செவ்வாய், ஏப்ரல் 11, 2017

முகநூல் குறிப்புகள் -1




முகநூல் குறிப்புகள் -1

முகநூலில் அவ்வப்போது நான் எழுதி வரும் பதிவுகளை முகநூல் குறிப்புகள் என்ற தலைப்பில் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 


"றைவா, ஆலயம் ஒன்றை எழுப்பி உன் புகழ் பாட விரும்புகிறேன். நீ அங்கே எழுந்தருளி அருள் பாலிக்க வேண்டும்" பக்தன் சொன்னான்.
அசரீரி ஒலித்தது.
"பக்தனே. எத்தனையோ ஆலயங்கள் அகிலமெங்கும் இருக்க, புதிதாக நீ ஆலயம் 
எழுப்ப வேண்டியதன் அவசியம் என்ன? "


தடுமாறிய பக்தன், "எனக்கென்று என் விருப்பபடி ஆலயம் எழுப்ப ஆசைப்படுகிறேன்." என்றான் பெருமையும் கர்வமும் பிடிபட.

"ஹா.ஹா என் பெயரை கொண்டு உன்புகழ் பாட போகின்றாயா?" அசரீரியின் 
நகைப்பில் இருந்த கேலி அவனை திக்குமுக்காட வைத்தது.
"ஒரு ஆலயம் எழுப்ப ஆசைப்பட்டது தவறா?"
"நீ (ஆலயம் எழுப்பி) என்னை அழைக்காதே.
இருக்கின்ற ஆலயங்களில், மனிதர்களில் எங்கே நானிருக்கிறேன் என்று 
என்னை தேடி வா"
இறைவனின் சொல் ரூபத்தில் பக்தன் கள்ளானான்.

------


டங்களில் ஹீரோவுக்கு கண்பார்வை வரும் போது நீங்க யாரை பார்க்கணும்னு விருப்பப்படறீங்கனு கேட்பாங்க. அதற்கு ஹீரோ அம்மா, அப்பா, காதலினு அவருக்கு யார் மேல பிரியம் ஜாஸ்தியோ அவர்களை சொல்வார்.
இதுவே அவர் கண்திறந்து பார்க்க போகிறவர்களோட மனநிலை எப்படி இருக்கும். சமீபத்திய படம் ஒன்றில் வந்த காட்சி.
ஹீரோ கண்விழிக்க போகிறார். அவரது அம்மா ஹாஸ்பிடலுக்கு சுடிதாரில் வருவதை பார்த்தவுடன் கணவர் (ஹீரோவோட அப்பா). அதிர்ச்சியாகி என்னடி இது கூத்து " என்று கேட்கிறார்.

அம்மா சொல்கிறார். " பத்து வருஷத்துக்கு முன்னாடி என் பையன் என்னை எப்படி பார்த்தானோ எப்படி இருந்தா அவனுக்கு பிடிக்குமோ அப்படி தான் வந்திருக்கேன்."

"பார்த்து. பையன் இதுக்காகவா எனக்கு பார்வை கிடைச்சுதுனு கதற போறான்"
" ம். பொறாமை உங்களுக்கு. உங்களை பார்த்து தான் அடையாளம் தெரியாம திணற போறான்."
பையனுக்கு கண்பார்வை போன நிமிடத்துக்கே போய் பையனை வரவேற்பது மாதிரியான காட்சி.
படம் அதே கண்கள்.
இப்ப என்னோட ஹம்மிங் இந்த பாட்டு தான்
அடியே நீ களவாணி. குட்டி காட்டேரி. கண்ணாடி தேகத்தில் காட்டாறு நீ....

------

கும்பகோணம் டு திருவாரூர் சாலையில், (மூலங்குடி என்று நினைக்கிறேன்) டூ வீலருக்கு காத்து பிடிப்பதற்காக ஒரு கடையின் முன்பு வண்டியை நிறுத்தினேன். அமர்ந்திருந்த கடையின் முதலாளி எழுந்து வந்தார். அதிரச்சியானேன். காரணம் இடுப்பு வரை தான் அவர் உடலிருந்த்து. கைகளின் துணை கொண்டு வண்டி அருகே வந்தவரை பார்த்தவுடன் மனசு ஒரு கணம் நொறுங்கி போனது. இதெல்லாம் எனக்கு சாதாரணமே என்பது போல் அவர் பாட்டுக்கு கேசுவலாக டியூபை எடுத்து கொண்டு ஏர் செக் செய்ய ஆரம்பித்தார்.
"சார் காத்து ஏற்கனவே அதிகமா இருக்கு. இப்படி இருந்தா ஓட்டும் போது உங்க தோல்கள் வலி கண்டுடும். இவ்வளவு தேவை இல்ல" என்று அளவை சரி செய்தார்.

நான் பத்து ரூபாய் எடுத்து நீட்டிய போது,

"வேணாம் சார். நான் தான் காத்து பிடிக்கவே இல்லியே அளவை தானே சரிபண்ணேன் வேண்டாம். விடுங்க" என்ற படி பின்னுக்கு நகர்ந்தார்.
"ஏர் செக் பண்றதும் ஒரு வேலை தான்" என்று வற்புறுத்தி அவரிடம் பணம் தந்தேன்.
டூ வீலரை ஸ்டார்ட் செய்து செல்ல ஆரம்பிக்கையில் அவர் சொன்ன வார்த்தை தான் திரும்ப திரும்ப என் ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருந்தது.
"நான் தான் காத்து பிடிக்கலியே. காசு வேணாம்"
யோவ். உன்னை ரொம்ப பிடிக்குதுய்யா.

------

ன்று காலை ரயிலிலிருந்து இறங்கும் போது கவனித்தேன்.
பக்கத்து கோச்சிலிருந்து இறங்கிய இளம் பெண்ணை வரவேற்ற ஒரு தந்தை, மகள் தோளில் மாட்டியிருந்த பேகை வாங்கி தன் தோளில் மாட்டி கொண்ட படி மகளை 
கை வீசி நடக்க விட்டு அழைத்து சென்றார்.
பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து வருகையில் கனமான புத்தக பையை நாம் சுமந்து குழந்தைகளை கைவீசி நடக்க விட்டு மழலை மொழியை ரசித்த படி அழைத்து வருவோமே அதை ஒத்திருந்தது ஆனந்த யாழை மீட்டும் இந்த நிகழ்வு.
அந்த பேக் அப்படி ஒன்றும் கனமில்லை என்பது இங்கே கூடுதல் தகவல்.

------

ளவு கடந்த டென்ஷனுடன் அன்றைய தினம் ரயிலில் ஏறியமர்ந்தேன். எதிரில் இளைஞர் இளைஞிகள் சிலர் ஒரு குழுவாக வந்திருந்தார்கள். செம அரட்டையிலிருந்தார்கள். அவர்களது அரட்டையை டென்சனுடன் கவனித்தவாறே, வாங்கி வந்த பார்சலை பிரித்து தோசையை சாப்பிட்டு முடித்தேன். தண்ணீர் பாட்டில் வாங்காமல் ஏறி விட்டது அப்போது தான் தெரிந்தது.
சரி தாம்பரத்தில் எப்படியும் வாங்கி விடலாம் என்று காத்திருந்தேன். ஆனால் எனது கோச் நின்ற இடத்தில் எந்த கடையும் இல்லை. தண்ணீர் பாட்டில் விற்ற படியும் யாரும் வரவில்லை. பசியோட கூட இருந்திடலாம் தாகத்தோட இருக்க முடியாது என்பதை உணர்ந்த நேரமது.
ரயிலில் மற்றவர்களிடம் கேட்கவும் கூச்சமாக இருந்தது. சரி அப்படியே இருந்து விடலாம் என்றாலும் முடியவில்லை. எதிரில் அரட்டையிலிருந்தவர்களிடம் தண்ணீர் பாட்டில்கள் நிறைய இருக்கவே,
"தண்ணீர் பாட்டில் வாங்க முடியல. காசு வேண்ணா கொடுத்துடறேன் ஒரு பாட்டில் கொடுக்கறீங்களா?" என்று நான் சங்கோஜமாக கேட்ட அடுத்த நொடியே தாமதிக்காமல் முழு தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினார்கள். நான் அதற்குண்டான பணம் நீட்டிய போது "அதெல்லாம் வேண்டாம் சார்" என்று மறுத்து விட்டார்கள்.
ஆகவே, எனது அப்போதைய தேவைக்கான தண்ணீரை மட்டும் எடுத்து கொண்டு விட்டு, பாட்டிலை திரும்ப கொடுத்து நன்றி சொன்ன போது "இதுக்காக எதுக்கு சார் நன்றிலாம்" என்ற படி புன்னகைத்தார்கள்
"கொஞ்சம் டென்சன். அதனால வாங்க மறந்திட்டேன் " என்று அவர்களிடம் நான் சொல்லி கொண்டிருக்க, நீ வாங்காமல் வத்ததால் தான்டா இப்படி ஒரு அனுபவம் உனக்கு கிடைச்சிருக்கு என்ற படி இடித்துரைத்து கொண்டிருந்தது மனசு.

------

டலூரிலிருந்து கும்பகோணத்திற்கு பேருந்தில் வந்து கொண்டிருக்கையில் தான் அந்த இளைஞனை பார்த்தேன். எனக்கு பக்கத்து சீட். பேசி கொண்டிருக்கையில், படித்த பின் வேலைக்காக கஷ்டப்பட்டு நண்பர்கள் உதவியுடன் சென்னை வந்து வேலையில் சேர்ந்திருப்பதாய் சொன்னார். பணம் செலவழித்து படித்து விட்டு கிடைத்த வேலையில் குறைவான சம்பளத்தில் பணியாற்றுவதன் கவலை (நண்பர்களுடன் உற்சாகமாக அளவளாவி கொண்டிருந்தாலும்) அவரிடம் இருந்தது.
எவ்வளவு சம்பளம் வருது என்று கேட்ட போது,
மாசம் முழுக்க ஓவர் டைம் சேர்த்து பார்த்தா கூட பிடித்தம் போக 12000 வரை வரும். நண்பர்களுடன் சேர்ந்து தங்கி கொள்வதால் இடம் சாப்பாடு செலவு எல்லாம் போக 3000 வரை கையில் நிக்கும். அதை வீட்டுக்கு அனுப்புகிறேன் என்றார்.
அவரை பார்க்கையில் சென்னை வந்த புதிதில் நான் வேலைக்காக கஷ்டப்பட்டு கொண்டிருந்த காலங்கள் என் நினைவில் வந்து சென்றன.
தீபாவளி வாழ்த்துக்களை சொல்லிய படி பேருந்தை விட்டு இறங்கும் போது கேட்டேன். ( தீபாவளிக்கு சென்னையிலிருந்து வருகையில் நடந்தது இது)
"அப்பா என்ன பண்றாரு?"
"அப்பா விவசாயிங்க".

படம் : திருவாரூர் தியாகராஜர் கோவில் எனது க்ளிக் 

ஆர்.வி.சரவணன் 

5 கருத்துகள்:

  1. இதில் மூன்று படித்தது நினைவில் இருக்கிறது
    இரண்டு புதிது
    இதைத் தொடரலாம்
    (ஒரு சின்ன ஆலோசனை
    தலைப்பு குடந்தையூர் என்பதனை
    குடந்தையூரார் என வைத்துக் கொண்டால் என்ன ?)

    பதிலளிநீக்கு
  2. மீண்டும் வாசித்தேன்...

    (வியாபார பயணத்தில்)

    பதிலளிநீக்கு
  3. குடந்தையூர் என்பதே நல்லாருக்கு

    பதிலளிநீக்கு
  4. முகநூலில் படித்தேன், இங்கு மறுபடியும். திருவாரூர் கோயில் புகைப்படம் அழகு.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்