செவ்வாய், பிப்ரவரி 02, 2016

ஒரு ஊர்லே ஒரு தேவதை....






ஒரு ஊர்லே ஒரு தேவதை....

பதிவுலக நண்பர்  நிஜாம் பக்கம் பல் சுவை பக்கம் நிஜாமுதீன் தேவதை பற்றிய தொடர் பதிவொன்று எழுதுமாறு அழைத்திருந்தார். http://nizampakkam.blogspot.in/2012/08/angel4th-year.html. 2012 ஆம் ஆண்டு எழுதிய அந்த பதிவு இதோ நண்பர்களுக்காக. இங்கே 


ஒரு ஊர்லே ஒரு தேவதை இருந்துச்சாம். மனிதர்கள் நடமாட்டம் இருக்கிற காட்டு பகுதியில் வசிச்ச அது நல்ல தேவதை.   அங்கே போற வர்ற மனிதர்கள் பேசுறதை உன்னிப்பா கவனிக்கும். அப்படி தான் ஒரு நாள் ஒரு செல்வந்தரும் அவர் கிட்டே வேலை பார்க்கிற  ஒரு வேலையாளும் அந்த பக்கம் வந்தாங்க. வேலையாள் பெரிய மூட்டை ஒண்ணை சுமக்க முடியாம திணறிய படியே தூக்கிட்டு வந்தான். கூட வந்த அந்த செல்வந்தர்  சீக்கிரம் நட என்று விரட்டி கொண்டே இருந்தார் (வண்டியிலே வச்சு எடுத்துட்டு போனா காசு நிறைய கொடுக்கணுமே னு அவர் தன்னோட வேலையாள் வச்சே இந்த சுமைய தூக்க வச்சிருந்தார்.)  வேலையாள் தன் முதலாளி கிட்டே "இந்த சம்பளத்திலே என்னாலே குடும்பம் நடத்த முடியலே  இந்த மாசத்திலேருந்து சம்பளம் கொஞ்சம் கூட ஏத்தி கொடுங்க" னு  கேட்டுகிட்டே நடந்தான். அதுக்கு அவர் "நீ பார்க்கிற வேலைக்கு இந்த  சம்பளமே ஜாஸ்தி பணத்துக்கு எல்லாம் ஆசைபடாதே" என்று அதட்டினார். இதை பார்த்த தேவதை, அந்த செல்வந்தருக்கு சரியான பாடம் புகட்டணும் னு முடிவு பண்ணிச்சு. 

அடுத்த நாள் அந்த முதலாளி அந்த வழியா தனியா வர்றப்ப அவர் கிட்டே ஒரு சின்ன பையை கொடுதுச்சு.  பிரிச்சு பார்த்தா அதிலே பொற்காசுகள் நிறைய இருந்துச்சு அவர் சந்தோசமா இதெல்லாம் எனக்கானு கேட்க, தேவதை "உனக்கில்லே ,உன் வேலையாள் கஷ்டபடறதாலே  இதை தந்திருக்கேன். கொண்டு போய் உன் வேலையாள் கிட்டே  கொடுத்துடு" னு சொல்லுச்சு. சரி னு வாங்கிகிட்டு போனவர் தன் வேலையாள் கிட்டே அதை கொடுக்காமே தானே வச்சுகிட்டார். இருந்தும் அவருக்கு  வேலையாளை பார்க்கிறப்ப உறுத்தலா இருந்ததால,  அதிலிருந்து நாலு காசுகள் மட்டும் எடுத்து அவன் கிட்டே கொடுத்து, "கஷ்டம்னு சொன்னியே. அதனாலே தரேன் வச்சிக்க. இன்னும்  நீ நேர்மையா  என் கிட்டே ஒழுங்கா வேலை பார்க்கணும்"  னு சொன்னார். காசு வாங்கிய வேலையாளுக்கு சந்தோஷம் தாங்க முடியல. "முதலாளி என் உழைப்புக்கு நீங்க கொடுத்த கௌரவம் இது. நீங்க காலாலே இட்ட வேலையை தலையாலே செய்வேன்" னு சொன்னான். முதலாளி, பொற்காசுகள் எல்லாத்தையும் நாமலே எடுத்துகிட்ட மாதிரியும் ஆச்சு. வேலையாளையும் திருப்திபடுத்தி காலம் முழுக்க நமக்கு விசுவாசமா இருக்க வச்ச மாதிரியும் ஆச்சு னு தன் வியாபார புத்தியை நினைச்சு ரொம்ப சந்தோசமாகிட்டார்.

 அடுத்த நாள் அவர் அந்த பையை ஆசையா திறந்து பார்த்தாரு. அதிலே காசுக்கு பதிலா வெறும் கூலாங் கற்கள் தான் இருந்துச்சு. அவருக்கு  கோபம் வந்துடுச்சு. பையை எடுத்துட்டு நேரா தேவதைய பார்க்க போனாரு அதுகிட்டே "நீ ஏன் கற்களை கொடுத்து  ஏமாத்தினே" னு கேட்டாரு. அதுக்கு தேவதை "உன் வேலைக்காரன் அல்லவா இதை வந்து கேட்கணும். நீ எதுக்கு வந்தே" னு கேட்டுச்சு. அவர் தடுமாறி ஆசைப்பட்டு தானே காசுகளை எடுத்துகிட்டதா சொன்னாரு. "வேலையாளுக்கு சேர வேண்டியதை நீ வச்சிகிட்டதினாலே அது கல்லா மாறிடுச்சு" னு தேவதை சொல்லுச்சு. அவர் உடனே "இதை திரும்ப காசா மாத்தறதுக்கு நான் என்ன பண்ணனும்னு" கேட்டாரு . வேலையாள் கிட்டே கொடுத்துடு. காசா மாறிடும்" னு சொல்லவே "சரி கண்டிப்பா கொடுத்துடுறேன் எனக்கும்  கொஞ்சம் காசு கொடேன்" னு கேட்டாரு அதுக்கு தேவதை சிரிச்சுகிட்டே "வேலையாள் கிட்டே இதை கொடுத்து காசா மாறினவுடன் ரெண்டு பேரும் பாதி பாதியா எடுத்துக்குங்க" னு சொல்லுச்சு. அவர் சந்தோசமா வேலையாள் கிட்டே போய் நடந்த எதையும் சொல்லாமே "தேவதை நமக்கு  காசு கொடுத்து பிரிச்சு எடுத்துக்க சொன்னிச்சு" ன்னு அவன் கையில் கொடுத்தாரு அவன் கைக்கு போனவுடனே அது பொற் காசுகளா மாறிடுச்சு.

 அவன் அதை அவர் கிட்டே திரும்ப கொடுத்துட்டான். " தகுதிக்கு மேலே ஆசைபடறதும் தப்பு. அடுத்தவங்க சம்பந்தமே இல்லாமே இலவசமா கொடுக்கறதை வாங்கறதும்  தப்பு தேவதை கிட்டேயே திருப்பி கொடுத்துடுங்க " னு சொன்னான் அவர்,  "முட்டாள் போல் பேசாதே  இதை நீ வாங்கிக்கிட்டீன்னா   நீயும் ஒரு முதலாளி ஆகிடுவே"னு  சொன்னாரு.
அதுக்கு அவன் "நீங்க கொடுக்கிற சம்பளத்திலே நானும் என் குடும்பமும் சந்தோசமா இருக்கோம். இந்த காசுகளை நீங்களே எனக்கு சொல்லாம வச்சிருக்கலாம். ஆனா எனக்கும் பாதி கொடுத்து என்னை முதலாளியாக்க நினைச்ச உங்க நல்ல 
மனசுக்காக இந்த காசுகள் எல்லாதையும் நீங்களே எடுத்துக்குங்க" னு அவன் சொன்னவுடன் செல்வந்தருக்கு சம்மட்டியால் அடிச்சது போல் இருந்துச்சு.

திரும்பவும் தேவதைகிட்டே  போய் அந்த பையை  திருப்பி கொடுத்தார். அவன் சொன்னதை அப்படியே சொன்னார். தேவதை சிரிச்சுகிட்டே சொன்னுச்சு உன் வேலையாள் எப்படிப்பட்டவன் னு நீ தெரிஞ்சிக்க தான் இப்படி செஞ்சேன் . ஒரு வேலையாள் எப்படி நடந்துக்கணும்னு அவன் காண்பிசிட்டான். நீ போய் 
ஒரு முதலாளி எப்படி நடந்துக்கணுமோ  அப்படி அவன் கிட்டே நடந்து காட்டு 
னு சொன்னுச்சு. 

ஆர்.வி.சரவணன் 

8 கருத்துகள்:

  1. நன்றி சரவணன் சார்!

    தேவதை நெத்தியடியா சொல்லிடுச்சில்ல???

    பதிலளிநீக்கு
  2. ஆஹா@ அருமையான கதை,
    நலல் படிப்பினை.

    பதிலளிநீக்கு
  3. அருமையான கதை சார். அழகா சொல்லிருக்கீங்க.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்