வியாழன், ஜூன் 26, 2014

எது புண்ணியம் (சிறுகதை)
எது புண்ணியம் (சிறுகதை)


கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்த தன் முதலாளியிடம் வந்து நின்றான்
வீட்டு வேலையாள் முத்து.

அவன் தலை சொரிந்த படி நிற்பதை பார்த்த அவன் முதலாளி 
"என்னப்பா வேலையை பார்க்காமல் இங்க வந்து நிக்கிறே " என்றார்.


"முதலாளி ஒரு உதவி கேட்க வந்திருக்கேன்" 


"என்னனு சீக்கிரம் சொல்லு"


"பொண்ணுக்கு கல்யாணம் பேசியிருக்கேன் செலவுக்கு கொஞ்சம் பணம் கடனா வேணும்"
அவனின் குரலில் கெஞ்சல்  இருந்தது 

முதலாளி குரல் உயர்த்தும் முன்னே 


"உன் மூத்தபொண்ணு கல்யாணத்திற்கு வாங்கின கடனே நீ இன்னும்
அடைச்சபாடில்லே.அதுக்குள்ளே மறுபடியும் புது கடனா  "என்று சொல்லிய படி அங்கே வந்தார் முதலாளியின் மனைவி


"என்னம்மா பண்றது, வளைகாப்பு , பிரசவம் னு செலவு செய்யவே சம்பளம் சரியா
 போயிடுது"


"உனக்கு இன்னும் எத்தனை பொண்ணு இருக்கு" முதலாளியின் வரிகளில் இருந்த கிண்டலை கவனித்த அந்த வேலையாள் 


"இன்னும் ஒரு பொண்ணு இருக்குங்க" என்றான் சங்கோஜத்துடன் 


"அந்த பொண்ணு கல்யாணத்திற்கும் இங்க தான் காசு கேட்டு வருவியா
அதிர்ச்சியாய் கேட்டார் முதலாளி மனைவி 


"உங்களை விட்டா எனக்கு யாருங்க இருக்கா"


"சரியா போச்சு போ. ஏன்யா அளவா பெத்து குடும்பம் நடத்தறதை விட்டுட்டு
இப்படிஇங்கே வந்து நிக்க உனக்கு வெட்கமா  இல்லையா"

"இதுக்கும் நீங்க இருக்கிற தைரியத்துல தான் பெத்துகிட்டேன் னு  சொல்வான் பாரு 

அப்படி தானே டா"


அவமானம் அவனை தலை குனிந்து கொள் என்று சொன்னது 

"இதோ பார் ஏதோ என்னாலே முடிஞ்சது ஒரு பத்தாயிரம் தான்கொடுக்க முடியும் 
கேசியர்கிட்டே சொல்றேன் வாங்கிட்டு கிளம்பு" என்றார் முதலாளி கறாராய் 


"முதலாளி விலைவாசி இருக்கிற இருப்பிலே இது எப்படி போதும் கொஞ்சம் பார்த்து
 செய்யுங்க"

கெஞ்சும் அவனை சட்டை செய்யாமல் 
"நீ பாட்டுக்கு நின்னு பேசிகிட்டே இரு"

 என்று சொல்லிய படி அவர்கள் இருவரும் டிரைவரிடம் 

" சீக்கிரம் போப்பா டயமாயிடுச்சு"

என்று அவசரமாய் சொல்லியபடியே காரில் ஏறிக் கொண்டனர். கூடவே காரில் வந்து ஏறிய  அவர்களது உறவினர் 

"இந்த மாதிரி ஆளை எல்லாம் வேலைக்கே வச்சிக்க  கூடாது. என்று டிப்ஸ் கொடுக்க அவருக்கு பதில் கொடுத்தார் அந்த முதலாளி 

" என்ன பண்றது. வேலை சுத்தம் கை சுத்தம் இந்த மாதிரி ஆள் கிடைக்க மாட்டானே அதனாலே கேட்கிறப்ப ஏதோ கொஞ்சம் கொடுத்து சரி கட்ட வேண்டியிருக்கு "என்றவர் "கொஞ்சம் சீக்கிரம் போப்பா" விரட்டினார்  டிரைவரை 

"என்னங்க இனிமே யாவது கடவுள் நம்ம பொண்ணுக்கு கண் திறப்பாரா"

"சுவாமிக்கு திருகல்யாணம் பண்ணி வைங்க.முப்பது வயசாகியும் 
 தாமதப்படற உங்க பொண்ணோட  கல்யாணம் கண்டிப்பா முடிஞ்சிடும் நம்பிக்கையா  சொல்லியிருக்கார் ஜோசியர் அதனாலே தானே சுவாமிக்கு இன்னிக்கு திரு கல்யாணம்  நடத்தறதுக்கு அவசரமா போயிட்டிருக்கோம். கடவுள் கண்டிப்பா கண் திறப்பார்"


காரின் உள்ளே ஸ்டிக்கரில் இருந்த முருகன் அவர்களை  பார்த்து சிரித்து கொண்டிருந்தார்.

ஆர்.வி.சரவணன்

ஞாயிறு, ஜூன் 15, 2014

வெற்றி தொட்டு விடும் தூரம் தான்


வெற்றி தொட்டு விடும் தூரம் தான்


வாழ்க்கையில் கிடைக்கும் சின்ன சின்ன வெற்றிகள், எப்போது நினைத்து பார்த்தாலும் இனிமையான ஒன்று.அதிலும் ரொம்ப கஷ்டப்பட்டு கிடைச்ச வெற்றின்னா அது இன்னும் ஸ்பெஷல் ஆச்சே.வாங்க அப்படி கஷ்டப்பட்டு எனக்கு கிடைத்த சின்ன வெற்றியை பற்றி பார்ப்போம் 

1991 ஆம் வருடம் நான் ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி யில் சூப்பர் வைசரா 
நாகப்பட்டினத்தில் வேலை பார்த்துட்டு இருந்தேன். அதாவது  பில்டிங் வேலை நடக்கும் இடங்களில் ஊழியர்கள் சம்பளம். பொருட்கள் பாதுகாப்பு, கணக்கு வழக்கு அது இது எல்லாமே நம்ம தலையில தான்.( உதரனத்திற்க்கு புடிங்கி போட்ட ஆணி காணாமல் போனால் கூட இவன் வித்து சாப்பிட்டு இருப்பானோ னு நினைக்கிற அளவுக்கு ரிஸ்க் உள்ள ஜாப் இது. இதை பற்றி நான் காமெடி யாக இப்படி சொல்வதுண்டு " தினம் தினம் நம்மை நேர்மையானவன் னு சீதை போல நிரூபிக்க வேண்டியிருக்கு) அதுல பாருங்க கம்பெனி முதலாளி தன்னோட உறவினர்களை நம்பினால் வேலை சரியாக நடப்பதில்லை என்று அவர்களுக்கு பதிலாக என்னை நியமித்தார். அதனால் அவரது வீட்டில் என்னை யாரும் மதிப்பதில்லை. மேலும் 
நான் எப்போது தப்பு செய்வேன் என்ற எண்ணத்திலும்  இருந்தார்கள் போலிருக்கிறது. இதை அறியாமல் நான் அந்நியன் அம்பி போல் எல்லோருடனும் நல்ல விதமாக பழகி கொண்டிருந்தேன். 

இப்படி செல்கையில் பில்டிங் வேலை நடைபெறும் இடத்தில் தண்ணீர் இறைக்கும்  மோட்டார் பழுதானதால் (முதலாளியின்  உறவினர் வீடு புதுகோட்டையில் இருந்தது.) என்னை உறவினர் வீட்டில் இருக்கும் மோட்டரை எடுத்து வர சொல்லி முதலாளி அனுப்பினார். அங்கு எனக்கு வரவேற்பே சரியில்லை. மோட்டரை எடுத்து கொடுக்கும் போது கூட பத்திரமாய் கொண்டு போய் சேர் என்ற வெறுப்பான குரலில் தான் கொடுத்தார்கள்.இது எனக்கு வருத்தம் தான் எனினும் ,நாம் வேலைக்காரன்  மரியாதை எல்லாம் எதிர்பார்ப்பது கூடாது என்று சமாதான படுத்தி கொண்டு மோட்டருடன் புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் வந்து விட்டேன். 

சரியான வெயில். தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் நாகப்பட்டினம் செல்லும் பேருந்தில் ஏறி டிரைவர் சீட்டுக்கு எதிரில் இருக்கும் சீட்டுக்கு கீழே மோட்டரை வைத்து விட்டு உட்கார இடம் போட்டு விட்டு கீழே நின்று பேசி கொண்டிருந்த டிரைவரிடம் "தாகமாக இருக்கு சர்பத் சாப்பிட்டு விட்டு வந்து விடுகிறேன்" என்றேன். டிரைவரும் சரிங்க என்றார். நானும் தூரமாக எல்லாம் செல்லாமல் எதிரில் இருந்த கடையில் சர்பத் வாங்கி  தண்ணீர் குடிப்பது போல் அவசரமாக குடித்து விட்டு திரும்புகிறேன். பேருந்தை காணோம்.அந்த இடத்தில் வேறொரு பேருந்து இடத்தை ஆக்ரமித்து கொள்ள வந்து கொண்டிருந்தது. 

வடிவேலு போல் பதட்டமாய் ஓடி வந்தேன். அங்கே நின்றிருந்த மற்ற ஓட்டுனர்களிடம் விசாரித்தேன் அவர்கள் "அதோ போகுது பாருங்க" என்றார்கள். வண்டி ஆறேழு வாகனங்களுக்கு முன்னால் சாலையில் வேகமாய் விரைந்து கொண்டிருந்தது. எப்படி ஓடி பிடிப்பது என்று தெரியாமல் நான் முழிக்க அங்கிருந்தவர்கள்."அடுத்த வண்டி கிளம்புது பாருங்க. அதில ஏறி போய் சேஸ் பண்ணுங்க" என்றார்கள். நான் உடனே பேருந்தில் ஏறி நடத்துனரிடம் 
விஷயத்தை பதட்டதுடன் சொல்ல டிரைவர் கிட்டே போய் சொல்லுங்க என்றார் அவர்.
கூடவே அடுத்த ஸ்டாப்பிங் க்கு டிக்கெட் கிழித்து என்னிடம் திணித்து காசை வாங்கி 
கொண்ட பின்னே டிரைவரிடம் அனுப்பினார். 

நான் டிரைவரை நோக்கி விரைந்தேன் இல்லை இல்லை தாவினேன். ஏற்கனவே நம்மை எப்ப கவிழ்க்கலாம் என்று ரெடியாக இருக்கிறார்கள் இதில் நான் மோட்டரை தொலைத்தால் என்னாகும் என் கதி. வேலை போகும்.  வீட்டில் என்னை  உண்டு இல்லை என்றாக்கி விடுவார்கள். இதெல்லாம் கூட விட்டு விடலாம்.முதலாளி என் மீது வைத்த நம்பிக்கையை விட முடியுமா. விட கூடாது கடைசி வரை போராடி பார்த்து விட வேண்டும் என்ற வேகத்துடன் நான் டிரைவர் அருகே சென்று கலங்கிய கண்களுடன் சொன்ன போது அவர் "டோன்ட் 
வொர்ரி பிடிச்சிடலாம்" என்று நம்பிக்கை தந்தவர் கூடவே, "அந்த பேருந்தில் இருந்து இறங்குபவர் யாரேனும் மொட்டரோடு இறங்கி விட்டால் ஒன்றும் செய்ய முடியாது" என்ற யதார்த்தத்தையும் சொன்னார்.அந்த பேருந்துக்கும் எங்கள் பேருந்துக்கும் இடையில் நான்கு பேருந்துகள் ஒரு லாரி இதெல்லாம் இருந்தன. நான் விட்டால் கதறி அழுது விடுவேன் போல் இருந்தது. கடவுளின் மேல் கோபம் கூட வந்தது. 

இடையில் இருந்த வண்டிகளை ஓவர் டேக் செய்து பேருந்தின் டிரைவர் வேகமெடுத்து விரைவாய் சென்றார். தஞ்சாவூரில் சாந்தபிள்ளை கேட் என்று ஓரிடம் உண்டு. அங்கு சாலை இடது புறம் திரும்பும் அந்த இடத்தில் பேருந்தின் டிரைவர் வண்டியை ஒடித்து வலது புறம் சென்று முன்னே சென்று கொண்டிருந்த பேருந்தின் குறுக்கே வண்டியை நிறுத்தி  அந்த பேருந்தின் டிரைவரிடம் வண்டியை நிறுத்து என்று சைகை காட்டினார். நான் நன்றி கூட சொல்லாமல் வேகமாய் இறங்கி சென்று அந்த பேருந்தில் ஏறினேன். முதலில் மோட்டார் வைத்த இடத்தை தான் பார்த்தேன். இருந்தது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க டிரைவரை பார்த்தேன். டிரைவருக்கு என்னை பார்த்தவுடன் விஷயம் புரிந்து விட்டது. 

நான் உங்க கிட்டே சொல்லிட்டு தானே போனேன். இப்படி விட்டுட்டு வந்துட்டீங்களே என்று கோபமும் உடைந்து போன குரலிலும் நான் கேட்க  சுத்தமா நீங்க சொன்னதை மறந்துட்டேன் மன்னிச்சுடுங்க என்றார் அவர். என்னை அழைத்து வந்த பேருந்தின் டிரைவரிடம் இங்கிருந்த படி நன்றி சொன்னேன். இருக்கையில் அமர்ந்த பின் ஆசுவாசபடுத்தி கொண்டேன்.எனது சோர்வை கண்டு  டிரைவர் மீண்டும் சாரி என்றார் கெஞ்சும் பாவனையில் இதற்கு அப்புறம் நடந்த காமெடி
யை கேளுங்க 

பேருந்து கொரடாச்சேரி என்ற பேருந்து நிலையத்தில் நின்றது வண்டி 5 நிமிஷம் நிக்கும் டீ சாப்பிடுபவர்கள் சாப்பிடலாம் என்ற குரலுடன் நடத்துனர் இறங்க கூடவே வண்டியில் இருந்தவர்கள் இறங்கினார்கள். இறங்க போன டிரைவர் என்னை பார்த்து விட்டு "டீ சாப்பிடல" என்று கேட்டார். "பட்டது போதும்" என்றேன் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமலே அவர் சிரித்த படி "உங்க முகம் பார்க்காமல் நான் வண்டியை எடுக்க மாட்டேன் பயப்படாம வாங்க" என்றார். சரி என்று இறங்கி டீ சாப்பிட்டேன் என் டென்சனுக்கு அந்த நேரத்தில் டீ இதமாய் இருந்தது. நான் வண்டியை விட டிரைவரின் மேல் ஒரு கண் வைத்த படியே தான் டீ சாப்பிட்டேன் டிரைவர் அதை பார்த்து  "விட்டுட்டு போக மாட்டேன் சார் நம்புங்க" என்றார் கெஞ்சலாய். எனக்கே சிரிப்பு வந்து விட்டது 

நாகபட்டினத்தில் நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் என் அலுவலகம் தண்டி தான் 
என்றாலும் டிரைவர் எனக்காக வண்டியை நிறுத்தி எனை இறக்கி விட்டு சென்றார் 


FINAL PUNCH 

1991 ஆம் வருடம் எனக்கு சம்பளம் 600 ரூபாய் அப்போதைய மோட்டாரின் விலை 10000 ரூபாய்.மோட்டார் காணாமல் போயிருந்தால் எப்படியும் 2 வருடங்கள் நான் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க வேண்டியிருந்திருக்கும். முதலாளி என்னை நம்பி தொடர்ந்து வேலைக்கு வைத்திருப்பார் என்பது நிச்சயமில்லை. முதலில் எங்கிருந்தாவது பணம் வாங்கி கொண்டு வந்து கட்டு என்று தான் சொல்லியிருப்பார் நான் எங்கே செல்வேன் பணத்துக்கு.இந்த கஷ்டங்கள் எல்லாம் நடைபெறாமல் என் முயற்சி வெற்றியை தொட காரணம் பேருந்தை விரட்டி வந்த அந்த இன்னொரு டிரைவர் தான். அவரை சரியான நேரத்திற்கு கடவுள் தான் அனுப்பியிருக்கிறார் என்று நினைக்கிறேன். இதை இப்படி கூட எடுத்து கொள்ளலாம் என்ன தான் விடாமுயற்சியோடு போராடினாலும் கடவுளின் அருட்பார்வையும் சேரும் போது தான் வெற்றியை நம்மால் தொட முடிகிறது 

ஆர்.வி.சரவணன் 

வியாழன், ஜூன் 05, 2014

ஸ்வீட் காரம் காபிகும்பகோணம் அருள்மிகு  ஸ்ரீ சாரங்கபாணி கோவில் தேர் 

ஸ்வீட் காரம் காபிஇந்த தலைப்புல பதிவெழுதி ரொம்ப நாளாச்சு. அதுக்கு காரணம் நேரமில்ல னு எல்லாம் கதை விட மாட்டேன். இன்னும் சிறப்பா
எழுதலாமேனு தோணுச்சு .அதனாலே கொஞ்சம் கேப் விட்டேன். 
தொடர்ந்து டீ குடிக்கும் போது இல்லாத டேஸ்ட் கொஞ்ச நாள் நிறுத்திட்டு பின் சாப்பிடும் போது  டேஸ்ட்டா இருக்கும். 
அது போல் தான் இதுவும் 

இந்த தலைப்புக்கு ஒரு சிறப்பு இருக்குது. இந்த தலைப்புல நான் எழுதிய பதிவில் தான் எனது குறும் பட ஆசையை பற்றி சொல்லியிருந்தேன். அதை படித்து தான்  நண்பர் துளசிதரன் தன் குறும்படத்தில் பணியாற்ற  அழைத்தார். என்பது இங்கே கூடுதல் தகவல் 
நண்பர் எழுத்தாளர் ஜாக்கி சேகர், இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா பற்றி தன் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.நான்  பார்க்கவில்லை என்றவுடன் முதல்ல பாருங்க சரவணன் கேரக்டரைசேஷன்   நல்லாருக்கும் என்று சொல்லியிருந்தார்.  நாளைக்கு டெஸ்ட் இருக்கு படிக்கனும்னால் ஒத்தி போட்டுடலாம். படம் பார்க்காமல் ஒத்தி போடுவதாவது நெவர் என்று முதல் வேலையாய் (அன்றாட வேலைகளை முடித்த பின் தான்) படம் பார்த்தேன்.பசுபதி காமெடி ஆக்டிங் ரொம்ப பிடிச்சிருந்தது. விஜய் சேதுபதி அந்த கேரக்டர்ல இறங்கி அடிச்சிருக்கார் சீ நடிச்சிருக்கார்  உடல் மொழி அவ்வளவு சூப்பரா இருக்கு.  நாயகி நந்திதா எப்போதும் முறைப்புடனும் சுவாதி லொட லொட என்று அஸ்வினை (இன்னொரு ஹீரோ) சந்தேகம் கொண்டு காதல் கொள்பவராகவும் வருகிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் கவனம் ஈர்க்கிறார். இருவேறு கதைகள் வெவ்வேறு திசையிலிருந்து புறப்பட்டு ஒன்றாய் இணையும் திரைக்கதை. இடைவேளைக்கு முன் பிளாஷ் பேக்கிலேயே கதை நகர்த்தபடுகிறது. ஒரே நாளில் நடக்கும் கதையில் அந்த கொலை தான் மைய புள்ளி எனும்  போது  அதை இன்னும் அழுத்தமாக வைத்திருக்கலாம். ரத்த தானம் மற்றும் குடி கூடாது என்ற இரு நல்ல விஷயங்களை முன் வைக்கிறது படம்.பாடல்கள் மூன்றுமே செமையா இருக்கு. எம்.எஸ் பாஸ்கரிடம் மாட்டி கொள்ளாமல் போனிலேயே அவரது ஊழியர்கள் பேசுவது போலீஸ் ஸ்டேசன் காட்சிகள் எனக்கு பிடித்திருந்தது (படம் பார்த்ததில் ஐ யாம்  ஹாப்பி இயக்குனர் கோகுல்) 

 எனை ஈர்த்த இன்னொரு படம் 
தெகிடி.  சஸ்பென்ஸ் த்ரில்லர் (சில இடங்களை தவிர மற்ற இடங்களில்) நன்றாக வேலை செய்திருக்கிறது. ஹீரோ அசோக் செல்வன்  த்ரில்லர் படத்தில் துருதுருப்பு இல்லாமல் இருக்கிறார். ஹீரோயின் ஜனனி சினிமாஸ்கோப்
கண்களால் ஈர்க்கிறார்.இதில் வரும் ஒரு பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்த பாடல் காட்சியில் ஹீரோயின் ஓவியம் வரைய அவர் வரைந்த ஓவியம் போலவே  அதே போஸில் ஹீரோ வந்து அமர்வது  கவிதை  காட்சி 


எப்போதுமே என்னோட சாய்ஸ் இளையராஜா பாட்டு தான். இது ஒரு ட்ராக்கில் போய்கிட்டு இருந்தாலும் சில மாதங்களா எனக்கு புது பாடல்கள் நிறைய பிடிக்க ஆரம்பிச்சிருக்கு. இமான் பட்டைய கிளப்பிய பாடல்களில் ஜில்லாவில் கண்டாங்கியும் கூடை மேல கூடை வச்சி கூடலூறு போற புள்ளே என் விருப்ப ரகம் (ராகம்)  ஒரு முறை குமுதம் அரசுவிடம் ஒருவர் எனக்கு புது பாட்டு எதுவும் பிடிக்க மாட்டேங்குது பழைய பாட்டு தான் பிடிக்கிறது ஏன் என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அரசு உங்களுக்கு வயதாகி கொண்டிருக்கிறது என்று அர்த்தம் என்று பதிலளித்து இருந்தார். இதை ஏன் இங்கே சொல்கிறேன் மனசு எப்போதும் இளமையாக வைத்து கொண்டால் புதிய பாடல்களும் பிடித்து விட கூடிய வாய்ப்பிருக்கிறது 


இந்த முறை புத்தக கண்காட்சியில் வாங்கிய சுஜாதா புத்தகங்கள் அனைத்தும் படித்து விட்டேன் இதில் கொலையுதிர்காலம் எனக்கு மிக முக்கியமானது. இது தொடராக குமுதத்தில் வந்த போது நான் படித்த சுஜாதாவின் முதல் கதை இது தான். அப்போது படித்து புரிந்து கொண்டதற்கும் இப்போது புரிந்து கொண்டதற்கும் நிறைய வித்தியாசங்கள். அந்த தொடரில் ஜெயராஜ் வரைந்த ஓவியங்கள் சில என் மன கண்ணில் இன்னும் இருக்கிறது இதில் கணேஷ் ரொமாண்டிக் மூடுக்கு செல்வதும்  வசந்த்  காதில் புகை வருவதும் செம ரகளையா இருக்கும்  சுஜாதாவின் காலம் பொற்காலம் தான்  வேறென்ன சொல்ல 


திரு.மு.க ஸ்டாலின் மற்றும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் 
திரு.அன்பழகன் அவர்களுடன் பி.ஜே.பாபு 


மே 2 அன்று, கும்பகோணம் காந்தி பார்க் அருகே நான்கு  ரோடு இணையும் இடத்தில் ஒரே டிராபிக் ஜாம் ஆகியிருக்கிறது.கும்பகோணம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் திரு. அன்பழகன் அவர்கள் காரில் 
அவ் வழியே வந்திருக்கிறார். டிராபிக் ஜாம் ஆனதை கண்டு  உடனே இறங்கி அரை  மணி நேரமாக  மக்களோடு மக்களாக நின்று  போக்குவரத்தை ஒழுங்கு படுத்தியிருக்கிறார் .இந்த வீடியோ வை எனது முக நூல் நண்பர் பி.ஜே.பாபு கும்பகோணம்   வெளியிட்டிருந்தார். ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ நின்று  போக்குவரத்தை சரி செய்ய வேண்டுமா என்ற கேள்வி வருமானால் அதற்கு பதில் இப்படி சொல்லலாம்.பொது மக்களில் நாம் எத்தனை பேர் வண்டியில் அமர்ந்து கொண்டு ஹாரன் அடித்து கொண்டிராமல் இறங்கி வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்திருக்கிறோம் சொல்லுங்கள். அவர் போக்குவரத்தை நின்று  சரி செய்திருப்பது கண்டிப்பாக  பாராட்ட வேண்டிய ஒன்று.  நண்பர் பாபுவிடம் இந்த வீடியோ எடுத்தது யார் என்று கேட்ட போது  வெளி நாட்டில் வேலை செய்யும் இளைஞர் ஒருவர் இதை எடுத்தார் என்றும்  (அவருக்கு ஊர் கும்பகோணத்திற்கு அருகில் ) அவரிடமிருந்து வாங்கி இதை முகநூலில் வெளியிட்டதாகவும் சொன்னார். நல்லதை  நாட்டில் உள்ள எந்த கட்சி செய்தாலும் பாராட்ட வேண்டும் என்ற உணர்வுடனே தான்  
இங்கே பகிர்ந்திருக்கிறேன். (கவனியுங்கள் நான் எந்த கட்சி அபிமானியும் கிடையாது ) 

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் வீடியோவேல் முருகவேல் என்ற முக நூல் நண்பர் எனது ஊரான கும்பகோணத்தை சேர்ந்தவர். சரி கும்பகோணத்தில் இருக்கிறாரே பார்த்து ஹலோ சொல்லலாம் என்று சந்தித்தேன். என் பதிவுகள் பற்றி சொன்னார். எனக்கு பேனா ப்ரெசென்ட் பண்ணினார். (தயங்கினாலும் )என் எழுத்துக்கு கிடைத்த ஒரு அவார்ட் போலவே இதை நினைத்து கொள்கிறேன். அடுத்த வாரம்  கும்பகோணம் பரணிகா தியேட்டரில் கோச்சடையான் படம் பார்க்க வந்திருந்தார் இருவரும் சேர்ந்தே படத்திற்கு சென்றோம். (முதல் சந்திப்பு நாங்கள் ஏற்பாடு செய்து கொண்டது. அடுத்த சந்திப்பு எங்களின்  ரசிப்பு தன்மை ஏற்பாடு செய்து கொடுத்தது) ஹோட்டல் ல நெருக்கியடிச்சு  டேபிள் போடாதீங்க. (அதுல உனக்கு என்ன பிரச்சனை னு கேட்கிறீர்களா.)சுவற்றின் ஓரம் உட்கார்ந்து சாப்பிட்ட பின் நாம் எழுந்து வெளியில் வர வேண்டுமென்றால் பக்கத்தில் உள்ள  ஆளை எழுப்பி விட்டு தான் வெளியில்  வர வேண்டியுள்ளது. சாப்பிடுபவரை எழுப்புவது பாவம் அல்லவா ஆகவே .......(மீண்டும் முதல் வரியை படியுங்கள்)எனது முதல் நாவலான இளமை எழுதும் கவிதை நீ .....வெளி வரும் வரை என் உறவினர்கள் முக நூல் இணைய தளம் படிக்காத நண்பர்கள்  ஏதோ எழுதறான் என்று ஆர்வமில்லாமல் தான் இருந்தார்கள். நாவல் வெளியாகி படித்த பின் அவர்களின், பாராட்டும்   அடுத்து என்ன எழுத போறே என்ற கேள்வியும்  எழுத்தை மட்டும் விட்டுடாதே என்ற அறிவுரையும் சேர்ந்து 
என்னை திக்குமுக்காட வைத்து அடுத்த தொடர் ஆரம்பிக்க வைத்திருக்கிறது "காவல் குதிரைகள்" என்ற இந்த திரைக்கதை தொடர் சமுதாய அநீதியை எதிர்த்து குரல் உயர்த்துகிறது என்றாலும் காவல் துறைக்கு மரியாதை செய்யும் தொடராகவும்  இருக்கும்.  சட்டம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கிறது. விரைவில் ஆரம்பமாகும் இந்த தொடருக்கு உங்களின் (ஊக்கம்) பங்களிப்பும் அவசியம்.  நண்பர்களே

FINAL PUNCH


நாம் கஷ்டப்படும் போது  எதாவது உதவி கேட்டுட போறான் என்று நினைத்து தள்ளி நிற்கும் உலகம் தான், நாம் நன்றாக இருக்கும் போது எதுனா உதவி செய்தால் தான் என்ன  குறைஞ்சா போயிடுவான் என்று நினைப்புடன் அருகில் வர முயற்சிக்கிறது 

ஆர்.வி.சரவணன்