வெள்ளி, ஜனவரி 22, 2016

ரஜினி முருகன்


ரஜினி முருகன் 


கிராமத்து கமர்சியல் படங்களுக்குனு ஒரு பார்முலா இருக்கு. நாயகன் நாயகி, அவர்களுக்கு ஒரு காதல், இந்த இருவர் வீடுகளும் ஏதோ ஜென்ம பகை போன்று முறுக்கிக் கொண்டு திரிவது, நாயகன் கூடவே படம் முழுக்க நகைச்சு வைக்க ஒரு நண்பன் கேரக்டர், நாயகி இல்லன்னா சொத்து இதற்கு ஆசைப்படும் வில்லன், பஞ்சாயத்து இதெல்லாத்தையும் ஹிட்டான பாடல்களோடு சேர்த்து சரியான மிக்சிங்ல கொடுத்துட்டா படம் ஓகே ஆகிடும். இதை தான் ரஜினி முருகனில் கலர்புல்லாக தந்திருக்கிறார் டைரக்டர் பொன்ராம்.
சிவ கார்த்திகேயன் தான் வரும் முதல் காட்சியின் ஆரவாரத்தை கடைசி காட்சி வரை தக்க வச்சிக்கிறார். ( இப்ப தான் வீட்ல கோபிச்சிட்டு வந்திருக்கேன் உடனே வந்தா நல்லாருக்காது நைட் சாப்பிட வந்துடறேன் இந்த டயலாக்கில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் ஒரு சாம்பிள்) அவரும் சூரியும் அடிக்கும் ரகளையில் தியேட்டர் சும்மா கலகலக்குது. (இத்தனைக்கும் நைட் ஷோ). கீர்த்தி சுரேஷ் பற்றி சொல்லனும்னா சிவ கார்த்திகேயன் அவரை முதல் தடவை பார்த்தவுடன் திரும்ப எப்ப வெளில வருவார்னு வாசல்ல மணிக்கணக்கா காத்துட்டே இருப்பாரு. அவர் அப்படி காத்திருக்கிறதுல ஒண்ணும் தப்பில்லைனு தான் சொல்ல தோணுது.

கீர்த்தியின் ரஜினி மேனரிச அப்பா கேரக்டர், டீக்கடை வாழைப்பழ கலாட்டா, ஆடி காரை கொண்டு செய்யும் அதகளம் ராஜ்கண்ணுவுடன் கூட்டணி போட்டு ஆடும் நாடகம், சண்டைல கிழியாத சட்டை எங்கருக்குனு சீன் போடற சமுத்திரகனி, பஞ்சாயத்து கலாட்டாக்கள்னு படம் முழுக்க நாம ரசிக்கிறதுக்கு நிறைய விசயங்கள் வச்சிருக்காங்க.

இருந்தாலும் பாராமுகமான நாயகி எதனால் காதலிக்க ஆரம்பிக்கிறாங்க, சமுத்திரகனி அப்பப்ப சிவகார்த்திகேயன் குடும்பத்துக்கு வைக்கிற செக் நல்லா இருந்தாலும் அதுக்கு பதிலடி கொடுக்கற காட்சியமைப்பு இல்லாம திணறும் கதை, அப்பா கேரக்டர் கோபத்தை விட வலுவான காரணம் என்ன? இப்படி குறைகளையும் வச்சிருக்காங்க.

எது எப்படியானாலும் நம்பி வந்த்துக்கு என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று நம்மை புலம்ப வைக்காமல் சந்தோசப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, ஜனவரி 10, 2016

பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா ?





பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா ?

இந்த வரியை கேட்டவுடன் நீங்க எல்லாரும் கல்லு ,தக்காளி, முட்டை இப்படி எதையாவது எடுத்து அடிக்கலாமானு யோசிக்கறீங்கனு நினைக்கிறேன்.ப்ளீஸ் வெயிட் பண்ணுங்க. டிவி ப்ரோக்ராம்ல வர சின்ன பிரேக்கை கூட அனுமதிக்கிறீங்க. எனக்காக கொஞ்சம் ப்ரேக் கொடுங்க மாட்டீங்களா? அதுக்குள்ளே பாட்டை படிச்சிடறேன். இல்லல்ல நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன். அதை படிச்சதுக்கபுறம் உங்க விருப்பபடி எதை வேண்டுமானாலும் எடுத்துக்குங்க (ஹூம்.ஒரு விசயத்தை படிக்க வைக்கிறதுக்கு எவ்வளவு பில்டப் கொடுக்க வேண்டியிருக்கு)

அதாகப்பட்டது புத்தகம் வாசித்தல், சினிமா பார்ப்பது, எழுதுவது இப்படின்னு இருந்த என் ஆர்வம் பாடல்கள் விஷயத்துல மட்டும் இவை அனைத்தையும் ஓவர் டேக் பண்ற விதத்துல தான் இன்னிக்கு வரைக்கும் இருக்கு. 

பிளாஷ் பேக் ஓபன் பண்ணா, ஸ்கூல் படிக்கிற அந்த சின்ன வயசுல ரேடியோல ஒளிபரப்பாகிற  பாடல்களை கேட்கறதுக்காக ஒரு நாள்ல எந்தெந்த நேரத்துல பாட்டு வருதுனு கரெக்டா  டயத்தை ஞாபகத்துல வச்சிட்டு கேட்கிற ஆளு நான். கோவில் திருவிழா கல்யாண வீடு (அப்பலாம் கல்யாண வீட்டில் ஸ்பீக்கர் செட் கட்டி பாட்டு போடுவாங்க கல்யாணத்துக்கு முத நாள் சாயந்தரம் சாமி பாட்டோட ஆரம்பிச்சு அதுக்கப்புறம் சினிமா பாடல்களுக்கு தாவிடுவாங்க. நைட் 11 மணி வரைக்கும் கூட பாட்டு போடுவாங்க. பாட்டை கேட்கிறதுக்காக  தூங்காமல் விழித்திருந்து எல்லாம் பாடல்களை கேட்டிருக்கேன். கேட்டுகிட்டே அப்படியே தூங்கியும் போயிருக்கேன் சில வேளைகளில் எனக்கு பிடித்த பாடல்களை கேட்பதற்காக, (நேயர் விருப்பம் மாதிரி) எனக்கு பிடிச்ச பாட்டு போட சொல்லி பாட்டு போடறவர் கிட்டே போய் சொல்லுவேன். அவர் கண்டுக்கலையா உடனே யார் விழா நடத்தறாங்களோ அவங்க கிட்டே போய் ரெகமண்டேசன் கேட்டிருக்கேன்.இப்படி இருந்த பாட்டு கேட்கிற ஆசை அதுக்கப்புறம் ரெகார்டிங் கடைகளுக்கு ஷிப்ட் ஆச்சு. 

அதாவது மாலை வாக்கிங் செல்வது போல் கிளம்பி கும்பகோணத்தில் வலம் வருவேன் எங்கெல்லாம் ரெகார்டிங் கம்பெனி இருக்கிறதோ அங்கே சென்று விடுவேன் அங்கே போடப்படும் பாடல்களை கேட்டு ரசித்த படி இருந்திருக்கிறேன். பேருந்தில் நீண்ட தூரம் போக வேண்டி வந்தால் கூட பாட்டு இருக்கிற பஸ்ல தான் ஏறுவேன்.அதுக்கப்புறம் டேப் ரெகார்டர், எப்.எம் ரேடியோ, டிவி, செல் போன் இப்படி டெக்னாலாஜி மாறுச்சு. ஆனால் என் ரசனை அப்படியே இருந்துச்சு. அப்பலாம் தேடி தேடி போய் கேட்ட பாட்டுக்கள் எல்லாம் இப்போ என் கையடக்க செல் போனில் எப்ப ஆன் பண்ணாலும் கேட்கலாம் என்ற அளவுக்கு வந்துடுச்சு.பாட்டு கேட்கிற ஆர்வம் குறையல.

ஆனா பாடல்கள் கேட்கிறதுல இருந்த ஆர்வம் அடுத்து பாடி பார்க்கும் ஆசைக்கு ப்ரோமோசன் ஆகிடுச்சு.  பள்ளியில் மாணவர்களின் திறனை வெளி கொண்டு வருவதற்காகவே ஒரு வகுப்பு உண்டு. எட்டாவது படிக்கும் போது கடவுள் வாழும் கோவிலிலே....பாடலை பாடியது இன்றும் நினைவிருக்கிறது.காலேஜ் வந்தவுடன் அந்த ஆர்வம் இன்னும் தீவிரமாச்சு. ப்ரோபசர் இல்லாத நேரங்களில் நான் பாட என் நண்பன் ஸ்ரீதர் டெஸ்கில் தாளம் போட என்று சரி மஜாவா இருந்துச்சு.

படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு வந்த பின் பாட்டு கேட்கிற ஆசையுடன்  பாட்டு பாடற ஆசையும் சேர்ந்தே தொடர ஆரம்பிச்சுடுச்சு.(ராகமும் தாளமும் போல) எனக்கு மியூசிக் டைரெக்டர் கிட்ட போய் சான்ஸ் வாங்கி சினிமால பாடணும் அப்படிங்கிற பெரிய ஆசையெல்லாம் கிடையாது. மியூசிக் ட்ரூப் ல பாடணும்ங்கிற சின்ன ஆசை தான். (ஆனால் அதுவே எவ்வளவு பெரிய ஆசை என்பது பின்னாடி கிடைச்ச அனுபவங்கள் தான் தெரிய வச்சுது.) நடிகர் மோகன் மேடையில்  வித வித முக பாவம் காட்டி பாடுவாரே படங்களில். அது போல் பாடணும்னு ஆசை. (ரொம்ப டெரரா இருக்குமோ) இந்த விசயத்துல கல்லுரி நண்பர்களிலிருந்து அலுவலக நண்பர்கள் வரைக்கும் என்னை நல்லா ஊக்கபடுத்தினாங்க.  அதாவது டி.ராஜேந்தர் பாடும் பொன்னான மனசே பூவான மனசே.... பாடலை அவர் குரல் நான் பாடுவதை ரசிப்பாங்க. புதுசா அறிமுகமாகிற பிரெண்ட்ஸ் க்கும் பாடி காட்ட சொல்வாங்க. எங்க வீட்ல ஜெயச்சந்திரன் குரல் எனக்கு செட் ஆகுதுனு சொன்னாங்க. அதனாலே ஜெயச்சந்திரன் பாட்டா பாடி பார்க்க ஆரம்பிச்சேன். இருந்தாலும் சில வரிகளில் மட்டும் கொஞ்சம் குரல் பிசிறு தட்டும். (ராகம் இழுக்க ஆரம்பிக்கும் போது குரல் உடைஞ்சிடும்).  

என் நண்பன் தேவராஜ் என்னோட இந்த ஆர்வத்தை பார்த்து, "நண்பன் ஒருத்தன் ஆர்கெஸ்ட்ரா வில் இருக்கிறார் வா. சான்ஸ் வாங்கி தருகிறேன்" என்று என்னை அழைத்து சென்றான். அவர் (20 வயசு தான் இருக்கும் அந்த பையனுக்கு. இருந்தும் அந்த துறையில் என்னை விட சீனியர் என்பதால் அவர்) என்னை பாட சொன்னார். நானும் சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்..... பாடி காண்பித்தேன்.  அவர் இந்த வார்த்தை இப்படி வரணும் இது இப்படி வரணும் என்று திருத்தங்கள் சொல்ல சொல்ல நான் விழிக்க ஆரம்பித்தேன். அவர் முடிவில் "உங்களுக்கு பாடறதுல ஆர்வம் நிறைய இருக்கு. ஆனா  நீங்க ப்ராக்டிஸ் பண்ணனுமே" என்றார். எப்படி என்று அவரிடம் கேட்க, "சங்கீதம் கத்துக்கணும்" என்றவர் "இப்ப என்ன வயசாவுது உங்களுக்கு" என்றார். 35 என்றேன் . "இந்த வயசில அது ஒண்ணும் ஆவறதில்லே" என்றார். வெளியில் வந்த பின் சின்ன வயசுல நம்ம ஆர்வத்தை தெரிஞ்சிட்டு நம்மை வீட்ல என்கரேஜ் பண்ணாம விட்டுட்டாங்களே ரொம்ப வேதனை பட்டேன். அதுக்கப்புறம் பாடுற ஆசையை  தூக்கி தூர போட்டுட்டு பாடல்கள் கேட்பதில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். 

கல்யாணங்களுக்கு செல்கையில் அங்கே மியூசிக் கச்சேரி நடைபெறுகிறது என்றால் அப்படியே அமர்ந்து விடுவேன். நண்பர்கள் டேய் கல்யாண வீட்டுகாரங்க துரத்தரதுக்கு முன்னாடி போயிடலாம் வாடா என்று அழைக்கும் வரை அமர்ந்து கேட்டு கொண்டிருப்பேன்.என் நண்பனின் திருமணத்தின் போது அவன் மியூசிக் ட்ரூப் ஏற்பாடு செய்திருந்தான். எனக்கும் ஒரு பாட்டு பாட சான்ஸ் வாங்கி கொடு என்றேன். உனக்கில்லாததா என்றான். மியூசிக் ட்ரூபிடம் சொல்லியும் வைத்திருந்தான். ஆனாலும் நான் மேடைக்கு அருகில் சென்று காத்திருந்த போது தான் மேடை கூச்சம் என்னை தள்ளி போ என்று விரட்டி அடித்தது. தள்ளி போனவனை நண்பன் போ போய் பாடு என்று கண்களாலேயே மிரட்டினான். நான் ஒரே படபடப்பா இருக்கு இப்ப மேடை ஏறி பாடினால் பாட்டு வராது வெறும் காற்று தான் வரும் என்றேன். எது வந்தாலும் சரி நீ பாடிஆகணும் இங்க நம்ம பிரெண்ட்ஸ் தானே இருக்காங்க என்றார்கள் மற்ற நண்பர்கள். சரி என்று என்னை தயார்படுத்தி கொண்டு மேடை அருகில் செல்வதற்குள் மியூசிக் ட்ரூப் ஹெட் "இப்ப ப்ரோக்ராம் முடிய போகுது. முன்னாடியே வர வேண்டியது தானே" என்றார். உடனே இருக்கைக்கு திரும்பி விட்டேன்.  

சென்னையில் நடந்த இரண்டாவது வலை பதிவர் திருவிழாவில் நண்பர் கோவை ஆவி ஒரு பாடல் எழுதி  டியூன் போட்டு கொண்டு வந்திருந்தவர் கோரஸ் பாடுவதற்கு வாருங்கள் என்று அழைத்த போது யோசிக்காமல் தாமதிக்காமல் அவருடன் உடனே மேடை ஏறி விட்டேன்.இதற்கு காரணம் என் மேடையில் பாடும் ஆசையால் தான்.இந்த படம் ஈரோடு சங்கமம் விழாவில் நான் பேசும் போது எடுத்தது. இந்த பதிவிற்கு மேட்ச் ஆனதால் இங்கே வெளியிட்டிருக்கிறேன்.(பாடற மாதிரி இருக்குல்ல)



ஹிந்தி படமான தில்வாலே துல்ஹனியா படம் எனக்கு ரொம்ப பிடித்த படம். பாடல்களும் அப்படியே. அந்த படத்தின் பாடல்களை நான்  பாடும் போது கேட்கும் வட இந்திய நண்பர்கள் எப்படி ஹிந்தி தெரியாமயே பாட்டை அப்படியே ஞாபகம் வச்சி பாடுறீங்க என்று ஆச்சரியபடுவார்கள். 

இந்த ஆச்சரியத்தை என்றேனும் ஒரு நாள் ஒரு மியூசிக் கச்சேரியில் ஒரு பாடலாவது பாடி எல்லாரையும் ஆச்சரியபடுத்தி விட வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு மியூசிக் கச்சேரி பார்க்கும் போதும் அதில் பாடுபவர்களை ஏக்கத்துடனே பார்த்து கொண்டிருக்கிறேன். (மேடை கூச்சம் இப்ப தான் அகன்றிருக்கு.பார்க்கலாம் என்றேனும் ஒரு நாள் ஆசை நிறைவேறும். இது வரை படிச்ச உங்களுக்கு கல்லோ தக்காளியோ எடுக்கிற எண்ணம் போய் என் ஆர்வத்தை ஊக்கபடுதணும் என்கிற எண்ணம் வந்திருக்குமே.




என்ன எல்லாரும் ஏதோ கமெண்ட் எழுதிட்டு இருக்கீங்க போலிருக்கு.எங்கே எழுதின கமெண்டை வெளியிடுங்க பார்ப்போம். என்ன எல்லாரும் ஒரே வார்த்தையே ரீபீட் 
பண்ணி எழுதிருக்கீங்க.

 நீ ஆணியே புடுங்க வேணாம்.

ஆர்.வி.சரவணன் 

எனக்கு பாடற ஆர்வம் இருக்குனு மட்டும் எழுதினா படிக்க உங்களுக்கு சுவாரசியம் இருக்காது என்பதால் கொஞ்சம் மானே தேனே போடற மாதிரி கிண்டல் கலந்து எழுதிருக்கேன். பட் என்னோட ஆர்வம் 100% நிஜம். 

  

ஞாயிறு, ஜனவரி 03, 2016

கடவுளுடன் ஒரு செல்ஃபி (கடவுளை கண்டேன் தொடர் பதிவு)




கடவுளுடன் ஒரு செல்பி 
(கடவுளை கண்டேன் தொடர் பதிவு)   

கடவுளை கண்டேன் என்ற தலைப்பில் கடவுளிடம் நீங்கள் ஆசைப்பட்டு என்ன கேட்க போகிறீர்களோ அவற்றை எல்லாம்  பட்டியலிட்டு தொடர் பதிவொன்று எழுத சொல்லி நண்பர் மனசு குமார் அன்பான உத்தரவிட்டிருந்தார்.  கடவுளை கண்டேன்  கடவுளை பார்த்தா  கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கு என்று நானும் சில சலிப்பான நேரங்களில் சொல்வதுண்டு. அப்படியான கேள்விகளை இந்த பதிவின் மூலம் சொல்லலாமே  என்பதால் உடனே ஒப்பு கொண்டு விட்டேன். தொடர் பதிவேழுத அழைத்த நண்பர் மனசு குமாருக்கும் தொடர் பதிவை ஆரம்பித்து வைத்த நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கும் தொடர்ந்து எழுதி வரும் மற்ற நண்பர்களுக்கும் நன்றி. 


முன்னிரவு நேரம் அது. அன்று எனக்கு ஏற்பட்டிருந்த ஒரு கஷ்டமான ஏமாற்றமான அனுபவம், என்னடா வாழ்க்கை இது என்ற கடுப்பில் ஆழ்த்தி இருந்தது . அதை மறக்கடிக்க டிவியை சேனல் சேனலாக மாற்றி கொண்டிருந்தேன். ஒரு டிவியில் அறை எண் 305 ல் கடவுள் படம் ஓடி கொண்டிருந்தது. கடவுளை பார்த்தா என் வாழ்க்கையை ஏன் இப்படி ஆக்கினே னு கேட்கணும்  என்று சந்தானமும்  கஞ்சா கருப்பும்  கோபமாய் கத்தி கொண்டிருந்தார்கள். அன்பா அழைத்தாலே வர மாட்டார் இதுல இப்படி கோபமாய் அழைத்தால் மட்டும் வந்துடுவாராக்கும். வர மாட்டார் எதுக்கு வரணும் என்று தருமி போல்  நான் மனதுக்குள்  பொருமி கொண்டிருக்கையில் தான் வாசலில் காலிங் பெல் ஒலிக்க ஆரம்பித்தது.  திடுக்கிட்டேன்

மணி 11.00 என்று காட்டியது. இந்த நேரத்தில் யார் வந்து அழைப்பது. ரிமோட்டை வைத்து விட்டு பதட்டத்தை கொஞ்சம் கையில் எடுத்து கொண்டு  கதவருகே வருகையில் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது.  "இருங்கப்பா வரேன்" என்ற சலித்து கொண்டே  கதவை கொஞ்சமாக திறந்தேன்.

அங்கே நின்றிருந்த உருவம் இருட்டின் காரணமாக என் கண்ணுக்கு புலனாகவில்லை. கொஞ்சம் பயம் மனதை கவ்வி பிடிக்க "யாரது"  என்றேன். நான் கேட்ட மறு நொடி வாசல் லைட்டை போடாமலேயே அந்த இருட்டு பிரகாசமானது.

அங்கே காலெண்டரில் பூஜை அறையில் கோவிலில் பார்க்கும் கடவுள் தோற்றத்த்தில்  ஒருவர் நின்றிருந்தார்.

"கடவுள் வேஷம் போட்டுட்டு வர நேரத்தை பாரு. யாருங்க நீங்க"
 என்றேன் சிடுசிடுப்புடன் 

"நான் தான் கடவுள்"

"நீங்க தான் கடவுள் என்பதை எப்படி நம்புவது" 

"ஹா ஹா"  என்று ஒரு ஜோக் கேட்டது போல் சிரித்தவர் 
"வெளியில்  நிற்க வைத்து பேசுவது தான் மரபா மானிடனே" என்றார்.

"வாருங்கள்"  என்று குழப்பமாய் நான் சொன்ன அடுத்த விநாடி 


"இப்போது நம்புகிறாயா"  என்ற குரல்  உள்ளிருந்து கேட்டது
பயந்து போய் திரும்பினேன். உள்ளே எனது சேரில் அமர்ந்திருந்தார். அறையெங்கும் இனம் புரியாத தெய்வீக நறுமணம் வீசி கொண்டிருந்தது போல் ஒரு பிரமை.

நான் கதவை பயத்துடன் அகலமாக திறந்து வைத்து  கொண்டேன் 
எதுனா பிரச்னை என்றால் அப்படியே வெளியில் பாய்ந்து விடலாமே என்று


" கதவை சார்த்தி விடு.மார்கழி குளிர். ஏற்கனவே உனக்கு ஜலதோஷம் வேறு இருக்கிறது " என்றார்

எப்படி உள்ளே வந்தார் இவர் ஒரு வேலை மந்திரம் தந்திரம் தெரிந்தவரோ என்று கதவை சார்த்திய படி எனது மூக்கை தடவி கொண்டு  யோசித்து கொண்டிருகையில் எனது மைன்ட் வாய்ஸ்  சொன்னதை அப்படியே ரிபீட்டினார்.

"என் மைண்ட் வாய்ஸ் எப்படி உங்களுக்கு கேட்கிறது" என்றேன் ஆச்சரியத்துடன் 

"கடவுளுக்கு கேட்காதா"

"இப்ப நான் சரவணன் என்றால் எனக்கு பான் கார்டு இருக்கு. அது போல்
நீங்கள் கடவுள் என்பதற்கு ......என்று இழுத்தேன்

"ஹா ஹா" மீண்டும் சிரித்தார்

"எனக்கு அதெல்லாம் கிடையாது" என்றவர் "சரி நீ என்னை கடவுள் என்று நம்புவதற்காக இதை சொல்கிறேன்" என்றவர்

இன்று காலையில் நான் என்ன சாப்பிட்டேன் என்பதில் தொடங்கி யார் யாரிடம் பேசினேன், என்ன பேசினேன், இன்றைய நிகழ்வுகள்,இப்போது நான் படித்து பாதியில் விட்டிருக்கும் நாவல்,  கடைசியாக படம் பார்த்து கொண்டே கிண்டலாய் கமெண்ட் பண்ணியது வரை சொன்னவர்,

"அன்பா கூப்பிட்டாலே வர மாட்டார் என்று சொன்னாய் அல்லவா. வருவேன் என்பதை நிலை நாட்டவே  வந்தேன்" என்றார் 

 ஆச்சரியம் மிகுந்து போய் கொஞ்சம் பரவசமானேன் 

"மன்னிச்சுக்குங்க இந்த காலத்துல  யாரை நம்புவது என்றே தெரியவில்லை. அதனால் தான்" என்றேன்.

"எதையுமே ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பது சரியான விஷயம் தான்" 

"சாரி பேச்சிலர் ரூம் டெய்லி கிளீனா வச்சிக்க முடியல" என்ற படி விருந்தினர் வந்தால் அவசரமாக கிளீன் செய்வது போல் செய்ய ஆரம்பித்தேன்   

"கல்யாணம் ஆகாத பேச்சிலர் என்றால் சரி.கல்யாணம் ஆன பேச்சிலர் இப்படி இருப்பது தவறு " என்றவர் 

"சரி இப்படி உட்கார்" என்று எதிரே கை காட்டினார்

"பெரியவர்கள் முன்னால் உட்காருவது தவறு. அதுவும்  நீங்கள் கடவுள் உங்கள் முன் எப்படி"

சேரில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டவர் என்னை கிண்டலாய் ஒரு பார்வை பார்த்தார்.  

"கோவிலில் என்னை நிற்க வைத்து விட்டு பக்தர்கள் நீங்கள் எல்லோரும் அமர்ந்து மணிகணக்கில் பூஜை செய்கிறீர்களே. அதற்கு பெயர் என்ன ?"

 நான் பல்பு வாங்கியது போல் ஆகி பட்டென்று உட்கார்ந்து கொண்டு விட்டேன்.

"என்ன சாப்பிடுகிறீர்கள்" என்றேன்

"நீயே சமைப்பதற்கு அலுத்து கொண்டு  பழம் பிஸ்கடுடன் உன்  இரவு உணவை முடித்து கொண்டு விட்டாய். இதில் நான் என்ன சாப்பிடுவது"

"ஆப்பிள் இருக்கிறதே" என்று எழுந்தேன் 

அவர்  கையில் இப்போது நான் பூஜை அறையில் வைத்திருந்த ஆப்பிள் வந்திருந்தது

"இதற்காக நீ ஏன் எழ வேண்டும் என்று தான் நானே எடுத்து கொண்டேன்" என்றவரிடம் 

"எதற்காக இந்த விஜயம்" என்று கேட்டேன்.


"அதை விடு. உனக்கு என்ன வேண்டுமோ கேளேன். தருகிறேன்."

"என் ஆசைகளை நிறைவேற்றி விடுவீர்களா" என்றேன் ஆச்சரியமாய்   

"ஏன் என்னால் முடியாதா"

அப்போது கொஞ்சம் உஷாராகி  "உங்களால் முடியும். நிறைவேற்றி விடுவீர்கள். ஆனால் அவை அனைத்தையும் ஏன் ஆசைப்பட்டோம் என்று நினைக்கும் அளவுக்கு வெறுக்கவும்  வைத்து விடுவீர்கள். ஆகவே எதுவும் கேட்க வேண்டாம் என்று நினைக்கிறேன்" என்றேன் 

"ஹா ஹா"  மீண்டும் அந்த சிரிப்பு அவரிடமிருந்து வெளிப்பட்டது.


"பக்குவப்பட தயாராகி விட்டாய் போலிருக்கிறதே"

"அப்ப நான் இன்னும் பக்குவபடவில்லையா" என்றேன் ஏமாற்றமாய் 

 "அதற்கு நீ இன்னும் நிறைய அனுபவப்பட வேண்டும்"

ஆமா ஒண்ணா ரெண்டா எவ்வளவு கஷ்டம் என்பதை வடிவேலு பாணியில் "என்னா அடி " என்பதாக சொன்னேன்.

"உதாரணத்திற்கு  ஒன்று சொல்"

"உங்களுக்கே தெரியுமே" 

"உன் வார்த்தையில் சொல்" 

"முன்பெல்லாம் ஹோட்டல் சாப்பாடு என்றால் அவ்வளவு இஷ்டம் எனக்கு வீட்டில் கஷ்டப்பட்டு சமைத்து கொடுத்தால் கூட வேண்டாம் என்று சொல்லி விட்டு ஹோட்டலில் சாப்பிட சென்று விடுவேன். இப்போது ஏன்டா அப்படி ஆசைப்பட்டோம் என்ற அளவுக்கு பேச்சிலர் வாழ்க்கையில் ஹோட்டல் சுவை அலுத்து விட்டது. வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கி நிற்கிறது மனசு"

"பேச்சிலர் பலரின் நிலை இது தானே. இருந்தும் நீ சந்தோசபட்டு கொள்ளலாம்.  உன் சின்னஞ் சிறு ஆசைகள் சில நிறைவேறி விடுகின்றன. பலருக்கு ஆசைகள் எதுவுமே நிறைவேறுவதில்லை"

தலையாட்டினேன் 

"ஆசைகள் பற்றி யோசிக்க தொடங்கினாலே அதனால் நிம்மதி கிடைக்குமா என்ற கேள்விகள் தான் மனதில் தொக்கி நிற்கிறது" 

"நல்ல விஷயம். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர தொடங்குகிறாய் நீ" 

"அப்ப மனுஷன் என்றால் ஆசைபடவே கூடாதா" என் குரல் இலேசாக உயர்ந்தது.  

"ஆசைபட்ட்டது கிடைத்தால் தான் சலிப்பு வந்து விடுகிறதே" 

நான் மௌனமாகி ஒரு நிமிடம் கழிந்தது.

"உங்களிடம் சில கேள்விகள் கேட்க ஆசைபடுகிறேன். கேட்கலாமா"

"தாரளமாக கேள்" என்றார்

நான் கேட்க ஆரம்பித்தேன் 

1. பணக்காரர் ஏழை, முதலாளி தொழிலாளி, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாட்டில் எளியவர்களின் வாழக்கையை சுரண்டும் அவலம் அல்லவா இங்கே நடக்கிறது. 

2. கடவுள் நீ இருக்கையில் நானே கடவுளின் அவதாரம் என்றெல்லாம் மனிதர்கள் தங்களை காட்டி கொள்கிறார்களே.இதை எப்படி அனுமதிக்கிறாய்.

3. ஒரு வீட்டில் நிறைய  குழந்தைகள். இன்னொரு வீட்டில் குழந்தையில்லாமல் கோவிலுக்கும் மருத்துவமனைக்கும் ஏறி இறங்குகிறார்கள்.ஏன் இந்த பாகுபாடு ?

4. தெய்வம் நின்று கொல்லும் என்பதால் தவறு செய்யும் பலரும் அடுத்த ஜென்மம் தானே அப்ப பார்த்துக்கலாம் என்று தொடர்ந்து தப்பை செய்யும் சூழல் தானே இங்கிருக்கிறது. 

5. ஏன் கஷ்டபடுகிறோம் என்று கேட்டால் போன ஜென்மத்து பாவம் என்கிறார்கள் பெரியவர்கள். போன ஜென்மத்துல என்ன பாவம் செய்தோம் என்றே தெரியாமல் இந்த ஜென்மத்தில் தண்டனை அனுபவிப்பது சரியான முறை தானா ?

6. நீ அழகை படைத்தது ரசிக்கவும் கொண்டாடவும் தானே. இயற்கையாக இருக்கட்டும். மனிதனாக கூட இருக்கட்டும். அழகை சீரழித்து சட்டத்தின் ஓட்டையில் இருந்து தப்பித்து வாழ்பவர்களுக்கு தண்டனை என்ன?

7. மனிதன் வாழ்வதற்கு உணவு உடை உறைவிடம் தேவை. ஆனால் ஜாதி மதம் தேவையில்லையே. அவற்றை ஏன் மனிதர்களுக்குள் கொண்டு வந்தாய்?

8. மனிதர்களை படைத்தாய் சரி அவர்களுகென்று பிரச்னைகளை படைத்தாய் சரி. மாற்று திறனாளிகளை ஏன் படைத்தாய். கடவுளின் படைப்பில் குறை இருக்கலாமா ?

9.உனது ஆலயங்களில் கூட காசு இருக்கிறவங்களுக்கு ஒரு வரிசை காசு இல்லாதவர்களுக்கு ஒரு வரிசை என்று இருக்கிறதே. உனது முன்னே அனைவரும் சமம் தானே. இதை எப்படி அனுமதிக்கிறாய் ?

10. மனித வாழ்க்கையை ஏன் இப்படி எதற்காகவாவது போராடும் வாழ்க்கையாகவே படைத்திருக்கிறாய் ?

நான் தட்டு தடுமாறி ஒவ்வௌன்றாய் சொல்லி முடிக்க,என்னை 
பார்த்து புன்னகைத்தார். 

"உன் கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் மனிதர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலேயே இருக்கிறது. அதை நீ உற்று கவனிக்க வேண்டும்" 

"புரியல"

"உன் ஸ்டைலில் சொல்றேன். ஒரு சினிமாவோ நாடகமோ அல்லது கதையோ படிக்கிறாய். அதில் எல்லோரும் நல்லவர்கள். யாருக்கும் எந்த பிரச்னையுமில்லை என்றால் உன்னால் அந்த படைப்பை ரசிக்க முடியுமா, போரடிக்கிறது என்று எழுந்து விடுவாய் அல்லவா. அது போல் தான் வாழ்க்கையும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விட்டால் வாழ்க்கை போரடித்து விடும்.  இந்த வருடம் வாங்கிய இன்க்ரிமென்ட் அடுத்த வருடம் இன்னும் அதிகமாக வேண்டும் என்று உழைப்பது தானே வாழ்வின் சுவாரசியம். அடுத்து எந்த சாதனைக்கு முயற்சிக்கலாம் என்று தானே தோன்றும். இது தான் வாழ்க்கை"

இப்படி அவர் சொல்லி முடித்த போது எனக்கு வேறு என்ன சொல்வதென்று தோன்றவில்லை. ஆனால் ஓர் ஆசை மட்டும் துளிர் விட்டது. அவருடன் ஒரு செல்பி எடுத்து கொள்ள வேண்டும் என்று. 

"உங்களை சந்தித்து பேசியதை ஒரு போட்டோ எடுத்து வைத்து கொள்ள வேண்டும் என்று ஆசைபடுகிறேன். எடுத்து கொள்ளலாமா" என்றேன் தயக்கமாய் 

"ஆகா எடுத்து கொள்ளலாமே" என்றார் 

என் செல் போனை அவரே எடுத்து, என்னை அருகில் அழைத்தார்.
பய பகதியுடன் அணுகி அவர் அருகில் நின்று கொண்டேன். அவரே போட்டோ எடுத்தார். அதை என்னிடம் காட்டினார். நன்றாக வந்திருந்தது. அதையே நான் சந்தோசமாய் பார்த்து கொண்டிருக்க  "சரி நான் வருகிறேன்" என்றவாறு மறைந்தார்.

எனக்கு இன்னும் பிரமிப்பு விலகவில்லை. ரொம்ப சந்தோசமாக இருந்தது. எப்படிப்பட்ட ஒரு அனுபவம் கிடைச்சிருக்கு. இதை வீட்ல எல்லார் கிட்டேயும் சொல்லணும் நண்பர்களிடத்தில்  சொல்லணும் என்று உள்ளுர சொல்லி கொண்டிருக்கையில் தான்  ஞாபகம் வந்தது. ஆகா நாம் சினிமாவிலே டைரெக்டர் ஆகணும் னு ஆசைபட்டோமே அதை கேட்காமல் விட்டு விட்டோம். சரி ரொம்ப நாளா  ஒரு வீடு வாங்கணும்னு
நினைச்சுகிட்டிருந்தோம். அதையாவது  கேட்டிருக்கலாமே. எப்படி இது அவர் இருக்கும் வரையில் நினைவுக்கு வராமல் போனது. ஜம்பமாய் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி விட்டோமே ச்சே . கிடைச்ச அதிர்ஷ்டத்தையும் விட்டு விட்டே என்று எல்லாரும் திட்ட போகிறார்கள்.  அவர்களை எப்படி சமாதானபடுத்துவது. என்று தடுமாற ஆரம்பித்தேன்.

இருந்தும் அவருடன் எடுத்து கொண்ட செல்பி போட்டோ இருக்கிறதே. 
இது பொக்கிஷமாயிற்றே  இதை முகநூலில் பகிர்ந்தால் ஒரு ஆயிரம் லைக் கன்பார்ம் என்ற உற்சாகம் தொற்றி கொள்ள செல் போனை ஆன் செய்து ஆர்வமாய் (பரவசமாய் என்றும் சொல்லலாம் ) போட்டோவை பார்த்தேன். அதிர்ச்சியாய் இருந்தது. காரணம் அந்த படத்தில் நான் மட்டும் தான் இருந்தேன். எனக்கு பக்கத்தில் கடவுள் இல்லை. சுவர் மட்டும் தான் இருந்தது.

நம்ம ஆசையை தூண்டி இப்படி ஏமாற்றமடைய வைத்து விட்டாரே. நாம் ஆசைப்பட்டதையும் கேட்க விடலே. நாம ஆசையாய் கேட்டதையும் நிறைவேத்தலே. எதுக்கு தான் வந்தார் இவர். நான் மட்டுமே சந்தோசப்பட்டு கொள்ள இதில் என்ன இருக்கிறது. என்னை சுற்றியுள்ளவர்களிடம் சொல்லி சந்தோசப்பட்டு கொள்ள முடியாமல் போய் விட்டதே  என்று சலிப்பாகி சேரில் அமர்ந்த போது கையில் இருந்த செல் போன் எஸ். எம். எஸ் வந்திருப்பதை சொன்னது.

ஓபன் செய்து பார்த்தேன். கடவுள் தான் அனுப்பியிருந்தார்.


சரவணா. நீயும் நானும் எடுத்து கொண்ட செல்பியில் நான் இல்லை என்ற 
கவலை வேண்டாம். ஒவ்வொருவர் உயிரிலும் கடவுள் இருக்கிறார் 
என்பது உலக வழக்கு. ஆகவே நான் உனக்குள்ளே தான் இருக்கிறேன். 
எது ஒன்றுக்கு ஆசைபடுகிறோமோ அதற்கு ஏன் ஆசைப்பட்டோம் என்ற நிலைமைக்கு வந்து விடுவோம் என்று நீ சொன்னதையே இங்கே மேற்கோள் காட்டுகிறேன்.

ஆம் இந்த செல்பியும் அப்படியே. இதை கண்டிப்பாக நாளை நீ எல்லோருக்கும் சந்தோசமாக சொல்வாய்.  முகநூலில் பகிர்வாய். இது வரைக்கும் சரி. ஆனால் அதற்கு பின் என்ன நடக்கும் தெரியுமா சொல்கிறேன் கேள்.

பலர் உன்னை கடவுளை பார்த்ததவன் என்பது  போல் கொண்டடுவார்கள். அது உனக்கு மகிழ்ச்சியுடன் கொஞ்சம் ஆணவத்தையும் சேர்த்தே கொடுத்து விடும். இன்னும் பலர்  நீ பொய் சொல்கிறாய் என்று குற்றம் சுமத்துவார்கள்.
நீ அவர்களிடம்  உண்மையை நிரூபிக்க  போராடுவாய். இதனால் உனக்கு விளையும் நன்மையை விட தீமைகளே அதிகம். ஆகவே தான் படத்தில் என்னை மறைத்து விட்டேன். பின் எதற்காக வந்தாய் என்று தானே கேட்கிறாய். உன் கஷ்டங்களை எதிர்த்து நீ போராட உனக்கு ஒரு தன்னம்பிக்கை இந்த நேரத்தில் தேவைபடுகிறது. அதை உனக்கு அளிக்கவே வந்தேன். அளித்து விட்டேன். இனி நீ எதுவாகினும் எதிர்த்து போரடுவாய். அதற்கான வலு இப்போது உனக்கு கிடைத்திருக்கிறது.  போராடு. வாழ்க்கையை  வெற்றி கொள். 
ஆசிகளுடன் கடவுள்.

ஆர்.வி.சரவணன்