புதன், பிப்ரவரி 27, 2013

இது நம்ம பாக்யராஜ்

 இது நம்ம பாக்யராஜ்


(நடிகர்,இயக்குனர்  திரு கே.பாக்யராஜ் அவர்களை நான் சென்று சந்தித்து 
வந்த இனிய நிகழ்வின் அனுபவ பகிர்வு )

குமுதம் வார இதழில் அப்போது மௌன கீதங்கள் திரைக்கதை தொடர் வந்து கொண்டிருந்தது. நான் எட்டாவது படித்து கொண்டிருந்தேன்.  அந்த கதையை படிக்க ஆரம்பித்தவன் அதில் ஈர்க்கப்பட்டு, வீட்டில் அடம் பிடித்து (வீட்டில் வருடத்திற்கு ஒரு படம் தான் அழைத்து செல்வார்கள்  அதுவும் தேசபக்தி,  புராண படங்கள் தான்) சென்று பார்த்தேன். அந்த படம் பார்த்த பின் ஒரு  நாயகன் உதயமாகிறான் என்ற பின்னணி இசைக்க பாக்யராஜ் பிடித்த நடிகராக இயக்குனராக  எனக்குள் உருவெடுத்தார். 

அடுத்து வந்த அந்த ஏழு நாட்கள் படம் அப்போது நான் ரசித்த படமாகவும் ஏன் எப்போதும் ரசிக்கும் ஒரு முக்கியமான படமாக அமைந்து கொண்டது.

அடுத்து வந்த தூறல் நின்னு போச்சு படம் பார்த்த பின்,  அந்த படத்தில் வரும்  என் சோக கதையை கேளு தாய்குலமே பாடலை  நான் பாக்யராஜ் போலவும் என் தம்பி நம்பியார் போலவும் தினமும் மாலையில் பாடுவோம். அதை  கிராமத்தில் உள்ளவர்கள் தினமும் பொழுது போக்காக எங்களை பாட சொல்லி கேட்டு ரசிப்பது வாடிக்கையான ஒன்றானது. அதனால் அவர் மீது  இன்னும் ஈர்ப்பு அதிகமானது.

முந்தனை முடிச்சு பட பாடல்கள் இலங்கை வானொலியில் பட்டைய 
கிளப்ப, கூடவே படமும் வெளி வந்து அது இன்னும் பட்டையை கிளப்பியது. எனக்குள் பாக்யராஜ் படம் வந்தால் உடனே பார்த்தாக வேண்டும் என்ற உத்வேகத்தையும் அது  கிளப்பியது. வீட்டில் அந்த படத்திற்கு அனுப்பவில்லை. படம் வந்து நூறு நாள்களுக்கு பின் தான் நான் சென்று பார்த்தேன். அது வரை தினமும் தியேட்டரை சென்று வேடிக்கை பார்த்து விட்டு வந்தேன்.

தாவணி கனவுகள் படம்  பார்த்த பின்  சினிமாவுக்கு சென்று இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவை இதன் மூலம் எனக்கு விதைத்தார் அந்த திரைக்கதை அரசன். 

எங்க சின்ன ராசா முதற் கொண்டு அடுத்து வந்த ஒவ்வொரு படம் பார்க்கும் போதும்  என் இயக்குனர் கனவு வளர்ந்து விருட்சமாகி நின்றது.

காலேஜ் செல்ல ஆரம்பித்தவுடன் அவர் படம் வெளியானால் முதல் நாள் வீட்டுக்கு தெரியாமல் சென்று பார்க்க ஆரம்பித்தேன்.பாக்யா வார இதழ் வெளி வர ஆரம்பிக்க எங்கள் வீட்டில் வாங்கவில்லை.இருந்தும் நான் பாக்கெட் மணியில் வாங்கி படித்து விட்டு நண்பர்களிடம் கொடுத்து விடுவேன்.காவடி சிந்து பாடல் காசெட் சொந்தமாக வாங்கி நண்பர் கடையில் தினமும் போட்டு கேட்டு பாடல்கள் எனக்கு நெட்டுரு கூட ஆகி விட்டது.ஒரு முறை பாக்யராஜ் ரசிகர் மன்றத்தில் சேர பெயர் கொடுக்க ஆசைப்பட்டு பின் வீட்டை பற்றிய பயத்தினால் பின் வாங்கியது தனி கதை. அவரை பற்றிய செய்திகள் எல்லாவற்றையும் படித்து விடுவேன். நண்பர்கள் இதை பார்த்து பாக்யராஜ் பற்றி ஒரு க்விஸ் போட்டி வைத்தால் நீ தான் வின் பண்ணுவாய் என்று கூட சொன்னார்கள் 

படிப்பு முடிந்த பின் சினிமாவில் நுழைய வேண்டும் என்ற முடிவோடு இருந்த  என்னை வீட்டில் இருந்து கிளம்பிய மிக பெரிய எதிர்ப்பு கனவை அடங்கி போக வைத்தது. உள்ளுக்குள் கனவு மௌன கீதமாய் நித்தம் ஒரு முறை பாட ஆரம்பிக்க அதை இன்று போய் நாளை வா என்று என் சூழ்நிலை அனுப்பி வைத்தது.  சரி  திரையில் பார்த்த பாக்யராஜ் அவர்களை நேரில் சந்தித்து  நாலு வார்த்தைகளாவது பேசலாம் என்ற அடுத்த ஆசை ஒரு கை ஓசை போல உள்ளுக்குள் நாளுக்கு நாள் வலுப்பெற ஆரம்பித்தது.

சென்னை வந்த பின் வள்ளுவர் கோட்டம் செல்லும் போதெல்லாம் எப்போது அவரை பார்ப்போம் என்ற ஏக்கம் எழும்.  ஒரு படம் பார்த்து விட்டு வெளி வந்தவுடன் நேராக பாக்யராஜ் அலுவலகம் சென்று விடலாமா என்ற  வேகம் வரும் .

கல்யாண மாலை பட்டிமன்றம் ஒரு முறை பாக்யராஜ் தலைமையில் நடப்பதை அறிந்து அதற்கான பாஸ் வாங்கி வந்து அவரை சந்திக்க கிளம்பினேன் வீட்டில் முக்கிய வேலை ஒன்று வந்து விடவே தடைபட்டது

ஒரு முறை கட்சி பொது கூட்டத்தில்,பாக்யராஜ் மற்றும் என் கல்லுரி நண்பர் (கட்சி பேச்சாளர்) பேசுவதாக வந்த விளம்பரம் பார்த்து ஆசையுடன் அந்த பொது கூட்டம் சென்றேன் எனது  நண்பர் மூலம் அவரை சந்தித்து விடலாம் என்று ஆனால் அன்று பாக்யராஜ் பொது கூட்டத்திற்கு வரவில்லை


பாக்யா அலுவலகம் ஒரு முறை போன் செய்து விசாரித்தேன் அவர் கேரளா சென்றிருப்பதாக சொன்னார்கள். இன்னொரு முறை போன் செய்த போது காலை பத்து மணிக்கு வாருங்கள் என்று சொன்னார்கள்.ஆனால் அப்போது என்னால் காலையில் அலுவலகத்தில் பர்மிசன் போட முடியாததால் செல்ல முடியவில்லை. சரி கனவு நனவாகும் நாள் விடியும்  வரை காத்திரு என்று மனதிடம் சொல்லி வைத்தேன் 

இப்படி அவரை பார்க்க முயற்சித்து முடியாத நிலையில் தான், சென்ற மாதம் திரு எஸ் எஸ் பூங்கதிர் (பாக்யா நிருபர்) அவர்கள் முக நூலில் எனக்கு நண்பரானார். அவரின் முயற்சியால் பாக்யாவில் மக்கள் மனசு பகுதியில் முதல் முறையாக எனது கமெண்ட் மற்றும் படம் வெளியானது அது சிறிய கமெண்ட் தான் என்றாலும் அது எனக்கு கொடுத்த சந்தோஷம் மிக பெரிது.

ஒரு நாள்  அவரிடம் சாரை சந்திக்க வேண்டும் என்று  பொதுவாக 
சொல்லி வைத்தேன் அவரோ உடனடியாக எப்போது பார்க்க போகிறீர்கள் சொல்லுங்கள் நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல ஆடி போய் விட்டேன். உடனே சந்திக்கும் நாளை  அவரிடம் சொல்லி விட்டு பாக்யராஜ் அவர்களுக்கு ஏதேனும் பரிசளிக்க வேண்டும் என்ற ஆவலில் அவரது பழைய குடும்ப படமும்  இப்போதைய  குடும்ப படமும்   இணைத்து லேமினசன் போட்டோ ஒன்று அவசரமாக  ரெடி செய்தேன். என் தம்பிக்கும் பாக்யராஜ் ரொம்ப பிடிக்கும். வரியா என்று கேட்ட அடுத்த நொடி உடனே நான் ரெடி என்றார்.அப்போது வீட்டில் என்னை எதிர்த்தவர்கள் இப்போது அவரிடம் எப்படி பேச வேண்டும் என்ற டிப்ஸ் எனக்கு உதிர்த்தார்கள்.


சந்திக்க வேண்டிய நாள் அன்று காலை சிக்கிரமே விழிப்பு வந்து விட்டது திரையில் பார்த்த வரை நேரில் பார்க்க போகிறோம் என்று ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் என்னை ஆழ்த்தி கொண்டிருக்க கூடவே பார்க்கும் வாய்ப்பு இன்னொரு நாள் என்று தள்ளி போய் விடுமோ என்ற கவலையும் தொடர்ந்த படி இருந்தது

அலுவலக நண்பர் ஒருவரிடம் சோனி டிஜிட்டல் கேமரா கேட்டிருந்தேன்
அவரும் நான் கிளம்பும் தருவாயில் கொண்டு வந்து கொடுத்தார். கூடவே," சார்
கேமரா புல் ஆகிடுச்சு  நீங்க எடுக்க முடியாது கணினியில் சேமித்து விட்டு பின் எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்ல பயங்கர டென்சன் ஆகி விட்டது
எனக்கு.காரணம்  பதினொரு மணிக்கு வருவதாகசொல்லியிருக்கிறோம். இந்த நிலையில் எங்கு போய் கணினியில் சேமிப்பது என்று டென்ஷன் ஆன நான்," எல்லா போட்டோ வும் பார்க்கிறோம் எந்த போட்டோ கலங்கலாக சரியில்லாமல் இருக்கிறதோஅதில்  நாலு போட்டோ  மட்டும்  டெலிட் செய்து விட்டு படம் எடுத்து கொள்கிறோம்  என்று சொல்ல அவர்  பரவாயில்ல  சார் எடுத்துக்குங்க என்றார்

பொக்கே வாங்கி கொண்டு நண்பர்  பூங்கதிர் அவர்களுக்கு போன் செய்து நாங்கள் வந்து கொண்டிருப்பதை சொன்ன போது அவர் பாக்யராஜ் அவர்களிடம் கேட்டு கன்பார்ம் செய்து விட்டு, சார் வருவதற்கு முக்கால் மணி யாகும் நீங்கள் வெயிட் பண்ண முடியுமா என்றார். முப்பது வருசமா வெயிட் பண்ணவன் முக்கால் மணி நேரம் வெயிட் பண்ண மாட்டேனா என்றேன் நான் சிரித்த பூங்கதிர்,  சாரிடம் இதை சொல்லுங்கள் என்றார்

அவரது அலுவலகத்தில் உற்சாக துள்ளலுடன் நுழைந்தோம். ரிசப்சனில் கேட்டார்கள். பூங்கதிர் பெயர் சொன்னவுடன் உடனே  உட்காருங்கள் என்று அமர வைத்து என்ன சாப்பிடுகிறீர்கள் என்றும்  கேட்டார்கள். எனக்கும் என் தம்பிக்கும் இனம் புரியாத படபடப்பு இருந்து கொண்டே இருந்தது. வாசலை பார்த்த படி இருந்தோம் 

திடீரென்று பார்த்தால் பாக்யராஜ் சார் உள்ளே வருகிறார் காத்திருந்த எல்லோரும்எழுந்து நின்றோம். எங்கள் அனைவரையும் பார்த்து சிநேகமாய் சிரித்தவாறே எங்கள் வணக்கத்தை தலையாட்டி ஏற்று கொண்டு வாங்க என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்.

எங்களுக்கு முன் காத்திருந்தவர்கள் உள்ளே செல்ல நாங்கள் டென்சனில் நகம் கடித்தோம். கொஞ்ச நேரம் கழித்து எங்களை உள்ளே அழைத்தார்கள்
இதற்காக தானே காத்திருந்தோம் என்று பரபரப்புடன் உள்ளே நுழைந்தோம் 

எங்களை பார்த்தவுடன் எழுந்திருந்த பாக்யராஜ் அவர்கள் வாங்க என்று சொல்லி பூங்கதிர் சொன்னார் நீங்க வருவதை பற்றி  என்று சொல்ல அவர்   அருகில் சென்ற  எனக்கு  பரவசத்தில் வார்த்தைகளே எழும்பவில்லை.

பின் ஒருவாறு சமாளித்து நான் மௌன கீதங்கள் படத்திலிருந்து  ரசிகர் ஆனதை பற்றி குறிப்பிட, சிரித்த படி நாங்கள் அளித்த போட்டோ, பொக்கே மற்றும் என் தம்பி இந்த வருடத்திய டைரி யை பேக் செய்து அதில் பாக்யராஜ் ஸ்டில் ஒட்டி ஒரு ரோஜா ஒட்டி வைத்து எடுத்து வந்திருந்தார்.அதையும் 
 பெற்று கொண்டார்.

போட்டோ எடுத்துக்கணும் சார் என்றவுடன் கேமரா இருக்கா என்று கேட்டு விட்டு உடனே உதவியாளரை அழைத்து போட்டோ எடுக்க சொன்னார்.அது போதாது என்று  என் செல்போனிலும் எடுத்துக்கறேன் என்று நான் கேட்க அவர்  முகம் சுளிக்காமலும் சலிக்காமலும் ஓகே சொன்னவர்  லைட்டிங் போதுமா  என்று கேட்டு விட்டு அவரே சென்று இன்னொரு லைட்டின்  சுவிட்ச் ஆன் செய்தார். போட்டோ எடுத்த பின் எப்படி வந்திருக்கிறது என்று
கேமரா வாங்கி ஆவலுடன் பார்த்தார்.

எங்களை அவர் உட்கார சொல்லவும் காபி வந்தது. அதை குடிக்கும் நேரத்தில் கூட அவருடன் பேசுவது தடைபட்டு விடுமோ என்று தண்ணீர் குடிப்பது போல் காபி யை குடித்தேன்

 நான் எழுதிய சில பதிவுகளை கொண்டு சென்றிருந்தேன் ஒரு பைல் 
போட்டுஅதை  கொடுத்து உங்களுக்கு நேரமிருக்கும் போது படிங்க 
இதை மட்டும் எனக்காக இப்ப படிங்க சார்  என்று வேண்டுகோள் விடுத்தேன்  வாங்கி  புரட்டினார். படித்து விட்டு அவருக்கே உரிய  சிரிப்பை உதிர்த்தார் என் எழுத்துக்கு கிடைத்த அசீர்வதமாய் எடுத்து கொண்டு நிறைவானது மனசு 

அவர் படித்த அந்த பதிவு இதோ 


பாக்யராஜ் சார் பட பெயர்களை வைத்து ஒரு மிக சிறிய கதை

ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி கன்னி பருவத்திலே காலத்தில்
தாவணி கனவுகள் கண்டு கொண்டிருக்
எங்க சின்ன ராசா அவளை பார்த்து அந்த ஏழு நாட்களில்
இது நம்ம ஆளு என்று முடிவு செய்து அவளிடம்
டார்லிங் டார்லிங் டார்லிங் என்று சொல்ல
அவள் எதிர்ப்பு என்ற தூறல் நின்னு போச்சு ஆகவே
இன்று போய் நாளை வா வந்து விடியும் வரை காத்திரு
முந்தானை முடிச்சுக்கு என்று சொல்ல
அவன் சந்தோசத்துடன் பட்டு வேட்டி மடிச்சு கட்டி
திருமணத்திற்கு தயாரானான்
அவளுடன் ஆராரோ ஆரிராரோ பாட.
ஆம்
இப்ப அவன் வீட்டிலே விஷேசங்கஇணைய தளத்தில் ஒரு தொடர்கதை எழுதி கொண்டிருப்பதையும் இப்படி எழுதுவது உங்கள் படங்கள் மற்றும் எழுத்து தந்த ஈர்ப்பினால் தான் என்றும் அவரிடம் சொன்னேன். அப்படியா என்று ஆச்சரியத்துடன் கேட்டவர் உங்க ப்ளாக் பேரென்ன என்றும் விசாரித்து தெரிந்து கொண்டார்

 என் தம்பி நேற்று ருத்ரா படம் டிவியில் பார்த்தேன் எத்தனை முறை பார்த்திருந்தாலும் நேற்றும் ரசித்து சிரித்தேன்  என்று சொல்ல, எந்த 
டிவியில் என்று ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டார்.அடுத்து 
அவரது படம் பற்றி நான் கேட்க  டிஸ்கசன் நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்

 இதற்கு மேல் பேச வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவரை பார்க்க இன்னும் ஏனைய பேர் காத்திருந்ததால் கிளம்ப மனசில்லாமலே விடைபெற்று எழுந்தோம்.கிளம்பும் போது அப்பப்ப வாங்க என்று சொன்னதுடன் உங்க பேர் என்ன சொன்னீங்க என்று கேட்டு
தெரிந்து கொண்டார்.

உள்ளே நடந்து சென்ற நான் வெளியில் வரும் போது பறந்த படி வந்தேன் என்பதை சொல்லவும் வேண்டுமா. வெளியில் வந்தவுடன் என் தம்பி என் கைகளை பிடித்து ரொம்ப தாங்க்ஸ் என்றான்.நாம்  தாங்க்ஸ் சொல்ல வேண்டியது நண்பர்  எஸ்.எஸ்.பூங்கதிர் அவர்களுக்கு என்றேன்

மலையின் உச்சியை அடைய கஷ்டப்பட்டு அதையும் இஷ்டப்பட்டு ஏறி கொண்டிருக்கும் போது மேலிருந்து ஒரு லிப்ட் திடீரென்று நம்மருகே வந்து   நம்மை உச்சிக்கு அழைத்து சென்றால் எப்படி இருக்கும் அது போன்று தான் நண்பர் பூங்கதிர் எங்களுக்கு செய்த இந்த உதவி. இந்த உதவியை  நன்றி என்று ஒற்றை சொல்லில் எல்லாம் அடக்கி விட முடியாது

பார்த்து விட்டு வந்த உடன் வீட்டிலும் வெளியில் நண்பர்களும்  என்ன சொன்னார் எப்படி பேசினார் என்று ஆர்வமுடன் கேட்டு கேட்டு தெரிந்து கொண்டார்கள்.அவரை சந்தித்த அனுபவம் இப்போது நினைத்தாலும் நெஞ்சம் இனிக்கிறது 

FINAL PUNCH

சந்தோசத்துல பெரிய சந்தோசமே அடுத்தவங்களை சந்தோசபடுத்தி பார்க்கிறது தான் என்பது பாக்யராஜ் அவர்களின் தாரக மந்திரம்.ஆம் எங்களை சந்தோசபடுத்தி பார்த்திருக்கிறது அவர் மனசு 

அவருக்கு பரிசளித்த போட்டோ வில் நான் குறிப்பிட்டது போல் 
அன்றும் இன்றும் என்றும் அவர்  நலம் நாடி நிற்கிறது என் மனசு 

ஆர். வி.சரவணன்  
வியாழன், பிப்ரவரி 14, 2013

இளமை எழுதும் கவிதை நீ-21


இளமை எழுதும் கவிதை நீ-21நீ உனக்குள் பதுக்கிய என் காதல் எப்போது வெளி கொணர்வாய் 
என எப் பொழுதும் விழிப்புடன் நான் 


சிவாவுக்கு இப்போது  இன்னும் குழப்பம் அதிகமாகியது. சுரேஷ் மணியை பார்க்க எதுக்காக வர வேண்டும். இதற்கு முன் சுரேஷுடன் மணிக்கு பழக்கம் கிடையாது என்பது இவனுக்கு தெரியும். பின் எப்படி என்று யோசித்தவனுக்கு   சுரேஷ் தன்னை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது.
வம்பு வேண்டாம் என்று ஒதுங்கி நின்றாலும்  இப்படி தன்னை  வம்புக்கு இழுப்பவனை  என்ன செய்யலாம் என்று கடுப்பானான்.  வாழ்க்கையில் நல்லவர்களாக இருப்பது எவ்வளவு கஷ்டம் .அதிரடியாக இருந்த காலத்தில் தான் இருக்கும் தெருவில் வருவதற்கு கூட தயங்கியவன் இப்போது தன்னையே தொடர்கிறான். இது எது வரை செல்கிறது என்று பார்க்கலாம் மனசுக்குள் சொல்லியவாறு மூட்டை தூக்க ஆரம்பித்தான்.

தொடரும்

ஆர்.வி.சரவணன்

the story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.


ஓவியம் : நன்றி வலை பதிவர் தோழி பிரியா அவர்கள் 

http://enmanadhilirundhu.blogspot.com/

சனி, பிப்ரவரி 09, 2013

தொலைக்.................................காட்சி

தொலைக்.................................காட்சிதொலைகாட்சி பற்றி தொலை நோக்குடன் சிந்தித்த போது எனக்கு தோன்றிய சில குட் கொஸ்டின் களுக்கு உங்கள் யாருக்காவது பதில்  தெரியுமா 

*இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக என்று சொல்லி ஒரு புதிய படத்தை ஒளிபரப்புபவர்கள் ஏற்கனவே நிறைய முறை ஒளி பரப்பான படங்களை போடும் போது மட்டும் இத்தனையாவது முறையாக எங்கள் சானலில் ஒளி பரப்பாகிறது என்று ஏன் சொல்வதில்லை

*விளம்பரங்களுக்கு பிறகு நிகழ்ச்சி தொடரும் என்று இருக்கும் நிலை வருங்காலத்தில் விளம்பரங்களுக்கு பின் நேரமிருந்தால் நிகழ்ச்சி ஒளி பரப்பாகும் என்று சொல்லப்படுமோ

*ஒரு சேனல் ஒரு புதிய நிகழ்ச்சியை உருவாக்கி ஒளி பரப்பும் போது மற்ற சானல்களும் அதே போல் ஒரு நிகழ்ச்சியை உருவாக்கி அதே நேரத்தில் ஒளி பரப்பி  அந்த நிகழ்ச்சி மீது இருக்கும்  நம் சுவாரஸ்யத்தை அடியோடு குறைத்து விடுகிறார்களே ஏன்

*விடுமுறை நாட்களில் நல்ல படம் ஏதேனும் போடுவார்களா பார்க்கலாம் என்று நாம் ஆர்வமுடன் அமரும் போது நல்ல படங்கள் போடாமல் வேலை நாட்களில் நல்ல படங்களை போட்டு நம்மை வெறுப்பேற்றுவது ஏன்


FINAL PUNCH 

ஒரு வேளை நான் டிவி ஆரம்பிச்சாலும் இப்படி தான் இருக்குமோ 


ஆர்.வி.சரவணன்

தளம் ஆரம்பித்த புதிதில் வெளியானது இது 

புதன், பிப்ரவரி 06, 2013

இளமை எழுதும் கவிதை நீ-20


இளமை எழுதும் கவிதை  நீ-20
நீ பேசாத பொழுதுகளில் உன் கொலுசுடன் 
உரையாடி கொண்டிருக்கிறேன் சிவாவை உட்கார் என்று ஆசிரியரும், உட்காராதே என்று உமாவும் ஆர்டர் போட்டதால் என்ன செய்வது என்று கொஞ்சம் தடுமாறிய சிவா, உமா சொல்லை கேட்கும் முடிவுக்கு  வந்து உட்காராமல் நின்றான்.

"என்ன இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முழிக்கிறே உட்கார்டா" என்றார் ப்ரோபசர்.

கார்த்திக் அவரது  ஒருமை க்கு கோபபட்டவன்,  பாலுவின் கை அழுத்தவே  கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான். சிவாவை,  இருவரும்  கண்களால் உட்கார சொல்லி ஜாடை காட்டினர்.

"இப்ப உட்காரியா இல்ல வெளில போறியா"

 "எனக்கு தெரியும் நான்  சொல்றேன் சார்"

"கெட் லாஸ்ட்" என்றார் சீற்றமாய்

சிவா இதனால் அதிர்ந்து என்ன முடிவெடுப்பது என்று திணறும் போது
கை கொடுத்தாள். உமாவின் பக்கத்தில் இருந்த அவளது தோழி

தொடரும் 

ஆர்.வி.சரவணன் 

the story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

ஓவியம் :இளையராஜா