ஞாயிறு, ஜூலை 26, 2015

என் அன்பு தாத்தா
என் அன்பு தாத்தா

என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் 
என்று நீண்ட நாளாக நினைத்திருந்தேன். அதற்கான வாய்ப்பு
எழுதுகிறேன் ஒரு கடிதம் என்ற முக நூல் கடித போட்டி முலம் உருவானது.(குழுவினருக்கு என் நன்றி) அதில் வெற்றி பெறவில்லை என்றாலும் அவரது நினைவலைகளை நான் பகிர்ந்து கொண்டதில் ஒரு மகிழ்ச்சி கலந் திருப்தி கிடைத்தது எனக்கு. அந்த மடல் இங்கே தங்கள் பார்வைக்கு.

என் அன்பு தாத்தாவுக்கு
உங்கள் பேரன் சரவணன் எழுதும் மடல்.

எப்படி இருக்கிறீர்கள் தாத்தா. வேட்டியை இடது கையால் பிடித்து கொண்டு வலது கையில் குடை பிடித்த படி தெருவில் நீங்கள் நடந்து வரும் தோற்றம் என் கண்ணுக்குள்ளேயே இன்று வரை நிற்கிறது. நான் பிறந்து ஒரு வருடத்திலேயே உங்களிடமும் பாட்டியிடமும் வந்து விட்டதாய் அம்மா சொல்வார்கள். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து உங்களை சூரியனாக்கி பூமி போல் சுற்றி வந்திருக்கிறேன்.தங்களின் சாய்வு நாற்காலியில் படுத்த படி நீங்கள் சொல்லும் கதைகளை  கேட்ட படி விண்மீன்களை எண்ணியிருக்கிறேன். தோளில் சுமந்து வளர்த்தார்கள் என்ற வரிகளை படித்ததுண்டு. கேட்டதுண்டு. நேரில் அனுபவித்தது உங்களிடம் தானே

ஆம் என் அப்போதைய வயது நினைவில் இல்லை. எந்த கோவிலில் என்ற நினைவு கூட இல்லை. ஆனால் உங்களது தோளின் இரு புறமும் கால்களை போட்ட படி அமர்ந்து சுவாமி சன்னிதானம் செல்ல வரிசையில் காத்திருந்தது நினைவுக்கு வருகிறது. கூட்டத்தின் இடிபாடுகளில் நான் சிக்கி விடாமல் பாதுகாத்து என் உடல் சுமையை நீங்கள் சுமந்த படி வரிசையில் நெடுந்தூரம் நடந்து வந்தது மட்டும் இன்றளவும் என் நினைவில் இருக்கிறது

தினமும் இரவு வீட்டில் உள்ளோர் என்னை அதட்டி தூங்க வைத்தாலும் தூங்காமல் உங்களுக்காக விழித்திருப்பேன் நான். வயிற்றில் அறுவை சிகிச்சை ஆனதால் நீங்கள் தினமும் பால் சோறு தான் உண்ண வேண்டும் என்பதால் உங்கள் இரவு சாப்பாட்டில் கட்டாயம் பால் சோறு உண்டு. சாப்பிட்டு முடிக்க போகும் வேளையில் எனக்காக சில கவளம் வைத்து விட்டு எனை அழைத்த படி எழுந்திருப்பீர்கள். நானும் கட்டவிழ்த்த கன்று தாயை தேடி செல்வதை போல் உங்கள் சாப்பாட்டு தட்டை நோக்கி ஓடி வருவேன். அந்த கவளத்தை சாப்பிட்டு எழுவதற்குள் இதெல்லாம் பழக்கபடுத்த கூடாது என்று எல்லோரும் உங்களிடம் முறையிடுவார்கள். சின்ன பிள்ளை தானே என்ற ஒரு வார்த்தையில் அந்த முறையீட்டை புறம் தள்ளி தினமும் பால் சோறு எனக்காக வைத்து விட்டே எழுவீர்கள். அந்த பால் சாதத்தில், எனக்கான முழு அன்பை நீங்கள் வீட்டார் அறியாமல் ஒளித்து வைத்திருந்ததை பின்னாளில் தான் அறிந்து கொண்டேன்.

கடவுள் உங்களையும் என்னையும் படைத்தவராக இருந்தாலும் அவரை அறிமுகம் செய்தது நீங்கள் தானே. தினமும் காலை பூஜையில் தங்களின் பக்தி சுலோகங்களை கேட்டு தானே என் பொழுது விடிந்திருக்கிறது 
தகாத வார்த்தைகளை ஒரு முறை நான் பேசி விட்ட போது  உடனே 
சாமி படத்தின் அருகில் நின்று சொன்னது தப்பு என்று தோப்புகரணம் போட சொன்னீர்கள். நினைவிருக்கிறதா ?

முதன் முதலில் எட்டாவது படிக்கும் போது சிறுகதை என்று இரு பக்கம் வரும் அளவு நான் எழுதியதை படித்து தங்களின் அலுவலகத்தில் பெருமையுடன் என் பேரன் எழுதியது என்று பெருமைபட்டு கொண்டீர்கள். இதை குமுதத்துக்கு அனுப்புகிறேன் என்று நீங்கள் சொல்லி விட்டு உங்கள் வேலைகளில் மறந்து விட, நான் கோபம் கொண்டு நீங்கள் ஒண்ணும் அனுப்பவே வேண்டாம் என்று கதை பேப்பரை கிழித்து விட்டேன். நீங்கள் பதறாமல் என்னை அடிக்காமல் மீண்டும் எழுது இன்னும் நன்றாக மெருகேறி வரும் என்று தோள் தட்டி சமாதானம் செய்ததில், இன்னொரு காப்பி வைத்துள்ளேனே என்று சிரித்த படி உங்களிடம் கொடுத்தேன். ராஸ்கல் என்று கோபம் கொள்ளாமல் என் குறும்பை ரசித்தவர் அல்லவா நீங்கள். அப்போது மன்னிப்பு கேட்க தெரியவில்லை. இப்போது கேட்டு விடுகிறேன். எப்ப பண்ண சிறு தவறுக்கு எப்போது கேட்கிறான் பாரேன் என்று நீங்கள் இதை படிக்கும் போது பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லி சிரிப்பீர்கள் என்பதை என்னால் உணர முடிகிறது.

நீங்கள் நோய் வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் போது நான் இறப்பதற்குள் என் பேரன்களை பார்த்து விட வேண்டும் அழைத்து வா என்று வற்புறுத்த என்னையும் தம்பியையும் சித்தி அழைத்து சென்றார்கள். இறப்பின் வலி தெரியாதவன் நான். இழப்பின் அருமையும் அறியாதவன் நான். மருத்துவமனை கட்டிலில் இருந்த நீங்கள் என்னை வாஞ்சையுடன் கன்னம் தட்டிய போது எப்போது எழுந்து நடமாடுவீர்கள் என்று ஆசையாய் கேட்டேன். சீக்கிரமே என்று மாமா சொன்னார்கள். தெருவில் ராஜா போல் நடந்து வருவீர்கள் என்று காத்திருந்த எனக்கு நீங்கள் ஆம்புலன்ஸில் வந்து இறங்கிய போது தான் உரைத்தது. உங்களை இழந்ததன் வலி என்னை பின் வந்த நாட்களில் உருக்குலைத்தது.

காலம் முழுதும் பூஜை கோவில் என்றிருந்த உங்களை, இறைவன் 
தன் பக்கத்தில் அழைத்து அமர வைத்து கொண்டிருக்கிறான். உங்களிடம் நிறைய பேச வேண்டும். என் தோல்விகளை வெற்றிகளை என் கஷ்டங்களை சந்தோசங்களை பேசிய படி முடிவே இல்லாத ஒரு சாலையில் உங்கள் கை பிடித்த படி நடக்க வேண்டும். அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் நீங்கள் தாத்தாவாகவும் நான் பேரனாகவும் மீண்டும் பிறந்து பேசாத பேச்செல்லாம் பேசி விட ஆசை.காட்டாத அன்பெல்லாம் காட்டி விட ஆசை 
வாழ்ந்து பார்க்கலாம் வருகிறீர்களா ?

என் அன்பு முத்துகிருஷ்ணன் தாத்தா.
அன்புடன் உங்கள் பேரன்


ஆர்.வி.சரவணன் 

வெள்ளி, ஜூலை 10, 2015

பயணிகள் கவனிக்கலாம்
பயணிகள் கவனிக்கலாம் 


முகநூலில் நான் அவ்வப்போது எழுதிய பேருந்து பயண அனுபவங்களை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். (படிக்காத நண்பர்களுக்காக)

பேருந்தின் படிக்கட்டில் நிற்கும் போது "உள்ளே தான் நிறைய இடம் இருக்கே நகர்ந்து போங்களேன்" என்று சத்தமிடுபவர், உள்ளே வந்த பிறகு "இங்க எங்க இருக்குது இடம்"என்ற முணுமுணுப்புடன் இன்னும் தாராளமாய் நின்று கொள்கிறார்.

------

கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு இரவு நேர பயணம்.டிரைவர் சீட்டுக்கு பின்னே தான் இருக்கை.(ULTRA DELUXE).அதாவது கண்ணாடி தடுப்புக்கு பின்னே தொடங்கும் சீட்வரிசையில் முதலாவது இருக்கை. அங்கிருந்து பார்த்தால் டிரைவரின் கண்ணோட்டதில் சாலையை காண முடியும். தூக்கம் வரும் வரை இருட்டான சாலையில் விரையும் பேருந்தையும் சாலையின் இரு மருங்கிலும் கடக்கும் மரங்களையும் அவ்வபோது எதிரே வரும் வாகனங்களுக்கு  டிரைவர் எப்படி வழி விட்டு கடக்கிறார் என்றும் வேடிக்கை பார்த்த படியே வந்தவன் அப்படியே தூங்கி போய் விட்டேன்.தூக்கத்திலிருந்து  ஒரு முறை நான் கண் விழித்த போது, சாலையில் ஒரு பேருந்து மிரட்டும் ஹாரன் ஒலியுடன் எதிரே வந்து கொண்டிருந்தது. இதை எப்படி டிரைவர் கடக்க போகிறார் என்று அறியும் ஆர்வமுடன் நான் நன்றாக நிமிர்ந்து அமர்ந்து கொண்டு பார்க்க முனைப்பாகும் அந்த நொடியில் மீண்டும் உறக்கத்திற்கு சென்று விட்டேன். இரவில் நொடி பொழுதும் தூங்காமல் வண்டியோட்டி செல்லும் ஓட்டுனர்களின் பணி போற்றுதலுக்குரியது.

------

ஈரோடு டு திருப்பூர் அரசு பேருந்தில் பயணம். தனியார் பேருந்து ஒன்று எந்த முன் அறிவிப்பும் இல்லாமலே (T cut road) வளைவில் வேகமாக வர எங்கள் டிரைவர் போட்ட சடன் பிரேக்கால் பயணிகள் அனைவரும் ஒரு கணம் நிலை குலைந்து போய் எதிர்சீட்டில் மோதிக் கொள்ளும் படி ஆகி விட்டது. பிறகென்ன. அதிர்ச்சியை எங்களுக்கு அளித்த திருப்தியுடன் அந்த தனியார் பேருந்து டிரைவர் அலட்டிக் கொள்ளாமலே சாதாரணமாக எங்கள் பேருந்தை கடந்து சென்றார். 
என்னங்கய்யா இப்படி ஓட்டறீங்களேய்யா
------

கோயம்பேட்டில் நான் ஏறிய பேருந்து கிளம்பிய போது மணி 8.15.
மணி 10.15. ஆகியும் இன்னும் பேருந்து கூடுவாஞ்சேரியை கடக்கவில்லை. என்ன டிராபிக்டா இது என்று சலித்து கொள்ள முயன்றவனை, "ஒரு நாளைக்கே இவ்வளவு சலிப்பா? அவரையும் கொஞ்சம் பார்" என்று சொல்லி கொண்டிருக்கிறது மனசு. 
அவர் என்கிற அந்த ஓட்டுனர் பொறுமையுடன் போக்குவரத்து நெரிசலை நிதானமாக கடந்து கொண்டிருக்கிறார்.

------

நேற்றிரவு சென்னை செல்லும் பேருந்தில் டிரைவருக்கு பின்னே எனது சீட். ஓரிடத்தில் டிரைவர் வண்டியை ஓட்டிய படியே தண்ணீர் பாட்டிலை திறக்க முற்படவே பாட்டிலின் மூடி கீழே விழுந்து விட்டது.உடனே நடத்துனர் அவரது உதவிக்கு வந்து தேட ஆரம்பித்தார். டிரைவர் சாலையில் ஒரு கண்ணும் மூடியை தேடுவதில் ஒரு கண்ணுமாய் இருக்க, நான் பதட்டமாய் எழுந்து வந்து " மூடியை நான் கவனிக்கிறேன்.வண்டிய நீங்க கவனிங்க" என்று சொல்லி விட்டு மூடியை கண்டெடுத்து தந்தேன். அவர் மூடியை தேட ஆரம்பிச்சா  பின்னாடி நம்ம பாடியை தேடும் படி ஆகிடும் என்று சொல்லிய 
படி வந்து நான் அமர பக்கத்தில் இருந்தவர்கள் சிரித்து விட்டனர்.

------

டிராபிக்கில் நின்று கொண்டிருந்த பஸ்ல ஏறப் போனவன், நாம போக வேண்டிய இடத்துக்கு தான் இந்த பஸ் போகுதானு கேட்டுட்டே ஏறுவோம்னு பஸ்ல உட்கார்ந்திருந்த ஒருத்தர் கிட்டே கேட்டேன். அவரும் காதுல வச்சிருந்த ஹெட் செட்டை எடுத்துட்டு நான் சொன்னதை கேட்டு பதில் சொல்றதுக்குள்ளே பஸ் கிளம்பிடுச்சு. அந்த வழியாக தான் போகுதுனு அவர் சொன்ன பதில் பஸ் வேகமெடுத்த பினனாடி தான் என் கிட்டே வந்து சேர்ந்துச்சு.

------

டூ வீலர் ல போகும் போது நாம முன்னேற முடியாத படிக்கு ஒரு காரோ லாரியோ ரோட்டை அடைத்த படி செல்வதும், பின்னே வர வண்டிகள் நம்மை பின்னுக்கு தள்ளி முன்னேற துடிப்பதுமான சூழ்நிலையில் (இடைவெளியில்) தான் நாம் பயணிக்க வேண்டியிருக்கு. நம்ம எல்லாரோட வாழ்க்கை பயணம் கூட அப்படி தாங்க.

ஆர்.வி.சரவணன்