இங்கிலீஷ் விங்கிலீஷ் - ஒரு பார்வை
இந்த படம் நான் சென்றதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இயக்குனரின் முதல் படம் .மிக நன்றாக இருக்கிறது என்று வந்த விமர்சனங்கள். இரண்டு இங்க்லீஷ் (இது மேலே அவ்வளவு ஈடுபாடா னு கேட்காதீங்க இங்கிலீஷ் க்கும் எனக்கும் ரொம்ப நாளாவே வாய்க்கால் தகறாரு இருக்கு அது தனி பதிவுலே பார்த்துக்குவோம் ) மூன்றாவது இந்த பதிவின் கடைசியில் சொல்றேன்
ஒரு இல்லத்தரசி ஆங்கிலம் தெரியாத காரணத்தால் தன் கணவனிடமும் தான் பெற்ற குழந்தைகளிடமும் அவமானப்பட நேர்கிறது. தன் அக்கா மகள் திருமனத்திற்காக அமெரிக்கா செல்லும் அவர் அதை போராடி கற்று கொண்டு எப்படி ஜெயிக்கின்றார் என்பது கதை
கணவன் மற்றும் குழந்தைகளால் மட்டம் தட்டப்படும் ஒரு பெண் எப்படி தன்னை உயர்த்தி கொண்டு என்பதை மிக நேர்த்தியாக வெளிபடுத்திய விதத்திலும் யதார்த்தமாய் சொன்ன விதத்திலும் சபாஷ் பெறுகிறார் அறிமுக இயக்குனர் கௌரி ஷிண்டே
அந்த இல்லத்தரசியாக ஸ்ரீதேவி. வயதாகி விட்டதை முகம் உணத்தினாலும் அதெல்லாம் உறுத்தாத வண்ணம் நம்மை அந்த இல்லத்தரசி கேரக்டரில் பன் முகம் காட்டி நம்மை ஈர்ப்பதுடன் வெல்டன் ஸ்ரீதேவி என்றும் சொல்ல வைக்கிறார்
உதாரணமாக, அவரது பெண் இந்தியாவிலிருந்து போன் செய்து புக் எங்கே வச்சே என்று கடுப்படிக்கும் போது ஆதங்கத்தில், இந்த குழந்தைகளுக்கு அம்மாவை எதிர்த்து பேச யார் உரிமை கொடுத்தது என்று பொருமுவார் அப்போது சர்வர் என்ன சாப்பிடறீங்க என்று கேட்க உடனே ஆங்கிலத்தில் பேசி ஆர்டர் செய்வதும் , லட்டு தட்டு கீழே விழுந்து சிதற எல்லோரும் சமாதானபடுத்த தன் கனவுகள் சிதைந்தது போன்று நொறுங்கி போன முகத்துடன் மௌனமாக சமையலறை சென்று ஒரு வேற்று பார்வையுடன் மீண்டும் லட்டு தயார் செய்வார் பாருங்கள் சூப்பர் இடம் அது .அடுத்து என் பெண்டாட்டி லட்டு செய்யவே பிறந்தவள் என்று சொல்லி விட்டு உன்னை பற்றி புகழ்ந்து சொல்கிறேன் என்று சொல்லும் போது ஸ்ரீதேவி பார்க்கும் பார்வை
என்று அவரது நடிப்புக்கு தீனி போடும் காட்சிகள் இது போல் நிறைய இருக்கின்றன
அவர் விமானத்தில் இமிக்ரேசனில் ஆங்கிலம் தெரியாமல் திண்டாடுவது விழிப்பது இதையெல்லாம் பார்க்கும் போது விமானத்தில் நான் இது போல் திணறியது என் ஞாபகத்துக்கு வந்தது
அவரது கணவராக அதில் ஹுஸைன். அவரை முதல் காட்சியில் பார்க்கும் போது என்ன ஸ்ரீதேவிக்கு பொய் இவரை ஜோடியா செலக்ட் பண்ணிருக்காங்க என்று நான் நினைத்தேன். ஆனால் காட்சிகள் செல்ல செல்ல அவரது இயல்பான நடிப்பை பார்க்கையில் குட் செலக்சன் என்று சொல்ல தோன்றுகிறது
ஸ்ரீதேவி ஆங்கிலம் பயிலும் வகுப்பில் வகுப்பு தோழராக வரும் மேதி கண்களாலேயே ஊடுருவுகிறார். அவரது செல் போனின் மூலம் ஸ்ரீதேவி வகுப்பில் நடைபெறும் பாடத்தை கவனிப்பதாக வரும் சீன டச்சிங் மேலும் ஸ்ரீதேவியின் சக தோழர்கள் வகுப்பறை காட்சிகளை கலகலபாக்குகிறார்கள்
ஸ்ரீ தேவியின் அக்கா பெண்ணாக பிரியா ஆனந்த் ஸ்ரீதேவியின் உணர்வுகளை புரிந்து கொண்டு உதவி செய்யும் அந்த பெண் மீது நமக்கு ப்ரியம் தோன்றுவது இயல்பு தான் என்றாலும் அவரது அழகும் நடிப்பும் இன்னும் அதற்கு துணை புரிகின்றன
ஆங்கிலம் கற்று கொடுக்கும் மாஸ்டர் டேவிட், அவர் கட கட வென்று பேசி கிளாஸ் எடுக்கும் அந்த சுறுசுறுப்பை பார்த்தால் , இப்படிப்பட்ட ஒரு மாஸ்டரிடம் ஆங்கிலத்தை நாளே வாரம் என்ன நாளே நாளில் கூட கற்று கொள்ளலாம் போலிருக்கிறது
கல்யாணத்தில், என் மனைவிக்கு ஆங்கிலம் பேச வராது என்று கணவர் சொல்ல ஸ்ரீ தேவி அவர் கை பிடித்து நான் பேசறேன் என்று சொல்லி எழுந்து தனக்கும் இங்க்லீஷ் தெரியும் என்ற இறுமாப்பில் எல்லாம் பேசாமல் உணர்வுபூர்வமாக மெதுவாக உச்சரித்து அவர் பேசும் ஆங்கிலம் கை தட்டல் பெறும் காட்சி
நறுக்கு தெறித்தார் போன்ற வசனங்கள் கட்சிகளுக்கு இன்னும் வலிமை சேர்க்கின்றன
தன் மனைவி தனியாளாய் நின்று ஆங்கிலம் கற்று கொண்டு விட்டாள் என்று தெரிந்து கொண்ட அவரது கணவரின் ரியாக்சன் எப்படி இருக்குமோ என்ன கேட்பாரோ என்று நாம் ஆர்வமாய் கவனிக்கையில் ஒற்றை வரியில் இன்னும் என்னை நீ விரும்பறியா என்று அவர் கேட்பது ஒரு சாம்பிள்
சில நிமிடங்களே வந்தாலும் அஜித் ஆச்சரியம், வரும் போதே கை தட்டலால் தியேட்டரை
அதிர வைக்கிறார் . ஒரு சக பயணியாக எந்த ஒருபந்தாவுமில்லாமல் சிம்பிளான உடையில் அறிமுகமாகி ஸ்ரீதேவிக்கு ஊக்கம் தந்து என்னை பாருங்க என்னை கூட தான் சொன்னாங்க நான் இப்ப நல்லா பேசறேனா என்று கேட்கும் போது அட ஆமால்ல என்று நாம் சொல்லும் அளவுக்கு படு யதார்த்தம்.
ஒளிப்பதிவு லக்ஷ்மன் ஷிண்டே அமெரிக்கா எப்ப போவோம் என்ற ஏக்கத்தை ஆர்வத்தை நமக்குள் விதைக்கும் கேமரா கோணங்கள்
பாடல்களில் செய்யாத ஸ்கோரை பின்னணி இசையில் அமித்ரி தேவ் செய்திருக்கிறார்
ஸ்ரீதேவி பிரியா ஆனந்த் தவிர மற்ற நடிகர் நடிகைகள் தமிழுக்கு புதுசு என்பதால் மட்டும் டப்பிங் படம் என்ற உணர்வை தருகிறது. ஆனாலும் அவர்கள் அனைவரின் யதார்த்தமான நடிப்பும் இயக்குனரின் நேர்த்தியான உருவாக்கமும் மற்றும் ஸ்ரீதேவி யும் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை தருகிறார்கள்.
இங்க்லீஷ் WIN கிலீஷ்
சரி நான் இந்த படம் பார்க்க சென்றதற்கான மூன்றாவது காரணம் என்ன என்பதை சொல்லி விடுகிறேன் அது ஸ்ரீதேவி
ஆர் .வி.சரவணன்