புதன், மார்ச் 27, 2013

இளமை எழுதும் கவிதை நீ-24





இளமை எழுதும் கவிதை நீ-24


உன் கனவு தேசத்தில் குடியேற எங்கு குடியுரிமை 
பெற வேண்டும் கொஞ்சம் சொல்லேன் 


சிவா வருவதற்கு முன்பே வந்து விட்டிருந்த பாலு சிவா மூட்டை தூக்கும் படம் இடம் பெற்றிருந்த அந்த பேனரை பார்த்தவுடன் டென்சன் ஆகி அங்கிருந்தவர்களிடம் கத்தினான்

"எவண்டா இந்த மாதிரி பேனர் வச்சது"

"ஏதாவது கிராபிக்ஸ் வேலையா இருக்குமோ " ஒரு நண்பன் சொன்னான் 

 "எப்படி வேண்ணா இருக்கட்டும் வச்சவனை கொத்து கறி பண்ணனும்" இன்னொருவன் 

"சுரேஷ் வேலையா தான் இருக்கும்" என்று தீர்மானித்த  பாலு உடனே  ஒவ்வொருவரையும்  திசைகொருவராய் அனுப்பினான். மற்ற நண்பர்களை பார்ப்பதற்கு உள்ளே சென்றான்

தொடரும்

ஆர்.வி.சரவணன்

ஓவியம் : எங்கள் மகன் ஹர்ஷவர்தன் 

the story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.

ஞாயிறு, மார்ச் 24, 2013

வலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா


வலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா 




கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது வலங்கைமான்.இங்கு மிகவும் புகழ் வாய்ந்த ஸ்தலம் பாடை கட்டி மகா மாரியம்மன்கோவில்.  இங்கு வருடா வருடம் தமிழ் மாதம் பங்குனி இரண்டாவது ஞாயிறு அன்று நடைபெறும் பாடை காவடி திருவிழா புகழ் வாய்ந்த ஒன்றாகும். 
08-03-2013 அன்று பூச்சொரிதல் விழாவும்,10-03-2013 அன்று காப்பு கட்டுதலும்,17-03-2013 அன்று திருவிழா தொடக்கமும் நடைபெற்று, இன்று 24-03-2013 கோவிலில் பாடை கட்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக 31-03-2013 அன்று புஷ்ப பல்லக்கு விழாவும்,07-03-2013 அன்று கடை ஞாயிறு விழாவும் நடைபெற உள்ளது  


இந்த கோயிலின் சிறப்பு  என்னவென்றால், உடல் நலம் சரியில்லாதவர்கள், வாழ்க்கையில் கஷ்டபடுபவர்கள் அம்மனிடம் வேண்டி கொண்டு ,தாங்கள் வேண்டியது நிறைவேறியவுடன் ஈமக்ரியை செய்வது போல் பாடை காவடி எடுத்து உறவினர்கள் கொல்லி சட்டி ஏந்தி கொட்டு மேளம் கொட்டி வர ஆலயத்தை வலம் வந்து அம்மன் சன்னிதானம் முன் தாங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர். இது பார்ப்பவர்களை பரவசம் அடைய வைக்கும்   
அற்புத காட்சி நான் எடுத்த சில படங்களை இங்கே உங்களுக்கு தந்திருக்கிறேன் 





இரவில் மின் வெட்டில் ஜொலிக்கும் கோவில் வாசல்     



பகலில் கோவில் நுழைவாயில் 





அலகு காவடி எடுத்து வரும் பக்தர்கள் 


தெருவில் எங்கும் அலகு காவடி 







ஊரெங்கும் பாடை காவடி 




ஈம கிரியை போன்ற வேண்டுதல் 


மகா மாரியம்மனின் திரு வீதி உலா 

 மகா மாரியம்மனின் அருள் நம் அனைவருக்கும் கிட்டட்டும் என்று உளமார வேண்டுகிறேன் 




ஆர்.வி.சரவணன்  

திங்கள், மார்ச் 18, 2013

இளமை எழுதும் கவிதை நீ -23







இளமை எழுதும் கவிதை நீ -23

என் வாழ்க்கை பாலைவனமாய் மாறியிருந்த சமயம் 
ஒரு வற்றாத ஜீவ நதியாய் நுழைந்தவள் நீ 


தோழி கேட்ட கேள்விக்கு  உடனடியாக  பதில் கொடுத்தாள் உமா 

"எனக்கு தெரியாத  யாரோ ஒருத்தர் பேர்  சொல்லிருந்தா நான் ஏன் அவன் 
கூட வண்டில போகணும் னு சொல்லிருப்பேன். எனக்கு தெரிஞ்ச  சிவா பேரை சொன்னதாலே தான் அது என் இஷ்டம் னு சொன்னேன் புரிஞ்சுதா" என்றாள்.

  "பதிலை சும்மா விசிறி அடிக்கிறே" 
என்று தோழி சிரித்த படி சொல்ல கல்லூரிக்குள் நுழைந்தனர் இருவரும். சில மாணவிகள் சூழ்ந்து கொண்டு அவளிடம் கல்லூரி ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை பற்றியும் அதில் இடம் பெற வேண்டிய நிகழ்ச்சிகள் பற்றி டிப்ஸ் சொல்ல, பிரின்சிபாலிடம் கேட்டு சொல்வதாக சொல்லி விட்டு  வகுப்பறை நோக்கி தோழியுடன் நடந்தாள். 

தொடரும்

ஆர்.வி.சரவணன்

ஓவியம் : வலைபதிவர் பிரியா அவர்கள் 

சனி, மார்ச் 09, 2013

ஹரிதாஸ்-தி மாஸ்



ஹரிதாஸ்-தி மாஸ்

நாம் முற்றிலும் எதிர்பார்க்காத சில படங்கள் வந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடும். அப்படி ஒரு படம் ஹரிதாஸ். 

என்கௌன்ட்டர் ஸ்பெசலிஸ்ட் போலீஸ் அதிகாரி கிஷோர்.அவர் மகன் 
ஒரு ஆட்டிசம் பாதித்த  பையன் என்பதால் அவனை சிறப்பு பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் சமுதாயத்தில்  அவனை சாதனையாளனாக்க  அவர் மேற் கொள்ளும் முயற்சிகள் ஒரு பக்கம். தாதாவை வேட்டையாட முனையும் அலுவலக  வேலை இன்னொரு பக்கம். இந்த மென்மையையும் வன்மையையும் ஒன்றாக  சேர்த்து ஒரு அழகிய படைப்பை  தந்திருக்கிறார் இயக்குனர்.

ப்ரித்வி ராஜ்தாஸ் 

 படத்தில் இந்த பையனை பார்க்கும் போது நிஜமாகவே ஆட்டிசம்  
பாதித்த பையன் தானோ என்று நினைக்கும் அளவுக்கு ஹரியாகவே மாறியிருக்கிறான். அவனது அந்த மேல் நோக்கி செருகிய கண்கள், என் நேரமும் கை விரல்களின் அலைவு, சாய்வான ஒரு நடை என்று வசனங்கள் எதுவும் இல்லாமலே  தன் நடிப்பால் நமை ஈர்த்து படத்தையே தூக்கி  நிறுத்தியிருக்கிறான் ப்ரித்வி   

கிஷோர் 

துப்பாக்கி பிடிச்சு மூளை இரும்பாகிடுச்சு என்று சூரி சொல்லுமளவுக்கு 
தன் அலுவலக  வேலையில்  விறைப்பானவராய்,  இப்படிப்பட்ட உன்னை வச்சிகிட்டு நான் என்ன பண்ண போறேன் என்று பையனை கட்டி கொண்டு  கலங்கி நிற்பவராய் என்று கிஷோர் ஜோர் என்று   கை தட்ட வைக்கிறார் கமிட்டியில் தன் பையன் பெயர் இல்லையென்று தெரிந்தவுடன் அவர்களிடம்  போராடி, என் பையன் போட்டில கலந்துகிட்டாலே ஜெயிச்ச மாதிரி சார்  என்று கெஞ்சும் போது அசரடிக்கிறார்  மனிதர்.

சினேகா 

வகுப்பில் கிஷோர் முன்னிலையில் ரைம்ஸ் சொல்ல  சிரமப்படுவதும், 
 தாயின் கத்தலை காதில் வாங்கி கொண்டே பார்வையால் தன் எதிர்ப்பை தெரிவிப்பதும்,  சிறுவனை பைத்தியமா என்று கூட்டம் கிண்டலாய் பார்க்கையில் அவனை அரவணைத்து கொண்டு அழுவதும் என்று சிநேகா அந்த டீச்சர் கேரக்டரில் மிக இயல்பாய் பொருந்தி நிற்கிறார்.  ஸ்பெஷல் சைல்ட் டுக்கு  உரிய டீச்சர் என்றல் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற நிறைவை தந்திருக்கிறார்.





சிறுவனின் திறமையை அப்பா கிஷோர் கண்டறிந்து 
நெகிழ்ந்து போய் நிற்கும் இடம்   

கடத்தப்பட்ட நண்பனை அங்கே தேடுவதும் இங்கே ஹரிதாஸ் காணாமல் சிநேகா தேடுவதும் என்று வரும் பரபரப்பான காட்சிகள் 

கோச்  சொல்லும் நெகடிவ் பாயிண்ட்ஸ் அனைத்தையும்    டாக்டர் தன் பாசிடிவ் பாயிண்ட்ஸ் வசனங்களால் உடைக்கும் காட்சி

பள்ளி கூட வகுப்பறை கல கல காட்சிகள்

 சிறுவனுக்கு தாயாக விரும்புவதை சினேகா வெளிபடுத்தும் விதமும்   அதை கிஷோர் மறுப்பதுமான காட்சி 

 பயிற்சி காட்சிகளும்   பந்தயத்தில் சிறுவன் பங்கேற்று   ப்ரித்வி  ஓடும் காட்சிகள் 

காட்சிகளின் இடையிடையே கலகலப்பை தரும் சூரி மற்றும் ஓமகுச்சி பையன் சுவாரஸ்யம் 

இப்படி படமெங்கும் விரவியிருக்கிறது  நிறைவான காட்சிகள். 

குத்துப்பாட்டை தவிர்த்திருக்கலாம். என்கௌன்ட்டர் தீவிரத்தையும்  கொஞ்சம் குறைத்திருக்கலாம்.




துப்பாக்கியை சுற்றி படரும் மெல்லிய பூங்கொடியை போல் படபடப்பும் நெகிழ்ச்சியும்  ஒன்றிணைந்த திரைக்கதைக்கு  அவர் கோச்சா காக்ரோச்சா  என்ற பளிச் வசனங்களில் வெங்கடேசனும், காட்சிகளுகேற்ற ஒளிப்பதிவில்   ரத்னவேலுவும்  படத்திற்கு இன்னும் பலம் சேர்க்கிறார்கள் 

 ஆட்டிசம் பாதித்த ஒரு சிறுவனின் உலகத்தில் நம்மை உலவ
விட்டு, அவனை பெற்றவர் படும் வலியை அவஸ்தையை உணரும் 

வண்ணம், ஒரு நெகிழ்ச்சி படைப்பை தந்திருப்பதன் மூலம் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் நம்மிடம்  சபாஷ் பெற்று  கொள்கிறார்  

ஹரிதாஸ் பாராட்டப்பட வேண்டியவன் 

FINAL PUNCH

 படம் தியேட்டரில் பார்த்து கொண்டிருக்கும்  போது 
சிறுவனின் திறமை கண்டறியப்படும் காட்சி யாரையும் நெகிழ வைத்து விடும்     அப்போது பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞர் தன் உடலை குலுக்குவது கண்டு நான் அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தேன்.அவர் கண்கள் கலங்கி அழும் நிலையில்  இருந்தார். நான் பார்ப்பதை உணர்ந்தவர் அந்த நெகிழ்ச்சியை  என்னுடன் பகிர்ந்து கொண்டார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அவரது அந்த கண்ணீரே இந்த படத்தின் வெற்றிக்கு சாட்சியாகிறது  என்றால்  அது  மிகையல்ல  

ஆர்.வி. சரவணன் 

புதன், மார்ச் 06, 2013

இளமை எழுதும் கவிதை நீ-22






இளமை எழுதும் கவிதை நீ-22

உன் மனதிற்குள் இருப்பதை தெரிந்து சொல்லுமாறு  
கூகுளிடம் கேட்டிருக்கிறேன் 

சிவாவுக்கு, கர்சிப் கொடுத்தா உறவு விட்டு போயிடும் என்று உமா சொன்ன  இந்த வரிகளே அவனை சுற்றி சுழன்று கொண்டிருந்தது.நடைகளில் ஒரு உற்சாக துள்ளலாய் சென்று கொண்டிருந்தவன்  எதிரில் பாலு வந்தான். அவனிடம் பேசுகையில் உமா சொன்னதை சொல்லி  அதற்கு அர்த்தம் என்ன என்று ஆர்வமாய் கேட்டான்

"மச்சான் இதை பிரெண்ட்ஷிப் க்காக சொன்னதாவும்   எடுத்துக்கலாம் இல்ல
காதலுக்குணும்  எடுத்துக்கலாம்"

"என்னடா குழப்பறே"

"டேய் உனக்கு பிடிச்ச மாதிரி நான் எப்படிடா சொல்ல முடியும்  
காதலா மட்டும் இருந்துச்சின்னா, கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா னு நீ பாடலாம். அட இந்த பாட்டே ஏதோ சொல்ற மாதிரி தெரியுதே" 

என்றவனை பார்த்து அவன் கன்னம் தட்டி சிவா சிரித்து கொண்டே  கிளம்பினான். தன் ரூமுக்கு வந்தவன்  உனக்கு என்ன தோணுது  என்று கண்ணாடியை பார்த்து கேட்டான். அது அதையே பிரதிபலிக்க முட்டாள் என்று செல்லமாய் கடிந்து கொண்டான்.டான்ஸ் ஆடியபடியே  தன் சந்தோசத்தை வெளிப்படுத்தி கொண்டான்

தொடரும்

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் நன்றி : திரு இளையராஜா 


the story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.