எனது நண்பரிடம் முக நூலில் இதை பற்றி எழுத வேண்டும் என்று நான் சொன்ன போது அவர் பெயர் என்னன்னு கேட்டு அதையும் எழுதுங்க சார் என்றார். சங்கர நாராயணன் என்று தன் பெயரை சொன்ன படி அவர் எனை கடந்து சென்றாலும் ஞாபகத்தில் என்னவோ இன்னும் அங்கேயே தான் நிற்கின்றார்.அது சரி .ஆட்டோ மீட்டர் எவ்வளவு ஆனது தெரியுமா . 178 ரூபாய்
------
ஜனவரி மாதம் நான் வாங்கிய ஆன்றாய்டு செல் போன் சில மாதங்களிலேயே (டிஸ்ப்ளே ஓபன் ஆகாமல்) வேலை நிறுத்தம் செய்து விட்டது. வாரண்டி இருக்கும் தெம்புடன் சர்விஸ் சென்டர் சென்றேன்.
அவர்கள் செக் செய்து விட்டு "செல் போனுக்குள் தண்ணீர் வந்து விட்டதால் போர்டு மாற்ற வேண்டும்". என்றனர். நான் தண்ணீரில் போடவில்லை என்பதை சத்தியம் செய்யாத குறையாய் சொல்லி விவாதித்தும் ஒன்றும் பயனில்லை. (செல் தண்ணீரில் விழுவதும் தண்ணீர் செல்லில் விழுவதும் ஒன்று தாண்டா என்று நடுவில் நுழைந்து சொன்னது என் மைன்ட் வாய்ஸ்). சரி மாத்திருங்க என்றேன். 5000 ரூபாய் ஆகும் என்றனர். போனுக்கு வாரண்டி இருக்கு என்று பதறினேன். "தண்ணீரில் விழுந்தாலோ கீழே விழுந்தாலோ வாரண்டி யில் சேராது" என்றனர்."எததுல எல்லாம் பிரச்னையோ அதுக்கெல்லாம் வாரண்டி கிடையாதுன்னு சொல்லுங்க" என்று கடுப்படித்து முடிவா என்ன சொல்றீங்க என்றேன். ஆரம்பத்தில் இருந்து நாங்க இதை தான் சார் சொல்றோம் என்றனர். அதுக்கு புது போன் வாங்கிடலாமே என்றேன். உங்க விருப்பம் என்றனர். அந்த புது செல் போன் ல பிரச்னை வந்தால் அடுத்த செல் வாங்கனுமா . இப்படியே தொடர்ந்தால் உங்களுக்கு வியாபாரம். எங்களுக்கு ? என்ற படி எரிச்சலுடன் வெளியேறினேன்.11000 ரூபாய் கொடுத்து வாங்கிய போனுக்கு ஏழு மாதத்தில் 5000 ரூபாய் செலவா என்ற படி தொடர்பு எல்லைக்கு வெளியில், கவலையில் அமர்ந்திருக்கும் என்னிடம் எனை பேச வைப்பாயா என்ற மௌன மொழி பேசிய படி என் எதிரே அமர்ந்திருக்கிறது செல் போன்.
------
நேற்று படம் பார்க்க தியேட்டருக்கு நான் சென்று சேரும் போது மணி 6.55. படம் ஆரம்பித்த பின் செல்வது எனக்கு பிடிக்காது என்பதால் டிவி ஸ்க்ரீன் பார்த்தேன். ஏழு மணிக்கு என்று போட்டிருந்தத படத்திற்கு டிக்கெட் வாங்கி அவசரமாக உள்ளே நுழையும் போது தான் கவனித்தேன். டிக்கெட்டில் 6.45 மணி என்று போட்டிருந்தது.நான் அதிர்ச்சியாகி டிக்கெட் கிழிப்பவரிடம் கேட்க அவர் படம் போட்டாச்சு என்றார். நான் கடுப்பாகி அப்புறம் ஏன் டிவி ஸ்க்ரீன்ல 7 மணின்னு போட்டுருந்தீங்க என்றேன். இருக்காதே என்றவர் சரி நான் இந்த கம்ப்ளைன்ட் பற்றி டிக்கெட் கவுன்ட்டர் ல சொல்றேன் என்றார். சமாதானமாக. இப்ப எனக்கு கால் மணி நேரம் படம் போயிடுச்சே என்றேன். அதுக்கு என்ன சார் பண்றது என்றார். நான் திரும்ப ஒரு முறை படம் பார்க்க வர முடியுமா இல்ல நீங்க தான் பார்க்காத படத்தோட காசை திரும்ப கொடுப்பீங்களா என்று கடுப்படித்த படி படம் பார்க்க உள்ளே வந்தேன். ஒரு அரிவாள் திரையில் பறந்து வர டார்ச் லைட் ஒலி வழி காட்ட என் சீட் தேடி வந்து அமர்ந்தேன். படம் பார்த்த பின் எதுக்கு டிக்கெட் கிழிக்கிறவர் கிட்டே மல்லுக்கு நின்னோம் எப்ப வந்தாலும் இந்த படம் புரியுமே என்று தான் தோன்றியது
------
"புகழ்ச்சி என்பது முதுகை தட்டிக்கொடுப்பது போல இருக்கனும், முதுகை சொறிந்து விடுறது போல இருக்கக்கூடாது"
முக நூல் நண்பர் தோட்டா ஜெகனின் இந்த நிலை தகவல் படித்த போது, இதற்கு எதிர்பதமாக எனக்கு ஒண்ணு தோணுச்சு.
"தவறை சுட்டி காட்டுவது என்பது தலையில் குட்டுவது போல் இருக்கணும். தலையில் பாறங்கல்லை தூக்கி போடுவது போல் இருக்க கூடாது"