புதன், ஜனவரி 23, 2013

இளமை எழுதும் கவிதை நீ-19


இளமை  எழுதும் கவிதை நீ-19

என் வெற்றிக்கு வழி விடுகின்றாயா, வகுக்கின்றாயா 
 பட்டிமன்ற விவாதம் எனக்குள் 


சிவாவின் வீட்டில், கல்யாணம் நடந்ததற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படாமலேயே இருந்தது. ராஜேஷ்குமார் கல்யாணம் முடிந்த கையோடு
டில்லிக்கு கிளம்பி விட்டார். வந்திருந்த உறவினர்களும்  ஒவ்வொருவராக கிளம்ப  ஆரம்பித்திருந்தனர்.

கார்த்திக் தன் மனைவி கீதாவுடன் , கோமாவிலிருந்த அம்மாவை சென்று பார்த்து விட்டு ஆசிர்வாதம் வாங்கி கொண்டு வந்தவனுக்கு  சோர்வு அதிகமாய் இருந்ததால் ஹாலில் ஒரு சோபாவில் அமர்ந்து அப்படியே தூங்க ஆரம்பித்திருந்தான்.கீதா அந்த பக்கம் வந்தவள், அவன் கை சோபாவின் வெளியே தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து ஒரு தலகாணி எடுத்து கைகளுக்கு முட்டு கொடுத்து விட்டு சென்றாள்.

பின் அங்கு வந்த சிவகுமார் கார்த்திக்கின் பக்கத்தில் அமர்ந்து "கார்த்திக்" என்று குரல் கொடுக்க கண் விழித்தான் கார்த்திக்

தொடரும்

ஆர்.வி.சரவணன் 


the story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

 படம் : ஓவியர் மாருதி  நன்றி கூகுள் 

ஞாயிறு, ஜனவரி 20, 2013

புத்தக கண் காட்சியில்....

புத்தக கண் காட்சியில்....


புத்தக கண் காட்சி  சென்று வந்த அனுபவத்தை நான் சில குறிப்புகளாக கொடுத்து விடுகிறேன் படிக்க உங்களுக்கு சுலபமாக இருக்கும்

* புத்தக காட்சி ஆரம்பித்து ஒரு வாரத்திற்கு பின் நேற்று தான் நான் சென்றேன் போக்குவரத்தில் சிக்கி மீண்டு நானும் எனது அலுவலக நண்பரும் உள்ளே நுழைந்த போது நேரம் இரவு எழு மணி ஒன்பது மணிக்கு கிளம்பி விடலாம் என்று உறுதிமொழி யுடன்  அவர் ஒரு பக்கம் செல்ல நான் ஒரு பக்கம் நுழைந்து விட்டேன் (வெளியுலகத்தை மறந்தும் விட்டேன் )

* டிஸ்கவரி புக் ஸ்டாலில் பதிவர் கேபிள் சங்கர் அவர்களை சந்தித்து  பேசினேன்.தொடர்ந்து அவரது பதிவுகளை தொடர்ந்து வாசித்து கொண்டிருப்பதை குறிப்பிட்டேன். (  புன்னகையுடன் சிநேகமாய் அனைவருடனும் அவர் பழகுவது அவரிடம் எனக்கு பிடித்த ஒன்று  )

*மீனாட்சி புத்தக நிலையத்தில் சுஜாதா புத்தகங்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டு அங்கு சென்றேன் பிரியா நாவலும் அவரது கட்டுரை தொகுப்புகளும் மட்டுமே இருந்தது (இதற்கு தான் முன்னாடியே வரணும் கிறது )


*ஞாயிறு இன்றும் வரும் எண்ணம் இருந்ததால்அங்குமிங்கும் அலைந்து எந்தெந்த ஸ்டால் எங்கு இருக்கிறது என்று பார்த்து வைத்து கொண்டேன். ஒரு முன்னோட்டம் (முன்பெ  நோட்டம்) 

* சில புத்தகங்கள் மட்டும் வாங்கிய நிலையில், ஒன்பது மணியாகி விடவே நண்பர் கிளம்பலாம் என்று சொன்னதால் கிளம்பி விட்டேன் (பாதி  சாப்பாட்டில் எழுந்த மன நிலையுடன் )

* வீட்டில் எல்லாருமே புத்தக பிரியர்கள் என்பதால் நான் இன்றும் செல்ல போவதை சொன்ன போது அந்த புக் வாங்கு இது வாங்கு என்று டிப்ஸ் கொடுத்து கொண்டிருந்தனர் (வாங்கலேன்னா என்னை வாங்கு வாங்கு னு வாங்கிடுவாங்க)

* மீண்டும் இன்று காலை படையெடுத்தேன் புத்தக கண் காட்சிக்கு
பதிவர் நண்பர் பால கணேஷ் அவர்களிடம் நான் அவரை பார்க்க 
வருவதாக சொல்லியிருந்ததால் அவர் "எங்கப்பா இருக்கே" என்று  போன் 
அடித்தார்.வந்து கொண்டே இருக்கிறேன் என்று சொல்லி அவர் முன்பு 
போய் நின்றேன் (அவர் வந்த பின்னே  வந்து அவர் முன்னே  சென்று 
நின்றேன் )


* இருவரும் சேர்ந்து வலம் வர ஆரம்பித்தோம் எந்தெந்த புக்ஸ் எங்கு கிடைக்கும் என்று டிப்ஸ் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் அங்கெல்லாம் அழைத்தும் சென்றார்.அவருடன் பேசிய படியே அரங்கை சுற்றி வந்தது கண்டிப்பாக எனக்கு அயர்ச்சி தெரியவில்லை ( அவர் விடை பெற்று செல்லும் வரை )

*எழுத்தாளர்  ராஜேந்திரகுமார் அவர்களின் நாவல்கள் கிடைக்குமா என்று விசாரித்தோம். ஒரு ஸ்டாலில் அவரது  நாவல் ஒன்றும் சிறுகதை தொகுப்பு ஒன்றும் கிடைத்தது அது நான் ஏற்கனவே நூலகத்தில் படித்து விட்டதால் வாங்கவில்லை ( எங்க கிடைக்கும் யாராவது சொல்லுங்களேன் )

* விகடன் ஸ்டால் சென்று புதிதாக வந்திருக்கும் சுஜாதா மலர் புரட்டி பார்த்து விட்டு வைத்து விட்டேன்.இது போல் பல ஸ்டால்களில் பல புத்தகங்களை ஆசையாய் எடுத்து பார்த்து வைத்து விட்டேன் (விலையை பார்த்தவுடன் )

* என் மகன் தனக்கு புத்தகம் வாங்கி வர வேண்டும் என்று போனில் மிரட்டல் விடுத்ததால் முத்து  காமிக்ஸ் ஸ்டால் சென்று முன்னூறு பக்க இரும்புக்கை மாயாவி  வாங்கினேன். குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர் ஆர்வமாய் வாங்கினர் ஒருவர் அந்த கால காமிக்ஸ் புக்ஸ் கிடைக்குமா  இருக்கா அது இன்னும் சுவாரஸ்யமா இருக்கும் என்று கேட்டு கொண்டிருந்தார் (இதையும் படிக்கலாம் னு இருக்கேன்  சிறார்களின் உலகத்துக்கும்  போய் வருவோமே  )

 * சாண்டில்யன் நாவல்கள் இரண்டு (மூன்று பாகங்கள் ) வாங்கிய கடையில்
ஒரே கவரை போட்டு கொடுத்தார்கள் தாங்காது இன்னொரு கவர்ல போட்டு கொடுங்க னு சொன்னேன்  தாங்கும் சார் என்றார் கடையில் இருந்தவர்
(பஸ் ஸ்டான்ட் வருவதற்குள் கவர் கிழிய ஆரம்பித்தது வெயிட் தாங்காமல்)


*குடும்பம் குடும்பமாக சிறார்களுடன் மக்கள்  காலையிலேயே 
வந்திருப்பதை  பார்க்க சந்தோசமாக இருந்தது. புக் வாங்கி 
கொண்டிருந்த தம்பதி யில் கணவன் உனக்கு பிக்ஸ் பண்ண பட்ஜெட்டை 
விட ஜாஸ்தியாகிடுச்சு புக் வாங்கிட்டே படிப்பே இல்லே என்று கேட்டு கொண்டிருக்க நான் எல்லாம் படிச்சுடுவேன் என்று மனைவி பதில் சொல்லி கொண்டிருந்தார் (எல்லா குடும்பத்திலேயும் இப்படி தானா )* நடந்து நடந்து கால்கள் வலியெடுத்தது. எனவே மனது  வெளியேறும்  
வழியை முன்னெடுத்தது. பாக்கெட்டின் வெயிட் குறைந்து போய், கையில் புத்தகங்கள் வெயிட் நிறைந்து விட்டது  (இனி  படித்து மனசு நிறைவடைய வேண்டும்)

* வாங்கிய புத்தகங்களை நான் கொண்டு வந்து ஆசையாய் பிரித்து பார்த்து விட்டு, எனது புத்தக செல்பில் அடுக்கும் போது ஏற்கனவே வாங்கிய புத்தகங்களில்  சில எங்களை நீ இன்னும் படிக்கவில்லை என்று அறிவுறுத்தி கொண்டிருந்தது (புத்தகத்தை எடுக்கறதில்லே எடுத்தா படிச்சு முடிக்காம விடறதில்ல)

நான் வாங்கிய புத்தகங்கள் லிஸ்ட்

கடல் புறா-சாண்டில்யன்

ஜலதீபம்-சாண்டில்யன்

ரத்தம் ஒரே நிறம் -சுஜாதா

கொலையுதிர்காலம் -சுஜாதா

வசந்த் வசந்த் -சுஜாதா

தொட்டால் தொடரும் -பட்டுகோட்டை பிரபாகர்

இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் -வைரமுத்து

சரிதாயணம் - பால கணேஷ்

மீண்டும் ஒரு காதல் கதை -கேபிள் சங்கர்

சினிமா வியாபாரம் -கேபிள் சங்கர்

இரும்பு கை மாயாவி - முத்து காமிக்ஸ்

இனி அடுத்த புத்தக காட்சி யின் நாள் எப்போது, என்பதில் 
என் ஆர்வம் இப்போது 


படம் நன்றி கூகுள் 

ஆர்.வி.சரவணன் 


சனி, ஜனவரி 12, 2013

இளமை எழுதும் கவிதை நீ -18


இளமை எழுதும் கவிதை நீ -18


விலை மதிப்பில்லா பொக்கிஷங்கள்  பட்டியலில் எனக்காக 
நீ விடும் கண்ணீரையும் சேர்த்திருக்கிறேன் 

சிவாவின் நடவடிக்கை அடுத்து என்னவாக இருக்கும் என்பதே அங்கிருந்த அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.மரங்கள் கூட நிசப்தமாய் இருப்பதை போல் ஒரு பிரமை. சுரேசுடன்  இருந்தவர்கள் பயத்துடன் நழுவ தயார் நிலையிலும், மாணவ மாணவிகள் சிவா எந்த நேரம் சிலிர்த்து எழ போகிறான் என்று பார்த்து கொண்டும், இருக்க பாலு சிவாவின் அருகே மெல்ல வந்தான் உமா கோபமாய்  திரும்பி சுரேஷை முறைத்தாள்.

சிவா தான்  வைத்திருந்த தட்டை கீழே வைத்து விட்டு வேகமாக எழுந்தான்.சுரேஷை முறைத்து பார்த்த படியே பின்னோக்கி நகர்ந்தான். மிக வேகமாய் சென்றவன்  அடிக்க தோதாக என்ன பொருள் கிடைக்கும் என்பது போல்  சுற்று முற்றும் பார்த்தான்.ஒன்றும் கிட்டாமல் போகவே அப்படியே வராண்டாவில் ஜம்ப் செய்து  ஏறி தன் கிளாஸ் ரூமுக்கு ஓடினான். கூடவே பாலு வும் ஓடினான் 

இதை பார்த்து வேகமாய் எழுந்த உமா சுரேஷை பார்த்து 

"ஸ்டுடென்ட் ஸ் கூட சேர்ந்து சாப்பிடறது உனக்கு பிச்சை எடுத்து சாப்பிடற மாதிரி தோணுதா"  என்று கோபமாய் எகிறினாள் 

"உமா அவன் கூட பழகாதே அவன் பசு தோல் போர்த்திய புலி "

"உன்னுடைய கரிசனத்திற்கு நன்றி முதல்ல  இங்கிருந்து கிளம்பு  சிவா கிட்டே மாட்டிட போறே "என்று சொல்லி விட்டு நேராக கிளாஸ் ரூம் பக்கம் வேகமாய் செல்ல கூடவே தொடர்ந்தனர் அவளது தோழிகள்.


தொடரும்

ஆர்.வி.சரவணன்
The story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

ஓவியம் நன்றி இளையராஜா 

ஞாயிறு, ஜனவரி 06, 2013

தென்றலின் கனவு-ஒரு பார்வை


தென்றலின் கனவு-ஒரு பார்வை நான் படிக்கும் பதிவோ கதையோ கவிதையோ  எனக்கு பிடித்து  விட்டால் உடனே கருத்துரையிட்டு  பாராட்டி விடுவது வழக்கம். தென்றல் வலைப்பூ வில் எழுதி வரும் இணைய பதிவர் திருமதி சசிகலா சங்கர் அவர்கள், பதிவர் திருவிழாவில் திரு.பட்டுகோட்டை பிரபாகர் அவர்களால்  வெளியிட்ட தென்றலின் கனவு என்ற அவரது கவிதை நூலை படித்த போது  எனது தளத்தில் ஒரு பகிர்வாய் தரலாமே என்று தோன்றியது. 

இது குறித்து நண்பர் அரசனிடம் பேசிய போது அவரும் எழுதுங்கள் சார் அவர்களுக்கு இது இன்னும் ஊக்கம் தருமே என்றார்.

இந்தியராய் பிறப்பது ஒரு இனிமையான வரம்  என்றும்,  தமிழராய் ஜனித்தது பெரும் பேறு என்றும்  பெருமை கொள்ளும்அவரது இக் கவிதை நூலை நான்  இயற்கை,குடும்பம், காதல்,சமூக அவலங்கள் நட்பு ஐந்து  பகுதிகளாக எடுத்து கொண்டு ஒரு பகிர்வாய் இங்கே தந்திருக்கிறேன் 

பிறைநிலவு ஒன்று வளர்பிறையாய் வளர்ந்து கொண்டிருக்கிறது பௌர்ணமி யாவதற்கு என்று சொல்லும் இவரது தென்றலின் கனவை கண்டு நட்பு பாராட்டுவோம் வாருங்களேன்.


இயற்கை 

ஒரு சில கவிதைகள் பார்க்கும் போது அட நமக்கெல்லாம்  இப்படி தோணவில்லையே என்ற எண்ணம் வரும் . எனக்கு அந்த எண்ணத்தை கொண்டு வந்தது இந்த கவிதை

"எந்த விருந்தினருக்காக
என் வீட்டு வாழைமரத்தில்
இலை கழுவி கொண்டிருக்கிறது
மழை"

அழகை பற்றி  பட்டியலிடுகையில், " மானுடம் அழகு அதில் உள்ள மனிதநேயமழகு ரசிக்க மனமிருப்பின் பாலையும் கூட அழகு தான்" என்றுரைக்கிறார்  

வேரின் வலிகளை  பற்றி சொல்லும் கவிதையில்," விளம்பரத்திற்காய் உயிர் பெறும் சாலையோர தாவரங்கள்" என்று குறிப்பிட்டு, "வாடி நிற்கும் எங்களை கண்டால் பிடுங்கி எரியும் மனிதன் வாடிய  முகத்தோடு இருக்கும் மனிதரை எல்லாம் என்ன செய்கின்றான் " என்று கேள்வி யால் சாடுகிறார் 

பறவைகள் வாழ்வை கண்ணுற்று அது பற்றி சொல்லுகையில், "சிறகு முளைத்த மகவுகளைப் பறக்க வைக்கும் முயற்சி யே ஒரு தனி கவிதை" என்பதுடன்  அவைகளை வாழ விடுமாறு கவிதையால் வேண்டுகோள் விடுக்கிறார் 

"தான் விடுப்பில்  இல்லை என்பதை  அவ்வப்போது  வந்து உறுதி செய்யும் சூரியன்", என்று இருந்தும் இல்லாமல் இருப்பதன் அவஸ்தையை ஒரு கவிதையில் சுட்டுகிறார் 


"ஏர் மாடு பூட்டி எதிர்காலம் வாழத் தேயும் உழவர்களும்" என்று
பிறந்த மண்ணுக்கும்  இங்கு கவிதையால் மரியாதை செய்கிறார் தன் வரிகளில் 


சமூக அவலம்

சமூக அவலங்களை  அவர் தன் வரிகள் எனும் வாளால் கூறு போடுகிறார் 

" உடலூனம் தவறில்லை உள்ள ஊனம் பெருங்கேடு" என்று சாட்டை  சொடுக்குகிறார் 

சமூகத்தில் பெண்ணுரிமை பேச்சில் மட்டுமே என்று சொல்லுகையில்,
"மலடியென பட்டம் சூட்டி மனங்களை தீயிட்டு படைப்பின் குறைபாட்டுக்கு பெண்ணை பலியாக்கி நடத்தும் நாடகத்தின் பெயர் சமூக நீதியா" என்று 
எள்ளி நகையாடுகிறார் 

தாய் செய் நல பிரிவு தரும் அவஸ்தையை, "ஒரு பெண்ணின் கருச்சிதைவை பார்த்த படி நிகழும் மற்றொரு பெண்ணின் தலை பிரசவம்"
என்று  வலிகளில் தோய்த்த  வரிகளும் தருகிறார் 


காதல்

கவிதை என்று வந்து விட்டால்  காதல் என்ற அத்தியாயம் இல்லாமலா இதோ இங்கே பட்டியலிடுகிறார் 

"நீ சொல்லெரியாத போதெல்லாம் மனம் கல்லெறி பட்டதாய் காயப்படுகிறது"
என்று காதலின் அவஸ்தையை குறிப்பிடுவதுடன் 

"வீட்டு வேலைகளை நிறுத்தி விட்டு, வாசலில் மனதை நிறுத்தி
கணவன் திரும்பி பார்த்து போகும் ஒரு ஒற்றை பார்வைக்கு  காத்திருப்பதை"
பற்றியும் 

"அழைக்க மாட்டாய் என தெரிந்தும் நொடிக்கொரு முறை அலைபேசியை எடுத்து  பார்க்கும்" காதலின் விந்தையை பற்றியும் சொல்கிறார் 

"அறை கூட்டும் போதெல்லாம் உறக்கத்தில் நீ  உதிர்த்த வார்த்தைகளை எடுத்து பத்திரபடுத்துகிறேன்" என்று சொல்ல்பவர்,

"கண்ணாடி கூட விடை கொடுக்க மறுக்கும் அதிசயம்" பற்றியும் 
சொல்லி தன் வரிகளால் அலங்காரம் செய்கிறார் 

குடும்பம்

"இறைவனிடம் கேட்டு கொண்டு  அறை நாள் விடுப்பில்  வருமாறு அம்மாவை அழைக்கும்" தாய் பாசமும் 

"சண்டையே போட்டிராத அக்காவின் மேல்  கோபம் கொள்வதை குறிப்பிடும் அவர்,"சகோதர சகோதரிக்காக  வீட்டின் குட்டி திண்ணையில்  கவிதையுடன் காத்திருப்பதை" சொல்லும் போது  பிரிவின் வலியுடன் பாசத்தின் வலிமையையும் நம்மால் நன்குணர முடிகிறது   


நாளைய பள்ளி சீருடைக்காய் நனைந்து கொண்டிருக்கிறேன் கிணற்றடியில்,என்று எந்திர உலகை  நமக்கு காட்சிபடுத்தும் உணர்வுள்ள 
கவிதையும் உண்டு 

ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே வந்து பிரிவெளுதிப் போகும்  சந்ததிகளுக்காக காத்திருக்கும் முதுமையை அரவணைக்க சொல்லி முதுமையை தாலாட்டுகிறார் 


பிறந்த கூட்டுக்கு பிரிவெழுதி,என்று ஒரு பெண்ணின் திருமணத்திற்கு பின்னான வாழ்க்கையை அது கொடுக்கும்  பயத்தை,  கவிதையின்  துணை கொண்டு போக்கி நிம்மதி அடைவதை குறிப்பிடுவது பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ள துணை நிற்கிறது 


நட்பு

"ஒன்றாய் கை கோர்த்து நாம்  நடந்து தேய்ந்த  சாலைகள் சரிசெய்யபடுகிறதாம் இப்போது பார்த்து வரலாம் வா" ,

என்று  அன்பு தோழிக்கு அழைப்பு விடுக்கும் வரிகள் உன்னத நட்பை 
நமக்கு தெளிவாக்குகிறது 


. இப்படி எங்கு நோக்கிலும் வார்த்தைகளின் அணிவகுப்பில் கவிதைகள்  இருந்தாலும் எல்லாவற்றையும் ஒரே புத்தகத்தில் கொண்டு வராமல் 

நறுக்கு தெறித்த கவிதைகளை மட்டும் பட்டியலிட்டு இன்னும்  மெருகெற்றி வெளியிட்டிருந்தால்  நன்றாக இருந்திருக்கும்.ஒரு கவிதையே  மீண்டும் இன்னொரு பக்கத்தில் வந்திருப்பதை கவனித்து சரி செய்திருக்கலாம். 
மேலும் பாடல்கள் போன்ற கவிதைகள் நம்மை சுவாரஸ்யபடுத்தினாலும்,  சிறு கவிதைகள் தான் நம் கவனம் ஈர்த்து  நினைவில் நின்று கொள்கிறது.அத்தகைய சிறு  கவிதைகளில் இன்னும் நிறைய கவனம் செலுத்தலாம் என்பது எனது கருத்து.

கவிதை நூலை, முன் பக்க உள் அட்டையில் தாய் தந்தை க்கு சமர்ப்பித்து சிறப்பு சேர்ப்பதுடன், பின் பக்க உள் அட்டையில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் படம் சேர்த்து அழகு சேர்க்கிறார் 


திருமதி சசிகலா சங்கர் அவர்கள் ஓரிடத்தில் இப்படி குறிப்பிடுகிறார் 


"நல் நோக்கத்தை மனமணிந்து ஆக்கத்தை உழைப்பாக்கி அன்போடு சீராட்டின்  நாளை அகிலமே வணங்கி நிற்கும் கனவு நாம் காண்கின்றோம்"

என்கின்ற இவரின் இக் கனவு நனவாக வேண்டும் என்று உளமார வாழ்த்துவோம்

ஆர்.வி.சரவணன் 

செவ்வாய், ஜனவரி 01, 2013

ஸ்வீட் காரம் காபி ------ 01-01-2013


ஸ்வீட் காரம் காபி
------------------------------------------- 01-01-2013

இளமை எழுதும் கவிதை நீ.... தொடர்கதை எழுதி கொண்டிருப்பதால் ஸ்வீட் காரம் காபி  தொடர்ந்து எழுத முடியவில்லை. இது தகவலுக்காக. விளம்பரத்திற்காக என்று நீங்கள் நினைத்து கொண்டால்  அதற்கு கம்பெனி நிர்வாகம் பொறுப்பேற்காது (எப்படிலாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கு )


நீதானே என் பொன் வசந்தம் 

ஜீவா சமந்தா சம்பந்தப்பட்ட பள்ளி காட்சிகள், கிளைமாக்ஸ், பாடல் காட்சிகள்,இடையிடையே சந்தானத்தின் பஞ்ச் ரசிக்க வைக்கிறது   ஜீவாகேரக்டரை விட சமந்தா கேரக்டர் நம்மை ஈர்க்கிறது. காரணங்கள் இரண்டு 1. ஜீவா கேரக்டர் சமந்தவிடமிருந்து விலகி கொள்வதும் பின் சேர்ந்து கொள்ள முயற்சிப்பதுமான குழப்பம்  2.சமந்தா நித்யா கேரக்டரில் க்யூட் டாக நம்மை  கவர்வது.   எல்லா குட்டி பாக்ஸ் சையும்   டிக் அடிச்சிட்டு கடைசியா என் பாக்ஸ் க்கு வந்தியா வசனம் பளிச்.    இசை அரசர் இளையராஜாவின் இசை வார்ப்பில்  சாய்ந்து சாய்ந்து பாடல் ஹம்மிங் செய்ய வைக்கிறது என்றால்   என்னோடு வா.... பாடல் என் மனதோடு இன்னும் நெருக்கமாகி விட்டது.

திரைக்கதை யை கௌதம் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது அதாவது மணப்பாடு ஊருக்கு சமந்தாவை பார்க்க ஜீவா செல்வதில் படத்தை ஆரம்பித்து  இடைவேளைக்குள் பள்ளி கல்லூரி காட்சிகளை ப்ளாஷ் பேக்கில் கொடுத்து இடைவேளைக்கு பின் இருவருக்குமான இடைவெளியை ஒவ்வொரு காட்சியாக கொஞ்சம் கொஞ்சமாக  குறைத்து கிளைமாக்ஸ் க்கு கொண்டு வந்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. ( பொன் வசந்தம் தான் திரைக்கதையில் கொஞ்சம்   கவனம் செலுத்தியிருந்தால்)துப்பாக்கி


துப்பாக்கி படம்  பார்த்ததில் ஏ.ஆர்.முருகதாசின் உழைப்பு மெனக்கெடல் 
படம் முழுக்க தெரிந்தது. உதாரணமாக பஸ்சில் வெடிகுண்டு வைத்தவன் மருத்துவமனையிலிருந்து தப்பித்து ஓடும் போது கூடவே விஜய்  
ஓடி வந்து  அவனை வீழ்த்தும் காட்சி விஜய்  நடித்த படங்களில் எனக்கு 
பிடித்த  பூவே உனக்காக ,காதலுக்கு மரியாதை ,கில்லி, வரிசையில் இந்த படமும் சேர்கிறது . தன் தங்கை உள்ளிட்ட பெண்களை மீட்கும் சண்டை காட்சி, ராணுவத்துக்கு மரியாதை செய்யும் கிளைமாக்ஸ் காட்சி சத்யனை விஜய்  தவிக்க விடும் காட்சிகள்நல்லாருந்தது என்றாலும்,விஜய் செய்யும் செயல்கள் அனைத்தும்  எப்படி அரசாங்கத்திற்கு தெரியாமல் போகிறது நடு கடலில் கப்பல் வெடிக்கிறது எனும் போது அது  கூடவா அரசாங்கத்திற்கு தெரியாமல் போய் விடும், இதெல்லாம் சரி செய்திருக்கலாம்.ஆயிரம் பேருக்கு குண்டு வைக்கிறவனே சாவை பத்தி கவலைப்படலே நாம கவலைப்படலாமா வசனம் படம் போலவே நச்.)


------

நட்சத்திர சிறுகதை 

சென்ற மாத விகடனில்  நட்சத்திர எழுத்தாளர்கள் சிறுகதை  அணிவகுப்பில் சங்கர் பாபு வின், சவீதாவும் அவளது இரு அக்காக்களும் என்ற சிறுகதை என்னை கவர்ந்தது காரணம்  இந்த சிறுகதையின் வரிகள்.  உதாரணத்திற்கு  சில வரிகள் இங்கு 

* இயற்கை படைத்திருக்கும் உமிழ் நீரை ஆண்களை அவமானப்படுத்தப் பயன்படுத்தும்  


* சென்ற  பிறவியில் ஏதோ பவர் புல் யாகங்கள் செய்தவர்களாக இருக்கும். தேவதைகளை அல்ப மனிதர்கள் திருமணம் செய்ய வேறு எந்த காரணம்   இருக்க கூடும் ?

* நில உரிமையாளர்கள் கூலி தரும் விசயத்தில் தான் ஏழை நாடுகளை பார்ப்பார்களே தவிர,  ரியல் எஸ்டேட்  பிசினெஸின்  போது நியுயார்க் ,டோக்கியோ,மும்பை போன்ற நகரங்களில் தங்களது உடைமை இருப்பதாக எண்ணி கொள்வார்கள். 


கதை முழுக்கவே இது போன்ற வரிகள் ரசிக்க  வைத்தது (வரிகள் கோர்த்து தொடுக்கப்பட்ட சிறுகதை )

------

மார்கழி கோலம் ஒன்று 


------

சில்லறை 

சமீபத்தில் கும்பகோணம் டு திருப்பூர் சென்றிருந்த போது ஒவ்வொரு பேருந்தாக மாறி சென்றோம். ஒரு பேருந்தில் ஏறிய போது ஐந்து ருபாய் சில்லறையா கொடுங்க சார் என்றார் நடத்துனர். நான் இல்லை என்று மறுக்கவே அவர் இப்படி சொன்னா எப்படி சார் என்று சலித்து கொள்ள நான் சார் உங்களை போலவே எல்லா பேருந்திலேயும் சில்லறை கேட்டு நான்  கொடுத்து என்னிடம் இப்ப சில்லறை இல்லாமல் போய் விட்டது என்றேன் 
 சார் எல்லோருக்கும் கொடுத்துட்டு எனக்கு மட்டும் இல்லேன்னா எப்படி சார்  என்றாரே பார்க்க வேண்டும்.(என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு)மின்வெட்டு கூல் 

கும்பகோணம் பக்கத்திலே கூல் ட்ரிங்க்ஸ் வாங்கினேன். பாட்டிலில் போட்டிருந்த விலைக்கு மேல் மூன்று ரூபாய் கூடுதலாக வாங்கினார்கள் கேட்டதற்கு  மின் வெட்டு என்றார்கள். சரி அவர்கள் சொல்வது நியாயம் தானே என்று நினைத்து கொண்டேன். சென்னையில் சென்ற வாரம் கூல் ட்ரிங்க்ஸ் வாங்கினேன் இங்கும் கூடுதலாக  ஒரு ரூபாய் வாங்கி கொண்டார்கள் கேட்டதற்கு கடைக்காரர் சொன்னகாரணம்  மின்சாரம் தான்.  இங்கே அப்படி என்ன மின் வெட்டு என்று நான் கேட்டதற்கு அவர்  மின் கட்டணம் உயர்ந்துருச்சுல்ல  என்றார் ( நடத்துங்க )

------

குறை(ஒன்று )மில்லை 

சமீபத்தில் நந்தனம் சிக்னல் அருகே நான் நடந்து வந்து கொண்டிருந்த போது கண் தெரியாத மாற்று திறனாளி ஒருவர் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்தார். கார்களும் டூ வீலர் களும் பறந்து கொண்டிருக்க, அவர் ரோடின் மையத்துக்கு சென்று கொண்டிருப்பதாக எனக்கு தோன்றவே நான் அருகே சென்று ஓரமா வாங்க என்று சொன்னேன். அவர் உடனே நான் அந்த  பக்கம் நந்தனம் காலேஜ் போகணும் என்னை விட்டுடறீங்களா என்று  கேட்டார் நான் உடனே அந்த பக்கம் போற வேலை இல்லியே என்று இழுத்தவன், உடனே சுதாரித்து கொண்டு, விடறேன் வாங்க என்று அவர் கை பிடித்து அந்த டிராபிக்கை  கடந்து  போய் ஓரமாக நடைபாதையில் அவரை விட்டு, எங்கு விட்டுருக்கிறேன் என்று விவரமும் அவரிடம் சொல்லி விட்டு  வந்தேன். வேலைகளுக்குள் என்னை ஈடுபடுத்தி கொள்ளும் வரை அவரது ஞாபகமே என்னை சுற்றி வந்து கொண்டிருந்தது.  கடவுளின்  மேல் கொஞ்சம் கோபமும் வந்தது (கடவுளின் படைப்பில் வேண்டுமானால் குறை இருந்து விட்டு போகட்டும். மனிதர் நாம் காட்டும் அன்பில் ஏதும் குறை இருக்க வேண்டாம் )

------
மாதர் தமை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் 

சென்ற வாரம் என்னை மிகவும் உலுக்கிய சம்பவம். டில்லியில் மருத்துவ மாணவி பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு  பிழைத்து 
எழ  போராடி மரணமடைந்தது. அவருக்காக லட்சோபலட்சம் பேர் போராடி , கண்ணீர் விட்டு கதறி துணை  நின்றாலும், மாணவி  அந்த  சூழ்நிலையில்  தன்னை காப்பாற்ற ஒருவர் கூட இல்லையா என்று கதறியிருப்பாரே என்பதை  நினைக்கையில்  என் மனம் பதறுகிறது. தமிழகத்திலும் இதே போல் சம்பவங்கள் அரங்கேற, இங்கு மட்டும் போராடும் எண்ணம் ஏனில்லை .எது எப்படியாகிலும் அந்த பாதகர்களுக்கு தரப்படும்  தண்டனை  அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூரத்திற்கு வழங்கப்படும் சரியான நீதியாகவும்  இனி வரும் காலங்களில் இது போல்  ஒரு செயல் நடைபெறா வண்ணமும்   இருக்க  வேண்டும். (தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் )


------ எங்கள் மகன் ஹர்ஷவர்தன்  
வடிவமைத்த  புத்தாண்டு வாழ்த்து 


FINAL PUNCH


புத்தாண்டு சபதமாக எதை ஏற்கிறோமோ இல்லியோ மனித நேயம் ஒவ்வொருவருக்குள்ளும் வேண்டும்  என்ற சபதம் ஏற்போம் 

அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்  

ஆர்.வி.சரவணன்