செவ்வாய், மார்ச் 06, 2018

பயம்

பயம்
அந்த நான்காவது குறுக்கு தெருவில் ரகு நுழைகையில் அங்கே படுத்திருந்த நாய்கள் புதியவன் ஒருவன் வருவதை கவனித்து எழ ஆரம்பித்தன. மற்ற நாய்கள் நீ போய் பாரு என்று சொல்லியிருக்க வேண்டும். அந்த வெள்ளை நாய் மட்டும் குரைத்த படி அவனை நோக்கி ஓடி வர ஆரம்பித்தது. இது கொஞ்சம் ரகுவுக்கு பயத்தை கொடுத்தது. தயக்கத்துடன் நின்று விட்டான்.


சாப்பாட்டுக்கு பிந்தைய மதிய வேளை அது என்பதால் தெருவில் ஒருவருமில்லை. ஏதோ ஒரு வீட்டிலிருந்து பிரியாணி வாசம் வந்து கொண்டிருந்தது. எதிர்வீட்டு பால்கனியில் இவன் கஷ்டத்தை சட்டை செய்யாமல் பனியனுடன் செல் பேசி கொண்டிருந்தான் ஒருவன். வேறு யாரும் வருகிறார்களா என்று நோட்டமிட்ட படியே பின்னோக்கி நகர ஆரம்பித்தான் ரகு.


அந்த நாய் அவனை நோக்கி வள் வள்.... என்ற படி முன்னேறி வந்து கொண்டிருக்க, அதன் பற்கள் மற்றும் வேகத்தை பார்க்கையில் பயம் அதிகரிக்க ஆரம்பித்தது. மற்ற நாய்களும் இப்போது அவனை நோக்கி மெதுவாக வர ஆரம்பித்திருந்தன. "இது ஏதடா முன்னேயும் போக முடியாம பின்னேயும் போக முடியாம....... " என்ற ரகுவின் முணுமுணுப்பு அந்த தெருவில் ஒருவர் நுழைவதை பார்த்தவுடன் பாதியியிலேயே நின்றது. வேட்டியின் நுனியை இரு கைகளாலும் பிடித்தபடி வந்து கொண்டிருந்த அவரை பார்த்த மாத்திரத்தில் அப்பாடா என்ற நிம்மதி பெருமூச்சுடன் "சார்" என்றழைத்த படி அவரோடு சேர்ந்து கொண்டான்.

நிற்காமல் நடந்து கொண்டே "என்னப்பா?" என்றவரிடம், " நாய் குலைக்குது. எப்படி போறதுனு தெரியல" என்றான்.

"அட அது ஒண்ணும் பண்ணாதுப்பா. நீ வா" என்ற பதிலை அவனுக்கும், "ம்" என்ற அதட்டலை நாய்க்கும் கொடுத்த படி நிற்காமலே நடந்து கொண்டிருந்தார். அவரது வேக நடைக்கு அவன் நிறையவே சிரமப்பட வேண்டியிருந்தது.


தெரிந்த ஆள் வந்திருப்பதை பார்த்தவுடன் மற்ற நாய்கள் குரைப்பதை நிறுத்தி கொண்டு நிசப்தமாகி பழைய படி சென்று அமர்ந்து கொண்டு விட்டன. ஆனால் அந்த வெள்ளை நாய் மட்டும் சத்தம் எழுப்பவில்லையே தவிர அவனை தொடர்ந்து கொண்டிருந்தது. இது ரகுவுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது அவரிடமிருந்து இன்னொரு அதட்டலை எதிர் பார்த்தான். அவரோ அவன் அவஸ்தையை உணராமலே "நீ வாப்பா " என்ற படி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்.
நாய் எப்போது அவனை கவ்வலாம் என்ற முனைப்பிலேயே தொடர்ந்து கொண்டிருந்தது.பார்த்தான். ஏழெட்டு வீடுகள் தாண்டும் வரை திரும்பி பார்க்காமலே நடந்து கொண்டிருந்தான். தெரு முனை வரை வந்த பின் தைரியம் வர பெற்றவன் திரும்பி நின்று அதட்டினான்.
"த சும்மாருக்க மாட்டே . பின்னாடியே வந்துட்டு"
ஆனால் நாய் அங்கே இல்லை.
அது எப்போதோ சென்று தன் சகாக்களுடன் அமர்ந்து கொண்டு அவன் அதட்டலை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.

ஆர்.வி.சரவணன்.