வெள்ளி, நவம்பர் 25, 2016

வா, காதல் செய்வோம்-3


வா, காதல் செய்வோம்-3


ந்தினியின் முகத்திலிருந்த கோபமும் வார்த்தைகளில் தெரிந்த கடுமையும் அவளுக்கு முன்னே அமர்ந்திருந்த அவர்களை பாதிக்கவேயில்லை. நந்தினியின் அலுவலக அறை  அது. ஒரு பிளாஸ்டிக் கவரொன்று பேன் காற்றால் அலைக்கழிக்கப்பட்டு அறையெங்கும் சுற்றி கொண்டிருந்தது. அதையே கவனித்து கொண்டிருந்த நந்தினியை பார்த்து, கோட்சூட் போட்டு பணக்கார தோரணையிலிருந்த அந்த மனிதர் சொன்னார்.

"இங்க பாரும்மா.  நடந்த சம்பவத்தை பார்த்தவங்க எல்லாரையும் சரி கட்டியாச்சு. நீ மட்டும் தான் பாக்கி. உனக்கு பணம்  எதுனா வேணும்னா சொல்லு தரேன்.  பிரச்னை பண்ணாதே "

"சார். பணத்துக்காகலாம் பிரச்னை பண்ற ஆள் இல்ல நான். ஒரு அப்பாவி பொண்ணு படிக்க வேண்டிய வயசுல நட்ட நடுரோட்ல கத்தி குத்து வாங்கி படுக்கைல கிடக்கா. அதுக்கு காரணம் உங்க பையனோட திமிர். கேட்டா காதல்னு சப்பைக்கட்டு வேற. அதான் பிரச்னை பண்ணிட்டிருக்கேன்" 

"பிரச்னை பண்றியே. இந்த பொண்ணுக்கு வேண்டிய மருத்துவ செலவுலாம்  நீயே பண்றியா" பக்கத்தில் அமரந்திருந்த  அந்த வெள்ளை வேட்டி சட்டை மனிதர் சொன்னார். அவர் வார்த்தைகளில் தெரிந்த நக்கல் அவளை துணுக்குற வைத்தது. நந்தினி அந்த நபரை ஏறிட்டு பார்த்தாள்.

"முடியாதுல்ல. பணத்துக்கு கஷ்டப்படற குடும்பம் தானே உங்க குடும்பம். அப்புறம் ஏம்மா இவ்வளவு ஜம்பம்"

நந்தினியை தொடர்ந்து காயப்படுத்தும் விதமாகவே அவர் சொல்லி கொண்டிருக்க, அவள் நிதானமாக சொன்னாள்.

"பணக்காரங்களுக்கு  பணக்காரன் சப்போர்ட் பண்றப்ப, ஏழைக்கு ஏழை தானே சார் உதவியா இருக்க முடியும்"

"நீ அப்படியே கோர்ட்ல வந்து சாட்சி சொன்னாலும் அதை எங்களால உடைச்சிட முடியும். தெரியுமில்ல"

அந்த கோட் சூட் மனிதரின் வார்த்தைகள் தன்னை எதுவும் செய்து விடவில்லை என்பதை காட்டி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் நந்தினி.

"நீங்க பண்றதை பண்ணுங்க சார். அதுக்காக கொலை பண்ண வந்தது உங்க பையன் இல்லேனு பொய்யெல்லாம் நான் சொல்ல முடியாது" 

"இங்க பாரும்மா . பகையை தேடிக்காதே. பின்னாடி எதுனா ஆச்சுன்னா போலீஸ் எங்களால ஒண்ணும் பண்ண முடியாது"  இன்ஸ்பெக்டர் தன் பங்குக்கு வாய் திறந்தார்.

"மிரட்டறீங்களா சார்"

"இல்ல. யதார்த்தத்தை சொன்னேன்"

"அந்த பையனை சட்டத்துல சிக்க வைக்க கூடாதுனு நீங்கலாம் உறுதியா இருக்கிறப்ப நான் என  கொள்கைல  உறுதியா இருக்க கூடாதா சார்"

"நல்லா இரு. யாரு வேணாம்னா. இதனால  என் பையன் தலை மறைவா இருக்கான்"
அந்த கோட்  பிபி எகிறியவராய் கத்த ஆரம்பித்தார்.

இந்த சத்தம் கேட்டு ஒருவர்  அந்த அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார். நந்தினி சாரி சார் என்றவுடன் அவர் தலையாட்டிய படி வெளியே சென்றார். பிளாஸ்டிக் கவர் இன்னும் அங்கேயே சுற்றி கொண்டே இருந்தது.


"ஒரு பொண்ணை சாகடிக்க பார்த்தவன்  வெளிலயா சுத்த முடியும்" நந்தினி சிரித்தாள்

"அவ பொழைச்சிடுவா. அப்படி ஒன்னும் அதிகமா காயமில்ல"

"மீடியா அவங்க ரெண்டு பேர் போட்டோவையும் சேர்த்து போட்டு வெளிச்சப்படுத்தினதாலே அவ வாழ்க்கை கஷ்டமாகிடுச்சே"

"அவங்க பாமிலியே கவலைப்படலே. உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை அந்த கோட் சூட் மனிதர் 
அங்கலாய்க்க ஆரம்பித்தார்.

"எஸ். அதுல ஒரு சுயநலம் இருக்கு. நாளைக்கு என்னோட தங்கச்சிக்கும் இது மாதிரி பிரச்னை வந்துட கூடாதுல்ல"

"முடிவா என்ன சொல்றம்மா " அந்த வெள்ளை வேட்டி மனிதர் எழுந்து கொண்டார்.

"அவர் பையனை சட்டத்தின் முன்னாடி நிறுத்துங்க. தண்டனை வாங்கி கொடுங்க" நந்தினியும் மரியாதைக்கு எழுந்து நின்ற படி சொன்னாள்.

"திமிரை பார்த்தியா. நம்ம ஏரியா போண்ணாச்சேனு பார்த்தா ரொம்ப பேசறே நீ"

"பாதிக்கப்பட்ட பொண்ணு கூட நம்ம ஏரியா தான் சார். நியாயப்படி பார்த்தா,  நீங்க தான் அந்த பொண்ணு சார்பா பேசணும்"

அந்த நேரம் அந்த பிளாஸ்டிக் கவர் அந்த வெள்ளை வேட்டி மனிதரின் காலடியில் வந்து நிற்க, கீழே குனிந்து அதை  எடுத்தவர் கசக்கி குப்பை தொட்டியில் விட்டெறிந்து விட்டு,
"நான் உங்க அண்ணன் கிட்டே பேசிக்கிறேன்" ஆவேசமாய் சொன்னார்.

------


"ம்ம ஏரியால அவர் பெரிய ஆளு.  அவரு கிட்டயே போய் சரிக்கு சமமா பேசியிருக்கியே. நீ பொண்ணா இல்லே ரவுடியா" அண்ணன் ரகு வீட்டில் நுழைந்ததும் செருப்பை கூட கழட்டாமல் ஆவேசமாய் கத்தினான்.
நந்தினி எதிர்பார்த்த ஒன்று தான் இது  என்பதால் கொஞ்சம் நிதானமாகவே பதில் சொன்னாள்.

" பெண்விடுதலை பத்தி நான் காலேஜ் மேடைல பேசறப்ப வலிக்கிற அளவுக்கு 
கை தட்டி பாராட்டின அண்ணனா இப்படி பேசறே"

"மேடைக்குனா கை தட்டலாம். வாழ்க்கைனு  வந்துட்டா அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கணும். இல்லேன்னா உலகம் நம்மளை தட்டி விட்டுட்டு போயிடும்"  சேரில் அமர்ந்து ஷூவை கழற்றி கொண்டே சொன்னான்.

"உனக்கு கல்யாணத்துக்கு மாப்பிளை தேடிட்டிருக்கோம். இந்த நேரத்துல இதெல்லாம் எதுக்கும்மா " அம்மா சலிப்பாய்  சொன்னாள்.

"வர்ற மாப்பிள்ளை எல்லாம் நாம போடப் போற  நகை எவ்வளவுனு கேட்ட பின்னாடி ஓட்டப்பந்தயத்துல ஓடற மாதிரி ஓடறான். இதுல பொண்ணு இப்படி தினம் ஒரு சண்டையை வீட்டுக்கு கொண்டு வரவனு தெரிஞ்சா லாங் ஜம்ப் எடுத்துல்ல ஓடுவான்." அண்ணி விமலா சமையலறையிலிருந்த படியே கிண்டலடித்தாள்.  அவள் கோபத்துக்கு ஆதரவாய்  ஒரு பாத்திரம் நங் என்று முழங்கியது.

நந்தினி அண்ணியை திரும்பி  தீர்க்கமாக பார்த்தாள்.

"எதுனா சொன்னா முறைக்க ஆரம்பிச்சிடு. உனக்கு அப்புறம் தம்பி தங்கை இருக்காங்க. அவங்களையும் நாங்க கரையேத்தணும்.ஞாபகத்துல வச்சிக்க"

தம்பி தங்கைகள் இருவரும் படிப்பதை நிறுத்தி விட்டு இவர்களையே பார்த்தார்கள்.

நந்தினியின் அம்மாவுக்கு மருமகளின் பேச்சு உள்ளுக்குள் எரிச்சல் மூட்டினாலும் வெளியில் அமைதி காக்க வேண்டியதாய் இருந்தது. இல்லா விட்டால் பெரிய சண்டையாக அது மாறி விடும் . உள்ளே கட்டிலில் இருமல் சத்தம் தொடர்ந்து வரவே,
"அப்பாவுக்கு மாத்திரை வாங்கணும்பா  சீட்டை உன் பாக்கெட்ல வச்சிருக்கேன்" என்ற படி உள்ளே சென்றாள்.

"சீட்டை மட்டும் வச்சா போதுமா. அதை வாங்க காசு வேண்டாமா "அண்ணி 


அம்மா திரும்பி அண்ணியை சாதாரணமாக தான் பார்த்தாள்.

"ஆளாளுக்கு முறைக்கறீங்களே தவிர அவரோட பண கஷ்டத்தை புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்களே" விமலா வெடித்தாள்.

"ஏய் சும்மாருடி. நீ வேற. அம்மா நான் வாங்கிட்டு வரேன்மா " என்றவன் நந்தினி பக்கம் திரும்பி "இங்க பார். நான் அவங்க கிட்டே தங்கச்சியை எப்படியும் சம்மதிக்க வச்சிடறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். அதனாலே அந்த விசயத்துல இனிமே நீ தலையிடாதே"

"எப்படிண்ணா. அந்த பொண்ணு நம்ம தெரு பொண்ணு . நம்ம வீட்டுக்கே எத்தனையோ முறை வந்திருக்கு அதுக்கு ஒரு பிரச்னைனு வரப்ப நாம ஹெல்ப் பண்ணலேன்னா எப்படி?"

"அது அப்படி தான். பிரச்னை நமக்கு வராம போயிடிச்சேன்னு முதல்ல சந்தோசப்பட்டுக்குவோம் " என்ற படி பாத்ரூம் செல்ல துண்டை எடுத்தான்.

உள்ளிருந்து இருமல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கவே, நந்தினி அப்பாவை பார்க்க அறைக்குள் சென்றாள். படுக்கையில் படுத்திருந்த  அவளது அப்பா மகளை நிமிர்ந்து  பார்த்தார்.

"உன்னை நான் ஆம்பளையா பெத்திருக்கணும்மா" என்றார் மெல்லிய குரலில் 

"ஏம்பா ஆம்பளையா பிறந்தா தான் துணிச்சல் இருக்குமா. பெண்ணுக்கு இருக்காதா "

"வேண்டாம்மா பிடிவாதம் பிடிக்காதே" அம்மா அவள் கழுத்தில் இருந்த செயினை சரி செய்த படி சொல்லவும்,

"தைரியசாலியா என்னை வளர்த்துட்டு நீங்க எல்லாம் கோழைகளா ஆகிட்டீங்க. இதுக்காக எல்லாம் என் கேரக்டரை மாத்திக்க முடியாதும்மா  பார்க்கலாம். இந்த வாழ்க்கை நம்மள எது வரைக்கும் அழைச்சிட்டு போக போகுது ? என்ன பண்ண போகுதுனு " நந்தினி பெருமூச்செறிந்தாள். 


------

"நாம எது வரைக்கும் போகணும்கிறதை நாம தான்யா  முடிவு பண்ணணும். வாழ்க்கை போற போக்குல போறதுக்கு நாம என்ன ஆட்டு மந்தை கூட்டமா" மனோ சொல்ல வெங்கட் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான்.

"சோ. எந்த வேலையா இருந்தாலும் ஒரு டார்கெட் பிக்ஸ் பண்ணிக்குங்க. அதை  நோக்கி போக ஆரம்பிங்க." என்று அவன் பாடம் எடுத்து கொண்டிருக்கும் போதே டேபிளில் இருந்த லேண்ட் லைன் போன் ஒலித்தது. ஏதோ பேச முயன்ற வெங்கட்டை நோக்கி கையமர்த்தி விட்டு போனை காதுக்கு கொடுத்தான்.

அமேரிக்காவிலிருந்து பாட்டி  பேசினார்.

"என்னடா மனோ. எப்டி இருக்கே"

"நல்லாருக்கேன் பத்மினி பாட்டி  நீங்க" 

"ம்ம் இருக்கேன். ஆமா நேத்து நைட் நான் உனக்கு போன் பண்ணேன். போன் போகவே இல்லியே. 
போனை ஆப் பண்ணி வைக்க கூடாதுனு சொல்லிருக்கேன்ல"

"என் செல் போன் கீழே விழுந்துடுச்சு பாட்டி . போன் சரியில்ல" 

"ஏன்டா அப்ப புதுசு வாங்க வேண்டியது தானே"

"வாங்கறேன்" கையிலிருந்த அந்த செல் போனில் வாட்ஸ் அப் பார்த்து கொண்டே 
 வெங்கட்டை பார்த்து கண்ணடித்து சிரித்த படி சொன்னான்.

"என்னமோ புது போன் வாங்க காசில்லாத மாதிரி பேசறே"

"அத விடுங்க  உங்களை பார்த்து ஒரு வருஷம் ஆக போகுது. ஒரு பேரன் நம்மளை நம்பி இருக்கானேனு கொஞ்சம் கூட  அக்கறையே இல்ல பாட்டி  உங்களுக்கு"

"வரேண்டா. நாளைக்கு இந்த நேரம் உன் முன்னாடி இருப்பேன்.போதுமா "

மனோ " காமெடி பண்ணாதீங்க பாட்டி" என்றான் அதிர்ச்சியாய்.

"நான் சீரியஸா தான் பேசறேன்.  உன்னை பத்தி வர நியூஸ் எதுவுமே நல்லதா இல்ல. அதான் உடனே அக்கறையா கிளம்பி வந்துகிட்டிருக்கேன்."

"யாராவது எதுனா சொன்னா அப்படியே நம்புவீங்களா பாட்டி " அவன் குரலில் இருந்த கடுப்பை பாட்டி கண்டு கொள்ளாமலே, 

"  நம்பாம தான் நேர்லய வந்து பார்த்துடலாம்னு  வந்துட்டிருக்கேன். நாளைக்கு பார்க்கலாம்"

போனை துண்டித்தாள் அந்த பத்மினி பாட்டி.

மனோ கோபத்தில் தன் கையில் வைத்திருந்த அந்த உயர் ரக புது செல்போனை உண்மையாகவே தரையில் போட்டு உடைத்தான்.

"சார் புது போன் சார்" வெங்கட் பதறினான். 

"தெரியும்யா. அந்த கிழவி வந்து நிஜமாவே செல் போன் கீழே விழுந்துச்சான்னு  செக் பண்ணி பார்க்கும்" என்றான் மனோ டென்ஷனாய் 

தொடரும்

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் நண்பர் தேவராஜ்


வியாழன், நவம்பர் 17, 2016

வா, காதல் செய்வோம்-2


வா, காதல் செய்வோம்-2

காட்சி-3 


ஆபிஸ் ரூம்

மனோ செல் போனில் பேசிக் கொண்டிருக்க, அவன் அமர்ந்திருந்த நாற்காலி அவன் அசைவுக்கு ஏற்ப ஆடி கொண்டிருந்தது. கதவை படீரென்று திறந்த படி  ஓடி வந்தான் அவன். அனுமதி இல்லாமல் வந்தது யாரென்று கோபத்துடன் நிமிர்ந்த மனோ நண்பன் பாபுவை பார்த்தவுடன் அமைதியானான். மறுபடியும் நாற்காலி ஆட ஆரம்பித்தது.  எப்போது இவன் பேசி முடிப்பான் என்று மனோவையும், அவ்வப்போது கதவையும் ஒரு சேர பதட்டத்துடன் பார்த்து கொண்டிருந்தான்  பாபு. இருபது வினாடிகள் கழிந்திருக்கும். 

மனோ செல் போனை காதிலிருந்து எடுத்தவுடனே 
"டேய் என்னை காப்பாத்துடா" என்றான். 

அப்போது கதவு மெதுவாக திறக்க   உள்ளே வந்தவன் சட்டையில் மேனேஜர் வெங்கட் என்ற எழுத்துக்கள் இருந்தன.

"என்ன சார் நீங்க பாட்டுக்கு இங்க வந்துட்டீங்க. அங்க வெளில ரகளை நடக்குது" 

மனோ கேள்விக்குறியாய் அவனை பார்த்தான். 

"சார். நம்ம ஆபிஸ்ல  வேலை பார்க்கிற பொண்ணுகிட்டே இவர் கொஞ்சம் ஏடா கூடமா பழகிட்டார். பிரச்னையாகிடிச்சு.  அவங்க பேமிலி வெளில கலாட்டா பண்ணிட்டிருக்காங்க" 

இவர்கள் இருவரின் பதட்டத்தை கவனித்த மனோ, சொன்னான். "இவனோட  வீட்டுக்கு போய் கலாட்டா பண்ண  வேண்டியது தானே. நம்ம ஆபிஸுக்கு ஏன் வராங்க "

"ஆபீஸ் ல பிரச்னை பண்ணா தானே பணம் தேத்த முடியும்" வெங்கட்.

"இந்த ஐடியா யாரு கொடுத்தா நீயா  "

"இல்ல சார்" அதிர்ச்சியாய் மறுத்தான்.

"இந்த மேட்டர் உனக்கு எப்ப தெரியும்

"ரெண்டு மூணு மாசமா தெரியும்"

"என் கிட்டே ஏன் சொல்லல"

"உங்க பிரண்டாச்சேனு....

இழுத்தது போதும். கூப்பிடு அவங்களை" 

"டேய் பிளீஸ் என்னை எப்படியாவது காப்பாத்திடுடா " நண்பன் 

"நீ சில்மிஷம் பண்றதுக்கு என் கம்பெனி தான் கிடைச்சுதா" மனோவின் குரல் உயர்ந்தது.

பிரபு தலை குனிய கதவு திறந்தது.
ஒரு வயதான பெண்மணி , அழுத படி ஒரு இளம்பெண், ஒரு கட்டுமஸ்தான ஆள். என்று ஒருவர் பின் ஒருவராக வந்தார்கள்.

"இவ்வளவு தானா இன்னும் இருக்காங்களா ?"

"இன்னும் நாலஞ்சு பேர் வெளில நிக்கிறாங்க" 

பிரபுவை பார்த்த மாத்திரத்தில்  அந்த ஆள் கத்த ஆரம்பித்தான்.

"பண்றதெல்லாம் பண்ணிட்டு இங்க வந்து ஒழிஞ்சுகிட்டியா"

"ஹலோ பார்த்து பேசுங்க"

"உன் மூஞ்சை பேக்காம பேசறேனேனு சந்தோசப்படு"


பிரபு  மனோவை பார்க்கிறான்.
"பொண்ணை வேலைக்கு அனுப்பறோமா. இல்லே உன்கூட சரசம் பணறதுக்கு அனுப்பறமோ" அப்பன் இல்லாத பொண்ணு எவன் கேட்கப் போறான்னு தானே.தட்டி கேட்க நான் இருக்கேண்டா" 

அந்த பெண் அழுது கொண்டே இருக்க  மனோ  கடுப்பாகி, " ப்ளீஸ் டோன்ட் க்ரை " என்றான்.

"வாழ்க்கையே போயிடிச்சே. எப்படி சார் அழுவாம இருக்கும்." அந்த அம்மா புடவை தலைப்பை பிடித்து கொண்டு  விம்ம ஆரம்பித்தார்.

லேப் டாப்பில்  டைப் பண்ணி கொண்டே மேனேஜரை பார்த்து  நீ பேசு என்பது போல்
சொடக்கு போட்டான்.

"இப்ப என்ன பண்ணலாம் சொல்லுங்க" வெங்கட் ஆரம்பித்தான்.

"இந்த பொண்ணை அவன் கல்யாணம் பண்ணிக்கணும்"

"எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு "

"ஆகிடுச்சுல்ல.  பின்ன ஏன் இந்த பொண்ணு பின்னாடி அலைஞ்சே " கட்டு மஸ்து எகிற ஆரம்பித்தான்.

மனோவை பிரபு  பார்க்க, 

"அங்க என்ன பார்வை. இத பாரு. இதுக்கு ஒரு முடிவு  கிடைக்கணும். இல்லேண்ணா  போலீஸ் இருக்கு கோர்ட் இருக்கு."

மனோ தன் மேஜை டிராயரை திறந்து நூறு ரூபாய் கட்டுகளாக ஐந்தை  எடுத்து டேபிளில் வைத்தான்.

கத்தி கொண்டிருந்த கட்டுமஸ்தான ஆள் 

 "ரூபாயை எடுத்து வச்சிட்டா சரியா போச்சா" 

இன்னொரு ஐந்து  கட்டுகளை மனோ எடுத்து வைத்தான். அவன் சுருதி இறங்குகிறது

"இல்லே நீங்க பணக்காரங்க. உங்களுக்கு இதெல்லாம் சாதாரணம். ஆனா எங்களை மாதிரி ஏழைகளுக்கு இதெல்லாம் ரணம் தானே இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரிய போகுது்" 

இன்னொரு சில 100 ரூபாய் கட்டுகள்.  டேபிளுக்கு வருகிறது 

"ஏன் நீங்க வாய் பேச மாட்டீங்களா" 

அந்த தாய் மனோவை பார்த்து கேட்கிறாள்.

"அதான் அவர் பணம் பேசிட்டிருக்கே"

"இங்க பாருங்க. உங்க  பொண்ணு இங்க வேலை பார்க்குது. இவரும் முதலாளியோட  நண்பர். அதனால  பிரச்னை முடிஞ்சா சரினு ஹெல்ப் பண்றார் . அவரை போய்....." என்று மேனேஜர் பேச ஆரம்பித்தான்.

"ஹூம். இதுக்கு கூட  நீங்க தான் பதில்
சொல்வீங்களா " 

"அவர் இப்படி கூவரதுக்கு   தான் சம்பளமே வாங்குறார். " கட்டுமஸ்து குரலில் கிண்டல்

இதை கேட்ட மனோ கோபத்துடன் நோட்டுக்களை எல்லாம் எடுத்து  உள்ளே வைக்க சொல்லி மேனேஜரிடம் கண் காட்டினான்.  அந்த கட்டுமஸ்து இப்போது கை நீட்டி தடுத்தான்.

"இருங்க. இப்ப என்ன. இந்த துட்டை எடுத்துட்டு உங்க பிரண்டை டிஸ்டர்ப் பண்ணாம இருக்கணும் அவ்வளவு தானே.  நான் பார்த்துக்கிறேன்"  என்ற படி பணத்தை வாரி கொண்டான்.

அந்த அம்மா "ஏண்டா டேய் உன்னை அழைச்சிட்டு வந்தது என் பொண்ணுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்னு" நீ என்னடான்னா அவளை விலை பேசறியே"


"அட. ஏதோ  தெரியாம பண்ணிட்டாரு. அதை போய் பெரிசு படுத்திட்டு. நீ கையெழுத்தை போட்டு கொடு. 

அனு மறுக்க ஆரம்பிக்க

 "இங்க பாரு. நீ உஷாரா இருந்திருக்கணும். இப்ப அழுது ஒரு பிரயோசனமுமில்லே" 

அனு அழுது கொண்டே மேனேஜர் கொடுத்த பேப்பர்களில் அவசரமாக கையெழுத்து போட ஆரம்பித்தாள்.

 "இனிமே இந்த பொண்ணு இருக்கிற பக்கம்  பார்வை வந்துச்சு. நாங்க திரும்பவும் வருவோம் " பாபுவை எச்சரித்த படி கட்டுமஸ்து கிளம்ப,  அம்மா தலையில் அடித்து கொண்டே வெளியேறினார். அந்த பெண் அனு மனோவை திரும்பி பார்த்த படியே செல்ல, மனோ நண்பனை பார்க்கிறான்.

"ஏண்டா. நீ சம்பாதிக்கிற காசுக்கு  இதெல்லாம் தேவை தானா "

"சாரிடா" 

"அதை வச்சிட்டு என்ன பண்றது. பணம் தானே பிரச்னையை தீர்த்துச்சு. 
 So,  பணம் இருந்தா விளையாடு.
இல்லேன்னா பொத்திகிட்டு  இருந்திடு"
மேனேஜரிடம் திரும்பி, 

 "நான் செய்ய வேண்டியதெல்லாம் இவன் பண்ணிட்டிருக்கான்யா. இந்த அமௌன்ட்ட  அவனுக்கு கடன் கொடுத்ததா எழுதி வைங்க."

வெங்கட்  தலையாட்ட பாபுவிடம் சொல்கிறான். 

" இனிமே மேயற வேலை எல்லாம் இங்க வேணாம். அப்புறம் உன்னை புடிச்சு கொடுத்து  நான்  நல்ல பிள்ளையாகிடுவேன்" என்ற படி  சோம்பல் முறிக்கிறான். 

அவன் ஒன்றும் சொல்லாமல் விருட்டென்று கிளம்பி வெளியில் செல்ல, "இனிமே இவன் இங்க வந்தான்னா த்ரூவா வாட்ச் பண்ணு." 

சரி சார்.

"ஆமா. அந்த பொண்ணு எப்படிய்யா?"

"நல்ல பொண்ணு சார். இவரால நம்ம கம்பெனி ஒரு  நல்ல ஸ்டாஃப்பை விடும்படி ஆகிடுச்சு.

"ரொம்ப பீல் பண்ணாதே . காசை விட்டெறிஞ்சா ஆயிரம் வேலையாள்."

"கம்பெனிக்கு சின்சியராவும் இருக்கணும்லே"   மனதுக்குள் சொல்லி கொள்கிறான் வெங்கட். 

அப்போது செல் போனில் வந்த மெசேஜ் படித்த மனோ,  "இன்றைய இரவை கொண்டாட அழைப்பு வந்தாச்சு. வாரே வா" விசிலடித்தான். 


"சார் நான் கூட இதை எப்படி சால்வ் பண்ண போறீங்களோனு பயந்துகிட்டிருந்தேன். ஈசியா  முடிச்சிட்டீங்க." வெங்கட் பாராட்டில் மயங்காமலே வார்த்தைக்கு தயங்காமலே சொன்னான்.

"பணம்யா பணம். அது இருந்தா  எதுவும் பண்ணலாம். எதையும் சரியாக்கலாம்."

"இவரு. இன்னும் சரியான ஆளை சந்திக்கல. சத்திக்கிறப்ப இருக்கு வேடிக்கை"  வெங்கட்  உள்ளுக்குள் முணுமுணுத்தான்.
   

காட்சி-4

"உங்க பணத்தால எதை வேண்ணா வாங்குங்க சார். ஆனா என்னை விலைக்கு  வாங்க முடியாது" தனக்கெதிரே நின்றிருந்தவர்களிடம் தீர்மானமாக சொல்லி கொண்டிருந்தாள் நந்தினி.


(அவளுக்கு எதிரில் இருந்தவர்கள் அப்படி எதை அவளிடம் விலை பேச முனைந்தார்கள்.அடுத்த வெள்ளி தெரிஞ்சிடும்.)

தொடரும்.

நன்றி ஓவியர் ஜெயராஜ்.

ஆர்.வி.சரவணன்.திங்கள், நவம்பர் 07, 2016

வா, காதல் செய்வோம்-1

காட்சி-1

இரவு நேரம். அமைதியை கலைக்காதவாறு கோவிலின் மணியோசை,  பிரமாண்டமான பங்களாவின் பால்கனியில் அமர்ந்திருந்த 65 வயது மதிக்கத்தக்க அந்த பெண்மணியை கோவில் இருந்த பக்கம் திரும்ப வைத்தது.

"பகவானே என் பேரனை ஒரு கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைக்கிறதுக்குள்ள உன் பாடு என் பாடு ஆகிடுச்சு. ஏதோ நல்லபடியா கல்யாணத்தை முடிச்சிட்டேன். அவன் வாழ்க்கையும்  நல்ல படியா அமையணும்பா" 
என்றவாறு கன்னத்தில் போட்டு கொண்டார்.

" என் பொண்ணை இந்த மாப்பிள்ளைக்கு சம்மதிக்க வைக்கிறதுக்கே போதும் போதும் னு ஆகிடுச்சு. பெரியவங்களா  பார்த்து பேசி முடிச்சிட்டோம். நீ தான்பா அவங்களை கஷ்டம் ஏதும் இல்லாதவாறு  வாழ வைக்கணும்" பக்கத்தில் நின்றிருந்த பெண் கோபுரத்தை பார்த்து கும்பிட்ட படி முணமுணுத்தார்.

அந்த வயதான பெண்மணி அந்த பெண்ணின் தோளில் கை வைத்து, "முரண்டு  பிடிக்கிறவங்க எல்லாருமே கல்யாணத்துக்கு அப்புறம் சரியாயிடுவாங்க. வாழ்க்கைல நாம பார்க்காததா. இதுக்காக நீங்க ஒண்ணும் பீல் பண்ணாதீங்க" சமாதானம் செய்யும் விதமாக சொன்னார்.

அந்த அம்மா மௌனமாக தலையாட்டினார். கூடவே உள்ளே திரும்பி, சாத்தப்பட்டிருந்த அறைக்கதவை ஒரு முறை பார்த்து கொள்கிறார்.

காட்சி-2

பெட் ரூம் 

அந்த அறை ஒரு பூந்தோட்டத்தில் நுழைந்ததை போன்ற தோற்றத்தில் இருந்தது. அறையின் நடுவே  இருந்த கட்டில் வித விதமான மலர்களை கொண்டு தன்னை அலங்கரித்து மலர் மஞ்சம் என்பது இது தானோ என்ற எண்ணத்தை தர, பழங்கள் மற்றும் பலகாரங்கள் வேடிக்கை பொருள்களாக காட்சியளித்து கொண்டிருந்தது.  கட்டிலின் மையத்தில் பூக்களால் மனோ,  நந்தினி  என்ற பெயர்கள் எழுதப்பட்டு எந்த நேரத்திலும் களைய தயாராய் இருந்தது.

கட்டிலுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு பக்கத்தில் தரையில் மனோ படுத்திருந்தான்.  தூங்கி கொண்டிருந்தவனின் அருகில் இருந்த மது கிண்ணம்  அவன் மதுவுண்ட மயக்கத்தில்
இருப்பதை சொன்னது.

இதற்கு நேர் எதிரே கட்டிலின் அந்த பக்கத்தில் நந்தினி  படுத்திருந்தாள். தன் இடது கையையே தலையணையாக  தலைக்கு கொடுத்த படி இந்த அறையை பார்க்க பிடிக்காதவளாக சுவர் பக்கம் திரும்பி படுத்திருந்தாள்.அவளுக்கு மட்டுமே  கேட்கும் படியான விசும்பலில் இருந்தாள். மனோ செல்போன் எஸ் எம் எஸ் வந்திருப்பதை சத்தமிட்டு சொல்ல அவன் தூக்க கலக்கத்திலேயே செல் போனை எடுத்து பார்க்கிறான்.

"ம். ஹேப்பி பர்ஸ்ட் நைட்டாம். டேய் இது என் பொண்டாட்டிக்கு மட்டும்தான் பர்ஸ்ட் நைட். எனக்கு எத்தனாவது என்கிற கணக்கில்லே" என்கிறான்.

நந்தினி கன்னத்தில் வழிந்த கண்ணீரை தன் வலது கை விரல்களால் துடைத்து கொள்கிறாள்.

அந்த அறையின் சுவரில் இன்றைய தேதியை அறிவித்த படி இருந்த  காலண்டர், காற்றில் பறக்க ஆரம்பிக்கிறது.  மூன்று மாதங்களுக்கு முந்தைய நாள் ஒன்றில்  சென்று நின்று கொள்கிறது.

பிளாஷ் பேக் தொடங்குகிறது.

தொடரும்

ஓவியம் : மாருதி

ஆர்.வி.சரவணன்.