வெள்ளி, அக்டோபர் 28, 2011

இளமை எழுதும் கவிதை நீ - 2 (தொடர்கதை )



இளமை எழுதும் கவிதை நீ - 2
(தொடர்கதை)






அத்தியாயம் - 2

பிரம்மன் உனை மிக அழகாய் படைத்திருக்கிறான் இருக்கட்டும்
என்னை படைத்தது உனக்காக தானா ?


ன் மேல் விழுந்த மாலையை கையில் பிடித்தவாறு கண்களில் கோபத்தை வடித்தவாறு சிவாவின் அருகில் வந்த உமாவை பார்த்த கார்த்திக் கிண்டலாய் , "நீங்களும் மாலை போட வந்தீங்களா போடுங்க " என்றான்

"நான் மாலை போட வரலே கேட்க வந்தேன்"

"இன்னொரு மாலை வேணுமா"

"ஹலோ வார்த்தை இடக்கு மடக்கா வருது மரியாதையா பேசுங்க"

சிவா கைகளை கட்டியவாறு வைத்த கண் வாங்காமல் உமாவையே பார்த்து கொண்டிருந்தான்

"இத பார் மாலை விழுந்துச்சின்னா தூக்கி எறிஞ்சிட்டு போ அதை விட்டுட்டு இங்கே வந்து எதுக்கு விசாரணை பண்றே"

"அதானே சிவா மாலை போட மாட்டானா னு எத்தனை பொண்ணுங்க ஏங்குது தெரியுமா நீ என்னடானா ரொம்ப சிலிர்த்துக்கிறே" ஒரு நண்பன்

"இத்தனை பொண்ணுங்க இருந்தும் உன் மேல மட்டும் மாலை விளுந்துசின்னா என்ன அர்த்தம்"

"சுயம்வரம் மாதிரி சிவா உன்னை பிடிச்சு போய் மாலை போட்டுட்டான்னு அர்த்தம் இந்த கான்செப்ட் லே யோசிச்சி பாரு கணக்கு கரெக்டா வரும் "

என்று ஒரு நண்பன் சொன்ன அடுத்த விநாடி உமாவின் கை அவன் கன்னத்தில் இறங்கியது


"குரங்கு கையில் பூமாலை கிடைச்சா என்ன பண்ணும் தெரியுமா இப்படி தான் விட்டெறியுமாம் இந்த கான்செப்ட் லே நீ நினைச்சு பாரு "

என்று சொல்லி விட்டு மாலையை குப்பை தொட்டி நோக்கி வீசிவிட்டு அங்கிருந்து நகன்றாள்.

அவளது அந்த வார்த்தையால் வெகுண்ட அவனது நண்பர்கள் சிவாவை பார்க்க, கார்த்திக் அவளை நோக்கி முன்னேற, சிவா அவன் கை பிடித்து தடுத்தான்

"விட்ருடா"

"சிவா என்னை அடிச்சிட்டாடா"

"பரவாயில்லே நான் அடிச்சதா நினைச்சுக்க"

டேய் நீயும் அவளும் ஒண்ணா

என்ற கேள்விக்கு பதிலேதும் சொல்லாமல் சிரித்து கொண்டே, அறை வாங்கிய கன்னத்தை இலேசாக தட்டி விட்டு பைக்கை நகர்த்தினான்

"என்னடா இவன் இப்படி சொல்லிட்டு போறான்"

"அவ மேலே கண் வச்சிட்டாண்டா சிவா "

"இது எதுலே போய் முடியும்"

"அவனது படுக்கையறைக்கு அவள் வந்தவுடன் முடிவுக்கு வந்துரும்"

------

"கண்டிப்பா முடியாது"

என்று சொன்னான் பாலு

அந்த கல்லூரியில் யாரை பற்றி வேண்டுமானாலும் அவனிடம் நியூஸ் கிடைக்கும் ஆகவே அவனுக்கு கல்லூரியில் பயோ டேட்டா பாலு என்பது அவனது செல்ல பெயர்

"என்னடா சொல்றே" சிவா

"புதுசா இன்னைக்கு வந்திருக்கிற பெண்ணோட பேர் உமா ரெண்டு வருஷம் மதுரையில் படிச்சிருக்கு அவங்கப்பாவுக்கு இந்த ஊர் மாற்றலானதாலே மூணாவது வருஷம் இங்கே வந்து சேர்ந்திருக்கு படிப்புல நம்பர் ஒன் பரத நாட்டியம் ஸ்போர்ட்ஸ் லே யும் இன்ட்ரெஸ்ட் ஜாஸ்தி பொண்ணும் ரொம்ப ப்ரில்லியன்ட் நீ இப்ப அடிச்சியே அருள் அவன் இந்த உமாவுக்கு பிரெண்ட் "

------

"காலேஜ் சூப்பர் காலேஜ் கோச்சிங் டிசிப்ளின் லாம் பக்கா என்ன திருஷ்டி மாதிரி இந்த பசங்க ரெண்டு பேர்"

உமா வகுப்பறையில் தன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் பெண் சொல்வதை கேட்டு கொண்டிருந்தாள்


"அவங்க நம்ம காலேஜ் நிறுவனரோட பசங்க சிவாவுக்கு உடம்பு பூரா திமிர் எதுக்காகவும் பயப்பட மாட்டான். அவனுக்கு அவன் தம்பி கொஞ்சம் பரவாயில்லை ரெண்டு பேருமே நம்ம கிளாஸ் தான்"

"அதெப்படி அண்ணன் தம்பி ரெண்டு பேரும் ஒரே கிளாஸ் லே"

சிம்பிள் அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரு வயசு தான் வித்தியாசம் அண்ணன் ஒரு வருடம் பெயில் சோ தம்பி அண்ணன் கூட சேர்ந்து படிக்கும் படியாகிடுச்சு

------

"ண்டிப்பா முடியாது னு சொன்னியே ஏன்டா "

"அவங்கப்பா தான் நம்ம ஊருக்கு transfer ஆகி வந்திருக்கிற புது இன்ஸ்பெக்டர் ரொம்ப நேர்மையானவர் எதுனா அந்த பொண்ணுகிட்டே பிரச்னை பண்ணா முட்டிக்கு முட்டி தட்டிடுவார் அதான் அந்த பெண் கிட்டே வம்பு ஒன்னும் வச்சிக்க வேண்டாம் "

"உன்னை பயோ டேட்டா தானே கேட்டேன் நீ ஏன் பய டேட்டா சொல்றே"

"உன்னை பயமுறுத்த சொல்லலைப்பா நான் பயந்துகிட்டு சொல்றேன் "

"நான் இருக்கேன் dont worry"

"இன்னொன்னு தெரியுமா உங்க கிளாஸ் தான் அந்த பொண்ணு"

"இதை தான் பழம் நழுவி பால்லே விழுதுனு சொல்வாங்களோ"


------

"அவங்கப்பா இவங்களை கண்டுக்கிறதில்லையா "

"அவர் டில்லியிலே இருக்கார் வெரி பிஸி இவங்க பண்ற கலாட்டாக்களை இவங்க மாமா காலேஜ் சேர்மன் சொல்லாமே மறைச்சிடுறார்னு சொல்றாங்க "

"இருந்தும் அப்பாவுக்கு பையனை பற்றி தெரியாமயா இருக்கும் "உமா


'தெரிஞ்சிருக்கலாம், கண்டிக்க முடியாமே விட்டுட்டார் னு நினைக்கிறேன் '

"இந்த வருஷம் முழுக்க இவன் கூட மல்லுக்கு நிக்க வேண்டியிருக்கும்னு நினைக்கிறேன்"

"அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது பயப்படாதே"

"பயமா எனக்கா ஹ இவன்லாம் எனக்கு சுண்டைக்காய் என்ன பண்ணிடுவான்னு பார்க்கிறேன்"

------

குப்பறைக்குள் சிவா கார்த்திக் உள் நுழைந்தவுடன், வகுப்பறையில் அமர்ந்திருந்த அனைவரும் எழுந்து "மார்னிங் சிவா" என்றனர் உமா மட்டும் எழவில்லை

சிவா பதிலுக்கு தலை அசைத்துக்கொண்டே
ஓரகண்ணால் உமாவை கவனித்து, அவள் முதல் பெஞ்சில் அமர்ந்திருப்பதை பார்த்து அவனும் அவளுக்கு நேர் எதிரே உள்ள பெஞ்சில் அமர்ந்தான்

"டேய் சிவா என்னடா முன்னாடி உட்கார்ந்திட்டே"

பின்னாலிருந்து நண்பர்களின் குரல்

"இனிமே என் சீட் இதான், நீங்க அங்கேயே உட்காருங்க"

"என்னடா சிவா அங்கே உட்கார்ந்துட்டான்"

அவளை ஒரு கை பார்க்க முடிவு பண்ணிட்டான்னு நினைக்கிறேன் கார்த்திக்

அந்த நேரம் பார்த்து பேராசிரியர் உள்ளே நுழையவும் சிவாவை தவிர மற்ற எல்லோரும் எழுந்து வணக்கம் தெரிவித்தனர்

நடிகர் மனோபாலாவை நினைவு படுத்திய தோற்றத்தில் இருந்த அவர் "என்ன பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் ஹாலிடே எல்லாம் எப்படி போச்சு"

"உங்களை பார்க்காமல் ரொம்ப கஷ்டமா போச்சு சார் " கார்த்திக்

வேறு மாணவன் என்றால் இதற்கு ஏதேனும் சொல்லியிருப்பார். ஆனால் பேசுவது இந்த காலேஜ் நிறுவனர் பையன் என்பதால் ஒன்றும் சொல்லாமல் சிரித்து கொண்டே உமாவை பார்த்தார்

"உமா ரெண்டு வருஷம் ரொம்ப நல்ல மார்க்ஸ் எடுத்திருக்கே நீ வந்ததில் எங்க காலேஜ் க்கு ரொம்ப பெருமை நல்லா படிச்சு நீ முதல் மார்க் வாங்கணும் "

"கண்டிப்பா சார் "

என்று உமா எழுந்து பணிவுடன் சொல்லி அமர்ந்தாள்.

இந்த உரையாடல்களை கவனித்து கொண்டிருந்த சிவா வாய் திறக்கும் முன்னேஅவன் தம்பி கார்த்திக் எழுந்து,

"அது என்ன சார் இன்னைக்கு சேர்ந்த உமா மேல மட்டும் அவ்வளவு எதிபார்ப்பு வைக்கிறீங்க" என்றான்

"அதானே புதுசா யாராவது வந்தா அவங்களை தூக்கி தலை மேலே வச்சுக்குவீங்கலே "என்றான் இன்னொரு மாணவன்

"நாங்கெல்லாம் படிக்க மாட்டோமா மார்க் எடுக்க மாட்டோமா "

இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ப்ரொபசர்,

" எல்லாருமே படிச்சு நல்ல மார்க் எடுக்கனும்னு தான் நான் ஆசைபடறேன் "என்றார்

"அப்புறம் ஏன் அந்த பொண்ணுக்கு மட்டும் ஸ்பெஷலா சொல்றீங்க"

உடனே உமா எழுந்து "சார் நீங்க அவங்களை புகழ்ந்து நாலு வார்த்தை பேசுங்க ரொம்ப ஏங்கறாங்க "என்றாள்

கார்த்திக் எழுந்து," என்ன ரொம்ப பேசறே நீ " எகிற ஆரம்பித்தான்

அப்போது சிவா குறுக்கிட்டு இருடா என்று தம்பியை அடக்கினான்

ப்ரொபசரிடம் , " இந்த வருஷம் நம்ம காலேஜ் லே நான் first வர்றேன் முடியாதுனு
நினைக்கிறீங்களா " என்றான்

"யாருப்பா சொன்னது நீ நினைச்சா முடியும்பா"

கூடவே ஒவ்வொரு மாணவனாய் எழுந்து சார் நான், சார் நான் என்று குரல் கொடுக்கவே "எல்லாராலேயும் முடியும்பா " என்று பதில் கொடுத்தார் திணறி போய்

உமாவின் பக்கத்தில் அமர்ந்திருந்தவள் உமாவின் காதில் , "பிட் வச்சு எழுதினா யார் வேணும்னாலும் முதல் மார்க் வாங்கலாம் "என்று காதை கடிக்க

உமாவும் உடனே, " சார் நல்லா படிச்சு பிட் எல்லாம் அடிக்காமே மார்க் வாங்கறது தான் உண்மையான கௌரவம் "என்று சொன்னவுடன் கோபமாய் எழுந்த சிவா

தன் கையில் வைத்திருந்த நோட் புக்கை டெஸ்கில் அடித்தான்

வகுப்பறையே அவன் கோபத்தை பார்த்து அதிர்ந்தது

"நீ ரொம்ப யோக்கியம் னு பீத்திக்கிறியா இந்த வருஷம் உன்னை விட ஒரு மார்க்காவது நான் கூடுதலா எடுத்து காட்றேன் பார்க்கறியா" கை சொடுக்கி சவால் விட்டான்

"ஏன் ஒரு மார்க் னு சின்னதா தின்க் பண்ணனும் திங்கிங் பெரிசா இருக்கட்டுமே அப்ப தான் சாதனையும் பெரிசா இருக்கும் " உமா

"உனக்கு அது வேதனையா இருக்கும் பரவாயில்லியா" என்று கார்த்திக் கிண்டலாய் சொல்லவும் வகுப்பறையே சிரித்தது

உமாவின் சிவந்த முகம் அவமானத்தில் இன்னும் சிவந்தது

தொடரும்

ஆர்.வி.சரவணன்


The content is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

ஞாயிறு, அக்டோபர் 23, 2011

இளமை எழுதும் கவிதை நீ .... (தொடர்கதை)





முன்னுரை

நான் தொடர்பவர்களுக்கும் என்னை தொடர்பவர்களுக்கும் எனது வணக்கங்கள். எனது ஒரு சிறு முயற்சியான இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதை இந்த இடுகையில் ஆரம்பமாகிறது.
இந்த கதை முழுக்க முழுக்க என் கற்பனையில் உருவானது


நான் கல்லுரி படிக்கும் காலத்தில் ஒரு சினிமா பணியில் உருவாக்கிய இந்த கதையை இப்போதைய சூழ்நிலைக்கேற்ப தொடர்கதையாக மாற்றியிருக்கிறேன். இதில் ஏதேனும் லாஜிக் மீறல் இருக்கலாம் தவறுகளும் இருக்கலாம் எனது கன்னி முயற்சி இது என்பதால் அவற்றையெல்லாம் பொறுத்து கொள்ள வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறேன்

இந்த தொடர்கதை கேட்டு நான் எழுத ஊக்கமளித்து வரும் எனது அலுவலக நண்பர்களுக்கும் கரைசேரா அலை அரசன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி


----------

இளமை எழுதும் கவிதை நீ ....



முதல் அத்தியாயம்


அன்பே உனை பார்க்கும் வரை என் பொழுதே போகவில்லை
பார்த்த பின்னோ என் பொழுதே போதவில்லை




விநாயகர் சன்னதியில் நின்று தோப்புகரணம் போட்டு சாமி கும்பிட்ட உமா பிரசாதத்தை எடுத்து நெற்றியில் இட்டு கொண்டு கல்லூரிக்கு செல்ல கோவிலை விட்டு வெளி வந்தாள்.
கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் இன்று. ஆகவே, சரியான நேரத்திற்குள் காலேஜ் செல்ல வேண்டும் என்ற பரபரப்பு அவளது நடையில் இருந்தது.

அப்பொழுது அவளுக்கு எதிரே வந்த இளைஞன் ஒருவன், " மேடம் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க நான் ரோடு கிராஸ் பண்ணனும் எனக்கு பார்வை தெரியாததால் சிக்னல் எப்ப ப்ரீயாக இருக்குனு சொல்லுங்க நான் போய்க்கிறேன்" என்றான்.

உமா அவனை பார்த்தாள் அவன் கண்களில் கருப்பு கண்ணாடி அணிந்திருந்தான். கையில் வாக்கிங் ஸ்டிக் இருந்தது

வாங்க நானே கொண்டு போய் விடறேன்

"பரவாயில்லீங்க உங்களுக்கு எதுக்கு சிரமம்" என்றான்.

"இந்த ஹெல்ப் கூட பண்ணாமல் இந்த உலகத்திலே நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம் வாங்க" என்று அக்கறையாய் அவன் கையை பிடித்து கொண்டாள்

சிக்னல் விழ காத்திருந்தாள்

------

கும்பகோணம் நகரின் காவிரி கரை ஓரம் வானளாவிய கட்டடங்களால் எழும்பியிருந்த கிருஷ்ணாலயா காலேஜ் என்ற தனியார் கல்லூரி கோடை விடுமுறைக்கு பின் துவங்கும் முதல் நாள் இன்று.

கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் மாணவிகள் அங்காங்கே நடந்து கொண்டும் நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் பேசி கொண்டிருந்தார்கள். விடுமுறையில் நடந்த விசயங்களை இன்றே இப்போதே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற பரபரப்பு அவர்கள் பேச்சில் இருந்தது.

கல்லூரி வாசலை நோக்கி நின்றிருந்த ஒரு மாணவர்கள் குழு ரொம்ப சந்தோசமாக இருந்தது அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் ஆளுயர மாலைகள் இருந்தன

"என்னடா மச்சான் நம்ப காலேஜ் ஹீரோவை இன்னும் காணும்"

"அவன் தம்பியையும் இன்னும் காணும்"

"டேய் ரெண்டு பேரும் சேர்ந்து தானேடா வருவாங்க"

"டயமாச்சே இன்னும் காணுமே னு தான் கேட்கிறேன்"

"அவங்களுக்கு என்னடா இந்த ஊரில் பெரிய மனுசங்க அவங்க, காலேஜ் அவங்க அப்பவோடது அவர் சென்ட்ரல் மினிஸ்டர் அவங்க மாமா இந்த காலேஜ் சேர்மன் அவங்க நினைச்ச போது வரலாம் நம்ம நிலைமை அப்படியா சொல்லு"

"ஆமாம்டா ராஜா வீட்டு கண்ணுகுட்டிங்கடா அவங்க"

"ம்ஹும் கன்னுக்குட்டி இல்லடா சிங்க குட்டிங்க"

"அதுக்கெல்லாம் ஒரு யோகம் வேணும் அது நம்ம கிட்டே இல்லே சரி சரிஅந்த யோககாரங்களுக்கு ஒரு போன் போடு"

ஒருவன் செல் எடுத்து நம்பருக்கு முயற்சிக்கையில் அவர்களுக்கு நன்கு அறிமுகமான அந்த பைக் சத்தம் கேட்டது . "வந்துட்டாங்கடா நம்ம தளபதிங்க" என்று சொல்லியவாறு அந்த மாணவர்கள் ஆர்வமாய் முன்னேறினர்.

உள்ளே வந்த பைக்கில் பைக் ஒட்டியவாறு வரும் சிவா தான் இந்த கதையின் நாயகன் காற்றில் தலை முடி பறக்க குளிர் கண்ணாடி அணிந்து ஜீன்ஸ் பேண்ட் இன் பண்ணிய அரைக்கை சட்டை மற்றும் கழுத்து கை விரல்களில் நகை கடை யையே அணிந்தவன் போல் திமிரான பார்வை யுடன் வரும் அவன் பின்னே, தோற்றத்தில் உடையில் அவனை போலவே அமர்ந்திருந்தவன் அவன் தம்பி கார்த்திக்.

சிவாவிடம் இருக்கும் ஒரு திமிர் தனம் அவன் தம்பியிடம் இல்லை.பைக் மிக வேகமாக வந்து அவர்களது நண்பர்கள் நின்று கொண்டிருந்த இடத்தில நிற்காமல் அவர்களை தாண்டி சென்று கொஞ்சம் முன்னே சென்று கொண்டிருந்த இன்னொரு மாணவர் பட்டாளத்தில் உள்ளே நுழைந்தது. எதிர் பாராமல் நுழைந்த பைக்கை கண்டு நிலை குலைந்து திசைக்கு ஒருவராய் சிதறினர் மாணவர்கள்.

பின்னால் அமர்ந்திருந்த தன் தம்பியிடம் பைக்கை, அம்போ வென விட்டு விட்டு சிவா ஓடி சென்று சிதறிய மாணவர்களில் ஒருவனின் சட்டை காலரை பற்றினான்

------

சிக்னல் விழுந்தவுடன் உமா அந்த பார்வையற்ற இளைஞனைஅழைத்து கொண்டு ரோடை கிராஸ் செய்தாள். ரோடின் ஓரத்தில் பாதுகாப்பான இடத்தில அவனை விட்டு, " இது போதும் லே இனிமே போயிடுவீங்க தானே" என்று அக்கறையுடன் கேட்டாள்.

அவன் உடனே, " இது போதுங்க இன்னைக்கு முழுக்க என் பொழுதே சந்தோசமா போகும்" என்று சொல்லி கண்ணாடியை கழட்டினான் .

கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்த சில இள வட்டங்களை நோக்கி "ஹாய் பிரண்ட்ஸ் நான் ஜெயிச்சிட்டேன்" என்றான் .

உமா திகைப்புடன் அவனை பார்த்தாள்

ஒண்ணுல்லே மேடம் உங்க கையை பிடிச்சிட்டு வரேன் பார் என்று பசங்க கிட்டே
சவால் விட்டேன். அதான் இப்படி பார்வையற்றவனா நடிக்க வேண்டியதாயிடுச்சி

உமாவின் பார்வையில் இப்போது அனல் தகித்தது

------

வன் கன்னத்தில் மாறி மாறி அறைந்த சிவா அவன் தலை முடியை கொத்தாக பிடித்து , "பேனா இருந்தா எது வேணா எழுதுவியாடா நீ " என்று கேட்டான் .

அடிபட்ட மாணவன் நிலை குலைந்து பதில் ஒன்றும் சொல்லாமல் சிவாவை பார்த்தான்

என்னடா பார்க்கிறே உன் பேனா தான் பேசுமா நீ பேச மாட்டியா

அதற்குள் அவ்விடத்தை வந்து சூழ்ந்து கொண்ட அவன் நண்பர்கள், " என்னாச்சுடா வந்ததும் வராததுமா சிவா கிட்டே அருள் மாட்டியிருக்கான். கொத்து கறி பண்ற அளவுக்கு என்னடா பண்ணான் அவன் " என்று கார்த்திக்கை கேட்டார்கள்

பைக்கில் அமர்ந்து நடப்பவைகளை பார்த்து கொண்டிருந்த அவன் தம்பி கார்த்திக்
இவர்களிடம் திரும்பி , "அவன் நடத்தற காலேஜ் மேகசின் லே எங்க ரெண்டு பேர் பற்றியும் தப்பா எழுதியிருக்கான்"

இந்த காலேஜ் லே எங்க சர்வாதிகாரம் தான் நடக்குதாம் எங்க கிட்டேருந்து இந்த காலேஜை காப்பாற்ற கடவுள் தான் அவதாரம் எடுத்து வரணும்னு கவிதை எழுதியிருக்கான்

மெகசின் பப்ளிஷ் பண்ணிட்டானா

இல்லை பிரிண்டிங் காக போயிருக்கு. பிரிண்டிங் பிரஸ் லே இருந்து போன் போன் பண்ணி இந்த மாதிரி எழுதியிருக்கு உங்களுக்கு தெரியுமா பிரிண்ட் பண்ணலாமா னு கேட்டாங்க அதான் வந்து உதைக்கிறான் சிவா

பிரிண்டிங் பிரஸ் தப்பிச்சுது இல்லேனா அது இந்நேரம் தரை மட்டமாகி இருக்கும்

"அருள் உனக்கு ஏன்பா இந்த வேலையெல்லாம் இந்நேரம் நீ நம் மன்னரை போற்றி கவிதை எழுதியிருந்தால் ஏதேனும் பொற்காசு கிடைச்சிருக்கும்லே"

என்று ஒருவன் சொல்ல

அந்த நேரம் அங்கு வந்த ஒரு ப்ரொபசர் இதை பார்த்து,

"விடுப்பா சிவாகூட படிக்கிற பையனை இப்படி எல்லாரும் பார்க்கிறப்ப அடிக்கலாமா"

"அப்ப தனியா வச்சி அடிக்கலாமா " கார்த்திக்

"என்னப்பா இப்படி பேசறே நம்ம காலேஜ் லே ஸ்போர்ட்ஸ் லே எவ்வளவு பெரிய ஆள் அவன் அதுக்காகவாவது விட்டுடேன்"

"ஸ்போர்ட்ஸ் லே விளையாடட்டும் சார் என் கிட்டே விளையாடலாமா" சிவா

இத்தனை பேர் வேடிக்கை பார்க்கிறப்ப நீங்க மட்டும் ஏன் இங்கே வந்து குரல் கொடுக்குறீங்க முடிஞ்சா வேடிக்கை பாருங்க இல்லே போய்கிட்டே இருங்க

என்று சொல்லவும் அவ் விடத்தை விட்டகன்றார் அவர்

சிவா அருளிடம் திரும்பி

"இத பார் இந்த காலேஜ் இப்படி தான் இருக்கும் நாங்களும் இப்படி தான் இருப்போம் இருக்க முடிஞ்சா இரு இல்லே னா காலேஜை விட்டு ஓட்ரா" என்றான்

கசங்கிய சட்டையை நீவி விட்டவாறு அவ்விடத்தை விட்டு அகன்றான் அருள்

------

வன் சட்டையை கொத்தாக பற்றிய உமா ஓங்கி அவன் கன்னத்தில் அடித்தாள். இதில் நிலை குலைந்தவனை பார்த்து

"ராஸ்கல் பொண்ணுன்னா கிள்ளு கீரையா உனக்கு உன்னை நான் அறைஞ்சது, நீ என் கையை பிடிச்சிகிட்டு வந்ததுக்காக இல்லே ஏன்னா அதனாலே ஒன்னும் என் கற்பு பறி போயிடாது ஆனா இப்படி மாற்று திறனாளி மாதிரி நடிச்சு ஏமாத்தினே பாரு அதற்காக தான் அடிச்சேன் நீயும் ஒரு ஆண் மகன்னு வாழ்ந்திட்டு இருக்கே ச்சே"

என்று வெறுப்புடன் வார்த்தைகளை உமிழ்ந்தாள்

அந்த கோபம் தணியாமலே கல்லூரிக்கு வேகமாய் நடக்க ஆரம்பித்தாள்

"இந்த வருடத்தின் நம் கல்லூரியின் மாணவர் தலைவன் சிவா வாழ்க" என்று கோஷமிட்ட படி ஒவ்வொருவரும் சிவாவுக்கு மாலை அணிவித்தனர்

டேய் எதுக்குடா இவ்வளவு மாலையெல்லாம்
நான் கேட்டனா

சிவா உனக்கு மாலை போடணும்னு ஆசைப்பட்டு நாங்க எங்க வீட்டில் தெரிஞ்சு கொஞ்சம் தெரியாம கொஞ்சம் னு காசு எடுத்துட்டு ஆசையாய் வாங்கி வந்திருக்கோம் நீ என்னடான்னா இப்படி சொல்றே

"ஓகே ஓகே சாரி" என்று மாலைகளை வாங்கி கொண்டவன்
இந்த மாலைகளையெல்லாம் வேற நான் கழட்டனுமா" என்று சலித்து கொண்டான்

"என்னடா அவனவன் மாலை மரியாதை கிடைக்காதா னு ஏங்கறான் நீ சலிச்சுக்கிறே ஒவ்வொன்னா மாலையை கழட்டி எல்லா பக்கமும் வீசுடா " கார்த்திக்

சிவா ஒவ்வொன்றாக மாலைகளை கழட்டி திசைக்கொன்றாய் வீசினான்

அவன் வீசிய மாலைகளில் ஒன்று கல்லூரிக்குள் வந்து கொண்டிருந்த உமாவின் கழுத்தில் சென்று விழுந்தது உமா அதிர்ச்சி மேலிட மாலை வந்த திக்கை பார்த்தாள்.

அங்கே மாலைகளை வீசி கொண்டிருந்த சிவாவை பார்த்தவளுக்கு கோபம் தலைக்கேறியது . கழுத்தில் விழுந்த மாலையை வெறுப்புடன் கழற்றியவள் அதை தன் இடது கையில் அருவெறுப்புடன் பிடித்தவாறே சிவா இருந்த இடம் நோக்கி வந்தாள்.

இதை கண்ணுற்ற நண்பர்கள் சிவாவிடம் சைகை செய்யவே பைக்கில் அமர்ந்திருந்த
சிவா திரும்பி பார்த்தான்.

தூய வெண்மையில் சுடிதாருடன் சிகப்பு சால் அணிந்து, தேவதையாய் வரும் அவளை கண்டு பிரமித்தான்

தென்றல் அவள் கை பிடித்து அழைத்துக் கொண்டு வருகிறதா இல்லை தென்றலை இவள் கை பிடித்து அழைத்து கொண்டு வருகிறாளா என்று அவன் மனசுக்குள் பட்டிமன்றம் ஆரம்பாயிற்று



தொடரும்


படம் : நன்றி ஓவியர் இளையராஜா


ஆர்.வி.சரவணன்

The content is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

புதன், அக்டோபர் 19, 2011

ஹாப்பி தீபாவளி


ஹாப்பி தீபாவளி



எங்கள் வீட்டில் கார்த்திகை திருநாள் அன்று எடுத்த படம்


நகைச்சுவை


அமைச்சர் : மன்னா இன்றைக்கு உங்களுக்கு இரண்டு ப்ரோக்ராம் இருக்கிறது

அரசர் : என்னென்ன சொல்லுங்கள்

அமைச்சர் : நீங்கள் மகாராணியோடு தீபாவளி ஷாப்பிங் செல்ல வேண்டும்


அரசர் : நான் வரவில்லை என்று சொல்லிவிடு அடுத்து என்ன

அமைச்சர் : எதிரி நாட்டு மன்னன் போரிட அழைப்பு அனுப்பியிருக்கிறான்

அரசர் : வருகிறேன் என்று ஓலை அனுப்பி விடு அதற்கு இதுவே மேல்


----------


ஓவியம்

என் மகன் ஹர்ஷவர்தன் வரைந்த தீபாவளி வாழ்த்து


----------


கவிதை

தொலைகாட்சி தொடரில் மனைவியும்

கணினியில் கணவனும்

ஒளித்தோற்ற விளையாட்டில் குழந்தைகளும்

தனித்தனியே அடிமைப்பட்டு இருக்கையில்

அவர்களை ஓரிடத்தில் சேர்த்தது

நின்று போன

மின்சாரம்


----------


என் கேள்விக்கு எனது பதில்


நம்மிடம் வேடிக்கையாக பேசுபவர்களை எப்படி எதிர் கொள்வது ?

ஒரு சுவையான நிகழ்ச்சி சொல்கிறேன் லால் பகதூர் சாஸ்த்ரி அவர்கள் தாஜ்கந்த் சென்ற போது ஒரு பத்திரிகை நிருபர் நீங்கள் ரொம்ப குள்ளம் என்று வேடிக்கையாக கூறினாரம்


அதற்கு அவர், இருக்கலாம் அதனால் எனக்கு நன்மை தான் நான் மற்றவர்களிடம் பேசும் போது நிமிர்ந்து இருப்பேன் அனால் மற்றவர்கள் என்னிடம் பேசும் போது தலை குனிய வேண்டும் என்றாராம் சிரித்து கொண்டே



----------

எனது க்ளிக்


திருபரங்குன்றம் கோவில் சென்றிருந்த போது எடுத்த படம்


----------



தீபாவளி போனஸ் ஒரு சுவாரஸ்யம்

தீபாவளி என்றால் புது துணிமணி , ஸ்வீட், பட்டாசு கட்டாயம் உண்டு ஆனா இதையெல்லாம் வாங்கி சந்தோசமா தீபாவளியை கொண்டாடனும்னா அதுக்கு தேவை தீபாவளி போனஸ். இதை பற்றி ஒரு சுவாரசியம் சொல்றேன் கேளுங்க

நான் முன்பு வேலை பார்த்த ஷேர் புரோக்கர் கம்பெனி நொடித்து போகவே முதலாளி எங்களை அழைத்து கம்பெனி நஷ்டமானதினால் நீங்க வேற வேலை தேடிக்குங்க நீங்க எல்லாரும் வேற வேலைக்கு போகும் வ
ரை இங்கு இருக்கலாம் அது வரைக்கும் என்னால் முடிந்த அளவு சமாளிக்கிறேன் என்றார் வேலை செய்தவர்கள் (கொஞ்சம் பேர் தான் ) வேறு கம்பெனி யில் வேலை கிடைத்து சேர்ந்து விட்டோம் .

அதற்கு பிறகு தீபாவளி மூன்று மாதத்தில் வந்தது தீபாவளிக்கு ஒரு வாரம் முன் அந்த முதலாளி போன் செய்து உங்கள் போனஸ் ரெடியாக இருக்கு வந்து வாங்கிக்குங்க என்றார் எப்படி இருக்கும் எனக்கு. சந்தோசத்துடன் சென்று வாங்கி கொண்டேன் போனஸ் எத்தனை பெர்சென்ட் தெரியுமா 20 பெர்சென்ட் தீபாவளி வரும் போதெல்லாம் அவரது நினைவு தான் எனக்கு வரும் காரணம் அவர் போனஸ் கூப்பிட்டு கொடுத்தார் என்பதல்ல.

கம்பெனி நல்ல நிலைமையில் இருந்து அவர் கொடுத்திருந்தால் அது சாதாரண விஷயம் தான். ஆனால் நஷ்டப்பட்ட நிலையிலும் அவர் நடந்து கொண்ட விதம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. அவரை நல்ல முதலாளி என்று இன்றும் சொல்ல வைக்கிறது


---------------


உங்கள் கனிவான கவனத்திற்கு





நான் எழுதும்

இளமை எழுதும் கவிதை நீ ....

தொடர்கதை

24-10-2011 அன்று தொடங்குகிறேன் என்பதை

நான் தொடரும் நண்பர்களுக்கும்
என்னை தொடரும் நண்பர்களுக்கும்

அன்போடு தெரிவித்து கொள்கிறேன்


ஆர்.வி.சரவணன்


தொடர்கதைக்கான படத்தை வடிவமைத்த நண்பர்
கரை சேரா அலை அரசன் அவர்கள்

வியாழன், அக்டோபர் 13, 2011

ஒரு கிளைமாக்ஸ் காட்சி....







ஒரு கிளைமாக்ஸ் காட்சி....


நான் எழுதிய ஒரு கதையின் கிளைமாக்ஸ் பற்றி இந்த இடுகையில் சொல்கிறேன். அதாவது கதையின் முடிவில் நான் வருவதாக எழுதியிருந்தேன் (இந்த கதை நான் பத்து வருடங்களுக்கு முன் எழுதியது)

இந்த கதையில் ஹீரோ ஹீரோயின் மேல் அதீத காதல் கொண்டு நல்லது பல செய்வார். ஹீரோயினின் நோயை குணமாக்கி அவரது வாழ்க்கையையே மீட்டு கொடுத்திருப்பார். இது எதுவும் ஹீரோயினுக்கு தெரியாது. ஹீரோயினுக்கு தான் விரும்பிய பையனுடன் திருமணம் என்று நிச்சயமான சூழ்நிலையில் ஹீரோ வெறுத்து போய் வெளிநாடு சென்று செட்டில் ஆகி விடலாம் என்று கிளம்புவார்.

அப்போது அவர் நண்பனாக நான் கதையில் (நுழைவேன்) வருவேன் " உன்னை நானே ஏர்போர்ட்டில் ட்ராப் பண்றேன் " என்று சொல்லி அவரை அழைத்து செல்வேன். ஹீரோயின் க்கு அப்போது தான் ஹீரோவின் தியாகம்
பற்றியும் ,தான் விரும்பிய பையனின் நடத்தை பற்றியும் தெரிய வரும். விஷயம் தெரிய வந்தவுடன் ஹீரோவை தடுத்து நிறுத்த கிளம்பி வருவார்.

இதற்கிடையில், உன்னை விரைவாக கொண்டு போய் சேர்த்து விடுகிறேன் பார் என்று சொல்லி நான் குறுக்கு வழியில் ஹீரோவை அழைத்து செல்வேன். அந்த வழியில் நடந்த ஒரு விபத்தால் நாங்கள் டிராபிக்கில் மாட்டி கொள்ளும் சூழ்நிலை உருவாகும். ஹீரோ என்னை பார்த்து கடுப்படிப்பார். பின் ரூட் சரியானவுடன் கிளம்பலாம் என்று பார்த்தால் நான் விரலில் வைத்து சுற்றி கொண்டிருந்த கார் சாவி எங்கேயோ புதரில் சென்று விழுந்து விடும் . ஹீரோ என்னை திட்டி கொண்டே என்னுடன் சேர்ந்து கொண்டு சாவியை தேடுவார்.சாவி கிடைத்து நாங்கள் சென்று சேரும் போது விமானம் கிளம்பியிருக்கும் ஹீரோ என்னை கோபத்தில் அடிக்க ஓடி வர நான் நழுவ, அந்த நேரம் பார்த்து ஹீரோயின் அங்கு பதட்டத்தில் வருவார்.

ஹீரோ வை பார்த்ததும் ஆச்சரியத்தில் வேகமாய் வந்து கட்டி பிடித்து கொண்டு அழுவார் . ஹீரோ பரவசமாய் அணைத்து கொண்டு ஹீரோயின் தலையை தடவி கொடுப்பார்

அந்த நேரம் நான் ஹீரோவை பார்த்து , " நான் வந்த வேலை முடிஞ்சிடுச்சு வரட்டா " என்று கை அசைப்பதோடு கதை முடியும்.

இது எப்படி இருக்கு


இதை எதற்கு சொல்கிறேனென்றால் வரும் தீபாவளி முதல்
நம் குடந்தையூர் தளத்தில் இளமை தொடர்கதை ஒன்று எழுதலாம் என்று
முடிவு செய்திருக்கிறேன் .


அதற்காக தான் என் கதைகளில் ஒன்றில் வரும் கிளைமாக்ஸ் காட்சியை இங்கு உதாரணத்திற்கு தந்திருக்கிறேன்

உங்கள் ஊக்கமும் ஆதரவும் இருந்தால் மட்டுமே எனது இந்த தொடர்கதை முயற்சி வெற்றி பெறும் என்பதையும் உங்களுக்கு அன்புடன் நினைவு படுத்துகிறேன்

ஆர்.வி.சரவணன்

சனி, அக்டோபர் 08, 2011

உன் ஒற்றை பார்வைக்கு....




உன் ஒற்றை பார்வைக்கு....


அன்பே

நீ வரும் வழியெங்கும்

ஒரு கற்றை பார்வைகளை

இறைத்து வைத்திருக்கிறேன்

இவை அனைத்தும்

உன்

ஒற்றை

பார்வைக்காக....

ஆர்.வி.சரவணன்

புதன், அக்டோபர் 05, 2011

பிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன்


பிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன்


நண்பர்களே கொஞ்சம் உடல் நல குறைவால் பத்து நாட்களுக்கும் மேல் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டதால், பதிவுலகில் ஒன்றும் எழுதவில்லை மற்ற பதிவர்களின் பதிவுகள் படிக்கவில்லை.

(யாரேனும் ஒருவராவது என்னப்பா இவனை காணுமே என்று நினைத்திருக்கலாம் இல்லியா அதற்காக மட்டுமே இந்த செய்தி )

இந்த இடுகை எனது நூற்றைம்பதாவது இடுகை. கொஞ்சம் நடுநடுவே பழைய இடுகைகள் மீண்டும் வந்திருக்கின்றன என்றாலும் கணக்கு படி 150 வது பதிவு என்பதால் நான் வணங்கும் எனது இஷ்ட தெய்வத்தை பற்றி இந்த பதிவில் சொல்ல வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்ததால் ஒரு பதிவாக தந்திருக்கிறேன்

1991 நான் சென்னையில் வேலை கிடைக்காமல் கஷ்டபட்ட போது (கஷ்டம் என்றால் குடும்பத்தின் மூத்த மகன் நான். தம்பி தங்கை வேலையில் இருந்து நான் மட்டும் வேலையில்லாமல் தத்தளித்த நேரம் அது. நம்மை விட வயதில் சிறியவர்கள் வேலையில் இருக்கும் போது நாம் வேலையில் இல்லையென்றால் அது மிக பெரிய கொடுமை (பேருந்தில் செல்லும் போது பக்கத்துக்கு இருக்கையில் இருப்பவர் நம்மிடம் ஏதேனும் பேசினாலே , பேச்சு வாக்கில் உங்கள் கம்பெனி யில் ஏதேனும் வேலை இருக்குதா என்று கேட்கும் அளவு கொடுமை என்றால் பார்த்து கொள்ளுங்கள்) வீட்டில் வேலையில்லை என்றால் வெளியே போ என்று தந்தை சொல்லிவிட என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீருடன் சைதாபேட்டை வந்து நான் இறங்கிய போது, எதிரில் இருந்தது பிடாரிஸ்ரீ இளங்காளி அம்மன் ஆலயம் மனதில் கனத்துடன் உள்ளே சென்றேன்.

முதல் முறை அந்த கோவிலுக்கு அப்போது தான் செல்கிறேன் அம்மனை வணங்கி நிற்கும் போது நான் வேண்டியது , எனக்கு இன்றே ஏதேனும் வேலைக்கான பிடிமானம் கொடு இல்லையெனில் என்னை இந்த உலகத்திலிருந்து வெளியேற்றி விடு. இதனால் யார் குடியும் முழுக போவதில்லை என்று உறுதியாய் கூறி விட்டு கண்ணீருடன் வெளி வந்தேன்

அப்போது என் கையில் இருந்த அன்றைய தினசரியில் ஸ்க்ரீன் பிரிண்டிங் கம்பெனிக்கு ஆள் தேவை என்பதை படித்தவுடன் அந்த கம்பெனி அட்ரஸ் தேடி கொண்டு சென்றேன் நம்பிக்கையில்லாமல். ஆனால் பாருங்கள் சென்று பார்த்தவுடன் அன்றே வேலை கிடைத்தது அப்போதே வேலையில் சேர்ந்து விட்டேன். அன்று மாலை தலை நிமிர்ந்து வீடு சென்றேன் பின்பு அந்த கம்பெனியில் இருந்து வேறு இன்னும் நல்ல கம்பெனி வேலை கிடைத்தது தொடர்ந்து மென் மேலே கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து இப்பொழுது பெரிய நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் வாழ்வதற்கு தேவையான சம்பளத்தில் இருக்கிறேன். கஷ்டங்கள் பலவற்றை கடந்து இன்று வரை எந்த தொய்வில்லாமல் தொடர்ந்து இன்று நல்ல நிலையில் நான் இருக்கிறேன்


அன்று பைசா காசில்லாமல் இருந்த நான் இப்போது அலுவலக வேலைக்காக விமானத்தில் சென்று வரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால்
அதற்கு என் உழைப்பும், எப்படியாவது முன்னுக்கு வந்தே ஆக வேண்டும் என்ற எனது வெறியும் ஒரு சிறு காரணம் என்றாலும், இந்த தெய்வத்தின் அருள் இல்லையில் இதெல்லாம் சாத்தியமாகுமா சொல்லுங்கள் .

அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் தேதி அன்று அதி காலை முதல் வேலையாக குளித்து எதுவும் சாப்பிடாமல் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசித்து அர்ச்சனை செய்து அங்கு கொடுக்கும் முதல் பிரசாதம் சாப்பிட்ட பின் தான் வேறு ஏதேனும் சாப்பிடுவேன் அதற்க்கப்புறம் தான் வேறு வேலை ஆரம்பமாகும் (இது சென்னையில் ஜனவரி முதல் தேதி அன்று இருந்தால் ) அதே போல் ஒவ்வொரு தீபாவளிக்கும் புடவை எடுத்து கொண்டு சென்று கொடுத்து விடுவேன்.இருந்தும் இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது

கஷ்டம் என்று யாரேனும் வந்து என்னிடம் சொன்னால் கோயிலுக்கு சென்று குறைகளை சொல்லி வாருங்கள் என்று சொல்வேன் அதே போல் பலரும் சென்று குறை நீங்கி என்னிடம் வந்து திருப்தியுடன் சொல்லும் போது சந்தோசமாக இருக்கும்

எனக்கென்று ஏதேனும் வேண்டினால் பலன் கிடைக்காது அனால் அதுவே மற்றவர் நலனுக்காக வேண்டினால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.
சொந்தகாரங்களில் இருந்து நண்பர்கள் வரை என்னை வேண்டி கொள்ளுங்கள் என்பார்கள் வேண்டியிருக்கிறேன் நடந்திருக்கிறது.இதற்காக நான் கவலைப்படவில்லை அடுத்தவருக்காக பிரார்த்திக்கும் உரிமை எனக்கு கிடைத்திருக்கிறதே அதுவே ஒருசந்தோசம் தானே

கஷ்டங்களில்லாத மனிதன் ஏது இருந்தும் அந்த கஷ்டங்களை நம்மால் தீர்க்க முடியாத போது இறை அருளை நாடி நிற்கிறோம்

வேலையில்லை, பணமில்லை என்ற ஒரு காரணத்திற்க்காக நான் அவமானப்பட்ட காலம் போய் பரவாயில்லையே முன்னுக்கு வந்து விட்டானே என்று எல்லோரும் சொல்லத்தக்க வகையில் நான் இன்று இருப்பதற்கு பிடாரிஸ்ரீ இளங்காளி அம்மன் அருள் மிக முக்கியமானது.

அம்மன் அருள் என்றும் என்னை வழி நடத்தும்
உங்களுக்கும் அம்மன் அருள் பரிபூரணமாய் கிட்டட்டும்

இந்த ஆலயம் இருக்கும் இடம் சைதாபேட்டை மெயின் ரோடில் உள்ளது இந்த கோயில் பற்றிய வரலாறு, செய்திகளை பின்னே ஒரு பதிவாக தருகிறேன்

ஆர்.வி.சரவணன்