சனி, அக்டோபர் 10, 2015

நான் என்ன சொல்றேன்னா....





நான் என்ன சொல்றேன்னா....

முகநூலில் எழுதியவற்றை  தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். 

பொன்னியின் செல்வன் படித்த போது நான் இருவருக்கு ரசிகனானேன். ஒருவர் அதை எழுதிய திரு. கல்கி அவர்கள். மற்றவர் ராஜராஜசோழன்.மாமன்னனின் கலை பொக்கிஷமான தஞ்சை பெரிய கோவிலை எப்போது கடந்தாலும் நின்று பிரமிப்புடன் பார்த்து விட்டே நகர்வேன். இன்றும் அதே பிரமிப்புடன் பார்த்த படி அந்த கலைப்படைப்பை ஆர்வமுடன் க்ளிக்கியது இந்த படம்.

---------------------

ஒரு ஹிட் பாடலை கேட்கும் போது அதை விசுவலாக பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுவதுண்டு. இருபது வருடங்களுக்கு பிறகு எனக்கு பிடித்த ஒரு ஹிட் பாடலின் விசுவலை (இந்தப் படம் இது வரை பார்த்ததில்லை) சமீபத்தில் டிவியில் கண்டேன்.டூயட் பாடலுக்கு நிகரான விசுவல் இல்லையென்றாலும் பிடித்த பாடல் என்பதால் ரசிக்க முடிந்தது. கூடவே கல்லூரி காலங்களையும் நினைத்து பார்க்க வைத்தது.
மோகன் ரூபினி நடித்து ஜேசுதாஸ்,சித்ரா குரல்களில் இளையராஜா இசையில் உருவான அந்த பாடல்
எங்கெங்கு நீ சென்ற போதும் என் நெஞ்சமே உன்னை தேடும்....

படத்தின் பெயர்
நினைக்க தெரிந்த மனமே
படம் வெளியான ஆண்டு 1987
கல்லூரி காலம் நினைவுக்கு வந்துடுச்சுனு நான் சொன்னது,அந்த கால கட்டத்தில் வந்த படம் என்பதால்.

----------------

ரயிலை விட்டு இறங்கி, பிளாட்பாரத்தில் ஸ்கூல் யூனிபார்மில் சென்று கொண்டிருந்த தன் குழந்தைகளிடம் "ரெண்டு பக்கமும் ரோடை பார்த்துட்டு கிராஸ் பண்ணுங்க என்ன " என்று ஒரு பெண் குரல் கொடுத்து கொண்டிருந்தார். நான் குரல் வந்த திக்கை நோக்கி திரும்பினேன். அந்த தாய் நின்று தன் குழந்தைகளை கவலையுடன் பார்த்து கொண்டிருந்த இடம் ரயிலின் புட் போர்டு அருகே. நீ முதல்ல உள்ளே போம்மா என்று அந்த குழந்தைகளுக்கு பாவம் சொல்ல தெரியவில்லை. ஆனால்குழந்தைகள் சார்பில் சொல்லி விடலாமா என்று தோன்றியது. 

-------


மதிய வெயிலில்  புழுங்கி கிடந்த பூமியை சமாதானம் செய்யும் பொருட்டு வானத்தில் கலைந்து நின்ற மேகங்கள் கொஞ்சமே கொஞ்சம் தூறலை அனுப்பி வைத்திருக்க, "மழை என்றால் இப்படி தான் இருக்கும்னு ஷோ காட்டறியா நீ" என்று பூமி சலித்து கொண்டதில் ரோஷம் கொண்ட மேகங்கள் ஒன்றாய் சேர்ந்து பெருமழையாய் பின்னியெடுத்து கொண்டிருக்கிறது.அது சரி. பூமியின் மைண்ட் வாய்ஸ் இப்போது என்னவாக இருக்கும்.
"அந்த ரோஷம் இருக்கட்டும்"

-----------------

காக்கா முட்டை திரைப்படத்தின் இடைவேளையின் போது ஸ்நாக்ஸ் வாங்கி கொண்டே 
"முரண்பாட்டுக்கு ஒரு உதாரணம் டக்குனு சொல்லு"
என்றான் நண்பன்.
"ஷாப்பிங் மாலின் குளிரூட்டபட்ட திரையரங்கில் பாப்கார்ன் வாங்கி கொறித்த படி பீட்ஸாவுக்கு ஏங்கும் சிறுவர்களின் ஏழ்மையை பார்த்து ரசித்து கொண்டிருக்கிறோமே. 
this is முரண்பாடு" என்றேன் நான்.

---------------

ஊருக்கு கூரியரில் புதன் கிழமை அனுப்பியிருந்த பார்சல் வெள்ளி வரை கிடைக்காததால் கொஞ்சம் கடுப்புடனே வெள்ளி காலையில் கூரியர் ஆபீஸ் சென்று விசாரித்தேன். அந்த மானேஜர் ஹெட் ஆபீஸ் போன் செய்து விசாரித்து விட்டு "இன்று தான் டெலிவரி க்கு எடுத்துட்டு போயிருக்காங்க கிடைச்சிடும் என்ற படி என் கடுப்பை பற்றி அலட்டி கொள்ளாமலே தன் வேலைகளை தொடர்ந்தார். ஆனால் அன்றும் கிடைக்கவில்லை. மறுநாள் சனிகிழமை காலை எழுந்தவுடனே இன்னிக்கு முதல் வேலையா கூரியர் ஆபீஸ் போய் சண்டை போடணும் என்ற கோபத்துடனே கிளம்பினேன். ஆனால் கூரியர் வந்து சேர்ந்து விட்டதாக அம்மா போனில் சொன்னவுடன் அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்ட என்னிடம், மனசாட்சி ஒரு கேள்வி கேட்டது. கிடைக்கலைனவுடனே சண்டை போட கிளம்பினியே. இப்ப தான் கிடைச்சிடுச்சே இதை போய் சொல்ல மாட்டியா நீ என்றது . கிடைச்ச பின்னாடி எதுக்கு போகணும் என்று பதில் கேள்வி கேட்டவன் பின் அதிலுள்ள நியாயத்தை உணர்ந்த படி சரி இன்னிக்கு அந்த வழியா போகும் போது சொல்லிடுவோம் என்ற முடிவுக்கு வந்தேன்.
ஆனால் நான் கூரியர் ஆபீஸ் செல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் என் எதிரே அந்த மானேஜர் வந்து கொண்டிருந்தார். நான் திருப்தியுடன் சார் பார்ஸல் கிடைச்சிடுச்சு என்றேன். அவர் "அப்படியா ஓகே" என்று போகிற போக்கில் தலையாட்டிய படி என் திருப்திக்கு அலட்டி கொள்ளாமல் டெலிவரி தருவதற்காக சென்று கொண்டிருந்தார்.
அந்த பார்சலில் நான் அனுப்பியிருந்தது என்ன தெரியுமா? திருப்பதி லட்டு.

------------------

"சார். ஒரு ரூபாய் சில்லறை இல்ல பட்டர் பிஸ்கட் எடுத்துக்குங்க" டீ கடைக்காரர்
"காலங்கார்த்தாலே எப்படிங்க பிஸ்கட் சாப்பிட முடியும்" நான்.
"அப்ப அடுத்த முறை டீ சாப்பிட வரப்ப வாங்கிக்குங்க"
"எனக்கு ஞாபகம் இருக்கும். உங்களுக்கு இருக்காதே"
"அதுக்கு தான் சொன்னேன்.பட்டர் பிஸ்கட் எடுத்துக்குங்கனு"
 மீ ஙே

-------
மின்சாரம் இல்லாத இரவில் அமைதியின் குதூகலம் கொஞ்சம் எல்லை மீறியிருக்க, அவ் அமைதிக்கு இடையூறு ஏதும் விளைவிக்காமல் காதலின் தீபம் ஒன்று..... என எங்கிருந்தோ இளையராஜாவின் இசை தவழ்ந்து வந்து கொண்டிருக்கிறது.
என்று எழுதி முடிக்கையில் மின்சாரம் வந்து விட்டது.
இதையே மெட்ராஷ் பாஷைல சொல்ல முயற்சிக்கிறேன்.
"கரண்டே இல்லாம ஊரே சைலண்டா இருந்துச்சுப்பா. அத்த கலைக்காம நம்ம இசை ராசா பாட்டு இன்னாமா தாலாட்டுச்சு தெரிமா. காதலின் தீபம் ஒன்று.....னு நானும் குஷாலா சேர்ந்து பாட சொல்ல,
அட ச்சே கரண்டு வந்துடுச்சுப்பா."

-------
"என்ன சார் முன்னாடிலாம் கையில ஏதுனா புத்தகம் வச்சு படிச்சிட்டே இருப்பீங்க. இப்ப செல் போனும் கையுமாவே இருக்கீங்க"
ரயிலில் என்னுடன் பயணிக்கும் ஒருவர் கேட்டார்
நான் புன்னகையை மட்டுமே பதிலாக்கினேன்.
அவர்விடாமல்
"செல்போன்லயே படிச்சிடறீங்க போல" என்றார்
"காலம் மாறுதுல்ல" என்றேன் பெருமையாய் 
"காலம் அது பாட்டுக்கு மாறிட்டு போகுது. நீங்க மாறிடாதீங்க"
மீ ஙே.

--------

யாரையும், எந்த ஒன்றையும் குறைத்து மதிப்பிட்டு விடாதே.
வேண்டாம் என்று விட்டெறியும் விதை கூட இங்கே விருட்சமாகலாம்.
யார் கண்டது விட்டெறிந்த நாமே அதன் நிழலில் இளைப்பாறும் நாளும் வரலாம்.
இதற்கு சின்ன உதாரணம் சொல்லணும்னா, எப்போதோ எழுதி கசக்கி எறியாமல் வைத்த வார்த்தைகள் தான் இதோ இப்ப ஒரு ஸ்டேட்டஸ் போட உதவி பண்ணிருக்கு. எனவே.........
மீண்டும் முதல் வரியை படிச்சிடுங்க.





எனது அகம் புறம் குறும்படத்தின் படத்தொகுப்பு பணிகள் டப்பிங் முடிந்து இசை கோர்க்கும் பணிகள் ஆரம்பமாகியிருக்கிறது. படம் பற்றிய அனுபவங்களை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன் . இதன் டீசர் அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளோம் 

ஆர்.வி.சரவணன் 

1 கருத்து:

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்