செவ்வாய், ஜூலை 30, 2013

ஸ்வீட் காரம் காபி - ஜூலை 2013​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​





ஸ்வீட் காரம் காபி 
---------------------------------------------
ஜூலை 2013​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ 


நேரம் 

சமீபத்தில் பார்த்த படங்களில் நேரம் படத்திற்கு செலவிட்ட நேரம் (பணம் )
திருப்தியாய் இருந்தது. (நேரம் விமர்சனத்தை நேரத்தோட எழுத மாட்டியா நீ என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.என்ன பண்றது டைம் தான் பிரச்னை) ஒரே நாளில் நடப்பதாக வரும் கதையில், நேரம் சரியில்லாத போது ஏற்படும் பிரச்னைகள் நேரம் சரியானவுடன் எப்படி சரியாகிறது (என்ன இது விசு டயலாக் மாதிரி வருது)  என்பதை ரசிக்கும் படி சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர்.


ஹீரோ நிவின் கேரக்டருகேற்ற  இயல்பை தந்திருக்கிறார் தன் நடிப்பில் 
 என்றாலும் ஹீரோயின் நஸ்ரியா வெரி நைஸ். அவரை கார் டிக்கியில் போட்டு விட்டு நகரும் பல காட்சிகள் நமக்கு ஏமாற்றத்தை தருகிறது.வில்லன் சிம்ஹா, (இந்த கேரக்டரை இன்னும் சீரியஸ் ஆக்கி இருக்கலாம்) நாசர், தம்பி ராமையா, ஜான் விஜய் கேரக்டர்களை ரசிக்க முடிகிறது.எனக்கு பிடித்த காட்சி என்றால் அது ஹோட்டல் காட்சி தான். பணம் கொடுக்க முடியாமல் தவிக்கும் நிவினை அவரது நண்பர் திட்டி விட்டு பணம் கொடுத்து  அழைத்து காட்சி நெகிழ்ச்சி 

ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றி கொள்ளலாம் போல் இருக்கிறது. முக்கா முழம் போடு பாடல் நம் எதிரில் டேபிள் இல்லாவிட்டாலும் எதிரில் இருப்பவர் முதுகில்  தாளம் போடலாமா என்று  தோன்ற வைக்கிறது 

நேரம் (பட குழுவினருக்கும்)  நல்லாருக்கு 

 
சிங்கம்-2

 சிங்கம் முதல் பாகம் பார்த்து இம்ப்ரெஸ் ஆனவன், இரண்டாம் பாகம் எப்படி இருக்குமோ என்று எதிர்பார்த்தேன்.மேலும் என்  மகன் ஹர்ஷவர்தனுக்கு இப்போது சூர்யா பிடித்த நடிகர். போனாலே ஆச்சு என்று ஒரே வம்பு  ( சின்ன வயசுல நான் பண்ண மாதிரி ) சரி என்று அவனை அழைத்து சென்றேன் 

இரண்டாம் பாகத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. முதல் பாகத்தில் இருந்த காதல் மற்றும் குடும்ப காட்சிகள் இதில் கம்மி. (முதல் பாகத்தில் 
சூர்யா குடும்பத்துடன் அளவளாவும் காட்சிகள் மற்றும் அனுஷ்கா வுடன் காதல் என்றெல்லாம் ரசிக்கும் படி இருக்கும்.) வில்லன் டேனி திரையை ஆக்ரமித்தது போல் ஆக்சன் காட்சிகள் ஆக்ரமிப்பு தான் நிறைய. வேகம் வேகம் என்றுதிரைக்கதையால்  இயக்குனரும்,நடிப்பால் சூர்யாவும் தன் வெயிட் டை காட்டியிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிக்குரிய மிடுக்கு அவருக்கு சூப்பரா செட்டாயிருக்கு. ( ஓரிரு சீன்கள் தவிர மற்ற இடங்களில் கத்தி பேசுவதை குறைத்திருக்கலாம்) ஹன்ஷிகா பள்ளி மாணவியாக (நம்பி தான் ஆக  வேண்டும்) சூர்யாவை காதலிக்கிறார்.தன் பதவி உயர்வுகேற்றவாறு விவேக் (முதல் பாகம் போல் இல்லாமல் ) பேசியிருக்கிறார். தன் கவுன்ட்டர் களால் சந்தானமும் ரசிக்க வைக்கிறார். அனுஷ்கா வரும் காட்சிகளை இன்னும் அதிகபடுத்தி இருக்கலாம்.


இப் படத்தில் எனக்கு பிடித்தது  மேலும் வில்லன் டேனியை சூர்யா கைது செய்து சிறையில் அடைக்கும் பர பர காட்சிகள்.பொது சொத்தை சூரையாடுபவர்களை  சூர்யா தண்டிக்கும்  காட்சி.  தப்புல்ல என்று கர்ஜிப்பார் சூர்யா. (தண்டிக்கும்  விதம் ரைட்டுல்ல  நான் சொல்றேன்) 

சிங்கம் வெயிட்  

 
------

ஆபீஸ் சீரியல் 






நான் டி.வி சீரியல்கள் பார்ப்பதில்லை. (நாங்க மட்டும் பார்க்கிறோமா 
என்று முறைக்காதீங்க.) இருந்தும் நான் பார்க்கும் சீரியல் விஜய் டிவி யில் வரும் ஆபீஸ்.  முழுக்க  முழுக்க  (சில நேரங்களில் வீடு பிக்னிக் என்று காட்சிகள் வருகிறது) அலுவலகத்தை ,மையமாக கொண்ட கதை. பார்க்க கொஞ்சம் சுவாரஸ்யமாக தான் இருக்கிறது. கண்களால் பேசும் ஹீரோயின் எப்போதும் லொட லொட என்று பேசும் அவரது தோழி, ஹீரோவின் தோழன்  இவர்களை ரசிக்க முடிந்த அளவுக்கு காமெடி என்ற பெயரில்  
மூவர் அடிக்கும் கொட்டம்  ரசிக்க முடியவில்லை. சில இடங்களில் புன்னகைக்கும் படியும் சில இடங்களில்  கடுப்பை கிளப்புவதாகவும்
 இருக்கிறது.  எப்போதும் எல்லாரும் பேசி கொண்டே இருக்கிறார்கள். வேலைக்கு நடுவில் கொஞ்சம் காதல் கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் வஞ்சம் என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.இது மாதிரி ஆபீஸ்ல எல்லாம் நமக்கு வேலை கிடைக்கலியே.அந்த மாதிரி ஆபீஸ் ல எல்லாம் உனக்கு வேலை கிடைக்காது. வேணும்னா நீ  முன்னுக்கு வந்து   அந்த மாதிரி கம்பெனி க்கு எம்.டி ஆகிடு  என்று நக்கலடிப்பது வேற யாரு மை மைண்ட் வாய்ஸ் தான்

------

காதல் கடிதம் போட்டி 

இணைய நண்பர் சீனு திடங்கொண்டு போராடு அறிவித்திருந்த 
போட்டியான   காதலன், காதலிக்கு எழுதிய அல்லது எழுத நினைத்த  
காதல் கடிதம். நானும் கலந்து கொண்டுள்ளேன்.இதன் மூலம் கிடைத்த 
பயன் புதிய அறிமுகங்கள் நிறைய கிடைத்திருக்கிறது  நட்பு வட்டம் பெரிதாகவும் உதவியிருக்கிறது.  போட்டியில் கலந்து கொண்டவர்களின் கடிதங்கள் எண்ணற்ற உணர்வுகள் படிக்க  வேண்டுமா  இங்கே சென்று படியுங்கள் http://www.seenuguru.com/2013/07/love-letter-contest.html வாழ்த்துக்கள் சீனு


------

ஒரு வரி தந்த நிறைவு 

கும்பகோணம் ரயில் நிலையத்தில் நான் சென்னை செல்ல ரயிலுக்காக
வெயிட் பண்ணிய போது ஒரு வி.ஐ.பி யை சந்தித்தேன். அருகில் 
பார்த்தவுடன் நான் விஷ் பண்ண அவரும் விஷ் பண்ணியதோடு மட்டும் இருந்திருந்தால் இங்கே குறிப்பிட விஷயம் ஏதுமில்லை . 
ஏதோ நெடு நாள் பழகிய ஒருவரை பார்க்கும் போது கேட்பது போல் "நல்லாருக்கீங்களா" என்றும் கேட்டார்.  எல்லோரையும் அவ்வாறே 
நலம் விசாரித்து  கொண்டிருந்தார். அவர் நடிகர் திரு .டெல்லி கணேஷ். தன் கோச் நிற்கும் இடம் நோக்கி கிளம்பும் போதும் வரேன் என்று எல்லோரிடமும் விடை பெற்றே கிளம்பினார்.(ஒரு வார்த்தை னாலும் அது அவரை மனசுல  உயர்த்திருச்சு)

------




டி .எம்.எஸ் 

சமீபத்தில் மறைந்த பாடகர் டி .எம்.சௌந்தரராஜன் அவர்கள்  பாடிய பாடல்களில் பல எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதவை. (திரை பாடல்களுக்கு ரசிகனான எனை ஈர்ப்பவை). முக்கியமாக, கண்ணை நம்பாதே, ஏன் என்ற கேள்வி, நான் ஆணையிட்டால்,ஆறு மனமே ஆறு  எங்கே நிம்மதி என்ற கொள்கை பாடல்களும் டூயட் பாடல்களில் ஆடலுடன் பாடலை, ஒருவர் மீது ஒருவர் ,பச்சைக்கிளி,  பாட்டுக்கு பாட்டெடுத்து, அமைதியான  நதியினிலே ஓடம் மற்றும் முருகன் பக்தி பாடல்கள் என் விருப்ப 
 கலெக்சனில் இருக்கிறது. அவர் மறைந்தாலும் அவர் பாடல் 
கேட்கும் போதெல்லாம் அவர் நம்மிடையே இருந்து கொண்டிருப்பது போன்றே உணர்வு. அவரது பாடல்களில் எனக்கு பிடித்த இன்னொரு
பாடல், செந்தமிழ் பாடும் சந்தன காற்று.... (டூயட் பாடல்) அந்த பாடல் வரிகளையே இங்கே அவருக்கு  புகழாரமாக சூட்டுகிறேன்.
(ஆம் அவர் செந்தமிழ் பாடும் சந்தன காற்று)

------



என்றென்றும் வாலி 

வாலி மறைந்ததில் வலி மிகுந்தது  தமிழுக்கு என்ற வரிகளை படித்தேன் 
 பல வருடங்களுக்கு முன் வெளியான ஒரு வார இதழில் (குமுதம் )வாலி பற்றி வந்திருந்த செய்தியை இங்கே குறிப்பிடுகிறேன்.வாலியிடம் ஒரு 
நண்பர் கேட்டாராம் ஏன் நீங்கள் இந்த பெயர் வைத்து கொண்டீர்கள் 
என்று. இராமாயணத்தில் வாலி யாருடன் மோதுகின்றானோ 
அந்த எதிரியின் வலிமை அவனுக்கு வந்து விடும் சக்தி பெற்றவன் 
அவன். அது போல் நான் யாரை சந்திக்கின்றேனோ அவரது அறிவும் எனக்கு வந்து  விட வேண்டும் என்று தான் இந்த பெயர் வைத்து கொண்டேன் 
என்று சொல்லியிருக்கிறார் வாலி. நண்பர் ஜாலியாக, அப்படி ஒன்றும் 
நீங்கள் அறிவாளி ஆனது போல் தெரியவில்லையே என்றாராம். அதற்கு 
வாலி  கொடுத்த பதிலடி.  அப்ப நான் இன்னும் அறிவாளி யாரையும்
சந்திக்கவில்லை போலிருக்கிறது.இப்படி வார்த்தைகளில்விளையாடும் 
வாலி நின் புகழ் நீடுழி வாழி

-----





 வேண்டுகோள் ஒன்று  

எனக்கு  இயக்குனர் ஆக வேண்டும் என்பதில் விருப்பமுண்டு 
குறும்படம்  எடுக்க ஆர்வமாக இருக்கிறேன். அதற்காக சில  கதைகளும் 
ரெடி செய்திருக்கிறேன். இருந்தும்  தொழில் நுட்ப ரீதியில் நான் எந்த   பயிற்சியும் மேற் கொள்ள இயலவில்லை. எந்த ஒரு படபிடிப்பிலும் நான் பார்வையாளனாக கூட இருந்ததில்லை. எனவே என் தளம் தொடர்ந்து படிக்கும் நண்பர்கள் (?) யாரேனும்  குறும்படம்  எடுக்கும் போது எனக்கு தெரிவித்தால் நானும் கலந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறேன் 
சொல்வீர்களா ?


ரசித்த போட்டோ 





மன உறுதிக்கு இதை விட ஒரு சான்று வேண்டுமா என்ன 




செய்திகள் சில வரிகளில் 

தமிழ்நாட்டில் விவசாய குடும்பத்தில் பிறந்து இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக உயர்ந்துள்ளார். நீதியரசர் திரு.பி.சதாசிவம் அவர்கள் 

நீதிக்கு தலை வணங்கி வரவேற்கிறோம் 

கஞ்சா கருப்பு தனது சொந்த படப்பிடிப்புக்காக வாங்கிய போர்வெல் லாரி மூலம் கிராமங்களுக்கு இலவசமாக ஆழ்குழாய் கிணறு அமைத்துக்கொடுத்து கொண்டு இருக்கிறார்.இதுவரை 12 ஊர்களில் 50 போர்வெல் போட்டுக் கொடுத்திருக்கிறாராம்.

கஞ்சா கருப்பின் மனசு வெள்ளை


------


FINAL PUNCH




எனது நண்பர் ஒருவர்  நீங்கள் ப்ளாகில் எழுதுவது  சரி அடுத்த கட்டத்துக்கு செல்லுங்கள் பத்திரிகைகளுக்கு எழுத  முயற்சி செய்யுங்கள் என்று அறிவுறுத்தினார்.நானும் விடாது ஒரு மாதமாக முயற்சித்ததில் விளைந்த பயன், நான் எழுதி அனுப்பிய கட்டுரை  குடிக்காதது குத்தமாய்யா விகடன் டைம் பாஸ் இதழில் 12-07-2013  வெளியானது. விளம்பர வால் பேப்பரில் கடைகளில் இந்த தலைப்பை பார்த்து இன்னும் சந்தோசமானேன். உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. (முயற்சி திருவினையாக்கும் என்பதை உணர்த்திய  நிகழ்வு இது)   




ஆர்.வி .சரவணன் 

வெள்ளி, ஜூலை 26, 2013

திஸ் இஸ் T.R. ஸ்டைல்






திஸ் இஸ் T.R.  ஸ்டைல்


என் கல்லூரி நாட்களில்  நான் எழுதிய கதையில்
ஒரு காட்சி.ஹீரோவின்  தங்கை ஒருவரை (செகண்ட் ஹீரோ ) காதலித்து
கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமாகி விடுகிறார்.(20 வருஷத்திற்கு முன்னாடி
எழுதின சீன் அப்படி தான் இருக்கும்). ஊராருக்கு என்ன பதில் சொல்வது என்று கலங்கும் அம்மாவை சமாதானபடுத்த,  கதாநாயகன் பேசுவதாக ஒரு வசனம் வரும். இதில் டி. ராஜேந்தர் நடித்தால் வசனம் எப்படி
இருக்கும் என்று  (ரூம் போடாம ) யோசித்து நான்
எழுதியதை இதோ உங்களுக்காக தருகிறேன். தன் படங்களில் 
செண்டிமெண்ட் சீன்களில் டி .ஆர் கண் கலங்கி தலையை அசைத்த படியே பேசுவார். அந்த கான்செப்டில் படித்து பாருங்கள் 


அம்மா,

ஊரார் சொல்லும் பழி

நமக்கு காட்டாது ஒரு வழி

அவங்க வெட்டுவாங்க நமக்கு அவதூரு ங்கிற குழி

அது நம் போன்றவர்க்கு என்னிக்குமே தீராத வலி

அதுக்காக உங்க மனசிலே ஏன் கிலி

அவங்க பேச்சுக்கு நாம ஏன் ஆகணும் பலி

அவங்க சொல்றதை மனசிலேருந்து அழி

அவங்களுக்கு காலம் தரட்டும் கூலி

நம்ம குடும்பம் சந்தோசமாக வாழ தேடுவோமா ஒரு வழி

அதற்கான மன அமைதியை குடும்பத்திற்கு அளி



 எப்பூடி.... 


ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, ஜூலை 07, 2013

"திடங்கொண்டு போராடு-காதல் கடிதம் பரிசு போட்டி" ஆசையில் ஓர் கடிதம்





"திடங்கொண்டு போராடு-காதல் கடிதம் பரிசு போட்டி" 

ஆசையில் ஓர் கடிதம்   


எப்படி  அழைக்கலாம் உன்னை, 

அன்பே என்றோ என்னவளே என்று அழைக்கும்  உரிமை உண்டா என  தெரியாததால் நான் நேசம் கொண்ட பெண்ணுக்கு என்றே ஆரம்பிக்கிறேன்.  

உன் மனது என்னை பற்றி அங்க என்ன சொல்லுது என்பதை இங்கிருந்து 
ஒட்டு கேட்க முடியவில்லை. நான் நினைப்பதை சொல்லி விடுமாறு மனது கரையில் எடுத்து போட்ட மீன் போல் துடிப்பதால் என் உள்ளக் கிடக்கையை வார்த்தைகளில் கொட்டிய காதல் கடிதம் இது  

அலை பேசியோடு அலை பாயாத, இணையத்தோடு இணைப்பில் இல்லாத,  முக நூலின் முகம் பார்த்திராத, காலம் அது. பணக்காரர்கள் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பிலே உனது வாசம். அந்த குடியிருப்பின் நிர்வாக அலுவலகத்தில் எனக்கு வேலை . எந்த வீட்டில் என்ன பிரச்னை என்றாலும் என் தலை உருண்டு கொண்டிருக்க, பாலைவனமாய்  இருந்த என் அலுவலக நேரங்கள் உன் வரவால் தான் சோலைவனமாக மாறியது. 

 நீ அப்படியொன்றும் அழகியல்ல.(சட்டென கோபம் கொள்ளாமல் 
பட்டென அடுத்த வரியை படி)  முதல் முறை பார்க்கும் போது மறு 
முறையும் பார்க்கலாமே என்று தோன்ற வைக்கும் தோற்றம் நீ. 
அதுவே  தொடர்கதையாகும் அதிசயமும் நீ. எண்ணற்ற தேவதைகள்  
அங்கே உலா வந்த போதும் உன்னிடத்தில் மட்டும் ஈர்க்கப்பட்டேன்.  
ஈர்ப்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் புரிந்தது . எதனால் இந்த ஈர்ப்பு என்று 
பட்டிமன்றம் வைத்தால்  முடிவு எட்டபடாமலே  அது முடிவுக்கு 
வரும் என்பதால் விட்டு விடலாம். ஆனால் உன்னை அப்படி விட்டு 
விட முடியாத  சம்திங் ஸ்பெஷல் நீ.  மாநிறம் தான் என்றாலும்  கோபம் வந்தால் மட்டும் முகம் ஏன் சிகப்பு சாயம் பூசி கொள்கிறது (என்னையும் கொல்கிறது ) 

உன்னை சந்தித்த வேளை பற்றி இங்கே கொஞ்சம் சிந்திக்கிறேன் 
நான் வாசல் கேட்டருகில் நின்றிருந்தேன்.( வாட்ச்மேன் வெளியே சென்றிருந்ததால்) நீ கல்லூரிக்கு செல்ல சைக்கிளை  தள்ளிய படி வந்து கொண்டிருந்தாய்.வேதியியல் என்றால் வேப்பங்காயாய் கசக்கும் எனக்கு  கூட ஒரு ரசாயன மாற்றம் அப்போது நிகழ்த்தினாய். முதல்  பார்வையில் தென்பட்ட  இனம் புரியாதொரு சிநேகம் பொங்கலில் தட்டுபட்ட முந்திரி போல தான் இருந்தது. அதை சுவைத்து கொண்டே நான் நிற்கையில் பிரேக் போட்டது போன்று நின்று விட்டாய் நீ. உன் தாவணி அங்கு நின்றிருந்த பைக்கின்  கைப்பிடியில் மாட்டி கொண்டிருந்தது.  நீ சைக்கிளை  நிறுத்த முடியாமலும் தாவணியை விடுவிக்க முடியாமலும் தவிக்க, முட்டு சந்திலும் சரக்கென்று வேகமாய்  பாய்ந்து வரும் ஆட்டோ போல் நான் உன் அருகே வந்தேன்.ஒரு ஆபத் பாந்தவனாக மாறி, தாவணியை எடுத்து விடும் எண்ணத்தில் வந்தவனை பண்பாடு என்பது சிக்னல் போட்டு தடுத்ததால் உன் சைக்கிளை பிடித்து கொண்டேன். நீ தாவணியை விடுவித்து கொண்டாய் 
"வண்டியை குறுக்கில் நிறுத்தியிருக்காங்க பாருங்க"  என்று குரலில் 
சலிப்பை தந்தாய். "நாளை முதல் எந்த வண்டியும் உங்கள் ராஜ பாட்டையில் குறுக்கிடாது" என்று களிப்புடன் பதில் தந்தேன். அதற்காக ஒரு புன்னகையை பரிசளித்தாய். சைக்கிளை என்னிடமிருந்து மீட்டவள்,கூடவே  என் மன வீணையை பார்வையால் மீட்டி விட்டே கிளம்பினாய். மாலையில்  
நீ திரும்ப வரும் நேரத்தை குறித்து கொண்டது மனது. 

எனது தினசரி வேலைகளில் ஒன்றாக, நீ வரும் நேரத்தில் (கல்லூரிக்கு நேரத்திற்கு  செல்லாதவன்) நேரம் தவறாமல் அட்டெண்டன்ஸ் கொடுப்பதும் , பதிலாக  ஒரு புன்னகையை பெற்று கொள்வதுமாக வாழ்க்கை இன்ப மயமானது  

 அடுத்து உன் பெயர் தெரிந்து கொள்ளும் ஆசை துளிர் விட்டது.உன்னிடம் கேட்டால் என் ஆசையின் நிலவரம் தெரியலாம். மற்றவர்களிடம் கேட்டால் அதுவே கலவரமாகலாம். என்ன செய்வது என்பதை  ரூம் போட்டு யோசிக்கும் அளவுக்கு அவசியமில்லாமல்  சென்ட் பாட்டில் நழுவி சந்தனத்தில் விழுந்தது போல் (எத்தனை  நாளைக்கு தான் பழம்  நழுவி பாலில் விழுந்தது என்று சொல்வது) ஒரு நாள்  கொரியரை கையில் வைத்து கொண்டு யாருக்கு வந்திருக்கிறது என்று ஒவ்வொரு வீடாக ஏறி  இறங்கியவன் உன்னை பார்த்ததும் இதை சாக்காக வைத்து உன்னிடம் பேசினேன். என் பெயர் 
அது தான் என்று சிரித்த படி கவரை வாங்கி கொண்டாய்.என்னை சுற்றிலும் வெள்ளை உடை தேவதைகள் கோரஸ் பாட, உன் பெயரை  உதடுகள் தொடர்ந்து உச்சரித்தது. மனது வேகமாய் சொல்லாதே என்று எச்சரித்தது

ஒரு நாள் எனக்கொரு ஆசை எழுந்தது. நீ வரும் வேளையில் நான் 
கேட்டில் இல்லாதிருந்தால் நீ எனை தேடுவாயா என்று டெஸ்ட் வைத்து 
என் ஆசையின் டேஸ்ட் அறிய முயற்சித்தேன்.மாடிக்கு சென்று தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அளவிடுவது போல் போக்கு காட்டி நின்று கொண்டு உன் எண்ணத்தை அளவிட்டேன். நீயோ அலட்டி கொள்ளாமலே கேட்டை கடந்து சென்று விட்டாய்.  வெறுத்து போனதால்  மாலையில் நீ வீடு திரும்பும் நேரத்தில் கேட்டில் நிற்பதை தவிர்த்தேன். நீ வரும் போதே வழக்கமாய் நான் நிற்கும் இடத்தை பார்வையிட்ட படி வந்தாய். சைக்கிளை நிறுத்தும் போது  சுற்றிலும் பார்த்தாய்.வீட்டினுள் நுழையும் முன்னும், என் அலுவலக 
ஜன்னல் பக்கம் உன் பார்வை பந்து சுழன்று வந்தது.  நான் பரவசமாகி 
உடனே வெளி வந்தேன்.  கபில் தேவ் போல் அந்த பார்வை பந்தை 
அழகாக கேட்ச் செய்து கொண்டேன். திடீரென்று நான் வெளிப்பட்டது 
உன்னை  திடுக்கிட வைத்திருக்க வேண்டும். நொடியில் சுதாரித்து ஒரு 
வெட்க  சிரிப்புடன் வீட்டினுள் நுழைந்து விட்டாய். நான் உன்னுடன் டூயட் 
பாட நிலவுக்குள்  நுழைந்து விட்டேன் (டூயட் பாட வெளிநாடு தான் செல்ல வேண்டுமா என்ன)

அடுத்து மழை பெய்யும் ஒரு நாளில் நாம் சாலையில் சந்தித்து கொண்டோம் மழை ஆரம்பித்தது.  நீ உன்  கையிலிருந்த குடையை பிரிக்க முயல அது செய்த ஸ்ட்ரைக் உனை திணற வைத்தது.   நான் உதவிக்கு வந்து குடையின் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வைத்தேன். நீங்களும் வாங்களேன்  என்று அழைப்பு விடுத்தாய். அது ஒப்புக்கா அல்லது ஒரிஜினலா என்று தெரியாமல் தடுமாறி நாகரிகமாய் மறுத்தேன். இருந்தும் நீ அழைத்ததை எண்ணி அடுத்து வந்த நாட்களில் ஒரு சுற்று சந்தோசத்தில் பெருத்தேன்.

அடுத்து கவிதைகள் என்ற பெயரில் என் பேனா கிறுக்கலை ஆரம்பித்தது   கிறுக்கியவற்றில் நான் கிழித்தது போக எஞ்சிய கவிதைகளில் ஒன்று 



நீ வரும் வழியெங்கும்
ஒரு கற்றை பார்வைகளை
இறைத்து வைத்திருக்கிறேன்
இவை அனைத்தும்
உன்
ஒற்றை
பார்வைக்காக....


திடீரென்று நீ இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை. நடுவுல 
கொஞ்சம்  என்னாச்சு என்பது தெரியாமல் திண்டாடினேன்.  உன் காலில் 
ஏதோ அடிபட்டதால் நடக்க சிரமமாகி வீட்டில் இருப்பதாக உன் அம்மாவிடம் தகவல் அறிய பெற்றேன். அடுத்து எப்போது பார்க்கலாம் என்று முப்பொழுதும் காத்திருக்கையில் வெளி வந்தாய் விந்தி நடந்தவாறே.  உன் காலையும் முகத்தையும்  ஒரு சேர பார்த்தேன்.நலமா என்பது போல். நீ சிரித்த படி தலையாட்டினாய்  அந்த நேரம் பார்த்து  எங்கிருந்தோ ஒலித்தது நலம் நலமறிய ஆவல்....  என்ற பாடல். (சிச்சுவேசன் சாங்காம் ) இருவரும் சிரித்து  கொண்டோம் 

பேசாமலே இப்படி பார்வை பரிமாற்றங்கள் நடந்த வேளையில் தான்  
ஒரு நாள் உன் வீட்டுக்கு விருந்தினர் வந்தார். உன் வீட்டை கை காட்டியவன் கூடவே அவர் உங்கள் உறவினர் தானா என்பதை கூடவே வந்தும் உறுதிசெய்து கொண்டேன். வந்தவர் "என்னை திருடன் னு நினைச்சியா" 
என்று கோபமாய் எகிற, உன் அப்பா  உதவிக்கு வந்தார். "இந்த  பையன் இருந்தா வீட்டை திறந்து  கூட வச்சிட்டு போகலாம். அந்த அளவுக்கு ரொம்ப நம்பிக்கையான பையன். ஒரு எறும்பு நுழைவது கூட அவன் அனுமதியின்றி நுழைய முடியாது "என்று சொல்லி எனக்கு சூட்டிய மகுடம்,   ஏதோ எழுதி கொண்டிருந்த உன்னை நிறுத்தி கவனிக்க வைத்தது. உன் தந்தை சூட்டிய மகுடம்  கேட்டு மனசு  உற்சாகத்தில் அனத்தியது என்றாலும் அந்த வார்த்தைகள் ஒரு முள் கிரீடம் தான் என்பதை புத்தி எனக்கு உணர்த்தியது 

இந்த குடியிருப்புக்கு சிறந்த பாதுகாவலன் நான் என்று சொல்லும் போதே  உனக்கும் அல்லவா பாதுகாவலன் ஆகின்றேன். வேலியே பயிரை மேயலாமா என்று என் மனது தேய்ந்த ரெகார்ட் போல்  மீண்டும் மீண்டும் உள்ளுக்குள் உறுத்தி  கொண்டிருக்க,வேலையே என் காதலுக்கு எதிரியானதே என்ற என் அங்கலாய்ப்பில் உன்னை பார்க்காமல் இருக்குமாறு புத்தி அடக்க  முற்பட்டது. .மனது முடியாது என்று அடம் பிடித்தது. வேலையா காதலா என்று எனக்குள் நடந்த தேர்தலில் காதல் வெற்றி பெற்றது.  இந்த வேலையிலிருந்து விடுபட்டு 
வேறு வேலையில் சேர்ந்து கொண்டேன்.

விடை பெற்று செல்வதை சொன்ன போது ஏன் என்று மொத்தமாய் குரல் எழுப்பியவர்களை சமாளித்து  நீ என்ன சொல்ல போகிறாய்  என்று அறியும் ஆவலில் காத்திருக்க, வெளியில் செல்ல சைக்கிள் எடுத்து கொண்டு வந்தவள் நான் பேச தயாராய்  நிற்பதை பார்த்தவுடன் (நான் கிளம்புவது தெரிந்து 
விடை கொடுக்க வந்தாயோ) என்னருகிலே சைக்கிளை  நிறுத்தி ஒற்றை காலை ஸ்டைலாக ஊன்றி நின்ற படி சொல்லுங்க என்றாய் அதே புன்னகையுடன். அப்போதே என் காதலை சொல்லி விட வாய் வரை வந்த வார்த்தைகளை சைலென்ட் மோடில் வைத்து  நான் விடை பெற்று கிளம்புவதை மட்டும் சொன்னேன். "பெஸ்ட் ஆப் லக்" என்று ஒரே வார்த்தையில் கிளம்பி விட்டாய். அவ்வளவு தானா. எனக்கிருக்கும் வேதனை உன்னிடம் இல்லையா. இல்லை தேர்ந்த நடிப்பு திறனுடன் அதை மறைத்து கொண்டு செல்கின்றாயா  என்ற குழப்பங்களுடனே அகன்றேன். 

புதிய வேலையில் அமர்ந்து பிறிதொரு நாள் எல்லோரையும் பார்க்க 
வந்ததாய் நான் சாக்கு சொல்லி வந்தது உன்னை பார்க்க தான் . நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி பாராட்டி உன் வீடு நோக்கி வந்த போது  தான் தெரிந்தது.  நான் வேலை மாறியது போல் (உங்கப்பாவுக்கு வேறு மாநிலம் மாற்றல் ஆனதால்) நீ  வீடு மாறி விட்டாய் என்பது.  நான் வேலை தான் மாற்றி கொண்டேன் நீ ஸ்டேட்டையே மாற்றி கொண்டாய். நொந்த மனதுடன், எனக்கான தகவல் எங்கேனும் விட்டு சென்றிருக்கின்றாயா என்று கூகுள் போல் ஆராய்ந்தேன்.நீ அடிக்கடி மொட்டை மாடியில்  அமர்ந்து படிக்கும் இடத்தை சென்று பார்த்த போது  அங்கே சிறுவர்களின் கிறுக்கலில்  முட்டாள் என்ற வரிகள் என்னை பார்த்து இளித்தது. வேலைக்கு துரோகம் செய்ய கூடாது என்று நினைத்து  காதலை கோட்டை விட்டவன்  
முட்டாளா ?  வலியுடன் வெளியேறியவன் உன்னை நீக்கும் வழி தெரியாதவனானேன் 

 இருந்தும் எனக்கு சில விஷயங்கள் தெளிவுபடவில்லை. என்  வேதனை 
நீ அறிந்திருப்பாயா.நீயும் இது போல் வேதனை பட்டாயா. அல்லது என்னை 
ஒரு ரயில் சிநேகிதன் போல் தான் எண்ணி கொண்டாயா. அப்படியெனில் 
உன் பார்வைக்கும் அந்த கள்ளமில்லா சிரிப்புக்கும் அர்த்தம் என்ன இன்று 
வரை எனக்கு புரியவில்லை

இப்போது நீ எங்கே இருந்தாலும் என்னை பற்றிய நினைவுகள் உன் ஞாபக அடுக்குகளில் தூசு படிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். எனது அந்த நாட்களை இனிமையாக்கிய  உன் வாழ்க்கை முழுக்க இனிமை நிறையட்டும். நீ எங்கிருந்தாலும்  நலமுடன் இருப்பாய் ஏனெனில் உன் நினைவுகள்  என்னிடத்தில் நலமுடன் இருக்கிறது.


இப்படிக்கு   
உன் மீது நேசம் கொண்ட   
நெஞ்சம்  

******

நண்பர் திடங்கொண்டு போராடு சீனு காதல் கடிதம் பரிசுப் போட்டி என்ற பெயரில் போட்டி அறிவித்திருக்கிறார். இப்படி போட்டி வரும் என்று கல்லுரி காலத்தில் தெரிந்திருந்தால் அப்போதே காதலித்து பார்த்திருக்கலாம்.
கடிதமும் இருந்திருக்கும். காதல் அனுபவம் இல்லையாதலால் மூளையை கசக்கி (பேப்பரை நிறைய கசக்கி ) திடங்கொண்டு போராடு-காதல் கடிதம் பரிசு போட்டிக்காக கற்பனையில் எழுத வேண்டியதாகி விட்டது. இந்த போட்டியில் பங்கு பெற வைத்த சீனு, மற்றும் போட்டியில் கலந்து கொள்ளும் இணைய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் 

ஆர்.வி.சரவணன்