ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

திருமணத் தடை நீக்கும் ஒற்றை காலில் தவமிருக்கும் தபஸ் அம்மன்





திருமணத் தடை நீக்கும்  ஒற்றை காலில் தவமிருக்கும் தபஸ் அம்மன் 
(அருள்மிகு அமிர்தகலசநாத சுவாமி திருக்கோவில். திருகலயநல்லூர்) 


இறைவனை திருமணம் செய்து கொள்வதற்காக உமையம்மை ஒற்றை காலில் தவமிருக்க, அவர் தவம் கண்டு உவந்து அம்மைக்கு வரங்கொடுத்து திருமணம் புரிந்து கொண்டார் இறைவன். இது  நம்பியாரூரர் சுந்தரர் 
அவர்கள்  வணங்கி 

குரும்பைமுலை மலர்குழலி கொண்ட தவங் கண்டு 
         குரிப்பினோடுஞ் சென்றவள் தன் குணத்தினைநன் கறிந்து
விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த 
          விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியஊர் வினாவில் 
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட
           அணிமயில்கள் நடமாடும் அணிபொழில் சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளரும் கழனிக்  
            கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே


பாடியருளி இருக்கும் ஸ்தலம் இது. 
(இப் பதிகத்தின் காலம் 8 ஆம் நூற்றாண்டு)

இக் கோவில் கும்பகோணத்தில் இருந்து 3 கிலோ மீட்டரில், மன்னார்குடி செல்லும் சாலையில் அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள திருகலயநல்லூரில் உள்ளது.  (இந்த ஊர் இப்போது சாக்கோட்டை 
என்ற பெயரில் அழைக்கபடுகிறது)



இத் தலத்தை குறித்து மூன்று புராண வரலாறுகள் உள்ளது. ஒன்று ஊழிக் காலத்தில் உயிர்களை அடக்கிய கலசம் இங்கு தங்கியது அதனால் இது கலயநல்லூர் என்று வழங்கபடுகிறது. இரண்டாவது பிரம்மன் இங்கு இறைவனை பூஜித்து பேறு பெற்றான். மூன்றாவது இறைவன் உமையம்மையின் தவத்தினை கண்டு அம்மைக்கு வரம் கொடுத்து 
திருமணம் புரிந்து கொண்டார்.




இது கிழக்கு நோக்கிய சன்னிதியாக உள்ளது. பஞ்சமூர்த்தி சுதையுடன் 
கூடிய கோபுர வாயிலும் உள்ளன. 






நந்தியை வணங்கி விட்டு உள் நுழையும் போது சன்னதிக்கு மேல் சுதையாலாகிய மீனாட்சி திருகல்யாண காட்சி உள்ளது 
அமிர்தகலச நாதர்  கருவறையில் அருள் பாலிக்கிறார். சன்னதிக்கு 
இடப் புறம் அமிர்தவல்லிக்கு தனி சன்னதி உள்ளது. 







மகா மண்டப வாயில் வடபுறம் சிறிய அளவில் தண்டாயுதபாணி,
மேற்புற சுவரில் இலிங்கோத்பவர் உள்ளார் இரு புறமும் மாலும் அயனும் வணங்கி நிற்கின்றனர்.




மண்டபத்தில் மகாகணபதியும்,அடுத்து ப்ருதிவிலிங்கம்,அப்புலிங்கம், தேயுலிங்கம் என மூன்று இலிங்கங்களும்,சுப்பிரமணியர், அர்த்த நாரி, கஜலெட்சுமி,சப்தமாதர்கள் சிலைகள் சன்னதிகள் கொண்டுள்ளது. 





இப்போது அருள்மிகு தபசு அம்மன் பற்றி பார்ப்போம் 




தபஸ்விம்மன் என்ற பெயரில் சன்னதி உள்ளது. இத் தவக்கோல அன்னை வலது காலை மட்டும் தரையில் ஊன்றி இடக்காலை மடக்கி வலது தொடையில் ஏற்றி பொருந்திட மடக்கி பதிந்து பாதம் மேல் நோக்கிட நிற்கிறாள்.வலக் கரத்தினை உச்சி மீது உள்ளங்கை கவிழ வைத்து இடக் கரத்தினை திருவயிற்றின் கீழ் அங்கை மேல் நோக்க வைத்து நேராக நின்று தவமிருக்கின்றார். தவமிருந்து இறைவனை மணந்ததால், இந்த கோவிலில் இந்த சன்னதி தனி சிறப்பு கொண்டு விளங்குகிறது.

  3 பொர்ணமி தினங்களில் 48 அகல் விளக்குகள் ஏற்றி அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழி பட வேண்டும். இதனால் தாமதமாகும் திருமணங்கள் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம். 

 எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர்கள் இது போல் வழிபட்டு உடனே அவர்களுக்கு வரன் தேடி வந்தது. அதை பற்றி எங்களிடம் சொன்ன போது தான் எங்களுக்கு இக் கோவில் பற்றி தெரிந்தது. நாங்களும் உறவினர் பெண்ணுக்காக வழி பட இந்த கோவில் சென்றிருந்தோம். அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்து விட்டது. வெளியூரில் இருப்பவர்கள் கூட வழிபட வந்திருந்தார்கள் 






பெண்ணோ பையனோ திருமணம் தடைபட்டு வந்தால் இந்த வழிபாடு கை கொடுக்கும். மேலும் இக் கோவில் அறுபதாம் திருமணத்திற்கு உகந்த ஸ்தலம் என்றும் இக் கோவிலின் அர்ச்சகர் திரு. ஆனந்த குருக்கள் சொன்னார். ஏதேனும் தகவல்கள் வேண்டுமென்றால் அவரது செல் நம்பரில் தொடர்பு கொண்டு பேசலாம். CELL NO.9788202923

வடபால் கருவறை சுவரில் நான்முகன் இருக்கின்றார்.கீழ்ப்பால் உள்ள மண்டபத்தில் சுமார் ஒன்றரரி அடியுள்ள பைரவர், பிட்சாடனர், சூரியன்,சனி பகவான், சிற்பங்கள் சன்னதி உள்ளது.

இராஜராஜனுக்கு முன்னர் இக் கோயில் கற்றளியாக கட்டப்பட்டது.என்றாலும் பின்னர் 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சை நாயக்கமன்னர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

இறைவன்         : அருள்மிகு அமிர்தகலசநாதர்

இறைவி             : அருள்மிகு அமிர்தவல்லி

தல விருட்சம்  : வன்னி 

தலதீர்த்தம்        : அமிர்ததீர்த்தம்

பாடியவர்           :  சுந்தரர் 




பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமகத்தின் 
தீர்த்தவாரிக்கு செல்லும் பன்னிரண்டு சைவ திருக்கோவில்களில்  
இதுவும் ஒன்று.







பழங்காலத்தில்  இக் கோயிலை சுற்றி பெரிய கோட்டை இருந்தது என்பதால் தான் இன்றும் மக்கள் இக் கோவிலை கோட்டை சிவன் கோவில் என்று அழைக்கின்றனர். 

FINAL TOUCH 


நான் இக் கோவில் சென்று இந்த தபஸ் அம்மனை வழிபட்ட போது 
பகதர்களின்  திருமணம் கை கூட அவர் தவமிருப்பது போல் ஒரு பிரமை எழுந்தது.பேருந்து செல்லும் மெயின் ரோட்டுக்கு அருகிலேயே இக் கோவில் இருந்தாலும் இதன் உள்ளே கிடைக்கும் அமைதி மனதுக்குள் ஒரு 
திருப்தியை தந்தது என்னவோ நிஜம் 

ஓம் நமச்சிவாய

ஆர்.வி.சரவணன் 

வியாழன், ஆகஸ்ட் 28, 2014

நகைச்சுவை நானூறு

 


 நகைச்சுவை நானூறு 

பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் 

"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தான் வர போகுது "

" அப்ப  பாட்டிலுக்கு தலைவலி தைலம் தடவி விடவா "

இதெல்லாம் ஒரு ஜோக்கா என்று நீங்கள் பல்லை கடிப்பது எனக்கு புரிகிறது. என் சிறு வயதில் வார இதழ்களில் வரும் நகைச்சுவை துணுக்குகளை எல்லாம் படித்த பாதிப்பில்  எனக்கு தோன்றிய இந்த ஜோக்கை போஸ்ட் கார்டில் எழுதி குமுதத்திற்கு அனுப்பி இருக்கிறேன்.சிரிப்பு வராத இந்த ஜோக்கை எழுதி அனுப்பியதை  இப்போது நினைத்து பார்த்தால் எனக்கு 
சிரிப்பு வருகிறது. (உங்களுக்கும் அது தொற்றியிருக்கலாம்) 

எதற்கு சொல்கிறேன் என்றால் வாசகர்களை சுவாரஸ்யமாக படிக்க வைப்பதுடன் ஜோக் எழுத தூண்டும் எண்ணத்தை நமக்குள் தோற்றுவிக்கும் வண்ணம்  நகைச்சுவை துணுக்குகளை எழுதி குவிக்கும் புகழ் பெற்ற  நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர் தான் நண்பர்  கீழை அ.கதிர்வேல் அவர்கள்.



சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்தும் கதைக்களம் நிகழ்வில் கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அவர்களுடன் கீழை அ.கதிர்வேல்  

 எப்படி எனக்கு நண்பராக அறிமுகமானார் என்பதை இங்கே குறிப்பிட  விரும்புகிறேன்  வலையுலக நண்பர் திரு. நிஜாமுதீன் அவர்கள் தான் கீழை அ.கதிர்வேல் அவர்களை பற்றி சொல்லி எனக்கு அறிமுகபடுத்தினார். வார இதழ்களில் அவரது பெயரையும் நகைச்சுவைகளையும் ஏற்கனவே நிறைய  படித்திருக்கிறேன்  என்பதால் அவருடன் முக நூல் நண்பராக உடனே இணைந்து கொண்டேன்.

நண்பர் கீழை அ .கதிர்வேல் வேலைக்காக சிங்கப்பூரில் இருந்தாலும் தொடர்ந்து எழுதி வருகிறார். அவர் தனது பத்திரிகை உலக அனுபவங்களை பகிர்ந்து கொள்வதை நான் விரும்பி படிப்பதுண்டு. அதிலிருந்து ஒன்று இங்கே 

அந்தக்காலத்தில் இந்திய கிரிக்கெட் டீம் ஆண்டுக்கு ஒரு முறை வெளி நாடு டூர் போகும் அதே மாதிரி ஏதாவது ஒரு வெள் நாட்டு அணி ஆண்டுக்கு ஒரு முறை இந்திய சுற்றுப்பயணம் வரும். அப்படி வரும் போது கிரிக்கெட் சீசன் கிரிக்கெட் ஜோக் எழுத ஆரம்பித்து விடுவோம் அப்படி ஒருமுறை நான் எழுதியதுதான்
நட்சத்திர கிரிக்கெட் மாதிரி நம்மூர் அரசியல் வாதிகள் கிரிக்கெட் ஆடினால்... என்ற கற்பனை இதில் எனது ஆறு ஜோக்குகளை தேர்ந்தெடுத்து கல்கி இதழின் நடுப்பக்கத்தில் பிரபல ஓவியர் உமாபதியின் படங்களுடன் வெளியிட்டிருந்தார்கள். அப்போதெல்லாம் இந்த மாதிரி மேட்டருக்கு பத்திரிக்கையிலேயே பணிபுரியும் லே அவுட் ஆர்டிஸ்ட்டுக்களுக்குதான் கொடுப்பார்கள். எனக்கு கிடைத்த அந்த வாய்ப்பு ஒரு பொக்கிஷம்! அது இங்கே.....






அவ்வபோது முக நூல் சாட்டிங்கில் பேசினாலும் போன் செய்தும் பேசுவார். சிங்கப்பூரில் இருந்த படி, இங்கே புத்தகம் அச்சிட்டு  
வெளியிடுவது சாதாரண ஒன்று அல்ல.அவரது குடும்பத்தினரும் 
அவரது எழுத்தார்வத்திற்கு  உதவி  ஊக்கமளித்து வருவது பாராட்டப்பட 
வேண்டிய ஒன்று. 






சாவி இதழில் வெளி வந்த அவரது பேட்டி 


அவர்  பத்திரிகைகளில் வெளிவந்த தனது நகைச்சுவை துணுக்குகளை 
எல்லாம் சேர்த்து சமீபத்தில் வெளியிட்டிருக்கும் நகைச்சுவை தொகுப்பு 
 நகைச்சுவை நானூறு.


 திரு. பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் 
காசு கேட்காமல் நல்ல மன நிலையை தருபவர்கள் மருத்துவர்கள் 
அல்ல. நல்ல நகைச்சுவையாளர்களே என்று தன் அணிந்துரையில் குறிப்பிட்டிருக்கிறார் 

சக்தி விகடன் ஆசிரியர் ரவி பிரகாஷ் ஒரு நீண்ட நாவல் எழுதுவதை விடவும் கடினம் ஒரு சிறுகதை. அதையும் விட கடினம் ஒரு ஜோக் எழுதுவது என்பதை அனுபவத்தில் உணர்ந்தவன் நான்.இந்த புத்தகம் 
ஒரு நல்ல விட்டமின் டானிக் பாட்டிலுக்கு சமம்  என்று உரைக்கின்றார் 

புகழ் மிக்க எழுத்தாளர்கள், பத்திரிகையளர்கள், பத்திரிகைகள் உண்டு.புகழ் மிக்க வாசகர்கள் உண்டா எனில் உண்டு. அந்த வரிசையில் குறிப்பிட தகுந்தவர் கீழை அ கதிர்வேல் என்று தன் அணிந்துரையில்
 பாராட்டியிருக்கிறார் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள் 

எழுத்தாளர்  பாக்கியம் ராமசாமி வாழ்த்துடன்  சிரிப்பரங்கத்தின் வெளியீடாக வந்திருக்கும் இந்த நூலின்  அட்டை  ஒரு நகைச்சுவை துணுக்கை கொண்டதாக வடிவமைக்கபட்டிருக்கிறது.  மற்ற 399 ஜோக்ஸ் உள்ளே என்ற அறிவிப்புடன். படிக்க ஆரம்பிக்கும் நம்மை   அட என்று ஆச்சரியப்படவும், புன்னகைக்கவும் வைக்கின்றன.  (ஒரு ஜோக் இரண்டாம் முறையும் இடம் பெற்றிருப்பதை கவனித்து தவிர்த்திருக்கலாம்) 

 நான் ரசித்ததை  இங்கே வரிசைபடுத்துகிறேன்.


அரசியல் பற்றிய ஒரு ஜோக் எண்  (44) 

மாமியார் மருமகள் பற்றிய ஒரு ஜோக் (85)

பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்த பெற்றோரின் நிலையை 
சொல்லும் ஜோக் (160)

டாக்டர் நர்ஸ் பற்றிய  ஜோக் (185) அதே டாக்டர் பற்றிய இன்னொரு 
ஜோக் (355) நிஜத்தை சொல்கிறது.

வார்த்தையால் விளையாடியிருக்கும் ஜோக் (156)

கணவன் மனைவி ஜோக் (105,272)


உதாரணத்திற்கு அவரது அனுமதியுடன்  சில ஜோக்ஸ் உங்களுக்காக 


"எதுக்காக உங்க ஆபீஸ் கோபுவை கோப்பு கோப்பு னு கூப்பிடறீங்க"

"இருக்கிற இடத்திலிருந்து  ஒரு இன்ச் நகர மாட்டானே" 

-----

"அதோ போறவர் சமய சொற்பொழிவாளர்"

"பார்த்தா அப்படி தெரியலையே" 

"அட சமயத்துக்கு தக்க படி பேசுவார்" 

------

தயாரிப்பளர் : படத்தில் கோர்ட் சீன இருக்கா ?

கதாசிரியர் : இல்லே ஒரு வேலை படம் வெளி வந்ததும் வரலாம் 

------
"உனக்கு பிடிச்சதுன்னு அமர்த்தின வேலைக்காரியை  ஏன் விலக்கிட்டெ"

"அவளை என் புருஷனுக்கும் பிடிச்சு போனதால் தான்"  


------

அவ்வபோது எனக்கும் ஜோக் எழுதி பார்க்கும் மூட் வரும் அதிலிருந்து 
ஒன்று. 

"அலுவலகத்தில் நாங்க எல்லாம் தூங்கிட்டு 
இருக்கிறப்ப முதலாளி வந்துட்டார்" 

"அப்புறம் என்னாச்சு" 

"எங்களை எல்லாம் எழுப்பி வேலை பார்க்க சொல்லிட்டு 
அவர் தூங்கிட்டார்"

இப்படி கஷ்டப்பட்டு (மற்றவரையும் கஷ்டபடுத்தி) எழுதுவதை விட நகைச்சுவை எழுத்தாள நண்பர்களின் நகைச்சுவைகளை ரசித்து விடலாம் என்று தோன்றும். 

நம்மை ரசிக்க வைப்பதில் முன்னிலை வகிக்கும் எழுத்தாளர் கீழை அ.கதிர்வேல் அவர்களின் மென் மேலும் சுவை கூடிய நகைச்சுவை துணுக்குகள் அவரது  அடுத்த புத்தக வெளியீட்டில் (பக்கங்களில்) அணி திரளட்டும் 


அவரது மின்னஞ்சல் முகவரி

kathir.ananthi@gmail.com

75 ரூபாய் விலையுள்ள இந்த நூல் கிடைக்குமிடம் 
டிஸ்கவரி புக் பேலஸ் 
கே.கே.நகர்,சென்னை 

FINAL TOUCH

தாரளமாக   நகைச்சு வைக்கலாம் இந்த நானூறு

ஆர்.வி.சரவணன் 

சனி, ஆகஸ்ட் 23, 2014

முக நூல் கிறுக்கல்கள்






முக நூல் கிறுக்கல்கள் 

(முக நூலில் படிக்காதவர்களுக்காக தொகுக்கப்பட்டது இந்த பதிவு) 

லிப்ட், என்னடா நாம கீழேயே இருக்கோமே னு வெக்ஸ் ஆகிட கூடாது. அதனோட பட்டனை  தட்டி மேலே ஏற்றி விட யாராவது வருவாங்க. (மேல இருக்கோம்னு மிதப்புலயும் இருக்க கூடாது. கீழே இறக்கி விடவும் யாராவது வருவாங்க) 

லிப்ட் க்காக வெயிட் பண்ணும் போது தோன்றிய சிந்தனை


----------

பேக்கரி கடையில் ப்ரெட் வாங்கினேன். கவர் கொடுக்கவில்லை. கேட்டதுக்கு "பிளாஸ்டிக் கவர் கொடுக்க கூடாது னு அரசாங்கம் ஆர்டர் போட்டிருக்கு" என்றனர். ஆனால் கடையில் கவர் வைத்திருந்தார்கள். எனக்கு கவர் தேவைப்படவில்லை இருந்தும் கடையில் கவர் இருந்தது . கவர் வச்சிருக்கீங்களே என்று கேட்டதற்கு "அது நிறைய பர்சேஸ் பண்ணினால் கொடுக்கிறதுக்கு" என்றான் கடை பையன். "அதை சொல்லாம அரசாங்கம் ஆர்டர் போட்டிருக்குன்னு ஏன் பொய் சொல்றே" என்றேன். அவன் பதில் சொல்லவில்லை

எந்த சட்டமானாலும் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள் பாருங்கள்

----------

ஒரு பாடத்தில் சென்டம் எடுத்திருந்த மாணவிக்கு, அந்த பெண்ணின் போட்டோ, பெற்றோர் பெயர் எல்லாம் போட்டு வாழ்த்துக்கள் சொல்லியிருந்த பேனர் ஒன்றை நடந்து வரும் வழியில் பார்க்க நேர்ந்தது. பள்ளியின் விளம்பரம் அல்ல அது என்பது பார்த்த நொடியிலே தெரிந்து போயிற்று. தெருவாசிகள் தான் வாழ்த்தி இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் பேனரை ஆர்வமாய் கவனித்தேன். சாதி பெயரை குறிப்பிட்டு அதன் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பேனர் அது என்று தெரிந்த போது, முன்னோக்கி வந்த என் உற்சாக அலை பின்னோக்கி சென்று விட்டது.

----------

நான் உபயோகிக்கும் இன்டர்நெட் டேட்டா கார்டு நிறுவனத்தின் சேவை மையத்தில் இருந்து எனக்கு போன் வந்தது. "சார் உங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஆபர். 650 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணீங்கன்னா இரவு 1 மணியிலிருந்து காலை 5 மணி வரைக்கும் அன் லிமிடெட் நெட் use பண்ணலாம் ரெண்டு நாளுக்குள் நீங்க ரீசார்ஜ் பண்ணியாகனும்" னு சொன்னாங்க. அதாவது அவசரபடுத்தினாங்க நான் " போன வாரம் தான் 450 ரூபாய்க்கு ஒரு மாசத்துக்கான ரீசார்ஜ் பண்ணினேன். அதை என்ன பண்றது" னு கேட்டேன். பதில் ஒன்னும் சொல்லாம போனை வச்சிட்டாங்க.அவங்களுக்கு பதிலடி கொடுக்கணும்னு இதை நான் கேட்கலை. நான் உண்மையாகவே சமீபத்தில் தான் ரீசார்ஜ் பண்ணியிருந்தேன்.

----------

கை நிறைய கட்டணம் அள்ளி கொடுத்தாலும், பள்ளியில் கொடுப்பதென்னவோ ரசீது துண்டு சீட்டில் தான். (அதுல ஸ்கூல் பெயரும் இருக்கிறதில்ல) எதிர்த்து கேட்கலாம் னு வேகம் வந்தாலும் நம் உணர்வின் நிலை, பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்த பின் சம்பந்தி வீட்டாரின் அடாவடியை எதிர்த்து கேள்வி கேட்டால் பொண்ணு அங்கே கஷ்டபட்டுடுமோ என்ற பயத்தில் மௌனமாய் இருந்து விடும் பெண்ணை பெற்றவர்களின் நிலைக்கு நிகராக இருக்கிறது.

----------

கும்பகோணத்தில் இருந்து சென்னை வர நான் பேருந்து நிலையம் சென்ற போது அன்று கூட்டமில்லை. வாங்க வாங்க என்று அழைத்து கொண்டிருந்தார்கள். நான் ஒரு பேருந்தின் அருகே சென்ற போது சீட் இருக்கு வாங்க சார் என்று அழைத்த கண்டக்டர், நான் உள்ளே ஏறியவுடன் சீட் நம்பர் 30 க்கு அப்புறம் உட்கார்ந்துக்குங்க என்றார். வேண்டாம் என்ற படி நான் இறங்க முயல, அவர் "நீங்க இதை யோசித்தால் எந்த வண்டியிலயுமே போக முடியாது" என்றார். நான் உடனே கூலாக "அது என் பிரச்னை நீங்க ஏன் கவலைபடறீங்க" என்றவாறு இறங்கினேன். "இதுவே கூட்டம் நிறைய இருந்து கடைசி சீட் தான் இருக்கு அதுவும் இந்த பேருந்தில் மட்டும் தான் இருக்குனு சொன்னால் உட்கார்ந்து போக மாட்டியா நீ" என்று கேட்டது கண்டக்டர் இல்லீங்க என் மைண்ட் வாய்ஸ் (மனித சுபாவம் இது தானே)

----------

என் நண்பர் ஒருவர் டீசர் னா என்ன. ட்ரைலர் னா என்ன ? என்று என்னிடம் கேட்டார். "ஹோட்டலுக்கு சாப்பிட போறீங்க. அந்த ஹோட்டல் ல என்ன ஸ்பெசல்னு ஒரு மெனு கார்டு கொடுப்பாங்க அது டீசர். மெனுல இருக்கிறதை கொஞ்சம் டேஸ்ட் பண்ணி பாருங்க னு கொடுத்தால் அது ட்ரைலர்". நான் இவ்வாறு பதில் கொடுத்தேன். (கூடவே நான் சரியா தான் பேசறேனா என்று அவரை கேட்கவில்லை. உங்களை கேட்கிறேன்)

----------

வாடகை வீட்டில் தண்ணீர் வரல மோட்டர் ஆன் பண்ணுங்க னு நாம கேட்கறப்ப காலையில தானே புல் டேன்க் நிரப்பினேன் னு வீட்டு சொந்தக்காரர் சந்தேகமா மோட்டார் ஆன் செய்யும் போது தான், நாம் தண்ணீர் உபயோகபடுத்தவில்லை 
என்பதை எப்படி நிரூபிப்பது எனற குழப்பத்தில் சொந்த வீட்டுக்கு அஸ்திவாரமிடும் எண்ணம் இன்னும் வலுப் பெறுகிறது.

----------

"முக நூல் இணையம் மூலமா நீ சாதிச்சது என்ன" னு என்னை ஒருத்தர் கேட்டார். 

அவரிடம் நான் பதில் சொல்லுமுன்பே அவர் "உன்னை எழுத ஊக்கப்படுத்தறாங்கனு சொல்வே" அதானே என்றார் நக்கலாய். நான் புன்னகைத்த படி பதில் கொடுத்தேன். 

பள்ளி,கல்லூரி,அலுவலகம் என்று மட்டுமே இருந்த என் நட்பு வட்டம் விரிவடைந்தது இதனால் தான்.இப்ப தமிழகத்தில் பல ஊர்களில் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். என்பதில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா என்றேன் பெருமையாய்.

நீண்ட நாள் உறவிது. இன்று போல் என்றுமே தொடர்வது....


----------

வாழ்க்கையில் வர்ற கஷ்டங்களெல்லாம் நாம ரோட்டில் டூவீலர்ல போறப்ப எதிரில் வரும் லாரிகள் போல தான்.அவைகள் கடந்து போகும் அந்த நொடியே நம் கவனத்திலேருந்தும் விலகி போயிடறது. ஆகவே கஷ்டங்களை பின் தள்ளி முயற்சிகளை முன்னெடுப்போம்.



FINAL TOUCH

கர்வம் கூடாது தான்.இருந்தும் 
கர்வம் கொண்டிருக்கிறேன் 
நான் இந்தியன் என்பதில்.

ஜெய்ஹிந்த்


ஆர்.வி.சரவணன் 


வெள்ளி, ஆகஸ்ட் 08, 2014

எஜமான்



எஜமான் 

என்னடா சரவணன் முதலாளின்னு உரிமை கொண்டாடற அளவுக்கு யாரு அவரை அப்படி இம்ப்ரெஸ் பண்ணதுன்னு யோசிக்கறீங்களா. எவ்வளவு உழைத்தாலும் இவ்வளவு தான்ப்பா என்று சம்பளத்தை குறைத்து கொடுப்பதை  பார்த்திருக்கோம். அல்லது  நான் அப்படி வேலை செஞ்சேன் இப்படி வேலை செஞ்சேன் என்று சீன் போடற தொழிலாளிகிட்டே முதலாளி பணத்தை அள்ளி கொடுத்திருப்பார். இப்ப நாம பார்க்க போறது வித்தியாசமான ஒரு முதலாளியை வாங்க வேலைக்கு போகலாம் சீ அவரை பத்தி பார்க்கலாம் 

நான்  20 வருடங்களுக்கு முன்பு ஒரு பங்கு சந்தை களத்தில், பங்கு விற்பனை அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தேன். எனது வேலை பேங்க் சென்று பணம் எடுத்து வருவது மற்ற கம்பெனிகளுக்கு சென்று செக் வாங்கி வருவது மற்றும் ஆபீஸ்  க்ளெர்க் பார்க்க வேண்டிய வேலையும்.அதாவது  ஆள் இன் ஆள் அழகு ராஜா னு  வச்சிக்குங்களேன். என்னுடன் இன்னும் மூன்று பேர் வேலை பார்த்தார்கள் (அதில் ஒருவர் முதலாளியின் மச்சினன் அவர் தான் மேனேஜர்) 

எப்படி பார்த்தாலும்  எட்டு மணி நேர வேலையில்   2 மணி நேரமாவது நாங்கள்  ப்ரீயா  இருப்போம். வேலை என்று வந்தவுடன் அவரவர் பிஸியாகி விடுவோம். அந்த மாதிரி சமயங்களில் முதலாளி எங்களுடன் உலக விஷயங்கள் குறித்து சகஜமாக உரையாடுவார் . அன்றைக்கு செய்தி தாளில் உள்ள விஷயங்கள் குறித்து விவாதிப்பார். அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் சரியாக பின் பற்ற வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொள்வார். 

30 ம் தேதி அன்று அலுவலகத்தில் நுழையும் போதே சரவணன் பேங்க் போய் பணம் எடுத்திட்டு வந்திடுங்க எல்லாருக்கும் சம்பளம் கொடுக்கணும் முதல் வேலை அது தான் என்பார். ஒரு நாள் தள்ளி கொடுப்பது கூட அவருக்கு பிடிக்காது. அதே வேலையில் மிகுந்த கண்டிப்பானவர். அதிகமாக லீவ் எடுத்தால் அவருக்கு பிடிக்காது. (எந்த ஓனருக்கும் பிடிக்காது.) நான் ஒரு முறை ஒரு வாரம் போல் லீவ் எடுத்திருந்தேன். அதற்கே முகம் சுளித்து 
இந்த மாதிரி இருந்தால் எனக்கு சரிபடாது சரவணன். என்று சொன்னார்.  . 

அவரது பிறந்த நாள்  வந்து விட்டால் எங்களை சரவண பவன் ஓட்டல் அழைத்து சென்று பார்ட்டி தருவார் .விரும்பியதை வாங்கி கொடுப்பார். ஒரு முறை அப்படி தான் வடபழனி சரவண பவன் சென்று சாப்பிட்டு விட்டு வெளி வந்தோம்.  தியேட்டரில் சூப்பர் ஸ்டார் நடித்த எஜமான் ஓடி கொண்டிருந்தது அலுவலகத்தில் நானும் என் நண்பனும் ஏற்கனவே பார்த்து விட்டோம் என்றாலும் அன்று அலுவலகத்தில் உள்ளவர்கள் எல்லோருடனும்  செல்லலாம் என்ற ஆர்வத்தில் முதலாளியிடம்  தயங்கி தயங்கி கூறினோம்  அவர், வாங்க போகலாம் என்று சொல்லி டிக்கெட் எடுக்க பணம் கொடுத்தார். அடுத்த நிமிடம் நான் தியேட்டர் பறந்தேன். ஆனால் பாருங்கள் படம் ஹவுஸ் புல். ப்ளாக்கில் டிக்கெட் விற்று கொண்டிருந்தார்கள். 


சரி டிக்கெட் வாங்கி விடலாம் என்ற முனைப்புடன் அவரிடம் விஷயம் சொன்னோம். அவர் மறுத்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் . 
பணம் செலவழிப்பது எனக்கு பிரச்னை அல்ல. ஆனால் அது சரியான வழியில் செலவழிக்கப்பட வேண்டும். ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி அதன் மூலம் அதை ஊக்குவிக்க கூடாது என்றார். படம் பார்க்கவில்லை என்ற எங்கள் ஏமாற்றத்தை   அவரது பதில்  விரட்டி அடித்து விட்டது.

இப்படியான முதளியிடத்தில் வேலை பார்ப்பதில் எனக்கு மிகுந்த திருப்தி இருந்தது.  எப்படி பார்த்தாலும் ஒரு மூன்று மணி நேரங்களாவது நான் சும்மா இருக்கும் படி நேரிடும். எனக்கு சும்மா உட்கார்ந்திருப்பது அவ்வளவாக பிடிக்காது. (நிஜமாக தான் சொல்றேன்) மேலும் இன்னொருவரிடம் சம்பளம் பெற்று கொண்டு சும்மா உட்கார்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது.எனவே அவர் வீட்டில் உள்ள வேலைகளை  கூட விருப்பபட்டு செய்து கொடுக்க ஆரம்பித்தேன். 



காலம் இப்படியே செல்லுமா சென்றால் கடவுளுக்கு போரடிக்குமே. பங்கு சந்தை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. முதலாளியிடம் இருந்த பங்குகள் மூலம் அவர் நஷ்டப்பட நேர்ந்தது. அவர் எங்களை அழைத்து, கம்பெனி நிலைமை சரியில்லை அதனால் வெளியில் வேலை தேடுங்க கிடைச்சவுடன் நீங்க விலகிக்கலாம் என்றார். மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் வேலை தேட ஆரம்பித்தேன். எனக்கு முதலில் வேலை கிடைத்தது. வாழ்த்துக்கள் சொல்லி அனுப்பி வைத்தார் 

இனி தான் கிளைமாக்ஸ் 

நான் வேலை விட்டு வெளியேறி வந்த பின் மூன்று  மாதங்களில் தீபாவளி வந்தது. கூடவே அவரிடமிருந்து போன் வந்தது. நீங்கள் இந்த வருடம்  வேலை பார்த்த மாதங்களை கணக்கிட்டு போனஸ் போட்டு வைத்திருக்கிறேன் வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று. இதை கேட்டவுடன் எனக்கு எவ்வளவு சந்தோஷம் வந்திருக்கும் பாருங்கள். என்னுடன் அங்கே வேலை பார்த்த நண்பர் தெய்வமே தெய்வமே நன்றி சொன்னேன் தெய்வமே என்று நெகிழ்ச்சியில் பாட ஆரம்பித்து விட்டார். அவருக்கு நன்றி சொல்லி எனது போனஸ் பெற்று கொண்டு வந்தேன். அதற்கு பின்  எவ்வளவு போனஸ் வாங்கினாலும் அவையெல்லாம் அந்த போனஸ் எனக்கு கொடுத்த திருப்திக்கு ஈடில்லை. 

 வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் நீ கற்று கொள்ள ஏதேனும் இருக்கும். என்று சொல்வார்கள்.  நான் முதலளியானால் இவரை போல் தான் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இவரிடம் தான் கற்று கொண்டேன். 

FINAL TOUCH 

இப்ப உங்களுக்கு தோணும். நீ வேலை பார்த்ததுக்கு உண்டான சம்பளத்தை தானே கொடுத்துள்ளார். இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று. 
தொழிலாளிகளின் பணத்தை அவர்கள் வேலை விட்டு சென்ற பின் 
எவ்வளவு முதலாளிகள் கொடுக்கின்றனர் என்பது தெரியாது. 

லாபத்தில் இயங்கும் போதே நஷ்டம் என்று சொல்பவர்களின்  இடையே நஷ்டப்பட்ட போதும் கூப்பிட்டு  கொடுத்தாரே போனஸ். அதனால் தான் எஜமான் என்ற பெயரிட்ட இந்த கட்டுரையை  இங்கே தந்திருக்கிறேன். 
அந்த முதலாளியின் பெயர் அருணாசலம்.


ஆர்.வி.சரவணன்