திங்கள், ஏப்ரல் 24, 2017

முகநூல் குறிப்புகள் - 2

முகநூல் குறிப்புகள் - 2


ரொம்ப நாட்களுக்கு முன்பு அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்ப எல்லாம் திரும்பவும் இந்த படம் பார்க்கணும் என்று நினைத்து கொள்வேன். அந்த வேளை இன்று வந்தது. டிவியில் இன்று இந்தப் படம் போட்டதும் பார்க்க ஆரம்பித்து முடித்து விட்டேன். அந்தப் படம் மோகன், இளவரசி ரேவதி நடித்த ஆர்.சுந்தர்ராஜனின் குங்குமச்சிமிழ்.
வறுமையில் வேலை தேடி கஷ்டப்படும் காதலர்கள் மோகன் இளவரசி. ஆறு மாதம் கழித்து சத்திக்கலாம் என்ற ஒப்பந்தம் செய்து கொண்டு வேதனையுடன் பிரிகிறார்கள். பிரிந்த அடுத்த நாளே இருவர் வாழ்க்கையிலும் வறுமை விடைபெற்று செல்வத்தில் திளைக்கும் வாழ்க்கை கிடைத்து விடுகிறது . இருவருமே எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பிருக்க, மோகனுக்கு வேலை கிடைத்ததே, ரேவதியின் கல்யாணம் நின்று போனதால் தான் என்பது தெரிய வருகிறது. பிராயச்சித்தமாக அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மோகன் சம்மதிக்க, இது தெரியாமல் இளவரசி அந்த திருமணத்திற்கு அட்சதைபோட வருகிறார். இதில் யார் தியாகியாகிறார் என்பதே கதை.
காதலர்கள் வேலை தேடி கொண்டே ஒன்றாக தங்கியிருக்கும் வரம்பு மீறாத காட்சிகள், அவர்கள் தங்கியிருக்கும் இடங்கள்,( கூட்ஸ் வண்டி, கடற்கரையின் பாழடைத்த இடம்) பாரப்பவர்களை எல்லாம் "என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறியா" என்று கேட்கும் டெல்லி கணேஷ் கேரக்டர். எந்த பொருளானாலும் போட்டுடைக்கும் ரேவதி,
இளையராஜாவின் ஆறு பாடல்கள் (ஒரு பாட்டு ரிப்பீட்) என்று ரசிக்க ஏராளமான விசயங்கள் இதில் இருக்கிறது.
வேலை இல்லா திண்டாட்டத்தை பற்றி ஒரு காட்சி வரும். வேலை தேடி கொண்டிருக்கும் மோகன், நடுரோட்டில் ஒருவர் ஆக்சிடெண்ட்டில் இறந்து கிடப்பதை பார்ப்பார். அடுத்த நிமிடம் இறந்தவர் பார்த்த வேலையை வாங்கி விட அந்த அலுவலகம் நோக்கி அவசரமாக விரைவார். அவருக்கு முன்பே அந்த வேலை வேறொருவர் வாங்கியருப்பது தெரிய வருகையில் மோகன் வேதனையை இப்படி வெளிப்படுத்துவார். "வேலையில்லா திண்டாட்டம் என்னை விட பாஸ்டா இருக்குது".
இடைவேளைக்கு முன் இளவரசி பின் ரேவதி என்று கதை அமைத்திருந்தாலும். இடைவேளைக்கு பின் இளவரசி கேரக்டரின் நிலை பற்றி இன்னும் காண்பித்திருக்கலாம். சில கேரக்டர்களின் சஸ்பென்ஸ் முன் கூட்டியே நாம் அறிந்து கொள்வதை தடுக்கும் விதமாகவும் திரைக்கதை அமைந்திருக்கலாம்.
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது. அவ்வப்போது நான் முணுமுணுக்கும் பாடல் இது. நண்பர்களுடன் இந்தப்படம் செகண்ட் ஷோ கும்பகோணம் செல்வம் தியேட்டரில் பார்த்துவிட்டு, அடுத்த நாள் இப் படத்தை பற்றி தெரு முனையில் இருந்த ஒரு வீட்டு திண்ணையில் அமர்ந்து படம் பற்ற விவாதித்தது இன்றுவரை நினைவில் இருக்கிறது.

------


திருப்பூர் செல்லும் வழியில், திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலிலுக்கு சென்றிருந்தோம். அந்த படிக்கட்டுகளில் அமர்ந்து மாலை வேலைகளில் திருச்சியின் அழகை ரசிப்பதென்றால் அலாதி பிரியம் எனக்கு. இயந்திர வாழ்க்கையில் அதெல்லாம் சாத்தியப்படுவதில்லை. இன்று கூட பாருங்கள். நாங்கள் கோவிலில் சென்று நுழைந்தவுடன் நடந்து வந்த களைப்பில் என் பெண் மயக்கமாகி விட்டாள். பதட்டமாகி ஓடிப்போய் ஜூஸ் வாங்கி வந்து கொடுத்து சரிப்படுத்தி அவளை கீழே அழைத்து வருவதற்குள் நாங்கள் சோர்வாகி விட்டோம்.கண் இமைக்கும் நேரத்திற்குள் ஒரு டென்ஷனை கொடுத்து அதிலிருந்து மீட்டெடுப்பதில் கடவுளுக்கு நம் 
மேல் அலாதி பிரியமுண்டு.

------
சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு போன் கால் வந்தது. "சார் உங்க செல் நம்பர்க்கு பரிசு விழுந்திருக்கு" என்றார் போனில் பேசிய பெண்.


"என் நம்பரை யாருக்கும் கொடுக்கலியே ?. பின்ன எப்படி செலக்ட் பண்ணீங்க" குழப்பமானேன்.


" எங்க கம்பெனில ரேண்டமா செலக்ட் பண்ணிருக்கோம் சார். எத்தனையோ பேர்ல உங்களுக்கு மட்டும் பரிசு கிடைச்சிருக்கு. இந்த பரிசை நீங்க வாங்கிக்குறதுக்கு ..... " என்று தொடர்ந்தவரை இடைமறித்து,

"எனக்கு உங்க பரிசு வேண்டாம்" என்றேன் உடனடியாக.
அந்த பெண் "சார் முதல்ல நான் சொல்ற டீடெய்ல்ஸ் கேட்டுடுங்களேன்." என்றார்.

"கேட்ட பின்னாடியும் அதை தான் சொல்ல போறேன். அதை போய் எதுக்கு கேட்டுகிட்டு" என்ற படி போனை கட் பண்ணிட்டேன்.

இப்ப அவங்க அடுத்த நம்பருக்கு போன் பண்ணி, "சார் உங்க செல் நம்பருக்கு மட்டும் பரிசு விழுந்திருக்கு" அப்படின்னு தானே ஆரம்பிப்பாங்க.

------

இன்று மின்சார ரயிலில் கூட்டம் அதிகமிருந்தது.ஒரு ரயில் நிலையத்தில் ஏறிய குடும்பமொன்றில், கணவன் கை நிறைய லக்கேஜ்களுடன் இருந்தார். அவரது மனைவியும் இரு மகள்களும் (சிறுமிகள்) ஆளுக்கொரு பக்கம் கிடைத்த சீட்களில் அமர்ந்தாலும், அவருக்கு மட்டும் சீட் கிடைக்கவில்லை. இதை பார்த்த சிறுமிகளில் ஒன்று தன் தந்தையை பார்த்து சொன்ன வார்த்தைகள் ஒரு நெகிழ்ச்சி கவிதை.
"அப்பா நீங்க வந்து உட்காருங்க. நான் வேண்ணா  உங்க மடில உட்கார்ந்துக்கறேன்".

------

அந்த பிரபல ஹோட்டலில் நானும் நண்பரும் சென்று சாப்பிட அமர்ந்த போது மதியம் 2 மணி. பெயர் பலகையில் ஹாட் இட்லி இருக்கவே, சர்வரிடம் விசாரித்து உறுதி செய்து கொண்டு இட்லி ஆர்டர் செய்தோம். இட்லியும் வந்தது. ஆனால் அது ஹாட் இட்லி அல்ல. ஆறிப்போன இட்லி.
சர்வரிடம் "ஹாட் இட்லினு போட்டிருக்கீங்க.ஆனா இட்லி சூடாவே இல்லியே" என்றேன்.
"இந்த நேரத்துல சூடால்லாம் கிடைக்காதுங்க" என்றார் கறாராய்.
"அதை நாங்க ஆர்டர் பண்றப்பவே சொல்லியிருக்க வேண்டியது தானே" என்றேன்.
சர்வர் அதற்கு பதில் சொல்லாமல் "இட்லி வேணுமா வேணாமா"
என்றார் சலிப்புடன்.
அவரது சலிப்பு என்னை கடுப்பேற்றினாலும் அதை வெளிக்காட்டாமல்,
"இட்லி கேன்சல். தக்காளி சாதம் கொண்டு வாங்க. அதுல தக்காளி இருக்குதா பார்ப்போம்" என்றேன் கூலாக.

------


இன்று டிவியில் (கொஞ்ச நேரம்) பார்த்த ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் தன் ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் முதல் காட்சி,
மந்திரியின் கார் பவனி வருவதால் டிராபிக்கை நிறுத்தியிருக்கிறார்கள். அந்த நேரம் பிரசவ வலியில் துடிக்கும் பெண் ஆட்டோவில் இருக்கிறார். இதை கவனித்த சக போலிஸ் டிராபிக்கை திறந்து அந்த ஆட்டோவை அனுப்பி வைக்கிறார். இதைக் கண்டு மந்திரியின் ஆட்கள் அவரை தாக்க வர, டிராபிக் போலிசான ஹீரோ களத்தில் இறங்கி அவர்களை தாக்கி சிதறடிக்கிறார்.
இது போல ஏற்கனவே வந்து விட்டதே என்று கேட்க தோன்றுகிறதா?. எனக்கும் அப்படியே. இந்த காட்சி எப்படி வைத்திருக்கலாம். நீ தான் சொல்லேன் என்று நீங்கள் யாரேனும்  கேட்க கூடும். ஆகவே சொல்கிறேன்.

விரைவாக வரும் மந்திரியின் கார் பவனி திடீரென்று பிரேக் போட்டு போக்குவரத்து போலிசால் நிறுத்தப்படுகிறது. இறங்கி கோபமாய் வரும் அவருடைய ஆட்கள் "மந்திரி காரை நிறுத்தற அளவுக்கு இங்க அப்படி என்னய்யா நடக்குது" என்று கேட்க,
" ஸ்கூல் விட்டிருக்காங்க. குழந்தைகள் வீடு திரும்புறாங்க." என்ற பதில் வருகிறது.
"இதுக்காக போய் எங்களை நிறுத்தினவன் யாருடா ?" என்று கேட்கவே மந்திரி மற்றும் அவரது சகாக்களுக்கு சுட்டி காட்டுகிறார்கள் போலீசார்.
அங்கே சாலையெங்கும் குழந்தைகள் சுதந்திரமாக நடந்த படி சைக்கிளில் சென்ற படி இருக்க, டிராபிக் போலிசான ஹீரோ புத்தகங்களை கீழே சிதற விட்ட ஒரு சிறுவனுக்கு பொறுமையுடன் உதவி கொண்டிருக்கிறார்.

ஆர்.வி.சரவணன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்