புதன், மே 23, 2012

தஞ்சை பெரிய கோயில்


தஞ்சை பெரிய கோயில்


ஆயிரம் ஆண்டுகளாய் தரணி போற்றும் தமிழரின் பெருமை
மாமன்னன் ராஜராஜனின் திருப்பணியில் உருவான பொக்கிஷம்
தஞ்சை பெரிய கோயில் இந்த பிரமாண்டத்தின் அழகை என் செல் போனில் ஆர்வமுடன் க்ளிக் செய்தேன் அவை இதோ














இந்த கோவில் 1004 ம் வருடம் தொடங்கி 1010 ம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது

இந்த கோவில் உருவாக்கத்திற்கு நிதியை கொட்டி கொடுத்தவர்கள் முதல் ஒரே ஒரு செப்பு காசு கொடுத்தவர் வரை அனைவரது பெயரையும் தன் பெயருக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்துடன் கல் வெட்டில் பொரிக்க ராஜ ராஜன் ஆணையிட்டார் என்கிறது வரலாறு

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


ஆர்.வி.சரவணன்

வியாழன், மே 17, 2012

அப்பழுக்கில்லாத வழக்கு எண் 18/9



அப்பழுக்கில்லாத வழக்கு எண் 18/9

இந்த படத்தை பற்றி எல்லோரும் எழுதிய பிறகு நீ எழுத என்ன இருக்கிறது என்று எனக்குள் ஒரு குரல் கேட்டது ஒரு நல்ல படைப்புக்கு என்னால் ஆன ஒரு பாராட்டை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்பதால் பதிவு செய்திருக்கிறேன்


பணக்கார வர்க்கம் செய்யும் தவறு சட்டத்தின் கைகைள் சிக்காமல் இருக்க துணை போகும் அதிகார வர்க்கத்தால் ஏழைகள் அடையும் பாதிப்பை அழுத்தமாக நடைமுறை வாழ்க்கையில் நாம் அன்றாடம் காணும் சில கதாபாத்திரங்களை கொண்டு அழகாய் மிக இயல்பாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்

முதல் பாதியில் ரோட்டோரத்தில் கஷ்டப்படும் ஏழை மனிதர்களை பற்றிய கதையும் பிற்பாதியில் பணக்கார வர்க்கத்தின் வாழ்க்கையை பற்றிய கதை யும் தந்து இவை இரண்டையும் முடிவில் ஒன்றாக சேர்க்கும் திரைக்கதை அதிலும் முதல் பாதியில் வரும் சில காட்சிகளுக்கு தொடர்புடைய வேறொரு காட்சி பிற்பாதியில் வரும் கதை பாங்கை நான் மிக விரும்பி ரசித்தேன்

ஸ்ரீ

வேலு வாய் நடித்திருக்கும் இளைஞன் ஸ்ரீ பிளாட்பார கடையில் வேலை பார்க்கும் அவர் ஊர்மிளா வை பார்த்ததும் அடையும் சந்தோஷம் அவரை பார்க்கும் போதெல்லாம் முகத்தில் தோன்றும் பரவசம் கோர்ட்டில் என்ன சொல்ல வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ட்ரைனிங் செய்யும் போது அவர் கை கட்டி வேதனையுடன் சொல்லும் காட்சி என்று அவரது நடிப்புக்கு சில சான்று

ஊர்மிளா மகந்தா

ஊர்மிளா முகத்தில் ஒரு சோகம் கவ்விய தோற்றதுடன் ஸ்ரீயை கண்டவுடன் வெறுப்பை உமிழும் முக பாவத்துடன் வளைய வரும் அவர் கிளைமாக்ஸ் ல் முகம் பாதி சிதைந்து உருக்குலைந்த தோற்றதுடன் வரும் போது நம்மிடம் பரிதாபத்தை பெற்று கொள்கிறார்
அந்த கடைசி காட்சி பார்க்கும் போது அதிர்ச்சியில் நம் ரத்தம் கண்டிப்பாக உறையும்

முத்துராமன்

அவர் நடித்திருக்கும் இன்ஸ்பெக்டர் கரெக்டர் அவருக்கென்றே உருவாகியது போல் கன கச்சிதமாய் இருக்கிறது. அவரை நேரில் பார்த்தால் அவர் சட்டையை கொத்தாக பற்றி உலுக்கும் ஆத்திரம் வரும் அளவு சிறப்பாய் நடித்திருக்கும் அவர் கை பற்றி குலுக்கலாம்

சின்னசாமி

பையன் என்னமாய் நடித்திருக்கிறான் அதிலும் நாடகத்தில் அவன் ஆடும் நடனம் கண் முன்னே நிழலாடுகிறது நீ நல்லா வருவடா என்று தான் சொல்ல தோன்றுகிறது

மிதுன் முரளி, மனிஷா யாதவ்

இருவரும் பணக்கார இள வயதினரை கண் முன் நிறுத்தும் அளவுக்கு அவர்கள் தோற்றமும் நடிப்பும் கை கோர்க்கிறது

இயக்குனர் பாலாஜி சக்திவேல் திரைக்கதையை அழகாய் நேர்த்தியாய் கோர்த்திருக்கும் விதம் படத்திற்கு மிக பெரிய பலம். அதிலும் அனைவரும் புது முகங்கள் எனும் போது அவரது கடும் உழைப்பு தெரிகிறது. பிளாட் பார கடை முதலாளியின் காலில் மாட்டிய போட்டோவை எடுக்கும் ட்ரிக், மியூசிக் இல்லாமல் வரும் பாடலில் ஸ்ரீ காதலியுடன் குடும்பம் நடத்துவதாய் காணும் கனவு காட்சிகள்
அந்த சிறுவன் சின்னசாமி இப்பலாம் யாரு கூத்து பார்க்கிறாங்க அதான் வயித்து பிழைப்புக்காக வேலை செய்ய வந்துட்டேன் என்று சொல்லும் போது அந்த கலை யை நாம் மறந்து கொண்டிருக்கிறோம் என்று கோடிட்டு காட்டும் விதம் என்று பல காட்சிகள் எதை சொல்வது எதை விடுவது என்று தெரியாத அளவுக்கு படம் நெடுக நம்மை ரசிக்க வைக்கும் காட்சிகள் தான்
படம் முடிந்து எழும் போது பாலாஜி சக்திவேல் சார் தங்கள் கைகள் அழுந்த பற்றி கை குலுக்கும் ஆசை வருகிறது

இந்த வழக்கை ஆதரித்து வாதாடுவோம், வாகை சூட வாழ்த்துக்கள் சொல்வோம்

ஆர்.வி.சரவணன்





புதன், மே 09, 2012

கடந்து செல்கையில் ....


கடந்து செல்கையில் ....


நீ
எனை
எப்போதும்
தென்றலாய்
தான்
கடந்து செல்கிறாய்
இருப்பினும்
புயல்
கடந்த
பூமியாகிறது
என்
மனம்

ஆர்.வி.சரவணன்



வெள்ளி, மே 04, 2012

நான் சொல்வது யாதெனில்....


நான் சொல்வது யாதெனில்....

(சுஜாதா என்றொரு சிகரம் + சில மனிதர்கள் + வேகம் விவேகமல்ல + மின் வெட்டிலும் மின்சாரம்)

படிப்பதில் மிகுந்த ஆர்வமுள்ள எனக்கு சுஜாதா சார் எழுத்துக்கள் என்றால் கொள்ளை பிரியம் சிறு வயதில் கொலையுதிர்காலம் என்ற தொடர் குமுதத்தில் வந்தது அந்த தொடரை படிக்க ஆரம்பித்தவன் தான்.அதிலிருந்து அவரது ரசிகன் ஆகி விட்டேன் .அவர் பெயரிட்ட ஒரு புத்தகத்தையும் விடுவதில்லை. சமீபத்தில் அவரது குறு நாவல்கள் தொகுதி படித்தேன். சென்னை பாரி முனையில் உள்ள தம்பு செட்டி தெரு செல்லும் போதெல்லாம், கணேஷ் வசந்த் நினைவு வந்து விடும் எனக்கு. கூடவே சுஜாதா வின் நினைவும். சுஜாதாவின் அற்புத படைப்பு கணேஷ் வசந்த்.என்றால் கடவுளின் மிக அற்புதமான படைப்பு சுஜாதா அவர்கள். ( ஹாப்பி பர்த்டே சுஜாதா சார். நாங்கள் உங்கள் எழுத்துக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் )

------

ஊருக்கு செல்ல ரயிலில் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்டில் ஏற நான் வரிசையில் நின்று கொண்டிருந்தேன் ரயில் பிளாட்பாரம் வந்து கொண்டிருந்தது நின்று கொண்டிருந்தவர்கள் வரிசையில் சுறுசுறுப்பாக, வரிசையில் நிற்காதவர்கள் அந்த வரிசையில் சேர்ந்து கொள்ள முனைய ஒரே கூச்சல். அப்போது எனக்கு முன்பு ஒருவர் நுழைய முயல அவரை திட்டி நாங்கள் வெளியேற்றி னோம். கூடவே எனக்கு முன் நின்றிருந்த ஒருவர் அவருடன் வாக்குவாதத்தில் இறங்கினார். "நாங்க எவ்வளவு மணி நேரமா நிக்கிறோம் நீ இப்ப வந்துட்டு உள்ளே நுழைய பார்க்கிறே" என்று அவர் சொல்ல, உள்ளே நுழைய முயன்றவர் அதற்கு பதில் கொடுத்தார் பாருங்கள்." நீயே இப்ப தான் உள்ளே நுழைந்தாய் நீ என்னை சொல்கிறாயா என்று சொன்னதை பார்த்து நான் அதிர்ச்சியானேன். ஏனெனில் அவர் எனக்கு முன்பே நின்று கொண்டிருந்ததால் எப்படியும் கண்டிப்பாக இரண்டு மணி நேரமாவது நின்றிருப்பார்.அப்படி நின்றவரை பார்த்து , தட்டி கேட்ட ஒரே காரணத்திற்காக இப்படி சர்வ சாதரணமாக சொல்லும் இவரை பற்றி நினைக்கையில் என்ன மனிதன் இவர் என்று நினைக்க தோன்றுகிறது (சில நேரங்களில் மனிதர்கள் ஏன் இப்படி?)

------

சென்ற வாரம் நான் திருப்பூர் வரை சென்றிருந்தேன் நான் இரவில் சென்ற கரூர் டு ஈரோடு தனியார் பேருந்தில் முன் இருக்கைகளில் நாங்கள் அமர்ந்திருந்தோம் டிரைவர் வேர்கடலை சாப்பிட்டு கொண்டே பேருந்தை ஓட்டி கொண்டிருந்தார் பின் போன் வரவே செல் போன் பேசிய படியே வண்டி ஓட்டினார் பின் அவர் நண்பர் ஒருவர் வரவே பக்கத்தில் அமர்ந்த அவருடன் பேசிய படியே ஓட்டி கொண்டிருந்தார் அவரது பொறுப்பற்ற இந்த செயல்கள் என் முதல் இருக்கையில் அமர்ந்த படி சென்று கொண்டிருந்த் எங்களின் பி பி யை எகிற வைத்தது ( உங்கள் கவனம் வண்டி ஓட்டுவதில் மட்டுமே இருக்கட்டும் என்று ஸ்டிக்கர் ஒட்டினால் தேவலை)

------

நான் ஏறிய மற்ற அரசு பேருந்துகளில் எல்லாம் டிரைவர் சீட்டுக்கு முன் உள்ள கண்ணாடியில் ஒரு சிறுமியின் போட்டோவுடன் அப்பா ப்ளீஸ் வேகமா போகாதீங்க என்ற எழுத்துக்களுடன் ஸ்டிக்கர் ஓட்டபட்டிருப்பதை பார்த்தேன். வேகமாய் சென்று கொண்டிருக்கும் டிரைவர்கள் இந்த வாசகம் பார்க்கும் போது தானாகவே வேகத்தை குறைக்கும் எண்ணம் வரும். கண்டிப்பாக இந்த வார்த்தைகளுக்கு பலன் இருக்கும் என்று நினைக்கிறேன் இது நல்ல முயற்சி (வேகத்திற்கு விடை கொடுப்போம் )

------

மின்வெட்டிலும் மின்சாரம் இது எப்படின்னு கேட்கறீங்களா
மின் வெட்டின் கொடுமை தாங்காமல் வீட்டில் இன்வெண்டர் வாங்கி போட்டு விட்டேன். பொருத்திய பின் அடுத்து மின் வெட்டு எப்ப வரும் என்று எதிர்பார்க்க வேண்டியதாகி விட்டது.(திட்டாதீங்க இன்வெண்டர் செக் செய்வதற்காக தான் ) ஆனால் பாருங்கள் தினமும் நைட் மின் வெட்டு படுத்தி எடுக்கும் அன்று பார்த்து பவர் கட்டே ஆகவில்லை. பவர் கட் ஆனது உடனே மீண்டும் வந்து விட்டது.(நிஜமாகவே நைட் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கட் ஆகும் கரண்ட் ஒரு மணி நேரம் கழித்து வரும் இப்போது அப்படியில்லை கட் ஆனாலும் உடனே வந்து விடுகிறது பகலில் மட்டும் கட் ஆகிறது ) நான் வீட்டில் எல்லோரிடமும் பார்த்தீங்களா இவ்வளவு செலவு பண்ணி இன்வெண்டர் போட்டவுடன் பவர் கட் ஆகலை பாருங்க என்றேன் கொஞ்சம் நொந்து போய்.
பக்கத்து வீட்டில் வசிக்கும் வயதான அம்மா சொன்னார்கள். "நீங்க பண்ணின செலவால் எல்லாருக்குமே நல்லது நடந்திருக்கு னு சந்தோசபடுங்க தம்பி" என்றார். ( கண்டிப்பாக இது எனக்கு சந்தோசமான ஒன்று தான் )

ஆர்.வி.சரவணன்

புதன், ஏப்ரல் 18, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி



ஒரு கல் ஒரு கண்ணாடி

பந்தியிலே உட்கார வச்சி சாப்பிட விடாமே எழுப்பி விட்டுட்டா எப்படி இருக்கும் அந்த மாதிரி ஒரு அனுபவம் எனக்கு ஒரு கல் ஒரு கண்ணாடி படம் பார்க்க போனப்ப ஏற்பட்டுச்சு அது இந்த பதிவின் கிளைமாக்ஸ் லே சொல்றேன்

இப்ப படம் பற்றிய பகிர்வுக்கு வருவோம்

ஹீரோ ஹீரோயினுடன் நண்பனாகி பின் காதலித்து பிரிந்து பின் சேர்கிறார் இந்த ஒரு வரியை வைத்து கொண்டு தன் சுவாரஸ்யமான திரைக்கதையால் நான் ஸ்டாப் காமெடி யில் இயக்குனர் ராஜேஷ் தந்திருக்கும் கலக்கல் படம் இவரது பாஸ் என்கிற பாஸ்கரன் எனக்கு எப்போதும் பிடித்த படங்களில் ஒன்று

உதயநிதி அறிமுக ஹீரோ. அலட்டல் பில்டப் என்று எதுவுமில்லாமல் சிம்பிளாக நடித்திருக்கிறார். ஆரம்ப காட்சிகளில் இன்னும் சரியாய் நடிக்கலாமே என்று தோன்றும் கொஞ்ச நேரத்திலேயே பரவாயில்லையே என்று சொல்ல வைக்கிறார். பக்கத்துக்கு வீட்டு பையன் போன்ற இமேஜுடன் அவர் இருப்பது சிறப்பு சில காட்சிகளில் இன்னும் இவர் நன்றாய் செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது (அம்மாவை காணவில்லை என்றவுடன் அப்பாவை அவர் திட்டுவார் அந்த காட்சியில் இன்னும் எக்ஸ்ப்ரசன் தேவைபடுகிறது ) ஹன்சிகாவை அவருக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை ரணகளபடுத்த அதை பார்த்து உதயநிதி செய்யும் சேஷ்டைகள் தியேட்டர் வாசலில் அவர் போடும் ஆட்டம் ரசிக்க வைக்கிறது

ஹன்ஷிகா கோடைக்கேற்ற ஊட்டி போல் குளு குளு வென்று இருக்கிறார் . இப்படி இருந்தால் எந்த ஹீரோ தான் அவரை காதலிக்க அலைய மாட்டார் என்று தோன்ற வைக்கும் அழகுடன் படத்தில் வலம் வருகிறார்

சந்தானம் உதயநிதியின் நண்பனாக படம் முழுக்க அவர் பேசும் டைமிங் வசனங்களுக்கு தியேட்டர் அதிர்கிறது உதயநிதியின் வீட்டில் அவரை காப்பாற்ற வந்து நொந்து போவதாகட்டும் போலீஸ் ஸ்டேசனில் மிமிக்ரி செய்து திணறுவதாகட்டும் நண்பனின் இம்சையை தாங்கி கொண்டு நோவதாகட்டும் தியேட்டரில் சிரிப்பலை தான் கல்யாணத்தை நிறுத்தணும் என்று நண்பன் சொன்னவுடன் கட்டை எடுப்பதும் நிறுத்த வேண்டாம் வாழ்த்துவோம் என்றவுடன் பொக்கே ஆர்டர் செய்ய சொல்வதும் என்று படம் முழுக்க அவர் சிக்சர் அடிக்கிறார் இந்த படத்திற்கு சந்தானம் மிக பெரிய பிளஸ் +

அடுத்து சரண்யா, அழகம் பெருமாள் உதயநிதியின் தாய் தந்தையாக நடித்திருக்கிறார்கள். இதில் சரண்யா அப்பாவி அம்மாவாக புருஷன் இருபது வருஷம் பேசாமல் இருக்கிறார் என்று கண் கலங்குவதிலும், எனக்கு கோபமாக எல்லாம் பேச வராது என்று அப்பாவியாய் ஹன்சிகாவிடம் சொல்வதிலும், அதிலும் உங்கப்பா பேசிட்டார்டா என்று பொங்கி பூரிக்கும் முக பாவத்திலும் சரண்யா சபாஷ்யா தான்

சரண்யா பொய் சொல்லி கல்யாணம் செய்ததால் அழகம் பெருமாள் பேசாமல் இருக்கும் விதம் அவ்வளவாக ஏற்புடையதாக இல்லை அதற்கு பதில் இருவரும் அவ்வபோது இது விசயமாய் பேசி கொண்டே சண்டையிட்டு கொள்வதாய் காட்டியிருக்கலாம்


விமானத்தில் செல்லும் போது உதயநிதி சந்தானம் செய்யும் கலாட்டாக்கள் ரசிக்க வைக்கின்றன என்றாலும் திமிர் பிடித்த பெண்ணை அடக்க வேண்டும் என்றால் உதயநிதி இப்படி டார்ச்சர் செய்யலாம் ஆனால் காதலில் ஒத்து கொள்ள வைக்க இப்படி டார்ச்சர் செய்கிறாரே என்று எண்ண தோன்றுகிறது நமக்கு. அவரது டார்ச்சரில் ஹன்சிகா திணறி கோபத்தில் எகிறும் போதும் கண் கலங்கும் போதும் பரிதாபப்பட வைக்கிறார்

புழுங்கல் அரிசி மன்னிக்கவும் புன்னகை அரசி சிநேகா சீனியர் ஏர் ஹோசடளாக உதயநிதி, சந்தனத்தை தன் புன்னகையால் சமாளிக்கும் விதம் அழகு

வழக்கம் போல் படத்தை முடித்து வைக்க வருகை தருகிறார் ஆர்யா ரஜினி முருகன் என்ற கெட்டப்பில். அவரது கெட்டப்புக்கு ஏற்றவாறு அவருக்கு துணையாய் வரும் ஆண்ட்ரியா கெட்டப் ஒட்டவில்லையே (டிரஸ் தான் சொல்றேன் அவர் வேட்டி சட்டையிலும் இவர் ஜீன்ஸ் பேன்ட்டிலும் இருப்பது ஏன் )

டைமிங் வசனங்கள் படத்திற்கு மிக பெரிய பலம்

மச்சான் பொண்ணுக்கு கொடுக்கிற சீர் வரிசையே என்னாலே தூக்க முடியாது என்னை போய் பொண்ணை தூக்க சொல்றியே ஒரு சாம்பிள்

அழகே அழகே பாடலும், பாடல் காட்சியும் அழகு. அதில் ஹன்சிகா மட்டுமில்லாமல் அது படமாகியிருக்கும் லோகேசன் அந்த பாடலுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது

வேணாம் மச்சான் வேணாம் பாடலில் மட்டும் சந்தானம் மீசையுடன் வருகிறார் காதல் தோல்விக்கு தாடி வளர்ப்பாங்க இவர் மீசை வளர்த்துட்டரோ என்று கேட்க தோன்றுகிறது


லாஜிக் சில இடங்களில் இடித்தாலும் அதெல்லாம் நம்மை எந்த விதத்திலும் உறுத்தாமல் அல்லது அதை பற்றி நம்மை நினைக்க கூட டைம் கொடுக்காமல் இயக்குனர் ராஜேஷ் படத்தை இரண்டரை மணி நேரம் வாய் விட்டு சிரிக்க வைத்திருக்கிறார்

ஒரு கல் ஒரு கண்ணாடி ராஜேஷ் ,உதயநிதி, சந்தானம் மூவர் கூட்டணியில் ட்ரிப்ள் ஓகே ஆகியிருக்கிறது


சரி ஆரம்பத்தில் நான் சொன்ன பந்தி விசயத்திற்கு வருகிறேன் அதாவது இந்த படம் பார்க்க நான் திங்கள் மாலை தியேட்டர் சென்றேன் ஹவுஸ் புல் என்பதால் டிக்கெட் கிடைக்கவில்லை கிளம்ப மனமில்லாமல் நான் நிற்கும் போது ஒருவர் என்னிடம் ஒரு டிக்கெட் இருக்கு வேண்டுமா என்றார் கொடுங்க சார் என்று நான் பரவசமாக, அவர் ஆறு பேருக்கு ஒரே டிக்கெட் டாக ரிசர்வ் பண்ணியிருக்கோம் சோ நீங்க எங்க கூடவே வாங்க என்றார். ஓகே என்று நான் பணம் எடுத்து நீட்டும் போது அவர் உள்ளே வந்து உட்கார்ந்தவுடன் வாங்கிக்கிறேன் என்று சொல்லி விட்டு, என் பிரெண்ட்ஸ் வண்டி பார்க் பண்ணிட்டு வர போயிருக்காங்க வந்துரட்டும் அது வரை வெயிட் பண்ணுவோம் என்றார். நான் சந்தோசமாக அவருடன் வெயிட்செய்யும் போது வந்து நின்ற அவரது நண்பர்களை எண்ணினால் இவரையும் சேர்த்து ஆறு பேர் டேய் உன் தம்பி வரலேன்னு நான் இவரை அந்த டிக்கெட் க்கு கமிட் பண்ணி வச்சிருந்தேனே என்று சொல்லி என்னிடம் எப்படி சொல்வதென்று சங்கடப்பட, நான் உடனே பரவாயில்லீங்க அதனாலென்ன தாங்க்ஸ் என்று சொல்லி விட்டு கொஞ்சம் ஏமாற்றத்துடன் வெளி வந்தேன் உடனே கவுண்டர் சென்று அடுத்த நாளுக்கு ரிசர்வ் செய்து விட்டு நேற்று சென்று பார்த்து விட்டு வந்தேன்

படம் பார்க்க போகிறோம் என்று சந்தோசமாகி நுழைவாயில் அருகே செல்கையில் டிக்கெட் இல்லை என்றால் எப்படி இருக்கும் அந்த மன நிலையை தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்

ஆர்.வி.சரவணன்

திங்கள், ஏப்ரல் 16, 2012

விழி மீன்கள்....



விழி மீன்கள்....



தூண்டிலில் மீன்கள்
மாட்டும்
இதுவா
அதிசயம்
உன் விழி மீன்களில்
தூண்டிலாய்
நான்
மாட்டினேன்
இதுவல்லவோ
அதிசயம்

ஆர்.வி.சரவணன்

வலை தளம் ஆரம்பித்த புதிதில் நான் எழுதிய கவிதை

புதன், ஏப்ரல் 04, 2012

இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம்....




இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம்....

மனம் கவர்ந்த பாடல்கள்

இசை சக்கரவர்த்தி இளையராவின் இன்னிசை மழையில் என்று படத்தின் டைட்டிலுக்கு மேலே ஒரு வரி இடம் பெறும்… அப்போதே தெரிந்து கொள்ளலாம் அது கோவைத் தம்பியின் படம் என்று. அவரது பெரும்பாலான படங்களுக்கு இசை, நம் சை அரசர் இளையராஜா தான்



இளமைக் காலங்கள். படத்தில் ‘இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம்…’ என்று ஆரம்பிக்கும் ஒரு டூயட் பாடல் இதில் ஜானகி அவர்கள் தேன் குரலில் ராகம் ஆரம்பிக்க கூடவே கோரஸ் ராகம் கோர்க்க இசை அரசரின் இசை உத்வேகம் எடுக்கும் பாருங்கள். தொடரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் இப் பாடலுக்கு அழகூட்டும் அதிசயம்


அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அதிகாலை பஸ்சில் வரும் போது இந்த பாடல் பஸ்சில் ஒளிபரப்பானது… அதிகாலையில் அந்த குளிரில் பஸ்சின் சீரான ஓட்டத்தில் இந்த பாடல் கேட்டு பரவசமாகிப் போனேன்… எப்போது எங்கே இந்தப் பாடலைக் கேட்டாலும், என் மனதுக்குள் அந்த அதிகாலை சில்லென்ற நினைவுகளைப் பரப்பிவிட்டுப் போகும் அதிசயம்.

ஒரு அதிகாலையில் நீங்களும் கூட கேட்டுப் பாருங்கள்…


இதில், இரண்டாவது சரணத்திற்கு பின் ‘ப…ப…ப…பா…பா..ப…ப..
என்று ஜானகி பாடும்போது, ராஜாவின் இசையில் தெறிக்கும் துள்ளல்… மொத்த சந்தோஷத்தையும் அள்ளி வருவது போல ஒரு இசையை அந்த இடத்தில் தந்திருப்பார் நம் இளையராஜா

படம்: இளமை காலங்கள் (1984)

தயாரிப்பு: கோவைத்தம்பி

இயக்கம்: மணிவண்ணன்

நாயகன்: மோகன், நாயகி: சசிகலா

பாடல்: வைரமுத்து

இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்கள் தான்.

பாட வந்ததோர் கானம்..

ஈரமான ரோசாவே…

ராகவனே ரமணா ரகுநாதா…

படிப்புலே ஹீரோ …

இன்ப வேளையில் சுக ராகம்.... என்ற வரிகளை போலவே இந்த பாடல் ஒரு சுக ராகம் தான்

இந்த பாடலும் என் வழி தளத்தில் 2010 ல் வெளியானது

ஆர்.வி.சரவணன்

புதன், மார்ச் 28, 2012

ஒரு வி.ஐ.பி க்கு எனது ஆட்டோகிராப்


ஒரு வி.ஐ.பி க்கு எனது ஆட்டோகிராப்

நான் கல்லூரி படிக்கும் காலத்தில் ஒரு முன்னணி இயக்குனரின் (அவர் இயக்குனர் மட்டுமே ) ரசிகனாய் இருந்தேன். 

சில வருடங்களுக்கு முன் புத்தக கண்காட்சியில் ஒரு புத்தக ஸ்டாலில் அவரை சந்திக்க நேர்ந்தது. அவரிடம் அந்த புத்தக ஸ்டாலில் புத்தகம் வாங்கி தான், அவரிடம் ஆட்டோகிராப் பெற்று கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். உடனே ஒரு புத்தகம் வாங்கி அவரிடம் கையெழுத்துக்கு நீட்டினேன். அவரும் கையெழுத்திட்டு கொடுத்தார். அவர் கையெழுத்து இடும் போது நான், சார் நான் உங்க படங்களின் ரசிகன் உங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து உங்கள் பக்கத்தில் நிற்பதை ரொம்ப சந்தோசமா பெருமையா உணர்றேன் என்றேன். அதற்கு அவர் எந்த ஒரு ரியாக்சனும் செய்யவில்லை. ரு சின்ன ஸ்மைல் கூட வெளிபடுத்தவில்லை. இயந்திர தனமாய் தொடர்ந்து ஒவ்வொருவரிடமும் கையெழுத்து போடுவதிலேயே கவனமாக இருந்தார். என் மனது ரொம்பவும்  காயப்பட்டது.

அவ்வளவு பெரிய இயக்குனரின் எத்தனையோ ரசிகர்களில் நீயும் ஒருவன் எத்தனை பேரை தான் அவர் பார்த்து சிரிப்பார் இதை எல்லாம் எதிர் பார்ப்பது தவறு என்று தானே சொல்ல வருகிறீர்கள். நம் பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்த காசுகள் ஒரு ரூபாய் நாணயங்களாக இருக்கலாம் அதற்காக ஒரு நாணயத்தை யேனும் விட்டு விடுகிறோமா என்ன. அது போல் தான் ஒவ்வொரு ரசிகனும் அவருக்கு முக்கியமானவர். அவர் என்னுடன் பேச கூட வேண்டாம். ஒரு சின்ன பார்வையில் நான் சொன்னதை உள் வாங்கி கொண்டு சின்ன ஆச்சரியமேனும் முகத்தில் காட்டியிருக்கலாம். 
செய்யவில்லை  எனும்போது மனது ரொம்ப கஷ்டமாகி விட்டது .

அவரது படம் ஒன்றை கல்லூரி நாட்களில் பார்த்து விட்டு நீண்ட பாராட்டு கடிதம்  எழுதி அனுப்பி வைத்திருந்தேன் என்பது நினைவுக்கு வருகிறது.


பின் குறிப்பு

இப்போதெல்லாம் ஏதேனும் வி ஐ பி யை பார்க்கும் போது அருகில் செல்ல மனம் வருவதில்லை. காரணம் நாம்  ஏற்கனவே அவர் மேல் கொண்டிருக்கும் ஒரு நல்ல இமேஜ் இதனால் ஸ்பாயில் ஆகிடுமோ எனபதால் தவிர்க்கிறேன். அதற்காக எல்லோரும் அப்படி தான் என்று நான் சொல்லவில்லை எனக்கு கிடைத்த அனுபவத்தை தான் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஆர்.வி.சரவணன்

திங்கள், மார்ச் 26, 2012

வலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா


வலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா

கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமான்.இங்கு புகழ் பெற்ற பாடை கட்டி மகா மாரியம்மன் கோவில் உள்ளது மிகவும் புகழ் வாய்ந்த ஸ்தலம் இது வருடா வருடம் தமிழ் மாதம் பங்குனி இரண்டாவது ஞாயிறு அன்று பாடை காவடி திருவிழா இங்கு புகழ் வாய்ந்த ஒன்றாகும். நேற்று 25-03-2012 கோவிலில் பாடை கட்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது


இந்த கோயிலின் சிறப்பு என்னவெனில் உடல் நலம் சரியில்லாதவர்கள்அம்மனிடம் வேண்டி கொண்டு ,தாங்கள் வேண்டியது நிறைவேறியவுடன் பாடை காவடி எடுத்து ஈமக்ரியை செய்வது போல் உறவினர்கள் கொல்லி சட்டி ஏந்தி கொட்டு மேளம் கொட்டி வர ஆலயத்தை வலம் வந்து அம்மன் சன்னிதானம் முன் தாங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர்.

திருவிழாவில் மக்கள் வெள்ளம் போல் திரண்டு வந்திருந்தனர் இரவு முழுக்க சாலையோரம் முழுதும் இரு புறமும் கடை வீதிகள் பார்க்க கண் கொள்ளா காட்சியாக இருந்தது நான் எடுத்த சில படங்களை இங்கே தந்திருக்கிறேன்




கோவில் நுழைவாயில்

பக்தர்கள் வெள்ளம்


நேர்த்தி கடன்





அம்மன் திரு வீதி உலா




மாரியம்மனின் அருள் அனைவருக்கும் கிடைக்க உளமார வேண்டுகிறேன்

ஆர்.வி.சரவணன்

வியாழன், மார்ச் 22, 2012

ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..



ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..

மனம் கவர்ந்த பாடல்கள்

சை பற்றி எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது.

நல்ல இசை என்பது, கேட்பவரை மனம் லயிக்கச் செய்வதாக இருக்க வேண்டும். அவ்வளவுதான் தெரியும்!

ராகதேவன் நம் இசை சக்கரவர்த்தி இளையராஜா அவர்களின் இசை இனிமையில் நான் ரசிக்கும் மற்றுமொரு பாடல்


ஆனந்தக்கும்மி என்று ஒரு படம் அனேகமாக வருடம் 1983-ல் வெளியானது. அந்தப் படம் பலருக்கு இன்று நினைவில் இல்லாமல் இருக்கலாம்… ஆனால் பாடல்கள்… காலத்துக்கும் மறக்க முடியாதது!

இந்த படத்தில் வரும் ஓ வெண்ணிலாவே வா ஓடி வா …..
என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்தது.

இந்த பாடல் ‘ஆனந்த கும்மியடி கும்மியடி ….’ என்று பெண்கள் கோரஸ் குரலில் ஆரம்பிக்கும் அது முடிந்தவுடன், தன் இசை ராஜாங்கத்தை ஆரம்பித்திருப்பார் இளையராஜா.

அப்படியே ஒரு அமைதியான கிராமத்தில், நிலவின் ஒளியில் மின்னும் பின்னிரவுக்க, நம்மை இழுத்துச் செல்லும் அந்த இசை.

தொடர்ந்து வரும் பல்லவி,

ஓ வெண்ணிலாவே வா ஓடி வா…

அதற்குப் பின் பாடலின் இரண்டாவது சரணத்திற்கு முன்

ஜானகியின் குரலில் வரும் ‘லா லி லா லி லா லி….’ நம்மை சுகமாய் தாலாட்டும்.

இந்த பாடலை எனது 18 வயதில் கேட்டிருக்கிறேன்.
இந்த வயதிலும் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். மனதில் இளமையின் நினைவுகள்…

என் மனதை மயக்கும் பாடல்களில் ஒன்று..கேட்காதவர்கள் கேட்டுத்தான் பாருங்களேன்!

ஊமை நெஞ்சின் ஓசைகள்…, ஒரு கிளி உருகுது…, அண்ணன்மாரே தம்பிமாரே…, திண்டாடுதே ரெண்டு கிளியே (இளையராஜா) என மற்ற பாடல்களும் மகா இனிமையானவை.

இந்த ஆனந்தக்கும்மி படத்தின் தயாரிப்பு: இளையராஜா

பாடல் பாடியவர்கள் S.P. பாலசுப்ரமணியம்,S.ஜானகி

இந்த படத்தின் இயக்குனர்: பாலமுருகன்

இந்த படத்தின் நாயகன் பெயர் பாலச்சந்தர். நாயகி அஸ்வினி (பார்த்திபன் ஜோடியாக பொண்டாட்டி தேவை படத்தில் நடித்திருப்பார்).

பாடலை எழுதியவர்: வைரமுத்து

இந்த பதிவு எனது நண்பர் வினோ அவர்களின் என்வழி வலைத்தளத்தில் 2010 ம் வருடம் நினைவுகளை மீட்டும் இசை தலைப்பில் வெளியானது. உங்களுக்காக இங்கே தந்திருக்கிறேன்

ஆர்.வி.சரவணன்

வியாழன், மார்ச் 15, 2012

கொஞ்சலும் கெஞ்சலுமாய்....


கொஞ்சலும் கெஞ்சலுமாய்....

விழித்த பின்னும்
உறங்குவதாய்
பாசாங்கு
செய்கிறேன்
என்னவள்
கொஞ்சலும்
கெஞ்சலுமாய்
எனை
எழுப்பட்டுமே
என்
பொழுது
இப்படியும்
விடியட்டுமே
என்று

ஆர்.வி.சரவணன்