வெள்ளி, ஜூன் 29, 2012

ஆனந்த விகடன் என் விகடன் வலையோசையில் நானும்ஆனந்த விகடன் என் விகடன் வலையோசையில் நானும்

நான் சென்னையில் வேலையில் இருப்பதால் வார வாரம் சனி ஞாயிறு ஊருக்கு செல்லும் போது அந்த வார விகடனில் யார் வலையோசையில் வந்திருக்கிறார் என்று ஆர்வமாய் படிப்பேன் நம் தளம் இன்னும் வரவில்லையே என்ற ஏக்கம் தோன்றி மின்னலாய் மறையும்.

இவ் வேளையில் தான் நேற்று என் நண்பர் போன் செய்தார். என் விகடன் திருச்சி பதிப்பு இவ் வார விகடன் வலையோசையில் எனது தளம் இடம் பெற்றிருப்பதாக சொன்னவுடன் ஒரு நிமிடம் நான்சந்தோசத்தில் கண் கலங்கி நின்று விட்டேன். ஆம் எனது நெடு நாளைய அதாவது இருபத்தி ஐந்து வருட கனவு ஒன்று இப்போது விகடனின் மூலம் நிறைவேறியிருக்கிறது ஏறக்குறைய முப்பது வருடங்களாக விகடனை படித்து வரும் எனக்கு அவ் விகடனிலேயே என் எழுத்துக்கள் அச்சுக்களில் வந்திருப்பதை காணும் போது என் மகிழ்ச்சிக்கு தான் எல்லையேது
விகடனில் இரண்டு வருடங்களுக்கு முன் வலைப்பூ என்ற வாய்ப்பு என்ற தலைப்பில் இணைய தளத்தில் ப்ளாக் எழுதுவது பற்றி கட்டுரை வெளியிட்டிருந்தார்கள் அப்பொழுது தான் நான் இணைய தளத்தில் நுழைந்து தேடலை தொடங்கியிருந்த நேரம் அது இந்த கட்டுரை படித்ததும் நாமும் ப்ளாக் தொடங்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் தோன்றியது கூடவே ஆர்வத்துடன் நானும் குடந்தையூர் என்ற இத் தளத்தை தொடங்கினேன். எனது நூறாவது இடுகை விகடனின் இணையதளத்தில் குட் ப்ளாக் பகுதியில் இடம் பெற்றது . இப்போது நான் தளத்தில் பதிவு, இருநூறை நெருங்கும் இவ் வேளையில், என் சொந்த ஊரிலேயே என் விகடன் சோழ மண்டல வலையோசை யில் இத் தளமும் எனது பதிவுகளும் வெளியாகி இருக்கிறது. இது எனக்கு கிடைத்த மிக பெரிய அங்கீகாரம் என்பதால் இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

ஆம் நண்பர்களே சாதாரண கல்லுக்கு என்ன மரியாதை இருக்க போகிறது உளிகளாகிய உங்களின் கருத்துரைகள் மற்றும் தொடர்ந்த ஆதரவால் தான் இது சிற்பமானது. இந்த சிறு சிற்பத்திற்கு தான் விகடன் எனும் கோயிலில் இடம் பெறும் வாய்ப்பு ஓரிடத்தில் கிடைத்திருக்கிறது .

நன்றி என்ற ஒற்றை சொல்லில் அடக்கி விட முடியுமா இதை. எனினும்,
என் நெஞ்சம் நிறைந்த நன்றியை ஆனந்த விகடனுக்கும் இணைய தள நண்பர்கள் அனைவருக்கும் நான் உரக்க சொல்லும் நேரமிது

ஆர்.வி.சரவணன்

சனி, ஜூன் 23, 2012

கற்கை நன்றே கற்கை நன்றே....


கற்கை நன்றே கற்கை நன்றே....

என் கல்லூரி தோழி ஒருவர் வெளியூரில் இருக்கிறார் அவர் ஒரு நாள் காலை எனக்கு போன் செய்து என் பையனுக்கு பள்ளியில் கல்வி பற்றி கவிதை கேட்டுள்ளார்கள் இன்னைக்கே வேண்டும் நீ எழுதி கொடு என்றார். கவிதை எழுதுவதில் நான் பெரிய ஆள் இல்லை உடனே எப்படிப்பா என்றேன் . இந்த பிகு பண்ற வேலையெல்லாம் வேண்டாம் எனக்கு கவிதை தான் வேண்டும் என்றார்.சரி என்று சொல்லிவிட்டு அன்று இரவு வீடு வந்தவுடன் அமர்ந்து எழுதி அவரிடம் நான் போனிலேயே சொல்ல சொல்ல அவர் அதை எழுதி கொண்டார். அவரும் அவர் பையனும் நல்லாருக்கு என்று சொன்னார்கள்

அவர்கள் சொன்னது இருக்கட்டும் நீங்கள் சொல்லுங்கள் எப்படி என்று


கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
இது சான்றோர் மொழி


கற்கை நன்றே கற்கை நன்றே
மரிக்கும் தருவாயிலும் கற்கை நன்றே
இது எம் மொழி


கல்வியை ஐந்திலும் படிக்கலாம்
ஐம்பதிலும் படிக்கலாம்
வாழ்க்கையில் உயர
இதுவே படிக்கற்கலாம்


மனிதா நீ சேர்த்த செல்வத்தை செலவிடு
நீ கற்ற கல்வியை சொல்லி கொடு
இதை அளவிடு


செல்வம் காணாது போயிருக்கும்
அறிவோ நீக்கமற நிறைந்திருக்கும்


கல்லாதவன் கண்ணிருந்தும் குருடனே
கற்றவன் குருடனாயினும் கண்ணுடையனே


கல்லாத செல்வந்தனுக்கும் தேவை ஒரு கற்றவன்
கற்ற ஏழைக்கு தேவையில்லை மற்றவன்


கற்றது கையளவு
கல்லாதது உலகளவு

எனவே


கற்றோம்
கற்போம்
கற்பிப்போம்


ஆர்.வி.சரவணன்

இது ஏற்கனவே இத் தளத்தில் வெளியானது தான்

திங்கள், ஜூன் 18, 2012

மாப்பிள்ளை விற்பனைக்கு (அல்ல) ....


மாப்பிள்ளை விற்பனைக்கு (அல்ல) ....

எனக்கென்று என் வீட்டில் பார்த்த பெண்ணே, செல்வி காயத்ரி

நான் நலமில்லை நீயேனும் நலமா ? நான் சிறு வயது முதல் என் தாத்தாபாட்டி அவர்களால் நல்லபடியாக நல்லவனாக வளர்க்கப்பட்டவன். நான் படித்து முடித்து நல்ல வேளையில் நல்ல சம்பளத்தில் அமர்ந்த போது கல்யாண மார்கெட்டில் என் ரேட் உயர்ந்து தான் போனது. பூரித்த என் பெற்றோர் எனக்கான வரன் தேட ஆரம்பித்தனர்.அப்போது என் பெற்றோரிடம் நான் சில நிபந்தனைகளை உறுதியாக தெரிவித்தேன் .

வரதட்சனை எதையும் பெண் வீட்டில் கேட்டு பெற கூடாது. திருமண செலவில் பாதியை நாமும் ஏற்க வேண்டும். பெண் வீட்டில் எனக்கென்று எந்தபொருளையும் எதையும் கேட்டு பெற கூடாது. என்று. இதற்கு என் பெற்றோர் மறுத்து அடம் பிடித்தனர். நானும் திருமணத்திற்கு மறுக்கவே வேறு வழியின்றி என் கொள்கைக்கு வடம் பிடித்தனர்.

கல்யாண ப்ரோக்கர் மூலம் வந்த முதல் வரன் நீ. நான் பார்க்கும் முதல் பெண்ணும் நீ தான். உன்னை பார்க்க வந்த முதல் மாப்பிள்ளை யும் நான் தான். நம்மை நாம் பார்த்ததும் நமக்கு பிடித்து போனது நம்மை நாம் சம்மதம் தெரிவித்தவுடன் நம் இரு வீட்டாரும் கல்யாண விசயங்களை பேச ஆரம்பித்தனர்.

என் நண்பர்கள் உன்னுடன் போனிலும் நேரிலும் பேச சொல்லி எனை நச்சரித்தனர். நான் மறுத்தேன் "கல்யாணத்திற்கு அப்புறம் பேச வேண்டியது நிறைய இருக்கு கல்யாணம் வரை பேசாமல் இருக்கும் இந்த த்ரில் வாழ்க்கையில் பின்னால் கிடைக்காது" என்றேன். இருந்தாலும் ,நாம் தினமும் சாலையில் வேலைக்கு வண்டியில் செல்லும் போது தினமும் எதிரெதிரே சந்தித்து கொண்டோம். கண்களால் நலம் விசாரித்து கொண்டோம் நம் ஆசைகளை பரிமாறி கொண்டோம்.

இப்படியே செல்கையில் ஒரு நாள் என் தந்தை "அந்த பெண் வேண்டாம்" என்று சொன்னார் ஏன் என்றேன் அதிர்ச்சியில். ஒத்து வரவில்லை என்றார் ஒரே வார்த்தையில்.ஏதோ நடந்திருக்கிறது என்று நான் ப்ரோக்கரிடம் விசாரித்த போது, என் பெற்றோர் எனக்கென்று கார் வேண்டும் வரதட்சணை பணம் வேண்டும் , சொந்த செலவில் திருமணம் லண்டனில் ஹனி மூன் என்று லிஸ்ட் கொடுத்ததாகவும் மேலும் ,இதையெல்லாம் நாங்கள் கேட்டதாக இல்லாமல் நீங்களே செய்வது போல் செய்ய வேண்டும் மாப்பிள்ளை க்கு இது தெரிய கூடாது என்று சொன்னார்களாம். அதற்கு உன் தந்தை "பையனை கல்யாணம் பண்ணி கொடுக்க போறிங்களா இல்லை எங்களுக்கு விற்க போறிங்களா "என்று சத்தம் போடவே அத்தோடு முறிந்து விட்டது நம் திருமண பேச்சு வார்த்தை .

இதை தாங்க முடியாமல் கோபமாய் வீடு வந்து என் தந்தை தாயிடம் சண்டையிட்டேன். அதற்கு என் தாய் "பெண்ணை பார்த்ததும் மயங்கி விட்டாயோ" என்றும் என் தந்தை "கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி இப்படி சப்போர்ட் பண்றியே கல்யாணம் ஆனப்புறம் எங்களை யார் என்று கேட்பாய் போலிருக்கிறதே "என்றும் என்னுள் வார்த்தை கத்தியை இறக்கினர் "புனிதமான திருமணத்தை வியாபாரமாக்கும் உங்களை யார் என்று கேட்பதில் தவறேதுமில்லை" என்றேன் வார்த்தைகளை கேடயமாக்கி

உனக்கு எங்களை விட அவள் முக்கியமாகி விட்டாள் இல்லையா "என்றனர் இருவரும் கோரசாய்

"எனக்கு என் கொள்கையே முக்கியம் காந்தியை புத்தரை ,இயேசுவை ,ராமாயணத்தை ,மகாபாரதத்தை போதித்த நீங்கள், இப்போது என் உத்தியோகம் அதனால் வந்த பணம் கண்டு மாறி போய் விட்டாலும் நான் என் கொள்கையிலிருந்து மாற மாட்டேன் " என்றேன் உறுதியாக

"அப்படியென்றால் இந்த வீட்டில் உனக்கு இடமில்லை வெளியில் போ"என்றனர்.

அவர்களை பார்த்தேன் அவர்கள் முகத்தில் விரோதம் இருந்த அளவு பாசம் சிறிதும் இல்லை என்பது நன்றாக தெரிந்தது. "பெற்ற கடமைக்கு என் சம்பளத்தில் பாதி மாதாமாதம் வீடு தேடி வரும்" என்று சொல்லி விட்டு வெளியில் வந்து விட்டேன்

நடந்த விசயங்களை உன் தந்தை தாயிடம் சொல்ல சொல்லி கல்யாண ப்ரோக்கரை அனுப்பியுள்ளேன். உனக்கு இந்த கடிதம் எழுதும் என்நோக்கம் ஒன்றே ஒன்று தான்.

உன் தந்தை தாய் இருவரும் " இவங்களே இப்படினா இவங்க பையன் எப்படிப்பட்ட அயோக்கியனா இருப்பான் அவங்க ரத்தம் தானே அவன் உடம்பிலே ஓடும் நல்ல வேலை எங்கள் பெண் தப்பிச்சது "என்று சொன்னார்களாம்

இதை கேள்விபட்டதும் என் மனது வலித்தது. என் நிலைபாட்டை உனக்கும் உன் குடும்பத்திற்கும் தெரியபடுத்த மட்டுமே இந்த கடிதம் . நல்ல மணமகனுடன் உன் இல் வாழ்க்கை சிறப்புடன் அமைய என் இதய பூர்வமான வாழ்த்துக்கள்

அன்புடன் சிவா

என்று எழுதி முடித்து நிமிர்கிறேன்

வாசலில் நிழலாடியது உற்று பார்த்தேன். நான் பெண் பார்த்த இப்போது யாருக்கு கடிதம் எழுதி கொண்டிருந்தேனோ,அந்த காயத்ரி தன் பெற்றோருடன் கல்யாண ப்ரோக்கர் சகிதம், கதவோரம் சாய்ந்த படி, பெருமிதத்துடன் எனை பார்த்த படி நின்றிருந்தாள்.

தனது மணமகனாய் என்னை பார்த்த படி முகத்தில் மணமகளுக்குரிய வெட்க புன்னகையை அணிந்த படி

ஆர்.வி.சரவணன்

இக் கதை நான் தளம் ஆரம்பித்த புதிதில் எழுதியது

புதன், ஜூன் 06, 2012

எந்திரன் எண்ட்ரி....

எந்திரன் எண்ட்ரி.... (in valakku enn 18/9 preview show)

பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 திரைப்படத்தை, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிரத்தியேகமாக திரையிட்டுக் காட்டினார் இயக்குநரும் படத்தின் தயாரிப்பாளருமான லிங்குசாமி.

நுங்கம்பாக்கம் ஃபோர் ஃப்ரேம்ஸ் திரையரங்கில் இந்தப் படத்தைப் பார்க்க வந்த சூப்பர் ஸ்டாரை, லிங்குசாமி, ஃபோர் பிரேம்ஸ் கல்யாணம் மற்றும் படக்குழுவினர் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். உடன் தனது நெருங்கிய நண்பர் நாகராஜன் ராஜாவையும் அழைத்து வந்திருந்தார் ரஜினி.

படம் பார்த்து விட்டு ரஜினி இந்தப் படம் தன்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டதாகவும், இன்றைய தலைமுறைக்கு ஒரு பாடமாக இந்தப் படம் அமைந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த படங்கள் பார்த்தவுடன் எனக்கு தோன்றிய போட்டோ கமெண்ட்ஸ் இங்கு தந்திருக்கிறேன்


வரவேற்புக்கு வசீகர(னின்) புன்னகை


நேசிக்கும் கரங்களின் பிடியில் துடிக்கும் கரங்கள்

வேட்டை தந்தவருடன் வேட்டையன்


பூங்கொத்துக்கும் இங்கே பூக்கும் புன்னகையால் பதிலுண்டு


சாதித்தவர்களை சந்திக்க வரும் சாதனை சிகரம்


சிங்கம் சிங்கிளாய் தான் அமர்ந்திருக்கும்


முத்து(ராமனுடன்) முத்துச் சிரிப்பில் நம் முத்து

வழக்கின் நாயகனுடன் எவர் கிரீன் நாயகன்

படங்கள் மற்றும் செய்திக்கு நன்றி என்வழி வினோ

ஆர்.வி.சரவணன்

வெள்ளி, ஜூன் 01, 2012

வெள்ளி விழா ஆண்டில் பாக்யா
வெள்ளி விழா ஆண்டில் பாக்யா

நடிகர் இயக்குனர் கே .பாக்யராஜ் அவர்களின் பாக்யா வார இதழ் வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது பாக்யா வார இதழுக்கு ஒரு வாசகனாய் வாழ்த்துக்கள் சொல்வதுடன் ஒரு வாசகனின் பார்வையில் பாக்யா வை பற்றி பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன் இருபத்தி ஐந்தாம் ஆண்டு என்பதால் பாக்யா வை பற்றி இருபத்தி ஐந்து குறிப்புகள் தந்திருக்கிறேன் (இவை யாவும் எனது நினைவலைகளில் இருந்து முடிந்த வரை யோசித்து திரட்டியது )

1 பாக்யா வை பாக்யராஜ் ஆரம்பித்த வருடம் 1988

2 அப்போது அவர் மிகுந்த பிஸியாக இருந்தார் அப்பொழுது இது நம்ம ஆளு படத்தில் முமுரமாக இருந்தார்

3 அந்த படத்தின் ஆரம்பத்தில் பாக்யராஜ் பச்சை மலை சாமி ஒண்ணு .... பாடல் காட்சியில் நாட்டை பார்த்து தான் ரூட்டை மாத்தினேன் என்று பாடும் போது பாக்யா விளம்பரம் வரும்

4 பத்திரிகை ஆரம்பித்ததற்கு அவர் அப்போது கொடுத்த விளக்கம் வருடத்திற்கு ஒரு முறை உங்களை சந்தித்த நான் இனி வாரம் ஒரு முறை உங்கள் வீடு தேடி வந்து சந்திக்கும் விருப்பத்துடன் பாக்யாவை ஆரம்பிக்கிறேன் என்று சொல்லியிருந்தார்

5 மெய் பொருள் காண்பது அறிவு என்பது பாக்யாவின் காப்சிங் வரிகள்

6 முதல் இதழில் முதல் பக்கத்தில் தலையங்கத்திற்கான சிம்பல் ஆக ஒரு தலையாட்டி பொம்மை. அதன் தலையில் பாக்யராஜ் முகம் பதிந்திருக்கும். அந்த படத்தின் கீழே இந்த பொம்மை எந்த பக்கம் சாய்த்தாலும் அது மீண்டும் தன் இயல்புக்கு வந்து விடும் அது போல் எந்த பக்கம் சாய்க்க நினைத்தாலும் சாயாமல் கொண்ட கொள்கையில் பாக்யா உறுதியாக இருக்கும் என்று விளக்கம் அளித்திருந்தார்

7 வெளியான முதல் இதழில் இது நம்ம ஆளு இம் மாத வெளியீடு என்று விளம்பரம் வந்திருந்தது ஆனால் அந்த மாதம் முடியும் தருவாயிலும் படம் வெளியாகவில்லை.அந்த மாதம் முடிவில் வந்த இதழில் கண்டிப்பாக இம் மாத வெளியீடு என்று சொல்லியிருந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது ( படமும் மாத இறுதியில் வெளியானது )

8 ஆரம்பித்த புதிதில் கலைஞர் கருணாநிதி அவர்களை பாக்யராஜ் நேரிடையாக சென்று பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தார்

9 அடுத்து காங்கிரஸ் தலைவர் மூப்பனார் அவர்களை சென்று சந்தித்து பேட்டி எடுத்து வெளியிட்டிருந்தார்

10 ஒரு வாசகர் ஜெயலலிதா அவர்களை பேட்டி எடுப்பீர்களா என்று கேள்வி கேட்டதற்கு ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் பேட்டி எடுக்க முயற்சித்தேன். ஆனால் எனக்கு அவர்கள் அப்பாயின்மென்ட் கிடைக்கவில்லை நான் கேட்க நினைத்த கேள்விகளை வேண்டுமானால் தருகிறேன் ஜெயலலிதா உங்கள் ஊருக்கு வரும் போது கேட்கின்றீர்களா என்று பதில் கொடுத்திருந்தார்

11 வைரமுத்துவின் இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் கவிதை தொடர் பாக்யாவில் வெளி வந்தது தான்

12 முதல் இதழில் ஆசை எனும் வேதம் பாலகுமாரனின் தொடர்கதை ஆரம்பமாயிற்று

13 ஆரரோ ஆரிரரோ திரைக்கதை தொடர் பாக்யாவில் வெளியானது

14 அவசர போலிஸ் நூறு திரைக்கதை தொடர் வெளியானது

15 பவுனு பவுனு தான் திரைக்கதை தொடர் வெளியானது

16 இரண்டாவது தாலி என்ற பெயரில் அவர் எழுதிய தொடர் தான் பின் பிரபு சீதா நடிக்க பொண்ணு பார்க்க போறேன் என்ற பெயரில் வெளியானது

17 பாக்யராஜ் அவர்களின் கேள்வி பதில் பகுதி நான் விரும்பி படிக்கும் ஒரு பகுதி. பாக்யா விற்கு மகுடம் என்றால் அது அவரது கேள்வி பதில்கள் தான் என்பேன். அப்போதிலிருந்து இதோ இப்போதைய வாரம் வரை சுவாரஸ்யத்துடன் எழுதி வருகிறார்

18 இப்போது வரும் பகுதிகளில் எதிரொலி என்னை கவர்ந்த ஒன்று

19 நான் கல்லுரி படித்து கொண்டிருந்த கால கட்டத்தில் பாக்யா வெளி வர தொடங்க, எங்கள் வீட்டில் கதை புத்தகம் படிக்க அனுமதியில்லை. மேலும் பாக்யா புத்தகம் வீட்டில் வாங்கவில்லை என்பதால் எனது பாக்கெட் மணியில் வாங்க ஆரம்பித்தேன். வாங்கி வெளியிலேயே படித்து விட்டு எனது நண்பர்களுக்கு கொடுத்து விடுவேன் வீட்டுக்கு எடுத்து செல்ல முடியாது என்பதால்

20 சென்னைக்கு வேலை தேடி வந்த போது ஒரு நாள் அப்பாவுடன் வெளியில் வந்தேன் (அவர் பயங்கர ஸ்ட்ரிக்ட் அடிச்சார் என்றால் கண் மண் தெரியாமல் அடிப்பார் ) அப்படியும் அவர் கண்ணில் சிக்காமல் அவர் என் பக்கத்தில் இல்லாத கொஞ்ச நேர இடைவெளியில் பக்கத்திலிருக்கும் கடைக்கு அவசரமாய் சென்று கடையில் அந்த வார பாக்யா வாங்கி எனது சட்டைக்குள் செருகி வைத்து கொண்டேன். வீட்டுக்கு வந்து தான் எடுத்தேன் அது வரை அவர் கண்ணில் தென்படாமல் சட்டைக்குள் வைத்திருந்த அந்த த்ரில்லிங் இன்னிக்கு நினைச்சாலும் சிலிர்ப்பா இருக்கு

21 பாக்யவிற்கும் எனது படைப்புகளை அவ்வப்போது அனுப்பியதுண்டு இருந்தும் இந்த இத்தனை வருடங்களில் எந்த ஒரு படைப்பும் வெளியாகவில்லை

22 வேலைக்கு சேர்ந்த பிறகு அலுவலகம் செல்லும் போது பாக்யா வாங்கி விட்டால் ( மற்ற புத்தகங்களும் தான் ) வேலைகளுக்கு நடுவில் எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக படித்து விடுவேன்

23 திரைமறைவு ரகசியங்கள் என்ற பகுதி அன்றைய சினிமாவை பற்றிய நிகழ்வுகளை, சுவை பட அறிந்து கொள்ள வைக்கிறது

24 நானும் அரசியலும் என்ற தலைப்பில் பாக்யராஜ் இப்போது எழுதி வரும் அனுபவ தொடர் நம்மை அந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு கொண்டு செல்கிறது

25 பாக்யா வுடனான எனது ஒரு சந்தோஷம் நான் சாதி பற்றி எழுதி அனுப்பிய ஒரு அனுபவ கடிதத்தை பாராட்டி அப்போது பாக்யா விலிருந்து கடிதம் வந்திருந்தது. இன்றும் அதை பத்திரமாய் பாதுகாத்து வைத்திருக்கிறேன்
( ஏற்கனவே இத் தளத்தில் ஒரு பாராட்டு கடிதம் என்ற தலைப்பில் இது குறித்த பதிவை தந்திருக்கிறேன் )

கால் நூற்றாண்டை கடக்கும் பாக்யா அரை நூற்றாண்டை சாதனையுடன் தொட வாழ்த்துக்கள்
பாக்யா அண்ட் பாக்யராஜ் சார்

ஆர்.வி .சரவணன்