செவ்வாய், மே 28, 2013

உனக்கும் எனக்குமான....

உனக்கும் எனக்குமான....


உனக்கும் எனக்குமான இடைவெளியை 
நான் கவிதைகள் இட்டே நிரப்பி கொண்டிருக்கிறேன் 


உனை பார்க்கும் போது  எனை  பார்க்க மறுக்கிறாய் 
பார்க்காத போதோ  பார்த்த வண்ணமே  இருக்கிறாய்  


நம்மால்  நேர்ந்த நம் காயங்களுக்கு
அன்பால் மருந்திட்டு கொள்கிறோம் 


நான் ஆசை எனும் பேரலைகளால் சூழ்ந்திருக்க
நீ மட்டும் ஆழ் கடல் அமைதியில்


விலை மதிப்பில்லா பொக்கிஷங்கள்  பட்டியலில் எனக்காக
நீ விடும் கண்ணீரையும் சேர்த்திருக்கிறேன் 


நீ பேசாத பொழுதுகளில் உன் கொலுசுடன் 
பேசி  கொண்டிருக்கிறேன் 


நீ உனக்குள் பதுக்கிய என் காதலை எப்போது வெளி கொணர்வாய்
என எப் பொழுதும் விழிப்புடன் நான் 


என் வாழ்க்கை பாலைவனமாய் மாறியிருந்த சமயம்
ஒரு வற்றாத ஜீவ நதியாய் நுழைந்தவள் நீஎன்  இதழ் காயத்திற்கு மருந்தாகுமோ
உன் இதழ்களின் ஒத்தடம் 


உன் வெற்றியை நானும் என் வெற்றியை நீயும் கொண்டாடியது போதும்
வா நம் வெற்றியை உலகம்  கொண்டாடட்டும் 


எனது இளமை எழுதும் கவிதை நீ.... தொடர்கதையின் அத்தியாயங்களில் 
நான் குறிப்பிட்டிருந்த கவிதை வரிகள் 


ஆர்.வி.சரவணன் 


படம் :கூகுள் 

ஞாயிறு, மே 19, 2013

ஸ்வீட் காரம் காபி - 19-05-2013
ஸ்வீட் காரம் காபி
-----------------------------------------19-05-2013
(சூது கவ்வினாலும் எதிர் நீச்சலிடு) 


சூது கவ்வும்

நான் ஸ்டாப் காமெடி படம் இது. விமர்சனம் எதையும் படிக்காமல் 
படம் பார்க்க போனதால் படம் பார்க்க நல்ல சுவாரஸ்யமா இருந்துச்சு.
ஆள் கடத்தலை சீரியஸா பார்த்திருக்கோம். இதிலே அதையே நகைச்சுவையா ரூட் போட்டு பண்ணிருக்கார் நலன் குமரசாமி. 
விஜய் சேதுபதி வேலையில்லாத மூன்று  நண்பர்களுடன்  சேர்ந்து 
ஆள் கடத்தி பணம்சம்பாதிக்கிறார்.மந்திரியின் மகனை கடத்தும் போது 
வரும்   சுவாரசிய கலாட்டாக்கள் தான் கதை.விஜய் சேதுபதி கடத்தப்பட்ட பெண்ணின் தந்தையிடம் பணம் வாங்கி கொண்டு நடந்து வரும் இடம் , எம்.எஸ்.பாஸ்கர் மனைவி கணவன் அடிப்பதை கண்டு பயந்து அலறுவது போல் நடித்து, உள்ளே வந்து கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு இம்சை நீ சாப்பாடை  போடு என்று சாதாரணமாக  சொல்லும் இடம்.  என்று படம் நெடுக நாம் ரசிக்க காட்சிகள் இருக்கிறது. அதே போல் வசனமும் அங்கங்கே பளீரிட்டு நம்மை சிரிக்க வைக்கிறது ."டெய்லி 18 டி குடிக்கிறவனை கடத்த பிளான்  தேவையில்லை ஒரு டீ கடை போட்டா போதும்"  இது ஒரு சாம்பிள் ஹீரோயின் இருக்கு ஆனால் இல்லை என்பது போல் செய்திருக்கும் இயக்குனரின் புத்திசாலிதனம் பளிச்சிடுகிறது.  சந்தோஷ் நாராயண் இசையில் துட்டு மணி..... பாடல் பார்க்கும் போது  நமக்கே ஆடலாம் போல தோணுது. மந்திரி மகன் கடத்தலை எப்படி போலீஸ் கண்டு பிடிக்கவில்லை.

தவறுகளை நியாயபடுத்தும் விதமான கதை இதெல்லாம் மைனஸ் 
என்றாலும் அதையெல்லாம்  தூர வைத்து விட்டு நம்மை ரசிக்க வைத்திருக்கிறது, ஒவ்வொரு காட்சியையும் கேரக்டரையும் கவனம் 
எடுத்து செய்திருக்கும் இயக்குனரின் சாமர்த்தியம்.
(மனசை அள்ளும்  இந்த சூது கவ்வும் )  
எதிர் நீச்சல்

 ஹீரோ  பெற்றோர் வைத்த பெயரை   மாற்றி கொண்டு புது பேரில் வெற்றி பெற ஆசைப்பட்டு வெற்றி பெற்று மீண்டும் தன் பெற்றோர் வைத்த பெயரால் அழைக்கபடுவதை விரும்புவதே கதை. ஹீரோ  சிவ கார்த்திகேயன் தன் பெயரால் அவர் படும்  அவஸ்தை காதல் லட்சியம் என்று அவரது கேரக்டரை ரசிக்க முடிகிறது.பிரியா ஆனந்த் பள்ளி ஆசிரியையாக புடவையிலும்  சுடிதாரிலும்  பார்க்கும் போது மனசை அள்ளுகிறார். இடைவேளைக்கு பின் கதை வேறு உலகத்தில் பயணிப்பதால் முதல் பாதியின் டெம்போ குறைந்தார் போல் ஆகி விடுகிறது. விளையாட்டு வீராங்கனை நந்திதாவுக்காக பழி வாங்க புறப்பட்ட மாதிரி இருக்கிறது 

இதற்கு பதில் இப்படி செய்திருக்கலாம். படம் ஆரம்பிக்கும் போது சிவ கார்த்திகேயன் நந்திதா  விடம்   பயிற்சி பெற வர,  அவர் எதற்காக நீ பயிற்சி பெறுகிறாய் என்று கேட்க சிவா என் புது பெயரில் அறியப்பட ஆசைபடுகிறேன் என்று சொல்ல பெற்றோர் வச்ச பெயர்லயே என்னாலே விண் பண்ண முடியல நீ அப்பா அம்மா வைக்காத புது பெயர் மாற்றி என்ன சாதிக்க 
போறே என்று சொல்லி தன் கதையை அவர் சொல்ல பின்பு சிவா 
தன் கதையை சொல்வதாக அமைத்து பின் ஜெயிக்கும் கட்சிகளை வைத்திருக்கலாம். பாடல்களில் அனிருத்தின் இசையில் , பூமி என்னை சுத்துதே பாடல் நம் காதுகளை சுற்றுகிறது.தனுஷ் வரும் பாடல் வாழை இலை போட்டு பரிமாறிய சைவ சாப்பாட்டில் முட்டை ஆம்லேட் வைத்ததை போன்று தோன்றுகிறது.பள்ளி கூட காட்சிகள்,மாரத்தான் பயிற்சி காட்சிகள்,  நண்பர் கல்யாணத்தில்  நடக்கும் கலாட்டா , ஹீரோவின் நண்பராக வரும் சதீஷ் அடிக்கும் வசனங்கள் என்று படம் முழுவதும் நம்மை ஈர்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் துரை  செந்தில்குமார் 
(சுவாரஸ்ய நீச்சல்)

------


சரிதாயணம் வலைபதிவர் நண்பர்  பால கணேஷ் அவர்கள்,  தனது மின்னல் வரிகள் தளத்தில் எழுதி  புத்தகமாக  வெளியிட்ட சரிதாயணம் நூல் படித்தேன். 
எனக்கு  நகைச்சுவையாக எல்லாம் எழுத வராது.ஆனால் நகைச்சுவையாக எழுதப்படும் கதைகளை  விரும்பி படிப்பேன். அந்த வகையில் நான் 
விரும்பி படிப்பது பால கணேஷ் எழுத்துக்களை.   இந்த  புத்தகத்தில் 
வரிகளின் இடையிடையே மின்னலாய் வெளிப்படும் நகைச்சுவை  நம் முகத்தில் புன்னகையை பளீரிட வைக்கிறது. 

அகலவாக்கில் வளர மறந்து நீளவாக்கில் வளர்ந்திருந்த  அந்த பெண் நீளவாக்கில் வளர மறந்து அகலவாக்கில் வளர்ந்திருந்த சரிதாவை ஏக்கமாக பார்த்து பார்த்து பெருமூச்சு   விட்டாள்,  சரிதா   குறைவு குறைவு  என்று (அதாங்க லோ லோன்னு ) அலறினாள்,     நான் பொறுமை இழந்து கடுங்கோபம் கொண்டதன் விளைவு முன் மண்டை வீங்கி விட்டது அவளுக்கல்ல எனக்கு சுவரில் மடல் மடேலென்று முட்டி கொண்டால் பின் என்னாகும். 

இப்படி நெடுக வரும் நகைச்சுவையுடன், ஹோட்டல் லில் சரிதாவுடன் சாப்பிட செல்வது, கார் ஓட்ட கற்று கொள்வது, செந்தமிழ் கற்று கொள்வது, நண்பன் குடும்ப வாண்டுகளால் வீட்டில் படும் அவஸ்தை  பகுதிகளை விரும்பி ரசித்தேன். எழுத்தாளர் திரு பட்டுகோட்டை பிரபாகர்  மதிப்புரையில்
வெளி வந்திருக்கிறது இந்த புத்தகம்.  பால கணேஷ் சார் ஒரு கண்டிப்பான வேண்டுகோள் .(சரிதாயணம் தொடர்ந்து எழுதியாகணும்)

------

எனது நண்பரின் நண்பர் ( நமக்கும் நண்பர் தானே)  திரு. ராம் கிருஷ்ணா கடலூரில் வசிக்கிறார். அவர் எடுத்திருக்கும் குறும் படம்  காண நேர்ந்தது. தொழில் நுட்ப வசதிகள் குறைவாய் இருந்த போதும் படம் எடுத்திருக்கும் 
அந்த குழுவினரின்  முயற்சியை  போன் செய்து பாராட்டினேன்.  அதற்கு 
அவர் அடைந்த  சந்தோஷம்  பார்த்து எனக்கே ஆச்சரியமாகி விட்டது.
அவரது கண் மற்றும்  சட்டம் தன் கடமையை செய்யும் குறும் படங்களை 
இங்கே பகிர்ந்திருக்கிறேன். ஸ்டோரி லைன், சீன்கள், மற்றும் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் ப்ரெசென்ட் பண்ணிய விதத்தில் இன்னும் கொஞ்சம் மெனகெட்டிருக்கலாம். நடிப்பு இன்னும் இயல்பாக இருந்திருக்க வேண்டும்   அதனாலென்ன. குழந்தை நடக்க தொடங்கிய புதிதில் தத்தக்க புத்தக்க என்று நடந்தாலும் அதுவே  அழகு தானே. நண்பர்களே நீங்கள் பார்த்து அவரை ஊக்கபடுத்துங்கள்.(வாழ்த்துக்கள் ராம் கிருஷ்ணா)


சட்டம் தன் கடமையை செய்யும்கண்


------

  சென்ற வார குமுதத்தில் கோவை மாநகர கமிஷனர் 
திரு.ஏ.கே.விஸ்வநாதன் பற்றிய செய்தி படித்தேன். அதை இங்கே குறிப்பிடுகிறேன். காவல் துறையை சேர்ந்த ஒரு சாதாரண காவலர் குடிபோதையில் சிக்னலுக்காக காத்திருந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட, அந்த செய்தி பரபரப்பானது. விசாரிக்கிறோம் கமிசன் அமைக்கிறோம் என்றெல்லாம் சொல்லாமல், அந்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று தன் துறை சார்ந்த ஒருவரின் செயலுக்கு வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார் கமிஷனர். மேலும் சமீபத்தில் கோவையில் நடந்த தீ விபத்தில் துணிச்சலாக செயல்பட்டு பலரது உயிரை காப்பாற்றிய இளைனர்களை போலீசார் சார்பில் முதலில் அழைத்து கௌரவித்துள்ளார். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், எங்கே எது நடந்தாலும் பாராட்டுவதும் உற்சாகபடுத்துவது   காவல் துறையின் கடமை என்கிறார்.   காவல் துறை என்றாலே ஒரு பயம் தோன்றுவது இயற்கை. அதை போக்கும் விதத்தில் செயலாற்றும் கமிஷனர்  காவல் துறை உங்கள் நண்பன் என்ற  வார்த்தைகளுக்கு தனி அர்த்தம்  தருகிறார் 
( கிரேட் சலுட் சார்)

------

செய்திகள் சில வரிகளில்

நடிகை ஹன்சிகா 22 குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு தேவையான அணைத்து செலவுகளையும் அவரே ஏற்றிருக்கிறார்.

நல்ல மனம் வாழ்க  நாடு போற்ற வாழ்க  

விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணையும் புதுப்படம்

புல்லட் னு பேர் வைப்பாங்களோ

மக்களின் நலன் கருதி எங்கள் போராட்டத்தை கை விடுகிறோம் வாட்டர் கேன்  உற்பத்தியாளர்கள் 

அதே போல் மக்கள் நலனை  கருத்தில் கொண்டு தண்ணீரையும்  
பசுமை தீர்ப்பாயம் சொல்வது போல் தரமாய் தாருங்கள் 


ஒரு மரம் கூட இல்லாத சிறையில் என்னை அடைத்தார்கள் -ராமதாஸ் 

மரங்கள் தள்ளி நின்றனவோ 

  ------

FINAL PUNCH


நீ உடலில் அணியும் உடையை விட மேலானது 
முகத்தில் அணியும் மலர்ச்சி

  
ஆர்.வி.சரவணன் 


புதன், மே 08, 2013

ஆங்கிலமே அருகில் வா....

ஆங்கிலமே அருகில் வா....


(இத்தனை நாளா நம்ம ப்ளாக் ல தொடர்கதை எழுதினதாலே, வேற எதை பத்தியும் 
எழுத முடியல. இதோ ஒரு அனுபவ பதிவு) 


ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் கொடுத்துட்டு போறப்ப இங்கிலீஷை  மட்டும் ஏன் விட்டுட்டு போனாங்க அதையும் எடுத்துட்டு போக வேண்டியது  தானே. இப்படி தான் நான் ஸ்கூல் படிக்கிறப்ப நண்பர்களிடம்  கடுப்படிப்பேன் . தமிழ் மீடியம் படிச்சதாலே இங்கிலீஷ் எனக்கு அவ்வளவா வராது.  நான் இருக்கிற இடத்திலிருந்து  ஒரு அஞ்சு கிலோ  மீட்டர் தூரம் வரைக்கும் எனக்கும் அதுக்கும் DISTANSE  உண்டுன்னா பார்த்துக்கங்க. ENGLISH  பாடத்துல மார்க் கம்மியா  இருக்கிறதை பார்த்து ஏன் உனக்கு இங்க்லீஷ் வரலே னு  வீட்டில் என்னை அடி பின்னிடுவாங்க நான் தான் வராதுங்கிறேன்ல  அதை ஏன் வர வச்சி பார்க்கணும் னு ஆசைபடறீங்க னு நான் புலம்பாத குறை தான் 

ஆங்கில பாடத்தில் ESSAY  எப்படி படிப்பேன் தெரியுமா. அதில் உள்ள   மீனிங் சுத்தமா புரியாம அப்படியே மனப்பாடம் பண்ணுவேன் . முதல் வரி ஆரம்பிச்சா கடைசி வரி வரைக்கும் சொல்ற மாதிரி நெட்டுரு போடுவேன்.நடுவிலே ஏதோ தடங்கல் வந்துச்சின்னா மறுபடியும் முதல்லேருந்தா கதை தான். காலேஜ் லே நான் அரியர்ஸ் வச்சது  கூட ஆங்கிலத்தில் தான்.   இப்படியே போயிட்டிருக்குமா வாழ்க்கை. படிப்பு முடிஞ்சு நான் சென்னை வந்தப்ப தான் தெரிஞ்சுது   ஆங்கிலத்தின்  சக்தி என்னனு 

வேலைக்கு செல்லும் இடங்களில் அப்ளிகேசன் கேட்கும் போது நான் ஏற்கனவே தயாராய் வைத்திருக்கும் மாடல் பார்த்து அப்படியே எழுதி கொடுப்பேன். ஒரு இடத்தில   டேபிள்க்கு கீழே வச்சி நான் எழுதி கொடுத்ததை அங்கிருந்த லேடி ரிசெப்சனிஸ்ட்  பார்த்துட்டு,  நான் வேலையில்  சேர்ந்த பின்னாடி என் கிட்டே சொல்லி கேலி  பண்ணாங்க 

ஒரு இடத்தில APPLICATION கேட்கிறப்ப நான் அது மாதிரி எழுதலாம்னு நினைச்சா மாடல் பேப்பர் வெளியிலே எடுக்க முடியலை.  காரணம் அந்த  கம்பெனி யின் முதலாளி என் எதிரிலேயே அமர்ந்திருந்து  எழுதி கொடு னு  சொன்னார். எப்படி காப்பி அடிச்சு எழுத முடியும்.  SO நான்  சொந்தமா எழுதி கொடுத்தேன்.அதை பார்த்துட்டு அவர் நீ இங்க்லீஷ் லே ரொம்ப வீக் போலிருக்கே  என்றார். ஆமாம்  சார் என்றேன் பரிதாபமாய் . FIRST IMPRESSION IS A BEST IMPRESSION னு  சொல்வாங்க முதல் சந்திப்பிலேயே என் ஆங்கிலம் பற்றி அவருக்கு தெரிந்து விட்டதால் அதற்கு பிறகு நான் என்ன தான் வேலைகளில் சுறுசுறுப்பு காட்டி வேலை செய்து வெற்றி பெற்றாலும் மற்றவர்களை விட எல்லா விதத்திலும் நான்    முன்னணியில் இருந்தாலும் அதெல்லாம் பெரிய விசயமாகவே தோன்றவில்லை முதலாளிக்கு 

 நான் ஆங்கில பேப்பரில்  எனக்கு பிடித்த சினிமா நியூஸ் அதிகமாக படிப்பேன். தொடர்ந்து படித்ததால் கொஞ்சம் நல்ல ரிசல்ட் கிடைத்தது. அதாவது வருகின்ற லெட்டர் படித்து புரிந்து கொள்ளவும் ஆங்கிலத்தில்  பேசுபவர்கள் சொல்வதை  புரிந்து கொள்ளவும் முடிந்தது.இப்போது வேலை  பார்க்கும் நிறுவனத்தில் நான் ஒரு DEPARTMENT ஹெட் அதற்கு தேவையான லெட்டர்ஸ் ரெடி செய்ய நான் லெட்டர் அடிப்பவருக்கு  தமிழில் டிக்டேட் செய்வேன் அவர் அடித்து தருவதில் இந்த இடத்தில பொருள் சரியாக வரவில்லை இன்னும் சரியாக வர  வேண்டும் என்று திருத்தும் அளவுக்கு புலமை வந்து விட்டது
(இப்போது இடைவெளி  மூன்று கிலோ மீட்டர் ) 

இருந்தும் ஆங்கிலத்தில் பேச வேண்டுமென்றால்  நான் அடுத்தவரை நாடும் அளவுக்கு தான் இருக்கிறது   நிலைமை. ஆங்கிலம் மட்டுமே தெரிந்த நபர் என்னுடன் போனில் உரையாடும் போது அவர் கூறுவதை கேட்டு விட்டு நான் அதற்கு பதிலை என் உதவியாளருக்கு அல்லது  சக ஊழியருக்கு தமிழில் சொல்வேன். அவர் அதை ஆங்கிலத்தில்  போனில் மொழி பெயர்ப்பார் இப்படி தான் பொழுது சென்று கொண்டிருக்கிறது(இடைவெளி இரண்டு கிலோ மீட்டர் )


உனது கற்பனை திறனுக்கு ஆங்கிலத்தில் நீ CORRESPONDANCE லெட்டர்ஸ்  சூப்பரா  ரெடி பண்ணலாம் என்று ஊக்கமளிக்கிறார்கள் அலுவலக நண்பர்கள் எல்லாரும் .அப்படி நான் முயற்சித்து ஆங்கிலத்தில் புலமை பெற்றால் கண்டிப்பாக என்னால் கூடுதலாக சம்பளம்  கேட்டு  பெற  முடியும் 

இருந்தும் என்ன செய்ய , இங்கிலீஷ் பேப்பரை வைத்து கொண்டு படிக்க ஆரம்பித்தால் நாலு வார்த்தைக்கு மேல் கடினமான வரிகள் வரும் போது நான் டிக்சனரி கையில் எடுப்பதற்கு பதிலாக சலிப்பை கையில் எடுத்து கொண்டு பேப்பரை தள்ளி வைத்து விடுகிறேன் 


பல இடங்களில் ஆங்கிலம் தெரியாமல்  நான் விழித்ததுண்டு. இருந்தாலும் ஆரம்பத்திலேயே சொல்லி விடுவேன் எனக்கு ஆங்கிலம் வராது என்று இதற்காக வேட்கபடுவதில்லை.(தெரியாததை தெரியும் னு சொல்றதுக்கு தானே வெட்கப்படணும்.) அலுவலக வேலையாக  டெல்லி பாம்பே என்று பல இடங்களுக்கு   செல்லும் போதும் விமானத்தில் சென்ற போதும் ஆங்கிலம் தெரியாமல் நான் பட்ட பாடு இங்க்லீஷ் விங்க்ளிஷ் ஸ்ரீதேவி போல் தான் 

   
வீட்டில்,  நீங்க முயற்சி செய்தால் நல்லா பேச முடியும். ஆனால் நீங்க  அக்கறை எடுக்க மாட்டேங்கறீங்க என்று சொல்கிறார்கள். எனக்கு கூட ஆங்கிலம்  மிக  அருகில்  இருப்பதாக ஒரு பீலிங்  இருந்து கொண்டிருந்தாலும், பேசவோ எழுதவோ இன்னும் தயங்கி கொண்டு தானிருக்கிறேன் 
   
FINAL PUNCH 

செல் போன் க்கு ரீசார்ஜ் பண்ணுவோமே. அது போல் ஆங்கிலத்தை அப்படியே 
மூளைக்குள் சார்ஜ் பண்ற மாதிரி எதுனா இருக்கா சொல்லுங்களேன் 

ஆர்.வி.சரவணன்

(பதிவில் இங்கிலீஷ் விங்க்ளிஷ் படம் பற்றி ரெண்டு வார்த்தை சொன்னதால்   
அந்த படம் போட்டிருக்கேன்)  


ஞாயிறு, மே 05, 2013

இளமை எழுதும் கவிதை நீ-30


இளமை எழுதும் கவிதை நீ-30

உன் வெற்றியை நானும் என் வெற்றியை நீயும் கொண்டாடியது போதும் 
வா நம் வெற்றியை உலகம்  கொண்டாடட்டும் 


ராஜேஷ்குமாருக்கு சொந்தமான கிருஷ்ணா மருத்துவமனை, அந்த அதிகாலை வேலையிலும் சுறுசுறுப்பாய் பதற்றம் தொற்றிய படி இருந்தது. மருத்துவமனையின் உள்ளே ஆட்கள் பரபரப்பாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்க  சிவா அம்மா காயத்ரி கத்தி கொண்டிருந்தார்

"ஒழுங்கா இருந்த என் பிள்ளையை ஒழுங்கு படுத்தறேன் னு வீட்டை
விட்டு    வெளில அனுப்பிச்சு இப்படி சீரழிச்சுகொண்டாந்து  ஆஸ்பத்திரியில் போட்டுட்டீங்க.  இப்ப உங்களுக்கு திருப்தி தானே .  நம்ம குடும்பத்துக்கு நேர்மை நாணயம்  மட்டும் இருந்தா போதும். குழந்தைங்க எல்லாம்
தேவையா என்ன. கோடி கோடியா ஏமாத்தி சம்பாதிச்சு குடும்பத்தோட சௌக்கியமா இருக்கிறவங்களை பார்த்து சந்தோசபட்டுக்குவோம் "

ராஜேஷ்குமார் இதற்கு மௌனமே பதிலாய் அமர்ந்திருக்க, சிவகுமார் அதட்டினார்
அவன் வலது கை விரல்கள் மெதுவாக அருகே நின்று பெட்டில் வைத்திருந்த  உமாவின் கை விரல்களை ஆசையுடன் பற்றி கொண்டது. சிவாவின் விரல்கள் தந்த அழுத்தத்திற்கு, உமா  தந்த பதில் அழுத்தம் அவர்களின் அழுத்தமான காதலை அங்கிருந்தோருக்கு உணர்த்தின.

நிறைந்தது


ஓவியம் : மணியம் செல்வன் (ஆனந்தவிகடன் )

                                                          ******


நான் பதிமூன்று வயதில் முதலில் சிறு கதை எழுதிய போது அதை 
பாராட்டி எல்லோரிடமும் சொல்லி பெருமைப்பட்ட என் தாத்தா 
திரு .முத்து கிருஷ்ணன் அவர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம் 

                                                         ******                                                         

முடிவுரை 

என்னுள் இருபத்தைந்து வருடங்களாக இருந்த இந்த கதையை  எழுத்துக்களில் பார்க்கும் பரவசம் எனக்கு கிடைத்திருக்கிறது.

அதற்கு ஊக்கம் தந்த என் அலுவலக நண்பர்களுக்கும், கண்டிப்பாக எழுதுங்கள் என்று சொல்லி  இதோ இந்த அத்தியாயம் வரை ஊக்கபடுத்திய வலைபதிவர் நண்பர் (கரை சேரா அலை) அரசன், அடுத்த அத்தியாயம் எப்போது என்று போனிலும் கருத்துரையிலும் கேட்டு உற்சாகபடுத்திய ( நிசாம் பக்கம் பல்சுவை பக்கம்) நிசாமுதீன் , தன் கருத்துக்களால் எனை அடுத்த அத்தியாயம் நோக்கி செல்ல வைத்த நண்பர் (கிரி ப்ளாக்) கிரி,மற்றும் (திடங்கொண்டு போராடு ) சீனு,  பாலா பக்கங்கள் பாலா,மனசு குமார்,   படங்கள் வரைந்து தந்த,படித்து வந்த இணைய தோழிகள் மற்ற ஏனைய நண்பர்கள்  அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றி 

எப்போதும் நான் முணுமுணுக்கும் ஒரு பாடலின் வரிகள் இங்கே 

நன்றி மறவாத நல்ல மனம் போதும் 
என்றும் அதுவே என் மூலதனமாகும் 

ஆர்.வி.சரவணன்