சனி, பிப்ரவரி 13, 2016

மகாமகம் - 2016




மகாமகம் - 2016

நான் பிறந்து வளர்ந்த ஊரான கும்பகோணத்தின் (குடந்தை) மீது கொண்ட அன்பில் தான் எனது வலை தளத்திற்கு குடந்தையூர் என்றே பெயரிட்டேன் என்பது நண்பர்கள் நீங்கள் யாவரும் அறிந்ததே. கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற மகாமக திருவிழா, இந்த பிப்ரவரி 22 ஆம் நாள் திங்கள் கிழமை அன்று நடைபெறுகிறது. அந்த நாளை எதிர்நோக்கி வரும் பக்தர்களை வரவேற்க உற்சாகமாய் காத்திருக்கிறோம் ஊர் மக்களான நாங்கள்.

குடந்தையில் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மகாமக திருவிழா பற்றிய ஒரு சிறப்பு பகிர்வு தான் இது. 1989 ஆம் வருடம் 
எனது கல்லூரியில் எனக்கு கொடுத்திருந்த ப்ராஜெக்ட் வொர்க் குடந்தை திருவிழாக்கள் பற்றிய ஆய்வு. அதற்காக நான் கோவிலகளுக்கு சென்றும் குடந்தை நூல்களிலிருந்தும் நான் சேகரித்த தகவலகளை கொண்டு தயாரித்த அந்த புத்தகத்திலிருந்து இந்த பகிர்வை இங்கே தந்திருக்கிறேன்.





முதலில் கும்பகோணம் தோன்றிய விதத்தை பற்றி பார்ப்போம்.

படைப்பு கடவுளான பிரம்மா, உலகமெல்லாம் அழியக் கூடிய பிரளய காலம் வருவதை உணர்ந்து அந்த வெள்ள பெருக்கில் தமது படைப்பு தொழிலுக்கு இன்றியமையாததான பீஜம் (மூல வித்துக்கள்) அழிந்து விட்டால் தமது படைப்பு தொழிலை எவ்வாறு செய்வது என்று கவலை கொண்டு சிவபெருமானிடம் சென்று வணங்கி தன் கவலையை தெரிவித்தார். சிவபெருமானும் அதை காப்பாற்றும் முறையை  
அவருக்கு உரைத்தார். 

பிரம்மா, சிவபெருமான் சொல்லிய படி மண்ணையும் அமுதத்தையும் கலந்து பிசைந்து ஒரு குடம் அமைத்து அதனுள் அமுதத்தை நிரப்பி அதன் நடுவில் பீஜத்தைச் சேர வைத்து அதன் நாற்புறத்திலும் ஆகமம், அங்கம், புராணம், இதிகாசம் முதலியவற்றை வைத்து அக்குடத்தின் வாயிலே தேங்காய், தேமாவிலைகளை வைத்து, பிரமதேவன் மேரு மலையில் வில்வ தளிர்களால் பூஜித்து வந்தார் . ஊழி பெருவெள்ளம் பெருகி வந்து உலகமே மூழ்கியது. அக் கும்பம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மிதந்து வந்து வாயு திசையிலே சென்று தங்கியது. வானவர்கள் பூமாரி பொழிந்தனர்.



பாணபுரீஸ்வரர் திருக்கோவில் 

சிவ பெருமான் கும்பத்தை காண வேட ரூபத்தில் வந்தார். தனது வில்லில் இருந்து அம்பெடுத்து எய்து கும்பத்தை உடைத்தார். சிதைந்த கும்பத்திலிருந்து அமுதம் பூமியில் பரவி இரண்டு இடங்களில் தேங்கியது. அந்த இடங்கள்.ஒன்று மகாமக குளம் மற்றொன்று பொற்றாமரை குளம். சிவன் அமுதம் ஊறிய மண்ணை குவித்து ஒரு அழகிய சிவலிங்கமாக்கி தானே பூஜித்து அதனுள்ளே புகுந்து சிவலிங்க திருமேனியாக காட்சியளித்தார். ஆதியில் கும்பத்திலே தோன்றியதால் ஆதி கும்பேசர் என்ற பெயர் வழங்கப்படலானார். பார்வதி சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடத்துக்கு வந்து சந்நிதியை அடைந்து தரிசித்தார். அவருக்கு இடப் பக்கத்தில் இருந்த படி, தொழுபவர்களுக்கு தொடர்ந்து அருள் புரிந்தார்.


கும்பேஸ்வரர் திருக்கோவில் 


ஸ்ரீ கும்பேசர் அருளிய சிருஷ்டி பீஜத்தை கொண்டு பிரம்மா அழகு பொருந்திய நகரத்தையும் அருமை வாய்ந்த கோவிலையும் விசுவ தர்மனின் துணை கொண்டு அமைத்தார். இந்த நகரமே கும்பகோணம். இந்த ஊர் பெயர் வர காரணம். குடம் என்றால் கும்பம். மூக்கு என்றால் கோணம். ஆகவே கும்பகோணம் என்ற பெயர் வழங்கப்படலாயிற்று.




மகாமக திருவிழா உருவான வரலாறு 

பூமருவுங் கங்கை முதல் புனிதமாம் பெருந் தீர்த்தம் மாகந்தான் அடுதற்கு வந்து வழிபடுங்கோயில் எனச் சேக்கிழார் பெருமான் திருஞானசம்பந்தர் புராணத்துள் சிறப்பிக்கின்ற அளவு புகழ் பெற்ற மகாமகத்தை பற்றி விளக்கமாக இங்கே பார்ப்போம்.

மாமாங்கம் பெயர் விளக்கம். மாமாகம் என்பதே மாமாங்கம் என்று ஆகி இருக்கிறது. அகம் என்றால் பாவம். மா என்றால் அணுகாது. எனவே மாமாகம் என்பதற்கு அகம்பாவம் அணுகாதது என்றே பொருள் ஆகும்.

சிவபெருமான் சிதைத்த கும்பத்திலிருந்து சிதறிய அமுதம்,
கும்பேஸ்வரர் கோவிலின் கீழ்புறத்தில் ஒரு தீர்த்தமாகவும் அக்கினி திக்கில் (தென்கிழக்கு) ஒரு தீர்த்தமாகவும் அமைந்தது. தென்கிழக்கில் அமைந்த அந்த தீர்த்தம் தான் மகாமக குளம்.


ஒரு சமயம் கங்கை யமுனை, நருமதை, சரஸ்வதி, கோதாவரி, பொன்னி, கிருஷ்ணா, சரயு, துங்கபத்ரா ஆகிய பெயர் பெற்ற நதிகள் வடிவமான கன்னியர்கள் ஒன்பது பேரும் உலக மக்கள் தங்களிடத்தில் நீராடி கழுவி செல்கின்ற பாவங்களை தாங்க முடியாத காரணத்தினால் அவைகளினின்று தாங்கள் நீங்கிட இறைவன் அருள் புரிய வேண்டும் என்று பரமசிவனை சென்று துதித்து வேண்டினர். சிவ பெருமான் அவர்களது குறைகளை கேட்டு கவலை வேண்டாம் என்று பின் வருமாறு செய்ய பணித்தார்.

“ கன்னியர்களே. தென் திசையில் உள்ள கும்பகோணத்தில் மகாமக தீர்த்தம் உள்ளது. தேவகுருவாகிய பிரகஸ்பதி என்றழைக்கபடும் வியாழ பகவான் சிம்ம ராசியில் பொருந்தும் போது அவரோடு மாசி மாதத்தில் பௌர்ணமியும், மக நட்சத்திரமும் சேருகின்ற நிலையில் கும்பராசியில் சூரியன் இவர்களையும் இவர்கள் சூரியனையும் பார்க்கும் நல்ல நாள் மகாமக புண்ணிய நாளாகும். குரு பகவான் கும்ப ராசிக்கு 12 
ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருவதால் மகாமக புண்ணிய காலமும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருகிறது. அந்த நாளே மகாமக நாளாக கருதபடுகிறது. அந்த நாளில் நீங்கள் சென்று அங்கு நீராடி வழிபடுங்கள்.பாவங்கள் உங்களை விட்டு அகலும்." 

நவ கன்னியர்களும் அவ்வாறே மகாமக தீர்த்தம் வந்து மூழ்கி பாவங்களை போக்கி கொண்டனர். சிவன் அமுத வாவியின் வட கரைக்கு சென்று மேற்கு முகமாக இலிங்க வடிவில் அவர்களுக்கு காட்சி தந்து அருள் புரிந்தார்.

ஒன்பது கன்னியரும் அவ் வாவியை பார்த்தவாறே காசி விஸ்வநாதர் கோவிலில் வீற்றிருந்து இன்றும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர்.


மகாமக குளம் அமைப்பு

இந்த தீர்த்தம் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கிழக்கு மேற்கு நீள் சதுரத்தில் வடகரையும் தென்கரையும் சிறிது உள் வளைந்து கிழக்கில் குறுகி மேற்கில் அகன்று வானத்திலிருந்து பார்த்தால் ஒரு குடம் போலவே காட்சி தருகிறது  குளத்தை சுற்றிலும் அழகான படிக்கட்டுகளுடன் 16 மண்டபங்கள் உள்ளன. அந்த மண்டபத்தில் உள்ள கோவில்கள் எல்லாவற்றிலும் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மகான் கோவிந்த தீட்சிதரால் கட்டப்பட்டது. அந்த பதினாறு கோவில் சிவலிங்கங்களின் பெயர்கள் வருமாறு 



பிரமதீர்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தாளேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரனேஸ்வரர், கோனேஸ்வரர், பக்திறேஸ்வரர், பைரவேஸ்வரர், அகத்தீஸ்வரர், வியாசேஷ்வரர், உமைபகேஸ்வரர், நைருதீஸ்வரர், பீர்மேஸ்வரர், கண்கதறேஸ்வரர், முக்ததீர்ததேஸ்வரர்,ஷேதிரபலேஸ்வரர்,

மகாமகத்தில் உள்ள தீர்த்தங்கள் 20. 

இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம்,வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், கங்கை தீர்த்தம், யமுனை தீர்த்தம், கோதாவரி தீர்த்தம், நர்மதை தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், காவிரி தீர்த்தம், குமரி தீர்த்தம், பயோஷ்ணி தீர்த்தம், சரயு தீர்த்தம், அறுபத்தாறு கோடி தீர்த்தம், தேவ தீர்த்தம். 


பிப்ரவரி 13 இன்று கொடியேற்றத்துடனும் பக்தர்களின் புனித நீராடலுடனும் துவங்கியது மகாமக திருவிழா. வரும் பிப்ரவரி 22 ஆம் நாள் திங்கள் கிழமை 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. அன்று கும்பகோணத்தில் உள்ள சைவ வைணவ ஆலயங்களிலிருந்தும் உற்சவ மூர்த்திகள் மகாமக குளத்தில் தீர்த்தம் கொடுக்க எழுந்தருள்வார்கள். பிரதான மூர்த்தியாகிய அருள் மிகு கும்பேஸ்வரர் அருள் மிகு மங்கள நாயகியுடன் மகாமக குளம் வடகரையில் பீர்ம தீர்த்த கட்டத்தில் எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பார்.

துணி மணிகள் கலையாமலே இறைவனை துதித்த படி மகாமக 
குளத்தில் மூழ்கி எழ வேண்டும். குளத்தில் உள்ள தீர்தங்களில் சென்று நீராடி, பின் பொற்றாமரை குளம் சென்று சுவாமியை துதித்து முறையாக மூழ்கி எழுந்து காவிரி கரை சென்று மூழ்கி எழ வேண்டும். சிவன் மற்றும் பெருமாள் கோவில்களின் தீர்த்தங்களை பெற்று வழி பட வேண்டும்.    


மகாமகத்தன்று இப் புனித நேரத்தில் இத் தீர்த்தத்தை ஒரு முறை நமஸ்கரித்தால் தேவர்கள் அனைவரையும் நமஸ்கரித்த புண்ணியம் கிடைக்கும். மகாமக குளத்தில் நீராடுவோரின் பாவங்கள் நீங்கி சகல சம்பத்துகளும் பெறுவார்கள்.

 1980 ஆம் வருட மகாமகம் 


இத் தளத்தின் சிறப்பை பற்றி சொல்வதென்றால் எங்கெங்கோ செய்யும் பாவங்களை ஏதேனும் புண்ணிய தலத்தில் சென்று போக்கி கொள்ளலாம். புண்ணிய தலங்களில் செய்யும் பாவங்களை காசியிலே போக்கி கொள்ளலாம். காசியில் செய்யும் பாவங்களை கும்பகோணத்திற்கு வந்து போக்கி கொள்ளலாம். கும்பகோணத்தில் செய்யப்படும் பாவங்களுக்கு விமோசனம் இந்த தலத்திலேயே கிடைத்து விடும். அத்தகைய புண்ணியம் பெற்றது இந்த கும்பகோணம் திருத்தலம்.பிரளயத்தின் பின் உலக உயிர்கள் அனைத்தும் தோன்றிய ஸ்தலம் இது என்பது இதன் தனி சிறப்பு.


மகாமகம் - 2016 க்காக பக்தர்களை வரவேற்று 
நாங்கள் உருவாக்கிய 1.27 நிமிட வீடியோ உங்கள் பார்வைக்கு 

https://www.youtube.com/watch?v=VDWkQEIyTkA

புண்ணியத்தலமான கும்பகோணம் வாருங்கள் 
மகாமக தீர்த்தத்தில் நீராடி சிவனருள் பெறுங்கள்.

ஓம் நமச்சிவாய.

 ஆர்.வி.சரவணன் 

5 கருத்துகள்:

  1. கும்பகோணத்தில் பிறந்தவன் என்ற நிலையில் எனக்கும் கும்பகோணத்தின்மீது சற்றே அதிகமான ஈடுபாடு. மகாமகம் பற்றிய பதிவு அருமை. நேற்று கொடியேற்றம் காணகும்பகோணம் சென்றிருந்தேன். என் பதிவினைக் காணஅழைக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. அருமை. Internet illatha time ல இப்படி பட்ட ஒரு project செய்யரது amazing

    பதிலளிநீக்கு
  3. விரிவான செய்திகள்...
    சிறப்பான பகிர்வு அண்ணா...
    அருமை.
    கும்பகோணத்தில் வந்து சாமி தரிசனம் செய்யும் ஆசை வந்தாச்சு.

    பதிலளிநீக்கு
  4. வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்