வெள்ளி, டிசம்பர் 08, 2017

திருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள்
திருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள் 

திருமண ஒத்திகை கதை எழுத ஆரம்பிக்கும் போது, எங்கள் ஆசான் திரு கே. பாக்யராஜ் அவர்களின் வாழ்த்துரையோடு் தான் இந்த கதையை புத்தகமாக வெளியிடணும்னு ஆசைப்பட்டு எழுத ஆரம்பித்தேன். அவரது வாழ்த்துரை இந்த நாவலுக்கு கிடைத்தது மட்டுமல்லாது, பாக்யா வார இதழில் தொடர்கதையாகவும் வெளியாகி இதன் நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திரு. பாக்யராஜ் அவர்களே கலந்து கொண்டு நூலை வெளியிடும் பாக்யமும் ஒருங்கே எனக்கு கிடைத்திருக்கிறது.
இந்த இனிய நிகழ்வில் பங்கு கொண்டு, உடனிருந்து வாழ்த்திய தயாரிப்பாளர், இயக்குனர் திரு. சுரேஷ் காமாட்சி, இயக்குனர் நடிகர் திரு. E .ராம்தாஸ்,  இயக்குனர், தயாரிப்பாளர் திரு .மீரா கதிரவன், நண்பர் திரு .வினோ ஜாசன், வி.கே.சுந்தர்  மற்றும் விழாவை தன் தொகுப்புரையால் சுவாரஸ்யமாக்கிய நண்பர் சுரேகா சுந்தர், மற்றும்  அரசன், கோவை ஆவி , பாலகணேஷ்,   எஸ்கா கார்த்திகேயன், பாப்பனப்பட்டு ட்டு வ.முருகன், மூர்த்தி நடராஜன் ஆகியோருக்கும் இதயம் நிறைந்த நன்றி.
"இந்த கதையில் நாயகன் நாயகி ஹோட்டலில் காபி சாப்பிடுவதாக ஒரு காட்சி வருகிறது. இது சரவணனுக்கு உண்மையா நடந்திருக்கலாம்னு நினைக்கிறேன்.         அந்த அனுபவத்தை தான் அவர் காட்சியா வச்சிட்டார் போலிருக்கு"
திருமண ஒத்திகை புத்தக வெளியீட்டு நிகழ்வில் பேசுகையில் நடிகர் இயக்குனர்         திரு. E .ராம்தாஸ் அவர்கள் சிரித்த படி இப்படி குறிப்பிட்டார்.இது பற்றி ஒரு விளக்கம் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
தேநீரில் சர்க்கரை இல்லை என்ற போது 
வாங்கி சுவைத்தவள் இருக்கிறதே
என்ற படி திருப்பி தருகிறாள்.
இப்போது இனிக்கிறது.
ஏற்கனவே நான் எழுதியிருந்த இந்த வரிகளை தான், கதையில் நாயகன் நாயகியின் முதல் சந்திப்புக்காக எடுத்து கொண்டேன். எழுதி முடிக்கையில் என்னடா இது ரசனைனு சொல்லி விடுவார்களோ என்ற தயக்கமும் கூடவே இருந்தது. ஆனால் கதையை படித்தவர்கள் அதை பற்றி குறிப்பிடுகையில் தான் திருப்தியே வந்தது.
"ஒரு விஷயத்தை ஒரு காட்சியோடு விட்டு விடாமல் இடைஇடையே மத்தியிலும் நினைவூட்டி இறுதியிலும் அதனை தொடர்புபடுத்தி முற்றுப்பெற செய்வது ஒரு கதையின் நேர்த்தியான அம்சம். சரவணன் அந்த காப்பி விஷயத்தை கடைசி வரை திறம்பட கையாண்டுள்ளார். "
நடிகர் இயக்குனர் திரு .கே.பாக்யராஜ் அவர்கள் தனது மதிப்புரையில் குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகள் இவை. நாவலின் அட்டை படமாக காபி கப் தேர்வானதன் காரணமும் இது தான்.

கதைக்குத் தேவையான சில கதாபாத்திரங்களை மட்டும் வைத்து எழுதப்படும் கதைகளே சிறப்பாய் அமையும். கதாபாத்திரங்கள் பேசுவதாய் அமைவதைவிட முக்கிய கதாபாத்திரத்தைச்சுற்றி கதையை நகர்த்தி, நிறைய இடங்களில் காட்சிப்படுத்தினால் கதை சிறப்பாக அமைந்து படிப்பவர்களையும் ரசிக்க வைக்கும் என்று எனது கல்வித் தந்தையான பேராசான் மு.பழனி இராகுலதாசன் அடிக்கடி சொல்வதுண்டு. அப்படியான கதைகளை வாசிக்கும் போதெல்லாம் அதனுள் பயணிக்கும் கதாபாத்திரங்களோடு நானும் பயணித்த அனுபவத்தை உணர்ந்திருக்கிறேன்.அப்படியான கதை நகர்த்தலோடு கதாபாத்திரங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தியிருக்கும்
ஆசிரியர், அவர்களை அழகாக வெளியேற்றி சில இடங்களில் மிக நுணுக்கமாக காட்சிப்படுத்தி வாசிக்கும் நம்மை மெல்ல மெல்ல வசீகரித்து கதையோடு ஆழ்ந்து பயணிக்க வைத்து விடுகிறார். இன்று நிச்சயம் செய்த உடனேயே பெண்ணும்
மாப்பிள்ளையும் செல்போனில் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். மேலும் வாட்ஸ் அப் முகநூல் என ஏகப்பட்ட வசதிகள் வேறு. இன்றைய இளம் தலைமுறைக்கு சொல்லவா வேண்டும்..? அவையெல்லாம் இந்த நாவலில் இடம் பிடித்திருக்கிறது.
திருமண ஒத்திகை புத்தக அணிந்துரையில் நண்பர் திரு . பரிவை சே.குமார் அவர்கள்.


நண்பர் ஹரிஹரன் விஸ்வநாதன் சார் எழுதிய நூல் விமர்சனம் 
காதல் என்பது கண்ணும் கண்ணும் நோக்கினாலே தோன்றும். அது பல நாள் பழகிய உணர்வை தரும்...
சில பேருக்கு தாலாட்ட நான் பொறந்தேன் மாதிரியும் , சிலருக்கு மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ மாதிரியும் அமையும்....
ஆனால் பலர் நினைப்பது வெள்ளி பனி உருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன் போல இருக்கனும் என.... இந்தக் கதையில் வரும் வருணும் அதே ஆசையுடன் சென்று பெண் பார்க்கும் படலத்தில் ஆரம்பிக்கும் கதை,சில பல பிரச்சனைகளோடு எப்படி சுபமாச்சு என்பது தான் #திருமண_ஒத்திகை.
தலைவர் ஆர்.வி.சரவணன் குடந்தை பாக்யாவில் தொடராக எழுதிய கதை.
கதிர், காதலர் தினத்தில் ஆரம்பித்த முகநூல், தனுஷ் படங்களில் குரூப்பாக வடிவெடுத்தது இவரால் இந்தக் கதையிலும் வெகு சாமர்த்தியமாக புகுத்தப்பட்டது.
விருமாண்டி இருவரின் பார்வைகளை பதிவு செய்த படம். முதல் பாதி வில்லன்,மறு பாதி ஹீரோ..கிளைமேக்ஸ் சொதப்பல்... அதை விடுங்க. அது போல இதில் மூன்று பார்வைகள். வருண்,சஞ்சனா மற்றும் எழுத்தாளர் பார்வையில்...
முன்னேல்லாம் ரேடியோவில் கதை சொல்லுவாங்க... ஒருத்தரே எல்லா கேரக்டராகவும் மாறி பேசுவாங்க. அது போல இதில் ஆசிரியர் பல அவதாரம் எடுத்து அந்தந்த கேரக்டராகவே மாறி எழுதியுள்ளார்.
எனக்கு புடிச்ச கேரக்டர் வருணின் நண்பன் மதி... புரோட்டா சூரியை மனசுல வச்சு எழுதியிருப்பது போல தோனுது. என்ன சரிதானே தலைவரே?.... 
கடைசில வாட்சப் வெறியர்கள் மீதுள்ள பயம்தான் விஜயனை மாற்றுகிறது.. 😂
என்னையும் மதிச்சு புத்தகத்தை அனுப்பியதற்கு நன்றி தலைவரே... செம ரைட்அப்... இல்லைனா பாக்யராஜ் சார் கையால முன்னுரை கிடைக்குமா?.
136 பக்கங்கள்
விலை:₹125/-
பதிப்பு: ஜனனி பதிப்பகம் ,சென்னை
மொபைல்:09444675913
வாங்கி படிக்கவும்.... 
விழாவில் தயாரிப்பாளர், இயக்குனர் திரு. சுரேஷ் காமாட்சி அவர்களின்  வாழ்த்துரை. 
நடிகர், இயக்குனர் திரு. E .ராம்தாஸ்   அவர்களின் வாழ்த்துரை 
திரு. கே பாக்யராஜ் அவர்களின் வாழ்த்துரை 

இந்த இனிய தருணம் உருவாக என்னோடு ஒத்துழைத்து ஊக்கப்படுத்திய அனைத்து இணைய நண்பர்களுக்கும், என் உறவுகளுக்கும், நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றியும் அன்பும் என்றென்றும்.

ஆர்.வி.சரவணன் 


வியாழன், நவம்பர் 23, 2017

அறம்

அறம் 


எல்லாரும் கலந்துகிட்ட ஒரு மீட்டிங், ஸ்டார்ட் ஆகி நடந்துட்டிருக்கிறப்ப லேட்டா வேர்க்க விறுவிறுக்க வந்து அட்டெண்டன்ஸ் கொடுத்தா எப்படி இருக்கும். அப்படி தான் தோணுது இந்த பதிவு எழுதற நேரத்துல எனக்கு. அதாவது அறம் படம் நான் பார்த்தது சென்ற ஞாயிறு  தான். 


ஒரு கலெக்டரை விசாரணை செய்வதாக ஆரம்பிக்கிறது படம். இதில் ஆடியன்சை ஈர்க்கிற பாயிண்ட் எங்க இருந்து ஆரம்பிக்க போகுது என்ற நினைப்போடு பார்க்க ஆரம்பிக்கையில் நடுவழியில் வண்டி நின்று போய் பெட்ரோலும் இல்லாமல் குடிக்க தண்ணீரும் இல்லாமல் " பையன் போனை எடுத்தான்னா குடிக்க தண்ணி பாட்டில் வாங்கிட்டு வர சொல்லு தாகமாருக்கு" என்று புருசனிடம் சொல்லி கொண்டிருக்கும் அந்த பெண்ணின் வார்த்தைக்கு அடுத்த காட்சி அந்த பையனின் அறிமுகம் . எங்கே ? அவன் தண்ணீரில் நீச்சலடிப்பவனாக . அட என்று நிமிர்ந்து உட்காருகையில், "வாங்க நம்ம தண்ணீர் பிரச்னையை அடுத்தவங்களுக்கு தொந்தரவு இல்லாமல் பேசி தீர்வு காணுவோம்" என்பதாக கலெக்டர் மதிவதனியின் என்ட்ரி இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது. அதன் பின் ஆழ் துளை கிணறுக்குள் கயிறு இறக்குவது போல் நம் மன ஆழம் தேடி காட்சிகள் ஒவ்வொன்றாக இறங்குகின்றன. ஆழ்துளைக்குள் சிக்கி கொண்ட அந்த சிறுமியின் முகம் மானிட்டரில் முதல் முறை தெரியும் போது தொற்றி கொள்ளும் பரபரப்பு படத்தின் கடைசி வரை நீள்கிறது.

"உன் அத்தை பேசறேம்மா. முறுக்கு வாங்கிட்டு வந்திருக்கான் உன் அப்பா. நீ வெளில வந்தோன சாப்பிடலாம் என்ன" அழுத படி சிறுமிக்கு தைரியம் சொல்லும் அந்த பெண்மணியின் வார்த்தைகளுக்கு கண்கள் கலங்கி விடுகிறது.

செய்தி சேனல் விவாத காட்சி ஆங்காங்கே குறுக்கிடுகிறது. வார்த்தைகளை மியூட் செய்த படி அவற்றை காண்பித்திருக்கலாம். பாதிக்கப்பட்ட மக்கள் பேசும் யதார்த்தத்தை மீறியா பேசிட போறாங்க. (உதாரணத்திற்கு பழனி பட்டாளத்தின் வார்த்தை பிரயோகம் ஒவ்வொன்றும் ராக்கெட போல் கிளம்பி வருவதை குறிப்பிடலாம்).

படம் முடிந்து வீட்டிற்கு வந்து சில மணி நேரங்கள் ஆகியும் கூட ராமச்சந்திரனின் பதறலும், சுனு லட்சுமியின் அழுகையும், பய முகம் காட்டும் அந்த சிறுமியும், மக்களிடம் அதிகாரம் காட்டாத அதிகாரி மதிவதனியும் இன்னும் நிழலாடி கொண்டே இருக்கிறார்கள். சில படங்கள் பார்த்து விட்டு வருகையில் மட்டும் ஒரு நிறைவு கிடைக்கும். அறமும் அத்தகைய நிறைவை கொடுத்திருக்கிறது.

வாழ்த்துக்கள்
நயன்தாரா மற்றும்  கோபி நயினார் குழுவினருக்கு 

ஆர் .வி.சரவணன் 

சனி, நவம்பர் 11, 2017

திருமண ஒத்திகை நூல் வெளியீட்டு விழாதிருமண ஒத்திகை நூல் வெளியீட்டு விழா


தண்ணீரை அண்ட விடாத பால் சூடா எடுத்துண்டு, அதுல முதல் முதலா இறக்கின டிகாக்‌ஷனை வள்ளல் கணக்காவும் வாரி வழங்காம கஞ்சத்தனமாவும் குறைச்சிடாம சரியான விகிதத்துல கலந்துகிட்டு, காபியின் கசப்பை மீறி செயல்பட முடியாத வண்ணம் சர்க்கரையோட கூட்டணி அமைச்சு, கொஞ்சமே கொஞ்சம் ஆத்தி அதில உதயமாகிற நுரை கீரீடத்தை காபிக்கு அணிவிச்சு, ஒரு மழை நாளில் துணையோடு சேர்ந்தமர்ந்து கொஞ்சலான வார்த்தைகளின் இடையிடையே அந்த காபியை பருகும் போது ஒரு உற்சாகம் வரும் பாருங்க. அதை அசோகன் வாய்ஸ்ல இப்படி தான் சொல்ல தோணும்.

"ஆஹா. இந்த காபிக்கு நான் அடிமை"


எதுக்கு இதை இப்ப சொல்றேன்?. கேள்வி வருதுல்ல. அதற்கான பதில். திருமண ஒத்திகை நாவலில் நாயகன் நாயகிக்கு இடையில் காபி ஒரு காதல் தூதுவன். 
ஆகவே காபியின்  ரசனை வர்ணனை இங்கு .

சரி விசயத்துக்கு வருகிறேன். திருமண ஒத்திகை நூல் வெளியீட்டு விழா இன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறுகிறது. இந்த இனிய நிகழ்வில் உங்களின் வருகையும் வாழ்த்துக்களும் விழாவிற்கு மேலும் இனிமை சேர்க்கட்டும்.

ஆர்.வி.சரவணன் 


வியாழன், ஜூன் 22, 2017

முகநூல் குறிப்புகள் - 3
முகநூல் குறிப்புகள் - 3


(இந்த பதிவு முழுக்க சினிமா குறிப்புகள் தான்) 

வாழ்வே மாயம் படத்துல நீல வான ஓடையில்.... னு கமல் ஸ்ரீதேவி யை பார்த்து பாடறப்ப, ஓரிடத்தில் கண்மூடி கற்பனையில் மிதப்பார். அப்ப ஒரு பெரியவர் வந்து அவரை தட்டி எழுப்பி நலம் விசாரிச்சிட்டு போவாரு. அது மாதிரியான அனுபவம் இது.
ஒரு நாள் எங்க வீட்டு பங்சன்ல கண்மூடி கொஞ்சம் சிந்தனைல இருந்தேன். ஒருத்தர் என் தோளில் தட்டி "என்னப்பா பகல்லயே தூங்கறே" னு போற போக்கிலே என் சிந்தனையை கலைச்சு போட்டுட்டு போனாரு.
அவரை இழுத்து வைத்து கொண்டு கவுண்டமணி போல் "நான் தூங்கலீங்க. கொஞ்சம் திங்கிங்ல இருந்தேன்" னு சீரியசா சொன்னேன்.

அவர் சிரித்தபடி கூலாக,

"அட நீ தூங்குப்பா. யாரு வேணாம்னா. ஆனா அத போய் ஏன் திங்கிங்னு சொல்லிட்டிருக்கே?" னு செந்திலாய் மாறி என்னை கடுப்பேத்தி விட்டுட்டாரு.

மீ ஙே.

------

கார்த்திக், இளவரசி, வி.கே. ராமசாமி நடித்த எங்க வீட்டு ராமாயணம் படத்தில் ஒரு காட்சி.
கார்த்திக் : (ரொமாண்டிக் மூடில்) வா அன்னிக்கு பாதியிலே விட்ட பாட்டை 
இன்னிக்கு கன்டின்யூ பண்ணலாம்.
இளவரசி : நீங்க இப்ப பாட ஆரம்பிச்சீங்கன்னா இவங்கெல்லாம் எழுந்தரிச்சு போயிடுவாங்க (ஆடியன்ஸ் பக்கம் கை காட்டுகிறார்)
கார்த்திக் : இவங்க எந்த பாட்டுக்கு தான் எழுந்தரிச்சு போகலே . அதுக்காக நாம 
பாடாம இருக்க முடியுமா. நீ வா
இப்படி சொன்னதும் அடுத்து டூயட் பாடல் தான் வந்து விட்டது என்று நினைத்தால் சாரி. அடுத்த காட்சி வந்து விடுகிறது.
"நாங்க பாரின் போய் பாட்டு பாடிட்டு வர போறோம். அதுக்குள்ள டீ காபி சாப்பிடறதா இருந்தா போய் சாப்பிட்டு வாங்க" என்று  பாடலுக்கு முன் இப்படி ஒரு வசனமும் இனி வரலாம்.

------

சென்னை 28 -II படத்துல, ஜெய் கல்யாணம் நின்னு போன கவலைல பெங்களூர் போக போறதா சொல்லுவாரு. அப்ப இளவரசு, "பெங்களூர் போய் அனுவை அங்க கல்யாணம பண்ணிக்க போறே அப்படி தானே" னு கேட்பார்.
அப்ப, மிர்ச்சி சிவா படத்தின் இடையிடையே படங்களை மேற்கோள் காட்டி பேசற மாதிரி எனக்கு ஒண்ணு தோணுச்சு. அது என்னன்னா,
தென்றலே என்னை தொடு படத்துல மோகனுக்கும் ஜெய்ஸ்ரீக்கும் காதல் வந்து, காதல்ல பிரச்னை வந்து, இன்டர்வெல் வந்து, ( எத்தனை வந்து) மோகன் பீலாகி பெங்களூர்ல போய் வேலைக்கு சேருவாரு. அங்க ஜெய்ஸ்ரீ தற்செயலா வரவே, மோதல் தீர்ந்து காதல் வெற்றியாகிடும்.
கதையின் போக்கு அப்படி போகப்போகுதுனு நான் நினைக்கல. ஆனா சிவா அந்த சீனுக்கு இடையில் இத மேற்கோள் காட்டி சொல்ற மாதிரி ஒரு சீன் இருந்திருக்கலாமேனு நினைச்சேன். 

------

கங்கை அமரன் இயக்கிய படங்களில் கோழி கூவுது அவரது முதல் படம். இதற்கு பிறகு அவர் இயக்கிய படத்திற்கு வைத்திருந்த பெயர் கொக்கரக்கோ. ( கீதம் சங்கீதம் நீ தானே என் காதல் வேதம் .... சூப்பர் ஹிட் பாடல் இந்தப் படத்தில் உண்டு) அதற்கு அடுத்த படத்திற்கு என்ன பெயர் வைத்திருந்தார் தெரியுமா பொழுது விடிஞ்சாச்சு. (பிரபு சுலக்‌ஷனா நடித்தது ) தலைப்புகள் கோர்வையா இருக்குல்ல. அப்போது இது பற்றி பத்திரிகைகளில் கூட வந்த்தாக ஞாபகம். இது இப்படி இருக்கையில்,
அவர் இயக்கிய எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் வரும் செண்பகமே செண்பகமே பாடலை அடுத்த படத்தின் டைட்டில் ஆக வைத்திருந்தார்.
(ராமராஜன் ரேகா நடித்தது)

அதே போல் கரகாட்டக்காரன் படத்தில் வரும் ஊரு விட்டு ஊரு வந்து பாடல் வரிகளை அடுத்த படத்திற்கு டைட்டில் ஆக்கினார். (ராமராஜன் கௌதமி)

நேற்று டிவியில் வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா.... பாடல் பார்த்து கொண்டிருந்த போது இதெல்லாம் ஞாபகத்துக்கு வந்துடுச்சு.

------


டிவியில் பார்த்த இரண்டு திரைப்பட காட்சிகளில் நான் கவனித்த ஒன்று.
படம் : அரசு
வடிவேலுக்கு தபால் கொண்டு வந்து கொடுக்கும் தபால்காரர் "உனக்கு கவர்மெண்ட. வேலை கிடைச்சிருக்கு" என்பார்.
படம் : தங்கமான ராசா
ராமராஜனுக்கு வேலை கிடைத்திருப்பதாக சொல்லி கனகாவிடம் தபால் கொடுத்து கையெழுத்து வாங்கி செல்வார் தபால்காரர்.
யாருக்கு தபால் வந்திருக்கிறதோ அவர்கள் பிரித்து பார்த்தால் தானே விசயம் என்ன என்பது தெரிய வரும். தபால்காரருக்கு முன்பே எப்படி தெரியும் ?

இதெல்லாம் எப்படிய்யா யோசிக்கிறே னு கவுண்டமணி போல் நீங்கள் 
கேட்டீர்களானால் என் பதில் செந்தில் சொல்வது போல் தான்.
அதுவா தோணுதுண்ணே.


ஆர் .வி.சரவணன் 

வியாழன், மே 18, 2017

வெற்றி தொட்டு விடும் தூரம் தான்வெற்றி தொட்டு விடும் தூரம் தான் 


என்னை பற்றி நான் இந்த பெயரில் ஒரு கட்டுரை மனசு தளத்திற்காக வேண்டும் என்று நண்பர் குமார் கேட்டதும் என்னை பற்றி நானே எப்படி சொல்றது என்று ..................இழுக்க ஆரம்பித்தேன்.அதுக்காக இன்னொருத்தரை விட்டா சொல்ல வைப்பாய்  என்று மனசாட்சி மீம்ஸ் கிரியேட் பண்ணி கிண்டலடிக்கவே, என்னை பற்றி நானே இங்கே. https://vayalaan.blogspot.com/2017/03/11.html

டிகர் தம்பி ராமையா ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் இப்படி சொல்லியிருந்தார். கடவுள் தனது காலை என் கழுத்தில் மிதித்து கஷ்டங்களிலிருந்து நான் வெளியேற முடியாத படி செய்திருந்தார். அவரே  கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொள்ள நினைத்து காலை எடுத்த நொடியொன்றில்  நான் அவரிடமிருந்து விடுபட்டு துள்ளி எழுந்து முன்னுக்கு வந்து விட்டேன் .

இதை எதற்காக இங்கே சொல்கிறேன்?  தன்னை நிலை நிறுத்தி கொள்ள வாழ்க்கையில் போராடும்  எல்லா மனிதரும் இந்த நிலையை கடந்து தான் வர வேண்டும்.  கடவுள் ஆசுவாசப்படுத்தி கொள்வதற்காக காலை எடுத்து கொள்கிறாரா ?  பரிதாபப்பட்டு பொழச்சி போனு விட்டுடராரா  என்பது அவருக்கு மட்டுமே தெரியும். இப்படியான நிலையில் நானும் சிக்கியிருக்கிறேன். மீண்டிருக்கிறேன். மீண்டும் நானே சென்று கழுத்தை கொடுத்துமிருக்கிறேன். இப்படியான என் வாழ்க்கை போராட்டத்தில் ஒரு அத்தியாயத்தை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

1991 ஆம் வருடம்.வேலைக்கு சென்று கொண்டிருந்து விட்டு திடீரென்று வேலை இல்லாமல் வீட்டிலிருப்பதை விட கொடுமை வேறேதுனா இருக்கிறதா நினைக்கின்றீர்களா? ஒரு வாரம் சாப்பிடாமலிருந்து விட்டு சாப்பிட ஆரம்பிக்கையில் தட்டை பிடுங்கி வைத்து கொள்வதற்கு நிகரானது இது. எனக்கும் இக் கொடுமை நிகழ்ந்திருக்கிறது.

"என்ன சார் டிகிரி வரைக்கும் படிச்சுருக்கீங்க. இந்த வேலைக்கு வரேன்னு சொல்றீங்களே" அந்த கம்பெனியில் வேலை கேட்டு சென்றிருக்கையில் தான்  என்னிடம் அந்த கம்பெனியின் மேலாளரும், பெண் கேஷியரும் கேட்ட கேள்வி இது.

அவர்களுக்கு என்ன பதில் சொல்வது? யோசிக்க ஆரம்பித்தேன்.  மனசுக்குள் பிளாஷ் பேக் ஓட ஆரம்பித்தது. சூப்பர்வைசராக நல்ல பொறுப்பில் இருந்து விட்டு முதலாளியின் உறவினர்களின்  டார்ச்சர் காரணமாக தடாலடியாக அந்த வேலையை விட்டு விட்டு நான்வேறு வேலை தேட வேண்டியதாயிற்று.

தம்பி, தங்கை, நான் மூவருமே வேலைக்கு சென்றால் மட்டுமே  குடும்பம் கடன் ஏதுமின்றி பயணிக்கும். ஒருவர் வேலையிலிருந்து நின்று விட்டாலும் குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழுந்து விடும். இப்படியான சூழலில் பஸ் காசு  கூட  நான் தம்பி தங்கையிடம்  வாங்கி கொண்டு வெளியில் செல்லும் நிலையில் தான் இருந்தேன்.

எல்லா அப்பாவிடமிருந்து கிடைக்கும் அதே சொல் எனக்கும் என் அப்பாவிடமிருந்து கிடைத்தது. தண்டச்சோறு. தம்பி  தங்கை அம்மா எனக்காக  "இது வரைக்கும் உழைச்சு கொடுத்தான் இல்லியா . இப்ப ஒரு ரெண்டுமாசம் வேலையில்லாம இருக்கிறப்ப நாம தானே அவனை  பார்த்துக்கணும்" அப்பாவிடம் விவாதம் செய்ய ஆரம்பித்தார்கள். ஆனாலும் அப்பா எம் மகன்  நாசர் போல் தான் நடந்து கொண்டார். (ஒரு வகையில் அவர் அப்படி நடந்து கொண்டது சரியே. ஏனெனில் என் திறமை பற்றி நான் அறிந்து கொள்ள அவர் ஏற்படுத்தி கொடுத்த வாய்ப்பு இது).ஆகவே விடாப்பிடியாய் ஒரு நாள் காலை வீட்டிலிருந்து வெளியேறினேன். 

இன்று தேடி போகும் வேலை கிடைத்தால் மட்டுமே வீட்டுக்கு வருவது. இல்லை வராமலே இருந்து விடுவது என்ற முடிவுடன் கிளம்பியவனுக்கு நாளிதழில் ஸ்க்ரீன் பிரிண்ட்டிங்  கம்பெனியில் ஆபீஸ் பியூன் வேலைக்கு ஆள் தேவை என்ற விளம்பரம் கண்ணில் பட்டது.  
இந்த வேலையை பற்றி கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் அந்த ஸ்க்ரீன் பிரிண்டிங்  கம்பெனிக்கு சென்றேன். முதலாளி விவரங்கள் கேட்டு விட்டு அப்ளிகேஷன் எழுதி தர சொல்லி அப்போதே வேலையில் சேர்ந்து கொள்ள சொல்லி விட்டார். சம்பளம் 400 ரூபாய். என் முந்தைய கம்பெனி வேலையை பற்றி  தெரிந்து கொண்ட மேனேஜரும் கேஷியரும்  கேட்ட கேள்வி தான் மேலே நான் குறிப்பிட்டது. அவர்களுக்கு நான் கொடுத்த பதில்.

"எனக்கு ஒண்ணாந்தேதி சம்பளம் வேண்டும். அதற்கு எந்த வேலையாக இருந்தால் என்ன ? நியாயமான வேலையானு மட்டும் பார்த்தால் போதும் " இப்படி சொல்லிய படி கையெழுத்திட்டு என் பணியை ஆரம்பித்தேன்.

அப்பாடா இன்னிக்கு நாம வீட்டுக்கு நிம்மதியா போயிடலாம் என்று பெருமூச்சு விட்ட போது, அவ்வளவு சீக்கிரம் நீ நிம்மதியா இருந்திட முடியுமா என்று கேட்டது காலம். அதுவும் அன்றைய தினம் சாப்பாட்டு நேரத்திலேயே என் நிம்மதி தொலைந்து போனது.வேலைக்கு சேர்ந்த மூன்று மணி நேரத்திலேயே பழக்கமாகி விட்ட அந்த கம்பெனி ஸ்டாப் ஒருவர் இப்படி சொன்னார். 

"இங்க ஒண்ணாம் தேதிலாம் சம்பளம் கிடையாது. கலெக்சன் வரதை பொறுத்து தான் சம்பளம் தருவாங்க. அநேகமா சீனியர் நாங்க எல்லாரும் சம்பளம் வாங்கிய பின்னாடி, நீ சம்பளம் வாங்கறதுக்கு 20 தேதி ஆகிடும்னு நினைக்கிறேன்" இப்படி  அவர்  சொன்ன போது இது என்னடா புது சோதனை என்று தான் தோன்றியது.  கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஆடிட்டு இருந்துச்சாம்னு சொல்வார்கள். அது போல் தான் இருந்தது. மேனேஜர் மற்றும் கேஷியரும் அதையே உறுதிப்படுத்தினார்கள். கூடவே "நீ வாங்கிக்கிட்டதுக்குப்புறம் தான் நாங்கலாம்  வாங்கிப்போம். கவலைப்படாதே" என்றார்கள். 

அப்பா இதை ஒப்பு கொள்வார் என்று எனக்கு தோன்றவில்லை. ஆகவே ஒரு ஐடியா செய்தேன். அதை ஆரம்ப நாளிலே சொல்ல முடியாது. நம்மை இங்கே நிரூபித்த பின் தான் நம் பேச்சுக்கு மதிப்பிற்கும் என்பதால் அமைதி காத்தேன். வீட்டில் வேலை கிடைத்து விட்டதை சொல்லி அம்மா தம்பி தங்கையை உற்சாகப்படுத்தி விட்டாலும் சம்பள பிரச்னையை சொல்லாமல் உள்ளூர  பயத்துடன் வேலைக்கு செல்ல ஆரம்பித்தேன்.

எனக்கான வேலைகள் காலை வந்தவுடன் ஷட்டர் திறந்து ஆபீஸ் கூட்டி  டேபிள் துடைத்து வைத்து டீ காபி வாங்கி வந்து கொடுத்து அவர்கள் அனுப்பும் இடங்களுக்கு போய் வர வேண்டும். எனக்கான இடம் அலுவலக அறைக்கு வெளியே இருக்கும் ஒரு சேர் . (சாலையை ஒட்டியுள்ள அலுவலக வாசல் அது). முதலாளி சொன்னார். "சரவணன் அங்க தான் உன் சேர். அங்க தான்  உட்காரணும் . பெல் அடிச்சு கூப்பிட்டா உடனே வரணும்." என்றார். சூப்பர்வைசராக இருந்த போது வாட்ச்மன்க்கு இந்த வார்தைகளை நான் சொன்னது என் நினைவுக்குள் வந்து சென்றது. சரி என்று மௌனமாய் தலையாட்டினேன். 


ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கஷ்டம் என்றால் உள்ளே வேலை செய்யும் ஆட்கள் கிடைச்சாண்டா ஒரு அடிமை என்பது போல்  கொஞ்சம் வேலை வாங்கினார்கள். கூடவே கிண்டல்கள் அதட்டல்கள் வேறு.  அனைத்தையும் பொறுத்து கொண்டு முதலாளி, மானேஜர், கேஷியர் மனம் கோணாதவாறு  நடந்து கொண்டேன். அந்த மாதம் முடிகையில் முதலாளியிடம் சென்று என் கஷ்டத்தை சொல்லி, சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கை முதல் வாரத்தில் கொடுத்து விடுங்கள்.  மீதத்தை நீங்கள் கொடுக்கும் போது வாங்கி கொள்கிறேன் என்று சொன்னேன். அவரும் சரி என்று சொல்லி விட்டார்.  மேனேஜர், கேஷியர் கூட இதற்கு மறுப்பேதும் சொல்லவில்லை.  மாதத்தின் முதல் சனிக்கிழமை வந்தவுடன் எனக்கான ரூபாய் எடுத்து வைத்திருந்தார்கள்.  முதல் மாதம் எல்லாருக்கும் முன்பாக நான்  சம்பள அட்வான்ஸ் வாங்கி விட்டேன். கேஷியர், "சரவணன் 15 பேர் வேலை பார்க்கிற கம்பெனில முதல் சம்பளத்தை எல்லாருக்கும் முன்னவே வாங்கிட்டீங்க அதிர்ஷ்டக்காரர் " என்றார் சிரித்த படி . நான் சொன்னேன். "எல்லாரையும் விட்டுட்டு வாங்கறது எனக்கு கஷ்டமா தான் இருக்கு. இது பாவம் தான். இருந்தும் என் நிலைமை அப்படி" என்றேன். இருவரும் என் கஷடத்தை உணர்ந்து  ஒத்துக் கொண்டு விட்டாலும்  மற்றவர்கள் காதில் புகை. "பாருய்யா நேத்து வந்தவன் சம்பள அட்வான்ஸ் வாங்கறான். உன்னாலே முடியுதா. அதெல்லாம் காக்காய் பிடிக்கிறவங்களுக்கு தான் வரும் என்று என் காது பட சொல்ல ஆரம்பித்தார்கள். எனக்கு மனசு வலிக்க ஆரம்பித்தது. அவர்களிடம் விளக்கம் சொல்ல போகையில் மானேஜர் கேஷியர் கண்டுக்காதீங்க என்று தடுத்து விட்டார்கள். 

இருந்தும் அவர்கள் அனைவருக்கும் முன்னே நான் அட்வான்ஸ் பெறுவது எனக்கும்  உறுத்தலாக இருந்தது. அதற்கு ஏதேனும் பரிகாரம் செய்ய நினைத்தேன்.

பழைய கம்பெனில பரபரப்பா வேலை பார்த்திட்டு இங்க சும்மா உட்கார்ந்திருப்பது எனக்கே போரடித்தது. ஆகவே நானே சென்று மானேஜர் மற்றும் கேசியரிடம் வலுக்கட்டாயமாக அவர்களது வேலைகளை எல்லாம் கேட்டு வாங்கி செய்ய ஆரம்பித்தேன். அவர்களுக்கு எனது வேலைகள் திருப்தியளித்தது ஒரு புறம் என்றால் அவர்கள் வேலை பளுவும் இதனால் குறைந்தது. இன்னும் சொல்ல போனால் உள்ளே ஸ்க்ரீன் பிரின்டிங் ஊழியர்களிடம் சென்று அவர்களுக்கும் உதவியாய் இருக்க ஆரம்பித்தேன். இதற்கு நல்ல பலன் இருந்தது. என்னை புறம் சொன்னவர்கள் கூட  இரண்டு மாதத்திற்கு பின் என்னிடம் சகஜமாக பழக ஆரம்பித்தார்கள். (ஓரிருவர் மட்டும் அதே கிண்டல் கேலியுடனே பேசினார்கள். அவர்களை மாற்ற முடியாது என்று தெரிந்து போய் விட்டு விட்டேன் ) மானேஜர் கேஷியர் கூட  மதிய வேளையில் சாப்பாட்டுக்காக எனக்காக காத்திருக்க  ஆரம்பித்தார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள். மேலும் ஓரிரு மாதங்கள் சென்ற பின் நான் முழுக்க முழுக்க அலுவலக ஏசி அறையிலேயே அமர்ந்து வேலை பார்க்கும்படி ஆகி விட்டது. எனது பியூன்   நாற்காலி எப்போதும் காலியாகவே இருந்தது.  

முதலாளியின் அம்மா ஒரு நாள் ஆபீஸ் பக்கம் வந்தவர்கள் நான் உள்ளே அமர்ந்திருப்பதை பார்த்து விட்டு மேனேஜரிடம் கேட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. அவர் இதை என்னிடம் சொன்னார். நான் பதறி போய் "நீங்க என்ன சொன்னீங்க?" என்று கேட்டேன். எங்களுக்கு உதவியா வேலை பார்த்துகிட்டிருக்கார் னு சொல்லிட்டேன். டோன்ட் ஒர்ரி" என்றார்.  நான் எப்போதுமே என்னை பற்றி ஒரு பேச்சு வருகிறது என்றால் சம்பந்தப்பட்டவரை  நானே அணுகி என் நிலையை விளக்கி விடுவேன். அதே போல் இது விஷயமாக அம்மாவை சென்று பார்த்து சொன்னேன். 

"சும்மாவே உட்கார்ந்திருக்க என்னாலே முடியலே. அதான் வேலைகளை நானே கேட்டு வாங்கி பார்க்கிறேன். உங்களுக்கு பிடிக்கலனா சொல்லுங்க விட்டுடறேன். என்றேன். 

அதற்கு அவர், " அட என்னப்பா. எனக்கு நீ வேலை பார்ப்பது தெரியாதுல்ல.  அதனால சொன்னேன். வேலை தான் முக்கியம். அதை எங்க உட்கார்ந்து பார்த்தா என்ன ? என்று சொல்லி விட்டார்.   

எங்கள் கம்பெனிக்கு ஸ்க்ரீன் பிரின்டிங்காக  பிலிம் டெவெலப் செய்து தரும் ஒருவர் எனக்கு அறிமுகமானார்.  அவரது அலுவலகத்தில் ஞாயிற்றுகிழமை மட்டும் உதவியாய் இருந்து பார்ட் டைம் வேலையும்  (என் முதலாளியிடம் அனுமதி பெற்று) பார்க்க ஆரம்பித்தேன்.
ஞாயிற்றுக்கிழமை  விடுமுறையையும் காசாக்கினேன். அந்த ஒரு நாளுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா . 10 ரூபாய். ( டீ சாப்பாடு தனி. அவரே வாங்கி கொடுத்து விடுவார் ) இப்படியாக ஆறு மாதத்திற்கு மேல் தொடர்ந்து வேலை பார்த்தவனுக்கு, வேறு கம்பெனியில் என் நண்பனின் மூலம் கிளார்க் வேலை கிடைத்து விட்டது. (முதல் தேதி  சம்பளம் கையில் வந்து விடும்)

முதலாளி, மேனேஜர், கேஷியர் மூவருக்கும் இதை நான் சொன்ன போது அவர்கள் சொன்ன வார்த்தைகள்  "நீ வேலையை விட்டுட்டு போறது எங்களுக்கு கஷ்டமா தான் இருக்கு. இருந்தாலும் உனக்கு ஒரு நல்ல நேரம் வரப்ப எங்க கஷ்டத்தை பத்தி நினைக்க கூடாது. குறுக்கே நிக்கறதும்  தப்பு" என்றே சொன்னார்கள். அவர்கள் குறுக்கே நின்னு உன்னை என்ன  பண்ண முடியும்னு நினைக்கறீங்களா? 

அங்கே வேலையை விட்டு நான் நிற்கும் போது எனக்கான சம்பள பாக்கி நிறைய இருந்தது. "மொத்தமா என்னால தர முடியாது. வாரா வாரம் சனிக்கிழமை வந்து வாங்கிக்கப்பா" என்று சொன்னார் முதலாளி. நானும் ஒப்புக்கொண்டு அதன் படி ஒவ்வொரு சனிக்கிழமையும் சென்று வாங்கி வந்தேன். அவரும் முழுமையாக செட்டில் செய்து விட்டார்.

அதற்கடுத்த நான்கு வருடங்களில் வேறொரு கம்பெனியில் நான்  ஒரு மேனேஜர் நிலைக்கு உயர்ந்து விட்டேன் என்பதையும் இங்கே சொல்ல வேண்டியது முக்கியானது.  இந்த நிகழ்வின் மூலம் காலம் எனக்கு கற்று கொடுத்தது ஒன்றே ஒன்று தான். எந்த வேலை பார்க்கிறோம் எனபது முக்கியமல்ல. அதில் எந்த அளவுக்கு சிறப்பான பெயர் வாங்குகிறோம் என்பதே முக்கியம்.

சரி தலைப்புக்கு வருவோம். என்னை பற்றி நான் என்றால் தன்னம்பிக்கையும்
விடாமுயற்சியுமே. அதை மூலதனமாக கொண்டு தான் மனைவி, மகன் மகள், அம்மா இவர்களின் ஒத்துழைப்புடன், எனக்கு பிடித்தமான எழுத்து துறைக்குள் குடந்தையூர் என்ற எனது வலைதளத்தின் மூலம் நுழைந்திருக்கிறேன். அதிலிருந்து என் கனவான சினிமா துறைக்கும் முயற்சித்து கொண்டிருக்கிறேன்.

நன்றி பரிவை சே.குமார் 

ஆர்.வி.சரவணன்

திங்கள், ஏப்ரல் 24, 2017

முகநூல் குறிப்புகள் - 2

முகநூல் குறிப்புகள் - 2


ரொம்ப நாட்களுக்கு முன்பு அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்ப எல்லாம் திரும்பவும் இந்த படம் பார்க்கணும் என்று நினைத்து கொள்வேன். அந்த வேளை இன்று வந்தது. டிவியில் இன்று இந்தப் படம் போட்டதும் பார்க்க ஆரம்பித்து முடித்து விட்டேன். அந்தப் படம் மோகன், இளவரசி ரேவதி நடித்த ஆர்.சுந்தர்ராஜனின் குங்குமச்சிமிழ்.
வறுமையில் வேலை தேடி கஷ்டப்படும் காதலர்கள் மோகன் இளவரசி. ஆறு மாதம் கழித்து சத்திக்கலாம் என்ற ஒப்பந்தம் செய்து கொண்டு வேதனையுடன் பிரிகிறார்கள். பிரிந்த அடுத்த நாளே இருவர் வாழ்க்கையிலும் வறுமை விடைபெற்று செல்வத்தில் திளைக்கும் வாழ்க்கை கிடைத்து விடுகிறது . இருவருமே எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பிருக்க, மோகனுக்கு வேலை கிடைத்ததே, ரேவதியின் கல்யாணம் நின்று போனதால் தான் என்பது தெரிய வருகிறது. பிராயச்சித்தமாக அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மோகன் சம்மதிக்க, இது தெரியாமல் இளவரசி அந்த திருமணத்திற்கு அட்சதைபோட வருகிறார். இதில் யார் தியாகியாகிறார் என்பதே கதை.
காதலர்கள் வேலை தேடி கொண்டே ஒன்றாக தங்கியிருக்கும் வரம்பு மீறாத காட்சிகள், அவர்கள் தங்கியிருக்கும் இடங்கள்,( கூட்ஸ் வண்டி, கடற்கரையின் பாழடைத்த இடம்) பாரப்பவர்களை எல்லாம் "என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறியா" என்று கேட்கும் டெல்லி கணேஷ் கேரக்டர். எந்த பொருளானாலும் போட்டுடைக்கும் ரேவதி,
இளையராஜாவின் ஆறு பாடல்கள் (ஒரு பாட்டு ரிப்பீட்) என்று ரசிக்க ஏராளமான விசயங்கள் இதில் இருக்கிறது.
வேலை இல்லா திண்டாட்டத்தை பற்றி ஒரு காட்சி வரும். வேலை தேடி கொண்டிருக்கும் மோகன், நடுரோட்டில் ஒருவர் ஆக்சிடெண்ட்டில் இறந்து கிடப்பதை பார்ப்பார். அடுத்த நிமிடம் இறந்தவர் பார்த்த வேலையை வாங்கி விட அந்த அலுவலகம் நோக்கி அவசரமாக விரைவார். அவருக்கு முன்பே அந்த வேலை வேறொருவர் வாங்கியருப்பது தெரிய வருகையில் மோகன் வேதனையை இப்படி வெளிப்படுத்துவார். "வேலையில்லா திண்டாட்டம் என்னை விட பாஸ்டா இருக்குது".
இடைவேளைக்கு முன் இளவரசி பின் ரேவதி என்று கதை அமைத்திருந்தாலும். இடைவேளைக்கு பின் இளவரசி கேரக்டரின் நிலை பற்றி இன்னும் காண்பித்திருக்கலாம். சில கேரக்டர்களின் சஸ்பென்ஸ் முன் கூட்டியே நாம் அறிந்து கொள்வதை தடுக்கும் விதமாகவும் திரைக்கதை அமைந்திருக்கலாம்.
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது. அவ்வப்போது நான் முணுமுணுக்கும் பாடல் இது. நண்பர்களுடன் இந்தப்படம் செகண்ட் ஷோ கும்பகோணம் செல்வம் தியேட்டரில் பார்த்துவிட்டு, அடுத்த நாள் இப் படத்தை பற்றி தெரு முனையில் இருந்த ஒரு வீட்டு திண்ணையில் அமர்ந்து படம் பற்ற விவாதித்தது இன்றுவரை நினைவில் இருக்கிறது.

------


திருப்பூர் செல்லும் வழியில், திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலிலுக்கு சென்றிருந்தோம். அந்த படிக்கட்டுகளில் அமர்ந்து மாலை வேலைகளில் திருச்சியின் அழகை ரசிப்பதென்றால் அலாதி பிரியம் எனக்கு. இயந்திர வாழ்க்கையில் அதெல்லாம் சாத்தியப்படுவதில்லை. இன்று கூட பாருங்கள். நாங்கள் கோவிலில் சென்று நுழைந்தவுடன் நடந்து வந்த களைப்பில் என் பெண் மயக்கமாகி விட்டாள். பதட்டமாகி ஓடிப்போய் ஜூஸ் வாங்கி வந்து கொடுத்து சரிப்படுத்தி அவளை கீழே அழைத்து வருவதற்குள் நாங்கள் சோர்வாகி விட்டோம்.கண் இமைக்கும் நேரத்திற்குள் ஒரு டென்ஷனை கொடுத்து அதிலிருந்து மீட்டெடுப்பதில் கடவுளுக்கு நம் 
மேல் அலாதி பிரியமுண்டு.

------
சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு போன் கால் வந்தது. "சார் உங்க செல் நம்பர்க்கு பரிசு விழுந்திருக்கு" என்றார் போனில் பேசிய பெண்.


"என் நம்பரை யாருக்கும் கொடுக்கலியே ?. பின்ன எப்படி செலக்ட் பண்ணீங்க" குழப்பமானேன்.


" எங்க கம்பெனில ரேண்டமா செலக்ட் பண்ணிருக்கோம் சார். எத்தனையோ பேர்ல உங்களுக்கு மட்டும் பரிசு கிடைச்சிருக்கு. இந்த பரிசை நீங்க வாங்கிக்குறதுக்கு ..... " என்று தொடர்ந்தவரை இடைமறித்து,

"எனக்கு உங்க பரிசு வேண்டாம்" என்றேன் உடனடியாக.
அந்த பெண் "சார் முதல்ல நான் சொல்ற டீடெய்ல்ஸ் கேட்டுடுங்களேன்." என்றார்.

"கேட்ட பின்னாடியும் அதை தான் சொல்ல போறேன். அதை போய் எதுக்கு கேட்டுகிட்டு" என்ற படி போனை கட் பண்ணிட்டேன்.

இப்ப அவங்க அடுத்த நம்பருக்கு போன் பண்ணி, "சார் உங்க செல் நம்பருக்கு மட்டும் பரிசு விழுந்திருக்கு" அப்படின்னு தானே ஆரம்பிப்பாங்க.

------

இன்று மின்சார ரயிலில் கூட்டம் அதிகமிருந்தது.ஒரு ரயில் நிலையத்தில் ஏறிய குடும்பமொன்றில், கணவன் கை நிறைய லக்கேஜ்களுடன் இருந்தார். அவரது மனைவியும் இரு மகள்களும் (சிறுமிகள்) ஆளுக்கொரு பக்கம் கிடைத்த சீட்களில் அமர்ந்தாலும், அவருக்கு மட்டும் சீட் கிடைக்கவில்லை. இதை பார்த்த சிறுமிகளில் ஒன்று தன் தந்தையை பார்த்து சொன்ன வார்த்தைகள் ஒரு நெகிழ்ச்சி கவிதை.
"அப்பா நீங்க வந்து உட்காருங்க. நான் வேண்ணா  உங்க மடில உட்கார்ந்துக்கறேன்".

------

அந்த பிரபல ஹோட்டலில் நானும் நண்பரும் சென்று சாப்பிட அமர்ந்த போது மதியம் 2 மணி. பெயர் பலகையில் ஹாட் இட்லி இருக்கவே, சர்வரிடம் விசாரித்து உறுதி செய்து கொண்டு இட்லி ஆர்டர் செய்தோம். இட்லியும் வந்தது. ஆனால் அது ஹாட் இட்லி அல்ல. ஆறிப்போன இட்லி.
சர்வரிடம் "ஹாட் இட்லினு போட்டிருக்கீங்க.ஆனா இட்லி சூடாவே இல்லியே" என்றேன்.
"இந்த நேரத்துல சூடால்லாம் கிடைக்காதுங்க" என்றார் கறாராய்.
"அதை நாங்க ஆர்டர் பண்றப்பவே சொல்லியிருக்க வேண்டியது தானே" என்றேன்.
சர்வர் அதற்கு பதில் சொல்லாமல் "இட்லி வேணுமா வேணாமா"
என்றார் சலிப்புடன்.
அவரது சலிப்பு என்னை கடுப்பேற்றினாலும் அதை வெளிக்காட்டாமல்,
"இட்லி கேன்சல். தக்காளி சாதம் கொண்டு வாங்க. அதுல தக்காளி இருக்குதா பார்ப்போம்" என்றேன் கூலாக.

------


இன்று டிவியில் (கொஞ்ச நேரம்) பார்த்த ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் தன் ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் முதல் காட்சி,
மந்திரியின் கார் பவனி வருவதால் டிராபிக்கை நிறுத்தியிருக்கிறார்கள். அந்த நேரம் பிரசவ வலியில் துடிக்கும் பெண் ஆட்டோவில் இருக்கிறார். இதை கவனித்த சக போலிஸ் டிராபிக்கை திறந்து அந்த ஆட்டோவை அனுப்பி வைக்கிறார். இதைக் கண்டு மந்திரியின் ஆட்கள் அவரை தாக்க வர, டிராபிக் போலிசான ஹீரோ களத்தில் இறங்கி அவர்களை தாக்கி சிதறடிக்கிறார்.
இது போல ஏற்கனவே வந்து விட்டதே என்று கேட்க தோன்றுகிறதா?. எனக்கும் அப்படியே. இந்த காட்சி எப்படி வைத்திருக்கலாம். நீ தான் சொல்லேன் என்று நீங்கள் யாரேனும்  கேட்க கூடும். ஆகவே சொல்கிறேன்.

விரைவாக வரும் மந்திரியின் கார் பவனி திடீரென்று பிரேக் போட்டு போக்குவரத்து போலிசால் நிறுத்தப்படுகிறது. இறங்கி கோபமாய் வரும் அவருடைய ஆட்கள் "மந்திரி காரை நிறுத்தற அளவுக்கு இங்க அப்படி என்னய்யா நடக்குது" என்று கேட்க,
" ஸ்கூல் விட்டிருக்காங்க. குழந்தைகள் வீடு திரும்புறாங்க." என்ற பதில் வருகிறது.
"இதுக்காக போய் எங்களை நிறுத்தினவன் யாருடா ?" என்று கேட்கவே மந்திரி மற்றும் அவரது சகாக்களுக்கு சுட்டி காட்டுகிறார்கள் போலீசார்.
அங்கே சாலையெங்கும் குழந்தைகள் சுதந்திரமாக நடந்த படி சைக்கிளில் சென்ற படி இருக்க, டிராபிக் போலிசான ஹீரோ புத்தகங்களை கீழே சிதற விட்ட ஒரு சிறுவனுக்கு பொறுமையுடன் உதவி கொண்டிருக்கிறார்.

ஆர்.வி.சரவணன் 

புதன், ஏப்ரல் 19, 2017

எதுக்காக? - குமுதம் ஒரு பக்கக் கதைஎதுக்காக? - குமுதம் ஒரு பக்கக் கதை 

 ச்சே” என்ற படி நின்றிருந்த புறநகர் ரயிலிலிருந்து ஒவ்வொருவராக கீழே குதிக்க தொடங்கினர். அவர்கள் சொன்ன ச்சே வை இன்னும் அழுத்தி உச்சரித்தவாறு கீழே குதித்தான் அருண். யாரோ ஒருவர் போகிற போக்கில் "ஸ்ட்ரைக் நடந்துட்டிருக்கு" என்று சொல்லவும் தான் குழப்பத்தில் இருந்தவர்கள் ச்சே என்று சலிப்பு காட்டி இறங்க ஆரம்பித்தனர்.எதிரே இருந்த சாலையை நோக்கி வேகவேகமாக நடக்க ஆரம்பித்தனர்
10 மணிக்கு அலுவலகத்த்தில் இருந்தாக வேண்டும். மணி இங்கேயே 10 ஆகி விட்டது. “முன் அறிவிப்பில்லாமல் எதுக்குங்க ஸ்ட்ரைக்பண்றாங்க” அருண் தன் பக்கத்தில் கூடவே இறங்கி வந்து கொண்டிருந்த அந்த நபரை கேட்டான்.

"முன் அறிவிப்போடு ஸ்ட்ரைக் பண்ணா பரவாயில்லியா ” என்று வியர்வையை கை குட்டையால் துடைத்தவாறு அருணை திருப்பி கேட்டார் அவர்பெண்கள் கஷ்டப்பட்டு கீழே இறங்கி கொண்டிருந்தனர்.

யாரும் ஸ்ட்ரைக் பண்ண கூடாது னு ஒரு ஸ்ட்ரைக் பண்ணா நல்லாருக்கும்” இப்படி நக்கலடித்த படி கடந்தார் இன்னொருவர்.


அருண் அடுத்த ட்ராக்கையும்  கடந்து ரயில்வே இரும்பு வேலியையும் தாண்டி பஸ் பிடிக்க ரோட்டுக்கு வந்தான். 

எதுக்காக ஸ்ட்ரைக் பண்றதுன்னு விவஸ்தையே இல்லாம போயிடுச்சு ” கடுப்படித்த படி வந்து கொண்டிருந்த அந்த முதியவரிடம் எதுக்காக ஸ்ட்ரைக் பண்றாங்க சார்”  ஆவலாய் கேட்டான் அருண்.

ம்... ரயிலெல்லாம் டயத்துக்கு வராம லேட்டா தான் வருதாம். அதுக்காக பயணிகள் தண்டவாளத்தில் உட்கார்ந்து ஸ்ட்ரைக் பண்ணிட்டு இருக்காங்களாம்."

ஆர்.வி.சரவணன் 

குமுதம் 14-09-2016 இதழில் வெளியான எனது ஒரு பக்கக் கதை இது. 
நன்றி குமுதம் ஆசிரியர் குழு.