ஞாயிறு, மார்ச் 30, 2014

இளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3

இளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா
நிகழ்ச்சி தொகுப்பு-3


சுரேகா தன் தொகுப்புரையில் அங்காங்கே நாவலில் இடம் பெற்ற கவிதைகளை மேற்கோள் காட்டி பேசியதை இங்கே தருகிறேன் 

என் வாழ்க்கை  பாலைவனத்தில்வற்றாத ஜீவநதி யாய்  நுழைந்தவள் நீ  
இக் கவிதை போல் டிஸ்கவரி அரங்கத்தை ( இவ் விழாவை ) வற்ற விடாமல் அனைவரும் வந்திருக்கிறீர்கள் 

உனக்கும் எனக்குமுள்ள இடைவெளியை நான் கவிதைகள் இட்டே நிரப்பி கொண்டிருக்கிறேன் என்ற கவிதை போல் அரசனுக்கும் மைக்குக்கும் உள்ள இடைவெளியை தன் வரவேற்புரையில் வார்த்தைகள் இட்டே நிரப்பியிருக்கிறார்

எனை தென்றலாய் தான் கடந்து செல்கிறாய் இருந்தும் புயல் கடந்த பூமியாகிறேன்புத்தகத்தில் நிறைய ஹைகூ இருப்பதாலோ என்னவோ பேசும் அனைவரும் ஹைகூ மாதிரி பேசி முடிக்கிறார்கள்

என் சாம்ராஜ்யத்தையே துறக்கிறேன் உன் இதயத்தில் ஓரிடம் வேண்டி
இப்படி நாவலுடன் கவிதைகளும் இணைந்திருப்பதால் இந்த புத்தகம் டூ இன் ஒன் போன்றது என் மகன் ஹர்ஷவர்தன் 9 வது படிக்கிறான். முத்துக்குமார் இவ் விழாவுக்கு வருகிறார் என்றவுடன் அவர் எழுதிய பாடல்களை தொகுத்து தந்தான்.
அவருடன் போட்டோ எடுத்து கொள்ள வேண்டும் என்று ஆர்வத்துடன் எடுத்து கொண்ட படம்  


ஹர்ஷவர்தன் ஆர்வத்தில் உருவாக்கி கொடுத்த விளம்பர டிசைன் இதோ  

* சீனு நன்றியுரைக்க வந்த போது அவருக்கு ஒரு செல்ல பெயர் உண்டு என்று சுரேகா குறிப்பிடநா.முத்துக்குமார் மற்றும் சங்கர் சொல்ல சொல்லுங்க சரவணன் என்று சுவாரஸ்யமாய் சொன்னார்கள். சுரேகா இது எங்களுக்குள்ளேயே இருக்கட்டும் என்று சொல்லி விட்டார் 

*விழா நடைபெறும் பொது ஸ்நாக்ஸ் கொடுத்தால் அது தொந்தரவாக இருக்கும் என்பதால் வெயிட் பண்ணினார்கள் அதற்குள்  காபி வந்து விடவே அதன் கூட ஸ்நாக்ஸ் கொடுப்பதற்கும் ஏற்பாடானது 

 முத்துக்குமார் மற்றும் சந்திரா தங்கராஜ் இவர்களுடன் அமர்வது எவ்வளவு பெரிய விஷயம்  என் பதட்டத்தை சிரித்தவாறே மறைத்து கொண்டேன்   

எனக்கும் மேடைக்கும் ஏழாம் பொருத்தம். நான் ஏற்புரை ஆற்ற வேண்டும்.என்ற போது எழுதி எடுத்து கொண்டு வந்ததை தான் 
பேசுகிறேன் மன்னிக்கவும் என்று சொல்லி விட்டு பேசினேன் 

"இப்படி ஒரு நாள் வருமா என்று ஏங்கியதுண்டு ஆனால் வந்தே தீரும் என்று எதிர்பார்க்கவில்லை. இணைய நண்பர்களது  ஊக்கத்தால்இது சாத்தியமாகி இருக்கிறது.இருட்டில் கிடந்த என் எழுத்துக்கு கிடைத்த  வெளிச்ச கீற்று இது "
என்று என் உற்சாகத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தினேன்

 ஆரூர்.முனா செந்தில்,மற்றும் மெட்ராஸ் பவன் சிவகுமார்,போலி பன்னிகுட்டி ஸ்கூல் பையன்,கீதா ரங்கன், விழாவில் ஆர்வமுடன் 
கலந்து கொண்டு வாழ்த்தியது சிறப்பு.

கவியாழி கண்ணதாசன்,ராய செல்லப்பா ,கோவை மு.சரளா மேடம் பிரபு கிருஷ்ணா எனக்கு அறிமுகமில்லை இருந்தும் அவர்கள் அழைப்பை ஏற்று கலந்து கொண்டு வாழ்த்தியது இன்னுமொரு சிறப்பு 
நம் வலையுலக  நண்பர் வலைபதிவர் திரு. கரந்தை ஜெயக்குமார், அவர்கள் 
தன் வலைப்பூவில் http://karanthaijayakumar.blogspot.com/2014/01/blog-post_26.html

இவர் கல்லூரிக் காலத்தில் எந்தப் பெண்ணையும் காதலித்ததாகத் 
தெரியவில்லை. ஆனால் காதலித்தால் எப்படியிருக்கும், எப்படியிருக்க வேண்டும், என்பதை  திரைப்படம் போலவே, மனதிற்குள்ளாகவே ஓட்டிப் பார்த்தே, பல வருடங்களைச் செலவிட்டிருக்கிறார். மெல்ல, மெல்ல காதலுக்கு உரு கொடுத்து, அதில் லயித்து, கண்மூடி, காதல் காட்சிகளை மனதிற்குள்ளாகவே இயக்கியும் பார்த்திருக்கிறார்.


நம் வலைபதிவ நண்பர் திரு.வெற்றிவேல் இரவின் புன்னகை என்ற 

தன் வலைப்பூவில் 

http://iravinpunnagai.blogspot.com/2014/02/blog-post_18.html


காட்சிகள் மூலம் கதையை அழகாக சலிப்பு தட்டாத வண்ணம் கதையை சாமர்த்தியமாக நகர்த்தியிருப்பார்.கதையை விறுவிறுப்பு குறையாமல் நகர்த்திச் செல்வது, பலவித எதிர்பாராத  திருப்பங்கள்

கதையின் சில காட்சிகள் தவறாமல் சில திரைப்படங்களின் நினைவுகளை ஏற்படுத்திவிடச் செய்கிறது. எழுத்துரு சிறியதாக இருப்பதால் தொடர்ந்து படிக்கையில் கண்ணுக்கு சற்று எரிச்சலை ஏற்படுத்துகிறது.நம் வலைபதிவ நண்பர் திரு.துளசிதரன் தன் Thillaiakathu Chronicles வலைப்பூவில் 

http://thillaiakathuchronicles.blogspot.com/2014/02/Kudandhai-RVSaravanan-Novel-IlamaiEzhuthumKavaithaiNee.html 


காதலை ரசிப்பவர்கள், காதலுக்கு ஆதரவாகக் கொடி பிடிப்பவர்கள் என்றால் வாசிப்பவர்களுக்குக் கண்டிப்பாக இந்தக் காதல் கதை “இதயக்கனி ஆகிச் சுவையை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை! காதல் கைகூடாதவர்களுக்கு, அவர்களின் கல்லூரிக் காதல் தருணங்களின் நினைவலைகளைக் கண்டிப்பாக எழுப்பி விம்மச் செய்யும்! கை கூடாத வருத்தம் வரலாம்! காதல் கை கூடியவர்களுக்கு அதை நினைத்து, செகண்ட் ரவுண்டு வரத் தூண்டும் அளவுக்குப் புரிதலுடன் உருவான கல்லூரிக் காதல் கதை!

புத்தகம் வெளியான பின் ரத்னவேல் சார், ஆரூர் மூனா.செந்தில் படித்து 
விட்டு முகநூலில் புத்தகம் பற்றி பகிர்ந்து  கொண்டார்கள். புத்தகம் 
பற்றிய அனைவரின் விமர்சன பார்வைக்கும் நன்றி. 


இப்படி அனைவரையும் இந்த புத்தக விழா மற்றும் புத்தகம் எப்படி
ஒருங்கிணைத்தது என்று நினைத்து பார்த்தால் ஆச்சரியம் தான் 
மேலிடுகிறது. இதில் இறைவனின் பங்கிருப்பதை உணர்கிறேன் 

புத்தக சோலை டிஸ்கவரி புக் பேலஸ்ஸில் நடைபெற்ற இந்த 
நிகழ்வில்இணைய நண்பர்கள் வந்திருந்த என் உறவினர்களின்  
ஆர்வத்தை பாராட்ட, உறவினர்கள் நண்பர்களின் உதவியை ஊக்கத்தை பாராட்ட வந்திருந்த வி.ஐ.பி க்கள் இதை ரசித்து 
குறிப்பிட , இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா இனிதே நிறைவடைந்தது.

அனைவருக்கும் என் இதயம் நிறை நன்றி 
இணைய நண்பர்களுடன் எடுத்து கொண்ட படம். 

நூல் கிடைக்குமிடம் 
--------------------------------
டிஸ்கவரி புக் பேலஸ்,கேகே,நகர் மேற்கு,

சென்னை-78
Ph.044-65157525
Cell no.9940446650
Mail id discoverybookpalace@gmail.com
பக்கங்கள் 192, விலை ரூ 100FINAL PUNCH

 மும்பையில் வசிக்கும் என் தாய் மாமா அத்தை யின் வாழ்த்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். "நம் குடும்பம் பெரியது. எல்லாரும் நல்ல நிலையில் இருந்தாலும் ஆளுக்கொரு இடத்தில் இருக்கிறோம்.  நாங்க எல்லாருமே இன்னாரது குடும்பம் என்று பெருமையுடன் சொல்லி 
கொள்ளும் வகையில் நீ கண்டிப்பாக முன்னுக்கு வர வேண்டும்" 
என்று சொல்லி வாழ்த்தினார்கள். 


அன்புடன் 

ஆர் வி.சரவணன் 

சனி, மார்ச் 29, 2014

இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு- 2

 
இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா 
நிகழ்ச்சி தொகுப்பு- 2

 இங்கே பாலகணேஷ் பற்றி குறிப்பிட வேண்டும். நான் எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகரிடம் முன்னுரை வாங்க வேண்டும் என்று தெரிவித்த போது தயங்காமல் உடனே அழைத்து சென்று அறிமுகபடுத்தினார். அந்த நேரத்தில் அவருக்கு பணிகள் நிறைய இருந்தன. இருந்தும் நூல் வடிவமைப்பில் என்னோடு ஒத்துழைத்தார்.

தனது பணிகளுக்கு இடையில் எனக்காக நேரம் ஒதுக்கி பி.கே.பி அவர்களும் படித்து முன்னுரை எழுதி கொடுத்தது இந்த நூலுக்கு ஒரு சிறப்பு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது. 

அதிலிருந்து சில வரிகள் 

ஒரு சிறுகதையோ கவிதையோ கட்டுரையோ முதலில் வாசகரை 
படிக்க வைக்க வேண்டும். அந்த தன்மைக்கு ரீடபிளிட்டி என்று பெயர்.
அது உங்கள் எழுத்தில் இருக்கிறது.தங்களிடம் எழுத்து திறமையும் 
காட்சியமைப்பு சாமர்த்தியமும் வசனங்கள் எழுதும் திறனும் 
நிறையவே இருப்பதை இந்த படைப்பு அடையாளப்படுத்துகிறது.

(இந்த நூலுக்கு அவரது முன்னுரை ஒரு மகுடம் தானே)  


சந்திரா தங்கராஜ் உரை


அடுத்து பேசிய திருமதி. சந்திரா தங்கராஜ் அவர்கள் இந்த புத்தகம் திரைக்கதை வடிவத்தில் எழுதபட்டிருக்கிறது. உரையாடலும் அப்படியே. புதிதாக படிக்க வருபவர்களுக்கு எளிதாக இருக்கும் என்று சொன்னதோடு சினிமாவிற்கு வருவதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறது என்று வாழ்த்தினார் 


நவீன இலக்கியத்தில் முத்திரை பதித்திருக்கும் சந்திரா தங்கராஜ் 
அவர்களை யும் அவர் கணவர் வி.கே.சுந்தரையும் சங்கர் அழைத்து 
சென்று அறிமுகபடுத்திய போது வி கே சுந்தர்,  நாங்க இருக்கோம் என்று  ஊக்கமளித்தார். இருவரும் உற்சாகமுடன் வந்து கலந்து கொண்டு 
விழாவுக்கு சிறப்பு சேர்த்தனர் 
சங்கர்,விகே.சுந்தர்,சந்திரா தங்கராஜ்,நா .முத்துக்குமார்அடுத்து பேச வந்த விழாவின் சிறப்பு விருந்தினர் திரு.நா.முத்துக்குமார் அவர்கள் 

 வலை பதிவர்களும் சரவணனின்  உறவினர்களும் வந்திருக்கிறீர்கள்.
 நான் சொல்ல நினைத்ததை நாவலில் வரும் கவிதைகளை எல்லாம் 
சுரேகா சொல்லி விட்டார்.இது கதையா  திரைக்கதையா என்று குழப்பம் கொள்ள ஏதுமில்லை. சினிமாவுக்கான நாவலாக இது உருவாகி இருக்கிறது.  
எழுத்தாளர் திரு.பட்டுகோட்டை பிரபாகரின் முன்னுரை இந்த புத்தகத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது. கனவுகள் மட்டுமே ஒருவனை உயர்த்தி விடுவதில்லை. உழைப்பும்,தொடர்ந்த வாசிப்பும், தேடலும் தொடர்ந்து தக்க வைத்து கொண்டால் அந்த கனவு நனவாகும்.சரவணன் சினிமாவில் சாதிக்க நினைத்ததை அடைவார். தொடர்ந்த வாசிப்பு அவரை அடுத்த தளங்களுக்கு கொண்டு செல்லும் என்று வாழ்த்தினார் 

முத்து குமார் அவர்களை நான் சங்கருடன் சென்று சந்தித்து விழாவுக்கு அழைத்த போது  "கண்டிப்பாக  கலந்து கொண்டு புத்தகம் வெளியிடுகிறேன்" என்று ஊக்கமளித்ததுடன் விழாவுக்கு முன்னமே வந்திருந்ததோடு மட்டுமில்லாமல் விழா முடியும் வரை பொறுமையாய் இருந்து ஆர்வத்துடன்  போட்டோ எடுத்து கொள்ள வந்த அனைவருடனும் சலிக்காமல் பங்கேற்று விழாவை மெருகூட்டினார்
நா .முத்துக்குமார் உரை


இந்த இடத்தில ஒரு சின்ன கட் சாட் நண்பர் சங்கர் விழாவுக்கு கலந்து கொண்டு சென்றவுடன் முகநூலில்  இதை பற்றி எழுதியிருந்தார்.
அதிலிருந்து சில வரிகளை இங்கே தருகிறேன் 

சரவணன் என்ற ஆரம்ப எழுத்தாளரை ஊக்குவிக்க வந்திருந்த சக வலைப்பதிவர்களும், அவரது உறவினர்களும் ஒரு இனிய ஆச்சர்யம். தொடரட்டும்!

நா முத்துக்குமார், சந்திரா இருவரும் வாழ்த்திய விதம் அத்தனை 

பக்குவமாக இருந்தது. தன்னை மதிப்பவர்களின் முயற்சி எப்பேர்ப்பட்டது என்பதைப் புரிந்து வாழ்த்துவதுதான் நல்ல மனிதர்களின் தனிச்சிறப்பு. 
அந்த அனுபவத்தை காணப் பெற்றேன்... எனது பங்களிப்போடு இதுவரை 
நடந்த நிகழ்வுகளிலேயே எனக்கு மிகப் பிடித்தமான நிகழ்வாக அமைந்தது இந்த எளிய - இனிய புத்தக வெளியீடு!


சிலர் வெளியிட்டால் மட்டுமே ஒரு புத்தகத்திற்கு பெருமை. அந்த 
வகையில்  ராசியான கைகளால் வெளியிடப்பட்டு ராசியான கரங்களால் பெறபட்டிருக்கிறது. இது வெற்றி பெறும். எங்கள் குடும்பத்தினர் சார்பாக கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி என்றார் எனது சித்தப்பா திரு. எம்.பாலசுப்ரமணியன் அவர்கள். இவர் தஞ்சாவூர் உமா மகேஸ்வரனார் பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.(எனது அம்மாவின் தங்கை கணவர். எனது  சித்தியும் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர்)எனது சித்தப்பா பாலசுப்ரமண்யம் பேசுகிறார்புலவர் அய்யா திரு.ராமானுஜம் அவர்கள் வாழ்த்துரைக்க வந்தார். அவர் 
பேசும் போது இந்த புத்தகத்தை கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தவன், தொடர்ந்து  படித்து முடித்து விட்டு தான் எழுந்தேன். சரவணன் எதிர்காலத்தில் திரையுலகில் பிரகாசிக்கும் வாய்ப்பு நிச்சயமாக வரும். புலவனின் வாக்கு பொய்க்காது என்று வாழ்த்தினார் புலவர் அய்யா உரை


விழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன் புலவர் அய்யா வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்று புத்தகத்தை கொடுத்து விட்டு வந்தேன்.  திரு.கவியாழி கண்ணதாசன் மற்றும் திரு.ராய செல்லப்பா வுடன்  
வந்து கலந்து கொண்டார். கவியாழியும் செல்லப்பா சாரும் வந்திருந்து
வாழ்த்தியதில் சந்தோஷம் எனக்கு.புலவர் அய்யா  
உடன்
 கவியாழி கண்ணதாசன் மற்றும் ராய செல்லப்பா அடுத்து சீனு நன்றியுரைக்க வந்தார். அவர் பேசும் போது அனைவரையும் குறிப்பிட்டு நன்றியுரைத்தது சிறப்பாக இருந்தது. அப்படியும் கோவை மு .சரளா மேடம் மற்றும் ஸ்கூல் பையன் பெயர் விடுபட்டதை உணர்ந்து தன் திடங் கொண்ட போராட்டத்த்துடன் மீண்டும் மைக் பிடித்து நன்றி சொல்லி கலகலப்பாக்கினார்


நன்றியுரைத்த அன்பின் நாயகர்கள் 
கோவை ஆவி பேசும் போது கேப்டனுக்கு ஒரு தோனி போல் இந்த விழாவை சிறப்புற தொகுத்த்திருக்கிறார் சுரேகா என்று குறிப்பிட்டார்.அவள் அப்படி ஒன்றும் அழகல்ல என்று சார் பாடினால் யாரும் கோபிக்க மாட்டார்கள் என்று முத்துக்குமார் அவர்களை பற்றி குறிப்பிட்டார்.மேலும் கதையின் நாயகன் சிவா இந்த விழாவின் நாயகன் சரவணன் என்று குறிப்பிட்டார் 


தொகுப்புரை தந்த சுரேகா

நண்பர் எழுத்தாளர் திரு.சுரேகாவின் குரலுக்கு ரசிகன் நான். முதல் முறை  பதிவர் திருவிழாவில் பார்த்த போதே நாம் ஏதேனும் விழா நடத்தினால் இவரை தான்  சிறப்பித்து தர அழைக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன் அதன் படி ஆர்வத்துடனும் தயக்கத்துடனும் அவரை அழைத்த போது வருகிறேன் என்று சொன்னதுடன் வந்திருந்து சிறப்பாக நடத்தி கொடுத்ததோடு மட்டுமில்லாமல் நாவலில் உள்ள கவிதைகளை சொல்லி தொகுத்தது ரசிக்கும் படி இருந்தது


மன்னிக்கவும் நண்பர்களே. நிகழ்ச்சி தொகுப்பு நாளையும் தொடர்கிறது 

சுரேகா தொகுப்புரையில் இடம் பெற்ற சுவாரஸ்யங்கள்
எனது ஏற்புரை என்ற  கலாட்டா, 
நூல் பற்றி பதிவுலக நண்பர்களின் விமர்சன பார்வை  
மற்றும் கலந்து கொண்ட இணைய நண்பர்களின் படங்கள் 
 
இவற்றுடன் எனது கருத்தையும் நாளைய பதிவில் சொல்லி நிறைவு செய்கிறேன் 


அன்புடன் 

ஆர்.வி.சரவணன் வியாழன், மார்ச் 27, 2014

இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு
இளமை எழுதும் கவிதை நீ.... 
நூல் வெளியீட்டு விழா  நிகழ்ச்சி தொகுப்பு 


குடந்தையூர் தளம் தொடங்கி நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாவது வருடம் ஆரம்பித்து விட்டது.நான் இதை தொடங்கிய போது கண்டிப்பாக சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஆரம்பித்தேன். என் தளத்தில் நான் எழுதிய தொடர்கதை  இதோ  புத்தகமாக அச்சில் வந்து விட்டது. இந்த விழா பற்றிய அனுபவ குறிப்புகள் எழுத வேண்டும் என்று  நினைத்தாலும்
தொடர்ந்து அதை பற்றியே எழுதி சலிப்படைய வைக்க வேண்டாம் என்று எழுதாமல் விட்டு விட்டேன். இணைய நண்பர்கள் சிலர் விழா பற்றி ஒரு பதிவு தரலாமே வராதவர்கள் படிக்கவும் வந்தவர்கள் சுவாரஸ்யத்துடன் ரிபீட் செய்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்குமே என்று சொன்னார்கள். விழாவின் வீடியோ எனக்கு சமீபத்தில் தான் என் மாமா வீட்டிலிருந்து வந்து சேர்ந்தது. அதை பார்த்த போது, கலந்து கொண்டவர்களுக்கு நன்றி என்று ஒற்றை சொல்லில் சொல்வதை விட அவர்களின் பங்கை இங்கே அழகாக பதிவு செய்யலாமே என்று தோன்றியது இதோ பதிவிட்டு விட்டேன்

விழா 5 மணிக்கு என்று குறிப்பிட்டிருந்தோம் அல்லவா முதல் நாள் 5 மணிக்கே இறக்கை கட்டி கொண்டது  மனசு. இரவு முழுக்க தூக்கமில்லை காரணம் உள்ளுக்குள் உற்சாகம் தான். மறு நாள் காலை ஊரிலிருந்து என் அம்மா,மனைவி,பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் வந்து விட்டார்கள் என் தம்பி என்னை விட அதிக உற்சாகமாய் இருந்தான் .விழாவை இன்னும் சிறப்பாக்கி விட வேண்டும் என்ற வேகம் அவனிடம் மட்டுமல்லாது என் குடும்பத்தாரிடமும் இருந்தது. 

ஊரிலிருந்து என் தாய் மாமா (வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார்) மற்றும்  என் தங்கை கணவர் (அரசு துறை) நேராக டிஸ்கவரி புக் பேலஸ்க்கே  வந்து விட்டனர்.என் தம்பி எனக்கு முன்னமே விழா ஏற்பாடுகளை கவனிக்க அங்கு சென்று விட்டான் 

நானும் அரசனும் செல் போனிலேயே பேசி கொண்டு விழா ஏற்பாடுகளை கவனித்து கொண்டிருந்தோம் 

எனது அலுவலக நண்பர் தேவராஜ் விழாவுக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஸ்நாக்ஸ் வாங்கி கொண்டு வரும் பொறுப்பை ஏற்றிருந்தவர் தான் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார் 

நான் புத்தக அரங்கம் சென்று சேரும் போது மணி 3.30.  என் மாமா,மற்றும் தங்கை கணவரை வரவேற்ற போது தான் கவனித்தேன் பக்கத்தில் உள்ள டீ ஸ்டாலில் பதிவுலக நண்பர்கள் வந்திருந்ததை கண்டு அருகில் சென்றேன். பாலகணேஷ்,சீனு,அரசன்,கோவை ஆவி, ஸ்கூல் பையன் 
வந்து விட்டிருந்ததை பார்த்து வரவேற்றேன். 

 எல்லோரும் உள்ளே நுழையும் போது என் தங்கை மகள் வைஷாலி ஆர்வத்தில் ஒரு பேனரை ரெடி செய்து அரங்க வாசலில் வைக்க வேண்டும் என்ற   அன்பு  கட்டளையுடன்அனுப்பியிருந்தார்.நான் ரொம்ப அலட்டி கொள்வதாக  நினைத்து விட போகிறார்கள் என்று என் தம்பியுடன் நான் சொன்ன போது, பாலகணேஷ் சீனு பார்த்து விட்டு நன்றக இருக்கிறது பேனர் கட்ட சொல்லு. அந்த பெண்ணை பாராட்ட வேண்டும் என்று சொன்னார்கள் (சீனு நன்றியுரையில் இதை குறிப்பிட்டு சொன்னார் )
எனது முக நூல் நண்பரும் ரஜினி ரசிகருமான நண்பர் ஆனந்த்
குமாரிடம் அரங்க மேடையில் வைப்பதற்காக. பேனர் டிசைன் செய்ய சொல்லியிருந்தேன்.(டிசைனிங்கில் பணிபுரிகிறார்) அவரும்  ஆர்வமாய் உருவாக்கி கொண்டு வந்திருந்தார்.
4.30 மணி இருக்கும் என் தம்பி போனில் கீழே வா என்று அவசரமாய்  குரல் கொடுத்தான்.மேலும்  சார் வந்து விட்டார் என்று எல்லோரும் என்னை நோக்கி பரபரப்பாய் வந்தார்கள். நான் படிகளை இரண்டிரண்டாக கடந்ததாய் நினைவு. காரிலிருந்து இறங்கினார் இந்த விழாவின் நாயகன் முனைவர் கவிஞர்  திரு. நா.முத்துக்குமார் அவர்கள்.கூடவே நண்பர் சங்கரும் (என்வழி ,ஒன் இந்தியா .காம் ) முத்துக்குமார் அவர்கள் தன் மகனை அழைத்து கொண்டு வந்திருந்தார்.கை கொடுத்து வரவேற்ற என்னை சிநேகமாய் புன்னகைத்து சங்கருடன் உள்ளே நுழைந்தார்.  

மற்றவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் . வந்த உடன் ஆரம்பித்து விடலாம் என்று நான் தகவல் சொல்ல, கவிஞர் அதனாலென்ன  பரவாயில்லை 
என்று கூறி விட்டு புத்தகங்களை புரட்ட ஆரம்பித்தார்.அங்கே
 வந்திருந்தவர்கள் ஆர்வமாய் பேச வர அவர்களுடன் உரையாட
 ஆரம்பித்தார்.

கொஞ்ச நேரத்தில் திருமதி சந்திரா.தங்கராஜ் மற்றும் அவர் கணவர் நண்பர் திரு. வி.கே.சுந்தர் வர வரவேற்றோம். அரங்க மேடையின் இருக்கைகளில் அமர வைத்தோம் 

 


விழா தொடங்கியது 

நண்பர் சுரேகா இனிய மாலையில் பல்வேறு அலுவல்களுக்கு இடையில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்ளும் இவ் விழா தங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று தொடக்கத்திலேயே தன் காந்த குரலால்
சொல்லி அனைவரையும் விழா நிகழ்ச்சிகளுக்கு ஈர்த்தார் 

அரசன் எல்லோரையும் வரவேற்று பேசினார் (கோவை ஆவி நன்றியுரைக்கும் போது அரசனை தான் எல்லோரும் வரவேற்பார்கள் இங்கே அரசனே வரவேற்பாளர் என்று குறிப்பிட்டார் )

அடுத்து புத்தகம் வெளியிடப்பட்டது நான் கொஞ்சம் தள்ளி நின்றிருந்தேன்.முத்துக்குமார் என்னை கை பற்றி அருகே இழுத்து தன்னருகே நிறுத்தி கொண்டார். புத்தகத்தை அவர் வெளியிட  திருமதி. சந்திரா தங்கராஜ் அவர்கள் பெற்று கொண்டார் 


பின்  முன்னிலை வகித்த சங்கர் பேச அழைக்கப்பட, அவர்  பேசும் 
போது சரவணன் வேகமான மனிதர். தொடர்கதை ஆரம்பித்திருப்பதை என்னிடம் சொன்னவர் ஐந்து மாதங்களுக்கு பிறகு புத்தகம் ரெடி வெளியிடலாமா என்று கேட்டார். சினிமா திரைக்கதை போல் எழுதப்பட்ட 
இது படமாகும் வாய்ப்பிருக்கிறது தொடர்ந்து இது  போல் எழுத வாழ்த்துக்கள் என்று உற்சாகமாய் சொன்னார்  

(நண்பர் சங்கரை  இந்த விழா தொடர்பாக முப்பது தடவையாவது போன் செய்து பேசியிருப்பேன்.அவர் சலிப்படையாமல்  அக்கறையுடன்  விழா பற்றி ஆலோசனை தந்து எல்லோரிடமும் அழைத்து சென்று அறிமுகபடுத்தி விழாவில் என் வேண்டுகோளுக்கு ஏற்ப முன்னிலை ஏற்று  சிறப்பித்தார்.
அடுத்து பேசிய பாலகணேஷ்  தான் படிக்கும் கதைகளை சினிமா காட்சி போல் கற்பனை செய்வதுண்டு என்றும் இந்த நாவல் என் கற்பனைக்கு இடம் வைக்காமல் சினிமா காட்சிகளாக  இருக்கும் விதம் பற்றி சொன்னதுடன்,
 கதையில் வரும் பயோடேட்டா பாலு குறிப்பிடும் வசனங்களை பற்றி குறிப்பிட்டார். இதில் உள்ள குறைகளை தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கிறேன் என்றும் இந்த மரம் பெரிதாக வர போகிறது 
என்பது இந்த விதையிலேயே தெரிகிறது என்று குறிப்பிட்டு வாழ்த்தினார் 


தொடர்ந்த நிகழ்ச்சிகள் நாளைய பதிவில் 


அன்புடன் 

ஆர்.வி.சரவணன் 


திங்கள், மார்ச் 17, 2014

வெள்ளை நிறத்தொரு சேவல் கண்டேன்வெள்ளை நிறத்தொரு சேவல் கண்டேன்


எனது  பள்ளி பருவ காலங்களில்  (4 ஆம் வகுப்பு முதல் 10 ஆம்  வகுப்பு 
வரை) கிராமத்தில் தான் இருந்தேன். கும்பகோணத்தில் இருந்து 
சுவாமிமலை செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தில் தான் என் சிறு
வயது கழிந்தது. நாங்கள் இருந்த வீடு அந்த தெருவிலேயே  பெரிய வீடு 
பெரிய வாசல், வராண்டா, பெரிய ஹால், கொல்லை வாசல் ,சந்து  மாடி 
என்று இருக்கும். அங்கே தாத்தா, பாட்டி,அம்மா அப்பா, மாமாக்கள்,சித்தி 
என்று கூட்டு குடும்பமாக எல்லோரும் இருந்தோம்.  

எங்கள் வீட்டில் அப்போது கோழிகள் வளர்த்து வந்தார்கள் கோழி அடை காப்பது, குஞ்சு பொறிப்பது இதெல்லாம் பார்க்க  சிறுவர்களான 
எங்களுக்கு  அதிசயமாக இருக்கும் .நாங்கள் எங்கள் வீட்டில்
அவ்வளவாக அசைவம் விரும்பி  சாப்பிடுவது கிடையாது. (விருந்தினர்கள் வரும் போதும்  அல்லது மாட்டு பொங்கல் அன்றும்  வீட்டில் அசைவம் 
உண்டு)  முட்டை மட்டும் தான் சாப்பிடுவதுண்டு  இப்படி இருக்கையில் சிறுவர்களான எங்களுக்கு பொழுது போக்கு இந்த கோழிகள் தான். 
(அப்போது டிவி செல்போன் கிடையாது ரேடியோ மட்டும் தானே ) 
அவை ஓடுவதும் அவைகளை பிடிக்க நாங்கள் துரத்துவதும் என்று 
பாதி பொழுது அவைகளுடனே  கழியும்.கோழி அடை காத்து பொறிக்கப்பட்ட குஞ்சுகளை  பருந்து தூக்கி செல்ல வரும். அதனிடமிருந்து காப்பாற்ற தாய் கோழி மட்டுமில்லாது நாங்களும் சேர்ந்து போராட வேண்டி இருக்கும். கோழி யிடமிருந்து அப்போது  மட்டும் வித்தியாசமான ஒரு குரல் வரும் . தாய் கோழியின் குரல் கேட்டவுடன் அருகில் உள்ள குஞ்சுகள் ஓடி வந்து தாயின் இறக்கைகளுக்குள் ஒளிந்து கொள்ளும். தள்ளி நின்று மேய்ந்து கொண்டிருக்கும் குஞ்சுகள் பக்கத்தில் இருந்த செடிகளுக்குள் மறைந்து கொள்ளும். கோழியின் அந்த கண்களில் தெரியும் உக்கிரமான பார்வை தன் அழகு எனும் ஆயுதத்தால் கீழே பறந்து வரும் பருந்தை  தாக்கி விட முனையும் வேகம் பார்க்க வேண்டுமே. அதன் குரல் கேட்டு  நாங்கள் விஷயம் புரிந்து என்ன வேலை பார்த்து கொண்டிருந்தாலும் அப்படியே விட்டு விட்டு ஓடுவோம் தாய் கோழிக்கு ஆதரவாக நின்று நாங்களும் விரட்டுவோம்.

உண்மையில் சொல்ல போனால் நான் பதறி அடித்து ஓடுவேன். தாய் கோழியுடன் இணைந்து காப்பற்ற போராடி குஞ்சுகளை காப்பாற்றிய பின் தான் நிம்மதி வரும்  எனக்கு. அப்படியும் பருந்தோ கழுகோ நொடியில் ஒரு குஞ்சை எடுத்து கொண்டு பறந்து விடும். தாய் கோழியுடன் இணைந்து நானும் பரிதாபமாய் பார்த்து கொண்டு நிற்பேன். மற்ற குஞ்சுகளை யாவது காப்பாற்ற வேண்டும் என்று மனது அந்த வேளையில் உறுதி எடுத்து கொள்ளும் (கோழிக்கும் அதே மன ஓட்டம் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்). 
இப்படி பருந்துக்கு கொஞ்சம்,சீக்குக்கு (நோய்) கொஞ்சம் நாய்க்கு கொஞ்சம் என்று போனதில் மிஞ்சிய குஞ்சுகள் வளர்ந்து பெரிய சேவல் அல்லது பெட்டை கோழிகளாகும். 


இப்படி வளர்ந்த குஞ்சுகளில் ஒரு சேவல் மட்டும் எங்களின்  கவனத்தை 
ஈர்த்தது. நல்ல உயரம் அது. பளீரென்று தும்பை பூ போன்ற வெள்ளை நிறம்.  அது தன் தலையை சிலுப்பி கொண்டு திரிவது பார்க்க நன்றாக
இருக்கும். தினமும் காலை தூங்கி எழுந்தவுடன் அதை கவனித்து கொண்டே இருப்போம்.அரை மணி நேரம் வெளியில் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்து  வீட்டை ஒரு முறை வலம் வரும் யார் வந்திருக்கிறார்கள் வீட்டில் இருப்பர்வர்கள் என்ன செய்கிறார்கள் என்பது போல் பார்த்து விட்டு செல்லும். நாங்கள் சாப்பிட்டு கொண்டிருந்தால் பக்கத்திலேயே சுற்றி வரும். அதுவும் அது சின்ன குஞ்சாக இருக்கும் போது எங்கள் மடியில் ஏறி நின்று கொண்டிருப்பதே ஒரு அழகு தான். வீட்டில் உள்ள அனைவருக்கும் அது செல்லமாகி விட்டது. அதுவும் அது வளர்ந்து பெரிய கோழியான பின் 
அதன் கம்பீரம் பார்க்கையில் அசத்தலாக இருக்கும். அதை பிடித்து 
வைத்து கொண்டு அதன் இறக்கைகளை  எங்கள் வீட்டில் நீவி 
கொடுப்பார்கள்.  

 தாய் கோழி குஞ்சுகளை காப்பற்ற பருந்துடன் போராடுவதை 
பார்க்கையில் சேவல் உதவிக்கு வருவதில்லையே ஏன் என்று
 நான் நினைப்பதுண்டு.இயற்கையில் உள்ள பாகுபாடு அப்போது 
எனக்கு குழப்பத்தையும்  கொடுத்ததுண்டு. நான் சேவலை அவ்வளவாக கவனித்ததில்லை.இருந்தும் எனக்கு இந்த சேவல் மீது  மட்டும் பாசம் ஏற்பட்டது.  ஒரு சண்டை சேவல் எப்படி இருக்குமோ அது போல் இருக்கும் இந்த சேவல்.அதன் மேல் தனி கவனம் எடுத்து நாங்கள்  வளர்த்தது கண்டு தெருவில் உள்ளவர்களே கூட ஆச்சரியபட்டார்கள். 

ஒரு நாள் மாலை எப்போதும் போல் அது  வீட்டில் வந்து அடைய 
வேண்டும். வரவில்லை ஏன் வரவில்லை என்று ஒருவருக்கொருவர் 
வினாஎழுப்பி கொண்டோம். தேட ஆரம்பித்தோம். பக்கத்தில் இருப்பவர்கள்  
அரை மணி முன்னாடி பார்த்தேனே நான் காலையிலே பார்த்தேனே என்று சொல்ல சொல்ல எங்களுக்கு மனது அலை பாய  ஆரம்பித்தது. எப்படியும் 
ஒரு நான்கு மணி அளவில் அது வீட்டுக்கு வந்து சென்றதாய் நினைவு. அங்கிருக்கும் தெருக்கள் அத்தனையும் சுற்றி வந்தோம்.
எங்கும் கிடைக்கவில்லை.அப்போது தான்  யார் வீட்டிலே இதற்கு 
மொளகாய் அரைத்து கொண்டிருக்கிறார்களோ என்று தெருவில் 
உள்ளவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். எங்கள் பாட்டி அத்தை இதை மறுத்தார்கள் "இல்லே நாங்க அதை எப்படி பாசமாக வளர்க்கிறோம் என்று ஊருக்கே தெரியும். கண்டிப்பாக அப்படி செய்ய மாட்டார்கள்" என்று சமாதானம் சொல்லி கொண்டார்கள்.  எங்களுக்கு எப்படியும் அது வந்து சேர்ந்து விடும் அப்படி யாராவது பிடித்திருந்தாலும் எங்களின் கஷ்டத்தை பார்த்து விட்டு விடுவார்கள் என்று தான் நினைத்தோம்.
 ஆனால் மறு நாள் காலையிலும் சேவல் வரவில்லை என்றவுடன் தெருவில் இருப்பவர்களே கோபப்பட்டு கத்த ஆரம்பித்து விட்டனர். "எவடி அவ பிள்ளை மாதிரி வளர்க்கிற கோழியை பிடிச்சு சாப்பிடற அளவுக்கு வக்கத்து இருக்கிரவ" என்று. கூடவே எங்கள் பாட்டி அத்தை அம்மா என்று எல்லோரும் கண் கலங்கி திட்டி தீர்த்தார்கள். நான் பிரிவின் வலி எப்படி இருக்கும் என்பதை உணர்ந்த நேரம் அது.

 எங்கள் வீட்டின் கொல்லைபுறத்தில் தென்னை மரங்கள் சூழ்ந்து ஒரு காடு போல் இருக்கும். அந்த தெரு முழுக்க எல்லாருக்கும் சேர்த்து அங்கே ஒரு குப்பை மேடு உண்டு.  அங்கே இரண்டு நாட்களுக்கு பிறகு நாங்கள் வளர்த்த கோழியின் இறக்கைகள் இறைந்து கிடப்பதை  பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனோம். இதோ இந்த நாள் வரை அந்த சேவல்  எங்கள் ஞாபாகத்தில் சுற்றி சுற்றி வருகிறது.

FINAL PUNCH 

எங்கள் வீட்டில் எப்போதாவது தான் அசைவம் சாப்பிடுவோம் என்று சொன்னேன் அல்லவா. நானும் சிறு வயதில் நிறைய இல்லை என்றாலும்   மீன், முட்டை, ஆட்டுகறி என்று அவ்வபோது கொஞ்சம் சாப்பிட்டிருக்கிறேன் ஆனாலும்  பாருங்கள் 15  வயதுக்கு பின்  நான் அசைவம் சாப்பிடுவதை சுத்தமாக நிறுத்தி விட்டேன். எப்போதாவது என்னை வற்புறுத்தி 
மனைவி சாப்பிட சொல்கையில் முட்டை  சாப்பிடுவதுண்டு.சாப்பிட்ட 
பின் நாள் முழுக்க நான் அவஸ்தையில் இருப்பதை பார்த்து விட்டு 
என்னை இப்போது அவர்கள் வற்புறுத்துவதில்லை. அதன் வாசம் அவனுக்கு 
பிடிக்கல தொடர்ந்து வீட்டில் சாப்பிட வைத்து பழக்கபடுத்தலே என்று
அம்மாவும் உறவினர்களும் காரணம் சொல்கிறார்கள்.

எனக்கென்னவோ அந்த சேவலின் மேல் கொண்ட பாசம்  தான் 
எனக்கு அசைவம் பிடிக்காமல் போக காரணம் என்று நினைக்கிறேன் 

ஆர்.வி.சரவணன் 


சனி, மார்ச் 08, 2014

பாக்யாவின் பாராட்டு கடிதம்
பாக்யாவின் பாராட்டு கடிதம் 


(சாதி இரண்டொழிய வேறில்லை)

நான் படித்த கல்லூரியில் மாணவ தலைவர் தேர்தல் வந்தது . தேர்தலுக்கு நின்ற 
இருவருமே என் வகுப்பில் என்னுடன் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் தான் . அதில் 
ஒருவர் கல்லூரியில் நன்கு பிரபலமானவர். நண்பர்கள் நிறைய உண்டு அவருக்கு. 
இருந்தும் அவருக்கு வாக்கு செலுத்த நான் விரும்பவில்லை.காரணம் கட்சி சார்புடன் 
அவர் நின்றது எனக்கு பிடிக்கவில்லை. (மாணவ சமுதாயத்தில் அரசியல் நுழைவதை 
நான் எப்போதுமே விரும்புவதில்லை ).

ஆகையால் மற்ற நண்பருக்கு  வாக்கு செலுத்தலாம் என்று முதலிலேயே முடிவு செய்திருந்தேன். யாருக்கு வாக்கு நான் செலுத்த நான் முடிவு செய்திருந்தேனோ அவர் என்னிடமும் மற்ற நண்பர்களிடமும் வாக்கு சேகரித்த போது  எனக்கு ஓட்டு போடுங்கள் அவருக்கு போட வேண்டாம் ஏனெனில் அவர் நமது சாதியை சேர்ந்தவரில்லை என்று 
கூறி வாக்கு கேட்டதும் கடுப்பாகி விட்டேன் .

சாதியை முன்னிறுத்திய ஒரே காரணத்தால் நான் அவருக்கு வாக்கு செலுத்தாமல் 
கட்சி சார்புடன் நின்ற நண்பருக்கே ஓட்டு போட்டேன்.அவரே வெற்றியும் பெற்றார். அவர் வெற்றி பெற்றதில் நான் அடைந்த மகிழ்ச்சியை ஒரு புறம் இருந்தாலும் எனது கொள்கையின் படி நான் நடந்து கொண்டதில் எனக்கு மன நிறைவு கிடைத்தது 

இந்த நிகழ்வை தெரிவித்து,எனது அபிமான நடிகர் மற்றும் இயக்குனர் திரு.கே பாக்யராஜ் அவர்களின் பாக்யா வார இதழுக்கு கடிதம் எழுதிஅனுப்பினேன்.(அந்த சமயத்தில் தான் இது நம்ம ஆளு படம் வெளிவந்து ஓடி கொண்டிருந்தது ) என் கடிதத்தை பார்த்து எனக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார்கள் பாக்யாவில் இருந்து .

எனது சந்தோசங்களில் ஒன்றாக எனது பொக்கிஷங்களில் ஒன்றாக இதை இன்றளவும் பாதுகாத்து வைத்திருக்கிறேன்

இதோ அந்த கடிதம் உங்கள் பார்வைக்கு
பாரதி சரவணன் னு பேர் போட்டிருக்கே அப்படின்னு குழப்பமாகாதீங்க
புனை பெயர் எல்லாரும் வச்சிருக்காங்களே நாமும் வச்சிக்கலாம் னு நினைச்சு 
ஆர்வ கோளாறில் நான் வைத்து கொண்ட பேர் அது 

ஆர்.வி.சரவணன்

FINAL PUNCH 


தளம் ஆரம்பித்த புதிதில் வெளியிட்ட பதிவு இது. அப்போது நான் பாக்யராஜ் அவர்களை சந்தித்திருக்கவில்லை.நான் சமீபத்தில் திரு கே.பாக்யராஜ் அவர்களை சந்தித்த போது 
நடந்த நிகழ்வை சொல்லி கடிதத்தையும் காண்பித்து சந்தோசப்பட்டேன்.
(ஆண் சாதி பெண் சாதி தவிர வேறேது சாதி )