புதன், செப்டம்பர் 26, 2012

நானும் ஒரு வண்டினமாய்....


இது நான் பிளஸ் டூ படிக்கும் போது எழுதியது(தளம் ஆரம்பித்த புதிதில் வெளியிட்டேன் அப்போது யாரும் படித்திருக்க வாய்ப்பில்லை எனபதால்) இன்னும் சில வார்த்தை கோர்ப்பில் இதோ உங்கள் பார்வைக்கு 







நானும் ஒரு வண்டினமாய்....



பருவச் சோலையிலே
பூக்கள் ஏராளம்


மலரினும் மெல்லிய பெண்ணே
உன் அழகு தாராளம்




தென்றலின் தொடுகையில் 
குயில்கள் இசை பாடுகையில் 
பிரம்மன் எனும் கதிரவன் 
கரம் படுகையில்
மலர்ந்தவளே


உன்னை சூறையாட 
தேன் அருந்திட  
ஆடவர் கூட்டம் 
ஒன்று 
வண்டுகளாய் 
முற்றுகையிட்டது

உனை சுற்றி சுற்றி 
வந்து நாள் பார்த்தது 

அக் கூட்டத்தில் நானும் ஒரு வண்டினமாய் 
இருந்தும் உனை பார்த்த பார்வை கண்ணியமாய் 
உனை அடையும் எண்ணமில்லை 
காக்கும் எண்ணமுண்டு 

ஆகவே 
உன் அருகில் ஆயுதமாய் 
இருந்திட்ட 
முள்ளின் மேல் பட்டு 
எனை வருத்தி கொண்டேன் 

என் உயிரை மாய்த்தேன் 
தீயவர் தம் ஆசையை தகர்த்தேன்

ஆடவ வண்டினம்  என் நிலை கண்டனர் 
தன் நிலை கடந்தனர் 
உனை விட்டு அகன்றனர் 

நீ நினைத்திருப்பாய்
உனை அடைய வந்தவன் தான் நான் என்று


ஆனால் உணர்வாயா
உனை காக்க என் உயிர் போக்கியதை 
கொஞ்சம் அறிவாயா 


ஆர்.வி.சரவணன் 


புதன், செப்டம்பர் 19, 2012

சுந்தர பாண்டியன்


சுந்தர பாண்டியன்

சசிகுமாரை ஒரு இயக்குனராக எனக்கு சுப்ரமணியபுரம் படத்தில் பிடிக்கும். ஒரு
தயாரிப்பாளராக பசங்க படத்தில் பிடிக்கும். ஒரு நடிகராக நாடோடிகள் படத்திலிருந்து பிடிக்கும்.ஆகவே சசிகுமாரின் சுந்தர பாண்டியன் என் எதிர்பார்ப்பில் இருந்த படங்களில் ஒன்று. இது வெளியானவுடன் நான் திரும்பும் பக்கமெல்லாம் படத்தை பற்றி நல்ல ரிப்போர்ட் வரவே
( எப்படியும் புது படம் பார்க்க ஒரு வாரம் எடுத்து கொள்ளும் நான்) , எடுரா டிக்கெட்டை போடா படத்துக்கு என்று ஆர்வத்துடன் தியேட்டர் சென்று விட்டேன் (ஞாயிறு அன்றே பார்த்து விட்ட நான் கொஞ்சம் வேலை பளுவால் பதிவெழுத தாமதமாகி விட்டது )

ஒரு பெண்ணை நண்பர்கள் குழுவே ஆசைப்படஆரம்பிக்க , அதில் ஹீரோவுக்கு மட்டும்
ஹாட்ரிக் அடிக்கிறது விடுவார்களா மற்ற நண்பர்கள் அவர்களின் விரோதத்தை சம்பாதிக்கும் ஹீரோ அவர்களின் துரோகத்தில் சிக்கி கொண்டவர், அதை எப்படி சமாளித்து காதலில் ஜெயிக்கிறார் என்பதே கதை. இதை அறிமுக இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் தன் திரைக்கதையால் வெற்றிகரமாக படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்

இளையராஜா பட பாடலுடன் அறிமுகமாகும் பேருந்தில் சசிகுமார் அன் கோ (நண்பர்கள்) ஏறியவுடன் டாப் கியரில் வேகமெடுக்கும் திரைக்கதை இடைவேளை வரை கலகலப்பாகவும் இடைவேளைக்கு பின் கொஞ்சம் பரபரப்பாகவும் பயணித்து கிளைமாக்ஸ் சில் ஆக்சன் பிளஸ் ரத்த கலரியுடன் முடிவுக்கு வருகிறது

சசிகுமார்
வயதானவர்களுடன் குத்தாட்டம் ஆடுகிறார் கருத்து பாடல் பாடுகிறார் அனல் பறக்க சண்டை போடுகிறார் கண் அடித்து பெண்களை கிண்டல் செய்கிறார் காதலியுடன் ரொமாண்டிக் காதலும் செய்கிறார் இவை அனைத்தையும் நம்மை ரசிக்கும் படி வைத்திருப்பதில் இயக்குனரின் சாமர்த்தியமும் சசிகுமார் மேல் நமக்கிருக்கும் ஒரு ஆர்வமும் புலப்படுகிறது . இந்த படத்தில் அவர் நடிப்பும் உருவமும் இன்னும் மெருகேறியிருக்கிறது ஒரே தோற்றம் ஒரே கேரக்டர் என்றில்லாமல் இன்னும் வெரைட்டி யான ரோல்களை அவர் தேர்ந்தெடுக்கலாம் )

லட்சுமி மேனன் இவர் திரையில் அறிமுகமாகும் போதே கை தட்டல் வருகிறது.தியேட்டரில் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் அவர் எப்படி இம்ப்ரெஸ் செய்துள்ளார் என்பதை
அவர் பேசாதிருக்கும் நேரங்களில் அவர் கண்களே பேசுகின்றன. ஏற்ற இறக்க முக பாவங்களுடன் தன் காதலை சசிகுமரிடம் சொல்லும் இடம் ஒரு சான்று. பேருந்தில் அவரை சுற்றி தான் கதையும் கதாபத்திரங்களும் என்றாலும் தான் பேசாமலேயே கண்களால் முக பாவங்களால் அனைத்தையும் உள் வாங்கி அவர் வெளிபடுத்தும் உணர்வுகள் நன்றாக இருக்கிறது (இவர் நடிக்க போகும் அடுத்த படங்கள் என்னென்ன என்று ஆர்வமாய் விசாரிக்க வைக்கும் அளவு நமை ஈர்த்து விடுகிறார்)

சூரி இவர் பேசுற ஒவ்வொரு வசனமும் தியேட்டரில் ஒரே சிரிப்பலை தான்.அது எப்படிபட்டது என்றால் கடலில் ஒரு அலை கரையில் வந்து மோதி திரும்பும் முன் அடுத்த அலை வந்து மோதுமே அது போல் இவரின் ஒரு டைலாக் சிரிப்பலையை உண்டு பண்ணி அது முடிவதற்குள் அடுத்த சிரிப்பலை உதயமாகிறது. இருந்தும் கொஞ்சம் அதிகமாகியிருந்தால் அது ரசிக்க விடாமல் செய்திருக்கும் என்பதை உணர்ந்து நறுக்கு தெறித்தார் போன்று இயக்குனர் கரெக்டாக அமைத்திருக்கிறார் (சூரி நீங்க நல்லா வருவீங்க )



சசிகுமாரின் அப்பாவாக வரும் நரேன் கேரக்டர் கன கச்சிதம். அதிரடியான இடங்களில் கூட அவர் அமைதியாய் அளவை பேசும் பாங்கும் அவருக்கான வசனங்களும் அருமையாய் அமைந்திருக்கிறது உதாரணம் தன் பையனுக்கு பெண் கேட்டு வரும் அவர் தென்னவனிடம் பேசி விட்டு மருமகளே தண்ணி கொண்டு வாம்மா என்று சொல்லி வாங்கி குடித்து விட்டு செல்லும் இடம் ரொம்ப அருமையான சீன (அப்பானா இப்படிலே இருக்கணும்)

அப்புக்குட்டி கதையில் முக்கிய திருப்பமாகவும் வில்லனாகவும் வருகிறார். கண்ணாடி மாடி கொண்டு அவர் ரொமாண்டிக் லுக் விடுவதும், நீங்க ஒரு ஓரமா லவ் பண்ணிக்குங்க நான் ஒரு ஓரமா லவ் பண்ணிக்குறேன் என்று பவ்யமாய் சொல்வதும், ஹீரோயினிடம் சிகப்பு தோலா இருந்தா தான் பிடிக்குமா உனக்கு என்று கோபத்தில் எகிறுவதும் என்று மிக இயல்பாய் செய்திருக்கிறார்


பேருந்து காட்சிகள், சிறையிலிருந்து வீட்டில் என்ன சொல்வார்களோ என்ற தவிப்புடன் வரும் சசிகுமாரை அவர் அப்பாவும் குடும்பத்தினரும் வரவேற்கும் விதம், காதலை சொல்ல செல்லும் நண்பனை லட்சுமி தோழி வறுத்தெடுப்பது அனுப்புவது ,சசிகுமாரின் முறை பெண்ணுடன் அவர் செய்யும் வம்பு காட்சிகள் ரசிக்க வைக்கின்றன

மகளின் காதலை பொறுக்க முடியாமல் பொங்குவதும் பின் குழம்புவதும் பின் சம்மதம் தெரிவித்தவுடன் ஓடி வந்து அணைத்து கொண்டு அழும் மகளை நெகிழ்ச்சியுடன் அரவணைப்பது என்று தென்னவனும்,நண்பர்களில் இனிகோ பிரபாகரன் விஜய் சேதுபதி யும் தங்கள் பங்குக்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.

இடைவேளை வரை ஒரு ஹீரோ வீட்டுக்கு கூடவா போகாமல் இருப்பார் ஏனெனில் இடைவேளை வரை ஹீரோ வீட்டில் இருப்பது போல் ஒரு சீன கூட கிடையாது. மேலும் காதல் குறும்பு என்று வருட ஆரம்பிக்கும் கதை பின் நண்பர்களின் துரோகம் பழிவாங்கல் ரத்த கலரி என்று கொஞ்சம் திசை திரும்பி சென்று விடுகிறது மேலும் ஹீரோ கத்தி குத்து எல்லாம் பட்டும் கூட வசனம் பேசி எதிரிகளை வீழ்த்துவது என்ற ஹீரோயிசம், சுப்ரமணியபுரம் துங்கா நகரம் பட காட்சிகளை நினைவுபடுத்தும் படத்தின் கிளைமாக்ஸ் பகுதி என்று மைனஸ் பாயிண்ட்ஸ் களும் படத்தில்
உண்டு.

இசை படத்துக்கு அப்படி ஒன்றும் பயன் சேர்க்கவில்லை இருந்தும் வசனங்கள் பல காட்சிகளை தாங்கி நிற்கின்றன என்பதை மறுக்க முடியாது.பேருந்து காட்சிகளிலும், சின்ன சந்துகளிலும் அந்த கிளைமாக்ஸ் முள் காட்டிலும் கூட நாம் அங்கேயே இருந்து வேடிக்கை பார்ப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார் ஒளிபதிவாளர் பிரேம்குமார்

சுந்தர பாண்டியன் சசிகுமாருக்கு இன்னும் பலம் சேர்த்திருக்கிறான்

ஆர்.வி.சரவணன்


வியாழன், செப்டம்பர் 13, 2012

சினிமாவுக்கு பாட்டு எழுதினேன்....


சினிமாவுக்கு பாட்டு எழுதினேன்....

பல்லவி

மலரை தேடும் வண்டிங்கே
கண்ணே நீ சென்ற வழியெங்கே
என் ராகம் கேட்டு என் கஷ்டம்
தீர்க்க வாராயோ நீ இங்கே

மலரை....

சரணம் 1

காற்றிலாடும் தீபமாகிறேன்
கரையை தேடும் அலைகளாகிறேன்
ஒளியை தேடும் இருட்டாகிறேன்
வானை தேடும் மேகமாகிறேன்
கார்குழல் நான் மலரை தேடி துடிக்கிறேன்
விழிகள் நான் கண்ணீரிலே குளிக்கிறேன்

மலரை ....

சரணம் 2

காதலில் அகப்பட்ட மனம் ஒன்று
மங்கையிடம் வைத்தது அது அன்று
சோகத்தில் அழுகிறது மனம் இன்று
உன் மணாளனை ஆனால் அதுவே நன்று
நீ வரும் வழியில் என் விழிகளை பதிக்கிறேன்
அவ் வழியெங்கும் என் ஏக்கங்களை விதைக்கிறேன்

மலரை ....

நான் கல்லூரி படிக்கும் காலத்தில் எழுதி தான் பார்ப்போமே என்று மெட்டு எதுவுமில்லாமல்
கிறுக்கிய பாட்டு இது தளத்தில் வெளியிடுங்கள் என்று சொன்ன நண்பர் கரைசேரா அலை அரசன் டி.ஆர். பாதிப்பு தெரியுதே சார் என்றார். உண்மை தான் அப்போது டி.ஆர் பாடல்கள் பட்டையை கிளப்பி கொண்டிருந்த நேரம் அது


ஆர்.வி.சரவணன்

ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

ஸ்வீட்....காரம்....காபி(10-9-12)



ஸ்வீட்....காரம்....காபி
________________________________________
10-9-12

சமீபத்தில் இரவு சன் டிவி யில் ஆண் பாவம் . இந்த படம் ஏற்கனவே பார்த்திருந்தாலும் அலுக்காத படம் என்பதால் மீண்டும் பார்த்தேன். இந்த படத்தை பற்றி தனி பகிர்வே கொடுக்கிற அளவுக்கு விஷயம் இருக்கு( அது பின்னாடி பார்க்கலாம்) இப்ப நான் சொல்ல வர்றது அந்த படத்தில்
வரும் ஒரு டயலாக் ரொம்ப பிடிச்சிருந்தது ரேவதி வாய் பேசாமல் போய், மருத்துவமனையில்
இருக்கும் போது பார்ப்பதற்கு வி.கே.ராமசாமி வருவார் (அவரது மகன் பாண்டியனுக்கு ரேவதியை
நிச்சயம் செய்திருப்பார்) அப்ப ரேவதியை பார்த்து ஆறுதல் சொல்வார் "வருத்தபடாதம்மா
எங்க வீட்டு பூஜை அறையிலே எத்தனையோ சாமீ படங்கள் இருக்கு அதெல்லாம் பேசுதா என்ன
அந்த மாதிரி நீயும் ஒரு சாமின்னு நாங்க நினைச்சுக்கிறோம் "(மாற்று திறனாளிகள் கடவுளின் குழந்தைகளாக சொல்லபடுவதுண்டு இந்த டயலாக் ஒரு படி மேலே போய் அவர்களை கடவுள் என்று சொல்வது வாட் எ டயலாக் என்று சொல்ல வைத்தது )

------

கார்டூனிஸ்ட் மதனின் வந்தார்கள் வென்றார்கள், வட இந்தியா வை ஆட்சி செய்த மன்னர்கள் பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகளை அவர் ப்ரெசென்ட் செய்திருக்கும் விதம் படிக்க வெகு சுவாரசியம் தந்தது நான் தற்போது ஹுமாயுன் ,அக்பர், ஜகாங்கீர் பற்றிய வரலாறு வரை படித்திருக்கிறேன். (அதிலிருந்து ஒரு தகவல் அக்பர் சக்கரவர்த்திக்கு புத்தகங்கள் என்றால் உயிர். அவர் லைப்ரரியில் இருந்த புத்தகங்களின் மொத்த எண்ணிக்கை 24000௦ . பல்வேறு துறைகளை சேர்ந்த அறிஞர்கள் கலை
கவிதை தத்துவம் என்று விவாதிப்பதை கூர்ந்து கேட்டு ஒரு வரி விடாமல் கிரகித்து கொள்ளும் திறமையும் பிரமிப்பூட்டும் அளவு நியாபக சக்தியும் அவருக்கு இருந்தது இதில் ஒரு முக்கியமான தகவல் என்னவென்றால் மாமன்னர் அக்பருக்கு எழுத படிக்க தெரியாது). அவர்களை பற்றிய செய்திகள் நடந்த சம்பவங்கள் அனைத்தும் படிக்கையில் வியப்பும் கூடவே ஐநூறு வருடங்களுக்கு முன்பே சென்று வந்தது போல் ஒரு பீலிங் கும் ஏற்படுகிறது.(வந்தார்கள் வென்றார்கள் மனதில் நின்றார்கள் என்றும் சேர்த்து கொள்ள வேண்டும் )

------

நான் படத்தில் வரும் ஒரு பாடல், மக்காயல மக்காயல..... இளமைக்கு எப்பொழுதும் தயக்கமில்லை இந்த பாடல் இப்ப என்னோட favourite சாங். விஜய் அன்டனி யின் மியூசிக், மற்றும் அந்த டான்ஸ் (கை அசைவுகள்), ஹீரோயின் முக பாவங்கள் காரணமாக இருக்கலாம் . கூட ஆடும் அந்த இன்னொரு ஹீரோ கூட நல்ல பர்பார்மன்ஸ் செய்திருக்கிறார் (விஜய் அண்டனி இந்த பாடலில்
நான் இருக்கிறேன் என்று முத்திரை பதிக்கிறார் )

---------

ஒரு நாள் நான் பஸ் ஏறிய போது நல்ல கூட்டம் நான் நின்ற இடத்திற்கு பக்கத்தில் இருந்த இருக்கை காலியானது. சரி உட்காரலாம் என்று நினைத்து அருகில் செல்ல, அப்போது பக்கத்தில் நின்ற ஒருவர் இருங்க பஸ்லே இப்ப தான் ஏறுனீங்க அதுக்குள்ளே உடனே உட்காரணும்னு ஆசைபடறீங்க என்றவாறு உட்கார்ந்தார். எனக்கு வந்தது பாருங்க கோபம் நான் கேட்டேன் "ஏன் பஸ்லே ஏறினவுடனே உட்கார கூடாது னு எதுனா சட்டம் போட்டிருக்காங்களா என்ன, நீங்க உட்காரணும்னு நினைச்சா என்னாலே முடியலே உட்கார்ந்துக்கிறேன் னு சொல்லிட்டு உட்காருங்க அத விட்டுட்டு எனக்கு நீங்க ரூல்ஸ் போடாதீங்க என்று கடுப்படித்தேன் ( என் ஆக்சன்க்கு அவரிடமிருந்து நோ ரியாக்சன்)

------


செய்திகள் சில வரிகளில்

நீல் ஆம்ஸ்ட்ராங் சென்ற வாரம் காலமானார் - செய்தி
(நிலவில் காலடி வைத்தவர் இப்போது சொர்க்கத்தில் காலடி வைத்திருக்கிறார்)

******

சிவகாசி அருகே வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நடிகர் மம்முட்டி ரூபாய் 35 லட்சத்திற்கான மருந்துகளை இலவசமாக வழங்கியிருக்கிறார் - செய்தி
"வேதனையோடு வாழ்க்கையில் போராடுபவர்களுக்கு உதவுவதை போல் மனதுக்கு மகிழ்ச்சி
வேறு எதுவும் கிடையாது" இது நான் சொல்லல மம்முட்டி அவர்கள் இது விசயமாக இப்படி குறிப்பிட்டுள்ளார். நானும் இதை ரீபீட்டுக்கிறேன் (நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க)

------

ஜோக் ஸ்பாட்

"என்ன மந்திரியரே நான் போருக்கு கிளம்பும் நேரத்தில் வெற்றி திலகமிட்டு வழியனுப்ப மகராணி இன்னும் வரவில்லையே"

"மகராணி டிவி சீரியல் பார்த்து கொண்டிருப்பதால் உங்களை வாழ்த்தி எஸ் எம் எஸ் அனுப்பியுள்ளார் பார்க்கவில்லையா நீங்கள்"

------

ஹர்ஷவர்தன் கார்னர்

இந்திய நாடு நம் வீடு

------

நான் சென்ற வாரம் வைரஸ் பீவர் வந்து அவதிப்பட்ட போது , ஹாஸ்பிடல் போய் ட்ரிப்ஸ் போட்டுக்கும் படி ஆகிடுச்சு (விஷயம் அதுல்லே ) அப்ப யோசிச்சதுலே வந்தது தான் இந்த
தலைப்பு (நீங்க உங்க ஊக்கம் என்ற ட்ரிப்ஸ் (கமெண்ட்ஸ்) தொடர்ந்து கொடுத்துட்டு இருங்க. அப்ப தான் இந்த ஸ்வீட் காரம் காபி இன்னும் சிறப்பா வரும் என்பது என் தாழ்மையான கருத்து

ஆர்.வி.சரவணன்

வரும் வாரா வாரம்......


திங்கள், செப்டம்பர் 03, 2012

ஸ்வீட்.... காரம்....காபி

ஸ்வீட்.... காரம்....காபி
__________________________________________
வழங்குவது நான் தான் ஹி....ஹி....


பர்கர் வித் பென் டிரைவர்



பழைய படங்களை ரசித்து பார்க்கும் நான் சமீபத்தில் டிவி யில் பார்த்த படம் குடும்பம் ஒரு கதம்பம் விசு எஸ்.வி.சேகர் சுகாசினி, நடித்த குடும்ப கதை தான் இருந்தும் யதார்த்தமாய் நகைசுவை கலந்து தந்திருக்கும் விதம் படத்தை ரசிக்க வைக்கிறது. இதில் எஸ்.வி.சேகர் சுகாசினியின் வறுமையை மீறி வெளிப்படும் அந்த அன்னியோன்யம் ரொம்ப பிடிச்சிருந்தது. இதில் என்னை கவர்ந்த டைலாக் வறுமையால் தீபாவளி கொண்டாட முடியாத சுகாசினியை பார்த்து கமலா காமேஷ் சொல்வார் "ஆண்டவன் எல்லாரும் தான் தீபாவளி கொண்டாடனும்னு ஆசைப்படறான் இருந்தும் அவன் கண் பார்வையை மீறி சில பேர் கொண்டாட முடியாம போயிடுது" என்பார் பக்குவமாக ( இந்த உலகத்திலே எல்லாரும் நல்லாருக்கனும்னு தான் ஆண்டவன் ஆசைபடறான் இருந்தும் அவன் பார்வையை மீறி நிறைய பேர் கஷ்டப்படும் படியா போயிடுது )

------

சமீபத்தில் படித்த நாவல் நம் சுஜாதா அவர்களின் உள்ளம் துறந்தவன் இதய மற்று அறுவை சிகிச்சை யை மையமாக கொண்ட நாவல் இது. பெயரிலேயே உள்ளம் துறந்தவன் இருப்பதால் கொஞ்சம் சஸ்பென்ஸ் குறையுது ஆனால் அவரது எழுத்துக்களால் சஸ்பென்ஸ் குறையாமல் விறுவிறுப்பாய் இருப்பது சுஜாதா சுஜாதா தான் என்று சொல்ல வைக்கிறது இந்த புத்தகம் நான் இரண்டே மணி நேரங்களில் தொடர்ச்சியாய் படித்து முடித்தேன் (இறப்பை துறந்த மனிதனாக சுஜாதாவை இறைவன் படைத்திருக்கலாம் )

------

சமீபத்தில் புத்தக கடையில் நான் நின்றிருந்த போது இருவர் அங்கு ஏதோ வாங்க வந்தவர்கள் கடையில் தொங்க விட்டிருந்த செய்திதாள் சுவரொட்டியை பார்த்து " ச்சே பேப்பர் லே இருக்கிற நியூஸ் பார்த்துட்டு ஒரு நல்ல காரியத்துக்கு கூட போக முடியாது டா பேப்பரை பாரேன் ஒரே வெட்டு குத்து கொலை துரோகம் திருட்டு இப்படியாவே இருக்கு என்று பேசி கொண்டார்கள் அவர்கள் சொல்வது நியாயம் தான் என்று புரிந்தது. ஏனெனில் அன்றைய பேப்பர் விளம்பரத்தில் எல்லாம் அப்படி தான் இருந்தது. நான் கடையில் புக் வாங்கி கொண்டு தெருவில் நடக்கையில் பார்க்கிறேன் சற்று முன் பேசி கொண்டவர்கள் இப்போது இருட்டில் தங்கள் டூ வீலரை நிறுத்தி விட்டு சரக்கு அடித்து கொண்டிருந்தார்கள் (இதுக்கு தானா அந்த பீலிங்)

-------

சமீபத்தில் ஊரிலிருந்து நெருங்கிய உறவினர் தம்பதி வந்திருந்தார்கள் இரவு ரயிலில் செல்ல முன் பதிவு கிடைக்கவில்லை என்பதால் உடனே இருவரையும் அழைத்து சென்று மன்னார்குடி எக்ஸ்பிரஸ் சில் அமர வைத்து விட்டு நானும் இன்னொரு உறவினரும் ஓபன் டிக்கெட் கவுண்டர் சென்றோம் டிக்கெட் எடுக்க ( டிக்கெட் எடுத்து செல்வதற்குள் சீட் கிடைக்காது என்பதால் இந்த முன்னேற்பாடு ) பத்து மணி வண்டிக்கு டிக்கெட் கவுன்ட்டரில் நாங்கள் வரிசையில் சேரும் போது மணி எட்டு நாற்பத்தைந்து. சரி ஒன்னேகால் மணி நேரம் இருக்கிறதே கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் நின்றோம். மூன்று கவுன்ட்டரிலும் வரிசை நிறைய இருந்தது. ஒன்பதரை மணி வரை வரிசை கொஞ்சம் தான் நகர்ந்திருந்தது. இடையில் ஏகப்பட்ட பயணிகள் உள்ளே நுழைந்து விடுவதால் வேறு இன்னும் டிலே ஆனது. ட்ரெயின் டைம் 10.00 மணி. பார்த்தோம் இது சரிபட்டு வராது என்று தீர்மானித்து வெளியில் வந்து ஆட்டோ பிடித்து சிந்தாதிரிபேட்டை ரயில் நிலையம் சென்று டிக்கெட் எடுத்து அதே ஆட்டோவில் திரும்பி, ரயில் கிளம்ப போகிறதே இறங்கி விடலாமா என்று டென்சனாய் உட்கார்ந்திருந்தவர்களிடம் டிக்கெட் டை கொடுத்து அவர்களை ரிலாக்ஸ் செய்தோம். ஒன்றரை மணி நேரத்தில் கிளம்பும் ரயிலுக்கு , எவ்வளவு நேரத்திற்கும் முன்பு தான் வந்து டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பது சொல்லுங்கள். ( ரயிலுக்கு ஒரு டிக்கெட் 84 ரூபாய். டிக்கெட் வாங்கிட்டு வர ஆட்டோ வுக்கு கொடுத்த பணம் 80 ரூபாய் இது எப்படி இருக்கு)

------

என் பையன் ஹர்ஷவர்தன் எனது செல் போனில் கிளிப் ஆர்ட்டில் வரைந்த ஒரு ஓவியம்
உங்கள் பார்வைக்கு



நாட்காட்டியிலிருந்து

நற்செயல் மேலானது தான் அதனினும் மேலானது நல்லெண்ணம்

ஆர்.வி.சரவணன்

வரும்.... வாரா வாரம்

சனி, செப்டம்பர் 01, 2012

சில நொடி சிநேகம்


சில நொடி சிநேகம்

அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து வெளி வந்த சரண் கூட்டத்தின் இடையே மிதந்து சென்று, அரியலூர் பேருந்து நிலையம் செல்ல ஆட்டோ பிடித்தான்.நான்கைந்து பேருடன் ஆட்டோவில் அமர்ந்து செல்ல கஷ்டமாக இருந்தாலும் வேறு வழி இல்லாமல் அட்ஜஸ்ட் செய்து அமர்ந்து கொண்டான்

ஆட்டோ கிளம்பியவுடன் அவன் அருகில் நெருக்கமாக அமர்ந்திருந்தவர் "நான் தஞ்சாவூர்
போகணும் பஸ் கிடைக்குமா" என்று கேட்டார்

"பஸ் நிறைய இருக்குங்க" என்று அவருக்கு பதில் சொன்னான்

"தஞ்சாவூர் போய் நைட் சாப்பிட ஹோட்டல் திறந்திருக்குமா" என்ற அடுத்த கேள்வி
அவரிடமிருந்து வெளிப்பட்டது

"திறந்திருக்கும் "

ஆட்டோ பேருந்து நிலையம் அருகில் வந்து நிற்க அதிலிருந்து சரண் இறங்கினான் கூடவே
அவரும் இறங்கினார்

"தஞ்சாவூர் செல்லும் பஸ் எங்கே நிற்கும்" என்று சரனை கேட்டார்

"சரண் நானும் தஞ்சாவூர் தான் போறேன் வாங்க" என்று அவரை அழைத்து கொண்டு பேருந்து
நிற்கும் இடத்தை நோக்கி விரைந்தான்

அப்போது அங்கே புறப்பட தயாராய் இருந்த இரண்டு பேருந்துகளுமே கூட்டத்தால் நிரம்பி
வழியவே"சரண் இதுலே ஏற முடியாது அடுத்த பஸ் உடனே வரும் நாம அதுலே போகலாம்" என்றான்.

அவரும் சரி என்று சொல்லி விட்டு அடுத்த பேருந்துக்கு இருக்கும் கூட்டத்தை பார்த்தவர்,
"நாம வாசல் பக்கம் போயிடலாம் பஸ் உள்ளே வரப்பவே ஏறி இடம் பிடிச்சிடலாம்" என்றார்
அவர் சொல்வது சரி எனப்படவே சரண் "சரி வாங்க" என்று அவருடன் சென்றான்.

அங்கு போய் காத்திருக்கையில் அவர் தான் சென்னையிலிருந்து திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள வந்திருப்பதாக தெரிவித்தார். சரண் நானும் தான் என்று சொன்னான்

அவர் "ஒரு டீ சாப்பிடலாம் வரீங்களா" என்று கேட்க, சரணுக்கு டீ சாப்பிட வேண்டும் போலிருந்தாலும் நம்மால் ஏன் அவருக்கு வீண் செலவு என்பதால் "வேண்டாம் நீங்க
போயிட்டு வாங்க" என்றான்.

அவர் சென்றவுடன் தான் சரண் கவனித்தான். தஞ்சாவூர் செல்லும் பஸ் நிற்கும் இடத்தில
புதிதாய் ஒரு பஸ் நிற்பது தெரிய வர அதன் அருகே சென்று கண்டக்டரிடம் விசாரித்தான்
"ஆமாங்க கூட்டம் நிறைய இருப்பதால் திருச்சி போக வேண்டிய பஸ் தஞ்சாவூர் போகுது
ஏறிக்கங்க "என்றார்

அவன் உடனே தாவி ஏறி முன் இருக்கையில் இடம் பிடித்து அமர்ந்து, தன் கூட வந்தவருக்கும் சேர்த்து இடம் போட்டு வைத்து கொண்டு ஜன்னல் வழியே டீ சாப்பிட சென்றவர் வருகிறாரா
என்று அங்குமிங்கும் பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.

டீ சாப்பிட்டு விட்டு வந்த அவர் தன் கூட வந்தவனை காணுமே என்று தேடியவர் கண்ணில்,
ஒரு தஞ்சாவூர் செல்லும் பஸ் உள்ளே வருவது தெரியவே, அவர் உடனே விரைந்து சென்று பேருந்தில் ஏறி அமர்ந்து அவனுக்கும் சேர்த்து இடம் பிடித்து வைத்து கொண்டு அவனுக்காக காத்திருந்தார்.

ஆர்.வி. சரவணன்

இந்த கதை நான் தளம் ஆரம்பித்த புதிதில் எழுதிய சிறுகதை (உண்மை கதையும் கூட)