புதன், டிசம்பர் 26, 2018

காவ்யாவின் பதட்டம்


காவ்யாவின் பதட்டம் 
காவ்யா பதட்டத்தில் இருந்தாள். அமைதி ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த இரவில் ஐந்தடுக்கு அபார்ட்மெண்டின் ஒரு பிளாட்டின் கதவை திறந்து கொண்டு மெதுவாக வெளி வந்தவள் முகத்தை சால் கொண்டு மறைத்து கருப்பு கண்ணாடி அணிந்திருந்தாள். எந்த வீட்டிலிருந்தோ கடிகாரம் 9 முறை அடித்து ஓய்ந்தது. இருந்தும் அடிக்கடி கையில் கட்டியிருந்த வாட்சை பார்த்து கொண்டாள். காரிடாரில் யாரும் இல்லாததே பெரும் ஆறுதலாக இருந்தது. வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அடிக்கடி திரும்பி பார்த்து கொண்டாள்.
உள்ளே அவன் ஹாலில் கழுத்தறுபட்டு துடித்து கொண்டிருந்தான். பெருகிய ரத்தம் அவன் உடலெங்கும் பரவ, வாயில் ஒட்டப்படிருந்த பிளாஸ்திரியையும் மீறி மரண அவஸ்தையில் முனகி கொண்டிருந்தான். அவனது அந்த அவஸ்தையை காவ்யாவிற்கு இந்த பதட்டத்திலும் ரசிக்கவே தோன்றியது. என்ன ஆட்டம் ஆடினான். எல்லாத்துக்கும் சேர்த்து இன்னிக்கு கத்தி வச்சாச்சு.
திடீரென்று செல் போன் ஒலிக்க ஆரம்பித்தது. மெலோடியான ட்யூன் தான் என்றாலும் இந்த நேரத்தில் அது அலறல் போலவே இருந்தது. பரபரப்பாகி செல் போனை கட் செய்தவள், வீட்டினுள்ளே ஒரு முறை பார்த்து கொண்டு கதவை படீரென்று சாத்தினாள். தானியங்கி பூட்டு என்பதால் தானாகவே பூட்டி கொண்டது. எந்த வீட்டிலிருந்தும் யாரும் எந்த நேரமும் வெளி வரலாம். யாரேனும் தன்னை பார்ப்பதற்குள் வெளியேற வேண்டும். லிப்ட் வரை வந்து விட்டவள் கடைசி நொடியில் அதை தவிர்த்து படிக்கட்டுக்கு தாவினாள். இரண்டிரண்டு படிகளால் நான்கு மாடிகளையும் தாண்டினாள். கீழே இறங்கி லிப்டிலிருந்து வெளிப்பட்ட காவ்யாவை கண்டதும் யாரிடமோ சீரியசாக பேசி கொண்டிருந்த செக்யூரிட்டி. இவளை பார்த்த மாத்திரத்தில் "மேடம்" என்ற படி ஓடி வந்தான்.
காவ்யா கண்டு கொள்ளாதது போல் கேட்டை திறந்து ரோட்டுக்கு தாவினாள். இவள் ரோட்டுக்கு வருவதற்காக சற்று தள்ளி காத்திருந்த அந்த சிகப்பு நிற பைக் அவள் அருகே வந்து நின்றது. ஏறி அமர்ந்த பின் பைக் அதி வேகமாக கிளம்பியது. அப்போது தான் அவள் முகத்தில் மலர்ச்சி வந்தது. அப்பாடா என்ற படி பெருமூச்சு விட்டாள். "சீக்கிரம் போ" என்று அவசரப்படுத்தினாள்.
"என்ன வேலை முடிஞ்சுதா ? ஹெல்மேட்டுக்குள்ளிருந்த படி வார்த்தைகள் வர, "ம் ஓகே" என்றாள்.
"ஒண்ணும் பிரச்னை வராதுல்ல "
"வராதுனு நினைச்சா வராது." என்றவளுக்கு சிக்னலில் இருந்த ஜன்னல் விளம்பரம் பார்த்ததும் திக்கென்றது. "ஓ மைகாட். ஜன்னல் கதவை சார்த்தாம வந்துட்டேன்."
"என்னிக்கு வேலைய சரியா செஞ்சிருக்க நீ"
"உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கப்பறம் தான் இப்படி"
"பழிய என்மேலே போடு"
" ஜன்னல் மூலமா சத்தம் வெளில வந்து
காட்டி கொடுத்திடுமோ" என்றாள்.
"வெளில வர வரைக்கும் தான் பயப்படணும். தடயம் ஏதும் இல்லாம வந்தாச்சில்ல விடு"
" கொலை பழி யார்மேல வரும்னு யோசனை பண்ணிட்டிருக்கேன்."
" என்னது கொலை பழியா" அதிர்ச்சியில் பிரேக் போட்டான். அவன் பின்னே வந்த வண்டிகள் கிறீச்சிட்டு நின்றன.
அங்கே காவ்யா பூட்டி விட்டு வந்த வீட்டில் அந்த அவன் வாயில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்திரி எடுக்கப்பட்டிருக்க, மரண அவஸ்தையில் முனகிய படியே வார்த்தைகளை இழுத்து இழுத்து டிவி சீரியலில் பேசி கொண்டிருந்தான்.
பின் குறிப்பு.
இப்ப இந்த கதை படித்த பின் உங்களுக்கு தோன்றும் கேள்விகளுக்கான பதில்கள்.
கேள்வி: அது யாரோட வீடு?
பதில்: காவ்யவோட வீடு தான்.
கே: அவள் ஏன் யாரும் பார்த்திற கூடாதுனு பதட்டத்தில் இருந்தாள்?.
ப:அவளுக்கு எதிர் வீட்டில் தான் காவ்யா அம்மாவின் சினேகிதி இருக்கிறார். நைட் ஊர் சுற்ற போவது தெரிந்தால் கத்துவார். இல்லேன்னா ஊரிலுள்ள காவ்யா அம்மாவிற்கு போன் போட்டு சொல்வார் என்பதால்.
கே: செக்யூரிட்டி ஏன் இவளை பார்த்தவுடன்
ஓடி வந்தார்?
ப: அவளுக்கென்று வந்த கொரியர், போஸ்ட், இதில் ஏதாவதொன்றை கொடுப்பதற்காக ஓடி வந்திருக்கலாம்.
கே: அவள் ஏன் லிப்ட்ல ஏறாமல் படிக்கட்டில் இறங்கினாள்?
ப: நடுவழில லிப்ட் எதுனா தகறாரு ஆகி நின்று விட்டால் வெளியில் அர்ஜெண்டா
போற வேலை என்னாவறது. மேலும் அந்த லிப்ட் சமீபத்தில் தான் சர்வீஸ் செய்யப்பட்டிருக்கிறது.
கே: சரி அவள் ஏன் டிவிய கூட ஆஃப் பண்ணாம அவ்வளவு வேகமா வெளில கிளம்பறா. அப்படி எங்க தான் போறா.?
ப: சார் டீன் ஏஜ் பொண்ணு காதலனோட வெளில கிளம்பறா. சினிமா ஹோட்டல் ETC...ETC... இப்படி எது வேண்ணா இருக்கும். நமக்கெதற்கு அது.
ஆர்.வி.சரவணன்.

வெள்ளி, டிசம்பர் 07, 2018

செல்லம்






செல்லம் 

"குட்மார்னிங் டாடி"
"அண்ணா. இங்க பாருங்க உங்க பொண்ணை"
இருவரது குரலுக்கும் நிமிராமலே அலுவலக வேலையில் மூழ்கியிருந்த சுந்தரமூர்த்தி கடுகடுத்தார்.
"காலங்கார்த்தாலே என்ன இது. பொண்ணை பார். என்னை பார்னு. "
"பார்த்தா தானே தெரியும்" கமலா.
"உங்க விளையாட்டை பார்க்கிறதுக்கு டயமில்ல"
" அப்படியா. அத்தை என்னை திருஷ்டி பூசணிக்காய் மாதிரி போட்டு உடைங்க பார்க்கலாம்" என்றாள் மதுமிதா.
"என்னது?" அதிர்ச்சியாய் திரும்பினார்.
60 வயதான சுந்தரமூர்த்தியின் தங்கை கமலா 20 வயதான அவரது பெண் மதுமிதாவை தன் இரு கைகளாலும் ஏந்திய படி நின்றிருந்தார்.
அந்த காட்சியை பார்த்த மாத்திரத்தில் அலறியடித்து எழுந்து வந்தார் சுந்தரமூர்த்தி.
"முதல்ல அவளை இறக்கு. வயசான உன் உடம்புக்கு எதுனா வந்துடப் போகுது . தடிக்கழுதை மாதிரி இருக்கா. சின்ன குழந்தை மாதிரி தூக்கிட்டு சுமக்கிறே நீ "
"எனக்கென்ன அண்ணா. நான் திடகாத்திரமா தான் இருக்கேன்." மருமகளை இன்னமும் நன்றாக அணைத்து கொண்ட படி சொன்னார் கமலா.
"கழுதையோட பொண்ணு கழுதை மாதிரி தானே இருக்கும்னு சொல்லுங்க அத்தை"
கோப முகம் காட்டி அத்தையின் கைகளிலிருந்து இறங்கினாள் மதுமிதா.
" அப்பாவை அப்படி சொல்ல கூடாது."
" என்னை மட்டும் அவர் சொல்லலாமா?"
"கல்யாணம் பண்ணா அடுத்த வருஷம் குழந்தைய இந்த மாதிரி தூக்கிட்டு திரிய போற பொண்ணு நீ. குழந்தை மாதிரி பிகேவ் பண்ணிட்டு இருக்கே" மகளை கண்டித்தார்.
"நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் போ."
பார்த்தியா. இதெல்லாம் உன் செல்லம்."
" இருந்திட்டு போறா விடு. அவ இப்பவும் எனக்கு குழந்தை மாதிரி தான்"
மருமகளின் தலையை தடவி கொடுத்தார் கமலா.
"அப்படி சொல்லு கமலா" மதுமிதாவும் அத்தையின் கன்னத்தை தட்டினாள்.
"க்கும் " சலித்து கொண்ட படி மீண்டும் தன் இருக்கைக்கு திரும்பினார் சுந்தரமூர்த்தி.
"அத்தை டாடிய வெறுப்பேத்தவாவது இனிமே தினமும் என்னை பெட்ரூமிலிருந்து நீங்க தான் தூக்கிட்டு வரணும். இல்லேன்னா நான் பெட்டை விட்டு எழுந்திரிக்க கூட மாட்டேன்"
"சரிடா செல்லம்."
" கமலா. நீ அதிகமா செல்லம் கொடுக்கறே. இதெல்லாம் செய்யாதே. படுக்கைய விட்டு எழுந்திரிக்க மாட்டேனு அடம்பிடிச்சா அப்படியே விட்டுடு. அவளே எழுந்து வருவா"
"சரிண்ணே"
மதுமிதா முறைக்கவும் "சும்மா உங்கப்பாவை சமாதானப்படுத்த அப்படி சொன்னேன்" காதோரம் கமலா கிசுகிசுத்தார்.
" இவர் தங்கச்சியே இவர் பேச்சை கேட்க மாட்டேங்குது. இதுல பொண்ணு தன் சொல் பேச்சு கேடகறதில்லேனு சுந்தர மூர்த்திக்கு புலம்பல் வேற" பழிப்பு காட்டி அப்பாவின் பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே பறந்தாள் மதுமிதா.
அண்ணன் தங்கை இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
அடுத்த நாளிலிருந்து, காலையில் கமலா எழுப்புவதும் மதுமிதா எழ மறுப்பதும் அவர் தூக்கி கொண்டு வந்து ஹாலில் நிறுத்துவதும் சுந்தரமூர்த்தி தலையிலடித்து கொள்வதும் என்று இந்த காட்சி அந்த வீட்டில் தொடர ஆரம்பித்தது.
"கண்டிச்சு வளர்க்க சொன்னா நீ கேட்க மாட்டியா " ஒரு நாள் சிடுசிடுத்தார் அவர்.
அண்ணனுக்காகவே கண்டிப்பு காட்ட வேண்டி இருந்தது கமலாவுக்கு.
"எழுந்தரிச்சு வந்தா வா. வராட்டி போ" என்று ஒரு நாள் கம்மென்று சமையலறையில் இருந்து விட்டார் கமலா.
ஆனாலும் மதுமிதா எழுந்திரிக்கவில்லை.
ஒன்பது மணி வரை படுக்கையில் இருந்த படி அடம் பிடித்தாள். கமலாவின் கண்டிப்பு மதுமிதாவின் பிடிவாதத்தின் முன்னே செல்லுபடியாகவில்லை. பிறகென்ன. இடைவேளைக்கு பின் நிகழ்ச்சி தொடர்வதை போல இது தொடர்ந்தது.
இதோ இன்று மதுமிதாவை பெண் பார்க்க வந்திருந்தார்கள். "பொண்ணை அழைச்சிட்டு வர சொல்றாங்க" என்ற படி ஒரு உறவினர் பெண் சொல்லிவிட்டு செல்ல, சுந்தரமூர்த்தியும் மதுமிதாவின் அறைக்கு வந்து "ம் சீக்கிரம்" என்ற படி அலங்கரித்து சேரில் சோகமாய் அமர்ந்திருந்த மகளை பார்த்து சொன்னார். மதுமிதா கலங்கிய கண்களுடன் அப்பாவை பார்த்து திரும்பினாள். மகளை பார்க்க தைரியமின்றி கண்களை துடைத்தபடி அங்கிருந்து நகர்ந்தார் அவர். மதுமிதாவின் அருகே வந்த கமலாவிடம்,
"எனக்கு கல்யாணம் பண்ணிக்கவே பிடிக்கல அத்தை" வெறுப்பை கக்கினாள்.
"உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையணும்டா. எங்களுக்கப்புறம் நீ தனியா ஆகிட கூடாதுன்னு தானே அப்பாவும் நானும் உன்னை ஒருத்தன் கையில பிடிச்சு கொடுத்திடணும்னு தவிக்கிறோம். எங்க பேச்சை கேளுடா செல்லம்"
பீறிட்டு வந்த அழுகையை கமலா மறைத்து கொண்ட படி மதுமிதாவை சேரிலிருந்து தூக்கி கொண்டு ஹாலுக்கு வர ஆரம்பித்தார்.
ஆம். சமீபத்தில் மதுமிதா ஆக்ஸிடெண்டில் இரு கால்களை இழந்திருந்ததால், இரு கைகளாலும் அவளை ஏந்தி கொண்ட படி வழக்கமாய் அவளை தினமும் இறக்கி விடும் ஹாலுக்கு வந்து பெண் பார்க்க வந்தவர்களின் முன்னே நின்றார் கமலா.

ஆர்.வி.சரவணன்.

நம் நண்பர் பாலகணேஷ் அவர்கள் பல வருடங்களுக்கு முன் குமுதத்தில் வெளியான இந்த ஓவியத்தை கொண்டு சிறுகதை எழுதுமாறு சொல்லியிருந்தார். நண்பர்கள் பலரும் எழுதியிருந்தனர். அந்த ஓவியத்திற்கான எனது சிறுகதை இது.