வியாழன், நவம்பர் 28, 2013

புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-1







புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-1



நான் டூர் சென்று வந்த பின் இதை பற்றி எழுத கொஞ்சம் தயக்கம் இருந்தது. காரணம் 
குறைந்த நாட்களில் ( 4 நாட்களில் ) பல தலங்களுக்கு சென்று வந்ததால் நிதானிக்க நேரம் இருந்தாலும் சென்ற இடங்கள் பற்றி அதிகமாக  தகவல்கள் பெற முடியவில்லை. ஆகவே பயணம் பற்றிய பதிவை விட்டு விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். இணைய நண்பர்கள் நிசாமுதீன் மற்றும் துளசிதரன் எப்போது எழுத போறீங்க என்று ஆர்வமுடன் கேட்டு கொண்டிருக்க என் கூட டூர் வந்திருந்த நண்பர்களும் என்னப்பா இன்னும் எழுதலையா என்று கேட்டார்கள். (அவர்களுக்கு தங்கள் பயணம் எழுத்தில் எப்படி வருகிறது என்று பார்க்கும் ஆர்வம் இருக்கிறது) ஆகவே இதோ பயணம் பற்றிய தொடர் தொடங்குகிறது. ஒரே பதிவாக 
தந்தால் அதில் ஏதும் சுவாரசியம் இருக்காது என்பதால் நான்கு பதிவுகளாக தொடர்ந்து 
தரலாம் என  இருக்கிறேன். வாருங்கள் அதில் கொஞ்சம் பயணித்து வருவோம் 

நாங்கள் சென்ற ஸ்தலங்கள் 

பண்டரிபுரம்,
சனிசிக்னாபுர்,
ஷிர்டி,
நாசிக்,
கிருகம்பெஷ்வர் கோவில்,
மற்றும் மும்பை 

நான் மற்றும் எனது அலுவலக நண்பர்கள் வைத்யா ,முரளி , ஸ்ரீனிவாசன் சேர்த்து மொத்தம் நான்குபேர். இதில் நான் வைத்யா முரளி மூவருக்கும் இந்தி (நகி மாலும்) தெரியாது.இந்தி 
நன்கு பேச தெரிந்ததுடன் மட்டுமில்லாமல் வட இந்திய இடங்கள் பலவற்றை அறிந்தவர் ஸ்ரீனிவாசன் மட்டுமே. அவரே இந்த பயணத்துக்கு தலைமை ஏற்று வழி நடத்தி சென்றார்.



வைத்யா,முரளி, ஸ்ரீனிவாசன் 

நாங்கள் செப்டம்பர் 27 இரவு மும்பை மெயிலில் சென்ட்ரலில் இருந்து கிளம்பினோம். எங்களுக்கான சீட்களை ரயில்வே தனி தனியாக பிரித்துபோட்டிருந்தார்கள். அங்கிருந்தவர்களை மாற்றி விட்டு நாங்கள் அமர்ந்து கொண்டோம்.அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே பார்த்தால் அன் ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட் போல் ஆகி விட்டது பாத்ரூம் செல்லும் வழியெங்கும் பயணிகள் வெள்ளம்.கொஞ்ச நேரம் பேசி விட்டு படுத்து கொண்டு விட்டோம். மலைகள் என்றல் எனக்கு எப்போதுமே ரொம்ப பிடிக்கும். ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது மலைகள் வரிசையாய் வர நான் க்ளிக் செய்த மலைகளில் ஒன்று 
இடம் அனேகமாக அதொனி ஸ்டேசன் அருகில் என்று நினைக்கிறேன்  



 அதோனி அருகே 

காலையில் மந்திராலயம் ரோடு ஸ்டேசனில் கொஞ்ச நேரம் வண்டி நின்றது இறங்கி நடை பயில்வதும் போட்டோ எடுத்து கொள்வதுமாக நேரம் கடந்தது 




மந்த்ராலயம் ரோடு ஸ்டேசன் 

முரளி வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த இட்லி மற்றும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு தூங்கி வேடிக்கை பார்த்து வண்டியை  சோலாபூர் கொண்டு வந்து நாங்கள் சேர்ந்த போது(?) மணி ஆறரை.அலுவலகம் முடிந்து எப்படா கிளம்புவோம் என்றதொரு  மன நிலையில் அவசரமாக ஆனால் மிகுந்த ஆர்வத்துடன் வெளியில் வந்தோம்



ஏற்கனவே ஸ்ரீனிவாசன் உறவினர் ஏற்பாடு செய்து தயாராக இருந்த டாட்டா இண்டிகா காரில் ஏறி கிளம்பினோம். முதலில் நல்ல ஹோட்டலா பார்த்து அழைச்சிட்டு போங்க பசி எங்களை விரட்டுது என்று சொன்னோம் டிரைவருடன் வந்திருந்தவர் கார் ஓனர், சூப்பர் சாப்பாடு உங்களுக்கு கிடைக்க போகுது என்று அழைத்து போனார். 

நுழைந்த ஹோட்டலில் வட இந்திய உணவு வகைகளாக இருக்க நான் பயந்து போய் விழித்தேன்.(கண்ணா தமிழ் சாப்பாடு கொஞ்ச நாளைக்கு மறந்துடு என்றார் நண்பர் ) முதலில் வந்தது ரொட்டி போல் இருந்த ச்வீட் சப்பாத்தி அதை எல்லோரும் பகிர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க சப்பாத்தி சைடீஸ் சாதம் தயிர் என்று ஒவ்வொன்றாக  வர எல்லாமே சாப்பிட ருசியாக இருந்தது ஒரு வேளை பசி ருசி அறியல போலிருக்கு னு  நீங்க நினைச்சிருப்பீங்க ஆனால் இப்ப நினைச்சாலும் அந்த சாப்பாடு டேஸ்டா  தான் இருந்தது. மேலும் அந்த பயணத்தில் நாங்கள் சாப்பிட்ட இடங்களை விட இந்த சாப்பாடு தான் பெஸ்ட். (இதை நண்பர்கள் அனைவருமே சொன்னார்கள் ) வேர்கடலை மற்றும் மிளகாய் சேர்த்த பொடி என்று ஒன்று வைத்தார்கள். அதை சப்பாத்தியுடன் சேர்த்து கொண்டு ஒரு கை பார்த்தோம். ஒரு தட்டு முழுக்க தக்காளி வெள்ளரிக்காய் ஸ்லைஸ் கொண்டு வந்து வைத்தார்கள். சாப்பிட்டு முடித்த பின் மசாலா மோர் கொண்டு வந்து கொடுத்தார்கள் அது செரிமானத்திற்கு ஏற்றது என்று சொன்னதால் அதையும் ஒரு பிடி பிடித்தோம். கூடவே ஒரு தண்ணீர் பாட்டில் முழுக்க அதை கேட்டு வாங்கி கொண்டோம். (வழியில் சாப்பிட) 

எனக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு என்னை ஏதேனும் அசத்தி விட்டால் உடனே சம்பந்தப்பட்டவரை சென்று பாராட்டி விட வேண்டும். முதலாளியிடம் சென்று சாப்பாட்டின் நிறைவை பற்றி நான் தமிழில் சொல்ல நண்பர் இந்தியில் மொழி பெயர்த்தார்.  கூடவே 
என்னை எழுத்தாளர் என்று அவர்களிடம் கொஞ்சம் எடுத்து விட்டார். அவர்களிடம் இருந்து விசிடிங் கார்டு பெற்று கொண்டோம் (ஹோட்டல் பெயர் என்ன என்று கேட்கிறீர்களா இந்த தொடரின் முடிவில் தருகிறேன் முகவரியுடன்) 

 அங்கிருந்து கிளம்பி, சோலாபூர் பெட் சீட்டுக்கு சிறந்த இடம் என்றதால் எல்லோரும் சென்று ஒரு பெரிய கடையில் பர்சேஸ் செய்தார்கள். வாங்க வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்த வனை அங்கிருந்த வகை வகையான பெட் சீட்கள்  என்னையும் வாங்க வைத்து விட்டது. வண்டிக்கு சாப்பாடு கொடுத்து விட்டு (அதாங்க டீசல்)  நாங்கள்  கிளம்பியது எட்டு மணிக்கு  
மகராஷ்டிரா மாநிலத்தில் சோலாப்பூரிலிருந்து 80 கிலோ மீட்டரில் இருக்கும் பண்டரிபுரம் 
வந்து சேர்ந்த போது மணி பத்து. கோதாவரி ஆற்று பாலத்தை (DOWN
BRIDGE) கடந்து கோவில் வந்து சேர்ந்தோம்.இரவில் சென்றதால் அந்த இயற்கை 
எழிலை ரசிக்க முடியவில்லை போட்டோ கூட எடுக்க முடியவில்லை.





பதினொரு மணி வரை கோவில் திறந்திருக்கும் என்று சொல்லியிருந்தாலும் எங்கள் நடை வேகமானது. கோவிலின் உள்ளே நுழையும் போது செல் மற்றும் கேமரா கொண்டு போக கூடாது என்று சொல்லி விட்டார்கள்.ஆகவே போட்டோ எடுக்க முடியவில்லை.அந்த இரவு வேளையிலும் கூட்டம் இருந்தது. இருந்தும் நெரிசல் ஏதும் இல்லாமல் சென்று தரிசித்து 
விட்டு நிதானமாக அந்த கோவிலை சுற்றி வந்தோம்.(பாண்டுரங்கன் பகவானையே காக்க வைத்த சிறப்புடையவர். அவருக்கான கோவில் இது )




பண்டரிபுரம் கோவில் முகப்பு. இது நான் எடுத்ததல்ல 
இணையத்திலிருந்து  எடுத்தது 


காரில் ஏறும் முன் டீ சாப்பிடலாம் 
என்று மற்றவர்கள் செல்ல நானும் முரளியும்  பால் சாப்பிடலாம் என்று எதிரில் இருந்த கடைகளுக்கு சென்றோம். பத்து கடைகளுக்கும் மேல் அங்கே இருந்தது. அனைத்திலும் பெரிய எண்ணைசட்டி வைத்து பால் காய்ச்சி கொண்டிருந்தார்கள். கடை மூட போகும் நேரம் வேறு. எந்த கடையில் நன்றாக இருக்கும் என்று நாங்கள் யோசித்தவாறே செல்ல, டீ கடை காரரே நாலாவது கடைக்கு போங்க நல்லாருக்கும் என்று சொன்னதாக வைத்யா வந்து சொன்னார்.நிஜமாகவே நன்றக இருந்தது. பதினொரு மணிக்கு வண்டி ஏறியது தான் எனக்கு தெரியும். நானே வழியில் ரசிக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியாமல் நன்றாக தூங்கி விட்டோம் டிரைவரை தவிர. அதிகாலை கண் விழிக்கும் போது நான்கு மணி. சனிசிக்னாபூர் வந்து விட்டது. அந்த அதிகாலையில் ஒரு ஆச்சரியத்தை கண்டோம் 

அது அடுத்த பதிவில் 



ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, நவம்பர் 17, 2013

பல நேரங்களில் சில மனிதர்கள் -2







பல நேரங்களில் சில மனிதர்கள் -2


வாழ்க்கையில் நான் சந்தித்த மனிதர்களை பற்றி 
இங்கே கொஞ்சம் சிந்திக்கிறேன்.


கோ எஜுகேசன் பள்ளியில் ஆறாவது படித்து கொண்டிருந்த நேரம் அது.மாதம் ஒரு மாணவர் கிளாஸ் லீடர் ஆக நியமிக்க படுவார்.என் வகுப்பில் நானும் ஒரு மாதம் லீடரானேன். கிளாஸ் லீடர் ஆனவுடன் எல்லோரும் எனை பயத்துடன் பார்த்தது எனக்கு  ஆச்சரியமாக கூட இருந்தது. 


அப்போதெல்லாம் புது வருடம் வரும் போது மாணவ மாணவிகள் 
தங்களுக்கு கிடைக்கும் காலெண்டரை வகுப்புக்கு கொண்டு வருவார்கள். வகுப்பில் எங்கும் அதை மாட்டி வைப்போம். அவை அந்த வருடம் பள்ளி முடிந்து டீ பார்ட்டி நடக்கும் வரை இருக்கும் ( மாணவ மாணவிகள் பள்ளியின் கடைசி நாள் அன்று தங்கள் பாக்கெட் மணியில் வகுப்பு அசிரியர்களுக்கும், தலைமையாசிரியருக்கும் நன்றி கூறும்விழா அது.ஸ்வீட் காரம் காபி புது டிரஸ் என்று ஒரே தடபுடலாக இருக்கும். (அந்த நாளுக்காக அந்த ஆண்டு ஆரம்பிக்கும் போதே காத்திருக்க தொடங்கி விடுவோம் )

நான் லீடராக பங்கேற்ற மாதத்தில் தான்  மாணவர்கள் காலெண்டர் 
கொண்டு வந்து வகுப்பறையில் மாட்டி வைத்தார்கள். ஒரு மாணவன் கொண்டு வந்த காலெண்டர் எல்லோரையும் கவர்ந்தது. சுவரில் மாட்டலாம் என்று நாங்கள் முயற்சித்த போது வகுப்பாசிரியர் பார்த்து 
விட்டு, "இது நல்லாருக்கு நான் என் வீட்டுக்கு  கொண்டு போறேன்" 
என்று கூறி தன் மேஜை டிராயரில் வைத்து கொண்டு விட்டார். 
வகுப்பறையில் இருந்த மாணவ மாணவியர்கள் அனைவரும் உற்சாகம் வடிந்து போனவர்களாக ஆனோம். 

காலெண்டர் கொண்டு வந்தவன் "நான் இதை என் வீட்ல கூட மாட்டாமல் இங்க கொண்டு வந்தேன்.இப்படி வீட்டுக்கு எடுத்துட்டு போறேன்னு சொல்லிட்டாரே" என்றான் வருத்தமாய்.எனக்கும் இது விசயத்தில் கோபம் வந்தது மாணவ மாணவிகள் எவ்வளவு ஆர்வமுடன் இருந்தார்கள் என்பது அவருக்கும் தெரியும். இருந்தும் தன் வீட்டுக்கு என்று அவர் உரிமை கொண்டாடியது எனக்கு பிடிக்கவில்லை.இதை எப்படி  ஆசிரியரிடம் சொல்வது என்று நான் யோசிக்கையில் ஒரு மாணவன் சொன்னான் 

"டேய் உன் கிட்டே தான் இப்ப விஷயமே இருக்கு. நீ தான் எங்க லீடர் நீ 
பர்மிசன் கொடு.  நாங்க எடுத்து மாட்டிடறோம். ஆசிரியர் வந்தால் பசங்க எல்லாரும் ஆசைப்பட்டார்கள் அதான் மாட்ட சொல்லிட்டேன்னு சொல்லிடு. அவரும் மாட்டினதை எப்படி கழட்ட சொல்றது னு விட்டுடுவார்" என்று சொல்ல மற்றவர்களும் என்னை கெஞ்சவே நானும் ஓகே சொல்லி விட்டேன். 

ஆசிரியர்  பார்த்து விட்டு என்னை கேட்டார்.  நான் "பசங்க ஆசைபட்டாங்க அதான்" என்றேன். மாணவ மாணவிகளும்  தலையசைத்தார்கள். ஆசிரியர் அவர்களை அதற்காக திட்டவில்லை மாறாக "எப்படி என் டிராயரில் வைத்ததை நீ எடுத்து மாட்ட சொல்லலாம்"  என்று என்னை கோபமாய் கேட்டார். நான் திணறினேன்.  அடுத்து அவர் எடுத்த ஆக்சன் என்ன தெரியுமா. (என் பதவி முடிய பத்து நாட்களே 
இருந்த நிலையிலும்) என்னை உடனடியாக லீடர் பதவியிலிருந்து தூக்கி விட்டார். வேறொரு மாணவரை லீடராக்கினார். எல்லோரும் என்னை பரிதபமாய் பார்த்தார்கள்.

 அவர் சென்ற பிறகு எல்லோரும் என்னை சூழ்ந்து கொண்டு  "எங்க 
ஆசைக்கு உன்னை பலிகடா ஆக்கிட்டோம் சாரிடா" என்று ஆறுதல் சொன்னார்கள்."பரவாயில்லை விடுங்க. இதில் என் தப்பும் இருக்கிறது உங்களின் கோரிக்கையை அவர் கவனத்துக்கு கொண்டு சென்று அவரது 
அனுமதியுடன் தான் நான் அதை மாட்டியிருக்க வேண்டும் நானும் 
இப்படி செய்திருப்பது கூடாது.இந்த தண்டனை எனக்கு தேவை தான் 
இருந்தும் உங்கள் ஆசையை நிறைவேற்றிட்டேன் அது போதும் " என்றேன் 

FINAL PUNCH

இப்போது இந்த சம்பவத்தை நினைத்து பார்க்கையில், ஆசிரியர் என்பவர் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட கூடாது என்று கற்பிப்பவர் மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாக தன் வீட்டுக்கு அவர்கள் பொருளை எடுத்து செல்ல ஆசைப்பட்டது தப்பாயிற்றே. என்று தோன்றுகிறது. 

மேலும்லீடர் என்பவர் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் பாலமாய் 
இருப்பவர். ஆசிரியர் தேவைகளை மட்டும் நிறைவேற்றுபவர் எப்படி மாணவர்களின் தலைவனாய் இருக்க முடியும். அந்த வகையில் 
அப்போது லீடர் பதவியில் இருந்து தூக்கப்பட்டது எனக்கு தலை 
குனிவாகவே இருந்தாலும், இப்போது   (அவரது கை பாவையாக
இல்லாமல்இருந்ததை) பெருமையாகவே நினைக்கிறேன் 


ஆர்.வி.சரவணன்


வெள்ளி, நவம்பர் 15, 2013

பாண்டிய நாடு





பாண்டிய நாடு 


ஒரு படத்தை நல்லாருக்கும் என்று எதிர்பார்த்து செல்வதை விட எதிர்பாராமல் போய்  அது நன்றாக இருந்து விட்டால் கிடைக்கும் திருப்தியே தனி தான். படம் பற்றி  நல்ல ரிசல்ட் வரவே உடனே படையெடுத்தேன் பாண்டிய நாட்டுக்கு(தியேட்டருக்கு). படத்தை பற்றி ஒரு சில வரிகளில் சொல்லி விடலாம்.அது இப் பதிவின் முடிவில் பார்ப்போம்

ஒரு நகரை  ஆட்டி படைக்கும் தாதா, ஹீரோவின் அண்ணனை கொன்று 
விட ஹீரோவும் (அவர் அப்பாவும் ) சமயம் பார்த்து பழிக்கு  பழி வாங்கும் 
கதை தான். ஆனால் நமை ஈர்த்து சீட்டில் இழுத்து பிடித்து உட்கார வைத்திருப்பதில் தெரிகிறது இயக்குனரின் சாமர்த்தியம் .ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் இயக்குனர் மசாலாத்தனமான 
காட்சிகள் எதிலும் சிக்காமல் எந்த காம்ப்ரமைஸும்  செய்து கொள்ளாமல் படத்தின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை நூல் பிடித்தார் போன்று படத்தை தந்திருக்கிறார்.

உதாரணத்திற்கு கட்டிங் போடலாமா என்று விஷால் கேட்டு சூரி சரி என்று சொல்ல அடுத்த காட்சி  சரக்கு அடிப்பதை தான் காட்ட போகிறார்கள் என்று நமக்கு தோன்றும் யோசனையை தூக்கி அடிக்கும் விதம்  இயக்குனர் தரும் காட்சி ஒரு சாம்பிள் .

வில்லனின் குரூப் இரண்டு அணியாக அடித்து கொண்டு நிற்க. இவர் தான் வில்லன்  என்று நம் நினைப்பை தகர்த்து வேறொருவர் வில்லனாவது 
மட்டுமல்லாமல் அவர் தலைமையேற்றவுடன் மாறும் அவரது கெட்டப் 
அட என்று ஆச்சரியப்படும் இடம்.

விஷால் இயக்குனரின் நடிகனாக இதில் களமிறங்கி இருக்கிறார் . திக்கி பேசுவது,  (இடைவேளைக்கு பின் அவ்வளவாக இல்லையே ) சண்டையை கண்டு பயந்து பின் வாங்குவது, தான் காதலிக்கும்  பெண்ணை சந்தோசமாய் சுற்றி வருவது,சண்டை கட்சிகளில் கூட வழக்கமான முக பாவங்கள் வாய்ஸ் தவிர்த்து  என்று இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார் அதிலும் கிளைமாக்ஸ் சில் வில்லனின் ஆட்கள் அவரை நெருங்கும் போது குரோதம் வெளிப்பட ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள் வெரி குட் விசால் என்று சொல்ல வைக்கிறார் 

லட்சுமி மேனன் இதில்  டீச்சராக வருகிறார். விஷாலை தன் 
குறுகுறுவென்ற பார்வையால் அளவிடுகிறார்.  அவரது அம்மா 
விஷாலை அண்ணன் என்று சொல்ல விஷால் மிரள அதை குறும்பு பார்வையால் ரசிக்கும் இடம் அவரை போலவே அழகு 

சூரி அனாவசிய வசனங்கள் ஏதுமில்லாது அவசிய வசனங்களால் நம்மை புன்னகைக்க வைத்திருக்கிறார் 

வில்லன்  ஷரத் லோஹிதஸ்வா படம் பார்க்கும் போது எதிரில் வந்தால் 
அவர் சட்டையை பிடித்து விடலாமா எனும் அளவுக்கு அவர் பாத்திரமும் 
அவர் நடிப்பும் இருக்கிறது. என்னா  ஒரு வில்லத்தனம்





பாரதி ராஜா இதில் விஷாலின் அப்பாவாக நடுத்தர வர்க்கத்தின்  குடும்ப தலைவராக கதா பாத்திரம். அதை அவரது அந்த ட்ரேட் மார்க் குரலாலும் தன் இயல்பான நடிப்பாலும் சிறப்பாக்கியிருக்கிறார். உனக்கு குழந்தை பிறக்க போறதை நினைச்சு சந்தோசபடறதா இல்லே அடி வாங்கிட்டு வந்திருக்கிற உன்னை நினைச்சு வருத்தப்படறதா என்ற அங்கலாய்ப்பிலும் பிரேத பரிசோதனை வேண்டும் என்று  மருத்துவமனையில் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சியிலும்,விஷால் கையை பிடித்து கொண்டு நெகிழ்ந்து , நான்  இப்ப சந்தோசமா இருக்கேன் என்று வார்த்தைகளாலும் நடிப்பாலும் அதை வெளிபடுத்துவதிலும் சபாஷ் சொல்ல வைக்கிறார் 

விக்ராந்த் விஷாலின் நண்பனாக வருகிறார் ஒரு பைட் ஒரு பாட்டு  கூட அவருக்கு உண்டு என்ற அளவில் அவருக்கு கிடைத்திருப்பது நல்ல ரோல் 

 
இமான் இசையில் டையரெ , ஒத்தகடை மச்சான், பை பை பாடல்களை 
ரசிக்க முடிகிறது. அந்த டப்பாங்குத்து பாடல் கதையின் சீரான போக்கிற்கு 
நடுவே  திணிக்கப்பட்ட ஒன்று .( பாடலும் டான்சும் தாளம் போட 
வைக்கிறது) பாடல் முடிந்ததும் கதையை எங்கே விட்டோம் என்று 
நம்மை யோசிக்க வைத்து விடுகிறது  

பொண்ணை பிக்கப் பண்றதுக்கு முன்னாடியே ட்ராப்  பண்ற பாக்கியம் யாருக்கு கிடைக்கும் என்பது போன்ற வசனங்கள் பல இடங்களில் 

இயல்பாக பொருந்துகிறது.

 நெருக்கமான வீடுகளுக்கு இடையே சந்தில் புகுந்து புறப்பட்டிருக்கும் கேமரா,கிளைமாக்ஸ் காட்சி மற்றும் அந்த பஸ் ஸ்டான்ட் சண்டை காட்சியில் மதி மயக்குகிறது ஒளிப்பதிவு. 

வில்லன் குரூப் பிடம் சூரி வந்து செல் போனை சுண்டல் கொடுப்பது 
போல் கொடுத்து செல்லும் இடம் கண்டிப்பாக லாஜிக் இடிக்க வைக்கும் 
ஒன்று வில்லன் குரூப் அதை நம்பி பயன்படுத்துவது கமிசனர் மற்றும் அமைச்சரையே கையில் வைத்திருப்பவர்கள் விஷால் குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது என்னை நீங்களும் பின் தொடர்ந்து வராதீங்க என்று சொல்லும் லட்சமி மேனன் செல் போன் கடையில் வந்து இழைவது 
( அந்த காட்சியை விஷால் வீட்டில் நடப்பதாக வைத்திருக்கலாம்) 
என்றெல்லாம் குற்றம் கண்டுபிடிக்க நம்மை யோசிக்க  விடாமல் 
இயல்பான திரைக்கதை மற்றும், கதாபாத்திரங்கள்,வசனங்கள் என்று நேர்த்தியாக சொன்னதன் மூலம் இயக்குனர் சுசீந்திரன் 
உருவாக்கியிருக்கும் இது 

செழிப்பான பாண்டிய நாடு

FINAL PUNCH

வில்லனின் அடியாள் பரணி, விஷாலை காலால் மிதித்து துவம்சம் 
செய்யும் போது விஷால் பக்கத்தில் கிடக்கும் பாட்டிலை கேமரா காட்டும்.
 எப்படியும் அதை எடுத்து தான் விஷால் அடிக்க போகிறார் என்று நமக்கு தெரிந்து விடுகிறது. இருந்தும் அதற்கு முன்பே நாமே எடுத்து அடித்து விடலாமா என்ற பரபரப்பை படம் பார்க்கும் நமக்குள் ஏற்படுத்திய விதத்தில் இந்த படம் வெற்றி பெறுகிறது

ஆர்.வி.சரவணன் 

சனி, நவம்பர் 02, 2013

கனவு மெய்ப்பட வேண்டும்







கனவு மெய்ப்பட வேண்டும்

எனது கல்லூரி காலங்களில் கதை கவிதைகள் நிறைய எழுதுவேன். படிப்பை விட சினிமா கதை புத்தகங்கள் தான் வெகு இஷ்டம். படிப்பில் கவனம் வெகு குறைவு ஏனெனில் நாம தான் சினிமாவில் சேர்ந்து டைரக்டர் ஆகபோறோமே அப்புறம் எதுக்கு படிப்புன்னு தான். அந்த
அளவுக்கு ஓவர் கான்பிடன்ஸ் இருந்துச்சு. (இப்ப நினைச்சா ஆச்சரியமா இருக்கு )

அந்த காலகட்டத்தில் எனது நண்பர்கள்  தெருவில் வருடா வருடம் நாடகம் போடுவார்கள்.அந்த வருடம் என்னிடம் வந்து "நீ நாடகத்தை திருத்தி எழுதி தா" என்று சொல்லி ஒரு ஸ்க்ரிப்டை கொடுத்தார்கள். நானும் உற்சாகமாய் வாங்கி படித்தேன். 13 காட்சிகளில் நாடகம் கொஞ்சம் சாதரணமாக தான் இருந்தது . நான் "என்னப்பா இப்படிஎழுதியிருக்கீங்க" என்றேன் அவர்கள் "அதுக்கு தான் உன்கிட்டே கொடுத்திருக்கோம்"என்றனர். நான்  வேறு ஒரு கதை எழுதி தருகிறேன் என்றேன் "நாடகம் பெயர் போட்டு போஸ்டர் எல்லாம் ஒட்டியாச்சு மாற்ற முடியாது "என்றனர்.

சரி என்று அவர்கள் விளம்பரம் செய்த பெரிய வீடு என்ற அந்த தலைப்பிலேயே நாடகத்தை நான் உருவாக்கினேன். எந்த நேரத்தில் தெரியுமா. விடிகாலை நான்கு மணிக்கு. படிப்பதற்காக எழுந்த நேரத்தில், 40 காட்சிகளில் நாடகத்தை மூன்று நாட்களில் எழுதி முடித்து கொடுத்தேன். 

"ஏற்கெனவே போஸ்டரில் கதை வசனம் என்று வேறு ஒருவனின் பெயர் போட்டாயிற்று. அதனால் இயக்கம் என்ற இடத்தில் உன் பெயரை போடுகிறோம் அட்ஜஸ்ட் பண்ணிக்க" என்றனர். சரி என்று சொல்லி விட்டேன். போஸ்டர்களில் என் பெயர் பார்த்து எனக்கு தலை கால் புரியவில்லை. ஒத்திகை ஆரம்பமானது. கதைப்படி கிராமம் தான் கதை நிகழுமிடம் ஹீரோ வேட்டி சட்டையில் தான் வர வேண்டும் என்றேன் ஹீரோ முடியாது பேன்ட் ஷர்ட் தான் போட்டு கொண்டு வருவேன் என்று அடம் பிடித்தான். இப்படி சொல்லி கொண்டே போகலாம் அப்போது நடந்த கலாட்டாக்களை.




ஒரு வழியாக நாடகம் அரங்கேறியது. கதாநாயகி , அவரது தோழி யாக நண்பர்களே 
பெண் வேடமிட்டு நடித்தனர். நானும் ஒரு காட்சியில் கதாநாயகியை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையாக வந்தேன் (நடிக்கும் ஆசை யாரை விட்டுச்சு ) மேலே உள்ள படம் தான் நான் வரும் காட்சி. நாடகத்திற்கு கை தட்டல் நிறைய கிடைத்தது .ஒரு ஜனரஞ்சகமான சிம்பிள் நாடகம் தான் இருந்தும் ஆடியன்ஸ் காட்டிய ரெஸ்பான்ஸ் பார்த்து எனக்கே 
ஆச்சரியம்  

நாடகம் முடிந்தவுடன், எல்லோருக்கும் விழா குழுவினர் நன்றி சொன்னார்கள் என் பெயரை சொல்லாமல் விட்டார்கள். அவர்களாகவே, "சாரி லிஸ்டில் பெயர் இல்லாததால் சொல்ல மறந்துட்டோம்" என்றார்கள். நான் கொஞ்சம் அப்செட் ஆகினாலும் அதை வெளியில் காட்டாமல், மேடையை விட்டு இறங்கினேன். அப்போது அந்த நாடகத்திற்கு இசையமைத்த இசை அமைப்பாளர் என்னை பார்த்தவுடன் (அவர் நாடகங்கள் பலவற்றுக்கு இசையமைத்தவர்) என்னிடம் வந்து  "சாதாரணமாக ஒரு நாடகம் 20 25 காட்சி அமைப்புகளோடு தான் இருக்கும். ஆனால் நீங்கள் புது ஆள் 40 காட்சிகளில் கதையை சீன் பை சீன் ஆக சுவாரசியம் குறையாமல் எழுதியுள்ளீர்கள் நாடகம் நல்லா இருந்துச்சு.உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது"என்றார். இந்த ஒரு பாராட்டு போதுமே என்ற சந்தோசத்தோடு வீடு வந்தேன்.

வீட்டில் ஏக ரகளை. படிப்பை விட்டுட்டு நாடகம் எப்படி போடலாம் என்று சண்டையிட்டார்கள். நான் எதிர்த்து பேச போக , வீட்டை விட்டு வெளியில் போ, நீ உருப்படாமல் தான் போக போறே என்ற வார்த்தைகளால் என் மனசு ரொம்பவே கஷ்டமாகிபோனது.(இப்போது நினைத்து பார்க்கும் போது அவர்கள் சொல்வதில் இருந்த நியாயம் புரிகிறது) 

வீட்டில் நான்  சினிமா டிராமா என்று அலைந்து உருப்படாமல் தான் போக போறேன் என்று தீர்மானத்திற்கு வந்து விடவே, நான் அந்த பாதையிலிருந்து விலகி அவர்கள் ஆசைப்பட்டது போல் வேலையில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி வந்து விட்டேன். என் குடும்பத்தில் அனைவருக்கும் இதில் சந்தோஷம்.

ஆனால் எனக்கு என் திறமைகளை கண்டு வெளி உலகம் பாராட்டி உற்சாகப்படுத்தியது போல் வீட்டில் யாரும் என்னை அப்படி ஊக்கப்படுத்தவில்லையே என்ற ஆதங்கம்  இன்று வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது

FINAL PUNCH 

இந்த பதிவு நான் கல்லூரி காலங்களில்.... என்ற தலைப்பில்,
இணையம் வந்த புதிதில் எழுதியது. இயக்குனர் ஆக வேண்டும் என்ற என் கனவு  
நிறைவேறாத ஒன்றாகி விட்டதே என்ற ஏக்கத்துடன் 2010 ம் வருடம் எழுதிய பதிவு 
இது.ஆனால் இப்ப எடுத்து படிக்கிறப்ப கனவு நிஜமாகி விட கூடிய வாய்ப்பு இருப்பது 
போல் ஒரு நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.இதற்கு இணைய மேடையும், 
நண்பர்களின் ஊக்கமும் கூட ஒரு காரணம். அனைவருக்கும் நன்றி.

தித்திக்கும் இந்த தீபாவளி நன்னாள் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் என்றென்றும் சந்தோஷம் நிறைந்திருக்க 
செய்யட்டும் 

படம் : எங்கள் வீட்டு வாசலில் வரைந்த கோலம் எனது கிளிக்கில்  


ஆர்.வி.சரவணன்