வெள்ளி, டிசம்பர் 06, 2013

புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-3







புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-3


கார் வந்து நாசிக்கில் நிற்கும் போது மணி இரண்டு. கோதாவரி ஆற்றின் நடுவே பாலம். 
அந்த பாலத்தின் கீழே தண்ணீர் தடுக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளி வருகிறது 
எல்லோரும் இறங்கி ஒவ்வொரு மண்டபமாக செல்ல வேண்டும் என்பதால் தான் நடுவில் 
அதை தடுத்தி நிறுத்தி கொஞ்சமாக தண்ணீர் வரும் படி அமைத்திருக்கிறார்கள்.மழை 
பொழிந்து வெள்ளம் போல் வந்த போது அந்த மண்டபங்கள் கூட முழ்கி இருந்ததாக ஸ்ரீனிவாசன் சொன்னார்.ஆற்றின் நடுவே ஏகப்பட்ட மண்டபங்கள் கோவில்கள் நடைபாதை என்று அந்த சூழலே பார்க்க ரம்யமாக இருந்தது சிறு குழந்தைகள் போல் நாங்கள் 
குதுகலமாக இறங்கினோம்.உடனே முதல் வேலையாக காமெராவை எடுத்து படம் பிடிக்க 
தொடங்கினேன்.எத்தனை படங்கள் எடுத்தாலும் அந்த சூழலை முழுமையாக கொண்டு வர முடியாதது போல் எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் ஒரு அழகு  இருந்தது.








முரளிக்கு குளிக்கும் ஆர்வம் வந்து ஆற்றில் இறங்க கூடவே வைத்யாவும் நானும் வருகிறேன் என்று இறங்கினார். எனக்கோ டென்சன் ஆனது. காரணம் ஆழம் எப்படி இருக்குமோ என்று அவர்களை ரொம்ப தூரம் போகாதீங்க என்று கத்த ஆரம்பித்தேன். தண்ணீர் இடுப்பளவு தான் என்று தெரிந்த பின் தான் நிம்மதி வந்தது. இந்த டென்சனில் எனக்கு குளிக்கும் மூட் போய் விட்டது.அந்த இடம் முழுக்க சுற்றி சுற்றி வந்தோம்.கூட்டம் நிறைய இருந்தது.நேர்த்தி கடன் செய்து கொண்டிருந்தார்கள்.(ராமர் ஜடாயுவுக்கு  இங்கு தான் நேர்த்தி கடன் செய்ததாக சொன்னார்கள்.  அந்த ஆற்றை சுற்றிலும் தெருக்கள் இருந்தது நிறைய கடைகளுடன்
 பரபரப்பாக இருந்தன தெருக்கள். எங்கு திரும்பினாலும் சுற்றுலா வந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கபட்டிருந்தன.ஒருமணி நேரத்திற்கும் மேல் சுற்றி விட்டு அங்கிருந்து வெளி வந்து ராமர் சீதை குடில் நோக்கி நடந்தோம்.  

நாங்கள் சென்ற சாலை செல்ல செல்ல மேடாக ஆரம்பித்தது செல்லும் வழியெங்கும் சின்ன சின்ன கோவில்கள் இருக்க கூடவே வீடுகளும் இருந்தன.ஈஸ்வரன் கோவில் ஒன்றும் இருந்தது  நாங்கள் சென்று நுழைந்த தெருவில் கூட்டம் அதிகமிருக்க அந்த குடிலை நெருங்கி விட்டோம் சீதா குகை என்ற போர்டுடன் பழைய காலத்து ஓட்டு வீடு எப்படி இருக்குமோ அது
போல் திண்ணை எல்லாம் இருந்தது.  





சீதை குகை 

போட்டோ எடுக்க கூடாது என்று சொல்லி விட்டதால் உள்ளே போட்டோ எடுக்க முடியவில்லை. அங்கே இருந்த போடோக்கள் விக்ரகங்கள் பார்த்து வணங்கிய படி செல்கையில் ஓரிடத்தில் எலி பொந்து என்று சொல்வோம் இல்லையா அதே போல் ஒரு மனிதர் நுழைய கூடிய அளவில் ஒரு பொந்து இருந்தது. ஒருவர் பின் ஒருவராக குனிந்து உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள். ஸ்ரீனிவாசன் வைத்யா இருவரும் சரவணா பார்த்து வா இடிச்சிக்க போறே என்று உஷார் படுதியவாறே சென்றார்கள். (ஏன் அப்படி சொன்னார்கள் என்று கேட்கிறீர்களா.நான் கொஞ்சம் எதிலுமே வேகமாக செயல்படுவேன் இடித்து கொள்ள போகிறேன் என்று தான்)  நானும் குனிந்து அந்த பொந்தில் மெதுவாக நுழைந்தேன்.கால்களை முன்னே விட்டு செல்ல ஆரம்பித்தோம். இருட்டை விரட்ட அந்த சுவரின் மேல் பொடி சைசில் சீரியல் லைட் பொறுத்த பட்டிருந்தது.உள்ளே கீழ் நோக்கி இறங்கியஅந்த பொந்து திடீரென்று ஒரு ரூமிற்குள் சென்று முடிந்தது.

 கற்களை குடைந்த ஒரு அறை போல இருந்தது. அங்கே ராமர் சீதை லக்ஷ்மணன் விக்ரகங்கள் இருந்தன. சாமி கும்பிட்டு விட்டு அகல மீண்டும் ஒரு வழி ஆரம்பித்தது.ஆனால் உடனே முடிந்து விட்டது. மற்றொரு சிறு அறை அங்கே ஒரு  ஒரு பெரிய கல் மட்டும் இருந்தது.
 ராமன் லக்ஷ்மணன் காட்டுக்கு வேட்டையாட செல்லும் போது சீதையை அங்கு தான் அமர வைத்து விட்டு செல்வார்களாம். அவர்கள் வரும் வரை அங்கே தான் இருப்பாராம்  நினைக்கவே கொஞ்சம் பிரமிப்பாக இருந்தது. அங்கிருந்த படி யோசித்தேன்.இப்போதெல்லாம்  வெளியில் சென்றவர்கள் வர தாமதமாகி விட்டால் போன் வந்து கொண்டே இருக்கும் எங்கே இருக்கீங்க எப்ப வருவீங்க என்று செல் போன் பேசி தெரிந்து கொள்வார்கள். ஆனால் அப்போது இதெல்லாம் இல்லையே. ராமர் எப்போது வருவரோ தெரியாது. அவர் வரும் வரை அவருக்காக அந்த பீடத்திலேயே அமர்ந்து காத்திருந்திருக்கிறார் என்பதை நினைத்த போது கொஞ்சம் கவலையாக கூட இருந்தது.அதாவது அவர் அப்போது அடைந்த வேதனையை நானும் அடைந்தேன். (இதெல்லாம் நம்ப வேண்டுமா என்று கூட சிலர் நினைக்கலாம். நான் கூட வெளியில் இந்த வீட்டை பார்த்து விட்டு சாதாரணமாக தான் நினைத்தேன் ஆனால் 
உள்ளே இருக்கும் இந்த குகை பார்க்கும் போது தான் இது நிஜம் தான் என்று தோன்றியது)
அங்கிருந்து ஒரு வழி இருந்தது அதில் நுழைந்து குனிந்த படியே வெளி வந்தால்  சிவன் லிங்கம் இருந்தது. அதை தான் சீதை ராமர் பூஜிப்பார்களாம்.நாங்களும்  வணங்கி விட்டு கிளம்பி மீண்டும் ஒரு பொந்தில் மேல் நோக்கி பயணித்தோம். வெளியே வந்த போது உள்ளே சென்ற போந்துக்கு அருகிலே வெளி வந்தோம். அந்த பிரமிப்பு ரொம்ப நேரத்துக்கு அகலவில்லை. எதிரில் ஒரு குடில் இருந்தது அதில் ஒரு ரூபாய் வாங்கி கொண்டு உள்ளே அனுமதித்தார்கள் அனேகமாக அது லக்ஷ்மணனின் குடிலாக இருக்க வேண்டும். உள்ளே ஓவியமாகவும் பொம்மைகளாகவும் ராமாயண காட்சிகள் இருந்தன. போட்டோ எடுத்து  கொண்டோம் 


வெளி வந்து சீதை குகையை ஒட்டி இருந்த மரத்தின் மேடையில் அமர்ந்து போட்டோ எடுத்து கொண்டோம். மக்கள் சென்று கொண்டும் வந்து கொண்டும்இருந்ததால்  
எத்தனை பேரை நிறுத்தி வைத்து விட்டு  போட்டோ எடுப்பது எனவே மக்கள் சென்று கொண்டிருக்கையிலேயே போட்டோ எடுத்தோம் 




அங்கிருந்து கிளம்பி காருக்கு வந்தோம் மதியம் ஒன்றும் சாப்பிடவில்லை. முரளி ஸ்ரீனிவாசனை மதிய சாப்பாடு கூட வாங்கி குடுக்கல என்ன டூர் அழைச்சிட்டு
போறீங்க என்று கிண்டலடித்தார். எங்களுக்கு சாப்பிடும் மூட் இல்லை. கையில் 
இருந்த பழங்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட்ட படி கார் ஏறி கிளம்பினோம் 


அடுத்து நாங்கள் கிளம்பியது. திரிகம்பெஸ்வரர் ஆலயத்திற்கு.அது நாசிக்கிலிருந்து முப்பது கிலோ மீட்டார் தொலைவில் இருந்தது நான் 
கூட அந்த கோவிலை சாதாரணமாக தான் நினைத்திருந்தேன். ஆனால் மலைகள் சூழ்ந்த பின்னணியில் இருந்த அந்த கோவிலையும் கோவிலின் வேலைபடுகளையும் பார்த்தவுடன் அதிசயித்தோம். அங்கிருந்து கிளம்ப மனமே வரவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள்.



இணையத்தில் எடுத்த படம் 

நாங்கள் சென்று இறங்கி ஐந்து மணிக்கு வரிசையில் நின்றோம்.  சாமி தரிசனம் செய்ய ஒரு மணி நேரமானது. அந்தளவு கூட்டம் முதலில் கோவில் கோபுரத்திற்கு முன் உள்ள சிறு கோபுரத்தில் நுழைந்தோம்.அங்கே நந்தி சிலை இருந்தது. அதை சுற்றி ஒரே பண மழை தான் பக்தர்கள் பணத்தை அதில் செலுத்தி கொண்டிருந்தார்கள்.அங்கிருந்து பெரிய கோபுரத்திற்கு வந்தோம்.சன்னதியில்  அக் வடிவத்தில் மூன்று லிங்கங்கள் இருக்கிறது.(சிவன் விஷ்ணு பிரம்மா) மூவரும் சேர்ந்த நிலை என்பதால் திரிகம்பெஸ்வரர் என்று பெயர். அதன் மேல் கோதாவரி ஆற்று நீர் ஊற்று போல் வெளிப்படுகிறது. அதை துடைத்து கொண்டே இருக்கிறார்கள்.அருகே நின்று பார்க்க முடியாமல் வரிசையை நகர சொல்லி  கொண்டே இருந்தார்கள்.தரிசனம் முடிந்து கோபுரம் சுற்றி வந்தோம். அந்த மாலை வேளையில் அந்த கோவில் கோபுரம் பார்க்க ரொம்ப நன்றாக இருந்தது.(அடுத்த முறை நாசிக் சென்றால் கண்டிப்பாக இந்த கோவில் செல்லாமல் வர மாட்டேன் அந்த அளவுக்கு இந்த கோவில் 
என்னை ஈர்த்து விட்டது)







 அங்கிருந்து கிளம்பி நாசிக் வந்து சேர்ந்தோம். ஹோட்டல் லில் டிபன் சாப்பிட்டு விட்டு
நாங்கள் கார் பயணத்தை முடித்து மும்பை கிளம்ப முடிவு செய்தோம் தொடர்ந்து காரிலே வந்ததால் மும்பைக்கு பஸ் என்ற போது கொஞ்சம் சலிப்பாக இருந்தது. தனியார் பேருந்தில் விசாரித்த போது மும்பையிலிருந்து அவர்களது கார் வந்து விட்டு மும்பை காலியாக செல்வதாகவும் அதில் செல்லுங்கள் 2500 ரூபாய் தான் என்றும் சொன்னார்கள். எங்களுடன் வந்த டிரைவர் 2000 கொடுங்க நானே கொண்டாந்து விட்டுடறேன் என்று சொல்ல சரி என்று சந்தோசமாய் காரிலேயே பயணத்தை தொடர்ந்தோம். 

நான் தூங்க ஆரம்பித்து விட்டேன். திடீரென்று கண் விழித்தேன் பார்த்தால் அந்த இருட்டில் 
கார் மும்பை பை பாசில் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. எல்லோருமே தூங்கி கொண்டிருந்தார்கள் டிரைவர் உட்பட 

அடுத்த பதிவுடன் நிறைவு செய்கிறேன் 

ஆர்.வி.சரவணன் 

புதன், டிசம்பர் 04, 2013

புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-2







புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-2
(சனிசிக்னாபூர்,ஷிர்டி )

சனி சிக்நாபூரில் நாங்கள் அதிகாலை 4 மணிக்கு,காரை விட்டு 
இறங்கி ரிலாக்ஸ் செய்து கொள்ள கூட நேரமின்றி உடனே குளிக்க கிளம்பினோம்.கோவில் அருகிலேயே இருந்த மிக பெரிய 
காம்பௌண்டில் தான் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.  நிறைய கடைகளும்  இருந்தன. அங்கிருந்த கடைகளில் எதிலும் கதவுகள் 
இல்லாமல் இருந்தது . அங்கே ஒரு பக்கத்தில் கட்டபட்டிருந்த பாத்ரூம்களில் கூட  கதவுகள் இல்லை.  இது ஆச்சரியத்தை கொடுத்தது.கேட்டதற்கு இந்த ஊரில் அப்படி தான். வீடுகளில் கூட கதவு கிடையாதாம். திருட்டு நடக்காது என்றும் மீறி திருடினாலும் எல்லை தாண்டுவதற்குள் சனி பகவானின் தண்டனை கிடைத்து விடும் எனவே திருட்டு பயம் இல்லை  என்பதால் கதவு கிடையாது என்றனர் இது பற்றி நான்  ஏற்கனவே கேள்விபட்டிருந்தாலும் நேரில் பார்க்கையில் ஆச்சரியம் இருக்க தான் செய்தது 

நாங்கள் குளித்து முடித்து கோவிலுக்கு கிளம்பினோம். கடையில் அர்ச்சனைக்கு என்று தட்டு வாங்கினோம். உள்ளே நிறைய பொருள்கள் இருந்தது. மேலும் 50 ரூபாயில் ஒரு தட்டும் 150 ரூபாயில் ஒரு தட்டும் இருந்தது. கேட்டதற்கு மூன்று முறை வந்து அர்ச்சனை செய்ய 50 ரூபாய் தட்டு என்றும் (பரிகாரம்) ஒரு முறை அர்ச்சனை தட்டு  150 ரூபாய் என்றும் சொன்னார்கள். நாங்கள் 150 ரூபாய் தட்டு வாங்கி கொண்டோம்
கடைக்கார பையன் என்ன சொன்னாரோ அதை அப்படியே  செய்தோம்.
சிதறு தேங்காய் உடைப்பதில் இருந்து சூடம் ஏற்றுவது வரை அத்தனையும் அவர் சொன்ன படியே செய்தோம்.  நாங்கள் கோவிலுக்குள் நுழைந்தது 5 மணி என்பதால் கூட்டமில்லை. உடனே சன்னதி சென்று விட்டோம் திறந்த வெளி இடத்தில ஒரு பெரிய கல் மிக பெரிய மேடை மேல் இருக்கிறது. அது  அலங்கரிக்கப்பட்டு  வைக்கபட்டிருந்தது. படிகள் வைத்திருந்தார்கள். எதிரே ஒரு மேடை அதில் அமர்ந்து கொண்டு சாமியை பார்க்கலாம். தியானம் செய்யலாம் 


இணையத்தில் எடுத்த படம் 

அந்த அதிகாலை வேளையில் அந்த தரிசனம் மனதிற்கு புத்துணர்வை 
தந்தது.பாலிமர் டிவியில் சனி பகவான் மகிமை என்ற புராண தொடர் வந்த போது அதில் இந்த இடத்தை காட்டுவார்கள்.(செட்டிங் தான் ) இந்த ஊரை பற்றியம் சொல்லியிருப்பார்கள்.  இந்த இடத்திற்கு எல்லாம் எப்போது 
போக போகிறோம் என்று அப்போது நினைத்தது இப்போது நிறைவேறியதில் 
ஒரு மன நிறைவு வந்தது.

கோவிலிலிருந்து வெளி வந்து டீ  சாப்பிட்டு விட்டு ஷீரடிக்கு.
கிளம்பினோம்.இருட்டு விலகும் முன்பே நாங்கள் அங்கிருந்து 
கிளம்பி விட்டோம்.

 அங்கிருந்து 80 கிலோ மீட்டரில் ஷிர்டி. அந்த புண்ணிய தலத்தை 
 நோக்கி பயணமானோம்.வருகின்ற இடங்களை ஊர் பெயர்களை பார்க்கலாம் என்று நினைத்தும் முடியாமல் தூக்கத்தை தொடர்ந்தோம். இங்கே ஒன்று சொல்லியாக வேண்டும். முதல் பதிவில் டிரைவர் தவிர எல்லோரும் தூங்கி விட்டோம் என்று குறிப்பிட்டிருந்தேன்.அதற்கு ஸ்ரீனிவாசன் நான் தூங்கலை ப்பா  டிரைவருக்கு துணையாக பேசி கொண்டு வந்தேன் நீ தூங்கிட்டேன்னு எழுதிட்டியே என்றார் சிரித்து கொண்டே. சரி சார் நீங்க தூங்கலை நம்பிட்டோம்.(இதோ எழுதி விட்டேன் )

நாங்கள் ஷீரடிஎன்ற  அந்த புண்ணிய பூமியில் வந்து இறங்கிய போது 
காலை 8 மணி.கேமரா அனுமதியில்லை என்பதால் காரிலேயே வைத்து விட்டு சென்றோம் கோவிலில் நுழைந்து வரிசையில் நின்றோம்.அன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் மற்ற நாட்களை விடவும் அதிக கூட்டம் இருந்தது.  ஒரு மணி நேரத்தில் சாய்பாபா தரிசனம்  கிடைத்தது. திருப்பதி போல் இங்கேயும் நிற்க விடவில்லை உடனே வெளியேற்றி கொண்டிருந்தார்கள்.(கூட்டத்தின் காரணமாக ) 



இணையத்தில் எடுத்த படம் 

மேலும் சாய்பாபா உண்டியலில் போடுவதற்காக சேர்த்திருந்த காசுகளை கொண்டு வந்திருந்தேன். ஆனால் பாருங்கள் காரிலேயே மறந்து விட்டு வந்து விட்டேன். மனது கஷ்டமானது.பின் வெளி வந்து பிரசாதங்கள் வாங்கி கொண்ட பின் நாங்கள் சாப்பிட சென்ற இடம் ஸ்ரீ சாய் மெட்ராஸ் ஹோட்டல். அவர் பெயர்  பிச்சு அய்யர். அவரது ஊர் பாலக்காடு.மூன்று தலைமுறையாக அங்கே ஹோட்டல் நடத்தப்பட்டு வருவதாக சொன்னார்கள்.அவர் ஸ்ரீநிவாசனுக்கு தெரிந்தவர். அவருடன் அறிமுகம் செய்து கொண்டு விட்டு சாப்பிட அமர்ந்தோம். ( இந்த ஹோட்டல் கோவில் வாசலுக்கு நேர் எதிரே உள்ள தெருவில் உள்ளது) பின் நான் காருக்கு  சென்று கேமரா கொண்டு வந்து படங்கள் எடுத்தேன்



ஹோட்டல் முகப்பு 




பிச்சு அய்யருடன் வைத்யா 

கோவிலின் முன் நின்று நண்பர்கள் போட்டோ எடுத்து கொண்டோம். 



கோவில் முகப்பில் முரளி வைத்யா 

நண்பர்கள் கடைகளுக்குள் செல்ல நான் படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். கோவிலுக்கு நேரே நின்று ஒரு  படம் எடுத்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அங்கு படம் எடுத்து கொண்டிருந்தவரை 
அணுக நான் யோசிக்கும் போதே அவர்  அதே எண்ணத்துடன் என்னிடம் கேட்டார். அவர் நண்பர்களை வைத்து அவர் கேமராவில்  படம் எடுத்து 
கொடுத்தேன். என்னை அவர் படம் எடுத்து கொடுத்தார்.  நான் எதிர்பார்த்த அளவு படம் சரியாக இல்லை என்பதால்  மீண்டும் எடுக்க சொன்னேன்.





கோவில் முன் நான் 

அங்கிருந்து கிளம்பி நாங்கள் சென்றது 80 கிலோ மீட்டர் தொலைவில்
 உள்ள நாசிக். கிளம்பிய போது ஒரு இடத்தில வெங்காயம்  விற்று கொண்டிருந்தார்கள்.ஆர்வமுடன் இறங்கி விலை விசாரித்தார்கள் நண்பர்கள் 12 கிலோ மூட்டை 750 ரூபாய் ஆனால் அதை வாங்காமல் பக்கத்தில் இருந்த கொய்யாபழம் வாங்கி கொண்டு வந்தார்கள். மலைகள் சூழ்ந்த இடம் என்பதால்வழியெங்கும்  மேடு பள்ளம் என்று  சாலைகள். 

ஏறி இறங்கின.அந்த பகல் வேளையில் இயற்கையின் அழகை 
ரசித்து கொண்டே நிற்க வேண்டும் போல் இருந்தது. நான் போட்டோ எடுக்கலாம்  என்று டிரைவரிடம்  வண்டியை  நிறுத்த சொன்னேன். வண்டி நிறுத்த தோதுவாக இடமில்லை.மேலும் பின்னால் தொடர்ந்து வாகனங்கள் வந்து கொண்டிருந்தன. எனவே வண்டியை நிறுத்த முடியவில்லை. ஆகவே வண்டி செல்லும் போதே காமெராவை கிளிக்கினேன். பல க்ளிக்குகளில் ஒரு க்ளிக் இங்கே 




காரிலிருந்த படி ஒரு க்ளிக் 

நாசிக் வந்து சேர்ந்த போது மணி இரண்டு ராமர் சீதை லக்ஷ்மணன் 
வனவாசம் செய்ய இங்கு  வந்து தான் வசித்தார்கள் என்றும் 
அவர்கள் வசித்த குடில்கள் அங்கு இருக்கின்றன என்பதை 
கேள்விப்பட்டவுடன் மிகுந்த ஆர்வமானேன்.



அதை அடுத்த பதிவில் பார்க்கலாம். (இந்த படம் நாசிக்கில் 
எடுத்தது தான்)

ஆர்.வி.சரவணன் 

வியாழன், நவம்பர் 28, 2013

புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-1







புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-1



நான் டூர் சென்று வந்த பின் இதை பற்றி எழுத கொஞ்சம் தயக்கம் இருந்தது. காரணம் 
குறைந்த நாட்களில் ( 4 நாட்களில் ) பல தலங்களுக்கு சென்று வந்ததால் நிதானிக்க நேரம் இருந்தாலும் சென்ற இடங்கள் பற்றி அதிகமாக  தகவல்கள் பெற முடியவில்லை. ஆகவே பயணம் பற்றிய பதிவை விட்டு விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். இணைய நண்பர்கள் நிசாமுதீன் மற்றும் துளசிதரன் எப்போது எழுத போறீங்க என்று ஆர்வமுடன் கேட்டு கொண்டிருக்க என் கூட டூர் வந்திருந்த நண்பர்களும் என்னப்பா இன்னும் எழுதலையா என்று கேட்டார்கள். (அவர்களுக்கு தங்கள் பயணம் எழுத்தில் எப்படி வருகிறது என்று பார்க்கும் ஆர்வம் இருக்கிறது) ஆகவே இதோ பயணம் பற்றிய தொடர் தொடங்குகிறது. ஒரே பதிவாக 
தந்தால் அதில் ஏதும் சுவாரசியம் இருக்காது என்பதால் நான்கு பதிவுகளாக தொடர்ந்து 
தரலாம் என  இருக்கிறேன். வாருங்கள் அதில் கொஞ்சம் பயணித்து வருவோம் 

நாங்கள் சென்ற ஸ்தலங்கள் 

பண்டரிபுரம்,
சனிசிக்னாபுர்,
ஷிர்டி,
நாசிக்,
கிருகம்பெஷ்வர் கோவில்,
மற்றும் மும்பை 

நான் மற்றும் எனது அலுவலக நண்பர்கள் வைத்யா ,முரளி , ஸ்ரீனிவாசன் சேர்த்து மொத்தம் நான்குபேர். இதில் நான் வைத்யா முரளி மூவருக்கும் இந்தி (நகி மாலும்) தெரியாது.இந்தி 
நன்கு பேச தெரிந்ததுடன் மட்டுமில்லாமல் வட இந்திய இடங்கள் பலவற்றை அறிந்தவர் ஸ்ரீனிவாசன் மட்டுமே. அவரே இந்த பயணத்துக்கு தலைமை ஏற்று வழி நடத்தி சென்றார்.



வைத்யா,முரளி, ஸ்ரீனிவாசன் 

நாங்கள் செப்டம்பர் 27 இரவு மும்பை மெயிலில் சென்ட்ரலில் இருந்து கிளம்பினோம். எங்களுக்கான சீட்களை ரயில்வே தனி தனியாக பிரித்துபோட்டிருந்தார்கள். அங்கிருந்தவர்களை மாற்றி விட்டு நாங்கள் அமர்ந்து கொண்டோம்.அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே பார்த்தால் அன் ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட் போல் ஆகி விட்டது பாத்ரூம் செல்லும் வழியெங்கும் பயணிகள் வெள்ளம்.கொஞ்ச நேரம் பேசி விட்டு படுத்து கொண்டு விட்டோம். மலைகள் என்றல் எனக்கு எப்போதுமே ரொம்ப பிடிக்கும். ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது மலைகள் வரிசையாய் வர நான் க்ளிக் செய்த மலைகளில் ஒன்று 
இடம் அனேகமாக அதொனி ஸ்டேசன் அருகில் என்று நினைக்கிறேன்  



 அதோனி அருகே 

காலையில் மந்திராலயம் ரோடு ஸ்டேசனில் கொஞ்ச நேரம் வண்டி நின்றது இறங்கி நடை பயில்வதும் போட்டோ எடுத்து கொள்வதுமாக நேரம் கடந்தது 




மந்த்ராலயம் ரோடு ஸ்டேசன் 

முரளி வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த இட்லி மற்றும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு தூங்கி வேடிக்கை பார்த்து வண்டியை  சோலாபூர் கொண்டு வந்து நாங்கள் சேர்ந்த போது(?) மணி ஆறரை.அலுவலகம் முடிந்து எப்படா கிளம்புவோம் என்றதொரு  மன நிலையில் அவசரமாக ஆனால் மிகுந்த ஆர்வத்துடன் வெளியில் வந்தோம்



ஏற்கனவே ஸ்ரீனிவாசன் உறவினர் ஏற்பாடு செய்து தயாராக இருந்த டாட்டா இண்டிகா காரில் ஏறி கிளம்பினோம். முதலில் நல்ல ஹோட்டலா பார்த்து அழைச்சிட்டு போங்க பசி எங்களை விரட்டுது என்று சொன்னோம் டிரைவருடன் வந்திருந்தவர் கார் ஓனர், சூப்பர் சாப்பாடு உங்களுக்கு கிடைக்க போகுது என்று அழைத்து போனார். 

நுழைந்த ஹோட்டலில் வட இந்திய உணவு வகைகளாக இருக்க நான் பயந்து போய் விழித்தேன்.(கண்ணா தமிழ் சாப்பாடு கொஞ்ச நாளைக்கு மறந்துடு என்றார் நண்பர் ) முதலில் வந்தது ரொட்டி போல் இருந்த ச்வீட் சப்பாத்தி அதை எல்லோரும் பகிர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க சப்பாத்தி சைடீஸ் சாதம் தயிர் என்று ஒவ்வொன்றாக  வர எல்லாமே சாப்பிட ருசியாக இருந்தது ஒரு வேளை பசி ருசி அறியல போலிருக்கு னு  நீங்க நினைச்சிருப்பீங்க ஆனால் இப்ப நினைச்சாலும் அந்த சாப்பாடு டேஸ்டா  தான் இருந்தது. மேலும் அந்த பயணத்தில் நாங்கள் சாப்பிட்ட இடங்களை விட இந்த சாப்பாடு தான் பெஸ்ட். (இதை நண்பர்கள் அனைவருமே சொன்னார்கள் ) வேர்கடலை மற்றும் மிளகாய் சேர்த்த பொடி என்று ஒன்று வைத்தார்கள். அதை சப்பாத்தியுடன் சேர்த்து கொண்டு ஒரு கை பார்த்தோம். ஒரு தட்டு முழுக்க தக்காளி வெள்ளரிக்காய் ஸ்லைஸ் கொண்டு வந்து வைத்தார்கள். சாப்பிட்டு முடித்த பின் மசாலா மோர் கொண்டு வந்து கொடுத்தார்கள் அது செரிமானத்திற்கு ஏற்றது என்று சொன்னதால் அதையும் ஒரு பிடி பிடித்தோம். கூடவே ஒரு தண்ணீர் பாட்டில் முழுக்க அதை கேட்டு வாங்கி கொண்டோம். (வழியில் சாப்பிட) 

எனக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு என்னை ஏதேனும் அசத்தி விட்டால் உடனே சம்பந்தப்பட்டவரை சென்று பாராட்டி விட வேண்டும். முதலாளியிடம் சென்று சாப்பாட்டின் நிறைவை பற்றி நான் தமிழில் சொல்ல நண்பர் இந்தியில் மொழி பெயர்த்தார்.  கூடவே 
என்னை எழுத்தாளர் என்று அவர்களிடம் கொஞ்சம் எடுத்து விட்டார். அவர்களிடம் இருந்து விசிடிங் கார்டு பெற்று கொண்டோம் (ஹோட்டல் பெயர் என்ன என்று கேட்கிறீர்களா இந்த தொடரின் முடிவில் தருகிறேன் முகவரியுடன்) 

 அங்கிருந்து கிளம்பி, சோலாபூர் பெட் சீட்டுக்கு சிறந்த இடம் என்றதால் எல்லோரும் சென்று ஒரு பெரிய கடையில் பர்சேஸ் செய்தார்கள். வாங்க வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்த வனை அங்கிருந்த வகை வகையான பெட் சீட்கள்  என்னையும் வாங்க வைத்து விட்டது. வண்டிக்கு சாப்பாடு கொடுத்து விட்டு (அதாங்க டீசல்)  நாங்கள்  கிளம்பியது எட்டு மணிக்கு  
மகராஷ்டிரா மாநிலத்தில் சோலாப்பூரிலிருந்து 80 கிலோ மீட்டரில் இருக்கும் பண்டரிபுரம் 
வந்து சேர்ந்த போது மணி பத்து. கோதாவரி ஆற்று பாலத்தை (DOWN
BRIDGE) கடந்து கோவில் வந்து சேர்ந்தோம்.இரவில் சென்றதால் அந்த இயற்கை 
எழிலை ரசிக்க முடியவில்லை போட்டோ கூட எடுக்க முடியவில்லை.





பதினொரு மணி வரை கோவில் திறந்திருக்கும் என்று சொல்லியிருந்தாலும் எங்கள் நடை வேகமானது. கோவிலின் உள்ளே நுழையும் போது செல் மற்றும் கேமரா கொண்டு போக கூடாது என்று சொல்லி விட்டார்கள்.ஆகவே போட்டோ எடுக்க முடியவில்லை.அந்த இரவு வேளையிலும் கூட்டம் இருந்தது. இருந்தும் நெரிசல் ஏதும் இல்லாமல் சென்று தரிசித்து 
விட்டு நிதானமாக அந்த கோவிலை சுற்றி வந்தோம்.(பாண்டுரங்கன் பகவானையே காக்க வைத்த சிறப்புடையவர். அவருக்கான கோவில் இது )




பண்டரிபுரம் கோவில் முகப்பு. இது நான் எடுத்ததல்ல 
இணையத்திலிருந்து  எடுத்தது 


காரில் ஏறும் முன் டீ சாப்பிடலாம் 
என்று மற்றவர்கள் செல்ல நானும் முரளியும்  பால் சாப்பிடலாம் என்று எதிரில் இருந்த கடைகளுக்கு சென்றோம். பத்து கடைகளுக்கும் மேல் அங்கே இருந்தது. அனைத்திலும் பெரிய எண்ணைசட்டி வைத்து பால் காய்ச்சி கொண்டிருந்தார்கள். கடை மூட போகும் நேரம் வேறு. எந்த கடையில் நன்றாக இருக்கும் என்று நாங்கள் யோசித்தவாறே செல்ல, டீ கடை காரரே நாலாவது கடைக்கு போங்க நல்லாருக்கும் என்று சொன்னதாக வைத்யா வந்து சொன்னார்.நிஜமாகவே நன்றக இருந்தது. பதினொரு மணிக்கு வண்டி ஏறியது தான் எனக்கு தெரியும். நானே வழியில் ரசிக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியாமல் நன்றாக தூங்கி விட்டோம் டிரைவரை தவிர. அதிகாலை கண் விழிக்கும் போது நான்கு மணி. சனிசிக்னாபூர் வந்து விட்டது. அந்த அதிகாலையில் ஒரு ஆச்சரியத்தை கண்டோம் 

அது அடுத்த பதிவில் 



ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, நவம்பர் 17, 2013

பல நேரங்களில் சில மனிதர்கள் -2







பல நேரங்களில் சில மனிதர்கள் -2


வாழ்க்கையில் நான் சந்தித்த மனிதர்களை பற்றி 
இங்கே கொஞ்சம் சிந்திக்கிறேன்.


கோ எஜுகேசன் பள்ளியில் ஆறாவது படித்து கொண்டிருந்த நேரம் அது.மாதம் ஒரு மாணவர் கிளாஸ் லீடர் ஆக நியமிக்க படுவார்.என் வகுப்பில் நானும் ஒரு மாதம் லீடரானேன். கிளாஸ் லீடர் ஆனவுடன் எல்லோரும் எனை பயத்துடன் பார்த்தது எனக்கு  ஆச்சரியமாக கூட இருந்தது. 


அப்போதெல்லாம் புது வருடம் வரும் போது மாணவ மாணவிகள் 
தங்களுக்கு கிடைக்கும் காலெண்டரை வகுப்புக்கு கொண்டு வருவார்கள். வகுப்பில் எங்கும் அதை மாட்டி வைப்போம். அவை அந்த வருடம் பள்ளி முடிந்து டீ பார்ட்டி நடக்கும் வரை இருக்கும் ( மாணவ மாணவிகள் பள்ளியின் கடைசி நாள் அன்று தங்கள் பாக்கெட் மணியில் வகுப்பு அசிரியர்களுக்கும், தலைமையாசிரியருக்கும் நன்றி கூறும்விழா அது.ஸ்வீட் காரம் காபி புது டிரஸ் என்று ஒரே தடபுடலாக இருக்கும். (அந்த நாளுக்காக அந்த ஆண்டு ஆரம்பிக்கும் போதே காத்திருக்க தொடங்கி விடுவோம் )

நான் லீடராக பங்கேற்ற மாதத்தில் தான்  மாணவர்கள் காலெண்டர் 
கொண்டு வந்து வகுப்பறையில் மாட்டி வைத்தார்கள். ஒரு மாணவன் கொண்டு வந்த காலெண்டர் எல்லோரையும் கவர்ந்தது. சுவரில் மாட்டலாம் என்று நாங்கள் முயற்சித்த போது வகுப்பாசிரியர் பார்த்து 
விட்டு, "இது நல்லாருக்கு நான் என் வீட்டுக்கு  கொண்டு போறேன்" 
என்று கூறி தன் மேஜை டிராயரில் வைத்து கொண்டு விட்டார். 
வகுப்பறையில் இருந்த மாணவ மாணவியர்கள் அனைவரும் உற்சாகம் வடிந்து போனவர்களாக ஆனோம். 

காலெண்டர் கொண்டு வந்தவன் "நான் இதை என் வீட்ல கூட மாட்டாமல் இங்க கொண்டு வந்தேன்.இப்படி வீட்டுக்கு எடுத்துட்டு போறேன்னு சொல்லிட்டாரே" என்றான் வருத்தமாய்.எனக்கும் இது விசயத்தில் கோபம் வந்தது மாணவ மாணவிகள் எவ்வளவு ஆர்வமுடன் இருந்தார்கள் என்பது அவருக்கும் தெரியும். இருந்தும் தன் வீட்டுக்கு என்று அவர் உரிமை கொண்டாடியது எனக்கு பிடிக்கவில்லை.இதை எப்படி  ஆசிரியரிடம் சொல்வது என்று நான் யோசிக்கையில் ஒரு மாணவன் சொன்னான் 

"டேய் உன் கிட்டே தான் இப்ப விஷயமே இருக்கு. நீ தான் எங்க லீடர் நீ 
பர்மிசன் கொடு.  நாங்க எடுத்து மாட்டிடறோம். ஆசிரியர் வந்தால் பசங்க எல்லாரும் ஆசைப்பட்டார்கள் அதான் மாட்ட சொல்லிட்டேன்னு சொல்லிடு. அவரும் மாட்டினதை எப்படி கழட்ட சொல்றது னு விட்டுடுவார்" என்று சொல்ல மற்றவர்களும் என்னை கெஞ்சவே நானும் ஓகே சொல்லி விட்டேன். 

ஆசிரியர்  பார்த்து விட்டு என்னை கேட்டார்.  நான் "பசங்க ஆசைபட்டாங்க அதான்" என்றேன். மாணவ மாணவிகளும்  தலையசைத்தார்கள். ஆசிரியர் அவர்களை அதற்காக திட்டவில்லை மாறாக "எப்படி என் டிராயரில் வைத்ததை நீ எடுத்து மாட்ட சொல்லலாம்"  என்று என்னை கோபமாய் கேட்டார். நான் திணறினேன்.  அடுத்து அவர் எடுத்த ஆக்சன் என்ன தெரியுமா. (என் பதவி முடிய பத்து நாட்களே 
இருந்த நிலையிலும்) என்னை உடனடியாக லீடர் பதவியிலிருந்து தூக்கி விட்டார். வேறொரு மாணவரை லீடராக்கினார். எல்லோரும் என்னை பரிதபமாய் பார்த்தார்கள்.

 அவர் சென்ற பிறகு எல்லோரும் என்னை சூழ்ந்து கொண்டு  "எங்க 
ஆசைக்கு உன்னை பலிகடா ஆக்கிட்டோம் சாரிடா" என்று ஆறுதல் சொன்னார்கள்."பரவாயில்லை விடுங்க. இதில் என் தப்பும் இருக்கிறது உங்களின் கோரிக்கையை அவர் கவனத்துக்கு கொண்டு சென்று அவரது 
அனுமதியுடன் தான் நான் அதை மாட்டியிருக்க வேண்டும் நானும் 
இப்படி செய்திருப்பது கூடாது.இந்த தண்டனை எனக்கு தேவை தான் 
இருந்தும் உங்கள் ஆசையை நிறைவேற்றிட்டேன் அது போதும் " என்றேன் 

FINAL PUNCH

இப்போது இந்த சம்பவத்தை நினைத்து பார்க்கையில், ஆசிரியர் என்பவர் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட கூடாது என்று கற்பிப்பவர் மாணவர்களின் விருப்பத்திற்கு மாறாக தன் வீட்டுக்கு அவர்கள் பொருளை எடுத்து செல்ல ஆசைப்பட்டது தப்பாயிற்றே. என்று தோன்றுகிறது. 

மேலும்லீடர் என்பவர் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் பாலமாய் 
இருப்பவர். ஆசிரியர் தேவைகளை மட்டும் நிறைவேற்றுபவர் எப்படி மாணவர்களின் தலைவனாய் இருக்க முடியும். அந்த வகையில் 
அப்போது லீடர் பதவியில் இருந்து தூக்கப்பட்டது எனக்கு தலை 
குனிவாகவே இருந்தாலும், இப்போது   (அவரது கை பாவையாக
இல்லாமல்இருந்ததை) பெருமையாகவே நினைக்கிறேன் 


ஆர்.வி.சரவணன்


வெள்ளி, நவம்பர் 15, 2013

பாண்டிய நாடு





பாண்டிய நாடு 


ஒரு படத்தை நல்லாருக்கும் என்று எதிர்பார்த்து செல்வதை விட எதிர்பாராமல் போய்  அது நன்றாக இருந்து விட்டால் கிடைக்கும் திருப்தியே தனி தான். படம் பற்றி  நல்ல ரிசல்ட் வரவே உடனே படையெடுத்தேன் பாண்டிய நாட்டுக்கு(தியேட்டருக்கு). படத்தை பற்றி ஒரு சில வரிகளில் சொல்லி விடலாம்.அது இப் பதிவின் முடிவில் பார்ப்போம்

ஒரு நகரை  ஆட்டி படைக்கும் தாதா, ஹீரோவின் அண்ணனை கொன்று 
விட ஹீரோவும் (அவர் அப்பாவும் ) சமயம் பார்த்து பழிக்கு  பழி வாங்கும் 
கதை தான். ஆனால் நமை ஈர்த்து சீட்டில் இழுத்து பிடித்து உட்கார வைத்திருப்பதில் தெரிகிறது இயக்குனரின் சாமர்த்தியம் .ஆரம்பம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் இயக்குனர் மசாலாத்தனமான 
காட்சிகள் எதிலும் சிக்காமல் எந்த காம்ப்ரமைஸும்  செய்து கொள்ளாமல் படத்தின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை நூல் பிடித்தார் போன்று படத்தை தந்திருக்கிறார்.

உதாரணத்திற்கு கட்டிங் போடலாமா என்று விஷால் கேட்டு சூரி சரி என்று சொல்ல அடுத்த காட்சி  சரக்கு அடிப்பதை தான் காட்ட போகிறார்கள் என்று நமக்கு தோன்றும் யோசனையை தூக்கி அடிக்கும் விதம்  இயக்குனர் தரும் காட்சி ஒரு சாம்பிள் .

வில்லனின் குரூப் இரண்டு அணியாக அடித்து கொண்டு நிற்க. இவர் தான் வில்லன்  என்று நம் நினைப்பை தகர்த்து வேறொருவர் வில்லனாவது 
மட்டுமல்லாமல் அவர் தலைமையேற்றவுடன் மாறும் அவரது கெட்டப் 
அட என்று ஆச்சரியப்படும் இடம்.

விஷால் இயக்குனரின் நடிகனாக இதில் களமிறங்கி இருக்கிறார் . திக்கி பேசுவது,  (இடைவேளைக்கு பின் அவ்வளவாக இல்லையே ) சண்டையை கண்டு பயந்து பின் வாங்குவது, தான் காதலிக்கும்  பெண்ணை சந்தோசமாய் சுற்றி வருவது,சண்டை கட்சிகளில் கூட வழக்கமான முக பாவங்கள் வாய்ஸ் தவிர்த்து  என்று இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார் அதிலும் கிளைமாக்ஸ் சில் வில்லனின் ஆட்கள் அவரை நெருங்கும் போது குரோதம் வெளிப்பட ஒரு பார்வை பார்ப்பார் பாருங்கள் வெரி குட் விசால் என்று சொல்ல வைக்கிறார் 

லட்சுமி மேனன் இதில்  டீச்சராக வருகிறார். விஷாலை தன் 
குறுகுறுவென்ற பார்வையால் அளவிடுகிறார்.  அவரது அம்மா 
விஷாலை அண்ணன் என்று சொல்ல விஷால் மிரள அதை குறும்பு பார்வையால் ரசிக்கும் இடம் அவரை போலவே அழகு 

சூரி அனாவசிய வசனங்கள் ஏதுமில்லாது அவசிய வசனங்களால் நம்மை புன்னகைக்க வைத்திருக்கிறார் 

வில்லன்  ஷரத் லோஹிதஸ்வா படம் பார்க்கும் போது எதிரில் வந்தால் 
அவர் சட்டையை பிடித்து விடலாமா எனும் அளவுக்கு அவர் பாத்திரமும் 
அவர் நடிப்பும் இருக்கிறது. என்னா  ஒரு வில்லத்தனம்





பாரதி ராஜா இதில் விஷாலின் அப்பாவாக நடுத்தர வர்க்கத்தின்  குடும்ப தலைவராக கதா பாத்திரம். அதை அவரது அந்த ட்ரேட் மார்க் குரலாலும் தன் இயல்பான நடிப்பாலும் சிறப்பாக்கியிருக்கிறார். உனக்கு குழந்தை பிறக்க போறதை நினைச்சு சந்தோசபடறதா இல்லே அடி வாங்கிட்டு வந்திருக்கிற உன்னை நினைச்சு வருத்தப்படறதா என்ற அங்கலாய்ப்பிலும் பிரேத பரிசோதனை வேண்டும் என்று  மருத்துவமனையில் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சியிலும்,விஷால் கையை பிடித்து கொண்டு நெகிழ்ந்து , நான்  இப்ப சந்தோசமா இருக்கேன் என்று வார்த்தைகளாலும் நடிப்பாலும் அதை வெளிபடுத்துவதிலும் சபாஷ் சொல்ல வைக்கிறார் 

விக்ராந்த் விஷாலின் நண்பனாக வருகிறார் ஒரு பைட் ஒரு பாட்டு  கூட அவருக்கு உண்டு என்ற அளவில் அவருக்கு கிடைத்திருப்பது நல்ல ரோல் 

 
இமான் இசையில் டையரெ , ஒத்தகடை மச்சான், பை பை பாடல்களை 
ரசிக்க முடிகிறது. அந்த டப்பாங்குத்து பாடல் கதையின் சீரான போக்கிற்கு 
நடுவே  திணிக்கப்பட்ட ஒன்று .( பாடலும் டான்சும் தாளம் போட 
வைக்கிறது) பாடல் முடிந்ததும் கதையை எங்கே விட்டோம் என்று 
நம்மை யோசிக்க வைத்து விடுகிறது  

பொண்ணை பிக்கப் பண்றதுக்கு முன்னாடியே ட்ராப்  பண்ற பாக்கியம் யாருக்கு கிடைக்கும் என்பது போன்ற வசனங்கள் பல இடங்களில் 

இயல்பாக பொருந்துகிறது.

 நெருக்கமான வீடுகளுக்கு இடையே சந்தில் புகுந்து புறப்பட்டிருக்கும் கேமரா,கிளைமாக்ஸ் காட்சி மற்றும் அந்த பஸ் ஸ்டான்ட் சண்டை காட்சியில் மதி மயக்குகிறது ஒளிப்பதிவு. 

வில்லன் குரூப் பிடம் சூரி வந்து செல் போனை சுண்டல் கொடுப்பது 
போல் கொடுத்து செல்லும் இடம் கண்டிப்பாக லாஜிக் இடிக்க வைக்கும் 
ஒன்று வில்லன் குரூப் அதை நம்பி பயன்படுத்துவது கமிசனர் மற்றும் அமைச்சரையே கையில் வைத்திருப்பவர்கள் விஷால் குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல் இருப்பது என்னை நீங்களும் பின் தொடர்ந்து வராதீங்க என்று சொல்லும் லட்சமி மேனன் செல் போன் கடையில் வந்து இழைவது 
( அந்த காட்சியை விஷால் வீட்டில் நடப்பதாக வைத்திருக்கலாம்) 
என்றெல்லாம் குற்றம் கண்டுபிடிக்க நம்மை யோசிக்க  விடாமல் 
இயல்பான திரைக்கதை மற்றும், கதாபாத்திரங்கள்,வசனங்கள் என்று நேர்த்தியாக சொன்னதன் மூலம் இயக்குனர் சுசீந்திரன் 
உருவாக்கியிருக்கும் இது 

செழிப்பான பாண்டிய நாடு

FINAL PUNCH

வில்லனின் அடியாள் பரணி, விஷாலை காலால் மிதித்து துவம்சம் 
செய்யும் போது விஷால் பக்கத்தில் கிடக்கும் பாட்டிலை கேமரா காட்டும்.
 எப்படியும் அதை எடுத்து தான் விஷால் அடிக்க போகிறார் என்று நமக்கு தெரிந்து விடுகிறது. இருந்தும் அதற்கு முன்பே நாமே எடுத்து அடித்து விடலாமா என்ற பரபரப்பை படம் பார்க்கும் நமக்குள் ஏற்படுத்திய விதத்தில் இந்த படம் வெற்றி பெறுகிறது

ஆர்.வி.சரவணன் 

சனி, நவம்பர் 02, 2013

கனவு மெய்ப்பட வேண்டும்







கனவு மெய்ப்பட வேண்டும்

எனது கல்லூரி காலங்களில் கதை கவிதைகள் நிறைய எழுதுவேன். படிப்பை விட சினிமா கதை புத்தகங்கள் தான் வெகு இஷ்டம். படிப்பில் கவனம் வெகு குறைவு ஏனெனில் நாம தான் சினிமாவில் சேர்ந்து டைரக்டர் ஆகபோறோமே அப்புறம் எதுக்கு படிப்புன்னு தான். அந்த
அளவுக்கு ஓவர் கான்பிடன்ஸ் இருந்துச்சு. (இப்ப நினைச்சா ஆச்சரியமா இருக்கு )

அந்த காலகட்டத்தில் எனது நண்பர்கள்  தெருவில் வருடா வருடம் நாடகம் போடுவார்கள்.அந்த வருடம் என்னிடம் வந்து "நீ நாடகத்தை திருத்தி எழுதி தா" என்று சொல்லி ஒரு ஸ்க்ரிப்டை கொடுத்தார்கள். நானும் உற்சாகமாய் வாங்கி படித்தேன். 13 காட்சிகளில் நாடகம் கொஞ்சம் சாதரணமாக தான் இருந்தது . நான் "என்னப்பா இப்படிஎழுதியிருக்கீங்க" என்றேன் அவர்கள் "அதுக்கு தான் உன்கிட்டே கொடுத்திருக்கோம்"என்றனர். நான்  வேறு ஒரு கதை எழுதி தருகிறேன் என்றேன் "நாடகம் பெயர் போட்டு போஸ்டர் எல்லாம் ஒட்டியாச்சு மாற்ற முடியாது "என்றனர்.

சரி என்று அவர்கள் விளம்பரம் செய்த பெரிய வீடு என்ற அந்த தலைப்பிலேயே நாடகத்தை நான் உருவாக்கினேன். எந்த நேரத்தில் தெரியுமா. விடிகாலை நான்கு மணிக்கு. படிப்பதற்காக எழுந்த நேரத்தில், 40 காட்சிகளில் நாடகத்தை மூன்று நாட்களில் எழுதி முடித்து கொடுத்தேன். 

"ஏற்கெனவே போஸ்டரில் கதை வசனம் என்று வேறு ஒருவனின் பெயர் போட்டாயிற்று. அதனால் இயக்கம் என்ற இடத்தில் உன் பெயரை போடுகிறோம் அட்ஜஸ்ட் பண்ணிக்க" என்றனர். சரி என்று சொல்லி விட்டேன். போஸ்டர்களில் என் பெயர் பார்த்து எனக்கு தலை கால் புரியவில்லை. ஒத்திகை ஆரம்பமானது. கதைப்படி கிராமம் தான் கதை நிகழுமிடம் ஹீரோ வேட்டி சட்டையில் தான் வர வேண்டும் என்றேன் ஹீரோ முடியாது பேன்ட் ஷர்ட் தான் போட்டு கொண்டு வருவேன் என்று அடம் பிடித்தான். இப்படி சொல்லி கொண்டே போகலாம் அப்போது நடந்த கலாட்டாக்களை.




ஒரு வழியாக நாடகம் அரங்கேறியது. கதாநாயகி , அவரது தோழி யாக நண்பர்களே 
பெண் வேடமிட்டு நடித்தனர். நானும் ஒரு காட்சியில் கதாநாயகியை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையாக வந்தேன் (நடிக்கும் ஆசை யாரை விட்டுச்சு ) மேலே உள்ள படம் தான் நான் வரும் காட்சி. நாடகத்திற்கு கை தட்டல் நிறைய கிடைத்தது .ஒரு ஜனரஞ்சகமான சிம்பிள் நாடகம் தான் இருந்தும் ஆடியன்ஸ் காட்டிய ரெஸ்பான்ஸ் பார்த்து எனக்கே 
ஆச்சரியம்  

நாடகம் முடிந்தவுடன், எல்லோருக்கும் விழா குழுவினர் நன்றி சொன்னார்கள் என் பெயரை சொல்லாமல் விட்டார்கள். அவர்களாகவே, "சாரி லிஸ்டில் பெயர் இல்லாததால் சொல்ல மறந்துட்டோம்" என்றார்கள். நான் கொஞ்சம் அப்செட் ஆகினாலும் அதை வெளியில் காட்டாமல், மேடையை விட்டு இறங்கினேன். அப்போது அந்த நாடகத்திற்கு இசையமைத்த இசை அமைப்பாளர் என்னை பார்த்தவுடன் (அவர் நாடகங்கள் பலவற்றுக்கு இசையமைத்தவர்) என்னிடம் வந்து  "சாதாரணமாக ஒரு நாடகம் 20 25 காட்சி அமைப்புகளோடு தான் இருக்கும். ஆனால் நீங்கள் புது ஆள் 40 காட்சிகளில் கதையை சீன் பை சீன் ஆக சுவாரசியம் குறையாமல் எழுதியுள்ளீர்கள் நாடகம் நல்லா இருந்துச்சு.உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது"என்றார். இந்த ஒரு பாராட்டு போதுமே என்ற சந்தோசத்தோடு வீடு வந்தேன்.

வீட்டில் ஏக ரகளை. படிப்பை விட்டுட்டு நாடகம் எப்படி போடலாம் என்று சண்டையிட்டார்கள். நான் எதிர்த்து பேச போக , வீட்டை விட்டு வெளியில் போ, நீ உருப்படாமல் தான் போக போறே என்ற வார்த்தைகளால் என் மனசு ரொம்பவே கஷ்டமாகிபோனது.(இப்போது நினைத்து பார்க்கும் போது அவர்கள் சொல்வதில் இருந்த நியாயம் புரிகிறது) 

வீட்டில் நான்  சினிமா டிராமா என்று அலைந்து உருப்படாமல் தான் போக போறேன் என்று தீர்மானத்திற்கு வந்து விடவே, நான் அந்த பாதையிலிருந்து விலகி அவர்கள் ஆசைப்பட்டது போல் வேலையில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி வந்து விட்டேன். என் குடும்பத்தில் அனைவருக்கும் இதில் சந்தோஷம்.

ஆனால் எனக்கு என் திறமைகளை கண்டு வெளி உலகம் பாராட்டி உற்சாகப்படுத்தியது போல் வீட்டில் யாரும் என்னை அப்படி ஊக்கப்படுத்தவில்லையே என்ற ஆதங்கம்  இன்று வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது

FINAL PUNCH 

இந்த பதிவு நான் கல்லூரி காலங்களில்.... என்ற தலைப்பில்,
இணையம் வந்த புதிதில் எழுதியது. இயக்குனர் ஆக வேண்டும் என்ற என் கனவு  
நிறைவேறாத ஒன்றாகி விட்டதே என்ற ஏக்கத்துடன் 2010 ம் வருடம் எழுதிய பதிவு 
இது.ஆனால் இப்ப எடுத்து படிக்கிறப்ப கனவு நிஜமாகி விட கூடிய வாய்ப்பு இருப்பது 
போல் ஒரு நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது.இதற்கு இணைய மேடையும், 
நண்பர்களின் ஊக்கமும் கூட ஒரு காரணம். அனைவருக்கும் நன்றி.

தித்திக்கும் இந்த தீபாவளி நன்னாள் உங்கள் இல்லங்களிலும் உள்ளங்களிலும் என்றென்றும் சந்தோஷம் நிறைந்திருக்க 
செய்யட்டும் 

படம் : எங்கள் வீட்டு வாசலில் வரைந்த கோலம் எனது கிளிக்கில்  


ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, அக்டோபர் 27, 2013

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கழுகு (ஒரு) பார்வை





சூப்பர் ஸ்டார் ரஜினியின் கழுகு (ஒரு) பார்வை 


டிவியில் ஒரு நாள் இரவு கழுகு படம் ( எந்த விளம்பரமுமின்றி ). இந்த படம் இது வரை பார்த்ததில்லை. பார்க்காம இருந்த படங்களை டைம் கிடைக்கும் போது பார்ப்பதுண்டு.அதனால் படம் பார்க்க அமர்ந்து விட்டேன். பார்த்தவுடன் எழுதிடணும் னு தோணுச்சு எழுதிட்டேன். ஆனால் பாருங்க பழைய படத்தை பத்தி இப்ப பதிவு தேவையா என்று எழுதியதை அப்படியே ஓரமா வச்சிட்டேன். இப்ப எடுத்து பார்க்கிறப்ப நல்லாருக்கிற மாதிரி தோணுச்சு உங்களுக்கு எப்படி தோணுது சொல்லுங்களேன் 

 நரபலி கொடுக்கும் சாமியார் ஒருவரை அவரது கும்பலை சூப்பர் ஸ்டார் ரஜினி பொறி வைத்து  பிடித்து போலீசில் ஒப்படைக்கிறார்  என்பதே கதை. தலைவர் ரஜினி இதில் ஜாலி, காதல் ,ஹீரோயிசம், என்று அனைத்திலும் பின்னி எடுக்கிறார் என்பதை சொல்வது சூரியனுக்கு டார்ச் லைட் அடிக்கிற மாதிரி தான் (இத எங்கியோ படிச்சேன்) 

ரஜினிக்கு ஜோடி ரதி. இருவரின் ஆரம்பகட்ட காதல் மோதல் காட்சிகள் நல்ல கலகலப்பு.வி.கே.ராமசாமியிடம்  ரஜினி  முதல் நாள் ஒரு லவ் லெட்டர் கொடுத்து அவரது
பெண்ணிடம் கொடுக்க சொல்வதும் , மறுநாள் வேறொரு பெண்ணுக்கு அது என்று திரும்ப வாங்கி கொள்வதும் கலாட்டா.




இந்த படத்தில் கவனிக்க வேண்டிய ஒரு டயலாக் என்ன தெரியுமா 
போனில் ராமசாமி" உன் பேர் என்ன" என்று கேட்கும் போது ரஜினி  "கமல்ஹாசன்" என்று சொல்ல பக்கத்தில் இருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் "என்ன அவர் பேர் சொல்றே" என்று சீரியசாக  "கமல் என் பிரெண்ட் தான் நான் சொல்லிக்கிறேன் விடு" என்று ரஜினி கூலாக  சொல்ல, "இவர் பெரிய ரஜினிகாந்த்" என்று ஒய்.ஜி.மகேந்திரன் பதில் கொடுப்பார் 

மூட நம்பிக்கை யுடன்  சாமியார் தான் தெய்வம் என்று  இருக்கும் தேங்காய் சீனிவாசன் ரஜினிக்கு அண்ணனாக வருகிறார். வனிதா சுட்டி பெண்ணாய் வந்து ரஜினி ரதிக்கு உதவி செய்கிறார். அவர் நரபலி கொடுக்கப்பட்ட மறுநாள் போலிஸ் வந்து விசாரிக்கும் போது அப்படி ஒரு பெண்ணே ஊரில் கிடையாது எனும் போது கதையில் திகில் ஆரம்பிக்கிறது 

சங்கிலி முருகன் தான் சாமியார். நரபலி கொடுக்கும் காட்சியில் முகமூடி அணிந்து 
வரும் அவர் கண்கள் கொஞ்சம் திகிலை கிள்ளப்புகிறது. வனிதா நரபலி
கொடுக்கப்படும்காட்சி திடுக்கிட வைத்தாலும் அப்போது  சங்கிலி முருகன் மேல் நமக்கு வரும் பயத்தை கடைசி வரை இன்னும் அதிகபடுத்தி தக்க வைத்திருக்கலாம் 

சங்கிலி முருகனுக்கு உதவியாளராக சுருளிராஜன் வருவது சீரியஸ் குறைக்க உதவும் ரிலாக்ஸ் என்றாலும்,  டெரர் சங்கிலி முருகனுக்கு ஏற்றவாறு வில்லத்தனம் கொண்ட இன்னொரு கேரக்டரையும்  போட்டிருக்கலாம்.  ஏனெனில் சாமியார் அநியாயங்களை கண்டுபிடித்து எழுத வந்திருக்கும் பத்திரிகையாளர் சோ வை அவர்  மிரட்டி பணிய வைப்பது காமெடிக்கு ஓகே ஆனால் த்ரில்லர் கதையின் டெம்போ வை கொஞ்சம் குறைய வைக்கிறது. ரதியையும்  குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு விட்டு வந்து ரஜினி வில்லனை தேடுவது போலில்லாமல் ரதியும், ரஜினியின் அண்ணன் மகளும்  சங்கிலி முருகனிடம் சிக்கி கொண்டு விட அவர்கள் இருக்கிறார்களா பலியாகி விட்டார்களா என்று தெரியாமல் ரஜினி ஆக்ரோசமாய்  தேடுவது போல் அமைத்திருந்தால் இன்னும் நகம் கடிக்கும் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் 

நரபலியை பார்த்ததினால் ரஜினி அன் கோவை அவர்கள் துரத்த அவர்கள் பஸ்சுடன்  தப்பிக்கும் விதம் ரசிக்க வைக்கிறது. படத்தின் கடைசியில் பஸ்ஸை அவர்கள் தீப்பந்தத்துடன் துரத்த ரஜினி அவர்களுக்குள் பஸ் சை செலுத்தி மீண்டு வரும் காட்சி நன்றாக இருக்கிறது.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் ஒரு பூவனத்திலே,பொன்னோவியம்,
 தேன் என்றாலும் தேனில் ஊறிய பலா போன்றது காதல் என்னும் கோயில் பாடல். ஒரு அருமையான  காதல் மேலோடி என்றே சொல்லலாம்  இந்த பாடல் ஏற்கனவே நான் கேட்டிருந்தாலும் இந்த படத்தோடு பார்க்கையில் எனக்கு இப்போது இந்த பாடல் favourite   
சாங் ஆகி விட்டது அடிக்கடி ஹம்மிங் செய்து கொண்டிருக்கிறேன்.

இந்த படத்தில் வரும் பஸ் வடிவமைப்பு ரொம்ப நன்றாக இருக்கிறது உள்ளேயே பாத்ரூம் கிச்சன் படுக்கை  அறை  பைக்  வைக்க  இடம்  என்று சூப்பர்  ஆக  இருக்கிறது இது  இப்போது
அதிசயமல்ல  தான் ஆனால்  1981 ஆம் வருடம் அது புதுமை தானே. எது எப்படி இருப்பினும் தலைவர் ரஜினி படமாதலால் அவரது ஆடல் பாடல் ஸ்டைல் மற்றும் சண்டைகளுடன் 
நம்மை ஈர்த்து விடுகிறது 


FINAL PUNCH 

மூட நம்பிக்கையை  தகர்க்கும்  வண்ணம்  ஒரு படம்  அப்போது மட்டுமல்ல இப்போதும் கூட தேவை தான் என்பதை இந்த படம் உணர்த்தினாலும்  இது அந்த காலத்திலேயே வந்திருப்பது தான் மிகுந்த ஆச்சரியமான ஒன்று .


ஆர்.வி.சரவணன் 

வியாழன், அக்டோபர் 24, 2013

முக நூல் கிறுக்கல்கள்






உழைப்பும்  உனை கண்டு  மரியாதை செய்யும்  


முக நூல் கிறுக்கல்கள் 


இன்று ஷேர் ஆட்டோவில் டிரைவர் சீட்டில் அவருடன் அருகில் அமர்ந்து செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு ஜலதோஷம் என்பதால் தும்மல் வர மூன்று முறை தும்மி விட்டேன். டிரைவருக்கு இதனால் ஏதும் தொந்தரவாக இருக்க போகிறது என்று சாரி கேட்க நினைத்தேன். ஆனால் பாருங்கள் 
அவர் வாயிலிருந்து வெளிப்பட்ட புகையிலை வாசம் என் முகத்தில் வந்தறைந்ததோடு மட்டுமில்லாமல் சாரி கேட்கும் என் எண்ணத்தையும் விரட்டியடித்து விட்டது 

******

மும்பையில் நானும் நண்பரும் ஆட்டோவில் சென்ற போது ஆட்டோகாரர் இந்தியில் நாங்கள் செல்லும் இடம் பற்றி கேட்டார். எங்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை அவர் மேலும் மேலும் கேட்கவே, நான் "இந்தி நகி மாலும்" என்றேன். ஆட்டோ காரர் என்னை திரும்பி பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பில் இந்தி தெரியாது என்பதை மட்டும் ஹிந்தி ல கத்துகிட்ட நீ, ஏன் இந்தியை கத்துக்க முயற்சி செய்யலை என்று அர்த்தம் இருப்பதாக தோன்றியது எனக்கு 


******

இன்னிக்கு காலையில ரோட்டில் நான் நடந்து வரும் போது எதற்கோ திரும்பியதால் எதிரில் வந்த பைக் என் மீது மோதுவது போல் வந்து நின்றது. நான் திரும்பி பார்த்தவாறு வந்தது தவறு என்பதால் சாரி பாஸ் என்றேன். அவரும் ஓகே என்று சிரித்த படியே சென்று விட்டார். யோசிச்சா தான் புரியுது. ஹாரன் கொடுக்காமல் வந்தது அவர் தப்பு .அதனால் அவர் தான் 
சாரி கேட்கணும் என்பது. இதுல பைனல் டச் என்னன்னா பைக்கின் முன் 
வீல் என் கால் நகத்தில் ஏறியதால் நகம் பாதி பிய்ந்து வலிக்க ஆரம்பிச்சுடுச்சு. (திரும்பி பார்த்தது குத்தமாய்யா)


******

நெடுஞ்சாலையில் இரவில் மழை நேரத்தில் பேருந்து டயர் பஞ்சர் ஆகி நின்று விட, வேகமாய் பறந்து செல்லும் வாகனங்களின் ஓட்டுனர்களில் எவரேனும் ஒருவர் நின்று விசாரித்து சென்றாராயின்,(முகம் காட்டா விட்டாலும்) மனித நேயத்தை காட்டி விட்டு செல்லும் நீயும் என் தோழனே

******

இரவு வீட்டுக்கு சென்று நான் டிவி யை ஆன் செய்த நேரம்,முக்கிய 
தமிழ் சானல்கள் அனைத்திலும் விளம்பரம் தான் ஓடிகொண்டிருந்தது.
விளம்பரத்தை நம்மால் ஆப் செய்ய முடியாது என்பதால்  டிவி யை ஆப் செய்து விட்டேன்

******

பொங்கலுக்காக ஊருக்கு கிளம்பி வருகையில் வழியனுப்ப வந்த நண்பர் டிரைவர் க்கு பின் சீட் உட்காராதீங்க தூக்கம் வருவதற்கு பதில் டிரைவர் டென்சன் நமக்கு வரும் என்றார்.இருந்தும் நான் ஏறிய பேருந்தில் டிரைவர்க்கு பின் சீட் தான் கிடைத்தது. டிரைவர் ஒரு முறை குளிருகிறது என்று மெதுவாக பேருந்தை ஓட்டிகொண்டே ஸ்வெட்டர் எடுத்து அணிந்து கொண்டார். நான் பயத்தை அணிந்து கொண்டேன்.

******

ஒருவருக்கு நாம் போன் செய்யும் போது அவர் அட்டென்ட் செய்யவில்லை என்றால் அவர் பிஸியாக இருக்கிறார் என்று அர்த்தம்.ஆனால் நம் பேர் பார்த்து கூட அவர் நம்மை அழைக்கவில்லை என்றால் நம்மை தவிர்க்கிறார் என்று தானே அர்த்தம்

******

சகிப்பு தன்மை என்பது....

ஹோட்டலில் அடுத்து சாப்பிட போகும் நபரை 
பக்கத்திலேயே நிற்க வைத்து கொண்டு 
அவசரமாய் அள்ளி உண்பது



******

நான் ஒவ்வொரு வாரமும் வெள்ளி இரவு கும்பகோணம் செல்ல ரயில் 
ஏறும் போது, ஊருக்கு செல்லும் ஆர்வத்தில் சந்தோசமாய் "சீக்கிரம் வா" என்று ரயிலை நான் வேகமாய் இழுத்து செல்கிறேன். 

ஞாயிறு இரவு ஊரிலிருந்து கிளம்பும் போது ரயில், என்னை கட்டி இழுக்காத குறையாய் இழுத்து வருகிறது. "வேலைக்கு போகணும் வா" என்று





FINAL PUNCH

உன் பயம் உள்ளே உறங்கட்டும் 
உன் தைரியம் வெளியே நடமாடட்டும்



ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, அக்டோபர் 13, 2013

நான் ஆசிரியராகிறேன்



நான் ஆசிரியராகிறேன்

 இவனுக்கு ஸ்கூல் ல வாத்தியாரா வேலை கிடைச்சிடுச்சு போலருக்கு 
 அப்படின்னு  தானே உங்க மனசுல நினைச்சிருப்பீங்க. அதெல்லாம் 
இல்லீங்க. நான் ஒரு பத்திரிகைக்கு ஒரு வாரத்திற்கு மட்டும் ஆசிரியரா பொறுப்பேற்கிறேன்.  எந்த பத்திரிகை னு உங்க முகத்துல இப்ப
கேள்வி குறி தென்படுது. இதோ பதில் சொல்லிடறேன் 

வலைச்சரம் என்ற ஆன் லைன் மேகசின்ல தான் இந்த பொறுப்பு எனக்கு கிடைச்சிருக்கு.வாரம் ஒரு வலைப் பதிவர் ஆசிரியராக பொறுப்பேற்று 
சிறப்பு சேர்க்கும் இத் தளத்தில், இந்த வாரம் (14-10-2013 to 20-10-2013) 
என்னை ஆசிரியராய் அமர்த்திய திரு. சீனா அய்யா அவர்களுக்கு 
என் இதயம் நிறைந்த நன்றி. மற்றும் நண்பர் தமிழ் வாசி பிரகாஷ் அவர்களுக்கும் என் நன்றி 

இந்த ஆசிரியர் பொறுப்பு எனக்கு கண்டிப்பாக பெருமை சேர்க்க கூடிய 
ஒன்றாகும்.அதே போல் இந்த பதவிக்கு நான் என்ன பெருமை
சேர்க்கிறேன்னுதெரிஞ்சிக்க நீங்க ஆசைபடுவீங்க. உங்களை 
போலவே நானும் தெரிஞ்சிக்க ஆசைபடறேன். (எப்படி பெருமை 
சேர்க்க போறோம்னு ஒரு நகம் கடிக்கும் டென்சன் தொடர்ந்திட்டே இருக்கு) வாங்களேன் ஒரு  விசிட் இத் தளத்திற்கு  வலைச்சரம்


FINAL PUNCH

எழுத்தாளர் திரு.சுஜாதா வின் எழுத்துக்களுக்கு ரசிகன் நான். 
அவரது எழுத்துக்களும் தந்த ஊக்கத்தினால்,எழுத முயற்சித்து 
கொண்டிருக்கிறேன் ஒரு மாணவனாய்

ஆர்.வி.சரவணன்