சனி, டிசம்பர் 10, 2016

யதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை


யதார்த்தம்
(ஒரு பக்கக் கதை)

"படப்பிடிப்பில் விபத்து. பிரபல ஹீரோ சதீஷ் காயம்" என்ற தலைப்பு செய்தியை  கலா படிக்கவும், கட்டிலில் படுத்திருந்த அவள் கணவன் அசோக் செய்தியை அறிந்து கொள்ளும் ஆவலுடன்  அவள் முகத்தைதிரும்பி  பார்த்தான். மேலே படி  என்பது போல்.


"தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவான இளம் புயல் சதீஷ் நடித்து கொண்டிருந்த புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பிரபல ஸ்டுடியோ ஒன்றில் நடந்து கொண்டிருந்தது. காட்சிப் படி ஹீரோ மாடியிலிருந்து கீழே இருக்கும் ஸ்டன்ட் நடிகர் மீது குதிக்க வேண்டும். அப்படி குதித்ததில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரால் எழுந்திருக்க முடியாமல் போகவே பட யூனிட் அவரை அவசரமாக அருகிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள்டாக்டரகள் குழு  அவரை குணப்படுத்தும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது


அவர் விரைவில் குணமாக வேண்டி முன்னணி நட்சத்திரங்களும் அரசியல் பிரமுகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.அவரது ரசிகர்களும் தங்கள் அபிமான நடிகர்  உடல் நலம் பெற வேண்டி கோவில்களில் பிரார்த்தனைகளும் அன்னதானமும் செய்து வருகிறார்கள். சதீஷ் விழுந்த இடம் கீழே உள்ள படத்தில் அம்பு குறியிட்டு காட்டப்பட்டுள்ளது."


செய்தியை படித்து முடித்த கலா பேப்பரை அருகிலிருந்த டீப்பாயின் மேல் சலிப்புடன் போட்ட படி,  "உங்களை பற்றி ஒரு வார்த்தை கூட எழுதலை பாருங்க  " என்றாள் கலங்கிய கண்களுடன்.

ஹீரோ சதீஷ் தன் மீது விழுந்ததால், இடுப்பு எலும்பு முறிந்து போய்  ரத்த காயங்களுடன் மனைவியின் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் அரசாங்க மருத்துவமனைகட்டிலில் படுத்திருந்தான் ஸ்டண்ட் கலைஞன் அசோக்.


ஆர்.வி.சரவணன் 

குமுதம் (03-08-2016) வார  இதழில் வெளியான எனது ஒரு பக்க சிறுகதை யதார்த்தம். 
குமுதம் ஆசிரியர் குழுவிற்கு என் நன்றி.வெள்ளி, டிசம்பர் 02, 2016

வா, காதல் செய்வோம்-4

வா, காதல் செய்வோம்-4

னோவிடம் சொன்னது போலவே மறுநாள் பத்மினி பாட்டி வீட்டிற்கு வந்து விட்டார். அவர் வரப் போகிறார் என்றவுடனே அந்த பங்களா அவசர அவசரமாக தன்னை நேர்த்தியாக வைத்து கொள்ள ரொம்பவே பாடுபட்டது. ஒரு வி.ஐ.பி வருகையை எதிர்பார்த்திருப்பது போன்ற பரபரப்பு அங்கிருந்தது. வாசலில் நின்ற செக்யூரிட்டி நொடிக்கொரு முறை தெரு முனையை பார்த்தவாறிருத்தான். வேலைக்காரர்கள் அனைவரும் இது வரை மனோ அவ்வளவாக தங்களை கண்டு கொள்ளாததால் தங்கள் இஷ்டப்பட்ட படி பணியாற்றி கொண்டிருந்தவர்களுக்கு  பாட்டி வருவது தொந்தரவாகவே இருந்தது. இருப்பினும் ஓரிருவர் விசுவாசமாகவே அவரை எதிர் பார்த்திருந்தார்கள். அவர்களுக்கு பாட்டி வருவது ஏகப்பட்ட மகிழ்ச்சியை அளித்திருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கார் காம்பவுண்டிற்குள் நுழைந்து போர்டிகோவில் வந்து நின்றது. செக்யூரிட்டி ஓடி வந்து கதவை திறக்க பாட்டி காரை விட்டு இறங்கினார்.

"ஏன்பா இவ்வளவு வேகமாக ஓடி வரே. விழுந்து கிழுந்து வச்சீன்னா உடல் உபாதையோட பணமுமில்ல செலவாகும். மரியாதையெல்லாம் மனசோடு இருக்கணும். என் கிட்டே அதை காண்பிச்சிட்டே இருக்க கூடாது" என்ற படி  மாட்டியிருந்த கண்ணாடியை எடுத்து துடைத்து மீண்டும் மாட்டி கொண்டே சொன்னார்.
செக்யூரிட்டி தலையாட்ட, வேலையாட்கள் வந்து வாங்கம்மா என்று வணங்கி டிக்கியிலிருக்கும் பொருட்களை எடுக்க முற்பட்டனர்.

சுற்றிலும் ஒரு முறை பார்த்தவர் 

"இந்த செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊத்தறதே கிடையாதா?" என்றார் 

"இல்லம்மா காலையிலே தண்ணீர் விட்டேனே" தோட்டக்காரன் சொன்னான் 

" தண்ணீர் விட்டு ரொம்ப நாளான  மாதிரி இருக்கேடா "

அவரது கேள்விக்கு பதில் சொல்லாது மௌனமாய் நின்றான் அவன்.

"மனோவை விட்டு வெளுக்கிறதுல  நீங்க எல்லாரும்  கதற போறீங்க பாருங்க "
என்ற படி வீட்டுக்குள் நுழைந்தார்.

 "எங்கே மனோ ?"
"தூங்கறார்"

தன் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தார்.
"மணி ஒன்பதாக போகுது. இன்னுமா தூங்கறான்" விருட்டென்று மாடிப்படி  ஏறி அவர் வேகமாக செல்வதை பார்த்த புது வேலையாள் தன் சகாவிடம் காது கடித்தான்.
"ஏண்டா இதுக்கு வயசு அறுபதா இருபதா  "

உஸ் என்று சகா எச்சரித்த வினாடியும், பத்மினி  பாட்டி மாடியிலிருந்து திரும்பி இவர்களை பார்த்த நொடியும் ஒன்றாகவே இருந்தது. 

"அங்க என்ன வெட்டி பேச்சு " என்றாள் பாட்டி கடுகடுப்பாக.
இதை எதிர்பாராத அந்த வேலையாட்கள் வெலவெலத்து நகர்ந்தார்கள்.

இப்படி எதிர்பாராத அதிர்ச்சி தந்த பாட்டிக்கும் ஒரு அதிர்ச்சி பெட்ரூமில் காத்திருந்தது.
அங்கே கட்டிலில் மனோ படுத்திருந்தான் என்பதை விட  அஷ்ட கோணலில் பரவியிருந்தான் என்று சொல்லலாம். கட்டிலுக்கு பக்கத்தில்  டீப்பாயில் இருந்த மது பாட்டில்கள் டம்ளர் மற்றும் பிளேட்டுகள் அவரது  கோபத்தை  அதிகரித்தன. 
சேரை இழுத்து போட்டு கட்டிலருகே அமர்ந்த பாட்டி அவன் தோளில் அடித்தார். காற்றில் கலந்திருந்த மது வாசம் வேறு அவரை டென்ஷனாக்கியது.

"டேய் மனோ" என்றார் அதிகாரமாக

"பாட்டி கனவுலயுமா இப்படி வந்து அதட்டுவே" என்ற படி திரும்பி படுத்து கொண்டான்.
"டேய் நிஜமா தான்டா அதட்டறேன்" இந்த வார்த்தை கேட்ட மாத்திரத்தில் மனோ விருட்டென்று எழுந்து அமர்ந்தான்.
கண்களை கசக்கியவாறே   "பாட்டி" என்றான். அதிர்ச்சியாய்
பாட்டியின் கண்ணாடியையும் மீறி அவர் கண்களில் இருந்த அனல் அவனை தகிக்க வைத்தது. 

"எப்ப வந்தீங்க"

"வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்திருக்கேன்"

"சொல்லிருந்தா நான் ஏர்போர்ட் வந்திருப்பேனே"

"சொல்லாமல் வந்ததால தானே உன்னை பத்தி தெரிஞ்சிக்க முடியுது"

"என்னை பத்தி என்ன தெரிஞ்சுகிட்டீங்க?"

"இரவினல் ஆட்டம் பகலினில் தூக்கம். இது தான் உனது உலகம்"  பாடிய படி எழுந்தார்.
மனோ நாக்கை கடித்து கொண்ட படி டீப்பாயை பார்த்தான். இந்த வேலைக்காரனுங்களுக்கு அறிவே கிடையாது என்று முணுமுணுத்தான்.


"தண்ணி எல்லாம் அடிக்க ஆரம்பிச்சிட்டே போலிருக்கு" என்றார் பிளவர் வாஷில் இருந்த பழைய பூக்களை எடுத்து கொண்டே  

"பாட்டி இதெல்லாம் டீ குடிக்கிற மாதிரி சாதாரணம் ஆகிடுச்சு. இதுக்கெல்லாம் கொஸ்டீன் பண்ணாதீங்க " என்றான் சிடுசிடுப்பாய் 
இதற்கு பாட்டி பதில் சொல்லவில்லை. அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவர் 
உடனே அங்கிருந்து வெளியேறினார்.

 "நமக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ விடாம இது ஒரு டார்ச்சர்" என்று கடுகடுத்து கொண்டே பாத்ரூமிற்குள் துழைந்தான்.
அலுவலகத்துக்கு ரெடியாகி கீழே வந்து டைனிங் டேபிளில் அமர்ந்த போது எதிரே பாட்டி புத்தகம் படித்து கொண்டிருந்தார்.
அவன் வந்தமர்ந்ததை கடைக்கண்ணால் கவனித்தவர் பணியாளை அழைத்தார்.
வந்து நின்ற பெண்ணிடம் 

"இனி நம்ம வீட்ல காபி டீக்கு பதிலா விஸ்கி பிராந்தி  தான். பிடிச்சவங்க குடிங்க. பிடிக்காதவங்க குடிக்கிறவங்களை வேடிக்கை பாருங்க."
என்றதும் அந்த பெண் விழித்தாள்.

"பாட்டி குத்தி காட்டறீங்களா?"
"குத்தி காட்டினா உனக்கு உறைக்குமா?"
அவன் வேகமாய் எழுந்து "நான் ஆபீஸ் போறேன்" என்ற படி வெளியேறினான்.


"ஆபீஸ் டைம் 9 மணி. ஆனா நீ பத்து மணிக்கு வேலைக்கு போறே.முதலாளினா என்ன கொம்பா முளைச்சிருக்கு. நீயும் அங்க வேலையாள் மாதிரி தான். அவங்க சம்பளம் வாங்கறாங்க. நீ சொத்தை அனுபவிக்கிறே தட்ஸ்ஆல்" அவன் கோபத்துக்கு அசராமல் சொன்னார்.

அவன் கோபமாக காரின் அருகில் செல்ல டிரைவர் கதவை திறந்தான்.உள்ளே அமர போனவனை போர்டிகோ வரை வந்த பாட்டி கை தட்டி அழைத்தார். திரும்பி பார்த்தான்.

"நைட் ஆபீஸ் முடிஞ்சவுடன் நேரா வீட்டுக்கு வரணும். நாம ரெண்டு பேரும் ஒரு கதாகாலட்சேபத்துக்கு போக வேண்டியிருக்கு" என்றார்.
கதவை அவன் அடித்து சாத்தியதில் அவன் உச்ச கட்ட கோபம் தெரிந்தது. பாட்டி 
"என் கோபம. அப்படியே இருக்கு" என்று புன்னகைத்தவர்  திரும்பி பங்களாவை பார்த்தார்.
இவ்வளவு சொத்தையும்  பத்திரமா பாதுகாத்து அவனுக்கு வர போற பொண்டாட்டி கிட்ட ஒப்படைக்கணும். இங்க உட்கார்ந்து ராஜ்ஜியம் பண்ண போறவ எங்க இருக்காளோ ? என்ன பண்றாளோ ? எப்ப வருவாளோ ? என்று பெறுமூச்செறிந்தார். 


------

ந்தினி அதே நேரத்தில்  தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் கம்பெனி  எம்டி க்கு முன்பாக நின்று கொண்டிருந்தாள். யாரிடமோ போனில் பேசி விட்டு நிமிரந்தவர் அவளிடம் 
"என்னம்மா என்னென்னவோ கேள்விப்படறேனே அதெல்லாம்  நிஜமா? " என்றார்.

என்ன பதில் சொல்வது இதை இவர் எப்படி எடுத்து கொள்வார்னு தெரியாதே என்று அவள் யோசிக்க ஆரம்பிக்க, அவரே தொடர்ந்தார்.
" ஏதோ பிரச்னையாம் . கோர்ட்ல சாட்சி சொல்ல போறியாம். போலீஸ் வந்து உன்னை அப்பப்ப விசாரிச்சிட்டு போகுதாம் "


"எங்க தெரு பொண்ணு சார் அது . கஷ்டப்படற பேமிலி . ஒருத்தன் லவ் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணி சம்மதிக்கலனு தெரிஞ்சவுடன் கத்தியால குத்திட்டான். அதை பார்த்த அந்த பெண்ணை காப்பாற்றிய நேரடி சாட்சி நான். அதான்.... என்று அவள் சொல்லி கொண்டிருக்க அவர் கையமர்த்தினார் .


"இது கம்பெனிம்மா. சோசியல் சர்வீஸ் பண்ற இடம் இல்லே :
"சார் சோசியல் சர்வீஸ்ங்கிறது சில பேருக்கு மட்டும்னு கிடையாது.
எல்லோருக்குமானது.ஒரு மனித நேயம் தானே சார்.

"நாளைக்கு நீ வேலை பார்க்கிறவங்களுக்கு அது கொடுக்கல இது கொடுக்கலன்னு கொடி பிடிக்க ஆரம்பிச்சா என்னாறது. இன்னையோட அதெல்லாம் நிறுத்திடு. உங்க அப்பா இந்த கம்பெனில வேலை பார்த்தவர். அவரோட பொண்ணு நீ. ஒரு தகப்பனா  தான் உன் கிட்டே 
பேசிட்டிருக்கேன் "

நந்தினி அவரையே  பார்த்தாள் 

என்னாலே முடிஞ்ச அட்வைஸ் என்னன்னா, அடுத்தவங்க பிரச்னைக்கு போய் நிக்காமே அதை கண்டும் காணாத மாதிரி இருந்துடணும் "
"என்னாலே அது முடியாது சார்" கெஞ்சலாகவே பதில் சொன்னாள் 

"அப்ப இந்த கம்பெனில நீ வேலை பார்க்கவும் முடியாதும்மா"


"ஓகே சார்" என்ற அவளது வார்த்தைக்கு அதிர்ச்சியாய் நிமிர்ந்தார்.

"நல்ல சம்பளத்திலே நல்ல போஸ்டிங்ல இருக்கே. இதெல்லாத்தையும் ஒரு பொண்ணுக்காக இழக்க போறியா?"
"அந்த பொண்ணுக்கு நடந்தது எனக்கு நடந்திருந்தா சம்பளமா நல்ல வேலையா நல்ல வாழ்க்கையா இது எதுவுமே அனுபவிக்க முடியாத படி போயிருக்கும் சார் "
பதிலுக்கு பதில் கொடுத்து கொண்டிருந்தாலும் மென்மையாகவே பேசினாள்.

"சோ. உன்னோட சோசியல் சர்வீஸ்க்காக நல்ல கம்பெனியோட வேலையை இழந்து நிக்க போறே"

"நம்ம கம்பெனி கூட ஒரு நல்ல ஊழியரை இழக்க போகுதே சார்"
"உன் பிடிவாதம் உனக்கு தான் அவஸ்தையாக போகுது"

"அந்த பெண்ணோட அவஸ்தையை விடவா சார்"

"உன் கிட்டே இருக்கிற இந்த உறுதி பாதிக்கப்பட்டவங்க கிட்டேயும் இருக்கானு கொஞ்சம் செக் பண்ணிக்கம்மா " என்றார் அந்த எம்.டி.

------

"உன்னோட உறுதி எங்க கிட்டே இல்லம்மா. எத்தனையோ பேரு வராங்க. கேள்வி மேல கேள்வியா கேட்டு விசாரணை பண்ணிட்டே இருக்காங்க.எதுக்காக பெரிய இடத்துல மோதறீங்கனு கேட்கறாங்க.  யாருமே கவலைப்படாதீங்க நாங்க இருக்கோம்னு சொல்ல மாட்டேங்குறாங்க. அதோட விட்டா பரவாயில்ல.
ஒரு பையன் கத்தி எடுத்து குத்தறான்னா அந்த அளவுக்கு உங்க பொண்ணு என்ன பண்ணுச்சு? பழகிட்டு ஏமாத்திடுச்சானே கேட்கறாங்க " 

மருத்துவமனையில் அந்த பெண் கல்பனா தூங்கி கொண்டிருக்க அவளது தாய்  நந்தினியின் தோளில் சாய்ந்து அழுதாள்.

"பொண்ணு ஒரு முறை வயித்துல குத்து வாங்கிட்டு ரணமாகி கிடக்கா. வரவங்க எங்களை வார்த்தைகளால் குத்தி தினமும் ரணமாக்கிட்டு போறாங்கம்மா " கல்பனாவின் அப்பா துண்டை வாயில் பொத்திய படி அழுதார் 

"அழறதை சத்தம் போடாம அழுங்க மத்தவங்களுக்கு டிஸ்டர்பா இருக்குல்ல"  நர்ஸ் குரல் எங்கிருந்தோ ஒலித்தது. கோபமாய் திரும்பிய நந்தினியை அந்த அம்மா  தடுத்தாள் கண்களால் வேண்டாம் என்பதாக ஜாடை காட்டினார்.

கல்பனா அசைய ஆரம்பிக்கவே நந்தினி அந்த தாயின் கைகளிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு அவள் அருகில் சென்றாள்.

"எப்படிடா இருக்கே"  என்று அவள் கைகளை பிடித்து கொண்டாள்.

"ரொம்ப வலிக்குதுக்கா." அந்த பெண்ணின் வார்த்தைகளில் கூட வலி இருந்தது.
கூடவே "அழகா இருக்கிறது கூட இங்க தப்பா போயிடிச்சுக்கா "என்றாள்.

தொடரும்.

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் நண்பர் தேவராஜ்