புதன், மே 28, 2014

கோச்சடையான் ஒரு பார்வை




கோச்சடையான் ஒரு பார்வை 

கோச்சடையான் அனிமேசன்  படமாக  உருவாகிறது என்ற போது ரஜினி ரசிகனுக்கு ஒரு சுவாரசியம் வந்தது. அதுவும் தலைவர்  நலமான பின் வரும் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக ஆரம்பித்தது. இருந்தும் படம் வெளி 
வர  தாமதமாகவே டென்சனில் நகம் கடிக்க ஆரம்பித்தான். ஆடியோ ரீலீஸ் டென்சனை குறைத்தாலும், அடுத்து வந்த ட்ரைலர்  அவ்வளவாக 
நம்பிக்கை ஊட்டவில்லை. அதற்காக  அவன் கலங்கவில்லை இருந்தும் 
கேலியும் கிண்டலும்  அவனை சுற்றலில் விட்டிருந்தன.மௌனமாக அனைத்தையும் கிரகித்து கொண்டு மிகுந்த பொறுமையுடன் 
காத்திருந்தான். 

இப் படத்தில்  சூப்பர் ஸ்டார் சொல்லும், "தண்ணீரே ஆனாலும் அது 
பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால் சல்லடையில் அள்ளலாம்" 
என்ற வார்த்தை அவனுக்கு மெய்யானது. கோச்சடையான் மூலம் ரஜினி ரசிகன் காத்திருந்ததற்கு பலனாய், உற்சாகத்தை  வட்டியும் முதலுமாக பெற்று கொண்டு விட்டான் 

ஒரு படத்துக்கு மிக பெரிய எதிரியே அதிகமாக அதன் மேல் கொள்ளும் எதிர்பார்ப்பு  தான். அந்த படம் சரியாக வந்திருந்தாலும் கூட, அதையும் 

தாண்டி நிற்கும் எதிர்பார்ப்பு  படத்தை டேமேஜ் செய்து விடும் வாய்ப்பிருக்கிறது. இது அதிக அளவு விளம்பரம் செய்யப்படும் படங்களுக்கு மட்டும் இல்லாமல் பெரிய நடிகர், நடிகை, இயக்குனர் என்ற புதிய 
பிரபலமான கூட்டணி சேரும் போது கூட எதிர்பார்ப்பு எகிறி விடும் வாய்ப்பிருக்கிறது. சூப்பர் ஸ்டாரை  பொறுத்தவரை அவர் 
நின்றால் செய்தி நடந்தால் செய்தி  (அவர் எது செய்தாலும் ஆதரிப்போரும் உண்டு எதிர்ப்போரும் உண்டு) என்ற நிலையில் அவரது படங்களுக்கு எப்போதும் உச்சகட்ட  எதிர்பார்ப்பு உண்டு.அதில் கோச்சடையான் இன்னும் ஒரு படி மேலே போய் ரஜினி ரசிகனை தலை கிறுகிறுக்க வைத்து விட்டது 

கிண்டலும் கேலியும் டிராபிக் ஜாம் போல் ஆகி விட்டாலும், சீறி பாயும் குதிரையில் எங்கே போகுதோ வானம் அங்கே போகிறோம் நாமும் என்றவாறு எதிர்மறை விமர்சனங்களின் மேல் ராஜ பாட்டை போட்டு கொண்டு தலைவர் வருகையில்,
 எதிர்மறை விமர்சனங்கள் படம் வெளி வருவதில் தாமதம் இதெல்லாம் படத்தை எதிர்பார்ப்பில்லாமல் செய்து விட்டிருந்தாலும்
அந்த மைனஸ் இங்கே பிளஸ் ஆகி போனது. விளைவு தியேட்டர்களில் கோச்சடையான் ஆட்சி.




 டைட்டிலை 3Dயில் பார்க்க நன்றாக இருக்கிறது.  படைகள் பின் தொடர பாய்ந்து வரும் குதிரையின் முகம் கீழே இறங்க அறிமுகமாகும் 
ரஜினி எங்கே போகுதோ வானம் அங்கே போகிறோம் 
நாமும் என்று பாடிய படி அறிமுகமாகிறார். அனிமேசன் என்பதால் கேரக்டர்களுக்குள் ஒன்ற கொஞ்ச நேரம் ஆகிறது. தளபதியாய் களிங்கபுரி நாட்டின் பதவி ஏற்ற ராணா தந்திரமாக  கோட்டைபட்டினம் வந்து சேர்ந்து சரத்குமாருடன் நண்பா என்று கை கோர்ப்பதும் கூடவே இளவரசி மீதும் 
காதல் பார்வை கோர்ப்பதும் ,என்று ராணா செய்யும் அதிரடிகள் ஏன் 
எதற்காக என்ற கேள்விகளை எழுப்புகிறது. மன்னனை கொல்ல 
முயற்சிக்கும் போது  சிறையில் அடைபடுகிறான்.இடைவேளைக்கு 
முன் எழுந்த  கேள்விகளுக்கெல்லாம் பின் பாதியில்
சுவாரஸ்யமான திரைக்கதையில்  பதில் தருகிறார்கள்.
கோச்சடையான் வரும் பிளாஷ் பேக் காட்சிகள் செம விறுவிறுப்பு 


கோச்சடையானாக வரும் ரஜினி முகத்தில் தோன்றும்
அந்த தெய்வீகமான அமைதி  சண்டையில் வெளிப்படும் வீரம், ராணா ரஜினியிடம் வெளிப்படும் குறும்பு அதிரடியாய்  கத்தியை உருவும் லாவகம் என்று கேரக்டர் வடிவமைப்புடன் முக வடிவமைப்பும்  
அசத்தலாக  இருக்கிறது.ரஜினியின் அந்த காந்த குரல் இது அனிமேசன் தானே என்ற எண்ணத்தை ஓரமாக ஒதுங்கி போ என்று  சொல்ல 
வைத்து விட்டு தன்னுடன் ஒன்றி  விட  சொல்கிறது  

இதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால்,கோச்சடையானுக்கு தண்டனை நிறைவேற்ற படும் போது மகன் வந்து அப்பா நீங்க உங்க கடமையை முடிச்சுட்டீங்களா என்று கேட்க, இல்லப்பா என்று சொன்னவுடன் நான் நிறைவேத்தறேன் அப்பா என்று கூறி அவன் 
அப்பாவை முத்தமிடும் போது பார்ப்பவர்கள் கண்கள் கலங்கி போகும்  
அளவு படத்துடன் ஒன்ற முடிகிறது 

வசனங்கள் அவருக்கென்று தனியாக  அமைந்து விடுவது ஆச்சரியம் தான். அவர் பேசும் ஒவ்வௌரு வசனமும் வாள் வீச்சு போல் தான்"வேஷம் என்று வந்து விட்டால் பகலென்ன இரவென்ன,  நாடகத்தை நடத்தியது நீங்கள்  முடித்து வைக்க போவது நான்" "வாய்ப்புகள் தானே அமையாது.நாம் தான் உருவாக்கி கொள்ள வேண்டும் " என்று தொடரும்  வசனங்கள்
பார்வையாளருக்கு இணையாக கை தட்டல்களையும் தியேட்டரில் முண்டியடிக்க வைக்கிறது.  

அடுத்து இதே போல் முக வடிவமைப்பில் ஈர்ப்பவர்கள்  நாசர்,சோபனா, மற்றும் ஆதி.அதிலும் நாசர் முகபாவத்தில் கொண்டு வரபட்டிருக்கும் நயவஞ்சகம் மற்றும் வெறுப்பு பாராட்டதக்கது.
திரு .நாகேஷ் அவர்களை உடல்மொழி மற்றும் குரலில் உயிர்ப்பித்து மரியாதை செய்திருக்கிறார்கள். எப்படிப்பட்ட கலைஞன் அவர் என்று 
மனது மீண்டும் சிலாகிக்கிறது.

ஜாக்கிசெராப் சரத்குமார் ருக்மணி என்ற கேரக்டர்களின் முக அமைப்பை 

கூட விட்டு விடலாம்.ஆனால் தீபிகா படத்தின் ஹீரோயின் எனும் போது ரஜினிக்கு நிகராக அவரையும் அனிமேசனில் கொண்டு வந்திருக்க வேண்டும். இதனால் தீபிகா ரஜினி மேல் கொள்ளும் காதலில் நம்மால் ஒன்ற முடியவில்லை. 

இருவருக்கும் வரும்  டூயட் பாடல் காட்சியும்  நடனமும் வெகு அழகு.
இடைவேளைக்கு பின் வரும் அந்த சோக பாடல்  தேவை தானா. ஏனெனில் (பாடல் காட்சியும் தீபிகா நடனமும் நன்றாக இருப்பினும்)
பரபரப்பான சாலையில் இடர்படும் ஸ்பீட் ப்ரேகர் போல் ஆகி விடுகிறது 

ரஜினி தீபிகா மோதும் சண்டை காட்சி,  கப்பல் சண்டை, கிளைமாக்ஸ் போர்க்கள காட்சிகள்,ருத்ர தண்டவ நடனம் இதெல்லாம் அனிமேசனில் சிறப்பு.

ராணா  அதிரடியானவர் எனும் போது கோட்டை பட்டினம் வந்தவுடன் மன்னரை போட்டு தள்ள வேண்டியது தானே.  மறைந்திருந்து தாக்க வேண்டிய அவசியம் என்ன. அண்ணன் சேனா வை பற்றி ஒரு முறை விசாரிப்பதோடு விட்டு விடுகிறார் ஏன் அண்ணனை தேட முயற்சி மேற் கொள்ளவில்லை. தேடி கொண்டிருக்கிறார் என்பதற்கு ஒரு காட்சி யாவது  வைத்திருக்கலாமே. கேரக்டர்களின் நடை மற்றும் கண்களில் தேவையான உயிர்ப்பு இல்லாதது இதெல்லாம் இன்னும் கவனம் எடுத்து மெனக்கெட்டிருக்க வேண்டிய அம்சங்கள்.

கே.எஸ்.ரவிகுமாரின் திரைக்கதை வசனம் என்ற மேடையில்  
ஏ .ஆர்.ரகுமான் என்ற குடையின் கீழ் சூப்பர் ஸ்டாரை (தான் ஒரு 
ரசிகையாக இருந்து) கம்பீரமாய் உலவ விட்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் செய்திருக்கும் இந்த மோஷன் கேப்சரிங் அனிமேஷன் 
முயற்சிக்கு பாராட்டுக்கள் 





நான் 25 வருடங்களுக்கு முன்  கும்பகோணம் பரணிகா தியேட்டரில் ராஜாதிராஜா படத்தை ரீலீஸ் ஆனஅன்று பார்த்தேன். அதற்கு பின் 
இத்தனை வருடங்களாக மற்ற  படங்கள் அனைத்தையும்  சென்னையில் 
தான் பார்த்திருக்கிறேன். இப்போது கோச்சடையான் அங்கே தான் 2D யில் பார்த்தேன்.அடுத்து 3D  சத்யம் தியேட்டரில் பார்த்தேன். இரு முறை பார்க்கும் போதும் படம் முடிந்த பின்னும், படத்தின் மேக்கிங்  பற்றி காட்டும் போது மக்கள் அமர்ந்து அதை முழுக்க பார்த்து வீட்டு தான் நகர்கிறார்கள் 

FINAL PUNCH 

மற்ற படங்களோடு ஒப்பிடுவது எல்லாம் அனாவசியம். 
படம் முழுக்க மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவான ஒரு 
இந்திய படம் (இனி வர போகும் அனிமேசன் படங்களுக்கு ஒரு ஆரம்பத்தை தந்திருக்கிறது ) என்ற வகையில் இந்த கோச்சடையான் திரைப்படம் 
அவசியமான (முக்கியமான) ஒன்று 

ஆர்.வி.சரவணன் 





செவ்வாய், மே 20, 2014

கவுண்டமணி செந்தில் ஜாலி மீட்டிங்




கவுண்டமணி செந்தில் ஜாலி மீட்டிங் 

கவுண்டமணி செந்தில் இருவரும் சந்தித்து கொண்டால் எப்படி பேசுவார்கள் என்பதை அவங்க ஸ்டைல்ல (அவர்கள் படங்களில் பேசிய வார்த்தைகளை வச்சே தின்க் பண்ணி பார்த்தேன். ஒரு ஜாலி கட்டுரை ரெடியாகிடுச்சு 

கவுண்டமணி கம்ப்யூட்டரில் அமர்ந்து முக நூல் பார்வையிட்டு கொண்டிருக்கிறார். உள்ளே நுழைகிறார் செந்தில்

"அண்ணே வணக்கம்ணே"

கவுண்டமணி திரும்பாமலே கை கூப்பி வணக்கம் வைத்து விட்டு 
பின் திரும்பி செந்திலை பார்த்தவுடன் "அடச்சீ நீ தானா, உன்னை
கும்பிட்ட கையை பன்னீர் ஊற்றி கழுவணும் " என்கிறார்  நக்கலாய்

"போங்கண்ணே உங்களுக்கு எப்பவும் குசும்பு தான்"

"அதுக்கு ஏன்டா முகத்தை தார் பூசின மாதிரி வச்சிட்டு சொல்றே உட்காரு" என்றவர், 

செந்தில் கையில் இருக்கும் இலையை பார்த்து விட்டு "என்னடா வீட்டுக்கு இலை வாங்கிட்டு போறியா" என்கிறார் 

"இல்லண்ணே போற இடத்தில எங்கியாவது சாப்பாடு போட்டா 
சாப்பிடலாம் னு இலையோடயே வந்துட்டேன். இலை செலவையாவது அவங்களுக்கு மிச்சம் வைக்கணுமில்ல"

"ஆமாமாம். நீ தான் இலையை தவிர வேற எதையும் மிச்சம் வைக்க மாட்டியே. ஏண்டா மட்கார்ட்  மண்டையா. அவ்வளவு செலவு பண்ணி சாப்பாடு போடறவன் இலைக்கு செலவு பண்ண மாட்டானா "

"சரி சரி டென்சன் ஆகாதீங்க. டிவி ல என்ன பார்த்துகிட்டு இருக்கீங்க"

"டேய் இது டிவி இல்லடா. இங்க்லீஷ் ல கம்ப்யூட்டர் னு சொல்வாங்க தமிழ்ல கணினின்னு சொல்வாங்க"

"என் மூளைக்கே இப்ப குழப்பம்  வந்துருச்சிண்ணே"

"பரவாயில்லியே.உன் மூளைக்கு கூட அப்பப்ப வேலை கொடுக்கறே போலிருக்கு"

" சும்மாருங்க.எப்ப பாரு காமெடி பண்ணிட்டு. ஏழாவது பாஸ்
 பண்ண எனக்கு தெரியாதது பத்தாவது பெயிலான உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது னு நானே யோசிச்சிட்டிருக்கேன் "

கவுண்டமணி முறைத்து "பிச்சிபுடுவேன் பிச்சு. நீ இன்னிக்கு 
என் கிட்டே அடி வாங்காம கிளம்ப மாட்டியா"

" ஒரு படத்துல கம்ப்யூட்டர்ல வேலை பார்க்கிறவனை பார்த்து என்னடா டிவி பார்க்கிறேனு நீங்க தான் அண்ணே சொன்னீங்க."

"டேய் அது அப்படா. இப்ப நான் ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர் லெவல்ல கலக்கறேன் தெரியுமா"

"எப்படி கண்டதை சாப்பிட்டா வயித்தை கலக்குமே அப்படியா"

கவுண்டமணி "டேய் நீ முதல்ல கிளம்பு. பி.பி னா என்னனு 
தெரியாதவனுக்கு கூட  அதை வர வச்சிடுவே "என்கிறார்

செந்தில் " ஐ அம் வெரி சோரி ண்ணே" என்று தன் வாயை மூடி கொள்கிறார்


மணி மீண்டும் படிக்க ஆரம்பிக்க

"என்னண்ணே இப்படி சுவாரஸ்யமா படிக்கறீங்க"

"அது ஒண்ணுல்லடா.முக நூல்ல நிறைய பேர் எழுதறாங்க. படிக்க 
செம இண்டரெஸ்டா இருக்கு. நேரம் போறதே தெரியல"

"அப்படி என்னத்தை பெரிசா எழுதி கிழிச்சிட்டாங்க "

"நீ முதல்ல கையில் வச்சிருக்கிற இலையை கிழிச்சிடாதே"

"சரி நாலஞ்சு எடுத்து விடுங்கண்ணே"

"எடுத்து விடறதுக்கு இதென்ன பாம்பா"

"எனக்கும் கொஞ்சம் பொழுது போகணும்ல"

"நீ சும்மாவே உட்கார்ந்திருந்தால் கூட பொழுது போகும்டா. பொழுது வந்து உன் கிட்டே சொல்லிச்சா. நீ எதுனா படி அப்ப தான் நான் போவேன் னு "

"இந்த கவுன்ட்டர் கொடுக்கிறது உங்க கிட்டே இன்னிக்கும் அப்படியே  இருக்குண்ணே "

"சரி சரி கண்ணு வைக்காதே" 

"அண்ணே என் கண் பட்டால் நல்லது னு எங்க ஊருல சொல்வாங்க"

"எங்க கொஞ்சம் கண்ணை காட்டு" பார்த்து விட்டு 

"யப்பா ஒரு வருஷத்துக்கு தாங்கும் " என்றவர் மீண்டும் கம்ப்யூட்டர் பார்க்க ஆரம்பிக்கிறார் ஒரு ஸ்டேடஸ்  படித்து விட்டு அவர் சிரிக்க செந்திலும் சேர்ந்து சிரிக்கிறார்


"ஏண்டா நான் ஜோக் படிச்சேன் சிரிச்சேன். நீ என்னத்துக்குடா சிரிச்சே"



"நீங்க படிச்சிட்டு சிரிச்சீங்க. நான் படிக்காமையே சிரிச்சிட்டேன்.புரியலையா படிச்சும் அறிவை வளர்க்கலாம் படிக்காமையும் வளர்க்கலாம்"






"எப்படிடா உனக்கு இப்படிலாம் பேச வருது" என்று பரிதாபமாய்  கேட்கிறார்

"அதுவா வருதுண்ணே"

"என்னை டென்சன் பண்ணாதே. நானே டென்சன்ல இருக்கேன்" 

"என்ன டென்சன் சொல்லுங்கண்ணே" 

"ம்.ஒரு பொண்ணு குட் மார்னிங் னு ஒரு வரில ஸ்டேடஸ் போட்டிருக்கு அதுக்கு நூறு லைக் விழுந்திருக்கு " கதிரவன் தன் கிரணங்களால் தட்டி எழுப்பும் வரை தூங்காமல் முடிந்தால் சூரியனை வரவேற்க தயாராய் இரு. காலை வணக்கம்" னு ஒரு பையன் ஸ்டேடஸ் போட்டிருக்கான் "

"அதுக்கு ஒரு ஐநூறு லைக் விழுந்திருக்குமே"

" க்கும்.ஒருத்தர் கூட லைக் பண்ணலடா. முக நூல்க்கு வந்த 
 சோதனையை பார்த்தியா" 

"யாரோ எழுதினதுக்கு இவ்வளவு பீல் பண்றீங்களே. உங்க தம்பி நான் உங்க கிட்டே ஒரு கேள்வி கேட்டேன்.  நீங்க இன்னும் பதில் சொல்லல. இவ்வளவு ஏன் ஒரு பீல் கூட பண்ணல. இது நியாயமாண்ணே " என்று அழுகைக்கு தயாராகிறார் 

"இதுக்கு ஏண்டா தரையில விழுந்து புரள்ற மாதிரி அழுகறே" 

"ரொம்ப முக்கியமான கேள்வி அண்ணே அது.
  தமிழ்நாடே ரசிச்சு சிரிச்ச கேள்வி அது"

 கவுண்டமணி தலையில் கைகளை வைத்து சொரிந்து கொண்டே

 "எனக்கு ஒரே குழப்பமா இருக்குடா. அப்படி என்னத்த  நீ கேட்டு நான் 
பதில் சொல்லாமே விட்டேன் "

"கார் வச்சிருந்த சொப்பன சுந்தரியை இப்ப யாரு வச்சிருக்காங்க னு கேட்டேனே இது வரைக்கும் சொன்னீங்களா"

கவுண்டமணி எழுகிறார். அவர் முகத்தில் தெரிந்த முறைப்பை
 பார்த்து செந்தில் கிளம்ப முற்படுகிறார் 

" ஒன் மினிட் ப்ளீஸ்"  என்கிறார் கவுண்டமணி அமைதியாய் 

 செந்தில்  பதற்றதுடன் நிற்க 

"நீ கூட என்னோட கேள்வி ஒன்றுக்கு  இன்னும் பதில் சொல்லாம 
பெண்டிங்  வச்சிருக்கே மேன் "

"அண்ணே எங்க ஊருல என்னை அறிவு கொழுந்துனு சொல்வாங்க.
எனக்கு எதையும் மிச்சம் வச்சு பழக்கம் கிடையாது"

"எங்க இந்த கேள்வி ஞாபகம் இருக்கா பாரு"

"என்னது சீக்கிரம் சொல்லுங்க"




"ஒரு பழம் இங்கிருக்கு அந்த இன்னொரு  பழம் எங்க இருக்கு? "

"அதாண்ணே இது"  என்று செந்தில் சொல்லி விட்டு அவசரமாய் 
 வெளியில் பாய்கிறார் 

"இதோ வரேண்டா"  என்று கவுண்டமணியும்  கூடவே விரைகிறார் 

ஆர்.வி.சரவணன்



FINAL PUNCH 

இந்த ஜாலி கட்டுரை நான் ஆறு மாதங்களுக்கு முன் ஒரு பத்திரிகைக்கு அனுப்பியிருந்தேன். இது வரை ஒன்றும் பதிலில்லை.எனவே நமது 
தளத்தில் வெளியிட்டு விட்டேன்.உங்களின் விருப்பத்தை பொறுத்து கவுண்டமணி செந்தில் தங்கள் சந்திப்பை தொடர்வார்கள்  


புதன், மே 14, 2014

கேமராவுக்கு முன்னும் பின்னும்-4




கேமராவுக்கு முன்னும் பின்னும்-4

எனது பிறந்த நாளுக்கு முகநூலிலும்,இன் பாக்ஸ் சிலும் அலைபேசியிலும் 
வாழ்த்து தெரிவித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றி 

இந்த தலைப்புக்கு உரிய நிகழ்வுகள் முடிந்து விட்டாலும் சுற்றுலா என்பதும் ஒரு படைப்பாளிக்கு லோகேசன் பார்ப்பது போல் தானே. ஆகவே அந்த கண்ணோட்டத்தில் எடுத்து கொள்வோம் இந்த பகுதியை.

அன்று காலை 8 மணிக்கு வருவதாக சொல்லியிருந்தார் துளசிதரன். அதே போல் ஷார்ப்பாக 8 மணிக்கு கிளம்பலாமா  என்று வந்து விட்டார். . அவரது குடும்பமும் சுற்றுலாவுக்கு வருகிறார்கள் என்ற போது கொஞ்சம் தயக்கம் வந்தது. சார் உங்க பாமிலி கூட நீங்க போறப்ப எங்களால் இடைஞ்சல் 
தானே என்றேன். அதற்கு அவர் சிரித்த படியே அதெல்லாம் ஒன்றும் இடைஞ்சலில்லை வாருங்கள் என்று சொல்லி விட்டார். கீதா ரங்கன் மேடம் மற்றும் குடும்பத்தை நேராக ஸ்பாட்டுக்கு வர சொல்லி விட்டு எங்களை அழைத்து செல்ல வந்திருந்தார். 

அங்கிருந்து ஒரு மணி நேர பிரயாணத்தில் முக்காலி என்ற இடத்துக்கு சென்றடைந்தோம். வழியில் இரு மருங்கிலும் தென்பட்ட பசுமை சூழ்ந்த மரங்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.ஓரிடத்தில் நின்று போட்டோ எடுக்க விரும்பினேன். வண்டியை நிறுத்தினார். அங்கிருந்த ஒரு கடையின் மதில் மேல் ஏறி நின்று நான் எடுத்த போட்டோ பாருங்கள்.




நாங்கள் அனைவரும் முக்காலிக்கு வந்தவுடன் அங்கே வண்டியை 
அரசாங்க தகவல் மைய அலுவலகம் உள்ள காம்பௌண்டில் நிறுத்தி 
விட்டு அங்கிருந்து அரசாங்கம்  தந்த ஜீப்புகளில் கிளம்பினோம். 




ஒரு ஜீப்புக்கு 5 பேர் வீதம் ரெண்டு ஜீப் எடுத்து கொண்டு கிளம்பினோம் 
(ஒரு நபருக்கு 300 ரூபாய் ) அங்கிருந்து ஒன்றரை மணி நேர பயணம் 
அங்கே இரண்டு மணி நேரம் தங்கி விட்டு மீண்டும் ஒன்றரை மணி நேர பயணத்தில் வந்து விட வேண்டும். மொத்தம் 5 மணி நேர பயணத்திற்கு மட்டுமே அனுமதி. 




காட்டிலாகா அதிகாரிகள் டிக்கெட் செக் செய்து கேட் திறக்க இயற்கை அன்னை வீற்றிருக்கும் அந்த SILENT VALLY க்குள் பயணித்தோம். எங்கும் பசுமையை வாரி இறைத்திருக்கும் அழகு கண்ணுக்கு தான் எவ்வளவு குளிர்ச்சி இயற்கை அன்னையின் மடியில் தவழ்வது போன்ற பிரமை.

 ஜீப் செல்கின்ற பாதையே  ஒரு அழகு. ஜன நடமாட்டம் ஏதுமில்லாமல் எங்கும் அமைதி சூழ்ந்திருக்க அதை எங்களின் ஜீப் சத்தம் கலைத்து போட முயற்சிக்க அதையும் மீறி அந்த இயற்கையின் அமைதி அரசாட்சி செய்து கொண்டிருந்தது.ஆங்காங்கே பறவைகளின் குரல்கள் மட்டுமே 
விலங்குகளின் நடமாட்டம்  ஏதும் எங்கள் பாதையில் இல்லை என்றாலும் அவை எங்கோ உலவி கொண்டு இருக்கிறது என்பதை  அந்த அமைதி 
எங்கள் காதுகளுக்குள் ரகசியம் சொல்வது போலவே இருந்தது. 



ராய செல்லப்பா சார் "சிங்கம் நம் பாதையில் குறுக்கிட்டால் நம் நிலை என்ன" என்று ஹாஸ்யத்துடன் கேட்க,  சிங்கம் கண்ணுல நாம மாட்டினால் நாம  அதுக்கு லஞ்ச் ஆகிடுவோம்.இல்லேன்னா நாம எடுத்துட்டு போற லஞ்ச் வெஸ்ட் ஆகாமே சாப்பிடுவோம் நான் பதிலளித்தேன்.மலை உச்சிக்கு சென்று ஜீப்பை நிறுத்தினார்கள்.  அங்கிருந்த டவரில் ஏறி எங்கும் சூழ்ந்திருந்த மலைகளின் அணிவகுப்பை பார்த்தோம். 



மனித வாழ்க்கையில் நாம் என்னென்னமோ கண்டு பிடித்திருந்தாலும் இயற்கை எனும் பிரம்மாண்டத்தின் முன் அதெல்லாம் சாதாரணம் தான் என்பதே அந்த பிரம்மாண்டம்  நமக்கு சொல்லும் செய்தி 



பின் காட்டிலாகா அலுவலகம் முன் வளர்க்கப்படும் பூ தொட்டிகள் பார்த்தவுடன் போட்டோ எடுத்தேன். அதிகாரி என்னருகில் வந்தார். நான் பறிக்க தானே கூடாது போட்டோ எடுக்க்கலாம்லே என்றேன் அனுமதி என்பது போல் அவர் தலையாட்டினார். அவர் என்னருகில் வந்தது நான் ரசித்து எடுப்பதை வேடிக்கை பார்ப்பதற்கு என்று புரிந்தது. 




அங்கிருந்து பாதை இறங்க, அங்கே  சாப்பிடுவதற்கு என்று ஒரு தனி ஷெட் போல் கட்டபட்டிருந்தது. அங்கே துளசிதரன் வீட்டிலிருந்து  கொண்டு வந்த 
சாப்பாடு சாப்பிட்டோம். பிளாஸ்டிக் கவர் ஏதும் அங்கே போட கூடாது என்பது விதி. எனவே சாப்பிட்ட பின் பிளாஸ்டிக் கவர்களை சேகரித்து வைத்து கொண்டோம். அங்கிருந்து இன்னும் கீழே இறங்கினோம்.
எங்களை அழைத்து வந்த ஜீப் டிரைவர் ( அவர்கள் தான் இங்கே கைடு) சொன்ன செய்தி எங்களை  அதிர்ச்சிகுள்ளாக்கியது.



ஒரு வருடத்திற்கு முன் புலி ஒன்று யானையை அடித்து சாப்பிட்ட இடம் என்று ஓரிடத்தை காட்டினார். யானையை அடித்த புலி 8 நாட்கள் அதை வைத்து சாப்பிட்டதாம்.தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக கீழே பள்ளத்தாக்கு க்கு அது இழுத்து சென்றதாக சொன்ன போது அந்த 
இடத்தில் நின்று கவனித்து கொண்டிருந்த எனக்கு புலியும் எங்கிருந்தேனும் எங்களை  கவனித்து கொண்டிருப் போல் ஒரு சிலிர்ப்பு பரவியது. 
இப்படி புலியிடம் அது மாட்டியிருப்பதை நினைத்த போது யானைக்கும் அடி சறுக்கும் என்று சொல்லும் வார்த்தை உண்மை தான் போல. 

 எனக்கு யானை என்றால் ரொம்ப ப்ரியம். அது புலியிடம் மாட்டி சாகும் தருவாயில் எப்படி போராடியிருக்கும் அந்த நேரத்தில் நாம் என்ன செய்து கொண்டிருந்தோம் என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.
விலங்குக்கு விலங்கே உணவு என்பது எவ்வளவு கஷ்டம். எந்த நேரம் தன்னுயிர் போகுமோ என்ற பயத்துடன்  வாழும் வாழ்க்கை இது.

 அங்கிருந்து நகர்ந்து வந்த பின்னும் கொஞ்ச நேரத்திற்கு யானையின் 
மேல் பச்சாதாபம் என்னுள் தொடர்ந்து கொண்டிருந்தது. அங்கே நாங்கள் அலுவலகம் சென்ற போது புலி யானையை அடித்து சாப்பிட்ட நிகழ்வை கேமராவில் படம் பிடித்து அதை பெரிய லேமினேட் செய்து மாட்டியிருந்தார்கள். அவஸ்தையுடனே படம் பிடித்தேன்



பின் அங்கிருந்து நானும் ராய செல்லப்பா சாரும் பாலக்காடு 
கிளம்பினோம். துளசிதரன்  பேருந்தில் ஏறி எங்களுக்கு இடம் இருக்கிறதா என்று பார்த்து எங்களை ஏற்றி  விட்டார். அவரிடமும் அவரது குடும்பத்திடமும் விடை பெற்று கிளம்பினோம். பாலக்காடு வந்து நாங்கள் கோயம்புத்தூர்  செல்ல பேருந்து ஏறினோம். அவரவர் திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். வாழ்க்கைக்கு என்று ஒரு  ரீவைண்ட் பட்டன் இருந்தால்  நம்மை மகிழ்ச்சியான நிகழ்வுகளுக்குள் மீண்டும்  பயணிக்க நினைப்போம் இல்லியா. அப்படி ஒரு மகிழ்ச்சியான் நிகழ்வு இது. 



பள்ளி மாணவர்களின் சமுதாய அக்கறை பற்றி சொல்லப்படும் 
நல்ல மெசேஜ் உள்ள இந்த குறும்படத்தில் பணியாற்றியதில் ஒரு 
மகிழ்ச்சி கலந்த திருப்தி. துளசிதரன் அவர்களின் இந்த பரோட்டா 
கார்த்திக் குறும்படம் வெற்றி பெற குடந்தையூர் வாழ்த்துகிறது.

FINAL PUNCH

நமக்கு உதவி தேவைப்படும் நேரங்களில் கடவுள் நம் உதவிக்கு எல்லாம் 
வர மாட்டார்.மாறாக நம் குறிக்கோள் நல்லது என்றால் யாரையேனும் 
நம் உதவிக்கு அனுப்பி  வைப்பார். என்று சொல்லபடுவதுண்டு.நான் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் தவித்த போது என்னை என்வழி வினோ 
இணையத்துக்குள் அழைத்து வந்தார். படம் இயக்க வேண்டும் என்ற என் ஆர்வத்தை கண்டு துளசிதரன் இந்த உலகத்துக்குள் அழைத்து வந்திருக்கிறார் மிக்க நன்றி துளசிதரன் சார்.  

அப்ப நாங்க என்று கேட்கிறீர்களா. நான் தான் முன்னமே சொல்லி விட்டேனே நீங்கள் நீதிபதிகள் என்று 

என்றும்மாறாத அன்புடன்

ஆர் .வி.சரவணன்


திங்கள், மே 12, 2014

கேமராவுக்கு முன்னும் பின்னும்-3



 கேமராவுக்கு முன்னும் பின்னும்-3



அன்று அதிகாலை 3 மணி இருக்கும். என் செல் போனில் பாட்டு ஒலித்து  கொண்டிருந்தது.தூக்க கலக்கத்தில், பாட்டு போட்டுட்டு தூங்கிட்டோம் போலிருக்கு என்று எண்ணத்துடன் செல் போனை எடுத்தேன்.பார்த்தால் \நண்பர் திண்டுக்கல் தனபாலன் சார் போன் அடித்திருந்தார். அவசரமாய் எழுந்தேன். அவர் திண்டுகல்லில் இருந்து கிளம்பி வந்து கொண்டிருப்பதாக முதல் நாள் இரவு சொல்லியிருந்தார்.நானும் செல்லப்பா சாரும்  வந்தவுடன் போன் அடியுங்கள் என்று சொல்லியிருந்தோம்.நான் கீழே இறங்கி ஹோட்டல் வாசலுக்கு போய் அழைத்து வந்தேன்.சில நிமிடங்கள் பேசி விட்டு மீண்டும் விட்ட தூக்கத்தை தொடர்ந்தோம். முதல் நாள் போல் 
6 மணிக்கு குளித்து கிளம்பி நாங்கள் வெளி வந்தோம். துளசிதரன் நண்பர் எங்களை அழைத்து செல்ல வந்திருந்தார். முதல் நாள் போலவே கேமரா மேனுடன் (அங்கே தான் அவர்களும் தங்கியிருந்தார்கள்) சேர்ந்து கிளம்பி மாத்தூர் சென்றடைந்தோம் 

அன்று முழுக்க இன்டோர் ஷூட்டிங் பள்ளியில் தான் என்பதால்  பள்ளிக்கு சென்று நாங்கள் இறங்கிய போது கூடவே இன்னொரு

காரும் வந்தது.காரிலிருந்து யார் இறங்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் கவனித்தோம்.கோவை ஆவி இறங்கினார். கூடவே அவரது அக்கா மகன் விக்னேஷையும் அழைத்து வந்திருந்தார். எல்லாரும் சந்தோசமாய் சில நிமிடங்கள் பேசினோம்.பின் துளசிதரன் ஷூட்டிங் ஆரம்பிக்க  உள்ளே சென்று விட நாங்கள் சில நாள் கழித்து சந்திக்கும் நண்பர்கள் பேசி கொள்வது போல் பேசி மகிழ்ந்தோம். 




 அன்று பள்ளிக்கு ஷூட்டிங்கில் பங்கு பெற மாணவ மாணவிகள் வந்திருந்தார்கள்.  வகுப்பறை காட்சிகள் படமாக்கப்பட்டன. கோவை ஆவி அக்க பையன் விக்னேஷை நீ நடிக்கிறியா என்று கேட்டேன் தயக்கமாய் மறுத்தார். துளசிதரன் ஹீரோவின் ப்ரெண்ட் ஆக நடி என்று நடிக்க 
வைத்து விட்டார். பின் விக்னேஷும் ஆர்வத்துடன் பங்கேற்றார்.
 துளசிதரனும் ஆசிரியராக நடித்தார்.ஷூட்டிங்கில் முழு படத்தை இயக்கி கொண்டே நடிப்பதில் இருக்கும் சில சிரமங்கள் அப்போது புரிந்தது. பின் ராய செல்லப்பா சார் மற்றும் தனபாலன் கோவை ஆவிக்கு மேக்கப் போடப்பட்டது 

என்னால் அன்று ஷூட்டிங்கில் முழுமையாக ஈடுபட முடியாமல் இருந்தாலும்,  நண்பர்களுடன் பேசி கொண்டே நடுநடுவே என்ன காட்சி எடுக்கபடுகிறது என்று கவனித்து கொண்டே இருந்தேன் 

கூடவே ரிகர்சல் பார்த்து கொண்டிருந்தோம். ராய செல்லப்பா சார், பிரின்சிபால் ஆகவும்  தனபாலன் கோவை ஆவி ஆசிரியர்களாக நடிக்கும் காட்சிகள் படமானது. இதனிடையே  நான்,கோவை ஆவி,தனபாலன், ராய செல்லப்பா சார்  எல்லோரும் கலகலப்பாய் எடுத்து கொண்ட புகைப்படங்கள் பார்த்தாலே உங்களுக்கு தெரியும் எவ்வளவு ஜாலியாக எங்கள் பொழுது அன்று கழிந்தது என்று. 










இருந்தும் நான் நடிக்க வேண்டிய நேரம் நெருங்க நெருங்க ஒரு பதட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது. நீங்கள் நினைக்கலாம். நடிக்கிற விசயத்துக்கு எதுக்கு நீ இவ்வளவு பில்டப் கொடுக்கிறே என்று. இங்கே ஒரு சின்ன பிளாஷ் பேக் தேவைபடுகிறது. நான் கல்லூரி படிக்கும் காலத்தில் நாட்டு நல பணி திட்டத்தில் சேர்ந்திருந்ததால் அந்த பணிக்காக திருச்சி டூர்  சென்றிருந்தோம். அங்கே சில நிமிடங்கள் மட்டுமே நடைபெறும் நாடக போட்டி நடைபெற்றது. எல்லா கல்லூரிகளில் இருந்தும் வந்திருந்தார்கள். நாங்களும் கலந்து கொண்டோம். நண்பன் தான் இயக்கினான். ஆள் குறையுது என்று என்னையும் நடிக்க வைத்தான். அவன் எதிர்பார்த்த நடிப்பை நான் தரவில்லை என்பதால் முகம் சுளித்தான்.திட்டியும் விட்டான் எனக்கும் கோபமாகி இனி மேல் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்தேன். இருந்தும் நானே எழுதி இயக்கிய நாடகத்தில் ஒரு காட்சியில் நானும் வந்தேன். 

மேலும் எனக்கு மேடை கூச்சம் ஜாஸ்தி கை கால்கள் மேடை ஏறினாலே உதறலெடுக்கும்.  
அதனால் இது எனக்கு சரிபட்டு வராது என்று நினைத்திருக்கையில் துளசிதரன் நீங்கள் எம் எல் எ வாக நடிக்க வேண்டும் என்று சொன்ன போது மறுத்து ,நண்பர்கள் வேறு யாரையேனும் நடிக்க வையுங்கள் என்றேன். அவர் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்றார். என் வீட்டில் சொன்ன போது  வாய்ப்பு வரும் போது ஏன் வேண்டாம் என்கிறீர்கள்.நடிங்க என்றே சொன்னார்கள். 

நான் துளசிதரன் சாரிடம்  எதனால் என்னை செலக்ட் பண்ணீங்க என்றேன். அவர் உங்கள் 
குரலை வைத்து தான் உங்களையே நடீக வைக்க முடிவு செய்தேன் என்றார். நான் தான் நடிக்க வராதுன்னு னு சொல்றேனே ஏன் அதை வர வச்சி பார்க்க ஆசைபடறீங்க என்றேன் வடிவேலு போல். இப்படியாக நான் நடிப்பது உறுதியானது. நண்பர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட லஞ்ச் ப்ரேக் முடிய மேக்கப் மேன் மேன் எனை அழைத்தார். 



மேக்கப் போட்டு  முடிந்த பின் என்னை எல்லாரும் ஆச்சரியமாய் பார்த்தார்கள். கோவை ஆவி கீதா ரங்கன் மேடம் போட்டோ களாக  எடுத்து தள்ளினார்கள்.மேக்கப் நன்றாகஇருப்பதாக சொன்னார்கள்.துளசிதரனும், 
"நான் தான் சொன்னேனே உங்களுக்கு பொருத்தமாக
இருக்கும்னு"என்றார்.  எனது கேரக்டரில் மலையாள வர்சனில் நடிக்கும் திரு.பாலகிருஷ்ணன் அவர்களையும் என்னையும் வைத்து சில போட்டோ எடுத்தார்கள் நான் கோவை ஆவி,தனபாலனிடம்  சொன்னேன் "நண்பா என் எம் எல் எ கெட்டப் வச்சி காமெடி பண்ணிடாதீங்க. ஓரளவுக்கு மேல் என்னால் கிண்டல் கேலியை தாங்க முடியாது மீ பாவம்" என்றேன் இருந்தும் அவர்களின் உற்சாகம் எனக்கும் தொற்றியது. 




ஷூட்டிங் ஆரம்பித்தது  பள்ளி ஆடிடோரியத்தில். முதலில் மலையாள வர்சன் காட்சி 
எடுக்கப்பட்டது. மலையாள எம்.எல்.எ கேரக்டர்  பாலகிருஷ்ணன் 
நடித்ததை பார்த்து விட்டு நான் மிரண்டேன். ஏனெனில் அவர் ஒரு டிராமா ஆர்டிஸ்ட். நடிப்பில் அனுபவம் அதிகம். அவர் நடிப்பை பார்த்தவுடன் கவுண்டமணி போல் இது ஆவறதில்லே என்று கலக்கமாகி வேட்டியை மடித்து கட்டி வெளியேறி விடலாமா என்று தோன்றியது. துளசிதரன் முக சுளிப்புக்கு ஆளாக போகிறோம் என்ற பயம் வந்தது. 




அப்போது என் மனது எனக்கு பாடம் எடுத்தது.  பிடிக்காதவர்களை சந்திக்கும் போது என்ன செய்வாய். வெறுப்பை வெளி கொண்டு வராமல் சிரித்த படி விஷ் பண்ணுவாய். அது தான் நடிப்பு மேலும் இந்த விசயத்தில்  ரெண்டே சாய்ஸ் தான் உள்ளது ஒன்று நீ நடித்து பாராட்டு பெற வேண்டும் இல்லை எல்லாரது முக சுளிப்புக்கு ஆளாக வேண்டும் எது வேண்டும் என்பதை நீயே முடிவு செய் என்று அதட்டியது.
பதட்டத்தை தணித்தேன்.

என்னை கூப்பிடவே  மேடை ஏறினேன்.  எனக்கு ஒரு பக்கத்திற்கும் மேலாக வசனம். ஏற்ற இறக்கத்துடன் பேச வேண்டும். (மனப்பாடம் செய்திருந்தேன்)  தனபாலன் மேடைக்கு வந்து மைக் மற்றும் பேப்பர்களை டேபிளில் அடுக்கி வைத்து உதவி செய்தார் . 




பேச ஆரம்பித்தேன்  பாதிக்கு மேல் செல்லும் போது எனக்கு நாக்கு குழற ஆரம்பிக்க 
கட் கட் என்று கத்தினேன் . கேமராமேனும் துளசிதரனும் தொடர்ந்து பேசுங்க என்றார்கள். பேசி முடித்த பின் மீண்டும் ஒன் மோர் சொன்னார்.நானும் முதலில் இருந்த தவறுகளை சரி செய்து பேசினேன். மீண்டும் பேச சொன்னார்கள். இது போல் 5 முறை டேக் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்த  பின் கேட்டேன் ஏன் சார் சரியாய் செய்யவில்லையா என்று. துளசிதரன் சொன்னார். அடுத்தடுத்து பேசும் போது இன்னும் சரியாக வரும் எது சரியாக இருக்கிறதோ அதை எடுத்து கொள்வோம் அதனால் தான் என்றார்.எல்லாரும் நல்லா பேசினீங்க என்றே சொன்னார்கள். 
இருந்தும் பரீட்சை எழுதிய மாணவனின் நிலையில் தான் நான்
இருக்கிறேன்  நீதிபதியாகிய (ஆடியன்ஸ்) நீங்கள் பார்த்து ஓகே 
சொல்லும் வரை எனக்கு டென்சன் தான். 

ஷூட்டிங் முடிந்து கிளம்பினோம்.எல்லாரும்  பாலக்காடு வந்து டிபன் சாப்பிட்டோம்  கோவை ஆவி காரில் அழைத்து கொண்டு வந்து ஹோட்டலில் விட்டு சென்றார். .தனபாலனும் ஊருக்கு கிளம்பினார்.
என்னையும் செல்லப்பா சாரையும் அடுத்த நாள்  பாலக்கட்டில் இருந்து 
60 கிலோ மீட்டரில் இயற்கை அன்னை வீற்றிருக்கும் SILENT VELLY என்ற  இடத்திற்கு  சுற்றுலா அழைத்து செல்வதாக சொல்லியிருந்தார்.

 நாளைய பதிவில் படங்களுடன் சொல்லி  இந்த தொடரை  நிறைவு செய்கிறேன் 


ஆர் .வி.சரவணன் 




வெள்ளி, மே 09, 2014

கேமராவுக்கு முன்னும் பின்னும்-2



ஆதிவாசி மேக்கப் 

கேமராவுக்கு முன்னும் பின்னும்-2

நாங்கள் மாத்தூர் சென்று இறங்கிய போது அந்த காலை வேளையிலும் எல்லோரும் வந்து விட்டிருந்தார்கள்.மாணவர்கள் இந்த குறும்படத்தின் எடிட்டர் மற்றும் பள்ளியில் பணிபுரிபவர், (போலிஸ் அதிகாரியாக நடித்தார்) மேக்கப் மேன் என்று எல்லோரும்  7 மணிக்கு வந்து விட்டிருந்தார்கள்
துளசிதரன் தங்கியிருக்கும் வீடு தான் ஷூட்டிங் ஸ்பாட் ஆக மாறியிருந்தது எல்லோருக்கும் என்னை எழுத்தாளர் (?) என்று சார் அறிமுகபடுத்தினார் நான் கூச்சமாக நெளிந்தேன்.

பின் மேக்கப் தொடங்கியது துளசிதரனின் சகலை (அவரது மனைவியின் தங்கை கணவர் ) ஆதிவாசி யாக நடிக்கிறார். அவருக்கு மேக்கப் போட்டார்கள் நான்  சிறு வயதில் நாடகங்கள் நடக்கும் போது கவனித்திருந்தாலும் சினிமாவுக்கு மேக்கப் போடுவதை பார்ப்பது இது தான் முதல் முறை
அவரை ஆதிவாசி யாக மாற்றிய போது மேக்கப் (மேன்) திறனை எண்ணி வியந்தேன் அடுத்து துளசிதரன் அவர்களின் மனைவியும் ஆதிவாசி பெண்ணாக நடிப்பதால் அவர் மற்றும் மாணவர்கள் என்று மேக்கப் 
வேலை தொடர்ந்தது. 


கீதா ரங்கன் மேடம் இந்த படத்தில் அசிஸ்டன்ட் டைரெக்டர் 
படப்பிடிப்பு நடந்த இரு நாளும் கையில் ஸ்க்ரிப்டை வைத்த  படி எங்கும் நகராமல் துளசிதரன் கூடவே  இருந்தது ஆச்சரியம். ஏனெனில் நான் கூட வெயிலின் கொடுமை மற்றும் நண்பர்கள் வருகையால் கொஞ்சம் அங்கே இங்கே நகர்ந்தேன். அவரோ  ஷூட்டிங்கில் தொடர்ந்து பங்கு பெற்றார்.
என்னை "நடிக்க ரெடி யாகிட்டீங்களா" என்று கேட்டார் .நான் சொன்னேன் 
அந்த டென்சன் நாளைக்கு பார்த்துக்கலாம். இன்னிக்கு வேணாம் இப்ப ஒரு அசிஸ்டன்ட் டைரெக்டர் போல் கவனிக்கிறேன் என்றேன் 

சாப்பாடு டிபன் எல்லாம் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார்கள். டிபன் வந்திருந்தது. சாப்பிட்டோம் 
ரோஸ் கலரில் கூல் ட்ரிங்க்ஸ் போல் ஒன்று பாத்திரத்தில்  வைக்கபட்டிருந்தது.ஓகே வெயிலுக்கு இதமாக சாப்பிடலாம் என்றவாறு நான் நெருங்கி ஒரு டம்ளர் எடுத்து கொண்டேன் சூடாக இருந்தது. நான் திடுக்கிட்டு விசாரித்தேன். கீதா மேடம் 
சொன்னார் தண்ணீர் தான் அது என்றும் வெட்டிவேர் போட்டு கொதிக்க வைக்கபட்டிருக்கிறது என்று சொன்னார் . குடித்தேன் நன்றக தான் 
இருந்தது ஏற்கனவே கேரளா சென்றிருந்த போது சாப்பிட்டு இருந்தாலும் இங்கே இதமான சூட்டில் சாப்பிட நன்றாக இருந்தது 

மேக்கப் மேன் எல்லாரையும் நிற்க வைத்து பூஜை போட்டார்.

கேமரா ஆங்கில் பார்க்கப்பட்டது.முதல் காட்சி போலீஸ் அதிகாரி 
செல் போனில் தகவல் கேட்டு ஜீப்பை எடு என்று சொல்லி வேகமாக ஏற வேண்டும். மற்ற போலீஸ் காரர்கள் நான்கு பேர் வந்து ஏறி கொள்ளள ஜீப் கிளம்ப வேண்டும்.  இது தான் காட்சி. எடுக்கபோகும் இந்த காட்சியை பற்றி சொன்னார் துளசிதரன்.  கீதா மேடம் கையில் வைத்திருந்த ஸ்கிரிப்ட் டில் என்ன எழுதியிருக்கிறார் என்றும் பார்த்து கொண்டேன் . இதற்கு ஷாட் எப்படி வைக்கிறார் என்று அறிய விரும்பினேன்.இருந்தும் அவரை நான் தொந்தரவு செய்யவில்லை அவர் ஷாட் வைப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். கூடவே நான் அவரது எண்ணத்தை என் மன திரையில் காட்சியாக ஓட்டி பார்த்தேன். புரிந்தது. போலீஸ் காரருக்கு ஒரு ஆள் குறையுது என்று டாட்டா சுமோ டிரைவர் க்கு மேக்கப் போட்டு போலீஸ் டிரஸ் போட்டு ஜீப்பை ஓட்ட வைத்தார்கள் (நடிக்க வந்தது விபத்து னு சொல்வாங்களே அது  இது  தானா)




ஷூட்டிங் நடந்த இடம் 

காரில்  மற்ற போலீஸ் காரர்கள் வந்து ஏறியது யதார்த்தமாக இல்லை என்று எனக்கு தோன்றியது. அதாவது சேர்ந்து நின்றிருந்தாலும் அவசரத்தில் வந்து ஏறும் போது இஷ்டபடி கலைந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வந்து ஏறினால் சிறப்பாக இருக்கும் என்று நான் யோசித்து கொண்டிருக்க,
துளசிதரனே ஒன் மோர் என்று சொல்லி விட்டார்.

 அந்த காட்சி  எடுக்கப்பட்ட பின்  கார் கிளம்பி ரோட்டுக்கு வருவது ஒரு 

ஷாட் எடுக்கப்பட்டது.  அந்த வீட்டுக்கு எதிரில் இருந்த மேட்டில் (அதை சிறு மலையில் ஏறுவது போல் இருக்கும் )  ஷூட்டிங் ஷிப்ட் ஆகியது அங்கே 
தான் ஆதிவாசி குடியிருப்பு இருப்பது போன்ற காட்சிகள் படமானது.  
 வெயிலின் கடுமையும் ஏற ஆரம்பித்தது. 

போலீஸ் ஜீப்பை பார்த்து விட்டு ரவுடி கும்பல் அதிர்ந்து பின்னோக்கி ஓட வேண்டும் அந்த காட்சி ஒரே ஷாட்டில் ஓகே ஆனது வந்தவர்கள் அதிர்ந்து போய் பார்த்து விட்டு திரும்பி ஓடுவது இயல்பாக இருந்தது. அந்த காட்சி காருக்குள் இருக்கும் போலிசின் கண்ணோட்டத்தின் படியும் எடுக்கப்பட்டது. ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருக்கும் போதே நான் அந்தந்த காட்சிகளை நான் கற்பனை செய்து பார்க்க ஆரம்பித்திருந்தேன். 


ரவுடிகள் ஆதிவாசி வீட்டுக்கு வந்து அவர்கள் பெண்களை இழுத்து செல்ல வருவதாகவும் அதை பெற்றோர் தடுப்பது போன்றும் காட்சி.
(துளசிதரன் 
மகனும் மகளும் கூட நடித்தனர் ) துளசிதரன் மனைவி,கையில் அரிவாளை வைத்து கொண்டு பல்லை கடித்து கொண்டு வில்லனை  மிரட்ட வேண்டும் அவருக்கு ரிகர்சல் பார்க்கும் போது சிரிப்புவந்தாலும், ஷாட்டின் போது சீரியசாக பண்ணினார்.

பெங்களூரிலிருந்து வந்திருந்த பிஜூவை அவர் கோபத்துடன் தள்ள முயற்சிக்க வேண்டும்.  இவர்களின் இந்த போராட்டத்தில்  மேடம் கீழே விழ வேண்டும். அவர் சரியாக தான் விழுந்தார். இருந்தும் அவர் விழுந்ததில் சுவரில் இருந்த செங்கல் சிமெண்ட் பூச்சு அவரது தலையை பதம் பார்த்து விட்டது .ரத்தம் வழிய ஆரம்பித்தது.எல்லோரும் அதிர்ந்து போய் அருகே ஓடினோம் அவரை எழுப்பி விட்டோம்.  அவர் தன் கைகளால் அடிபட்டிருந்த முன் நெற்றியை பிடித்திருந்த போதும் ரத்தம் நிற்கவில்லை. உடனே கார் கொண்டு வர சொல்லி ஏறி அமர்ந்து 5 கிலோமீட்டரில் இருக்கும் மருத்துவமனை நோக்கி சார் மற்றும் கீதா கிளம்பினர் துளசிதரன்  
உள்ளுக்குள் பதட்டம் இருந்திருந்தாலும் அதை வெளி காட்டாமல் தன் மனைவியை அழைத்து கொண்டு சென்றார்.

மருத்துவமனைக்கு கிளம்பும் போது கூட அவர் மனைவி ஷூட்டிங் 
தொடர்ந்து நடக்கட்டும் என்று தனக்கு நேர்ந்த விபத்தை சாதாரணமாக 
எடுத்து கொண்டார் .இதை கணவரின் லட்சியத்தில் உறுதுணையாக 
இருக்கும் மனைவியின் அக்கறையாக பார்க்கிறேன்.அவர்கள் சென்று 
வரும் வரை நாங்கள் எல்லோரும்கவலையில் அமர்ந்திருந்தோம். தையல் போடப்பட்டு மருத்துவமனையிலிருந்து வந்தார்கள். டாக்டர் ஒன்றும் பிரச்னையில்லை என்று சொன்னதாக சொல்லிய பின் தான் எல்லாருக்கும் நிம்மதி வந்தது .

 லஞ்ச்  ப்ரேக் விடப்பட்டது . வலைபதிவர் திரு.ராயசெல்லப்பா வருகிறார் என்றும் அவரை அழைக்க போக வேண்டும் என்றும் சொல்லவே நானே சென்று அழைத்து வருகிறேன் என்று சொல்லி கிளம்பினேன்.  இருந்தும் 
எனது உதவிக்காக ஒரு மாணவனையும் சார் கூடவே அனுப்பி வைத்தார் ஆட்டோவில் சென்று ஸ்டேஷன் னில் காத்திருந்த செல்லப்பா சரை அழைத்து கொண்டு ஹோட்டல் சென்று அவர் ரெடி யானவுடன் அழைத்து கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்  வந்தேன். துளசிதரன் மனைவி ரெஸ்ட் எடுத்து கொள்ளவில்லை.  உற்சாகத்துடன் ஷூட்டிங்கில் வளைய வந்தார் 





திரு.ராய செல்லப்பா வுடன் குறும் படத்தில் நடிப்பவர்கள் 

மதிய சாப்பாடு முடிந்த பின்ர ரவுடிகளை போலீஸ் மாணவர்கள் மடக்கி பிடிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. கதாநாயகன் கார்த்திக் தன் அம்மாவுக்கு வீட்டு வேளைகளில் உதவியாக இருப்பது போன்ற காட்சி எடுக்கப்பட்டது .இங்கே அந்த பையனுக்கு அம்மாவாக நடித்த பெண்ணை பற்றி கண்டிப்பாக நான் சொல்ல வேண்டும். 




பரோட்டா கார்த்திக்கிற்கு தாயாக நடிக்கும் பெண்ணிடம் காட்சி 
பற்றி விளக்குகிறார் துளசிதரன் 


அந்த பெண்ணுக்கு வயது 20 க்கு மேல் தான் இருக்கும் இருந்தும் கொஞ்சம் வயதான தாயாக நடிக்க வந்திருந்தார் .மேலும் அந்த பெண்ணுக்கு படிக்க ஆர்வம் என்பதால் 10 வது படிப்பை ப்ரைவேட்டாக படித்து வருவதாக சொன்னார்கள் அடுத்து கேட்ட தவகல் என்னை இன்னும் ஆச்சரியபடுத்தியது. ஆம் அந்த பெண் வீடுகளில் வீட்டு வேலை செய்வது  விறகு உடைப்பது போன்ற வேலைகள் செய்து தன் அக்கா  அம்மாவை காப்பாற்றுவதாக சொன்ன போது எனக்கு பரிதாபம் வரவில்லை. அந்த பெண்ணின் மேல் ஒரு தனி மரியாதையே வந்தது. 




பரோட்டா கடை வாசல் 

 அந்த பெண் பரோட்டா கடை வாசலில் இருந்து கார்த்திக்கை ஸ்கூல் க்கு வழியனுப்பி வைப்பார். அப்போது அவர் டாட்டா காட்ட வேண்டும் .இது ஒரு ஷாட். அதை பார்த்த போது எனக்கு ஷூட்டிங் ஷாட் என்பது போல் தோன்றவில்லை மாறாக ஒரு தாயுள்ளம் கொண்ட பெண்ணாகவே  தோன்றினார்.(படிக்க வேண்டிய காலத்தில் வீட்டில் என்னை படிக்க வைத்தும் சரியாக படிக்காமல் இருந்தது அப்போது என் ஞாபகத்துக்கு வரவே தலையில் அடித்து கொள்ளலாம் போல் இருந்தது ) அந்த பெண்ணுக்கு நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை  இருப்பதாக கீதா மேடம் சொன்னார்கள். அந்த பெண் தான் கொண்ட லட்சியத்தில் வெற்றி பெற 
ஒரு சகோதரனாய் உளமார வாழ்த்துகிறேன் 



அன்றைய ஷூட்டிங் முடிந்து நாங்கள் ஹோட்டல் கிளம்பினோம். துளசிதரன் நண்பர் தான்  எங்களை ட்ராப் செய்ய வருவதாக ஏற்பாடானது .பின் துளசிதரன் அவர்களே எங்களை ட்ராப் செய்ய வந்தார் மேடம் நார்மலாகி விட்டார் என்றாலும் நீங்கள் அவருடனும் குடும்பத்துடனும் இருங்கள் என்று சொன்ன போதும் அவர் பரவாயில்லை உங்களை ஹோட்டல் ல கொண்டு விட்டுட்டு வந்துடறேன் என்று கார் ஓட்டி வந்தார். 
மறு நாள் ஷூட்டிங்கை நான் ஒரு உதவி இயக்குனராக ஆர்வத்துடனும் நடிகராக பயத்துடனும் எதிர் கொள்ள 
ஆரம்பித்திருந்தேன். 

தொடரும் 


நாளைய பதிவில் இரண்டாம் நாள் ஷூட்டிங், மற்றும் நான் நடிகரான வேடிக்கை நிகழ்வு,  நண்பர் திண்டுக்கல் தனபாலன் மற்றும் கோவை ஆவி வருகை 
பற்றிய தகவல்களுடன் வருகிறேன் 

ஆர்.வி.சரவணன் 


புதன், மே 07, 2014

கேமராவுக்கு முன்னும் பின்னும்-1




சும்மா ஒரு ஆர்வத்தில் 

கேமராவுக்கு  முன்னும் பின்னும்-1

நான் குறும்பட படப்பிடிப்புக்கு  கேரளா பாலக்காடு சென்று வந்த அனுபவங்கள் ஒரு லைவ் ரிப்போர்ட் பதிவாக இந்த தலைப்பில் வருகிறது . இந்த பயணம் உருவான விதம், முதல் நாள் அவுட் டோர்  ஷூட்டிங், இரண்டாம் நாள் இன் டோர் சூட்டிங் இவற்றுடன்  ஒரு சுற்றுலாவும் என்று நான்கு பதிவுகளாக தர இருக்கிறேன். (ஒரே பதிவில் தர முடியாதுஎன்பதால்)
 பொருத்தருள்க நண்பர்களே.

எப்ப நமக்கான வாசல் திறக்கும் என்பது நமக்கே தெரியாது. நாம தான் விழிப்போட இருந்து வாய்ப்பு வரப்ப டக்குனு பிடிச்சிக்கணும்.அப்படின்னு சொல்வாங்க.பாருங்களேன் சினிமா இயக்குனர் ஆகிற அதிகப்படியான ஆசையில  படிப்பை சரியாய் கவனிக்காம இருந்தவன் பட்ட வேதனைகள் ஏளனங்கள் வலி மிகுந்த அத்தியாயங்கள். பெற்றோர் எதிர்பார்க்கிறதை செஞ்சிட்டு அப்புறமா நம்ம ஆசையை பத்தி யோசிக்கலாம் னு தூர வச்சிட்டு ஓரளவு குடும்பதிர்க்கான கடமையை செஞ்சிட்டு 

(20 வருஷம் போயிடிச்சு) என்னோட ஆசையை தூசி தட்டி எடுத்தேன்.


இணையம் கீ  போர்ட் கொடுத்துச்சு. எழுத ஆரம்பிச்ச பின்னாடி என்னோட சினிமா கனவு என்னை தினமும் துரத்திட்டே இருந்துச்சு. குறும்படங்கள் எடுப்பது மூலம் நம் ஆர்வத்துக்கு தீனி போட்டுடலாம்னு நினைச்சேன்.ஆனால் பாருங்க  நான் எந்த ஷூட்டிங்கும்  வேடிக்கை பார்த்தது கூட இல்லை.ஒரு விசயத்தை  சரியாக தெரிந்து (புரிந்து) கொள்ளாமல் அதில் ஈடுபடுவது தவறு.எனவே  நான் சந்திக்கும் நபர்களிடம் இது பற்றி கேட்க ஆரம்பித்தேன். நான் கேட்ட நபர்கள் ஒன்று குறும்படம் எடுத்து முடித்திருந்தனர்.இல்லை அடுத்து எடுக்கிற  
ஐடியா இல்லை  பார்க்கலாம் என்றனர். (அறிமுகமில்லாத ஒருவர் அவர் எடுத்த  குறும்படம் பற்றி ஸ்டேடஸ் போட அதை பார்த்து அதற்காகவே அவருடன் முகநூலில் இணைந்து கொண்டேன். அவர் என்னை விட வயதில் சிறியவர். இருந்தும் வெட்கம்  எல்லாம் பார்க்காமல் கேட்டேன். சொல்றேன் என்ற  ஒற்றை வையில் பதில் வந்தது. ஒரு வருடம் 
ஆகியும் ஒன்றும் சொல்லவில்லை)  இந்த பதில்களால் சலித்து சோர்ந்து போய் சரி வேலைக்கு போனோமா வீட்டை பார்த்தோமா என்று இருந்து  விடலாம் என்று நான் முடிவெடுக்கையில் ஒரு யோசனை தோன்றியது. கடைசியாய் ஒரு முயற்சி செய்து பார்ப்போம் என்ற எண்ணத்தில் எனது ஸ்வீட் காரம் காபி பதிவில் யாராவது குறும்படம் எடுத்தால் சொல்லுங்கள் கற்று கொள்ள விரும்புகிறேன் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன். 



படப்பிடிப்புக்கு முன் ஒரு திட்டமிடல்  திரு.துளசிதரன் அவர்கள் 

இதற்கு பாலக்காட்டிலிருந்து பதில் (அழைப்பு) வந்தது. வலை பதிவர் திரு.துளசிதரன் அவர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.அதில் தான் ஒரு ஸ்கூல் டீச்சர் என்றும் கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்காக குறும்படம் எடுத்து வருவதாகவும் சொல்லி, இது வரை தான் எடுத்த குறும்படம் லிங்க் கும் அனுப்பியிருந்ததுடன்  தாங்கள் விரும்பினால் 
இந்த வருட குறும்பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ளலாம் என்றும் அழைத்திருந்தார். கண்டிப்பாக வருவதாக சொல்லி.உடனே பதில் அனுப்பினேன் மேலும் அவர் போன் நம்பர் கொடுத்திருந்ததால் போன் செய்தும் நன்றி தெரிவித்தேன்.எனது தளம் படித்து வருவதாகவும் எனது தளத்தை அவருக்கு அறிமுகம் செய்தது தனது கல்லுரி தோழி திருமதி 
கீதா ரங்கன் என்றும் தெரிவித்தார் அவரும்  போன் செய்து என்னிடம் பேசினார். இப்படியாக தொடங்கிய நட்பு  தொடர்ந்து வலு பெற்றது. 
இதோ சென்ற வாரம் (ஏப்ரல் 30 மே 1) குறும்பட படபிடிப்பிற்க்கு என்னை ஆர்வத்துடன் கிளம்பி செல்ல வைத்தது.

எனக்கு எப்போதுமே ஒரு பிரச்னை உண்டு. முக்கியமான  வேலை வரும் போது தான் 
மற்ற வேலைகள் வந்து என்னை அழுத்தி விடும் இப்போதும் அப்படியே. அலுவலக வேலைகள் என்னை அழுத்தியது.ஷூட்டிங் போகவே முடியாது என்பது போல் ஆகி விட்டது நிலைமை. இருந்தும் என் ஆர்வமும் துளசிதரனுக்கு வருகிறேன் என்று வாக்கு கொடுத்து விட்டோமே போகவில்லை என்றால்  நம்மை பற்றி என்ன நினைப்பார் என்ற வேகமும் என்னை கிளம்ப வைத்தது. சந்தோசமாக கிளம்ப வேண்டியவன் டென்சனொடு கிளம்பினேன்.இதற்கு உதாரணம் வேண்டுமென்றால் 
8.25  மங்களூர் எக்ஸ்பிரஸ்சில் புக் செய்திருந்தேன்.ஆனால் நான் 
ரயில்வே ஸ்டேசனில் நுழைந்தது 8.05 மணி.ஹோட்டலில் 
டிபன் வாங்கி கொண்டு வந்து ரயிலில் ஏறிய போது மணி 8.20 

என் சீட் கதவுக்குஅருகில் இருக்கும் சைடு லோயர். அதில் நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள். என் சீட் என்றவுடன் இருவர் எழுந்து கொண்டு 
விட மற்ற இருவர் போனால் போகிறது என்று இடம்
கொடுத்தார்கள். அரக்கோணம் மற்றும் அதற்கு அடுத்த ஸ்டேஷன் 
இறங்க வேண்டியவர்கள் எல்லாம் இதில் ஏறிஇருந்தார்கள். அன் ரிசர்வ் கம்பார்ட்மெண்ட் போல் எங்கும் கூட்டமாக இருந்தது. வடிவேலு போல் ஆரம்பத்திலேயே ஆரம்பிச்சிட்டாங்களா என்று உள்ளுக்குள் நொந்தவாறு அமர்ந்தேன். 




குறும்படத்தில் நடிப்பவர்கள் 

 ரயில் ஏறிய உடன்  துளசிதரன் மற்றும்  கீதா ரங்கன் மேடத்திற்கும் போன் செய்து நான்  ரயில் ஏறி விட்டதை உறுதிபடுத்தினேன் (ரயிலில் நடந்த மற்ற வேடிக்கைகள்  இன்னொரு பதிவில் சொல்கிறேன்)  ஆட்கள் சென்று  கொண்டும் வந்து கொண்டும் இருந்ததால் என் தூக்கம் கொஞ்ச கொஞ்சமாக ஒவ்வொரு ஸ்டேஷனிலும் இறக்கி விடப்பட்டு மிச்சமிருந்த தூக்கத்தை
 12 மணிக்கும் மேல் ஒருவாறு தூங்கி கழித்தேன்  பக்கத்து சீட்
பயணியிடம் பாலக்காடு வந்தால் எழுப்புங்கள் என்று நான் சொல்லியிருந்தேன் அவரும் அங்கே தான் இறங்குகிறார் என்பது ஒரு நிம்மதி. அதே போல் அவரும் கடமையில் கண்ணும் கருத்துமாக, 
முழித்த படி படுத்து கொண்ருந்த என்னை எழுப்பி விட்டார். 

பாலக்காடு நெருங்க நெருங்க டென்சன்கள்  மறைந்து போய் என் நெடு 
நாள் கனவொன்று நிஜமாக போகும் வேளை நெருங்குவதை என் மனது உணர்ந்து உற்சாகத்தை பி பி எகிறுவது போல் எகிற வைத்தது. அதிகாலை 4.30 மணிக்கு தொந்தரவு செய்கிறோமே என்று யோசித்தாலும் வேறு வழியில்லை எனபதால் போன் அடித்தேன். துளசிதரன் நான் ஸ்டேஷன் வந்துட்டேன் சார் உள்ளே வரவா இல்லை நீங்கள் வெளியில் வந்து விடுகிறீர்களா என்று கேட்டார். நானே வந்து விடுகிறேன் என்று சொன்னேன் ஆனால் ரயில் நின்று நான் இறங்கும் 
போது பார்த்தால் கோச் வாசலிலேயே நின்றிருந்தார் பயணம் சுகமா என்றுகேட்டவாறு. இருவரும் நலம் விசாரித்த படி வெளியில் வந்தோம் 



பெங்களூரிலிருந்து வந்திருந்த பிஜு 

தனது காரை எடுத்து கொண்டு வந்திருந்தார். கூடவே அவரது உறவினர் 
பிஜு என்பவரும் காரில் காத்திருந்தார் அவரை அறிமுகபடுத்தினார்.அவர் பெங்களூரில் வேலை செய்கிறார்  நடிப்பதற்காக வந்திருக்கிறார் என்றும் சொல்லவே ஆச்சரியப்பட்டேன். அவரும் அப்போது தான் பெங்களூரிலிருந்து பேருந்தில் வந்து இறங்கியிருந்தார்.எங்கள் இருவரையும் ஹோட்டல் கைரளிக்கு  அழைத்து சென்றார் 




ஷூட்டிங் 

நீங்க ரெஸ்ட் எடுத்து கொண்டு அப்புறம் வாருங்கள் என்று சொன்ன போது நான் மறுத்தேன்.இப்ப ரெஸ்ட் தேவையில்லை ஷூட்டிங் தான் தேவை என்றேன்.  குளித்து முடித்து கிளம்பி வெளி வந்தோம் கூடவே கேமரா மேன் அவர் உதவியாளர்களுடன் சேர்ந்து கொள்ள டீ சாப்பிட்டு விட்டு காரில் கிளம்பினோம். காலை 6 மணி பொழுது ஒரு புத்துணர்ச்சியை எங்கும் இறைத்திருந்தது.  அங்கிருந்து 12 கிலோ மீட்டரில் இருக்கும் மாத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தோம்.முதல் நாள் பள்ளி செல்லும் மாணவனின்  குதுகலத்துடன் நான் சென்று கொண்டிருந்தேன். 

தொடரும் 


(நாளைய பதிவில் முதல் நாள் ஷூட்டிங் மற்றும் அதில்  நடைபெற்ற விபத்து) 


ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, மே 04, 2014

இதற்கு தானே ஆசைபட்டாய் சரவணா



இதற்கு தானே ஆசைபட்டாய் சரவணா

நீ எதற்கு ஆசைபட்டாய். அப்படி என்ன தான் நடந்துடுச்சுன்னு பெரிசா அலட்டிக்கிறே என்று உங்களுக்கு தோணுது. சொல்றேன். என் வாழ்க்கையை நானே அவ்வபோது வேடிக்கை பார்ப்பவன் போல் நினைத்து பார்ப்பதுண்டு அதில் இறைவன் ஒவ்வொருவர் வாழ்க்கையின் சில தருணங்களை எப்படி திரைக்கதை போல் அமைக்கிறான் என்று ஆச்சரியபடுவதுண்டு.

எனக்கு நடிகர்களில் இருவர் மிக பிடித்தமானவர்கள். ஒருவர் நடிகர் இயக்குனர் கே.பாக்யராஜ். இன்னொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 
(இருவர் சம்பந்தப்பட்ட எந்த செய்தியானாலும் நான் புத்தகமோ பேப்பரோ  வாங்கி படித்து விடுவது வழக்கம் ஒரு சீன் வரும் படங்கள் கூட பார்த்து விடுவதுண்டு) இப்படி நான் விரும்பும் இருவரில் ஒருவரான பாக்யராஜ் 
பற்றி இங்கே சொல்கிறேன் 

சென்ற வாரம் ஞாயிறு காலை சன் டிவி யில் பாக்யராஜ் பங்கு பெறும் பட்டிமன்ற நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. அதில் அவர் பேசுவதை பார்க்கும் போது மீண்டும் எப்போது பார்க்க போகிறோம் என்ற ஏக்கம் மனதிற்குள் தோன்றியது 
( சென்ற வருடம் முதல் முறையாக  நான் அவரை சென்று பார்த்து பேசி  விட்டு வந்திருந்த அனுபவம் இங்கே  இது நம்ம பாக்யராஜ் ) ஏனெனில் எனது இளமை எழுதும் கவிதை நீ.... நூலை அவரிடம் கொடுத்து ஆசி வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் காத்திருந்தேன்.அடுத்த நாள் பழைய பாடல்கள் பார்த்து கொண்டிருந்த போது அதில் வந்த பாக்யராஜ் பாடல் என் ஆர்வத்தை 
இன்னும் உந்தி தள்ளியது. புதன் கிழமை எனது முக நூல் நண்பரும் 
பாக்யா வார இதழ் நிருபருமான திரு எஸ்.எஸ்.பூங்கதிர் அவர்களிடம் சாட்டிங்கில் உரையாடிய போது இதை பற்றி தெரிவித்தேன் சார் 
ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் முடியட்டும் செல்லலாம் என்று சொன்னார்.ஆர்வத்துடன் காத்திருந்தேன் 

வெள்ளி கிழமை மதியம் எனக்கு பாக்யா அலுவலகத்திலிருந்து,  உடனே தொடர்பு கொள்ளவும் என்று மின்னஞ்சல் வந்திருந்தது. . நான் பதட்டமாய் உடனே தொடர்பு கொண்டேன். அவர்கள் உங்கள் செல் நம்பர் கொடுங்க என்றார்கள் நான் கொடுத்து விட்டு எதற்கு சார் என்று ஆர்வத்துடன்
கேட்டேன்.  சார் பேசணும்னு சொன்னாங்க என்றார்கள். அவ்வளவு தான் பதட்டமாகி விட்டது எனக்கு.  செல் போனை கையில் வைத்திருந்த படியே. உற்சாகமாய் காத்திருந்தேன்.ஒரு மணி நேரம் சென்றிருக்கும் போன் ஒலித்தது. இந்திய திரையுலகின் திரைக்கதை அரசனின்  குரல் என் செல் வழியே. சரவணனா என்று. ஆமாம் சார் என்றேன் சந்தோசமாய். 

இப்போது ஒரு சின்ன பிளாஷ் பேக் 
அதாவது நான் முதல் முறை அவரை பார்க்க சென்றிருந்த போது நான் 
எழுதிய சில சிறுகதைகள், பாக்யா வெள்ளி விழா கொண்டாடுவதை வாழ்த்தி நான் எழுதிய பதிவு மேலும் நான் கல்லூரியில் படிக்கும் போது ஜாதி பற்றிய என் முடிவை கண்ணோட்டத்தை தெரிவித்து நான் பாக்யவிற்கு அனுப்பிய கடிதத்திற்கு வந்திருந்த பாராட்டு கடிதம் பாக்யாவின் பாராட்டு கடிதம் 
இவை யாவற்றையும் ஒரு பைலில் போட்டு கொடுத்து உங்களுக்கு நேரமிருக்கும் போது முடிந்தால் படிங்க சார் என்று அன்பு வேண்டுகோள் வைத்து விட்டு வந்திருந்தேன். 

அந்த பைலை அவர் அன்று பார்த்திருக்கிறார் படித்திருக்கிறார் உடனே என்னை தொடர்பு கொண்டு என் செல் நம்பர் வாங்க சொல்லியிருக்கிறார் இதையெல்லாம் அவரே என்னிடம் தெரிவித்து பெற்றோர் என்ற சிறுகதையை பற்றியும் சொன்னார். நீங்களே போன் செய்து என்னிடம் பேசுவதென்றால் எவ்வளவு பெரிய விஷயம். இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றி விட்டீர்கள் சார் என்றேன் சிரித்தார். எனது படிப்பு வேலை பற்றி விசாரித்தார். நான் அடுத்த வேண்டுகோள் வைத்தேன் தங்களை பார்க்க வர வேண்டும் என்று. அவர் வாங்களேன் என்று சொல்லி அடுத்த நாள் மதியம் அப்பாயின்ட்மென்ட் கொடுத்தார். முதலில் என் கையை கிள்ளி பார்த்து கொண்டேன் கனவு கண்டு விட்டோமோ என்று நிஜம் தான் என்று புரிந்தது. சிறகுகள் முளைத்ததாய் ஒரு உணர்வு. இரவும் தூக்கமில்லை ஒரு சாமானியனை ஒரு சாதனையாளர் போன் செய்து பாராட்டுவது சாதாரண செயல் இல்லையே

அடுத்த நாள் அவரை பார்க்க ஆர்வத்துடன் சென்றேன். பெயர் சொன்னவுடன் உள்ளே அழைக்கப்பட்டேன். எனை பார்த்ததும் எழுந்தவர், வாங்க  பாரதி சரவணன் என்றே  அழைத்தார். (கல்லூரி நாட்களில் நான் எனது பெயரை 
பாரதி சரவணன் என்று வைத்து கொண்டேன் அதே பெயரில் தான் பாக்யாவுக்கு கடிதமும் எழுதினேன்.ஆகவே அந்த பெயரிலேயே அழைத்தார்) என்னை அமர சொன்னார். நான் அமர்ந்திருந்தேன் என்றாலும் உள்ளுக்குள் மிதந்து கொண்டிருந்தேன் என்பதை சொல்ல வேண்டுமா என்ன.அவரது புதிய படம் பற்றி கேட்டறிந்தேன்.என் குடும்பம் பற்றி அக்கறையோடு விசாரித்தார். நான் எனது நாவலை அவரிடம் அளித்த போது நான் அவரிடம் சொன்னதை இங்கே தெரிவிக்கிறேன் 

தங்களை துரோனாசாரியாராக ஏற்று ஒரு ஏகலைவன் போல் நானிருந்து தங்களின் திரைப்படங்கள் பார்த்து கற்று கொண்டதை வைத்து நான் 
எழுதிய (திரைக்கதை) நாவல் இது என்று சொல்லி ஆசி பெற்றேன் 

எனது நாவல் புத்தகமொன்றில் ஆட்டோ கிராப் கேட்டேன். நண்பருக்கு வாழ்த்துக்கள் என்று எழுதி கையொப்பமிட்டது ஒரு இன்ப அதிர்ச்சி. 
போட்டோ எடுத்து கொண்ட போது என் தோளில் கை போட்டு புத்தகத்தை கைகளில் பிடித்த படி  போஸ் கொடுத்தார்.இது இன்னும் ஆச்சரியம்.

 அவரது நேரம் நம்மால் வீணாக கூடாது என்று நினைத்து மனது நிறைய உற்சாகத்தை சுமந்த படி விடை பெற்றேன்.இதோ இந்த பதிவை நான் எழுதும் இந்த நிமிடம் வரை அப்போதைய உற்சாகம் நீடித்து கொண்டிருக்கிறது



வினோவுக்கு போன் செய்து சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டு நன்றி தெரிவித்தேன். எதற்கு என்றார் நீங்கள் என்னை இணையத்துக்குள் இழுக்கவில்லை என்றால் இந்த சந்தோஷம் நடந்திருக்காதே என்றேன் சிரித்தவர் இதில் உங்கள் முயற்சியும் இருக்கிறது சரவணன் என்றார் 
கிரி மற்றும் அரசனிடமும் பகிர்ந்து கொண்டேன்.

அடுத்து நண்பர் எஸ்.எஸ். பூங்கதிருக்கு போன் செய்து, பார்த்து விட்டு 
வந்ததை சொன்ன போது  என் குரலிலிருந்த உற்சாகம் அவர் உணர்ந்திருந்தார். தங்களால் தான் இந்த பாக்கியம் கிடைத்தது. அவரை எப்போது பார்க்க போகிறோம் என்று கனவுலகில் இருந்தவன் கனவை நனவாக்கி பாதை போட்டு கொடுத்தது நீங்கள் தானே. பாக்யராஜ் பற்றி எப்போதெல்லாம் நினைக்கிறேனோ, அப்போதெல்லாம்  நீங்களும் தொடர்ந்து என் 
ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருப்பீர்கள்  என்று சொல்லி நன்றி தெரிவித்தேன் 

பாக்யாவில் நம் எழுத்தெல்லாம்  வருமா இருபது வருடங்களுக்கு மேல் ஏக்கத்தில் இருந்தவனுக்கு அவரே போன் செய்து பாராட்டு தெரிவித்தது மட்டுமில்லாமல் இதோ இந்த வார பாக்யாவில் எனது சிறுகதையான பெற்றோர் கதையையும் பிரசுரித்திருக்கிறார் (மே 09 -2014) அதற்காக 
தான் குறிப்பிட்டேன் இதற்கு தானே ஆசைபட்டாய் சரவணா என்று. 

எனக்கு கிடைத்த பெருமையை பற்றி இங்கே சொல்வதை விட,  ஒரு வாசகனை ரசிகனை போன் செய்து பாராட்டும் அளவிற்கு எவ்வளவு நல்ல உயர்ந்த மனிதர் அவர் என்பதை அனுபவ ரீதியாய் நான் உணர்ந்ததை 
இங்கே சொல்லவே  இந்த பதிவு. 

உங்களிடம் அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.ஏனெனில்,உங்கள் ஒவ்வொருவரின் ஊக்கம் தானே என்னை தொடர்ந்து எழுத வைத்து இதோ இந்த சந்தோச நிகழ்வுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது 

FINAL PUNCH

ஆண்டவன் திரைகதை பற்றி ஏதோ சொன்னாயே என்று தானே கேட்கிறீர்கள் நான் இரு வருடங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் அவர்கள் என்னை போனில் தொடர்பு கொண்டு பேசுவதாக ஒரு கற்பனை பதிவு (ஜூலை 2011) எழுதினேன் ஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன் அதில் அவர் இணையத்தில் உன் பதிவுகள் படித்தேன் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது ஆகவே போன் செய்தேன் என்பதாக எழுதியிருந்தேன் இது அதீத கற்பனை தான் பேராசை தான். இருந்தும்  ரஜினி ரசிகர்கள் (எனது நண்பர்களும் கூட)  என்னை 
பாராட்டி, சீக்கிரமே உங்கள் ஆசை நிறைவேறட்டும் என்று வாழ்த்தினார்கள். 

பாருங்களேன் ஆண்டவன் நான் மதிக்கும் திரு.பாக்யராஜ் மூலம் அந்த கனவை நிறைவேற்றியிருக்கிறான் எனும் போது தான் அவனின் 
திரைக்கதை பற்றி நினைத்து வியக்கின்றேன்.

ஆர்.வி.சரவணன்