் புது காலை  பாடலும் பாடலுக்கான  விசுவலும் தான் .இளையராஜாவின் அந்த மனதை அள்ளும் பாடல் ஏற்கனவே கேட்டிருந்தாலும் இதில் கேட்கையில்  பார்க்கையில்   இதன் காட்சிகள்   மனத்திரையில்  வர்ண ஜாலம் காட்டுகிறது. அலுக்காத பாடல் வரிசையில் இதுவும் இப்போது  (இதற்கு முன்பு என்னை பாடலாகவும் விசுவலாகவும் ஈர்த்த பாடல்களில் ஒன்று சத்யாவில் வரும் வளையோசை) படத்தை பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்று கேட்கின்றீர்களா. படம் பிடித்திருந்தது. ஆனால் கிளைமாக்ஸ் இப்படி முடித்தது சுத்தமாக பிடிக்கவில்லை. 
சமீபத்தில் பார்த்த படங்களில் மிகுந்த ஆச்சரியத்தை தந்தது. கதை திரைக்கதை வசனம் இயக்கம். ஆடியன்சை எதிர்த்தாப்பில உட்கார்ந்து படத்தை பார் என்ற நிலையிலிருந்து மாற்றி,  வா உன்னையும் இதிலே 
ஒரு கேரக்டர் ஆக்கறேன் என்பது போல் பார்த்திபன் செய்திருந்த அந்த வித்தியாசமான ட்ரீட்மென்ட் பிடிச்சிருந்தது. ஹீரோவின் ரொமாண்டிக் அத்தியாயங்கள், வசனங்கள் , ஆடியன்ஸ் சொல்ல போவதை முன் கூட்டியே சொல்வது, தம்பி  ராமையா  என்று  பல விசயங்கள் ரசிக்க முடிந்தது. பார்த்திபனின் ரீ என்ட்ரி வரவேற்க தக்க வகையில் அமைந்திருக்கிறது. 
இப்  படம் பற்றி  நான் முக நூலில் எழுதியதை இங்கே தருகிறேன்


என்ன படம்டா பார்த்தே?"
"கதை திரைக்கதை வசனம் இயக்கம்"
"நான் படத்தோட பேரை கேட்டேன்"

"படத்தோட பேரே அதான்"

"வித்தியாசமா இருக்கே என்ன கதை"
"கதை இல்லாமலே சில கதைகளுடன் செம ஜாலியா"
"புரியற மாதிரி சொல்லேன்"
"ஆடியன்ஸை இந்தப் படத்துல ஒரு கேரக்டராக வச்சிருக்கார்"
"அப்படியா டைரக்டர் யாரு"
a film by RADHAKRISHNAN PARTHIBAN

(தமிழ் சினிமா அறிந்திறாத, ஒருவர் கேட்ட கேள்விகளும்  அதற்கு எனது பதில்களும்)

------

சிறு வயதில் வீட்டில் பேப்பர் காரர் தினமும் பேப்பர் கொண்டு வந்து போடுவார். அதில் எல்லாம் ஈர்ப்பில்லை எனக்கு. வெள்ளி அன்று தான் கொண்டாட்டம் காரணம் குமுதம் மற்றும் ஆனந்த விகடன் இதழ்கள். இதில் குமுதத்தில் ஜோக் படித்து கொண்டிருந்தவன் எழுத ஆசைப்பட்டு எழுதி அனுப்புவேன் நான்கைந்து வாரம்  வரை பார்த்து விட்டு பின் நானே விட்டு விடுவேன். இப்படி இந்த நிகழ்வு  அடிக்கடி நிகழும். சமீபத்தில் நான் அனுப்பிய ஒரு அனுபவம் ஹலோ வாசகாஸ் பகுதியில் வந்திருந்தது சந்தோசமாக இருந்தது. அது இங்கே
------

சென்னை சென்ட்ரலில் இருந்து எக்மோர் செல்ல ஆட்டோ   பேசிய போது ஆட்டோ காரர் அறுபது ரூபாய் கேட்டார். வேண்டாம் என்று  கிளம்பியவன் பேருந்து ஒன்று வரவே  ஓடி போய் ஏற முயற்சித்தேன்.  பேருந்தின் வேகத்திற்கு தகுந்தார் போல் நமது வேகமும் இருந்தால் தான் வண்டியில் தாவி ஏற முடியும். ஆனால் வண்டி இன்னும் வேகமேடுத்ததால் என்னால் ஏற முடியாமல் போய் கீழே தவறி விழும் நிலை ஏற்பட்டு  சுதாரித்தேன். பின்னே தொடர்ந்த வாகனங்களில் இருந்து தப்பித்து ஓரம் வந்தேன். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள கொஞ்சம் அவகாசம் தேவைப்பட்டது. அப்போது ஒரு ஆட்டோ வர நிறுத்தி   ஏறி கொண்டேன்.  ஆட்டோ டிரைவர் 50 ரூபாய்  கேட்டார். என்னது 50  ரூபாயா என்று நான் சலித்து கொள்ள அடுத்து ஆட்டோ டிரைவர் தந்த பதிலில் நான் ஆடி போனேன். "சார் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க 60 ரூபாய் கேட்டதுக்கு  முடியாதுனு சொன்னீங்க. சரி  என்று இப்ப 50 ரூபாய் கேட்கிறேன் நீங்க இதுக்கும் வம்பு பண்ணால்  எப்படி சார்" என்றார். அப்போது தான் ஆட்டோவையும் டிரைவரையும் உற்று கவனித்தேன்.பழைய ஆட்டோ தான். "நான் 60 ரூபாய்க்கே உங்க ஆட்டோவில் ஏறியிருக்கலாம் வேணாம்னு சொல்லி பஸ் ஏற போய்  கீழே விழறதுக்கு இருந்தேன்" என்றேன் ஆட்டோ காரரிடம் பரிதாபமாய்.  அவர் சிரித்தது இருட்டிலும் தெரிந்தது. (நீங்களும் சிரிச்சிருப்பீங்களே )

------  
குறும்படம் எடுக்கும் ஆசை பற்றி ஏற்கனவே இந்த பகுதியில் சொல்லியிருக்கிறேன். சில நொடி சிநேகம் குறும்படம்  எடுத்து முடித்தாகி விட்டது. இதில் பங்கேற்று எனக்கு முழு ஒத்துழைப்பு தந்த துளசிதரன், அரசன்,கோவை ஆவி மற்றும் திருமதி  ரங்கன் ஆகியோருக்கு நன்றி என்று ஒற்றை வார்த்தையில் சொல்வது சரியாக இருக்காது. நண்பர்கள்  சேர்ந்து நட்பை பற்றிய படம் எடுத்திருக்கிறோம் என்ற வார்த்தையே  சரியானது. 

------


சென்னையில் இரண்டு வருடமாக வெற்றிகரமாக நடைபெற்ற பதிவர் திருவிழா இந்த வருடம் மீனாட்சி ஆட்சி புரியும் மதுரையில் என்று முடிவு செய்யபட்டிருக்கிறது. அக்டோபர் 26 ஞாயிறு அன்று கீதா நடன கோபால நாயகி மந்திர் அரங்கில் நடைபெறும் 3 வது பதிவர் திருவிழா பற்றிய அணைத்து தகவல்களும் நம் நண்பர்கள் திண்டுக்கல் தனபாலன்
 http://dindiguldhanabalan.blogspot.com/2014/09/Tamil-Writers-Festival-2014-3.html
 பதிவிலும் பிரகாஷ்குமார் தமிழ்வாசி  பதிவிலும் வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-மதுரை-26.10.14  தெரிந்து கொள்ளலாம் சென்ற வருடங்கள் போலவே இவ் வருடமும் விழா சிறப்பாய்  நடைபெற  வெற்றி பெற குடந்தையூர் வாழ்த்துகிறது. 

 ------

இளமை எழுதும் கவிதை நீ .... க்கு பிறகு அடுத்த கதையாக காவல் குதிரைகள்  என்ற  தொடர்  எழுத ஆரம்பித்திருந்தாலும் காவல்துறை மற்றும் நீதித்துறை பற்றிய கதை என்பதால் இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்து கொள்ள
வேண்டியிருக்கிறது. எனவே  திருமண ஒத்திகை என்ற  தலைப்பில் 
எனது அடுத்த தொடர்கதையை  தீபாவளிக்கு ஆரம்பிக்க இருப்பதால் 
 உங்களின் ஊக்கமும்  வாழ்த்தும் வேண்டுகிறேன் 


FINAL TOUCH 


"இருக்கிறவன் ஏன்யா இல்லாதவன் கிட்டே திருடறீங்க" இந்த வசனத்தை திரைப்படத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் மறுக்கப்படும் காட்சில சொல்லலாம்.
இதை இன்னும் இயல்பா (நடைமுறை வாழ்க்கையில்) சொல்லணும்னா, அலுவலகத்தில் நம் தகுதிக்குரிய இன்க்ரிமெண்ட் மறுக்கப்படும் நேரத்தில் 
(பின் விளைவுகளை சந்திக்க தயார் என்ற நிலையில்) சொல்லலாம்
.


ஆர்.வி.சரவணன் ஞாயிறு, அக்டோபர் 05, 2014

மெட்ராஸ்என்ன நீ அதிகமா லீவ் போடறே என்று முதலாளி கேள்வி கேட்பார் ஆசிரியர் கேள்வி கேட்பார். அதை போன்றதொரு ஸ்டைலில் ப்ளாக் பக்கம் நீங்க வந்து ரொம்ப நாளாச்சு என்று நண்பர்கள்  கரந்தை ஜெயக்குமார், மனசு குமார், நிஜாம் பக்கம் நிஜாமுதீன் கேட்டிருந்தார்கள். அவர்களுக்கு சொன்ன பதிலையே இங்கே காபி பேஸ்ட் பண்ணி விடுகிறேன். அலுவலக வேலை ஒரு பக்கம் நெருக்கியடிக்க கூடவே எனது ஆசையான குறும்படம் எடுக்கும் ஆர்வமும் என்னை நெருக்க, வேலைகள் தொடர்ந்ததால் என்னால் வலை பக்கம் வர முடியவில்லை. அதற்காக பெஞ்ச் மேல ஏற்றி நிற்க வைத்து பனிஷ்மென்ட் கொடுத்துடாதீங்க இதோ வந்துட்டேன். 

மெட்ராஸ் 

சுவரை வைத்து கொண்டு சித்திரம் வரைவாங்க. இங்கே வட சென்னையின் வாழ்க்கையை மனிதர்களை ஒரு சுவற்றில் பதிவு செய்திருக்கிறார் அட்டகத்தி இயக்குனர் ரஞ்சித். அந்த சுவர் அதிகார அரிதாரம் பூசி கொண்டு வஞ்சகத்தை தன்னுள் மறைத்து கொண்டு அச்சத்தை பார்ப்பவர்களிடம் விதைத்து கொண்டிருப்பதை ஒரு கேரக்டராகவே உருவாக்கி இருக்கிறார்.

ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் சுவர் தான் கதைக்கு மூலமே. இந்த சுவரை யார் பற்றுவது என்ற போட்டியில் சுவரை ஆக்கிரமித்த ஒரு கட்சியின் லோக்கல் அரசியல்வாதி  அதை விட மறுப்பதும் அவரிடமிருந்து சுவரை பறிக்க அல்லது பிடுங்க மற்றொரு கட்சி ஆட்கள் நினைப்பதும் இரு கட்சி ஆட்களும் அதையே தன் வேத வாக்காய் கௌரவ பிரச்சனையாய் எடுத்து அடித்து கொள்வதன் மூலம் சில உயிர்களை பலி கொடுக்கிறார்கள். இரு கட்சிகளும் தேர்தலுக்காக கூட்டணி அமைக்கும் போது தான் அவர்கள் சாயம் பொது மக்களிடம் வெளிபட்டு அவர்களால் வெளுக்கபடுகிறது. சுவரை பொது மக்களே எடுத்து கொண்டு அரசியல் சாயத்தை துடைத்து  கல்வி  பூசுகிறார்கள். (புகட்டுகிறார்கள்) 

இந்த படத்தின் திரைக்கதை சில பல ஆச்சரியங்களை தனக்குள் புதைத்து கொண்டுள்ளது. உதாரனமாக ஒரு காட்சியை எடுத்து கொள்வோம். ஹீரோ கார்த்தி தன் காதலியுடன் ரொமாண்டிக் மூடுடன் ஹோட்டலுக்கு வருகிறார். அதே ஹோட்டலில் இரண்டாக பிரிந்து நின்றிருந்த கொண்டிருந்த அதிகார மையங்களான வில்லன் குரூப் ஒன்று சேர்ந்து அறைக்குள் பேசி கொண்டிருகிறது. அங்கே பேச்சு வார்த்தையும் இங்கே ததும்பி வழியும் காதலும்  நடந்து கொண்டிருக்க இரண்டையும் மாறி மாறி இயக்குனர் காட்டும் போது, வழக்கமாக நாம் பார்க்கும் தமிழ் படங்களின் காட்சிகள் போல் கார்த்தியும் வில்லனும் சந்திக்க போகிறார்கள் என்று நாம் எதிர்பார்த்து கொண்டிருக்கையில், வேறொரு வகையில் அந்த காட்சியை புத்திசாலிதனமாக அமைத்திருப்பார் இயக்குனர். இது போல் பல காட்சிகளில் தன் திரைக்கதையால் நம்மை படத்தில் ஒன்ற வைத்து விடுகிறார். சண்டை காட்சிகளில் கூட இப்படி தான் நாம் எதிர்பாராத வண்ணம் அதிரடி காண்பித்திருப்பார்.

கார்த்தியிடம்  மெட்ராஸ் மொழி அவரிடம் கஷ்டப்பட்டு
வெளிபட்டாலும் ஹீரோயிசம் இல்லாத நடிகராக இதில் தன்னை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார். கோபத்தில் அடித்து விட்டு பின் பயப்படுவதும் காதலுக்காக உருகுவதும் பெற்றோரிடம் எகிறுவதும்  
ரசிக்க முடிகிறது. அவ என்னை வேணாம் னுட்டாடா என்று 
சரக்கடித்து விட்டு அவர் புலம்பி அழும் இடம் செம. 

ஹீரோயின் கேத்தரின் வரும் முதல் காட்சியில் ரசிகர்களின் விசில் சத்தம் சொல்லி விடுகிறது. அவர் தந்திருக்கும் ஈர்ப்பை. (படம் வந்து ஒரு வாரத்திற்கு பின் நேற்று தான் சென்று பார்த்தேன்) தூங்கி எழுந்து தண்ணீர் பிடிக்க அவர் வந்து நிற்கும் காட்சியிலும் என்னை கல்யாணம் பண்ணிகரியா என்று கேட்பதிலும், கைகளை மறைத்து கொண்டு கிஸ் கொடுப்பதும் என்று கார்த்தியுடனான காட்சிகள் கலகலப்பு.அடுத்து அன்பு கதாபாத்திரத்தில் கலையரசனும்  மேரி கேரக்டரில் வரும் ரித்விகாவும் படத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அவர்களின் அந்த அன்னியோன்யம் கோபம் ஆகா. அன்பு புருஷன் நான் எதுக்கு இருக்கேன் என்று எகிறுவதும் மேரியின் பார்வையில் கிறங்கி போய் பேசுவதும் என்று அதகளபடுத்த, அன்பு இறந்த பின் மேரி அழும் அழுகையும் சாக்கடை தண்ணீரை எடுத்து கொண்டு வந்து உக்ரத்துடன் வில்லன் முகத்தில் வீசும் போது காட்டும் முக பாவம் வாரே வா என்று சொல்ல வைத்து விடுகிறது.

பாடல்களில் ஆகாயத்தில் தீப்பிடிக்க பாடல் காட்சியின் விசுவல் ரசனை ரகம். பின்னணி இசையில் நம்மை சுண்டி இழுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.

ஒளிப்பதிவு முரளி. அடுக்கு மாடி குடியிருப்பின் இண்டு இடுக்கு விடாமல் அனைத்து பகுதிகளிலும் படம் பார்க்கும் நம்மை விட்டு விடாமல் இழுத்த சென்ற படி சுற்றி வந்திருக்கிறது. அதிலும் அந்த சுவர் நிறைய முறை பல ஆங்கிள்களில் காட்டப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புது அர்த்தத்தை தருகிறது என்று சொல்லலாம் 

கார்த்தியின் அம்மா அப்பா வெத்தலைக்கு காசு கேட்கும் பாட்டி, ஜானி மற்ற நடிகர்கள் என்று ஒவ்வொரு கேரக்டரும் நம்மை ஈர்க்க வைப்பதில் போட்டி போட்டு கொண்டு ஸ்கோர் செய்கிறார்கள். கிளைமாக்ஸ் சண்டையில் வட சென்னையின் இருட்டில் நடப்பதை ரசித்தாலும் வில்லனை பழிவாங்குவதை வேறு எங்கோ கொண்டு சென்றிருக்க வேண்டாம் அதையும் அங்கேயே செய்திருக்கலாம்.மாரி கேரக்டரின் போக்கு ஆரம்பத்திலேயே புரிபட்டு விடுவது, அன்பு கேரக்டரின் உயரம் குறைவு, இடைவேளை வரை உள்ள யதார்த்தம் இடைவேளைக்கு பின் இல்லாதது கார்த்தி அன்பின் நட்பு நெருக்கதை இன்னும் காட்சிபடுத்தி இருந்திருக்கலாம் என்பதெல்லாம் கொஞ்சம் உறுத்தினாலும் அதெல்லாம் ஒரு மேட்டரே அல்ல என்று அவற்றை பின்னுக்கு தள்ளி இயக்குனரின் திரைக்கதையும் விசுவல் நேர்த்தியும் தன்னை முன்னிறுத்தி கொண்டிருக்கிறது.

FINAL TOUCH 


கிளைமாக்ஸ் க்கு முன் கார்த்தி சுவரின் முன்னே நிற்கும் போது 
அந்த சுவற்றில் அவரது நிழல் படிந்து சுவர் அளவுக்கு உயர்வது போல் அமைத்திருப்பார்கள். இதில் நடித்திருப்பவர்களுடன் இயக்குனரும் உயர பெருமளவில் உதவியிருக்கிறது இந்த மெட்ராஸ் ஆர்.வி.சரவணன்