அப்பழுக்கில்லாத வழக்கு எண் 18/9
இந்த படத்தை பற்றி எல்லோரும் எழுதிய பிறகு நீ எழுத என்ன இருக்கிறது என்று எனக்குள் ஒரு குரல் கேட்டது ஒரு நல்ல படைப்புக்கு என்னால் ஆன ஒரு பாராட்டை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்பதால் பதிவு செய்திருக்கிறேன்
பணக்கார வர்க்கம் செய்யும் தவறு சட்டத்தின் கைகைள் சிக்காமல் இருக்க துணை போகும் அதிகார வர்க்கத்தால் ஏழைகள் அடையும் பாதிப்பை அழுத்தமாக நடைமுறை வாழ்க்கையில் நாம் அன்றாடம் காணும் சில கதாபாத்திரங்களை கொண்டு அழகாய் மிக இயல்பாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்
முதல் பாதியில் ரோட்டோரத்தில் கஷ்டப்படும் ஏழை மனிதர்களை பற்றிய கதையும் பிற்பாதியில் பணக்கார வர்க்கத்தின் வாழ்க்கையை பற்றிய கதை யும் தந்து இவை இரண்டையும் முடிவில் ஒன்றாக சேர்க்கும் திரைக்கதை அதிலும் முதல் பாதியில் வரும் சில காட்சிகளுக்கு தொடர்புடைய வேறொரு காட்சி பிற்பாதியில் வரும் கதை பாங்கை நான் மிக விரும்பி ரசித்தேன்
ஸ்ரீ
வேலு வாய் நடித்திருக்கும் இளைஞன் ஸ்ரீ பிளாட்பார கடையில் வேலை பார்க்கும் அவர் ஊர்மிளா வை பார்த்ததும் அடையும் சந்தோஷம் அவரை பார்க்கும் போதெல்லாம் முகத்தில் தோன்றும் பரவசம் கோர்ட்டில் என்ன சொல்ல வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ட்ரைனிங் செய்யும் போது அவர் கை கட்டி வேதனையுடன் சொல்லும் காட்சி என்று அவரது நடிப்புக்கு சில சான்று
ஊர்மிளா மகந்தா
ஊர்மிளா முகத்தில் ஒரு சோகம் கவ்விய தோற்றதுடன் ஸ்ரீயை கண்டவுடன் வெறுப்பை உமிழும் முக பாவத்துடன் வளைய வரும் அவர் கிளைமாக்ஸ் ல் முகம் பாதி சிதைந்து உருக்குலைந்த தோற்றதுடன் வரும் போது நம்மிடம் பரிதாபத்தை பெற்று கொள்கிறார்
அந்த கடைசி காட்சி பார்க்கும் போது அதிர்ச்சியில் நம் ரத்தம் கண்டிப்பாக உறையும்
முத்துராமன்
அவர் நடித்திருக்கும் இன்ஸ்பெக்டர் கரெக்டர் அவருக்கென்றே உருவாகியது போல் கன கச்சிதமாய் இருக்கிறது. அவரை நேரில் பார்த்தால் அவர் சட்டையை கொத்தாக பற்றி உலுக்கும் ஆத்திரம் வரும் அளவு சிறப்பாய் நடித்திருக்கும் அவர் கை பற்றி குலுக்கலாம்
சின்னசாமி
பையன் என்னமாய் நடித்திருக்கிறான் அதிலும் நாடகத்தில் அவன் ஆடும் நடனம் கண் முன்னே நிழலாடுகிறது நீ நல்லா வருவடா என்று தான் சொல்ல தோன்றுகிறது
மிதுன் முரளி, மனிஷா யாதவ்
இருவரும் பணக்கார இள வயதினரை கண் முன் நிறுத்தும் அளவுக்கு அவர்கள் தோற்றமும் நடிப்பும் கை கோர்க்கிறது
இயக்குனர் பாலாஜி சக்திவேல் திரைக்கதையை அழகாய் நேர்த்தியாய் கோர்த்திருக்கும் விதம் படத்திற்கு மிக பெரிய பலம். அதிலும் அனைவரும் புது முகங்கள் எனும் போது அவரது கடும் உழைப்பு தெரிகிறது. பிளாட் பார கடை முதலாளியின் காலில் மாட்டிய போட்டோவை எடுக்கும் ட்ரிக், மியூசிக் இல்லாமல் வரும் பாடலில் ஸ்ரீ காதலியுடன் குடும்பம் நடத்துவதாய் காணும் கனவு காட்சிகள்
அந்த சிறுவன் சின்னசாமி இப்பலாம் யாரு கூத்து பார்க்கிறாங்க அதான் வயித்து பிழைப்புக்காக வேலை செய்ய வந்துட்டேன் என்று சொல்லும் போது அந்த கலை யை நாம் மறந்து கொண்டிருக்கிறோம் என்று கோடிட்டு காட்டும் விதம் என்று பல காட்சிகள் எதை சொல்வது எதை விடுவது என்று தெரியாத அளவுக்கு படம் நெடுக நம்மை ரசிக்க வைக்கும் காட்சிகள் தான்
படம் முடிந்து எழும் போது பாலாஜி சக்திவேல் சார் தங்கள் கைகள் அழுந்த பற்றி கை குலுக்கும் ஆசை வருகிறது
இந்த வழக்கை ஆதரித்து வாதாடுவோம், வாகை சூட வாழ்த்துக்கள் சொல்வோம்
ஆர்.வி.சரவணன்