புதன், ஏப்ரல் 18, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி



ஒரு கல் ஒரு கண்ணாடி

பந்தியிலே உட்கார வச்சி சாப்பிட விடாமே எழுப்பி விட்டுட்டா எப்படி இருக்கும் அந்த மாதிரி ஒரு அனுபவம் எனக்கு ஒரு கல் ஒரு கண்ணாடி படம் பார்க்க போனப்ப ஏற்பட்டுச்சு அது இந்த பதிவின் கிளைமாக்ஸ் லே சொல்றேன்

இப்ப படம் பற்றிய பகிர்வுக்கு வருவோம்

ஹீரோ ஹீரோயினுடன் நண்பனாகி பின் காதலித்து பிரிந்து பின் சேர்கிறார் இந்த ஒரு வரியை வைத்து கொண்டு தன் சுவாரஸ்யமான திரைக்கதையால் நான் ஸ்டாப் காமெடி யில் இயக்குனர் ராஜேஷ் தந்திருக்கும் கலக்கல் படம் இவரது பாஸ் என்கிற பாஸ்கரன் எனக்கு எப்போதும் பிடித்த படங்களில் ஒன்று

உதயநிதி அறிமுக ஹீரோ. அலட்டல் பில்டப் என்று எதுவுமில்லாமல் சிம்பிளாக நடித்திருக்கிறார். ஆரம்ப காட்சிகளில் இன்னும் சரியாய் நடிக்கலாமே என்று தோன்றும் கொஞ்ச நேரத்திலேயே பரவாயில்லையே என்று சொல்ல வைக்கிறார். பக்கத்துக்கு வீட்டு பையன் போன்ற இமேஜுடன் அவர் இருப்பது சிறப்பு சில காட்சிகளில் இன்னும் இவர் நன்றாய் செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது (அம்மாவை காணவில்லை என்றவுடன் அப்பாவை அவர் திட்டுவார் அந்த காட்சியில் இன்னும் எக்ஸ்ப்ரசன் தேவைபடுகிறது ) ஹன்சிகாவை அவருக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை ரணகளபடுத்த அதை பார்த்து உதயநிதி செய்யும் சேஷ்டைகள் தியேட்டர் வாசலில் அவர் போடும் ஆட்டம் ரசிக்க வைக்கிறது

ஹன்ஷிகா கோடைக்கேற்ற ஊட்டி போல் குளு குளு வென்று இருக்கிறார் . இப்படி இருந்தால் எந்த ஹீரோ தான் அவரை காதலிக்க அலைய மாட்டார் என்று தோன்ற வைக்கும் அழகுடன் படத்தில் வலம் வருகிறார்

சந்தானம் உதயநிதியின் நண்பனாக படம் முழுக்க அவர் பேசும் டைமிங் வசனங்களுக்கு தியேட்டர் அதிர்கிறது உதயநிதியின் வீட்டில் அவரை காப்பாற்ற வந்து நொந்து போவதாகட்டும் போலீஸ் ஸ்டேசனில் மிமிக்ரி செய்து திணறுவதாகட்டும் நண்பனின் இம்சையை தாங்கி கொண்டு நோவதாகட்டும் தியேட்டரில் சிரிப்பலை தான் கல்யாணத்தை நிறுத்தணும் என்று நண்பன் சொன்னவுடன் கட்டை எடுப்பதும் நிறுத்த வேண்டாம் வாழ்த்துவோம் என்றவுடன் பொக்கே ஆர்டர் செய்ய சொல்வதும் என்று படம் முழுக்க அவர் சிக்சர் அடிக்கிறார் இந்த படத்திற்கு சந்தானம் மிக பெரிய பிளஸ் +

அடுத்து சரண்யா, அழகம் பெருமாள் உதயநிதியின் தாய் தந்தையாக நடித்திருக்கிறார்கள். இதில் சரண்யா அப்பாவி அம்மாவாக புருஷன் இருபது வருஷம் பேசாமல் இருக்கிறார் என்று கண் கலங்குவதிலும், எனக்கு கோபமாக எல்லாம் பேச வராது என்று அப்பாவியாய் ஹன்சிகாவிடம் சொல்வதிலும், அதிலும் உங்கப்பா பேசிட்டார்டா என்று பொங்கி பூரிக்கும் முக பாவத்திலும் சரண்யா சபாஷ்யா தான்

சரண்யா பொய் சொல்லி கல்யாணம் செய்ததால் அழகம் பெருமாள் பேசாமல் இருக்கும் விதம் அவ்வளவாக ஏற்புடையதாக இல்லை அதற்கு பதில் இருவரும் அவ்வபோது இது விசயமாய் பேசி கொண்டே சண்டையிட்டு கொள்வதாய் காட்டியிருக்கலாம்


விமானத்தில் செல்லும் போது உதயநிதி சந்தானம் செய்யும் கலாட்டாக்கள் ரசிக்க வைக்கின்றன என்றாலும் திமிர் பிடித்த பெண்ணை அடக்க வேண்டும் என்றால் உதயநிதி இப்படி டார்ச்சர் செய்யலாம் ஆனால் காதலில் ஒத்து கொள்ள வைக்க இப்படி டார்ச்சர் செய்கிறாரே என்று எண்ண தோன்றுகிறது நமக்கு. அவரது டார்ச்சரில் ஹன்சிகா திணறி கோபத்தில் எகிறும் போதும் கண் கலங்கும் போதும் பரிதாபப்பட வைக்கிறார்

புழுங்கல் அரிசி மன்னிக்கவும் புன்னகை அரசி சிநேகா சீனியர் ஏர் ஹோசடளாக உதயநிதி, சந்தனத்தை தன் புன்னகையால் சமாளிக்கும் விதம் அழகு

வழக்கம் போல் படத்தை முடித்து வைக்க வருகை தருகிறார் ஆர்யா ரஜினி முருகன் என்ற கெட்டப்பில். அவரது கெட்டப்புக்கு ஏற்றவாறு அவருக்கு துணையாய் வரும் ஆண்ட்ரியா கெட்டப் ஒட்டவில்லையே (டிரஸ் தான் சொல்றேன் அவர் வேட்டி சட்டையிலும் இவர் ஜீன்ஸ் பேன்ட்டிலும் இருப்பது ஏன் )

டைமிங் வசனங்கள் படத்திற்கு மிக பெரிய பலம்

மச்சான் பொண்ணுக்கு கொடுக்கிற சீர் வரிசையே என்னாலே தூக்க முடியாது என்னை போய் பொண்ணை தூக்க சொல்றியே ஒரு சாம்பிள்

அழகே அழகே பாடலும், பாடல் காட்சியும் அழகு. அதில் ஹன்சிகா மட்டுமில்லாமல் அது படமாகியிருக்கும் லோகேசன் அந்த பாடலுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது

வேணாம் மச்சான் வேணாம் பாடலில் மட்டும் சந்தானம் மீசையுடன் வருகிறார் காதல் தோல்விக்கு தாடி வளர்ப்பாங்க இவர் மீசை வளர்த்துட்டரோ என்று கேட்க தோன்றுகிறது


லாஜிக் சில இடங்களில் இடித்தாலும் அதெல்லாம் நம்மை எந்த விதத்திலும் உறுத்தாமல் அல்லது அதை பற்றி நம்மை நினைக்க கூட டைம் கொடுக்காமல் இயக்குனர் ராஜேஷ் படத்தை இரண்டரை மணி நேரம் வாய் விட்டு சிரிக்க வைத்திருக்கிறார்

ஒரு கல் ஒரு கண்ணாடி ராஜேஷ் ,உதயநிதி, சந்தானம் மூவர் கூட்டணியில் ட்ரிப்ள் ஓகே ஆகியிருக்கிறது


சரி ஆரம்பத்தில் நான் சொன்ன பந்தி விசயத்திற்கு வருகிறேன் அதாவது இந்த படம் பார்க்க நான் திங்கள் மாலை தியேட்டர் சென்றேன் ஹவுஸ் புல் என்பதால் டிக்கெட் கிடைக்கவில்லை கிளம்ப மனமில்லாமல் நான் நிற்கும் போது ஒருவர் என்னிடம் ஒரு டிக்கெட் இருக்கு வேண்டுமா என்றார் கொடுங்க சார் என்று நான் பரவசமாக, அவர் ஆறு பேருக்கு ஒரே டிக்கெட் டாக ரிசர்வ் பண்ணியிருக்கோம் சோ நீங்க எங்க கூடவே வாங்க என்றார். ஓகே என்று நான் பணம் எடுத்து நீட்டும் போது அவர் உள்ளே வந்து உட்கார்ந்தவுடன் வாங்கிக்கிறேன் என்று சொல்லி விட்டு, என் பிரெண்ட்ஸ் வண்டி பார்க் பண்ணிட்டு வர போயிருக்காங்க வந்துரட்டும் அது வரை வெயிட் பண்ணுவோம் என்றார். நான் சந்தோசமாக அவருடன் வெயிட்செய்யும் போது வந்து நின்ற அவரது நண்பர்களை எண்ணினால் இவரையும் சேர்த்து ஆறு பேர் டேய் உன் தம்பி வரலேன்னு நான் இவரை அந்த டிக்கெட் க்கு கமிட் பண்ணி வச்சிருந்தேனே என்று சொல்லி என்னிடம் எப்படி சொல்வதென்று சங்கடப்பட, நான் உடனே பரவாயில்லீங்க அதனாலென்ன தாங்க்ஸ் என்று சொல்லி விட்டு கொஞ்சம் ஏமாற்றத்துடன் வெளி வந்தேன் உடனே கவுண்டர் சென்று அடுத்த நாளுக்கு ரிசர்வ் செய்து விட்டு நேற்று சென்று பார்த்து விட்டு வந்தேன்

படம் பார்க்க போகிறோம் என்று சந்தோசமாகி நுழைவாயில் அருகே செல்கையில் டிக்கெட் இல்லை என்றால் எப்படி இருக்கும் அந்த மன நிலையை தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்

ஆர்.வி.சரவணன்

திங்கள், ஏப்ரல் 16, 2012

விழி மீன்கள்....



விழி மீன்கள்....



தூண்டிலில் மீன்கள்
மாட்டும்
இதுவா
அதிசயம்
உன் விழி மீன்களில்
தூண்டிலாய்
நான்
மாட்டினேன்
இதுவல்லவோ
அதிசயம்

ஆர்.வி.சரவணன்

வலை தளம் ஆரம்பித்த புதிதில் நான் எழுதிய கவிதை

புதன், ஏப்ரல் 04, 2012

இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம்....




இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம்....

மனம் கவர்ந்த பாடல்கள்

இசை சக்கரவர்த்தி இளையராவின் இன்னிசை மழையில் என்று படத்தின் டைட்டிலுக்கு மேலே ஒரு வரி இடம் பெறும்… அப்போதே தெரிந்து கொள்ளலாம் அது கோவைத் தம்பியின் படம் என்று. அவரது பெரும்பாலான படங்களுக்கு இசை, நம் சை அரசர் இளையராஜா தான்



இளமைக் காலங்கள். படத்தில் ‘இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம்…’ என்று ஆரம்பிக்கும் ஒரு டூயட் பாடல் இதில் ஜானகி அவர்கள் தேன் குரலில் ராகம் ஆரம்பிக்க கூடவே கோரஸ் ராகம் கோர்க்க இசை அரசரின் இசை உத்வேகம் எடுக்கும் பாருங்கள். தொடரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் இப் பாடலுக்கு அழகூட்டும் அதிசயம்


அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அதிகாலை பஸ்சில் வரும் போது இந்த பாடல் பஸ்சில் ஒளிபரப்பானது… அதிகாலையில் அந்த குளிரில் பஸ்சின் சீரான ஓட்டத்தில் இந்த பாடல் கேட்டு பரவசமாகிப் போனேன்… எப்போது எங்கே இந்தப் பாடலைக் கேட்டாலும், என் மனதுக்குள் அந்த அதிகாலை சில்லென்ற நினைவுகளைப் பரப்பிவிட்டுப் போகும் அதிசயம்.

ஒரு அதிகாலையில் நீங்களும் கூட கேட்டுப் பாருங்கள்…


இதில், இரண்டாவது சரணத்திற்கு பின் ‘ப…ப…ப…பா…பா..ப…ப..
என்று ஜானகி பாடும்போது, ராஜாவின் இசையில் தெறிக்கும் துள்ளல்… மொத்த சந்தோஷத்தையும் அள்ளி வருவது போல ஒரு இசையை அந்த இடத்தில் தந்திருப்பார் நம் இளையராஜா

படம்: இளமை காலங்கள் (1984)

தயாரிப்பு: கோவைத்தம்பி

இயக்கம்: மணிவண்ணன்

நாயகன்: மோகன், நாயகி: சசிகலா

பாடல்: வைரமுத்து

இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்கள் தான்.

பாட வந்ததோர் கானம்..

ஈரமான ரோசாவே…

ராகவனே ரமணா ரகுநாதா…

படிப்புலே ஹீரோ …

இன்ப வேளையில் சுக ராகம்.... என்ற வரிகளை போலவே இந்த பாடல் ஒரு சுக ராகம் தான்

இந்த பாடலும் என் வழி தளத்தில் 2010 ல் வெளியானது

ஆர்.வி.சரவணன்

புதன், மார்ச் 28, 2012

ஒரு வி.ஐ.பி க்கு எனது ஆட்டோகிராப்


ஒரு வி.ஐ.பி க்கு எனது ஆட்டோகிராப்

நான் கல்லூரி படிக்கும் காலத்தில் ஒரு முன்னணி இயக்குனரின் (அவர் இயக்குனர் மட்டுமே ) ரசிகனாய் இருந்தேன். 

சில வருடங்களுக்கு முன் புத்தக கண்காட்சியில் ஒரு புத்தக ஸ்டாலில் அவரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் அந்த புத்தக ஸ்டாலில் புத்தகம் வாங்கி தான், அவரிடம் ஆட்டோகிராப் பெற்று கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். உடனே ஒரு புத்தகம் வாங்கி அவரிடம் கையெழுத்துக்கு நீட்டினேன். அவரும் கையெழுத்திட்டு கொடுத்தார். அவர் கையெழுத்து இடும் போது நான், சார் நான் உங்க படங்களின் ரசிகன் உங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து உங்கள் பக்கத்தில் நிற்பதை ரொம்ப சந்தோசமா பெருமையா உணர்றேன் என்றேன். அதற்கு அவர் எந்த ஒரு ரியாக்சனும் செய்யவில்லை. ரு சின்ன ஸ்மைல் கூட வெளிபடுத்தவில்லை. இயந்திர தனமாய் தொடர்ந்து ஒவ்வொருவரிடமும் கையெழுத்து போடுவதிலேயே கவனமாக இருந்தார். என் மனது ரொம்பவும்  காயப்பட்டது.

அவ்வளவு பெரிய இயக்குனரின் எத்தனையோ ரசிகர்களில் நீயும் ஒருவன் எத்தனை பேரை தான் அவர் பார்த்து சிரிப்பார் இதை எல்லாம் எதிர் பார்ப்பது தவறு என்று தானே சொல்ல வருகிறீர்கள். நம் பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்த காசுகள் ஒரு ரூபாய் நாணயங்களாக இருக்கலாம் அதற்காக ஒரு நாணயத்தை யேனும் விட்டு விடுகிறோமா என்ன. அது போல் தான் ஒவ்வொரு ரசிகனும் அவருக்கு முக்கியமானவர். அவர் என்னுடன் பேச கூட வேண்டாம். ஒரு சின்ன பார்வையில் நான் சொன்னதை உள் வாங்கி கொண்டு சின்ன ஆச்சரியமேனும் முகத்தில் காட்டியிருக்கலாம். 
செய்யவில்லை  எனும்போது மனது ரொம்ப கஷ்டமாகி விட்டது .

அவரது படம் ஒன்றை கல்லூரி நாட்களில் பார்த்து விட்டு நீண்ட பாராட்டு கடிதம்  எழுதி அனுப்பி வைத்திருந்தேன் என்பது நினைவுக்கு வருகிறது.


பின் குறிப்பு

இப்போதெல்லாம் ஏதேனும் வி ஐ பி யை பார்க்கும் போது அருகில் செல்ல மனம் வருவதில்லை. காரணம் நாம்  ஏற்கனவே அவர் மேல் கொண்டிருக்கும் ஒரு நல்ல இமேஜ் இதனால் ஸ்பாயில் ஆகிடுமோ எனபதால் தவிர்க்கிறேன். அதற்காக எல்லோரும் அப்படி தான் என்று நான் சொல்லவில்லை எனக்கு கிடைத்த அனுபவத்தை தான் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஆர்.வி.சரவணன்

திங்கள், மார்ச் 26, 2012

வலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா


வலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா

கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமான்.இங்கு புகழ் பெற்ற பாடை கட்டி மகா மாரியம்மன் கோவில் உள்ளது மிகவும் புகழ் வாய்ந்த ஸ்தலம் இது வருடா வருடம் தமிழ் மாதம் பங்குனி இரண்டாவது ஞாயிறு அன்று பாடை காவடி திருவிழா இங்கு புகழ் வாய்ந்த ஒன்றாகும். நேற்று 25-03-2012 கோவிலில் பாடை கட்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது


இந்த கோயிலின் சிறப்பு என்னவெனில் உடல் நலம் சரியில்லாதவர்கள்அம்மனிடம் வேண்டி கொண்டு ,தாங்கள் வேண்டியது நிறைவேறியவுடன் பாடை காவடி எடுத்து ஈமக்ரியை செய்வது போல் உறவினர்கள் கொல்லி சட்டி ஏந்தி கொட்டு மேளம் கொட்டி வர ஆலயத்தை வலம் வந்து அம்மன் சன்னிதானம் முன் தாங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர்.

திருவிழாவில் மக்கள் வெள்ளம் போல் திரண்டு வந்திருந்தனர் இரவு முழுக்க சாலையோரம் முழுதும் இரு புறமும் கடை வீதிகள் பார்க்க கண் கொள்ளா காட்சியாக இருந்தது நான் எடுத்த சில படங்களை இங்கே தந்திருக்கிறேன்




கோவில் நுழைவாயில்

பக்தர்கள் வெள்ளம்


நேர்த்தி கடன்





அம்மன் திரு வீதி உலா




மாரியம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்க உளமார வேண்டுகிறேன்

ஆர்.வி.சரவணன்

வியாழன், மார்ச் 22, 2012

ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..



ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..

மனம் கவர்ந்த பாடல்கள்

சை பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது.

நல்ல இசை என்பது, கேட்பவரை மனம் லயிக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அவ்வளவுதான் தெரியும்!

ராகதேவன் நம் இசை சக்கரவர்த்தி இளையராஜா அவர்களின் இசை இனிமையில் நான் ரசிக்கும் மற்றுமொரு பாடல்


ஆனந்தக்கும்மி என்று ஒரு படம் அனேகமாக வருடம் 1983-ல் வெளியானது. அந்தப் படம் பலருக்கு இன்று நினைவில் இல்லாமல் இருக்கலாம்… ஆனால் பாடல்கள்… காலத்துக்கும் மறக்க முடியாதது!

இந்த படத்தில் வரும் ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..
என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.

இந்த பாடல் ‘ஆனந்த கும்மியடி கும்மியடி ….’ என்று பெண்கள் கோரஸ் குரலில் ஆரம்பிக்கும் அது முடிந்தவுடன், தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்திருப்பார் இளையராஜா.

அப்படியே ஒரு அமைதியான கிராமத்தில், நிலவின் ஒளியில் மின்னும் பின்னிரவுக்க, நம்மை இழுத்துச் செல்லும் அந்த இசை.

தொடர்ந்து வரும் பல்லவி,

ஓ வெண்ணிலாவே வா ஓடி வா…

அதற்குப் பின் பாடலின் இரண்டாவது சரணத்திற்கு முன்

ஜானகியின் குரலில் வரும் ‘லா லி லா லி லா லி….’ நம்மை சுகமாய் தாலாட்டும்.

இந்த பாடலை எனது 18 வயதில் கேட்டிருக்கிறேன்.
இந்த வயதிலும் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். மனதில் இளமையின் நினைவுகள்…

என் மனதை மயக்கும் பாடல்களில் ஒன்று..கேட்காதவர்கள் கேட்டுத்தான் பாருங்களேன்!

ஊமை நெஞ்சின் ஓசைகள்…, ஒரு கிளி உருகுது…, அண்ணன்மாரே தம்பிமாரே…, திண்டாடுதே ரெண்டு கிளியே (இளையராஜா) என மற்ற பாடல்களும் மகா இனிமையானவை.

இந்த ஆனந்தக்கும்மி படத்தின் தயாரிப்பு: இளையராஜா

பாடல் பாடியவர்கள் S.P. பாலசுப்ரமணியம்,S.ஜானகி

இந்த படத்தின் இயக்குனர்: பாலமுருகன்

இந்த படத்தின் நாயகன் பெயர் பாலச்சந்தர். நாயகி அஸ்வினி (பார்த்திபன் ஜோடியாக பொண்டாட்டி தேவை படத்தில் நடித்திருப்பார்).

பாடலை எழுதியவர்: வைரமுத்து

இந்த பதிவு எனது நண்பர் வினோ அவர்களின் என்வழி வலைத்தளத்தில் 2010 ம் வருடம் நினைவுகளை மீட்டும் இசை தலைப்பில் வெளியானது. உங்களுக்காக இங்கே தந்திருக்கிறேன்

ஆர்.வி.சரவணன்

வியாழன், மார்ச் 15, 2012

கொஞ்சலும் கெஞ்சலுமாய்....


கொஞ்சலும் கெஞ்சலுமாய்....

விழித்த பின்னும்
உறங்குவதாய்
பாசாங்கு
செய்கிறேன்
என்னவள்
கொஞ்சலும்
கெஞ்சலுமாய்
எனை
எழுப்பட்டுமே
என்
பொழுது
இப்படியும்
விடியட்டுமே
என்று

ஆர்.வி.சரவணன்

சனி, மார்ச் 03, 2012

என் காதல் சொல்ல நேரமில்லை....



என் காதல் சொல்ல நேரமில்லை....

நான் இளையராஜா பாடல்களின் தீவிர ரசிகன் எப்போதும் பழைய பாடல்களே எனது விருப்பமாக இருந்தாலும், புதிய பாடல்களும் அவ்வப்போது என்னை மயிலிறகு போல் வருடும் அப்படி என்னை வருடிய பாடல் பற்றிய பகிர்வு தான் இது

என் காதல் சொல்ல தேவையில்லை என்பது பாடலின் வரிகள். ஆனால் பாடல் பற்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும். நா முத்துகுமாரின் காதல் வரிகளுக்கு யுவனின் இசை கை கோர்க்க லிங்குசாமியின் இயக்கத்தில் இந்த பாடலுக்கான விசுவல் என்னை மிகவும் கவர்ந்தது .




தமன்னா காபி அருந்த கார்த்தி அவரையே அருந்துவது போல் பார்க்க, அவர் பேருந்தில் ஏற இவருக்கு தன் மனதுக்குள்ளே அவர் நுழைவது போல் தோன்ற, அவர் உலர வைத்த துணிகளுக்கு கிளிப் போட கார்த்திக்கு தன் மனதையே வாங்கி தன் மனதோடு சேர்த்து கிளிப் போடுவது போன்று அவருக்கு தோன்றுகிறதோ இல்லையோ நமக்கு தோன்ற வைக்கும் காட்சிகள்


கார்த்தி, தமன்னா குளியலறையில் தாழ்பாள் சரியில்லை என்று சொல்லும் போது அதை சரி செய்து கொடுத்து விட்டு இங்கே இவர் காதலில் நனைவார்.

தமன்னா குளித்து முடித்து வெளிவந்து நடக்கையில் உருவான கால் தடங்கள் பார்த்து தன் மனத்தினில் காதலின் தடங்கள் விழுந்ததை போன்று சந்தோசமாய் அதை பின் தொடர்ந்து செல்வார்.

தமன்னா செய்யும் மோனோ ஆக்டிங் பார்த்து ஆச்சரியமும் அவர் துவண்டு விழுவது கண்டு அதிர்வதும் அவர் எழுந்து சிரித்தவுடன் சிரிப்பதும் என்று கார்த்தி யின் முக பாவங்கள் அருமையாய் வெளிபட்டிருக்கும்.

பக்கத்துக்கு வீட்டில் தம்பதியின் உல்லாசத்தை பார்த்து இருவரும் கண்களால் காதல் பரிமாறி கொள்வதும் சிறுவர்கள் கிரிக்கெட் பந்து கேட்டு வர கார்த்தி தமன்னாவை கேட்குமாறு சொல்ல தமன்னா கொஞ்சம் பிகு செய்து விட்டு பின் கொடுக்குமாறு சைகை செய்ய பின் கார்த்தி தருவதும் என்று ரசிக்க வைக்கும் காட்சிகள்.

அதே போல் கார்த்தி (முதல் சரணத்திற்கு பின் வரும் பல்லவியில் ) உன் விழியாலே என்று பாடி ஆடுவார் பாருங்கள் நாமும் கொஞ்சம் ஆடுவோமா என்று தோன்ற வைக்கும் காட்சி இது

தமன்னாவின் வீட்டு அட்ரெஸ் கிடைத்து விட்டது என்று நண்பன் சொன்னவுடன் அவர் குதுகலிக்க இவர் வேதனையை உள்ளுக்குள் மறைத்து கொண்டே புன்னகைக்க என்று காதலின் பரிமாணங்களை கவிதை போன்று விசுவலில் செய்திருப்பார் இயக்குனர்
லிங்குசாமி

அதாவது லவ் பண்ணுங்க பாஸ் லைப் நல்லா இருக்கும் என்று சொல்வது போல் இருக்கும் இப் பாடல் காட்சியை எப்போது காண நேர்ந்தாலும் நான் பாடலை முழுக்க ரசித்து விட்டு தான் நகர்வேன்

எத்தனை முறை பார்த்தாலும் எனை சலிப்படைய விடுவதில்லை மாறாக எனை களிப்படைய வைக்கிறது என்றே சொல்லலாம்.

ஆமா நான் மட்டுமே சொல்றேனே உங்களுக்கு எப்படி இருக்குது இந்த பாடல்
கொஞ்சம் சொல்லுங்களேன்

ஆர்.வி.சரவணன்

திங்கள், பிப்ரவரி 27, 2012

வெற்றியை எட்டும் வரை எட்டு....






திருவண்ணமலையில் நான் க்ளிக்கிய சில படங்கள்


வெற்றியை எட்டும் வரை எட்டு....

நான் திருப்பூரில் டையிங் யூனிட்டில் மேலாளராக வேலை பார்த்த போது நடந்த ஒரு நிகழ்வை குறிப்பிட விரும்புகிறேன்

அங்கு தினமும் அனைத்து வேலையாட்களும் வேலை ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்பு இறைவனுக்கு ஒரு உறுதிமொழி எடுப்பார்கள் அனைவரும் வரிசையில் நிற்க நாங்கள் எதிரில் நின்று ஒருவர் சொல்ல அதை மற்றவர்கள் சொல்வார்கள். அந்த உறுதிமொழி முழு வெள்ளை தாள் அளவுக்கு ஒரு பக்கம் இருக்கும்.

அதே போல் ஒவ்வொரு வியாழனும் அனைத்து துறைகளின் மேலாளர்கள் பங்குபெறும் மீட்டிங் நடைபெறும் அதில் கலந்து கொள்ள எம். டி வருவார் எங்களது யூனிட்டுக்கு முதலாளியின் மனைவி தான் பொறுப்பாளர் (ஜெனரல் மேனேஜர்) கம்பெனி நிர்வாகம் ஊழியர்களிடம் என்ன எதிர்பார்க்கிறது என்று எம் .டி எடுத்துரைப்பார் அதே போல் ஊழியர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஒவ்வொரு துறையின் மேலாளரும் எடுத்துரைப்பார்கள் அடுத்த மீட்டிங்கில் இதை சரி செய்து தர வேண்டும் என்ற ஒப்புதலுடன் இரு சாராரும் உறுதி எடுக்கும் இந்த மீட்டிங் அங்கே ஊழியர்கள் முதலாளி அனைவரும் ஒன்றே என்பது தான் அந்த மீட்டிங் கின் சிறப்பம்சம்

அந்த மீட்டிங் நடைபெறும் போதும் இந்த இறைவனுக்கு உறுதிமொழி எடுப்பது நடைபெறும் ஒருவர் சொல்ல மற்ற அனைவரும் திருப்பி சொல்வோம் இதில் முதலாளி என்ற பாகுபாடில்லாமல்
எம்.டி .யும் எழுந்து நின்று கை கட்டி சொல்வார் எங்களை போலவே சொல்வார். அன்று அதே போல் அந்த உறுதிமொழி பேப்பரை படிக்க எடுத்த தன் மனைவியிடம் அவர் பேப்பரை வைத்து விட்டு பார்க்காமல் சொல் என்று உத்தரவிட்டார் அவர் மனைவி (எங்கள் யூனிட் ஜெனரல் மேனேஜர்) எனக்கு தெரியாது என்று சிரித்த படியே மறுத்தார் .இவ்வளவு நாள் படிக்கிறே இன்னுமா மனப்பாடம் ஆகவில்லை உனக்கு என்று கேட்டார்.

பின் எங்களை பார்த்த எம் .டி வேறு யாருக்கு பார்க்காமலே சொல்ல தெரியும் என்றார் எல்லோரும் உடனே என்னை பார்த்தார்கள் ஏனெனில் ஏற்கனவே ஊழியர்களுடன் நான் உறுதிமொழி எடுக்கும் போது மற்றவர்கள் பார்த்து படிக்க நான் மட்டும் பார்க்காமலே சொல்வேன் ( எந்த ஒரு விசயமும் சில முறை கேட்டால் எனக்கு மனப்பாடம் ஆகி விடும் ) சரவணனுக்கு தெரியும் என்றார்கள் எங்கே சொல் என்றார் எனக்கு கொஞ்சம் பயமாகி விட்டது ஏனெனில் ஏதும் சொதப்பி விட போகிறோமே என்று தான் இருந்தும் வேறு வழி. நான் சொல்ல ஆரம்பித்தேன் நான் சொல்ல சொல்ல எம்.டி உள்பட அனைவரும் அதை திருப்பி சொன்னார்கள் உறுதிமொழி சொல்லி முடித்தவுடன் எம் .டி கை தட்டினார் வெல்டன் சரவணன் எல்லோரும் என் மனைவி உட்பட கடமைக்கு தான் அதை சொல்லியிருக்கிறார்கள் நீ மட்டும் தான் அதை ஆத்மார்த்தமாக சொல்லியிருக்கிறாய் அதனால் தான் உன்னால் மனப்பாடம் செய்ய முடிந்திருக்கிறது கண்டிப்பா நீ நல்ல நிலைக்கு வருவே என்று சொன்னார் அன்று முழுவதும் நான் சந்தோசத்தில் மிதந்தேன் என்று சொல்லவும் வேண்டுமா

வெற்றிக்கான விதை என் மனதில் விழுந்தது அப்போது தான் எந்த ஒரு விசயமாகினும் அதில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட வேண்டும் என்பதை கெட்டியாக பிடித்து கொண்டதன் விளைவு அவ்வபோது சில வெற்றிகளை என்னால் எட்ட முடிந்தது

இதை எதுக்கு இப்ப சொன்னேன்னா இன்னும் followers எண்ணிக்கை நூறை என் தளம் அடையவில்லை இன்னும் இருபத்தி ஐந்தாயிரம் ஹிட்ஸ் கூட நான் எட்டவில்லை இருந்தும் இது எனக்கு நுற்று எழுபத்தைந்தாவது இடுகை இதில் நான் பெருமிதப்பட ஏதுமில்லை இந்த வேலையில் இன்னும் நான் முழு ஈடுபாட்டுடன் ஈடுபடவில்லை என்பதாக தான் இதை எடுத்து கொள்கிறேன்

ஆனாலும் இந்த எண்ணிக்கையை நான் எட்டுவதற்கு நண்பர்களே என்னை தொடரும் நீங்கள் தானே காரணம்

நன்றி நண்பர்களே

ஆர்.வி.சரவணன்

வெள்ளி, பிப்ரவரி 17, 2012

நான் சொல்வது யாதெனில்....




நான் சொல்வது யாதெனில்....
(கோச்சடையான் + நீ தானே என் பொன் வசந்தம் + நண்பன் + மின்வெட்டு + ரயில் பயணம்)

கோச்சடையான் ஸ்டில் பார்த்து விட்டு எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்திருக்கிறது என்றால் அது மிகையில்லை பிடித்த படம் தியேட்டரில் சென்று அமர்ந்து பார்க்கும் போது முக்கியமான கட்டம் வரும் போது நாம் உட்கார்ந்திருக்கும் சீட்டில் இன்னும் சரியான படி அமர்ந்து ஆவலுடன் படத்தில் ஒன்றி விடுவோம் அல்லவா அது போல் தான் கோச்சடையான் ஸ்டில் பார்க்கும் போது தோன்றுகிறது படம் சிறப்பாய் வெளி வர வாழ்த்துக்கள் தலைவா
( கோச்சடையான் வெற்றியுடையான் )


------

அதே போல் ஜீவா நடிக்க கெளதம் மேனன் இயக்கும் நீ தானே என் பொன் வசந்தம் படம் என் முக்கிய எதிர்பார்ப்பில் இருக்கிறது காரணம் நம் இசை அரசர் இளையராஜா அவர்கள் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். படத்தின் ட்ரைலர் நன்றாக இருக்கிறது என்று படித்தேன் பார்க்கவில்லை இளையராஜாவின் தீவிர ரசிகனான எனக்கு இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை தந்திருக்கிறது (உன் இசை தானே எங்கள் பொன் வசந்தம்)

------


நண்பன் படம் பார்த்தேன் இந்த படத்தில் சைலன்சர் கேரக்டரில் சத்யன். மனிதர் என்னமாய் வெளுத்து வாங்குகிறார் அவரை பார்த்து விட்டு யாரும் சைலன்சாய் இருக்க முடியாது. இந்த படம் அவருக்கு ஒரு முக்கியமான படம் வாழ்த்துக்கள் சத்யன் இந்த படம் பற்றி விமர்சனம் எழுதலாம் என்று நினைத்தேன் ஆனால் சரியாக வரவில்லை என்பதால் எழுதியும் வெளியிடவில்லை இருந்தாலும் படம் பார்த்து விட்டு நான் நினைத்ததை சொல்ல ஆசைபடுகிறேன் நான் விருப்பப்பட்ட துறையை தேர்ந்தெடுக்க என் வீட்டில் யாருமே கண்டிப்பாக அனுமதிக்கவில்லை என்னை உதவாக்கரை என்றே முடிவு கட்டும் நிலை என்பதால் என்னால் நான் ஆசைப்பட்டதை தேர்ந்தெடுக்க முடியவில்லை நான் இருக்கும் வேலையில் கடமைக்காக (பணத்திற்காக) இயந்திரத்தனமாய் சுழலும் சூழல் தான் இப்போதும் எனக்கு. நான் விரும்பிய பத்திரிகை துறையிலோ அல்லது திரைப்பட துறையிலோ மட்டும் இருந்திருந்தால் எப்படி சந்தோசமாய் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியிருப்பேன் என்பதை நினைத்து பார்க்கிறேன் இந்த துறைகளில் யாரேனும் புதிதாக வந்து வெற்றி பெறும் போதெல்லாம் ஒரு ஏக்க பெருமூச்சு எனக்கு வெளிபடுகிறது ( நண்பன் படம் நன்பேண்டா என்று சொல்ல வைக்கிறது)

------

மின் வெட்டு வெட்டோ வெட்டென்று இருக்கிறது சென்ற வாரம் எங்கள் வீட்டில் சில மின்சார வேலைகள் இருந்ததால் எலேக்ட்ரிசியன் அழைத்திருந்தேன் ஒரு டியுப் லைட் எரியவில்லை அதற்கு மெனக்கெட்டு கொண்டிருந்தார் அவர் கரென்ட் போறதுக்குள்ளே முடிச்சுடுறேன் இல்லேன்னா செக் பண்ண முடியாம போயிடும் என்று அவசர அவசரமாய் வேலை பார்த்து கொண்டிருந்தார் இருந்தும் கரண்ட் நின்று விட்டது இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்திருந்தால் வேலை முடிந்திருக்கும் கரண்ட் போய் விட்டதால் அவர் மீண்டும் இதற்காக மாலை ஒரு முறை வந்திருந்து முடித்து கொடுத்தார் அப்போது அவர் சொன்னது பாருங்க கரென்ட் இல்லேன்னா எனக்கு கூட வேலை கிடையாது எனக்கே இப்படின்னா எத்தனையோ தொழிற்சாலைகள் நிலைமையை நினைச்சு பாருங்க என்றார் உண்மை தான் (மின் வெட்டு இல்லாத நிலை வேண்டும் )

------

ரயில் பயணத்தில் கையோடு புத்தகம் வைத்திருந்தாலும் வெளியில் எடுத்து படிக்க யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது காரணம் சென்ற வாரம் ஊருக்கு சென்ற போது வாரஇதழ் ஒன்று படிப்பதற்காக வாங்கினேன் எனக்கு எப்போதுமே புத்தங்கங்கள் என்றால் வாங்கும் போது எப்படி புத்தம் புதிதாக கசங்காமல் இருக்கிறதோ அதே போல் படித்து முடித்த போதும் இருக்க வேண்டும். ஆனால் பாருங்கள் புத்தகம் வாங்கிய ஐந்து மணி நேரத்திலேயே ரயிலில் ஒவ்வொருவரும் வாங்கி படித்து நான் சென்று இறங்குவதற்குள் அந்த புத்தகம் கசங்கி அட்டை கையோடு வந்து விடும் போல் இருந்தது சரி நீ மத்தவங்க கிட்டே புக் வாங்கினா எப்படி என்கிறீர்களா முழுக்க படித்து விட்டு எப்படி கொடுத்தார்களோ அப்படியே கொடுப்பேன் ஏனெனில் சின்ன ஒரு முக சுளிப்பும் தாங்கும் மன வலிமை என்னிடம் இல்லை (புத்தகம் படிக்கவும் பாதுகாக்கவும் மட்டுமே )

------




நண்பர் கரைசேரா அலை அரசன் அவர்கள் தனக்கு கிடைத்த விருதுகளை என்னுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அவருக்கு என் மனம் கனிந்த நன்றி



நாட்காட்டியில் (கிழிச்சது) படிச்சது

அன்பை கடன் கொடு
அது உனக்கு அதிக வட்டியுடன் திரும்ப கிடைக்கும்


கடுகளவு சிறந்த சிந்தனை பூசணியளவு நற்பயனை தரும்


ஆர்.வி.சரவணன்