சனி, டிசம்பர் 19, 2015

நல்ல மனங்கள் வாழ்க







நல்ல மனங்கள் வாழ்க
(3000 ஷேர் கடந்த எனது பதிவு )

நான் அவ்வபோது எனக்கு கிடைக்கும் அனுபவங்களை முகநூலில் எழுதுவதுண்டு (தளத்திலும் தான்). அக்டோபர் மாதத்தில்  நான் எழுதிய பதிவொன்று முகநூலில் இது வரை மூவாயிரத்துக்கு மேல் (பகிர்வு) ஷேர் ஆகியிருக்கிறது. 

இது எனக்கு ஆச்சரியமான ஒன்று. காரணம் இது வரை நான் எழுதிய பதிவுகளில் கோயில்கள் பற்றி எழுதிய பதிவுகள் மட்டுமே 50 , 60 என்று ஷேர் செய்யபட்டிருக்கிறது . இப்படி ஆயிரக்கணக்கில் ஷேர் ஆகியிருப்பது இதுவே முதல் முறை. முதலில் அந்த பதிவை பற்றி பார்ப்பதற்கு முன், நடந்த நிகழ்வொன்றை பற்றி சொல்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு நானும் என் மனைவியும் ஸ்ரீ வாஞ்சியம் கோவிலுக்கு சென்றிருந்தோம். (இக் கோவில் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ளது ). அங்கே கோவில் வாசலில் டூ வீலரை நிறுத்தி விட்டு அங்கே இருந்த கடையில் அர்ச்சனை பை வாங்கினோம். 40 ரூபாய் என்றார்கள். 40 ரூபாயா என்று கொஞ்சம் அதிர்ச்சி மேலிட பையை பார்த்தால் மேலும்  அதிர்ச்சி. ஒரு தேங்காய், இரு சிறு வாழைப்பழங்கள், வெத்தலை பாக்கு இவற்றுடன் வில்வ இலைகள் கொஞ்சம் இருந்தது. அந்த பையில் பூ இல்லை. என்னங்க பூவே இல்லை என்று கேட்ட போது கடைக்காரர்  "இங்க வில்வம் தான் விசேஷம் அதை தான் அர்ச்சனை செய்ய வேண்டும்" என்றார். நான் உடனே "கொடுக்கிற அர்ச்சனை தட்டுல பூ இருக்கிறது இன்னும் விசேஷம்" என்றேன். 

" இல்ல சார் பூ இன்னும் வரலை அதான்" அவரிடமிருந்து அடுத்த வார்த்தை.
இப்படி வந்தது. " பூ இல்லாமல் எப்படிங்க அர்ச்சனை" என்றேன் டென்சனாய். வேண்டாம் என்று திருப்பி கொடுக்கவும் மனது வரவில்லை. எனது டென்சன் கோபமாக மாறியது " பூ இல்லைன்னு சொல்றீங்க பின்னே ஏன் 40 ரூபாய்  வச்சி விக்கறீங்க " என்று கேட்ட போது "சார் இந்த விலைக்கு விற்றால் தான் கட்டுப்படியாகும்" என்ற படி நகர்ந்து விட்டார் . எதிரே ஒரு பெட்டி கடை இருந்தது . அங்கே கேட்டு பார்க்கலாம் என்று சென்றோம். அங்கும் பூ இல்லை . ஆனால் அவர் வைத்திருந்த அர்ச்சனை பை விலை கேட்ட போது தலை சுற்றியது. காரணம் 30 ரூபாய் தான். எப்படி இருந்திருக்கும் எங்களுக்கு சரி விசாரித்து பார்க்காமல் வாங்கியது நம் தப்பு தான் என்ற படி கோவிலுக்குள் நுழைந்தோம். 

கோவிலுக்குள் சென்று அர்ச்சனை முடித்து வெளி வந்த போது  மனது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகியிருந்தது.  
கடவுளே உன்னை பார்க்க வரும் போது இப்படி ஒரு அனுபவமா என்ற முணுமுணுப்புடனே தான் நான் கோவிலுக்குள் சென்றேன். என்ன இப்படி கேட்டுட்டே நீ என்ற படி  நாங்கள் வெளி வருகையில் வேறொரு  அனுபவத்தை  சந்திக்கும் வாய்ப்பை ஆண்டவன் எங்களுக்கு கொடுத்தான் என்றே நினைக்க தோன்றுகிறது 

இனி நான் முக நூலில் எழுதிய அந்த பதிவு இங்கே


இன்று ஸ்ரீ வாஞ்சியம் கோவிலுக்கு சென்று சுவாமி கும்பிட்டு விட்டு நானும் 
என் மனைவியும் வெளி வருகையில், கோவிலின் எதிரே ஒருவர் இளநீர் 
விற்று கொண்டிருந்தார்.அவரிடம் இளநீர் கேட்ட போது 20 ரூபாய் என்றார்.

 "சரி நிறைய தண்ணீர் இருக்கிறதா வெட்டி கொடுங்க" என்றேன்.
அவர் வெட்டி கொடுத்ததை சாப்பிட ஆரம்பித்த உடனே தீர்ந்து விட்டது. நான் உடனே 

"என்னங்க நிறைய தண்ணீர் இருக்கிறதா வேணும்னு கேட்டேனே" என்றேன். 

அவர்அடுத்து செய்த செயலும் சொன்ன வார்த்தையும் தான் அவரை பற்றி இங்கே 
எழுத வைத்து விட்டது. அப்படி என்ன செய்தார்?
என்னிடம் வாங்கிய 40 ரூபாயில் 10 ரூபாயை திருப்பி கொடுத்து "இன்னிக்கு வந்த இளநியில தண்ணி கொஞ்சம் கம்மி தான்" என்றார்.
"அதுக்கு நீங்க என்ன செய்ய முடியும" என்றேன்.
"நீங்க எதிர்பார்த்ததை என்னால் தர முடியல. அதான் கொடுக்கிறேன்" என்றார்.
வாங்க மறுத்த நான் "நீங்க சொன்னதே என்னை திருப்திக்குள்ளாக்கி விட்டது. பணம் வேண்டாம் " என்று சொல்லி விட்டேன்.
எனக்குள் காசு கொடுத்து வாங்கிய பின் பொருளில் ஏதேனும் பிரச்னை என்றால் மாற்றி கொடுக்க மறுக்கும் பெரிய வியாபாரங்களின் முன், வெயிலில் நின்ற படி வியாபாரம் செய்யும் இவர் பெரிய மனிதராகவே தெரிந்தார்.
"உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கவா. உங்களை பத்தி பேஸ் புக்ல 
எழுதப்போறேன்" என்றேன்.
அவருக்கு அது புரியவில்லை. "எந்த பேப்பர்" என்றார் .
இன்டர்நெட் என்று சொல்லிய படி படம் எடுத்து கொண்டு கிளம்பினோம்.
அப்போது அவர் "சார் என் பேரு வேணாங்களா?" என்றார்.
"சொல்லுங்க" என்றவுடன் "சங்கர் சார் " என்றார்.
இருந்தாலும் அவருக்கு நான் மனிதன் என்றே பெயர் சூட்டியிருக்கிறேன்.

நான் அவரை சந்தித்து வந்த பின், அவர் என்னிடம் இப்படி  நடந்து கொண்டார் சரி. மற்றவர்களிடம் எப்படி நடந்து கொண்டார் ? என்பதை யோசித்து பார்த்தேன். காரில் வந்த பாமிலி ஒன்று இளநீர் சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள். இளநீர் வெட்டி கொண்டிருந்த இவர் உடனே அதை போட்டு விட்டு "சார் காசு" என்ற படி .காரின் அருகே ஓடினார் . அப்போது தான் காரில் இருந்தவர்களுக்கு இளநீர் சாப்பிட்ட காசு கொடுக்காமல் கிளம்பி விட்டோமே என்பது நினைவுக்கு வர, உடனே காரை நிறுத்தி விட்டு வந்து அவரிடம் காசு கொடுத்து  விட்டு மன்னிப்பும் கேட்ட படி சென்றார்கள். அவர்கள் சென்ற பின் இவரது ரியாக்சன் எப்படி இருந்தது தெரியுமா.  அவர்களை திட்டவில்லை. "பாவம் மறந்துட்டாங்க"  என்றார் வெள்ளந்தி மனிதராய். பின் தான் அவரை பற்றி கண்டிப்பாக எழுத வேண்டும் என்று முடிவுக்கு வந்து மேலே உள்ள பதிவை எழுதினேன்.

இந்த பதிவு இவ்வளவு ஷேர் சென்றிருப்பதற்கு இன்னுமொரு முக்கிய காரணம் இருக்கிறது. அது கும்பகோணம் நெடிவ்ஸ் என்ற எங்கள் ஊரின் முக நூல் குழுமத்தில் இதை ஷேர் செய்திருந்தேன். அதன் மூலம் இந்த பதிவு ஆயிரகணக்கான நபர்களை சென்றடைந்திருக்கிறது . அந்த குழும நண்பர்களுக்கு நன்றி.

நான் இந்த விசயத்தில் பெருமைப்பட்டு கொள்ள ஏதுமில்லை. ஒரு நல்ல விசயத்தை நல்ல மனிதரை பற்றி நம்மால் குறிப்பிட முடிந்ததே அது இவ்வளவு நண்பர்களை சென்றடைதிருக்கிறதே என்பதில் எனக்கு மன நிறைவு கிடைத்திருக்கிறது. 

இந்த பதிவு படித்த பலரும் பாராட்டியும் ஷேர் செய்தும் இருந்ததோடு அவர் போன் நம்பர் வாங்கி வெளியிட்டு இருக்கலாமே. நாங்கள் போன் செய்து பாராட்டுவோமே என்றும் சொல்லியிருந்தார்கள். 

 எந்த ஒரு விசயத்திலும் எதிர் வினையாற்றும் சிலர் அப்படி என்ன செய்து விட்டார் அவர் என்றும்  கேட்டிருந்தார்கள். அவர்களுக்கான எனது பதில் இது தான்.

ஒரு பணக்காரன் தான் செய்த வியாபாரத்தில் வரும் தவறுக்கு பொறுப்பேற்று பணத்தை திருப்பி கொடுப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது. ஒரு நடுத்தர வர்க்கத்தில் ஒருவர் தான் செய்யும் வியாபாரத்தில் அதை நேர்மையுடன் செய்யும் போது தானே பெருமை இருக்கிறது.

இந்த பதிவின் மூலம் எனக்கு 200 பேர் வரை ப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்திருக்கிறார்கள் என்பது இங்கே கூடுதல் தகவல். அவர்கள் அப்படி 
என்னுடன் முகநூலில் இணைந்து கொள்ள ஆசைபட்டிருப்பது இது போல் நல்ல
தகவல்களை நான் பகிர்ந்து கொள்வேன் என்பதால் தானே. 
அந்த பணியை தொடர்ந்து செய்வேன்.

வாழும் மட்டும் நன்மைக்காக தான் வாழ்ந்து பார்ப்போமே.

ஆர்.வி.சரவணன்