திங்கள், ஏப்ரல் 21, 2014

விளையாடிய பொழுதுகள்





விளையாடிய பொழுதுகள்

வலைபதிவர்  நண்பர் மனசு செ.குமார் அவர்கள் என்னை தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். அதாவது ஒரு வருடத்திற்கு முன்.விளையாட்டுக்களில் சரியான நண்பர்கள் அமையாததால் என்னால் எந்த ஒரு விளையாட்டிலும் பங்கேற்க முடியவில்லை எனவே என்ன எழுதுவது என்றே தெரியவில்லை என்றேன். அவர் உங்கள் கண்ணோட்டத்தில் சிறு வயது விளையாட்டு நினைவுகளை தெரிந்து கொள்ள ஆர்வபட்டு தான் அழைத்தேன் என்றார். முயற்சிக்கிறேன் என்று சொல்லி விட்டாலும் அவரது பின்னூட்டம் பார்க்கும் போதும் அவரது பதிவுகள் படிக்கும்  போதும் என் நினைவில் அவர் அழைத்த தொடர்பதிவு உறுத்தி கொண்டே இருந்தது. ஒரு வழியாக இதோ எழுதி விட்டேன் நண்பா. தாமதத்திற்கு மன்னிக்கவும் .குமார் அவர்களை பற்றி சொல்வதென்றால் அண்ணா என்ற  உரிமையுடன் என் மேல் அன்பு செலுத்தி வருபவர் இணையம் எனக்கு தந்த வியக்கத்தக்க நட்புக்களில் அவரும்  ஒருவர் 

வாருங்கள்  என் சிறு வயது  உலகத்திற்குள் சென்று வருவோம்  

கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் வழியில் இருக்கிறது மேலகொட்டையூர் என்ற ஊர் நான்காம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை அங்கே தான் என் வாசம். கூட்டு குடும்பமாக இருந்தோம் என்னுடன் என் தம்பி என் தங்கை மாமா பெண்கள் என்று  சிறுவர் பட்டாளமே இருந்தது  


கிராமம் என்பதால் கபடி கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கள் அங்கே பார்ப்பது அரிது. நாங்கள் விளையாட என்றே எங்கள் பொழுதை போக்க என்றே விளையாடிய விளையாட்டுக்களின்  பட்டியலை இங்கே தருகிறேன் 




டயர் விளையாட்டு அதாவது சைக்கிள் டயர் இருக்கும் அல்லவா  சிறு குச்சி வைத்து ஒரு கையால் ஓட்டிய  படியே ஓடி வருவது. ஒரு கடைக்கு போய்  ஏதேனும் வாங்கி வர சொன்னால் கூட இதை ஓட்டிய படியே செல்வோம். வண்டியை நிறுத்துவது போல் டயரை சுவற்றில்  சாய்த்து வைத்து விடுவோம்.என் வண்டியை நீ ஏன் எடுத்தே என்றெல்லாம்  எங்களுக்குள் வாய்க்கால் தகறாரு கூட நடந்திருக்கிறது 

காபி கடை 
இன்ஜெக்சன் மருந்து  பாட்டில் அங்கே கிடைக்கும். அதை எடுத்து கொள்வோம் எங்கள் வீட்டுக்கு பின்னே சாக்பீஸ் பாக்டரி இருந்தது. அதில் உடைந்து விழும் சாக்பீஸ்கலை எடுத்து கொண்ண்டு தண்ணீரில் கரைத்து பால் போல் வைத்து கொள்வோம் வீடு கட்டும் செங்கல்  தூள் சுவரை பெயர்த்து கொண்டு விழுந்திருக்கும். அதை சேகரித்து தண்ணீர் கலந்து டிகாக்சன் போல் வைத்து கொண்டு இரண்டையும் கலந்து பாட்டிலில் ஊற்றுவோம் அது காபி நிறத்துக்கு வந்து விடும் அதை வைத்து காபி விற்பது  போல் விளையாடுவோம் 

சமையல்  
வீட்டில் கிச்சனில் சமையல் பார்த்து அது போல் செய்ய ஆசைப்பட்டு அரிசி எல்லாம் எடுத்து போய் அடுப்பு பற்ற வைக்க முடியாமல் திணறி இருக்கிறோம் அதிலும் நான் எப்படியாவது ஒரு சாதமாவது செய்து பார்த்திட ஆசைப்பட்டு எப்படியோ முயற்சி செய்தும் அடுப்பு பற்ற வைப்பது என்ற ஒரு விஷயத்தால் முடியாமல் போய் விட்டது 

சினிமா காண்பித்தல் 
சினிமா அப்போது எனக்கு ஒரு ஆச்சரிய உலகமாக இருந்தது.இதை பற்றி நான் நிறைய சந்தேகங்கள் கேட்பேன். என் தாத்தா ஒரு பூத கண்ணாடியும்,கேமரா போல் இருக்கும் ஒரு பயாஸ் கோப்பும் வாங்கி கொடுத்தார். பிலிம்கள் கொடுத்திருப்பார்கள் அதை உள்ளே போட்டு படம் பார்க்கலாம். மேலும் நான் லென்ஸ் மூலம் ரூம் இருட்டாக்கி சுவற்றில் ஸ்லைடு போல் மாற்றி மாற்றி காண்பித்தேன் பற்பல படங்களின் பிலிம் துணுக்குகள் இருக்கும் அதையே ஒரு கதை போல் கோர்வையாய் கொண்டு வந்து படம் காண்பிப்பேன் இந்த விளையாட்டு பின் வேஷ்டி யை செவ்வக சட்டத்தில் ஒட்டி சுற்றிலும் கருப்பு கலர் பேப்பர் ஒட்டி முன் புறத்தில் சிறுவர்களை (பெரியவர்கள் கூட) அமர வைத்து பின் பக்கத்தில் படம் ஓட்டியிருக்கிறேன் 


* கிட்டி புள் நிறைய விளையாடி இருக்கிறோம். இதில் என்ன பிரச்னை என்றால் நாம் அடிக்கும் வேகத்தில் எதிரில் வரும் யார் மேலாவது பட்டு விடும்.பின் எங்கள் முதுகில் டின் கட்டுவார்கள் 

* திருடன் போலீஸ் விளையாடியிருக்கிறோம் (பெரும்பாலும் நான் தான் போலீஸ்) தெருவில் இருக்கும் எல்லோரது வீட்டிலும் சென்று ஒளிந்து கொள்ள  வேட்டையாடுவோம் 

 * என் தம்பி நாய் குரைத்து கொண்டே இருக்கிறது என்று கல் எடுத்து எறிய நாய் தப்பித்து விட எதிர் வீட்டு வாசலில் வைத்திருந்த பாத்திரத்தில் பட்டு அது சொட்டையாக அவர்கள் கத்த ஆரம்பிக்க நாங்கள் விழி பிதுங்கி நின்றது இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும் 

* வீட்டு ஹாலில் ஒரு கண்ணாடி அலமாரி இருக்கும் நான் விளையாட்டு உற்சாக மிகுதியில் தரச் லைட் டுக்கு போடும் பாட்டரி யை எடுத்து எறிய அது கண்ணாடியில் பட்டு கண்ணாடி உடைந்தது வாடகை 
வீடு என்பதால் ஹவுஸ் ஓனர் கண்ணாடி உடைபட்டதற்கு சார்ஜ் பண்ணினார்.எனக்கும் வீட்டில் அடி  பின்னி எடுத்தார்கள்

 * பல்லாங்குழி மற்றும் தாயகட்டை நிறைய விளையாடி யிருக்கிறேன். அதில் ஒரு பிரச்னை என்ன வென்றால் தோல்வி யை நெருங்கும் போது எரிச்சல் வரும்.இது தவறான ஒன்று. இதை நான் விரும்பவில்லை எனவே அந்த விளையாட்டை பாதியில் நிறுத்தி விட்டேன்.


* கோவிலிலிருந்து சுவாமி உலா வரும் பாருங்கள் அது போல் நானும் என் தம்பியும் சுவாமி போட்டோ வைத்து வண்டி செய்து சுவாமிக்கு அலங்காரம் செய்து சுவாமி புறப்பட்டு வீதி உலா வருவது போல் விளையாடி 
இருக்கிறோம் 

* மணலில் ஆளுக்கொரு இடம் எடுத்து கொண்டு பூங்கா அமைத்து அழகு படுத்தி இருக்கிறோம்.யார் அழகு செய்த பூங்கா நன்றாக இருக்கிறது என்று வீட்டில் உள்ள பெரியவர்களை அழைத்து காண்பித்திருக்கிறோம் 

இப்படியாக விளையாடிய பொழுதுகள், பத்தாவது படிப்புக்கு பின் நாங்கள் கும்பகோணம் வந்து விட்டதால், கதை புத்தகங்கள் சினிமா, நண்பர்களோடு சுற்றுதல் என்று மாறி விட்டது.காலங்கள் மாறினாலும்  விளையாடிய பொழுதுகளின் சுவடு மாறாமல் அப்படியே எனக்குள் பசுமையாய் இருக்கிறது.

இதெல்லாம் விளையாட்டா என்று கூட நீங்கள் நினைக்கலாம்.நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர்கள் விளையாட்டு பொருள்களை எதிர்பார்க்காமல் இருப்பதை வைத்து விளையாடி மகிழ்வது தானே 
சரியான ஒன்றாகும்.

FINAL PUNCH 

சிறு வயதில் நம்மில் விதைக்கபடுபவை தான் பின் விருட்சமாகும் என்பார்கள் .அது போல் எப்படியாவது ஒரு சாதம் வடித்து பார்த்து விடனும் என்று ஆசைப்பட்டவன், இன்று வேலைக்காக குடும்பத்தை விட்டு தனியே இருப்பதால் நானே தான் 3 வருடங்களாக சமைத்து சாப்பிட்டு கொண்டிருக்கிறேன் சமைக்க தானே ஆசைபட்டே இதோ நீ கேட்டது சலிக்கும் வரை சமைத்து விளையாடு என்பது போல் ஆகி விட்டது நிலைமை. எனது இன்னொரு விளையாட்டான சினிமா காண்பித்தல் தான் என்னை திரை உலகத்திற்குள்  நுழையும் அளவுக்கு என்னை 
தயார் படுத்தி கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் 

ஆர்.வி.சரவணன் 


படம் இணையத்திலிருந்து 

சனி, ஏப்ரல் 19, 2014

இரண்டாம் உலகத்தில் விடியும் முன் வில்லாவில் சுட்ட கதை




இரண்டாம் உலகத்தில் விடியும் முன் வில்லாவில் சுட்ட கதை 



டீ கடையில் டீ சாப்பிட்டு விட்டு மீதி காசு வாங்கினேன் சில்லறை 
இல்லை என்று ஒரு சாக்லேட் தரப்பட்டது அது காபி ப்ளேவர் சாக்லேட் இதுக்கு காப்பியே  குடித்திருக்கலாம் போலிருக்கே

------

ரம்மி படம் முடிஞ்சு எழுந்திருக்கும் போது பக்கத்தில் இருந்தவர் 
தன் ப்ரெண்ட் கிட்டே சொன்னார் 
 "என்னடா 1987 வருஷத்தை விட்டு கதை வெளில வரவே இல்லே"

ஆம் , இன்னும் கொஞ்சம் திரைக்கதையிலும் காட்சி அமைப்புகளிலும் கவனம் செலுத்தியிருந்தால், "1987 வருஷத்தை விட்டு வரதுக்கே மனசே இல்லேடா" இப்படி சொல்லும் விதமாக படம் இருந்திருக்கும்.இருந்தாலும் 
படம் முடிந்து வந்த பின்பும் கூடை மேல கூடை வச்சி பாடல் மனதிற்குள் உட்கார்ந்து கொண்டு நகர மறுக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

------

டூ வீலர் வாங்கி ரெண்டு வருஷம் தான் ஆகியிருக்கு. அதுக்குள்ளே வண்டி வாங்கின இடத்திலருந்து போன் பண்ணி வண்டி exchange பண்ற ஐடியா இருக்குதா னு கேட்கிறாங்க. நல்லா இருக்கிற வண்டியை நான் ஏன் exchange பண்ணனும் னு குரல் உயர்த்தினேன்.போனை வச்சிட்டாங்க (விட்டால் வண்டி புதுசா வாங்கி வீட்டுக்கு போறதுக்குள்ளே exchange பண்ணிக்கரீங்களா னு கேட்டாலும் கேட்பாங்க போலிருக்கு)

------

சில நாட்களுக்கு பிறகு ஞாயிறு சென்னையில் வாசம். வெளியில் எங்கும் செல்லாமல், இளையராஜாவின் இசை வீடெங்கும் ததும்பி வழிய அதில் லயித்த படியே வீட்டை ஒழுங்குபடுத்தி சாதம்,சாம்பார்,அப்பளம்,கேரட் தயிர் பச்சடி என்று பேச்சிலர் சமையல் நிதானமாக சமைத்து முடித்திருக்கிறேன். தினந்தோறும் தொடரும் டென்சன் ஏதுமின்றி இப்படி எப்போதேனும் தனிமையில் இருப்பது, வெயிலில் அலைந்து திரிந்த பின் மர நிழலில் 
வந்து இளைப்பாறுவதற்கு ஒப்பானது. (தனிமையின் வசம்)

------

அப்பா மறைவுக்கு பின் அவருக்காக வாங்கிய மாத்திரைகள் இருந்தது. அதை திரும்ப கொண்டு போய் மருத்துவமனை மருந்தகத்தில் கொடுத்தேன். வேறு ஏதேனும் வேண்டுமா சார் என்றார்கள். வேண்டாங்க என்றவுடன் பணம் திருப்பி கொடுத்தார்கள் இன்னொரு மருந்தகத்தில் ஒரு மாத்திரை பட்டை திரும்ப கொடுத்த போது வாங்கி ரெண்டு மாசம் ஆகிடுச்சே அதனால் காசு தருவது கஷ்டம்.வேறு ஏதேனும் வாங்கி கொள்ளுங்கள் என்றார்கள். எனக்கு கோபம் வந்து விட்டது காசு தர முடியாது பொருளாக தான் தருவோம் என்று சொல்லுங்கள் அதை விட்டுட்டு ரெண்டு மாசம் ஆனதால் பொருளாக தான் தருவோம் என்று சால்ஜாப்பு சொல்ல வேண்டாம் என்றேன்.நாங்க என்ன சொல்றோம்னு புரிஞ்சிட்டு பேசுங்க என்றார்கள் எனக்கு புரியுது நான் சொல்றது தான் உங்களுக்கு புரியல. பொருளாக தான் வாங்கணும் என்றால், என்னை என்ன டாக்டரிடம் போய் ஏதேனும் மருந்து சீட்டு வாங்கி வர சொல்கிறீர்களா என்றேன். பதில் பேசாமல் பணம் திரும்ப கொடுத்து விட்டார்கள். 100 ரூபாய்.சிறிய தொகை தான். இருந்தும் அதையும் வியாபாரமாக்கி விட அவர்கள் முனையும் போது நான் அதை காசாக்கி விட முயற்சிக்க கூடாதா.

------

சமீபத்தில் ஒரு நாள் காலை சென்னையிலிருந்து கோவை எக்ஸ்பிரஸ்ஸில் 6.15 மணிக்கு கிளம்பி திருப்பூர் வந்து சொந்த வேலையை முடித்து கொண்டு, பின் மதியம் 3.30 மணிக்கு கிளம்பி கரூர், திருச்சி, தஞ்சாவூர், என்று ஒவ்வொரு பேருந்தாக மாறி கும்பகோணம் வந்து சேர்ந்த போது மணி 
இரவு 10.30. ஊர் ஊராக சுற்றி வர வேண்டும் என்று முன்பு நிறைய ஆசைப்பட்டதுண்டு. இப்ப இதற்கு தானே ஆசைபட்டாய் (சரவணா) என்று தொடர் பயணங்கள் என்னை டாப் கியர் ல கொண்டு போயிட்டிருக்கு 
இதுல பைனல் டச் என்னன்னா இன்னிக்கு சென்னை கிளம்பியாகணும்.
(என்னது மறுபடியும் முதல்லேருந்தா)

------

சென்னைக்கு வேலை தேடி வந்த புதுசு. சென்னையில் எந்த இடமும் தெரியாது.ஒரு நாள் அப்பாவுடன் எனது வேலை விசயமாக வெளியில் வந்திருந்தேன்.(அவர் பயங்கர ஸ்ட்ரிக்ட் அடிச்சார் என்றால் கண் மண் தெரியாமல் அடிப்பார்.எந்த இடம் என்றெல்லாம் பார்க்க மாட்டார்)
பாக்யாவின் தீவிர வாசகனான எனக்கு அந்த வார பாக்யா எப்படி சென்று வாங்குவது என்று தெரியாமல் தவித்தேன். அவர் ஒரு அலுவலகத்தில் என்னை அமர வைத்து விட்டு உள்ளே சென்று விட்டார். அந்த கொஞ்ச நேர இடைவெளியில் பக்கத்திலிருக்கும் கடைக்கு அவசரமாய் சென்று கடையில் அந்த வார பாக்யா வாங்கி எனது சட்டைக்குள் செருகி வைத்து கொண்டேன். வீட்டுக்கு வந்து தான் எடுத்தேன். அது வரை அவர் கண்ணில் தென்படாமல் சட்டைக்குள் வைத்திருந்த அந்த த்ரில்லிங் இன்னிக்கு நினைச்சாலும் சிலிர்ப்பா இருக்கு
------

நேற்று நான் புக் ஷாப் சென்றிருந்த போது , வார இதழ்கள் வாங்கிய ஒருவரிடம் "மீதம் சில்லறை இல்லை 5 ரூபாய் புக் ஒண்ணு எடுத்துக்குங்க" என்றார் கடைக்காரர்.முன்னாடி ஒரு ரூபாய் சில்லறை இல்லேன்னு சாக்லேட் கொடுத்துட்டு இருந்தாங்க. இப்ப 5 ரூபாய்க்கு புத்தகம் 
கொடுக்கிற அளவுக்கு முன்னேற்றம் . நாம் கொண்டு போகும் காசு மொத்தத்தையும் (சில்லறை இல்லை என்ற சாக்கு வைத்து கொண்டு)
வியாபாரம் ஆக்காமல் விட மாட்டாங்க போலிருக்கு.

-----

சில பாடல்கள் கேட்கும் போது காலசக்கரத்தில் ஏறி பள்ளி கல்லூரி காலத்துக்கே நம்மை அழைச்சிட்டு போன மாதிரி ஆகிடுது. உதாரணம் சொல்லணும்னா ராம்கி நிரோஷா நடித்த, ஆபாவாணனின் செந்தூர பூவே படத்தில் வரும் சின்ன கண்ணன் தோட்டத்து பூவாக ஒரு தேவதை வந்தது நேராக வெண்ணிற ரோஜா தன்னிறம் மாறி மாலை சூடுதோ.... (பாட்டு முடிஞ்ச பின்னாடி திரும்ப நிகழ்காலத்துக்கு வராம அடம் பிடிக்க வச்சிடுது)

------

படம் பார்க்க தியேட்டருக்கு சென்றேன். (அதாவது 7.30 மணி). டிக்கெட் கவுன்ட்டரில் "படம் போட்டு அரை மணி நேரமாச்சு சார் பரவாயில்லையா" என்றார்கள் "வெளியாகியிருக்கும் இரு படங்களில் எந்த படம் தாமதமாக சென்றாலும் புரிந்து கொண்டு பார்க்கும் படி இருக்கும்" என்று கேட்டேன்.
அதற்கு அவர் சொன்ன பதில் "நான் இந்த ரெண்டு படத்தையும் இன்னும் பார்க்கல சார்"  (ஸ்வீட்  கடையில் வேலை பார்த்துட்டே ஸ்வீட் சாப்பிடாமல் இருப்பது னு சொல்வாங்களே. அது தானா இது ) 



முகநூலில் நான் எழுதிய (அல்லது கிறுக்கிய) வற்றில் சில சுவாரஸ்யங்களை
 தான் இங்கே பதிவிட்டிருக்கிறேன். படிக்காதவர்களுக்காக.ஏற்கனவே 
படித்தவர்கள் பொறுத்து கொள்ளுங்கள். 

ஒரே வாரத்தில் நான் பார்த்த படங்களை பட்டியலிட்டதில் கிடைத்தது 
இந்த பதிவிற்கான தலைப்பு 


படம் : கங்கை கொண்ட சோழபுரத்தில் நம் பதிவுலக நண்பர்கள் 
உழவன் ராஜா,ராம்குமார்,வெற்றிவேல்,சீனு,கோவை ஆவி,
ஸ்கூல் பையன், ரூபக் ராம் 

FINAL PUNCH 

கஷ்டம் வரும் போது மட்டும் கடவுளை காண வருவதை போல், கும்பிட்ட படி 
வாக்கு வரம் வேண்டி வரும் பக்த வேட்பாளர்கள் முன் ஒரு நாள் உற்சவராய் 
மாறி நின்று கொண்டிருக்கிறோம் (விரும்பியோ விரும்பாமலோ ) 

ஆர்.வி.சரவணன் 


ஞாயிறு, ஏப்ரல் 13, 2014

ஆவிப்பா B(u)Y கோவை ஆவி




ஆவிப்பா   B(u)Y  கோவை ஆவி 

நண்பர் கோவை ஆவி எனும் ஆனந்த விஜயராகவன் பதிவர் திருவிழாவில் தான் எனக்கு அறிமுகமானார். அன்றைய விழாவில் 
அவர் எழுதி இசையமைத்து பாடிய பாடலில் அவரோடு சேர்ந்து பயிற்சியெடுத்து பாடிய நிகழ்வு அவருக்கும் எனக்குமான நட்புக்கு அடித்தளமிட்டது.முகநூல், தள பதிவுகள் என்று தொடர்ந்த நட்பில் 
எனது நூல் வெளியீட்டு விழாவிற்கு கோவையிலிருந்து வந்திருந்து 
சிறப்பு சேர்த்தார். 

அவரது ஆவிப்பா நூல் வெளியீட்டு விழாவிற்கு வரவேற்புரையாற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்த போது மேடையில் பேசவே தைரியத்தை வரவேற்க வேண்டிய நிலையில் உள்ள நான் எப்படி 
என்று திணறினாலும் அவரிடம் மறுக்க முடியாமல் விரும்பி ஏற்று கொண்டதுடன் அதில் ஆர்வமுடனும் கலந்து கொண்டேன்.





நூல் வெளியீடு 

புலவர் குரல் ராமானுஜம் அய்யா நூலை வெளியிட கோவை ஆவியின் தந்தை பெற்று   கொண்டார். விழா மேடையில் தன் தந்தை தாயை அமர வைத்து கோவை ஆவி தானும் மகிழ்ந்து கலந்து கொண்டவர்களையும் நெகிழ வைத்தார். சுப்பு தாத்தா, ராய செல்லப்பா, வெற்றிவேல்,சீனு, சிவகுமார்,ஸ்கூல் பையன் பாலகணேஷ், அனன்யா,கீதா ரங்கன் வேடியப்பன் மற்றும் பலரும் பங்கேற்று வாழ்த்தி விழாவை
சிறப்பித்தனர் சீனு,தொகுப்புரையும் ரூபக் ராம் நன்றியுரையும் 
வழங்கினர்.




சீனு தொகுப்புரை 


மதுமதி பொன்னாடை போற்றி வாழ்த்து 



வெற்றிவேல் பேசுகிறார் 

நூல் பற்றிய எனது பார்வையை ஆர்வமுடன் இங்கே பதிவு செய்கிறேன்  
"கவிதை எழுதிட இலக்கணமும் இலக்கியமும் அவசியம் என்று பயந்து ஒதுங்கி நிற்போரை கூட வியக்க வைப்பதுடன் பார்ப்பதை எல்லாம் எழுத்தில் வடிக்கும் அழகு இது" என்று திருமதி மஞ்சுசுபாஷினி அவர்கள் தன் அணிந்துரையிலும், "விதிமுறைகளற்ற கவிதை என்ற ஒற்றை விதியை சாதகமாக்கி கொண்ட ஆவிப்பா இது" என்று சீனு தன் வாழ்த்துரையிலும் அழகு பட உரைத்திருக்கின்றனர்.

படிக்கும் பழக்கம் வளர்த்த அன்னைக்கும், அழகான கையெழுத்தால் எழுத்தின் மீது ஆர்வத்தை தூண்டிய தந்தைக்கும், அன்பு சகோதரி தன் வாசகி ஆனதையும், தங்கை கணவர் அறையை நூலகம் ஆக்கியதன் மூலம் படிக்கும் எண்ணம் அதிகமானதையும், பாலகணேஷ் அவர்கள் இந்நூல் உருவாக்கத்தில் ஆற்றிய பங்கையும் இங்கே நன்றியுரையில் நேசத்துடன் பகிர்ந்திருக்கிறார் நண்பர் கோவை ஆவி 


மேடையில் கோவை ஆவியின் பெற்றோர் 
மற்றும் ராமானுஜம் அய்யா சுப்பு தாத்தா 


ராய செல்லப்பா பேசுகிறார் 

புலி மார்க் சீயக்காய்க்கும் புலிக்கும் உள்ள தொடர்பே இந்த நூலுக்கும் நஸ்ரியாவுக்கும் உள்ள தொடர்பு என்ற டைட்டில் சிரிக்க வைக்கிறது முதல் இரண்டாம் மற்றும் எல்லாக் காதலிகளுக்கும் இந்த நூலை 
சமர்த்திருப்பதை பார்க்கும் போது நம் இதழ்களில் தோன்றும் புன்னகை சில பக்கங்களில் வலுப்பெறுகிறது.பல பக்கங்களில் அட போட
வைக்கிறது. சீனு சொல்வது போல் நஸ்ரியவாவின் முக பாவனைகளுக்கு ஏற்ப நண்பர் எழுதினாரா இல்லை இவரது வார்த்தைகளுக்கு ஏற்ற 
முக பாவனைகள் முன்னமேயே அவர் தந்து விட்டாரா என்று நினைக்க தோன்றுகிறது. வாருங்கள் பக்கங்களுக்குள் ஒரு உலா செல்வோம்




ஸ்கூல் பையன், சிவகுமார், ருபக்ராம்

காதலி சொல்லும் உஷ் எனும் வார்த்தை கூட ஒரு ஹைகூ 
தான் என்றுரைக்கிறது (11)

கடவுளை காத்திருக்க சொல்லி விட்டு காதலியுடன் செல்ல 
துடிக்கும் காதலை சொல்கிறது (13)

க என்ற எழுத்துக்களில் ஆரம்பமாகும் எழுத்துக்கள் தந்திருக்கும் 
பா ஒன்று, கஷ்டப்பட்டு சாவதை விரும்பாமல் இஷ்டப்பட்டு 
வாழ விரும்புவதை சொல்கிறது (17)

இமயமலையில் நடந்து எவரெஸ்டைதொடுவது போன்றது காதலின் பின்னே அலைவது என்ற உவமையை சொல்கிறது (18)

பிரிதலை பற்றிய புரிதலை வார்த்தைகளால் கோர்த்திருக்கும் பா
ஒன்று இங்கே (19)

மேல் சட்டை மேல் என்பதை ஆங்கிலம் கலந்து சொல்லும் பா (21)

இரண்டாய்வெட்டப்பட்ட வெங்காயத்திற்கு கண்ணீர் வரும்.
பா வருமா என்றால் வரும் என்கிறார் (27)

கோலம் போடும் கோலமயில் தன்னை அலங்கோலமாக்கியதை 
வார்த்தை களில் இடும் கோலம் (32)

இடை பற்றி இடைவிடாமல் வார்த்தைகளிட்டு தொடர்கிறது 
பா வொன்று (37)

பசியையும் புசியையும் பற்றி வரும் பா அல்சர் (காதலின்) 
அவதியை சொல்கிறது (42)

தன் காதல் வண்ணத்துபூச்சி கருப்பு வெள்ளையில் இருந்தாலும் 
அது வர்ணம் பெற்ற விதம் இங்கே (53)

வீரன் மற்றும் தேவதை இவர்களின் தன்மையை இங்கே மாற்றி போடப்பட்ட கவிதை அட சொல்ல வைக்கிறது (54)

"மண மேடையில் நீ
பக்கத்தில் நான்
கழுத்தில் மாலையோடு நீ"
என்ற பா வில் அடுத்த வரியை நாம் ஆர்வத்தோடு அவசரம் 
கலந்து கவனிக்கையில், "கண்ணீருடனும் கிப்டோடும் நான்" 
என்று முடிப்பது காதல் தோல்வியை முகத்தில் 
அறைகிறது (55)

வெட்கம் பெண்களுக்கு மட்டுமா சொந்தம். ஆண்களுக்கும் உண்டு 
என்று உரிமை கொண்டாடுகிறார் (56)

சாதாரண வரிகளில் காதல் சுவையையும் , நகைச்சுவையையும் கலந்து தந்திருக்கும் இந்த குறும்பாக்கள்  நம்மை ஈர்க்கிறது. சில குறும்பாக்களின் வரிகள் இன்னும் பட்டை தீட்டப்பட்டிருக்கலாம். வரிகளை மாற்றி 
போட்டு எழுதியிருக்கலாம் அது இன்னும் சிறப்பு சேர்த்திருக்கும் 
என்பது என் கருத்து. நண்பர் சமுதாயம் பற்றிய சிந்தனைகளை 
கொண்ட குறும்பாக்களை அடுத்து எழுத முயற்சி மேற் கொள்ள 
வேண்டும் என்பது என் அவா 




கோவை ஆவியின் பேச்சில் வெளிப்பட்ட தோற்றங்கள் 

கோவை ஆவியின் ஆவிப்பா நூலின் வெற்றி அவர் இனி தொடர 
போகும் முயற்சிகளுக்கு ஊக்கம் சேர்ப்பதாக அமையட்டும் என்று 
உளமார வாழ்த்துகிறேன்

FINAL PUNCH 

இப் பதிவில் கோவை ஆவியின் நூல் பற்றி பகிர்ந்து கொண்டாலும் அவரை பற்றியும் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு, முகநூலில் 
நான் வெளியிட்ட ஒரு கருத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன் 

நேற்று பாரிமுனைக்கு பால கணேஷ் சாருடன் கோவை ஆவி வந்திருந்த போது வர முடியுமா என்று அழைத்தார். காலை நேர அலுவலக நெருக்கடிகளுக்கு இடையிலும் சென்று பார்த்து பேசி விட்டு வந்தேன். என் ஊரிலிருந்து உறவினர்கள் வருவதுண்டு வேலையை முடித்து விட்டு கிளம்பும் போது வீட்டுக்கு வர முடியவில்லை இருந்தாலும் உன்னை பார்க்க வேண்டும் போல் உள்ளது வருகிறாயா என்று அழைப்பார்கள்.நான் சென்று 
பார்த்து விட்டு வருவது மனதுக்கு ஒரு நிறைவை உற்சாகத்தை கொடுக்கும். நேற்று என்னை கோவை ஆவி அழைத்து பேசி விட்டு சென்றது அது போன்றதொரு உற்சாகத்தை கொடுத்தது

ஆர்.வி.சரவணன் 




புதன், ஏப்ரல் 09, 2014

இருமன அழைப்பிதழ்-3







இருமன அழைப்பிதழ்-3


சரண் ஆகிய நான் மனதுக்குள் குதுகலமாகி  கொண்டிருந்தேன். ராதாவை   திருமணம் செய்து கொள்வது என்பது  என் வாழ்க்கையில் எவ்வளவு  பெரிய கிப்ட் தெரியுமா. என்னடா இவன் குழப்பறான் னு உங்களுக்கு தோணுமே.விசயத்துக்கு வந்துடறேன் 


நான் ராதாவின் மாமா பையன். அதாவது  துரத்து சொந்தம். நெருங்கிய சொந்தமாகி 
விட தான் பிரயத்தன பட்டு கொண்டிருக்கிறேன் .ராதாவின் மேல் எனக்கு காதல் கீதல் கத்திரிக்காய் வெண்டைக்காய் என்றெல்லாம் கதை விட நான் தயாரில்லை.ஏன்னா 
நான் ப்ராக்டிகல் மேன். எனக்கு ராதாவை, அவள்
அழகை,படிப்பை,புத்திசாலித்தனத்தை பிடித்திருக்கிறது. அவள் அப்பாவின் பணம் 
இதையும் சேர்த்துக்கலாம்.இப்படிப்பட்ட பெண் மனைவியானால் யார் தான் வேண்டாம் என்பார்கள். எனவே அவளை அடைவதே (இந்த வார்த்தை தப்பா தெரியுது ) மணந்து கொள்வது வாழ்க்கையின் லட்சியமாய் அதுவே லட்சணம் என்பதாய் கருத்தில் இருத்தி கொண்டேன் 

என் ஆசை தெரிந்து என் பெற்றோர் ராதாவின் அப்பாவிடம் சம்பந்தம் பேசினார்கள் ஆனால் 
அவர் இதை பேராசை என்று கிண்டலடித்தார். அவர் எதிர்பார்க்கும் மாப்பிள்ளை வெளி நாட்டில் வேலையிலிருக்க வேண்டுமாம் (இது தானே பேராசை) வெளிநாட்டை  நான் வரைபடத்தில் மட்டும் பார்த்ததிருக்கிறேன் 


சரி குறுக்கு வழியில் செல்லலாம் என்று ராதாவின்  மனதில் இடம் பிடிக்க நினைத்தேன். என் பார்வை, சிரிப்பு, தோற்றம், பேச்சு எதையும் அவள் லட்சியம் செய்யவில்லை என் கனவில் மட்டுமே என்னை லட்சியம் செய்தாள். வேறு எவனாவது எனக்கு முன்னாடி  
ரிசர்வ் பண்ணிட்டானா என்று நொந்து போன நேரத்தில் கிருஷ்ணா வேறு ராதாவுடன்  
பழகியது எனக்கு எரிச்சலை வாரி வழங்கியது. அவனிடம்  அவர்கள் 
பழக்கத்தை பற்றி கொஞ்சம் உரசி பார்த்தேன். உண்மையான நண்பர்கள் சொல்லி பெருமைபட்டான். அவனை விட நான் பெருமைப்பட்டேன்.


கிருஷ்ணா வேலைக்காக சென்னை செல்ல இப்போது என் வாழ்க்கை நதியில் சந்தோஷம் கரை புரண்டு ஓடியது. ராதாவிடம் என் விருப்பத்தை சொன்னேன். அவள் கிண்டலாய் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு வேறு வேலை இருந்தால் பாரேன் என்று சொல்லி விட்டாள். அவளை தவிர வேறு வேலை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.


ஆனால் ராதாவுக்கு கல்யாண வேளை வந்தது. திருமணம் நிச்சயமானது. ஹீரோவாகலாம் என்று ஆசைபட்ட நான் வில்லனாக வேண்டிய கட்டாயத்துக்கு வந்து விட்டேன். திருமணத்தை எப்படியாவது  நிறுத்தும் எண்ணத்துடன் வந்திருக்கிறேன். மாப்பிள்ளை குடும்பத்தில் நான் செலுத்தியிருக்கும் ஏவுகணை  எப்போது தன் வேலையை ஆரம்பிக்கும் 
என்று பதட்டத்துடன் காத்து கொண்டிருந்தேன்.


யாரோ ஒருவர் ஓடி வந்து ராதாவின் அப்பாவை அழைத்து கொண்டு மாப்பிளையின் ரூம் 
செல்ல சில நிமிடங்களில் ராதாவின்   அப்பா 
கோபமாய் வெளி வந்தார். கூடவே மாப்பிளையின் குடும்பம்மும் 


"என்னங்க என்னாச்சு "


"என்னாச்சா எவனோ ராஸ்கல் நாம் பொண்ணுக்கு போட்டிருக்கும் நகையெல்லாம் போலி. குடும்பம் அப்படி ஒண்ணும் சரியில்லை னு மொட்டை கடிதாசி எழுதியிருக்கான். 
அதை போய் பெரிசா எடுத்துட்டு இவங்களும் உண்மையானு கேட்கறாங்க" 

"சந்தேகம்னு வரும் போது தெளிவுபடுதிக்கிறது நல்லது தானே" 

மாப்பிள்ளையின் அப்பா 

"இதுலேயே தெரியுதே எங்க மேல உங்களுக்கு நம்பிக்கையில்லன்னு.
 மனுஷனுக்கு நம்பிக்கை அவசியம் சார்"


" அதுக்காக நாங்க ஏமாற முடியாது"


"நாங்க யாரையும் ஏமாற்றலை. எங்களோடது கௌரவமான குடும்பம்"


"அப்புறம் ஏன் இப்படி லெட்டர் வருது "


(ஆகா என்னோட ஏவுகணை இலக்கை தொட்டுருச்சி)


ராதாவின்  அண்ணன் "உங்க பையனை பத்தி கூட தான் எங்களுக்கு அரசல் புரசலா நியூஸ் வந்துச்சி. நாங்க எதுனா கேட்டோமா. நல்ல குடும்பங்கள் ஒண்ணு  சேரும் போது இப்படி எதுனா நியூஸ் வரது சகஜம் தான். இதை போய் பெரிய விசயமா பேசிட்டிருக்கீங்க"


" பொய் சொல்லாதே என் பையன் சொக்க தங்கம் "


"அதே தான் நாங்களும் சொல்றோம் எங்க நகையும் சொக்க தங்கம். வேணும்னா நகையை 
நாங்க செக் பண்ணி நீருபிக்க முடியும் உங்க பையன் நல்லவன் ன்னு எப்படி ப்ரூப்
பண்ண போறீங்க" 


மாப்பிள்ளையின் அப்பா கோபமாய் 

"இந்த கல்யாணம் நடக்காது வாங்க நாம போகலாம்"

"முதல்ல அதை செய்ங்க" என்று சீறினார் ராதாவின் அப்பா 

மாப்பிள்ளை கோபமாய் எகிற ஆரம்பிக்க ராதாவின் அண்ணன் அவனை அடிக்க ஓட கிருஷ்ணா தடுக்க எல்லோரும் பதட்டமாய் இதை கவனித்து கொண்டிருக்க, நான்  ராதாவை கவனித்தேன் மணப்பெண் கோலத்தில் அவளை பார்க்க ஒரு தேவதை போல் இருந்தாள். வருகிறேன் காத்திரு என்று அவளுக்கு சொல்வது போல் எனக்குள் சொல்லி கொண்டேன் 


எனது பெற்றோர்  சமாதான முயற்சியில் இறங்க அவர்கள் செயல் நியாயமாயினும் எனக்கு 
அது கஷ்டமாச்சே என்று அவர்கள் மேல் எரிச்சல் வந்தது.


 "போகட்டும் விடுங்க "என்ற ராதா அப்பா சலிப்புக்கு செல்ல 
   நான் களிப்புக்கு சென்றேன்.


"பொண்ணு மேடை வரைக்கும் வந்தாச்சு என்ன பண்ண போறீங்க" என்று  ஒருவர் 
குரல் (எடுத்து)கொடுத்தார்.



(இத சொல்றதுக்குன்னே யாராவது ஒருத்தர் கல்யாணத்திற்கு வருவாங்களோ)

 "உங்க சொந்தத்திலேயே தான் பையன் இருக்கானே  அவனை முடிச்சிடுங்களேன் "
இப்படி ஒருவர் சொன்னார்.
(ஆகா அவர் வாய்க்கு சர்க்கரை மூட்டையை தான் கவிழ்க்கணும்) 

நான் என் பெற்றோரை உற்சாகமாய் கவனிக்க அவர்களும் என்னை அப்படியே ரீபீட்டினார்கள் 
நான் உட்கார்ந்திருந்த சீட்டே என்னை தனது நுனிக்கு தள்ளி விட்டது போன்ற பிரமை 

இப்போது ராதாவின் அண்ணன் 

"அப்பா நான் ஒரு ஐடியா கொடுக்கலாமா "

"சொல்லுப்பா" உடைந்த குரலில் ராதா அப்பா 

"நம்ம கிருஷ்ணா இருக்கான்ப்பா அவனை கேட்கலாமே.ரொம்ப நல்ல பையன்ப்பா 
ராதாவின் மனசறிஞ்சு நடந்துக்குவான்."

 ராதாவின் அப்பா யோசனையாய் தன் மனைவியை பார்த்தார்.

" ஆமாங்க கைல வெண்ணையை வச்சுக்கிட்டு நெய்க்கு அலைஞ்ச மாதிரி நாம ஏன் கஷ்டபடணும்.  ராதாவுக்கு கிருஷ்ணா தான் சரியானா பொருத்தம். இதை முன்னாடியே செஞ்சிருக்கலாம்"

எனது ஏவுகணை குறி தவறி எனக்குள்ளே பேரிடியாய் இறங்கி கொண்டிருந்தது.

ராதாவின் அப்பா கேள்விக்குறியாய் அவளை பார்க்க, அவள் கிருஷ்ணாவை  பார்த்து வெட்க புனனகையுடன தலை குனிய கிருஷ்ணா பரவசத்துடன்  தன் பெற்றோரை பார்க்க அவர்களும் தலையசைக்க ராதாவின் அண்ணன் கிருஷ்ணா கை பிடித்து "மாப்ளே மாப்ளே னு சொன்ன வார்த்தை உணமையாகிடுச்சு மாப்ளே" என்று சிரிப்புடன்  மேடைக்கு அழைத்து சென்றான்.
மேளம் முழங்கி கொண்டிருக்க, என் உள்ளம் குமுறி கொண்டிருக்க கிருஷ்ணா ராதாவின் கழுத்தில் தாலியை கட்டி கொண்டிருந்தான் 

"கல்யாணம் முடிய போகுது சாப்பிட்டுட்டு போங்க" என்று கல்யாண மண்டப வாசல் 
வரவேற்பில் இருந்தவர்கள் என்னை தொடர்ந்து கூப்பிட்டு கொண்டிருக்க நான் கண்களில் 
கண்ணீரை அணிந்த படி வெளியேறி கொண்டிருந்தேன்.

-------------------

முற்றும் 

நன்றி திரு.ஓவியர் மாருதி அவர்கள் 

FINAL PUNCH  

இந்த கதை நான் எழுதிய ராதாகிருஷ்ணன் என்ற திரைகதையின் கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் எடுத்து  ஒரு சிறு கதையாக்கியிருக்கிறேன்.இதை (முடிந்தால்) குறும்படமாக எடுக்கும் ஐடியாவும் எனக்கு இருக்கிறது. 2000 வது வருடத்தில் குமுதம் நடத்திய சிறுகதை போட்டிக்கு இதை அனுப்பியிருந்தேன்.தேர்வு பெறவில்லை.உங்களிடம் தேர்வு பெற்றிருந்தால் எனக்கு சந்தோசமே. 

ஆர்.வி.சரவணன் 

திங்கள், ஏப்ரல் 07, 2014

இருமன அழைப்பிதழ்-2





இருமன அழைப்பிதழ்-2


கதாநாயகன் கிருஷ்ணா 

கிருஷ்ணா வந்து கொண்டிருந்த அந்த பேருந்தில் மற்ற பயணிகள் தூங்கி கொண்டிருக்க அவன் 
மட்டும் டிரைவருக்கு துணையாக போல் விழித்துகொண்டிருந்தான்அந்த இரவின் அமைதி 
அவனுக்குள் இல்லை .காரணம் ராதாவின் கல்யாண விஷயம் கேள்விபட்டதிலிருந்து 
அவன் மனம் தவித்து கொண்டிருந்தது.அதற்கு அடுத்து வந்த  எந்த இரவும் அவனால் தூங்க
முடியவில்லை . உமாவின் மேலுள்ள காதலை உள்ளுக்குள் வைத்து அல்லாடுவது 
பச்சை மிளகாயை கண்ணில்வைத்து கொண்டது போல் இருந்தது.


இப்போது பார்த்து கொண்டிருக்கும்  வேலை கிடைத்தது கூட ராதாவின் முயற்சியால் 
தான் . அவள் தான் ஹிந்து பார்த்து அப்ளை பண்ண சொன்னாள்.வேலை கிடைத்தது.
 நல்ல சம்பளத்தில்வேலையில் சேர்ந்தான். வேலை கிடைக்காமல் கஷ்டபட்டவனுக்கு  
இந்த வேலை மிக பெரிய அந்தஸ்தை கொடுத்தது.அது சந்தோசத்தை தந்தாலும் 
அவளை விட்டு பிரிந்து வந்தது தான் ரொம்ப கஷ்டமாக இருந்தது.




முதல் சம்பளம் வாங்கியவுடன் அவளுக்கு பிடித்தவற்றையும் வாங்கிகொண்டு 
உடனே ஊருக்கு வந்தான். வீட்டில் உங்களை பார்க்க வேண்டும் போலிருந்தது என்று 
பொய் சொன்னான். அவளிடம் உன்னை பார்க்க வேண்டும் போலிருக்கிறது 
என்று மெய் சொன்னான்.

தினம் அவளை பார்த்த போது தோன்றாத காதல் அவளை பார்க்காத இந்த 
ஆறு மாதங்களில் மனதில் துளிர் விட்டது. நட்பா காதலா என்று அவன்
மனதுக்குள் நடந்த பட்டி மன்றத்தில் 
காதல் அதிக மதிப்பெண் எடுத்து சுலபமாக வெற்றிபெற காதல் இப்போது விருட்சமாய்
ஆகியிருந்தது. காதலை உள்ளுர பதுக்கினான். தான் எழுதும்கவிதைகளில் அவளை மையமாக கொண்டே எழுதினான். அதை அவளிடம் படிக்ககொடுத்தான்.ராதா படித்து விட்டு நல்லாருக்கே யாரந்த அதிர்ஷ்டசாலி என்று மட்டுமே சொன்னாள்.தன்னை அதில் பொருத்தி பார்த்ததாக இவனுக்கு தோன்றவில்லை.எப்படி காதலை சொல்வது மேலும் அவர்கள் குடும்பத்தில்
அம்மா, அப்பா, அவள் அண்ணன் எல்லோரும் அவனை தங்கள் வீட்டுபிள்ளையை 
போல் தலையில் துக்கி வைத்து கொண்டாடுவது  அவனை காதலில் முன்னேற விடாமல் தடுத்தது 


இந்த நிலையில் ராதாவுக்கு  கல்யாணம் என்று அவள் அண்ணன் சொன்ன அடுத்த விநாடி ராதாவுக்கு பிடிச்சிருக்கா என்று தான்  கேட்டான். அவள் சம்மதம் இல்லாமல் 
எப்படி முடிவு செய்வோம் என்று அவள் அண்ணன் சொன்னதும் தான் அவளே சம்மதம் 
சொல்லி விட்டாள்  எனும் போது நம் காதலுக்கு கொடுப்பினை இல்லை அவளை 
மனைவியாய் அடையும்  அதிர்ஷ்டமில்லை என்ற உண்மை புரிய வெறுத்து போய் தன் போன்நம்பரை மாற்றினான்.அலுவலகத்தில் 
வேறு ஒருவர் செல்ல வேண்டிய பஞ்சாப் வேலையை தான் செல்வதாக
 கூறி அங்கு சென்று விட்டான். ராதாவின் அண்ணன்  வட இந்தியாவில் இருந்த தன் நண்பனை இவனை பார்க்க அனுப்பியிருந்தான்.அவன் 
கொண்டு வந்து கொடுத்த கல்யாண
பத்திரிகையுடன் நீ வரலை என்றால் இனி 
என் முகத்தில் முழிக்காதே என்று லெட்டர் பார்த்து விட்டு  இதோ கல்யாணத்திற்காக புறப்பட்டு
 வந்து கொண்டிருக்கிறான் .

கிருஷ்ணா பேருந்தை விட்டு இறங்கிய போது எதிரே ராதாவின் அண்ணன் 

வண்டியுடன் நின்று கொண்டிருந்தான்அவனை பார்த்ததும் "ஏண்டா 
கல்யாண வேலையை விட்டுட்டு வந்திருக்கே  நான் வர மாட்டேனா "
என்றான்.


"இதுவும் ஒரு வேலை தான் உட்கார்" என்று சொல்லி வண்டியை 
கிளப்பினான்.அவன் 

கல்யாண மண்டபம் வந்ததும்  உள்ளே சென்று ராதாவின்  அப்பாவை பார்த்த போது 

அவர் வாடா செல்லம் என்று அழைத்து போய் தன் உறவினர்களிடம் எங்க வீட்டு பிள்ளை 
மாதிரி என்றுஅறிமுகபடுத்தினார். ராதாவின் அம்மா கை பிடித்து 
அழைத்து போய் ராதாவுக்கும்
மாப்பிளைக்கும் வாங்கிய நகைகள்  புடவை பைக் என்று ஒவ்வொன்றையும் ஆர்வமுடன் காட்டினார். ராதாவை  போய் பார் என்றும் அனுப்பி வைத்தாள்.


கார்த்திக் உச்சகட்ட தயக்கத்துடன் ராதாவின் அறைக்குள் நுழைந்தான்
அங்கே அவள் ஜன்னலை பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தவள் இவனை 
பார்த்தவுடன் திரும்பினாள்.




"நீ இன்னும் தூங்கலே " என்றான் கிருஷ்ணா 

"கல்யாணம் பேச ஆரம்பிச்சதிலருந்து நான் தூங்கலே ஆனா உனக்கு நல்லா தூக்கம் 
வந்திருக்குமே" இது ராதா 

"அப்படில்லாம் இல்லை " வேறு பக்கம் பார்த்த படி சொன்னான் 

"பொய் சொல்லாதே உனக்கும் எனக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கு. ரெண்டு 

பெரும் எந்த விசயத்தையும் மறைக்க கூடாதுனு. சோ பொய் சொல்லாம
 சொல்லு . ஒருநாள் நான் உனக்கு போன் 
பண்ணலேன்னா கலங்கி போற நீ ஏன் நம்பர் மாத்தி  ஊருக்கு போனே 
சொல்லு" என்னை பார்த்து பேசு 
அதட்டினாள் 


" நான் உன் கிட்டே மறைச்சது ஒன்னே ஒன்னு தான் அது நான் உன்னை 
காதலிக்கிறது எப்படி உன்கிட்டே சொல்றது நீ தப்பா நினைச்சுட்டா என்ன பண்றதுனு தான் உன்கிட்டே சொல்லாமல் 
மறைச்சேன். .உனக்கு கல்யாணம் னு நியூஸ் வந்தவுடன் என்னாலே தாங்கிக்க முடியல அதான் வெறுத்து போய் உன்னிடம் பேசுவதை
 தவிர்த்தேன் ."


என்று கிருஷ்ணா சொன்னவுடன் ராதா "லூசு லூசு" என்று சொல்லவும் 
அவள் வேகத்தையும் அவள் கண்களில் தெரிந்த பிரகாசத்தையும் பார்த்து சற்றே மிரண்டான்.

"இதை இப்ப  வந்து சொல்றே நீ .இந்த வார்த்தை உன் கிட்டே இருந்து வராதான்னு  ஒவ்வொரு வினாடியும் காத்துக்கிட்டிருக்கேன்" கன்னங்களில் வலிந்த கண்ணீரை துடைத்த படியே சொன்னாள் 


கிருஷ்ணாவிற்கு சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை .இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த படியே உற்சாகத்தில் காதலை சொல்லாமல் இருந்ததற்காக தலையிலடித்து கொண்டார்கள் 

"இப்ப என்ன செய்றது "

"உங்க அண்ணன் கிட்டே சொல்லி பார்க்கலாம் முடியாது னு சொன்னால்" 

என்று இழுத்தான் 


"நான் விட மாட்டேன் " என்றாள்  ராதா அவளது  தைரியம் தன்னிடம் இல்லையே என்று நினைத்த போது தான் ராதாவின் வீடு அவன் மேல் வைத்திருக்கும் மரியாதை தான் அவனை  
 தடுத்து கொண்டிருக்கிறது என்பது புரிந்தது. இதை எப்படி அகற்றுவது என்று தெரியாமல் விழித்தான் 

அப்போது உள்ளே நுழைந்தான் ராதாவின் முறை பையன் சரண் .இவர்கள் இருவரையும் முறைத்த படி பார்த்தவனை கண்டு கொள்ளாமல் அவளிடம் எப்படியும் உன்னை கை பிடிச்சிடுவேன் என்று ஜாடை காட்டி விட்டு ஹாலுக்கு வந்தான். தன் காதல் வெற்றி பெற்றதற்கு சந்தோசப்பட நேரமில்லாமல் கல்யாணத்தை எப்படி நிறுத்துவது என்ற யோசனையில் நேரத்தை செலவிட்டான். மேடையில் ராதா பெயருக்கு பக்கத்தில் இருக்கும் மாப்பிள்ளையின் 
 பெயர் பார்த்த போது மனது வலித்தது 

நாளை இந்த கதையை முடிக்க வருவது ராதாவின் முறை பையன் சரண்
(அதாவது நான்)  

நன்றி திரு .ஓவியர் மாருதி அவர்கள் 

ஆர்.வி.சரவணன்