ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

பண்டிகை கால பயணம் ஒன்று




பண்டிகை கால பயணம் ஒன்று

இந்த தீபாவளி பொங்கல் னு  பண்டிகை நாள் வந்துட்டாலோ இல்லன்னா சேர்ந்தார் போல் ரெண்டு மூணு நாள் லீவு  வந்துட்டாலோ டிக்கெட் புக் பண்ண முடியாம ஊருக்கு போறவங்க லோ லோ னு தான் அலைய வேண்டியிருக்கும்.  (எதுக்கு ரெண்டு லோ ? ஒண்ணு ஊருக்கு போறதுக்கு இன்னொண்ணு திரும்பி வரதுக்கு). அப்படி திண்டாட்டமாகி எப்படிடா ஊர் போய் சேர்வோம்னு முதுகுல மாட்டின லக்கேஜோட டென்சனையும் இலவச இணைப்பா 
சுமந்துகிட்டு கிளம்பின ஒரு பயணியோட அனுபவம் தான் இது. அது யாரதுனு நீங்க யோசிக்க ஆரம்பிக்கிறதுக்குள்ளே அந்த பயணியே  நான் தான் னு
 (அந்த குழந்தையே நீங்க தான் மொமென்ட்ல ) சொல்லிகிட்டு பயணத்தை ஆரம்பிக்கிறேன்.

சென்ற மாதம் பொங்கலுக்கு கும்பகோணம் போக பேருந்து ரயில் இது எதுலயும் இடமில்லைனு தெரிஞ்சவுடனே  (வடிவேலு போல்) ஆரம்பத்திலேயே ஆரம்பிச்சுட்டாய்ங்களா என்று முனகிய படி தான் கிளம்பினேன். பஸ் ரயில் (பிளைட் இன்னும் விடலே) இது ரெண்டுல எதுல போகலாம்னு மனசு டாஸ் போட்டு பார்த்துச்சு . ரயிலில் அன் ரிசர்வ் ல நின்னுகிட்டு தான் போகணும். அதுக்கு பதிலா பஸ் போனா உட்கார சீட்டாவது கிடைக்கும் அதனாலே பஸ்ல போயிடலாமே னு  முடிவெடுத்தேன். 

வெள்ளி அன்று பொங்கல். வியாழன் மாலை அலுவலகத்தில் எக்கச்சக்க ஆணிகள் . ஆணிய புடுங்கிட்டு  கிளம்பறப்ப மணி 8.00. பாரிஸில் இருந்து கோயம்பேடு போன பேருந்தில் நான் தொத்தி கொண்டு ஏறி சீட் தேடிய போது மக்கள் நாங்க கோயம்பேடு வரை ரிசர்வ் செய்திருக்கோமாக்கும் என்பது போல் உட்கார்ந்திருந்தாங்க. நின்ற படியே கோயம்பேடு வந்ததில் வலி தெரியல. ஆனால்  ஊருக்கு போற பஸ்ல உட்கார வழி (இடம்) கிடைச்சா சரினு  நினைச்சிட்டு கோயம்பேட்டில் சென்று இறங்கிய போது மணி 9.00.


எங்கு திரும்பினாலும் மக்கள் மூட்டை மூட்டையாக லக்கேஜுடன் சென்று கொண்டிருந்தார்கள். பொங்கல் பொங்கி முடிக்கிறதுக்குள்ளே வீடு போய் சேர்ந்தாகணும்னு அவங்க கிட்டே இருந்த  பரபரப்பு ஜுரம் என்னையும் தொத்திகிச்சு.  உள்ளே நுழையரப்ப  ரிசர்வேசன் கவுன்ட்டர் காலியா இருந்துச்சு. வேகமாய் போய் கேட்ட போது ,  "கும்பகோணத்துக்கு இப்ப ரிசர்வேசன் பஸ் எதுவும் இல்ல. எல்லாம் புல்.  நாளைக்கு  காலையில தான் இருக்கு" னு சொன்னவர் என் அதிர்ச்சிய பார்த்துட்டு, "அன் ரிசர்வ்டு பஸ்கள்  நிறைய விட்டிருக்காங்க. 8 ம் நம்பர் பிளாட்பாரம் போங்க" என்றார்

சினிமால  காமிக்கிற மாதிரி இங்க கட் பண்ணா அந்த 8 ம் நம்பர் பிளாட்பார்ம்ல இருக்கணும்னு தான் ஆசைப்பட்டேன். நிஜத்தில் அது முடியாதே. அதை தேடி புறப்பட்டவன்  வழியெங்கும் மக்கள் கடலில் நீந்தி போக வேண்டியிருந்துச்சு. 

 8 ம் நம்பர் பிளாட்பாரம் எங்க இருக்கு என்று யாரிடமும் கேட்பதற்கு அவசியமே இல்லாம ஆங்காங்கே  போர்டுகள் வைத்திருந்தார்கள்.
பரவாயில்லியேனு நினைச்சிட்டே அங்க போய் சேர்ந்தேன்.

மேஜை போட்டு அமர்ந்திருந்த போக்குவரத்து அதிகாரிகளிடம்  கேட்டப்ப 
"பஸ் நிறைய இருக்கு சார். டிராபிக் ல ப்ளாக் ஆகி நிக்குது வரும்"  என்றார்கள்
அடுத்து நான் கேட்ட கேள்வி அவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கும், "பஸ் இடது பக்கமா வருமா, இல்ல வலது பக்கமா வருமா" அப்படி நான் கேட்டவுடன்  எப்படி வந்தா என்னய்யா. பஸ் வந்தா போதாதா அப்படிங்கிற முகபாவத்துடன் என்னை பார்த்து  "வலது பக்கம்" என்றார்கள்.  நடக்க ஆரம்பிச்சேன். 

கூட்டம் அதிகமா இருந்தா,  பஸ்  பேருந்து நிலையத்தில் உள்ளே 
நுழையுறப்பவே  பயணிகள் அங்க நின்னு தடாலடியாக  ஏறி சீட் போட்டு விடுவார்கள்.  நானும் அப்படி  ஏறி விடலாம்னு நடக்க ஆரம்பிச்சேன். 

இருபது பஸ் வரைக்கும்  தாண்டி போயிருப்பேன். கும்பகோணம் செல்லும் பஸ் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் தென்படல. ஆனால் பக்கத்து பிளாட்பாரத்தில் மட்டும் திருச்சி செல்லும் பஸ்களாக நிறைய வந்துட்டிருந்துச்சு. எதிர் இலையில் பரிமாறப்படும் பாயாசம் நம்ம இலைக்கு எப்ப வரும்னு காத்திருக்கிற மாதிரி பார்க்க ஆரம்பிச்சேன். அப்ப தான்  ஒரு பஸ்  நான் போயிட்டிருந்த பிளாட்பாரம்ல வந்துட்டிருந்துச்சு.

சர்க்கரையை மொய்த்து கொண்ட எறும்புகள் போல் சில பேர் அந்த பஸ்ஸை தொடர்ந்து வந்துட்டிருந்தாங்க. கண்டக்டர்  "இது ரிசர்வேசன் பஸ்சுங்க"என்றார்.  "எல்லா பஸ்சும் ரிசர்வேசன்னே வந்தா நாங்க எப்படி ஊருக்கு போறது" என்று கேட்டு கொண்டே மெதுவாக ஊர்ந்த படி வந்து கொண்டிருந்த பஸ்சை  ஓட்டமும் நடையுமாக தொடர்ந்துட்டிருந்தாங்க. 
நானும் அந்த ஜோதியில் அவர்களுடன் ஐக்கியமாகி கொண்டேன். நாங்கள் ஒரு கட்டத்துல சலிப்பாகி  சார் எந்த ஊர் போகுதுன்னு சொன்னீங்கன்னா  நாங்க வேற பஸ்சை பார்க்க போயிடுவோமில்ல னு கேட்டப்ப தான் அவர் "இது கரூர் போகுது தம்பி" என்றார்.  அடுத்த செகண்ட் அத்தனை பேரும் அடுத்த வண்டி தேடி ஓட ஆரம்பிச்சோம். 
கொஞ்சம் தள்ளி கும்பகோணம் பெயர் பலகையோட  ஒரு பஸ் நிக்கிறது என் கண்ணுக்கு தெரிய வந்துச்சு. ஒரு நிமிஷம் ஓட்ட பந்தய வீரனாய் மாறி, மூச்சிரைக்க பஸ்சின் பக்கம் போனப்ப தான் அதுவும் ரிசர்வேசன் பஸ்னு தெரிஞ்சுச்சு.


போக்குவரத்து அதிகாரிகள் நின்னுட்டிருந்த பழைய இடத்துக்கு நான் வந்து நின்னப்ப தான் வாழ்க்கை ஒரு வட்டம்டா என்பது புரிஞ்சுது. அப்ப தான் அந்த இடத்துல தஞ்சாவூர் போர்டுடன் பஸ்  ஒண்ணு நின்னுகிட்டு இருக்கிறதை பார்த்தேன்.  ஆகா இது கும்பகோணம் வழி தானேனு பஸ்சுக்குள் தாவி ஏறினேன்.  கடலை விற்பவர் உட்கார்ந்திருக்கிற ஒவ்வௌருத்தரையும் 
கேட் டுட்டே எனக்கு முன்னாடி  போய்கிட்டு இருந்தார். நான் அவர் பின்னாடியே காலியாக இருக்குற சீட் பக்கத்துல உட்கார்ந்திருக்கிறவங்க கிட்டே சீட் கேட்டுகிட்டே நானும் போயிட்டிருந்தேன்.  பஸ்ல கடைசி சீட்டுக்கு முன்னதாக ஒரு சீட் காலியாக இருந்துச்சு. அப்பாடா என்று அருகில் சென்று என் பேகை வச்சிட்டு பாக்குறேன்.  அந்த சீட் பஸ்ஸோட பின் சக்கரத்திற்கு மேலே உள்ள சீட். ஒரு மேடை மேல உட்கார்ந்திருக்கிற மாதிரியே 
இருக்கும். அதில ஒரு பிரச்னை என்னன்னா கால்களை கீழே நீட்டி உட்கார முடியாது.  ஏழு மணி நேரம் உட்கார்றது கஷ்டம் தான்.  இருந்தும் பசிக்கு புளி சாதம் கிடைக்கும் போது அத விட்டுட்டு பிரியாணிக்கு ஆசைபட கூடாது னு பட்டுன்னு உட்கார்ந்துட்டேன். இன்னும் சில பேர் ஏறி சீட் தேட ஆரம்பிச்சாங்க. இல்லேன்னவுடன் அவங்க அலட்டிக்கல. தரையில் உட்கார்ந்துகிட்டாங்க.

 கண்டக்டர் வண்டியில் ஏறி "பஸ்  கும்பகோணம் அதை விட்டால் தஞ்சாவூர் இங்க தான் நிக்கும். வேற எங்கேயும் நிக்காது. எல்லாரும் 225 ரூபாய் எடுத்து வச்சிக்குங்க"  என்றார் கறாராக. சிக்னல்ல கூட நிக்காதா சார், பயண வழி உணவகத்தில் கூட நிற்காதா சார் னு என் மைண்ட் வாய்ஸ் கேட்டுச்சு. (அது அவருக்கு கேட்காதுன்னு தெரிஞ்சும்) பஸ் கிளம்ப ஆரம்பிச்சப்ப தான் .  பஸ்ஸை பிடிக்கிற டென்சனில்  சாப்பிடாம ஏறினது மட்டுமில்லாம ஒரு  தண்ணீர் பாட்டில் கூட வாங்கிக்காம ஏறினது ஞாபகம் வந்துச்சு.  சரி அட்ஜஸ்ட் பண்ணிப்போம்னு நினைக்கிறப்ப வண்டி டிராபிக்கில் நகர ஆரம்பிச்சு வேகம் பிடிச்சது. அது வரை இருந்த புழுக்கத்தை காற்று உள்ள புகுந்து விரட்ட ஆரம்பிச்சுச்சு.

 டிக்கெட் போட்டு கொண்டே வந்த கண்டக்டரிடம் ஒரு பயணி அப்போது மல்லு கட்ட ஆரம்பித்தார். "என் பையனுக்கு அரை டிக்கெட் தான்" னு  இவர் சொல்ல, அவர் "அதெல்லாம் கிடையாது முழு டிக்கெட் தான். நான் தான் வண்டி எடுக்கும் போது சொன்னேன்ல. இப்ப வம்பு பண்ணா என்ன அர்த்தம்"னு குரல் எழுப்பினார். "அதெப்படி சின்ன பசங்களுக்கும் அதே டிக்கெட் வாங்கறீங்க" " என்னை எதுக்கு கேக்கறீங்க. பஸ் நின்னப்ப அதிகாரிகளை பார்த்து கேட்க வேண்டியது தானே " னு சொல்லிட்டு முழு டிக்கெட் கொடுத்த படி நகர்ந்தார். எல்லாரும் இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க 
அந்த பயணியும் அவர் குடும்பமும்  கடைசி இருக்கையில் தான் அமர்ந்திருந்தார்கள். 

பஸ் கூடுவாஞ்சேரி  தாண்டற வரைக்கும் செம டிராபிக். பஸ், கார், லாரினு ஒண்ணுக்கொண்ணு  முந்தி போறதுக்கு ட்ரை பண்ணிட்டு இருந்துச்சு. கார்களை பார்க்கிறப்ப, நம்ம கிட்டே கார் இருந்தா கார்லேயே போயிருக்கலாமே னு என்னை உரசி பார்த்த அந்த ஆசை 
தெருவோரம் ஸ்டாப்பிங்ல பஸ்சுக்கு வெயிட் பண்ணிட்டு  இருக்கிற மக்களை பார்த்தவுடன் தள்ளி போயிடுச்சு. 

அப்படியே தூங்கிப் போனவன்  நடுவில் கண் முழித்த போது வண்டி உளுந்தூர்பேட்டை டோல்கேட் வந்திருந்துச்சு.அதிகாலை 2.00 மணி. 
அடுத்த முறை கண் முளிச்சப்ப காலை 5 மணி. வண்டி அப்ப நெய்வேலி தான் தாண்டியிருந்தது. டிரைவரும் வேகமாக தான் ஓட்டிட்டிருந்தாரு.
 "இவ்வளவு நேரம் ஆகிடுச்சு. வண்டி ஏன் இப்ப தான் இங்க வந்திருக்கு" னு பக்கத்தில் இருந்தவர் கிட்டே கேட்ட போது , "வழி தெரியாம வேற இடம் போனதினால கொஞ்சம் லேட் ஆகிடுச்சு" என்றார். "ஏம்பா பக்கத்துல இருக்கிறவங்க கொஞ்சம் வழி காட்ட கூடாதா" என்றேன். "அதெப்படி அவங்களும் தூங்கிட்டு இருந்திருப்பாங்களே" அப்படின்னு இன்னொருத்தர் கவுண்டர் கொடுத்தார்.

பஸ் கும்பகோணம் பேருந்து நிலையம் வந்தப்ப மணி 7.00  எவ்வளவு வேகமாக பஸ்ல எறினமோ அதை விட இரு மடங்கு வேகத்தில எல்லாரும் இறங்கி சிதற ஆரம்பித்தோம். வீட்டுக்கு செல்ல தனியார் பேருந்தில் ஏறிய போது கூட்டம் திமிறி கொண்டிருந்தது. காலேஜ்ல படிக்கிற (இல்ல வேலையில் இருக்கிற) இளைஞர்கள் "வடசேரி போறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்"  னு கண்டக்டரிடம் கேட்டாங்க. அவர் 9.00 மணி ஆகிடும் னு சொன்னார் 

"டேய்  நாம பொங்கல் வைக்கிரதுக்கு போலடா.  பொங்கல் சாப்பிட தான் போய்கிட்டு இருக்கோம்." னு ஒரு இளைஞர் சொல்ல இன்னொரு இளைஞர்
 "வீட்ல அம்மா வேற போன் மேல போன் பண்றாங்க" என்று சொல்லி கொண்டிருந்தார்.

பேருந்து வேகமெடுத்து பஸ் ஸ்டாண்ட் காம்பௌண்டை தாண்டிய போது சென்னை பஸ்கள் நிக்கிற இடத்துலேருந்து "சென்னை சென்னை" னு குரல்  கொடுத்துட்டிருந்தார் கண்டக்டர். 

"இருங்கய்யா பொங்கல் கொண்டாடிட்டு வந்துடறோம்" அந்த இளைஞர்களுடன்  சேர்ந்து கொண்டு உற்சாகமாய் நானும் குரல் கொடுத்தேன்.


ஆர்.வி.சரவணன் 



படம் இணையத்திலிருந்து




சனி, பிப்ரவரி 13, 2016

மகாமகம் - 2016




மகாமகம் - 2016

நான் பிறந்து வளர்ந்த ஊரான கும்பகோணத்தின் (குடந்தை) மீது கொண்ட அன்பில் தான் எனது வலை தளத்திற்கு குடந்தையூர் என்றே பெயரிட்டேன் என்பது நண்பர்கள் நீங்கள் யாவரும் அறிந்ததே. கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற மகாமக திருவிழா, இந்த பிப்ரவரி 22 ஆம் நாள் திங்கள் கிழமை அன்று நடைபெறுகிறது. அந்த நாளை எதிர்நோக்கி வரும் பக்தர்களை வரவேற்க உற்சாகமாய் காத்திருக்கிறோம் ஊர் மக்களான நாங்கள்.

குடந்தையில் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மகாமக திருவிழா பற்றிய ஒரு சிறப்பு பகிர்வு தான் இது. 1989 ஆம் வருடம் 
எனது கல்லூரியில் எனக்கு கொடுத்திருந்த ப்ராஜெக்ட் வொர்க் குடந்தை திருவிழாக்கள் பற்றிய ஆய்வு. அதற்காக நான் கோவிலகளுக்கு சென்றும் குடந்தை நூல்களிலிருந்தும் நான் சேகரித்த தகவலகளை கொண்டு தயாரித்த அந்த புத்தகத்திலிருந்து இந்த பகிர்வை இங்கே தந்திருக்கிறேன்.





முதலில் கும்பகோணம் தோன்றிய விதத்தை பற்றி பார்ப்போம்.

படைப்பு கடவுளான பிரம்மா, உலகமெல்லாம் அழியக் கூடிய பிரளய காலம் வருவதை உணர்ந்து அந்த வெள்ள பெருக்கில் தமது படைப்பு தொழிலுக்கு இன்றியமையாததான பீஜம் (மூல வித்துக்கள்) அழிந்து விட்டால் தமது படைப்பு தொழிலை எவ்வாறு செய்வது என்று கவலை கொண்டு சிவபெருமானிடம் சென்று வணங்கி தன் கவலையை தெரிவித்தார். சிவபெருமானும் அதை காப்பாற்றும் முறையை  
அவருக்கு உரைத்தார். 

பிரம்மா, சிவபெருமான் சொல்லிய படி மண்ணையும் அமுதத்தையும் கலந்து பிசைந்து ஒரு குடம் அமைத்து அதனுள் அமுதத்தை நிரப்பி அதன் நடுவில் பீஜத்தைச் சேர வைத்து அதன் நாற்புறத்திலும் ஆகமம், அங்கம், புராணம், இதிகாசம் முதலியவற்றை வைத்து அக்குடத்தின் வாயிலே தேங்காய், தேமாவிலைகளை வைத்து, பிரமதேவன் மேரு மலையில் வில்வ தளிர்களால் பூஜித்து வந்தார் . ஊழி பெருவெள்ளம் பெருகி வந்து உலகமே மூழ்கியது. அக் கும்பம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மிதந்து வந்து வாயு திசையிலே சென்று தங்கியது. வானவர்கள் பூமாரி பொழிந்தனர்.



பாணபுரீஸ்வரர் திருக்கோவில் 

சிவ பெருமான் கும்பத்தை காண வேட ரூபத்தில் வந்தார். தனது வில்லில் இருந்து அம்பெடுத்து எய்து கும்பத்தை உடைத்தார். சிதைந்த கும்பத்திலிருந்து அமுதம் பூமியில் பரவி இரண்டு இடங்களில் தேங்கியது. அந்த இடங்கள்.ஒன்று மகாமக குளம் மற்றொன்று பொற்றாமரை குளம். சிவன் அமுதம் ஊறிய மண்ணை குவித்து ஒரு அழகிய சிவலிங்கமாக்கி தானே பூஜித்து அதனுள்ளே புகுந்து சிவலிங்க திருமேனியாக காட்சியளித்தார். ஆதியில் கும்பத்திலே தோன்றியதால் ஆதி கும்பேசர் என்ற பெயர் வழங்கப்படலானார். பார்வதி சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடத்துக்கு வந்து சந்நிதியை அடைந்து தரிசித்தார். அவருக்கு இடப் பக்கத்தில் இருந்த படி, தொழுபவர்களுக்கு தொடர்ந்து அருள் புரிந்தார்.


கும்பேஸ்வரர் திருக்கோவில் 


ஸ்ரீ கும்பேசர் அருளிய சிருஷ்டி பீஜத்தை கொண்டு பிரம்மா அழகு பொருந்திய நகரத்தையும் அருமை வாய்ந்த கோவிலையும் விசுவ தர்மனின் துணை கொண்டு அமைத்தார். இந்த நகரமே கும்பகோணம். இந்த ஊர் பெயர் வர காரணம். குடம் என்றால் கும்பம். மூக்கு என்றால் கோணம். ஆகவே கும்பகோணம் என்ற பெயர் வழங்கப்படலாயிற்று.




மகாமக திருவிழா உருவான வரலாறு 

பூமருவுங் கங்கை முதல் புனிதமாம் பெருந் தீர்த்தம் மாகந்தான் அடுதற்கு வந்து வழிபடுங்கோயில் எனச் சேக்கிழார் பெருமான் திருஞானசம்பந்தர் புராணத்துள் சிறப்பிக்கின்ற அளவு புகழ் பெற்ற மகாமகத்தை பற்றி விளக்கமாக இங்கே பார்ப்போம்.

மாமாங்கம் பெயர் விளக்கம். மாமாகம் என்பதே மாமாங்கம் என்று ஆகி இருக்கிறது. அகம் என்றால் பாவம். மா என்றால் அணுகாது. எனவே மாமாகம் என்பதற்கு அகம்பாவம் அணுகாதது என்றே பொருள் ஆகும்.

சிவபெருமான் சிதைத்த கும்பத்திலிருந்து சிதறிய அமுதம்,
கும்பேஸ்வரர் கோவிலின் கீழ்புறத்தில் ஒரு தீர்த்தமாகவும் அக்கினி திக்கில் (தென்கிழக்கு) ஒரு தீர்த்தமாகவும் அமைந்தது. தென்கிழக்கில் அமைந்த அந்த தீர்த்தம் தான் மகாமக குளம்.


ஒரு சமயம் கங்கை யமுனை, நருமதை, சரஸ்வதி, கோதாவரி, பொன்னி, கிருஷ்ணா, சரயு, துங்கபத்ரா ஆகிய பெயர் பெற்ற நதிகள் வடிவமான கன்னியர்கள் ஒன்பது பேரும் உலக மக்கள் தங்களிடத்தில் நீராடி கழுவி செல்கின்ற பாவங்களை தாங்க முடியாத காரணத்தினால் அவைகளினின்று தாங்கள் நீங்கிட இறைவன் அருள் புரிய வேண்டும் என்று பரமசிவனை சென்று துதித்து வேண்டினர். சிவ பெருமான் அவர்களது குறைகளை கேட்டு கவலை வேண்டாம் என்று பின் வருமாறு செய்ய பணித்தார்.

“ கன்னியர்களே. தென் திசையில் உள்ள கும்பகோணத்தில் மகாமக தீர்த்தம் உள்ளது. தேவகுருவாகிய பிரகஸ்பதி என்றழைக்கபடும் வியாழ பகவான் சிம்ம ராசியில் பொருந்தும் போது அவரோடு மாசி மாதத்தில் பௌர்ணமியும், மக நட்சத்திரமும் சேருகின்ற நிலையில் கும்பராசியில் சூரியன் இவர்களையும் இவர்கள் சூரியனையும் பார்க்கும் நல்ல நாள் மகாமக புண்ணிய நாளாகும். குரு பகவான் கும்ப ராசிக்கு 12 
ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருவதால் மகாமக புண்ணிய காலமும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருகிறது. அந்த நாளே மகாமக நாளாக கருதபடுகிறது. அந்த நாளில் நீங்கள் சென்று அங்கு நீராடி வழிபடுங்கள்.பாவங்கள் உங்களை விட்டு அகலும்." 

நவ கன்னியர்களும் அவ்வாறே மகாமக தீர்த்தம் வந்து மூழ்கி பாவங்களை போக்கி கொண்டனர். சிவன் அமுத வாவியின் வட கரைக்கு சென்று மேற்கு முகமாக இலிங்க வடிவில் அவர்களுக்கு காட்சி தந்து அருள் புரிந்தார்.

ஒன்பது கன்னியரும் அவ் வாவியை பார்த்தவாறே காசி விஸ்வநாதர் கோவிலில் வீற்றிருந்து இன்றும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர்.


மகாமக குளம் அமைப்பு

இந்த தீர்த்தம் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கிழக்கு மேற்கு நீள் சதுரத்தில் வடகரையும் தென்கரையும் சிறிது உள் வளைந்து கிழக்கில் குறுகி மேற்கில் அகன்று வானத்திலிருந்து பார்த்தால் ஒரு குடம் போலவே காட்சி தருகிறது  குளத்தை சுற்றிலும் அழகான படிக்கட்டுகளுடன் 16 மண்டபங்கள் உள்ளன. அந்த மண்டபத்தில் உள்ள கோவில்கள் எல்லாவற்றிலும் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மகான் கோவிந்த தீட்சிதரால் கட்டப்பட்டது. அந்த பதினாறு கோவில் சிவலிங்கங்களின் பெயர்கள் வருமாறு 



பிரமதீர்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தாளேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரனேஸ்வரர், கோனேஸ்வரர், பக்திறேஸ்வரர், பைரவேஸ்வரர், அகத்தீஸ்வரர், வியாசேஷ்வரர், உமைபகேஸ்வரர், நைருதீஸ்வரர், பீர்மேஸ்வரர், கண்கதறேஸ்வரர், முக்ததீர்ததேஸ்வரர்,ஷேதிரபலேஸ்வரர்,

மகாமகத்தில் உள்ள தீர்த்தங்கள் 20. 

இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம்,வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், கங்கை தீர்த்தம், யமுனை தீர்த்தம், கோதாவரி தீர்த்தம், நர்மதை தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், காவிரி தீர்த்தம், குமரி தீர்த்தம், பயோஷ்ணி தீர்த்தம், சரயு தீர்த்தம், அறுபத்தாறு கோடி தீர்த்தம், தேவ தீர்த்தம். 


பிப்ரவரி 13 இன்று கொடியேற்றத்துடனும் பக்தர்களின் புனித நீராடலுடனும் துவங்கியது மகாமக திருவிழா. வரும் பிப்ரவரி 22 ஆம் நாள் திங்கள் கிழமை 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. அன்று கும்பகோணத்தில் உள்ள சைவ வைணவ ஆலயங்களிலிருந்தும் உற்சவ மூர்த்திகள் மகாமக குளத்தில் தீர்த்தம் கொடுக்க எழுந்தருள்வார்கள். பிரதான மூர்த்தியாகிய அருள் மிகு கும்பேஸ்வரர் அருள் மிகு மங்கள நாயகியுடன் மகாமக குளம் வடகரையில் பீர்ம தீர்த்த கட்டத்தில் எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பார்.

துணி மணிகள் கலையாமலே இறைவனை துதித்த படி மகாமக 
குளத்தில் மூழ்கி எழ வேண்டும். குளத்தில் உள்ள தீர்தங்களில் சென்று நீராடி, பின் பொற்றாமரை குளம் சென்று சுவாமியை துதித்து முறையாக மூழ்கி எழுந்து காவிரி கரை சென்று மூழ்கி எழ வேண்டும். சிவன் மற்றும் பெருமாள் கோவில்களின் தீர்த்தங்களை பெற்று வழி பட வேண்டும்.    


மகாமகத்தன்று இப் புனித நேரத்தில் இத் தீர்த்தத்தை ஒரு முறை நமஸ்கரித்தால் தேவர்கள் அனைவரையும் நமஸ்கரித்த புண்ணியம் கிடைக்கும். மகாமக குளத்தில் நீராடுவோரின் பாவங்கள் நீங்கி சகல சம்பத்துகளும் பெறுவார்கள்.

 1980 ஆம் வருட மகாமகம் 


இத் தளத்தின் சிறப்பை பற்றி சொல்வதென்றால் எங்கெங்கோ செய்யும் பாவங்களை ஏதேனும் புண்ணிய தலத்தில் சென்று போக்கி கொள்ளலாம். புண்ணிய தலங்களில் செய்யும் பாவங்களை காசியிலே போக்கி கொள்ளலாம். காசியில் செய்யும் பாவங்களை கும்பகோணத்திற்கு வந்து போக்கி கொள்ளலாம். கும்பகோணத்தில் செய்யப்படும் பாவங்களுக்கு விமோசனம் இந்த தலத்திலேயே கிடைத்து விடும். அத்தகைய புண்ணியம் பெற்றது இந்த கும்பகோணம் திருத்தலம்.பிரளயத்தின் பின் உலக உயிர்கள் அனைத்தும் தோன்றிய ஸ்தலம் இது என்பது இதன் தனி சிறப்பு.


மகாமகம் - 2016 க்காக பக்தர்களை வரவேற்று 
நாங்கள் உருவாக்கிய 1.27 நிமிட வீடியோ உங்கள் பார்வைக்கு 

https://www.youtube.com/watch?v=VDWkQEIyTkA

புண்ணியத்தலமான கும்பகோணம் வாருங்கள் 
மகாமக தீர்த்தத்தில் நீராடி சிவனருள் பெறுங்கள்.

ஓம் நமச்சிவாய.

 ஆர்.வி.சரவணன் 

செவ்வாய், பிப்ரவரி 02, 2016

ஒரு ஊர்லே ஒரு தேவதை....






ஒரு ஊர்லே ஒரு தேவதை....

பதிவுலக நண்பர்  நிஜாம் பக்கம் பல் சுவை பக்கம் நிஜாமுதீன் தேவதை பற்றிய தொடர் பதிவொன்று எழுதுமாறு அழைத்திருந்தார். http://nizampakkam.blogspot.in/2012/08/angel4th-year.html. 2012 ஆம் ஆண்டு எழுதிய அந்த பதிவு இதோ நண்பர்களுக்காக. இங்கே 


ஒரு ஊர்லே ஒரு தேவதை இருந்துச்சாம். மனிதர்கள் நடமாட்டம் இருக்கிற காட்டு பகுதியில் வசிச்ச அது நல்ல தேவதை.   அங்கே போற வர்ற மனிதர்கள் பேசுறதை உன்னிப்பா கவனிக்கும். அப்படி தான் ஒரு நாள் ஒரு செல்வந்தரும் அவர் கிட்டே வேலை பார்க்கிற  ஒரு வேலையாளும் அந்த பக்கம் வந்தாங்க. வேலையாள் பெரிய மூட்டை ஒண்ணை சுமக்க முடியாம திணறிய படியே தூக்கிட்டு வந்தான். கூட வந்த அந்த செல்வந்தர்  சீக்கிரம் நட என்று விரட்டி கொண்டே இருந்தார் (வண்டியிலே வச்சு எடுத்துட்டு போனா காசு நிறைய கொடுக்கணுமே னு அவர் தன்னோட வேலையாள் வச்சே இந்த சுமைய தூக்க வச்சிருந்தார்.)  வேலையாள் தன் முதலாளி கிட்டே "இந்த சம்பளத்திலே என்னாலே குடும்பம் நடத்த முடியலே  இந்த மாசத்திலேருந்து சம்பளம் கொஞ்சம் கூட ஏத்தி கொடுங்க" னு  கேட்டுகிட்டே நடந்தான். அதுக்கு அவர் "நீ பார்க்கிற வேலைக்கு இந்த  சம்பளமே ஜாஸ்தி பணத்துக்கு எல்லாம் ஆசைபடாதே" என்று அதட்டினார். இதை பார்த்த தேவதை, அந்த செல்வந்தருக்கு சரியான பாடம் புகட்டணும் னு முடிவு பண்ணிச்சு. 

அடுத்த நாள் அந்த முதலாளி அந்த வழியா தனியா வர்றப்ப அவர் கிட்டே ஒரு சின்ன பையை கொடுதுச்சு.  பிரிச்சு பார்த்தா அதிலே பொற்காசுகள் நிறைய இருந்துச்சு அவர் சந்தோசமா இதெல்லாம் எனக்கானு கேட்க, தேவதை "உனக்கில்லே ,உன் வேலையாள் கஷ்டபடறதாலே  இதை தந்திருக்கேன். கொண்டு போய் உன் வேலையாள் கிட்டே  கொடுத்துடு" னு சொல்லுச்சு. சரி னு வாங்கிகிட்டு போனவர் தன் வேலையாள் கிட்டே அதை கொடுக்காமே தானே வச்சுகிட்டார். இருந்தும் அவருக்கு  வேலையாளை பார்க்கிறப்ப உறுத்தலா இருந்ததால,  அதிலிருந்து நாலு காசுகள் மட்டும் எடுத்து அவன் கிட்டே கொடுத்து, "கஷ்டம்னு சொன்னியே. அதனாலே தரேன் வச்சிக்க. இன்னும்  நீ நேர்மையா  என் கிட்டே ஒழுங்கா வேலை பார்க்கணும்"  னு சொன்னார். காசு வாங்கிய வேலையாளுக்கு சந்தோஷம் தாங்க முடியல. "முதலாளி என் உழைப்புக்கு நீங்க கொடுத்த கௌரவம் இது. நீங்க காலாலே இட்ட வேலையை தலையாலே செய்வேன்" னு சொன்னான். முதலாளி, பொற்காசுகள் எல்லாத்தையும் நாமலே எடுத்துகிட்ட மாதிரியும் ஆச்சு. வேலையாளையும் திருப்திபடுத்தி காலம் முழுக்க நமக்கு விசுவாசமா இருக்க வச்ச மாதிரியும் ஆச்சு னு தன் வியாபார புத்தியை நினைச்சு ரொம்ப சந்தோசமாகிட்டார்.

 அடுத்த நாள் அவர் அந்த பையை ஆசையா திறந்து பார்த்தாரு. அதிலே காசுக்கு பதிலா வெறும் கூலாங் கற்கள் தான் இருந்துச்சு. அவருக்கு  கோபம் வந்துடுச்சு. பையை எடுத்துட்டு நேரா தேவதைய பார்க்க போனாரு அதுகிட்டே "நீ ஏன் கற்களை கொடுத்து  ஏமாத்தினே" னு கேட்டாரு. அதுக்கு தேவதை "உன் வேலைக்காரன் அல்லவா இதை வந்து கேட்கணும். நீ எதுக்கு வந்தே" னு கேட்டுச்சு. அவர் தடுமாறி ஆசைப்பட்டு தானே காசுகளை எடுத்துகிட்டதா சொன்னாரு. "வேலையாளுக்கு சேர வேண்டியதை நீ வச்சிகிட்டதினாலே அது கல்லா மாறிடுச்சு" னு தேவதை சொல்லுச்சு. அவர் உடனே "இதை திரும்ப காசா மாத்தறதுக்கு நான் என்ன பண்ணனும்னு" கேட்டாரு . வேலையாள் கிட்டே கொடுத்துடு. காசா மாறிடும்" னு சொல்லவே "சரி கண்டிப்பா கொடுத்துடுறேன் எனக்கும்  கொஞ்சம் காசு கொடேன்" னு கேட்டாரு அதுக்கு தேவதை சிரிச்சுகிட்டே "வேலையாள் கிட்டே இதை கொடுத்து காசா மாறினவுடன் ரெண்டு பேரும் பாதி பாதியா எடுத்துக்குங்க" னு சொல்லுச்சு. அவர் சந்தோசமா வேலையாள் கிட்டே போய் நடந்த எதையும் சொல்லாமே "தேவதை நமக்கு  காசு கொடுத்து பிரிச்சு எடுத்துக்க சொன்னிச்சு" ன்னு அவன் கையில் கொடுத்தாரு அவன் கைக்கு போனவுடனே அது பொற் காசுகளா மாறிடுச்சு.

 அவன் அதை அவர் கிட்டே திரும்ப கொடுத்துட்டான். " தகுதிக்கு மேலே ஆசைபடறதும் தப்பு. அடுத்தவங்க சம்பந்தமே இல்லாமே இலவசமா கொடுக்கறதை வாங்கறதும்  தப்பு தேவதை கிட்டேயே திருப்பி கொடுத்துடுங்க " னு சொன்னான் அவர்,  "முட்டாள் போல் பேசாதே  இதை நீ வாங்கிக்கிட்டீன்னா   நீயும் ஒரு முதலாளி ஆகிடுவே"னு  சொன்னாரு.
அதுக்கு அவன் "நீங்க கொடுக்கிற சம்பளத்திலே நானும் என் குடும்பமும் சந்தோசமா இருக்கோம். இந்த காசுகளை நீங்களே எனக்கு சொல்லாம வச்சிருக்கலாம். ஆனா எனக்கும் பாதி கொடுத்து என்னை முதலாளியாக்க நினைச்ச உங்க நல்ல 
மனசுக்காக இந்த காசுகள் எல்லாதையும் நீங்களே எடுத்துக்குங்க" னு அவன் சொன்னவுடன் செல்வந்தருக்கு சம்மட்டியால் அடிச்சது போல் இருந்துச்சு.

திரும்பவும் தேவதைகிட்டே  போய் அந்த பையை  திருப்பி கொடுத்தார். அவன் சொன்னதை அப்படியே சொன்னார். தேவதை சிரிச்சுகிட்டே சொன்னுச்சு உன் வேலையாள் எப்படிப்பட்டவன் னு நீ தெரிஞ்சிக்க தான் இப்படி செஞ்சேன் . ஒரு வேலையாள் எப்படி நடந்துக்கணும்னு அவன் காண்பிசிட்டான். நீ போய் 
ஒரு முதலாளி எப்படி நடந்துக்கணுமோ  அப்படி அவன் கிட்டே நடந்து காட்டு 
னு சொன்னுச்சு. 

ஆர்.வி.சரவணன்