செவ்வாய், ஜனவரி 28, 2014

அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா
அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா

(அரசியல் அனுபவத்துக்கு இதை விட பெட்டரா தலைப்பு வேணுமா என்ன.இருந்தும் அண்ணனோட டயலாக் என்பதால் அவரது இமேஜ்) 

 1991 ஆம் வருடம் சென்னையில்  நான் ஒரு ஸ்க்ரீன் பிரிண்டிங் கம்பெனியில் வேலை பாத்துகிட்டு இருந்தேன். பேருந்தில் தான் அலுவலகம் வருவேன்.பேருந்தில் தினம் பயணம் செய்பவர்களில் ஒருவர் (பார்த்தா சிரிக்கிறது அவ்வளவு தான் நட்பு ) ஒரு நாள் என்னிடம் பேசி கொண்டிருந்த போது என்ன பண்றீங்க என்றார்.

நான் (சும்மா இருந்திருக்கலாம் வம்பை விலை கொடுத்து வாங்கணுமா) வேலை பார்க்கும் கம்பெனி பற்றி சொன்னேன் சொன்னவுடன் அவர் "எனக்கு விசிட்டிங் கார்டு நூறு போட்டு கொடுங்க" என்றார். .நான் என்னோட வேலை மார்க்கெட்டிங்  இல்லை என்று
நழுவினேன். "அதனாலென்ன ஆர்டர் கொடுத்தா வேண்டாம் னாசொல்ல போறாங்க நீங்க போட்டு கொடுங்க என்று என் கையில் ஐம்பது ரூபாய் கொடுத்து விட்டார். தான் உறுப்பினராய் இருக்கும் கட்சி யின் பேர் சொல்லி கட்சி தலைவரின் போட்டோவுடன் விசிடிங் கார்டு போட்டு கொடுத்துடுங்க என்றார்.

நான் எனது கம்பெனியில் இதை பற்றி சொன்ன போது மேனேஜர், "நீ ஆர்டர் எடுத்திருப்பது மகிழ்ச்சி தான். இருநூறு ரூபாய் ஆகும்னு  சொல்லிடு. ஆள் கரெக்டா காசு கொடுப்பாரா என்றும் சரி பார்த்து கொள்" என்று சொல்லவே  நான் கொஞ்சம் உஷாராகி, மறு நாள் அவரை 
பார்க்கும் போது "இருநூறு ரூபாய் ஆகுமாம்" என்று  கழண்டுகொள்ள பார்த்தேன் 

அவர் "அதனாலென்ன போட்டுடுங்க" என்று உறுதியாக சொன்னார். நானும் கார்டு போட 
சொல்லி விட்டேன். கார்ட் ரெடியானவுடன் எடுத்து கொண்டு சென்று அவரை பேருந்து நிலையத்தில் பார்த்து கொடுத்தேன்.  நல்லாருக்குப்பா. தாங்க்ஸ் என்றார்.மீதம் 
150 ரூபாய் கேட்ட போது அவர்  நாளை தருகிறேன் என்றார். மறு நாளிலிருந்து அவரை 
பார்க்க முடியவில்லை.

ஒருவாரம் சென்றது. எனது மேனேஜர் என்னை பார்த்து "தப்பா நினைச்சுக்காதே காசு வரலைன்னா உன் சம்பளத்தில் இருந்து  பிடிச்சிருவாங்க" என்றார்  சிரித்து  கொண்டே 

நான் டென்ஷன் தாங்க முடியாமல்,அடுத்த நாள் அவரது வீடு எங்கே என்று விசாரித்து கொண்டு சென்றேன். வீட்டில் அவர் இல்லை. அவரது தாயிடம் வந்த விபரத்தை சொல்லி விட்டு வந்தேன். அடுத்த நாள் அவரை பேருந்து நிலையத்தில் பார்த்த போது "எப்படி என் வீட்டுக்கு வரலாம் நீ" என்று கோபமாய் கேட்டார். அலுவலகத்தில் என்னை காசுக்காக நெருக்குவதால் வந்ததாக சொன்னேன். "அதுக்காக வீட்டுக்கு வந்துடுவியா நீ. இனிமே வீட்டுக்கு வர்ற வேலை  எல்லாம் 
வச்சிக்காதே" என்று கறாராய் சொல்லியதன் மூலம் காசு விசயத்தில் தான் கறார் இல்லை என்பதை உணர்த்தி விட்டு காசு தருவதை பற்றி ஒன்றும் சொல்லாமலே சென்று விட்டார்.

பிறகென்ன என்கிறீர்களா.அலுவலகத்தில், நான் அந்த மாத சம்பளம் வாங்கும் போது இந்த 150 ரூபாயை கழித்து கொண்டு தான் கொடுத்தார்கள். எனது தவறால் கம்பெனிக்கு நஷ்டம் ஆக கூடாது என்பதால் சம்பள பிடித்தத்தை முழு மனதுடன் ஏற்று கொண்டேன்.நம்மால் அடுத்தவருக்கு நஷ்டம் வர கூடாது என்ற நினைப்பு ஏன் அந்த மனிதருக்கு இல்லை 
அப்படின்னு டென்சன் ஆக விடாமல்  நம்ம கவுண்டமணி அண்ணன் சொன்ன "அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா" டயலாக் ஞாபகத்துக்கு வந்து விசயத்தை  ஈசியாக எடுத்துக்க சொல்லுது 

FINAL PUNCH 

அப்போது,150 ரூபாய் எவ்வளவு பெரிய தொகை என்பது அந்த கம்பெனியில் எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 400 ரூபாய். என்பதிலிருந்து தெரிந்து  கொள்ளலாம்  

ஆர்.வி.சரவணன்

ஏற்கனவே என் தளத்தில் வெளியான பதிவு இது 

செவ்வாய், ஜனவரி 21, 2014

புத்தக காட்சி 2014 ஒரு பார்வைபுத்தக காட்சி 2014 ஒரு  பார்வை 


வழக்கமாய் நான் ஆரம்பத்திலேயே செல்வதுண்டு. பொங்கலுக்காக
 ஊருக்கு சென்று விட்டதால் இந்த ஞாயிறு தான் (நேற்று) செல்ல முடிந்தது.
புத்தக காட்சி அரங்கினில் நான் நுழைந்த போது பகல் 12 மணி 

என்ன தான் சினிமாவுக்கு டிக்கெட் எடுத்திருந்தாலும் தியேட்டரில் நுழையும் போது ஒரு பரபரப்பு தொற்றும் இல்லையா அது போல் பரபரப்பாய் நெருங்கினேன் 

டிக்கெட் வாங்கி கொண்டு உள் நுழைந்த எனக்கு ( செல் போன்
மூன்று நாட்களாக வேலை நிறுத்தம்  செய்து விட்டதால்  போன் செய்து 
யார் வருகிறீர்கள் என்று கேட்க முடியவில்லை ) அவ்வளவு 
கூட்டத்திலும் தெரிந்த முகங்கள் இல்லையாதலால் ஒரு அனாதை  
உணர்வு ஏற்பட்டாலும், அவை புத்தகங்களை பார்த்தவுடன்  மறைந்து 
போனது  (வெளி உலகமும் தான்  )


வழக்கம் போல் சுஜாதாவின் புத்தகங்களுக்குள் புகுந்து நேரத்தை நிறைய செலவிட்டு 6 புத்தகங்கள் வாங்கினேன்.காயத்ரி, ஆயிரத்தில் இருவர்,ஆதலினால் காதல் செய்வீர்,மறுபடியும் கணேஷ், சிறுகதை 
எழுதுவது எப்படி, கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு 

ஒரு ஸ்டாலில்  26 ரூபாய் கூடுதலாக   பில் போட்டு விட்டார்கள். பின் நான் சரி பார்த்து  சொன்ன போது சாரி கூட்ட நெரிசலில்  தவறாகி விட்டது என்றவர் மூன்று புத்தகங்கள் போட்டு கொடுக்க  கவர் தேடினார் .அவர் எடுத்த கவர் அனைத்தும் பெரிதாக இருக்கவே அதற்காக சளைக்காமல் சிறிய கவர் தேடி எடுத்தே போட்டு கொடுத்தார். அந்த புத்தகங்களை  தவிர எந்த ஒரு 
பேப்பரையும்  அதில்  வைக்க முடியாது ( கூடாது ) என்ற  அளவில் இருந்தது 


நான் மிகவும் எதிர்பார்த்த ராஜேந்திரகுமார் நாவல்கள் இரண்டு கிடைத்தது.
இரண்டு புத்தகங்களும் மொத்தமே 27 ரூபாய் தான் (பழைய பதிப்பு )
நான் பாக்கெட்டில் கை விட்ட போது "சார் சில்லறையா கொடுங்க" என்றார் பில் போடும் இடத்தில  அமர்ந்திருந்த பெண். நான் கேட்டேன் "கரெக்டா 27 ரூபாய்  தான் கொடுக்கணுமா" என்று. அவரது  பக்கத்தில் இருந்தவர் 
அவரிடம் "அவர் பாக்கெட்டிலிருந்து எடுக்க போறது நூறாவும் இருக்கலாம் 500 கூட இருக்கலாம்.  எதுனே  தெரியாமல் அதுக்குள்ளே ஏன் சொல்றீங்க" என்றார் சிரித்த படி . நான் 27 ரூபாய் கரெக்டாக எடுத்து கொடுத்தேன். இருந்தும் புத்தகம் மட்டும் கையில் கொடுத்தார்கள் கவர் என்றவுடன் பிளாஸ்டிக் கவர் கிடைத்தது .அருகில் இருந்தவர் "புத்தக விலை எவ்வளவு " என்றார் அந்த பெண்ணிடம் (அந்த கேள்வி எனக்காகவும் இருக்கலாம்.)

அடுத்து நா .முத்துக்குமார் கவிதை தொகுப்பு  பட்டாம்பூச்சி விற்பவன் ,
 ஆனா ஆவன்னா வாங்கினேன்.(பிடிக்கும் ஆர்வத்திலும் 
படிக்கும் ஆர்வத்திலும் )

முத்து காமிக்ஸில்  (எழுத்தாளர் பாமரன் அவர்களுக்காக) இரும்பு கை மாயாவி கேட்டு அது இப்ப வரதில்லீங்க என்ற பதில் பெற்று நகர்ந்தேன் (கதையில் வருவதை போல் மாயாவி மாயமான  அதிசயம் )

 குறும்பட பயிற்சி தொடர்பாக முன்றில் ஸ்டாலில் விளம்பரம் பார்த்து விட்டு திருநாவுக்கரசு அவர்களிடம் அது குறித்த தகவல்கள் கேட்டு பெற்றேன் 
(குறும்பட ஆர்வம் நெடும் படமாக வருட கணக்கில் )

இப்படியாக சுற்றியதில் மணி 3.30 ஆகியிருந்தது .கால்களில் வலியுடன்  எந்த நண்பரையும் பார்க்காதது  ஏமாற்றமும் தந்தது. பசி வேறு நான் இருக்கிறேன் என்று அலறவே வெளி வந்து சாப்பிட வாங்க என்று அழைக்கப்பட்ட போர்டை நோக்கி நகர்ந்தேன் .சப்பாத்தி  ஒரு பிளேட் 50 ரூபாய் நன்றாக தான் இருந்தது. இருந்தும் சாப்பிட்ட பின் சாப்பிட்ட சுவடே தெரியாதது போல் இருக்கவே வயிறு  இது போதாது இன்னும் கொஞ்சம் போட்டு கொடுங்க  என்று ஆட்டோ காரர் போல் சொல்லவே ஸ்வீட் கார்ன் சாப்பிடலாம் ( 30 ரூபாய்)  என்று நெருங்க நினைத்தும் அந்த பிளாஸ்டிக் கப்  அளவு என்னை நெருங்க விடவில்லை. ஆகவே ப்ரூட் சாலட்  சாப்பிட்டேன் (கால் வலியால் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று காலியாக இருந்த சேர் பக்கம் வந்தால் 
அது கூட ரிசர்வேசன் ஆகியிருந்தது )


மீண்டும் உள்ளே நுழைந்த போது கூட்டம் அதிகமாக  இருந்தது. 
அக நாழிகை பதிப்பகம் ஸ்டால் பார்த்தவுடன் புத்தக ஆர்வத்தில் 
அருகே சென்றேன். எதிர்பாராத திருப்பம் போல் அங்கே செல்லப்பா சார் அமர்ந்திருந்தார்.அருகில் சென்று வணக்கம் வைத்தேன் நலம் பரிமாறிக்கொண்டு புத்தகம், வலை  எழுத்தாளர்கள் என்று பேசி கொண்டிருக்கையில் நண்பர்கள் வந்து கொண்டிருப்பதை எனக்கு தெரிவித்தார். 

அரூர் மூனா செந்தில், செல்வின், சிவகுமார் வந்து சேர்ந்து கொள்ள 
கூடவே பிலாசபி பிரபா அவ்வபோது மின்னலாய் வந்து ஆஜராகி விட்டு சென்று கொண்டிருந்தார் ஸ்டால்களுக்குள். கவியாழி மற்றும் புலவர் 
அய்யா ராமானுஜம் ,சீனு,ஸ்கூல் பையன் ரூபக் ராம் போலி
பன்னிகுட்டி , பாலகணேஷ் என்று நண்பர்கள் தொடர்ந்து வரவே  அந்த இடமே  களை கட்டியது (நான்கு மணி நேரமாக அனாதையானது போன்று  வலுகட்டாயமாக தோன்றிய எண்ணத்தை  அனைவரும் 
சொடக்கு போடும் நேரத்தில் வெளியேற்றினர்) 

தேனம்மை லக்ஷ்மணன், பத்மஜா நாராயணன்,எழுத்தாளர்  உஷா  
ராமச்சந்திரன், கவிஞர் உமா மோகன்,ஆகியோரும் வந்து விடவே  
பதிவர் ராய செல்லப்பா அவர்கள் எழுதிய தாத்தா தோட்டத்து
வெள்ளரிக்காய் சிறுகதை தொகுப்பை புலவர் அய்யா ராமானுஜம் 
அவர்கள் அகநாழிகை அரங்கில் பொன் .வாசுதேவன் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார் ( வாழ்த்துக்கள் சார்) 
செந்தில் ,மற்றும் சீனு என்ன புக் வாங்கி  இருக்கீங்க என்று  வாங்கி பார்த்து விட்டு ,வேற புக் வாங்கலியா என்று கேட்க இன்னும் பர்சேஸ் முடியவில்லை என்றேன் 

பாலகணேஷ் என்னப்பா இன்னும் சுஜாதா புத்தங்கள் படிக்க வேண்டியது இன்னும் மிச்சம் வச்சிருக்கியா  என்று கேட்டார்  

பேசி முடித்து விட்டு கிளம்பும் தருவாயில் எதாவது சாப்பிடலாம் என்று வெளியில் சென்றோம்.  அந்த எதாவது என்பது  குல்பி சாப்பிடலாம் என்பதாக டிக் செய்யப்பட  அரட்டையுடன் சிரித்து பேசி கொண்டே 
 சாப்பிட்டு விட்டு விடை பெற்றோம் 

நான் மீண்டும் அரங்கிற்குள் நுழைந்தேன். எழுத்தாளர் பாலகுமாரன் அமர்ந்து 
ஆட்டோகிராப் போட்டு கொண்டிருந்தார்.அவரது நாவல்கள் பல படித்திருக்கிறேன். அவர் நாவல்களில் எனக்கு பிடித்த  வரிகளை எனது டைரியில் குறிபெடுத்து வைத்திருக்கிறேன். அவரிடம் போட்டோ எடுத்து கொள்ள ஆர்வம்  இருந்தும் போன் இல்லாததால் நகர்ந்தேன்
 ( நகர மனமின்றி ) 


அங்கிருந்து கிளம்ப மனமில்லை.இருந்தும்,புத்தக காட்சி இன்னும் மூன்று நாட்கள் இருப்பதால் அதற்குள் ஒரு முறை செல்லும் ஆர்வத்துடன் இருக்கிறேன் 


FINAL PUNCH

இந்த பதிவில்  ஒரு விசயத்தை பத்தி எழுதலியே இவன் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். (நினைக்காமலும் இருந்திருக்கலாம் ) அது எனது இளமை எழுதும் கவிதை நீ .... நூல் பற்றியது. அதை  பற்றி இனி நீங்கள் தான் சொல்ல வேண்டும் 

அன்புடன்

ஆர்.வி.சரவணன் 


புதன், ஜனவரி 08, 2014

இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் )இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் )

இணையத்தில் நான் நுழைந்த போது இப்படி ஒரு நாள் வரும் என்று கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை ஆனால் இப்படி ஒரு நாளும் வருமோ 
என்று எதிர்பார்த்ததுண்டு. அந்த நாள்  05-01-2014 என் வாழ்நாளின் முக்கிய நாட்களில் ஒன்றாய் தன்னை இணைத்து கொண்டது 

இறை அருளின் துணையால் எனது ஜனனி பதிப்பக வெளியீடான இளமை எழுதும்  கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா டிஸ்கவரி புக் பேலஸில் 05-01-2014 அன்று மாலை மிக சிறப்பாக நடைபெற்றது. முனைவர் திரு .எஸ் சங்கர் அவர்கள் முன்னிலையில்,கவிஞர் திரு. நா.முத்துக்குமார் அவர்கள் விழா தலைமையேற்று நூல் வெளியிட எழுத்தாளர் இயக்குனர் திருமதி.சந்திரா தங்கராஜ் அவர்கள் பெற்று கொண்டார்.நண்பர் எழுத்தாளர் திரு.சுரேகா அவர்கள்  தன் இனிமை குரலால் நிகழ்ச்சியை அழகுற தொகுத்து வழங்கினார். திரு. கரை சேரா அலை அரசன் வரவேற்புரையாற்ற, திரு. புலவர் அய்யா, திரு பால கணேஷ் வாழ்த்துரை வழங்க, சீனு மற்றும் கோவை ஆவி நன்றியுரை வழங்க மற்ற இணைய நண்பர்கள் வருகையும் என் குடும்பம் மற்றும் உறவினர்கள் வருகையும் விழாவை மேலும் மெருகூட்ட வைத்தன என்றால் அது மிகையல்ல.இளமை எழுதும் கவிதை நீ....
நூல் வெளியீடு திரு .புலவர் அய்யா ,திரு.செல்லப்பா,மற்றும் 
திரு.கவியாழி கண்ணதாசன் 


விழா மேடையில் புலவர் அய்யா, எஸ்.சங்கர் ,திரு .நா முத்துக்குமார் ,
திருமதி சந்திரா தங்கராஜ் மற்றும்  திரு.எம் .பாலசுப்ரமணியன் (என் சித்தப்பா )


நா.முத்துக்குமார் அவர்களுக்கு பொன்னாடை 
திருமதி .சந்திரா தங்கராஜ் அவர்களுக்கு என் அம்மா 
பொன்னாடை அணிவித்தார் சிறப்பு விருந்தினர்களுடன்
 நான், என் மனைவி,அம்மா 
மற்றும் என் தம்பி  பாடல் ஆசிரியருடன் இணைய நண்பர்கள் நா .முத்துகுமாருடன் என் மகன் ஹர்ஷவர்தன் 


வலைபதிவர் கீதா ரங்கன் மற்றும் பால கணேஷுடன் சீனு மற்றும் அரசன் சுரேகா,ஸ்கூல் பையன்,ஆரூர்.முனா.செந்தில்,சிவகுமாருடன் 


இணைய நண்பர்கள் உற்சாகம்  திரு.கணேஷமூர்த்தி (என் தாய் மாமா) சகோதரர் நவீன் 
மற்றும் சித்தப்பா 


என் தம்பி அரவிந்த் மற்றும் அவர் மனைவி, 
மகள் ஜெயபிரியா 


சிறப்பு விருந்தினர்களுடன்  திரு.கனகராஜ்
(என் தங்கை கணவர் ) 


எஸ்.சங்கர் ,வி.கே.சுந்தர், சந்திரா தங்கராஜ், நா முத்துக்குமார் 

  
இந்த விழாவுக்கு வந்திருந்து, சிறப்பித்து, வாழ்த்தி,இந்த நாளை
 என் வாழ்வில் முக்கியமான நாளாக மாற்றியமைத்த அனைத்து நெஞ்சங்களுக்கும் (செல்போனில் வாழ்த்து  தெரிவித்த நண்பர்களுக்கும்) நான் என்றும் மாறாத அன்புடன் இருக்க கடமைப்பட்டுள்ளேன் 

அன்புடன் 

ஆர்.வி.சரவணன் 

தகவலுக்காக 


நூல் கிடைக்குமிடம் 
டிஸ்கவரி புக் பேலஸ்,கேகே,நகர்,சென்னை 
பக்கங்கள் 192, விலை ரூ 100

புதன், ஜனவரி 01, 2014

இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )
இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா
(ஒரு பார்வை )


வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

புத்தக கண் காட்சியில் சுற்றி சுற்றி வந்து புத்தகங்களை ஆசையாய் வாங்கி குவிக்கும் எனக்கு, நான் எழுதிய புத்தகமும் இது போல் வெளி வரும் என்று நிச்சயமாக (நான்கு வருடங்களுக்குமுன் நான் குடந்தையூர் தளம் 
தொடங்கிய போது) எதிர்பார்க்கவில்லை.எப்படி நிகழ்ந்தது இது.


கல்லூரி காலத்தில் நான் மனதிற்குள் காட்சிகளாய் ஓட்டி பார்த்த கதையை எழுதி பார்க்க ஆசைப்பட்ட போது எழுதுங்கள் என்று நம்பிக்கை  தந்தார் கரை சேரா அலை அரசன்,( ஒரு அத்தியாயம் வெளியிட்டவுடன் அடுத்தது ஆரம்பித்து விட்டீர்களா என்று  கேட்பார்).எழுதி கொண்டே வந்து  கொஞ்சம் இடைவேளை விட்ட போது எப்ப சார் திரும்ப ஆரம்பிப்பீங்க உங்களின் பெரிய ப்ராஜெக்ட் இது நல்ல படியா முடிச்சுடுங்களேன் என்றார் .(நிஜாம்  பக்கம்) நிஜாமுதீன். தொடர்ந்து  எழுதி கொண்டே வருகையில் நன்றாக சென்று கொண்டிருக்கும் கதையை அதன் இயல்பான போக்கிலே சென்று முடியுங்கள் என்றார் ( கிரி ப்ளாக்) கிரி. 

மற்றும் திடங்கொண்டு போராடு சீனு ,மனசு குமார்,திண்டுக்கல் தனபாலன், தென்றல் சசிகலா, என்று இணைய நண்பர்கள் பலரும்,  அலுவலக நண்பர்களும்  (தேவராஜ் படங்கள் வரைந்தும் , மற்றொரு நண்பர்  
வைத்யா   அடுத்த அத்தியாயம் எப்படி வரும் என்று ஆர்வமுடன் கேட்டும்) எனை உற்சாகபடுத்த எழுதி முடித்தேன்.அடுத்து புத்தகமாக போடலாம் 
என்ற என் ஆர்வத்துக்கு நண்பர்களும் துணை நிற்க தொடங்கியது 
புத்தக வேலை

நான் புத்தகம் வெளியிடுவது பற்றி என் வீட்டில் பேசிய போது இதில் அக்கறை செலுத்த மாட்டார்கள் என்று தான்'நினைத்திருந்தேன். ஆனால் என்னை விட என் குடும்பத்தினரும் உறவினர்களும் ஆர்வம் மிகுந்து இதில் முழு அக்கறை செலுத்தி எனை ஊக்கபடுத்தவே, இதோ புத்தகம் ரெடியாகி ஜனனி பதிப்பகத்தின் வெளியீடாக வருகிறது. 

 எழுத்தாளர் திரு.பட்டுகோட்டை பிரபாகர் அவர்கள் கதையை படித்து விட்டு தந்திருக்கும் மதிப்புரை இந்த புத்தகத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. அந்த மதிப்புரையிலிருந்து சில வரிகள் இங்கு

 "எளிமையான சுலபமான ஒரு கதைக் கருவை எடுத்திருந்தாலும் அதை நெளிவு சுளிவுகளுடன் நேர்த்தியான திருப்பங்களுடன் சுவாரசியமாக கொடுத்திருக்கிறீர்கள்" 

கூடவே சங்கர் மற்றும் அரசன் மதிப்புரைகளுடன் சேர்ந்து வெளியாகும் 
இந்த நாவல் கல்லூரி வாழ்க்கையை பின்னணியாக கொண்டு  
நட்பின் வலிமையையும் உணர்த்தும் காதல் கதை 

இந்த நாவலின் கேரக்டர்கள் பற்றி கதையில் வரும் பயோடேட்டா பாலு கேரக்டர் சொல்வதை  இங்கே  தருகிறேன்

உமா : பெற்றோர் சொன்னால் பெட்ரோமாக்ஸ் வைத்து கூட 
படிக்கும்  மாணவ பேரவை  தலைவி 

சிவா : அன்பிற்காக அகிலத்தையே அற்பணிப்பவன் 

காதலி சொன்னால் காற்றுக்கும்  வேலி போடுவான் இவன் 

அருள் : நட்பிற்காக நஞ்சையும் குடிப்பவன் 


கார்த்திக் :  உடன் பிறந்தவனே உலகம் என்று சுற்றி வருபவன் 


கீதா : கணவனுக்காக கரெண்டிலும் கை வைப்பவள் 


பாலு : அட்டு பிகரையும் அசராமல் பார்ப்பவன் இருப்பினும் 

லட்டு பிகரே லட்சியமாய் கொண்டவன்  

புத்தகம் வெளியிடுவது என்றவுடன் எந்த வி.ஐ.பி யை அழைப்பது 
என்ற  என் தயக்கத்தை தகர்த்து உதவினார் என்னை இணையத்தில் 
எழுத வைத்த எஸ் .சங்கர் (என்வழி.காம்). திரைப்பட பாடலாசிரியர் முனைவர்  திரு நா .முத்துக்குமார் மற்றும் எழுத்தாளர் இயக்குனர் திருமதி . சந்திரா தங்கராஜ் இருவரிடமும்  பேசி ஒப்புதல் 
வாங்கியதோடு  என்னையும் அழைத்து சென்று அறிமுகபடுத்தினார்
தொடர்கதை வரும் போது கருத்துரை தந்த நண்பர்கள்,படம் வரைந்து தந்த தோழிகள் மற்றும் நூலை வடிவமைத்த மின்னல் வரிகள் திரு.பால கணேஷ் (எழுத்தாளர் திரு.பட்டுகோட்டை பிரபாகரிடம் அழைத்து சென்று என்னை  அறிமுகபடுத்தியதற்கு நன்றி சார் ) மற்றும் படங்கள் வரைந்து தந்த ஓவியர் திரு .தமிழ், மேலும் இந்த புத்தகத்தின் விற்பனைக்கு  களம் தந்த டிஸ்கவரி புக் பேலஸ் திரு.வேடியப்பன், மற்றும் ஆனந்தராஜா விஜயராகவன் (கோவை ஆவி ) அனைவரையும் நான் நன்றியுடன் நினைத்து பார்க்கும் நேரமிது

இந்த இனிய விழாவை  தன் இனிமை குரலால் அழகுற  
தொகுத்து தர இசைந்திருக்கிறார் நண்பர் திரு.சுரேகா அவர்கள். 

விற்பனை உரிமை 

DISCOVARY BOOK PALACE PVT LTD
K.K.NAGAR WEST 
CHENNAI -600078

MAIL      : discoverybookpalace@gmail.com
ONLINE : www.discoverybookpalace.com
PHONE     044-65157525


நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் நாள் :05-01-2014
நேரம் : மாலை 5 மணி 
இடம் :  டிஸ்கவரி புக் பேலஸ் 


இறைவனின் இறை அருளுடன் நடைபெறும் இந்த இனிய நிகழ்வை 
மேலும் மெருகூட்ட போவது உங்களின் வருகையும் வாழ்த்துக்களும் 
தான்.

FINAL PUNCH 

 புத்தக  வேலை நடைபெற்று கொண்டிருக்கையில் என் மனசாட்சி கேட்ட கேள்வி கொஞ்சம் தடுமாற வைத்தது. புத்தகம் போடற அளவுக்கு பெரிய எழுத்தாளர் ஆகிட்டியா நீ என்பது தான் அது 

ஆசிரியர் வகுப்பறையில் இல்லாத போது மாணவனுக்கு போர்டில் எழுதி பார்க்க ஆசை வந்து எழுதுவதை தானும் ஆசிரியர் ஆகி விட்டேன் என்று எண்ணி கொள்வதாக  அர்த்தம் பண்ணி கொள்ள முடியுமோ 

நான்  ஒரு மாணவன் தான் இப்போதும். (எப்போதும்) 

ஆர்.வி.சரவணன்