கண்ணை தொறக்கணும் சாமி
ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய் சேதுபதி நண்பர்களுடன் வீடு பார்க்க சென்று பேச்சிலருக்கு வீடு கிடையாது என்றவுடன் மனைவி ஊரில் இருப்பதாக ஒரு பெயரை சொல்லி (பொய் சொல்லி) வாடகைக்கு வந்து விடுவார். அதனால் அவர் படும் இன்னல்களே கதை. நிற்க.
1986 ஆம் வருடம் வெளியான கண்ணை தொறக்கணும் சாமி படத்தில் இது போன்றதொரு காட்சி வருகிறது. சிவகுமாருக்கு வீடு கிடைப்பதற்காக அவரது மனைவி ஊரில் இருக்கிறார் என்ற பொய்யை நண்பரான சோ சொல்லவே வீடு கிடைத்து விடுகிறது.
வீட்டு ஓனரான மனோரமா உன் பொண்டாட்டி போட்டோ எங்கே என்று கேட்க, சிவகுமார் விழிக்க ஆரம்பிக்கிறார். "உன் பொண்டாட்டி போட்டோ காட்டு. இல்லேன்னா வீட்டை காலி பண்ண சொல்லிருவேன்" என்று கறார் பண்ணவும் வேறு வழியின்றி போட்டோ ஸ்டூடியோ சென்று ஒரு பெண் போட்டோவை கொண்டு வந்து இதுதான் மனைவி என்று சொல்கிறார். அந்தப் பெண் ஜீவிதா. அந்த போட்டோவை சிவகுமார் போட்டோவுடன் சேர்த்து பிரேம் போட்டு மாட்டி வைக்க சொல்கிறார் மனோரமா.
அடுத்த நாள் போட்டோவில் இருந்த ஜீவிதா, பெட்டியுடன் என்னங்க என்ற படி மனைவியாக உள்ளே நுழைகிறார். சிவக்குமாருக்கு திக் என்றாகிறது. அவரை எப்படி சமாளிக்கிறார். ஜீவிதா உண்மையில் யார் ? என்பது நகைச்சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த படத்தில், சிவகுமார் வேலைக்கு சேரும் கம்பெனியில் டெபாசிட் கட்டும் படி சொல்கிறார்கள். டெபாசிட் கட்டும் சிவகுமார் இது எனக்கு எப்ப திரும்ப கிடைக்கும் என்று கேட்க அதற்கு மேனேஜர் சொல்லும் பதில்.
"ஐந்து வருசம் கழிச்சு கிடைக்கும். ஆனா இந்த ஐந்து வருசத்துல நீயா வேலையை விட்டு போனாலும் சரி. நாங்களா அனுப்பினாலும் சரி பணம் கிடைக்காது."
கதை தாசரி நாராயண ராவ். படம் ரிலீசான சமயத்தில் பார்த்திருந்தாலும் நேற்று மீண்டும் இந்த படத்தை பார்த்தேன். காரணம் இந்தப்படத்தின் திரைக்கதை வசனம். கே. பாக்யராஜ்.
ஆர்.வி.சரவணன்.