செவ்வாய், ஜனவரி 01, 2013

ஸ்வீட் காரம் காபி ------ 01-01-2013


ஸ்வீட் காரம் காபி
------------------------------------------- 01-01-2013

இளமை எழுதும் கவிதை நீ.... தொடர்கதை எழுதி கொண்டிருப்பதால் ஸ்வீட் காரம் காபி  தொடர்ந்து எழுத முடியவில்லை. இது தகவலுக்காக. விளம்பரத்திற்காக என்று நீங்கள் நினைத்து கொண்டால்  அதற்கு கம்பெனி நிர்வாகம் பொறுப்பேற்காது (எப்படிலாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கு )


நீதானே என் பொன் வசந்தம் 

ஜீவா சமந்தா சம்பந்தப்பட்ட பள்ளி காட்சிகள், கிளைமாக்ஸ், பாடல் காட்சிகள்,இடையிடையே சந்தானத்தின் பஞ்ச் ரசிக்க வைக்கிறது   ஜீவாகேரக்டரை விட சமந்தா கேரக்டர் நம்மை ஈர்க்கிறது. காரணங்கள் இரண்டு 1. ஜீவா கேரக்டர் சமந்தவிடமிருந்து விலகி கொள்வதும் பின் சேர்ந்து கொள்ள முயற்சிப்பதுமான குழப்பம்  2.சமந்தா நித்யா கேரக்டரில் க்யூட் டாக நம்மை  கவர்வது.   எல்லா குட்டி பாக்ஸ் சையும்   டிக் அடிச்சிட்டு கடைசியா என் பாக்ஸ் க்கு வந்தியா வசனம் பளிச்.    இசை அரசர் இளையராஜாவின் இசை வார்ப்பில்  சாய்ந்து சாய்ந்து பாடல் ஹம்மிங் செய்ய வைக்கிறது என்றால்   என்னோடு வா.... பாடல் என் மனதோடு இன்னும் நெருக்கமாகி விட்டது.

திரைக்கதை யை கௌதம் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது அதாவது மணப்பாடு ஊருக்கு சமந்தாவை பார்க்க ஜீவா செல்வதில் படத்தை ஆரம்பித்து  இடைவேளைக்குள் பள்ளி கல்லூரி காட்சிகளை ப்ளாஷ் பேக்கில் கொடுத்து இடைவேளைக்கு பின் இருவருக்குமான இடைவெளியை ஒவ்வொரு காட்சியாக கொஞ்சம் கொஞ்சமாக  குறைத்து கிளைமாக்ஸ் க்கு கொண்டு வந்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. ( பொன் வசந்தம் தான் திரைக்கதையில் கொஞ்சம்   கவனம் செலுத்தியிருந்தால்)துப்பாக்கி


துப்பாக்கி படம்  பார்த்ததில் ஏ.ஆர்.முருகதாசின் உழைப்பு மெனக்கெடல் 
படம் முழுக்க தெரிந்தது. உதாரணமாக பஸ்சில் வெடிகுண்டு வைத்தவன் மருத்துவமனையிலிருந்து தப்பித்து ஓடும் போது கூடவே விஜய்  
ஓடி வந்து  அவனை வீழ்த்தும் காட்சி விஜய்  நடித்த படங்களில் எனக்கு 
பிடித்த  பூவே உனக்காக ,காதலுக்கு மரியாதை ,கில்லி, வரிசையில் இந்த படமும் சேர்கிறது . தன் தங்கை உள்ளிட்ட பெண்களை மீட்கும் சண்டை காட்சி, ராணுவத்துக்கு மரியாதை செய்யும் கிளைமாக்ஸ் காட்சி சத்யனை விஜய்  தவிக்க விடும் காட்சிகள்நல்லாருந்தது என்றாலும்,விஜய் செய்யும் செயல்கள் அனைத்தும்  எப்படி அரசாங்கத்திற்கு தெரியாமல் போகிறது நடு கடலில் கப்பல் வெடிக்கிறது எனும் போது அது  கூடவா அரசாங்கத்திற்கு தெரியாமல் போய் விடும், இதெல்லாம் சரி செய்திருக்கலாம்.ஆயிரம் பேருக்கு குண்டு வைக்கிறவனே சாவை பத்தி கவலைப்படலே நாம கவலைப்படலாமா வசனம் படம் போலவே நச்.)


------

நட்சத்திர சிறுகதை 

சென்ற மாத விகடனில்  நட்சத்திர எழுத்தாளர்கள் சிறுகதை  அணிவகுப்பில் சங்கர் பாபு வின், சவீதாவும் அவளது இரு அக்காக்களும் என்ற சிறுகதை என்னை கவர்ந்தது காரணம்  இந்த சிறுகதையின் வரிகள்.  உதாரணத்திற்கு  சில வரிகள் இங்கு 

* இயற்கை படைத்திருக்கும் உமிழ் நீரை ஆண்களை அவமானப்படுத்தப் பயன்படுத்தும்  


* சென்ற  பிறவியில் ஏதோ பவர் புல் யாகங்கள் செய்தவர்களாக இருக்கும். தேவதைகளை அல்ப மனிதர்கள் திருமணம் செய்ய வேறு எந்த காரணம்   இருக்க கூடும் ?

* நில உரிமையாளர்கள் கூலி தரும் விசயத்தில் தான் ஏழை நாடுகளை பார்ப்பார்களே தவிர,  ரியல் எஸ்டேட்  பிசினெஸின்  போது நியுயார்க் ,டோக்கியோ,மும்பை போன்ற நகரங்களில் தங்களது உடைமை இருப்பதாக எண்ணி கொள்வார்கள். 


கதை முழுக்கவே இது போன்ற வரிகள் ரசிக்க  வைத்தது (வரிகள் கோர்த்து தொடுக்கப்பட்ட சிறுகதை )

------

மார்கழி கோலம் ஒன்று 


------

சில்லறை 

சமீபத்தில் கும்பகோணம் டு திருப்பூர் சென்றிருந்த போது ஒவ்வொரு பேருந்தாக மாறி சென்றோம். ஒரு பேருந்தில் ஏறிய போது ஐந்து ருபாய் சில்லறையா கொடுங்க சார் என்றார் நடத்துனர். நான் இல்லை என்று மறுக்கவே அவர் இப்படி சொன்னா எப்படி சார் என்று சலித்து கொள்ள நான் சார் உங்களை போலவே எல்லா பேருந்திலேயும் சில்லறை கேட்டு நான்  கொடுத்து என்னிடம் இப்ப சில்லறை இல்லாமல் போய் விட்டது என்றேன் 
 சார் எல்லோருக்கும் கொடுத்துட்டு எனக்கு மட்டும் இல்லேன்னா எப்படி சார்  என்றாரே பார்க்க வேண்டும்.(என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு)மின்வெட்டு கூல் 

கும்பகோணம் பக்கத்திலே கூல் ட்ரிங்க்ஸ் வாங்கினேன். பாட்டிலில் போட்டிருந்த விலைக்கு மேல் மூன்று ரூபாய் கூடுதலாக வாங்கினார்கள் கேட்டதற்கு  மின் வெட்டு என்றார்கள். சரி அவர்கள் சொல்வது நியாயம் தானே என்று நினைத்து கொண்டேன். சென்னையில் சென்ற வாரம் கூல் ட்ரிங்க்ஸ் வாங்கினேன் இங்கும் கூடுதலாக  ஒரு ரூபாய் வாங்கி கொண்டார்கள் கேட்டதற்கு கடைக்காரர் சொன்னகாரணம்  மின்சாரம் தான்.  இங்கே அப்படி என்ன மின் வெட்டு என்று நான் கேட்டதற்கு அவர்  மின் கட்டணம் உயர்ந்துருச்சுல்ல  என்றார் ( நடத்துங்க )

------

குறை(ஒன்று )மில்லை 

சமீபத்தில் நந்தனம் சிக்னல் அருகே நான் நடந்து வந்து கொண்டிருந்த போது கண் தெரியாத மாற்று திறனாளி ஒருவர் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்தார். கார்களும் டூ வீலர் களும் பறந்து கொண்டிருக்க, அவர் ரோடின் மையத்துக்கு சென்று கொண்டிருப்பதாக எனக்கு தோன்றவே நான் அருகே சென்று ஓரமா வாங்க என்று சொன்னேன். அவர் உடனே நான் அந்த  பக்கம் நந்தனம் காலேஜ் போகணும் என்னை விட்டுடறீங்களா என்று  கேட்டார் நான் உடனே அந்த பக்கம் போற வேலை இல்லியே என்று இழுத்தவன், உடனே சுதாரித்து கொண்டு, விடறேன் வாங்க என்று அவர் கை பிடித்து அந்த டிராபிக்கை  கடந்து  போய் ஓரமாக நடைபாதையில் அவரை விட்டு, எங்கு விட்டுருக்கிறேன் என்று விவரமும் அவரிடம் சொல்லி விட்டு  வந்தேன். வேலைகளுக்குள் என்னை ஈடுபடுத்தி கொள்ளும் வரை அவரது ஞாபகமே என்னை சுற்றி வந்து கொண்டிருந்தது.  கடவுளின்  மேல் கொஞ்சம் கோபமும் வந்தது (கடவுளின் படைப்பில் வேண்டுமானால் குறை இருந்து விட்டு போகட்டும். மனிதர் நாம் காட்டும் அன்பில் ஏதும் குறை இருக்க வேண்டாம் )

------
மாதர் தமை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் 

சென்ற வாரம் என்னை மிகவும் உலுக்கிய சம்பவம். டில்லியில் மருத்துவ மாணவி பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு  பிழைத்து 
எழ  போராடி மரணமடைந்தது. அவருக்காக லட்சோபலட்சம் பேர் போராடி , கண்ணீர் விட்டு கதறி துணை  நின்றாலும், மாணவி  அந்த  சூழ்நிலையில்  தன்னை காப்பாற்ற ஒருவர் கூட இல்லையா என்று கதறியிருப்பாரே என்பதை  நினைக்கையில்  என் மனம் பதறுகிறது. தமிழகத்திலும் இதே போல் சம்பவங்கள் அரங்கேற, இங்கு மட்டும் போராடும் எண்ணம் ஏனில்லை .எது எப்படியாகிலும் அந்த பாதகர்களுக்கு தரப்படும்  தண்டனை  அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூரத்திற்கு வழங்கப்படும் சரியான நீதியாகவும்  இனி வரும் காலங்களில் இது போல்  ஒரு செயல் நடைபெறா வண்ணமும்   இருக்க  வேண்டும். (தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் )


------ எங்கள் மகன் ஹர்ஷவர்தன்  
வடிவமைத்த  புத்தாண்டு வாழ்த்து 


FINAL PUNCH


புத்தாண்டு சபதமாக எதை ஏற்கிறோமோ இல்லியோ மனித நேயம் ஒவ்வொருவருக்குள்ளும் வேண்டும்  என்ற சபதம் ஏற்போம் 

அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்  

ஆர்.வி.சரவணன் 

5 கருத்துகள்:

 1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. இறுதியாக சொன்னது தான் உண்மை மனித நேயத்தோடு இருக்கப்பழகுவோம். புத்தாண்டு வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்.

  பதிலளிநீக்கு
 3. நல்லதொரு பகிர்வு! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. ஹர்ஷவர்தன் வடிவமைத்த புத்தாண்டு வாழ்த்து மிக அருமை ..பாராட்டுக்கள்..

  இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 5. மனித நேயம் தொலையவில்லை , தொலைக்கப்பட்டுவிட்டது சார் ..
  பார்ப்போம் மக்கள் உணர்வார்களா என்று ?

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்