செவ்வாய், பிப்ரவரி 17, 2015

நான் என்ன சொல்றேன்னா....
நான் என்ன சொல்றேன்னா....நான் முகநூலில் எழுதியதை  முகநூலில்  படிக்காத நண்பர்களுக்காக பதிவாக்கி  தந்திருக்கிறேன். இதை பதிவாக தேத்தியிருக்கிறேன் என்றும் சொல்லலாம் ( திருமண ஒத்திகை தொடர்கதையே வந்து கொண்டிருக்கிறது 
என்பதால் நடுவே ரிலாக்ஸ் க்காக இந்த பதிவு )

பேருந்து பயணமொன்றில், ஹெட் செட் இல்லாததால் என் செல் போனை ஸ்பீக்கரில் (எனக்கு மட்டும் கேட்குமாறு) வைத்து பாட்டு கேட்டு கொண்டிருந்தேன். இருந்தும் பக்கத்தில் அமர்ந்திருந்தவருக்கு இதனால் ஏதேனும் தொந்தரவு இருக்க போகிறதோ என்று நினைத்த படி நான் அவரிடம் கேட்க போக, 

அவரோ "பயணத்தில் பாட்டை விரும்பாதவர் உண்டா
எனக்கு ஒன்றும் தொந்தரவில்லை நீங்கள் கேளுங்கள்" என்று புன்னகைத்தார்.
கூடவே "என்னாலே உங்களுக்கு ஏதேனும் சிரமமிருக்கிறதா" என்றும் கேட்டார். "உங்களாலே எனக்கென்ன சிரமம்? " என்று பதில் கேள்வி கேட்டேன்.
"பிரெண்ட் கல்யாணத்திற்கு போனேன். அப்படியே பார்ட்டி அட்டென்ட் பண்ணிட்டு ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு வந்திருக்கேன் அதான்" என்றார்.நான் விழிக்க ஆரம்பித்தேன்
பின்பு அவர் தூக்கத்தில் என் தோளில் சில முறை சாய்ந்த போது தான் உங்களுக்கு சிரமம் இல்லையே என்று கேட்டதற்கான காரணம் புரிந்தது. நான் டென்சன் ஆகாமல் இருப்பதற்கும் அது உதவி புரிந்தது.
------ 
நேற்று இரவு ஏழு மணிக்கு நண்பருடன் சென்ட்ரலில் இருந்து அசோக் பில்லர் செல்வதற்காக ஆட்டோ கேட்ட போது ஒவ்வொருவரும் 300 ரூபாய் தந்தால்
வருகிறேன் என்றே சொன்னார்கள்.
ஒருவர் மீட்டர் போட்டாலே 250 ரூபாய் ஆகும் என்று அடம் பிடித்தார்.மீட்டர் என்ன ஆயிற்று என்று கேட்ட போது ஒருவர் வொர்க் பண்ணலே என்றும் மற்றவர்கள் பதில் சொல்லாமல் நழுவியும் சென்றார்கள். இப்படியே 10 ஆட்டோ வரை கேட்டு சலித்த பின் ஒரு ஆட்டோ வந்தது. அவரை கேட்ட போது போகலாம் சார் என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் உடனே மீட்டரையும் ஆன் செய்தார். எக்ஸ்ட்ரா போட்டு கொடுங்கள் என்றெல்லாம் அவர் கேட்கவில்லை. சரி இறங்கும் போது கேட்பார் போலிருக்கிறது என்று நினைத்து கொண்டேன்.
இறங்கும் போது மீட்டர் என்ன ஆயிற்றோ அதை மட்டும் தான் வாங்கி கொண்டார்.   நான் சந்தோசமாய் 10 ரூபாய் சேர்த்து கொடுத்த படி அவரிடம், இதற்கு முன்பு ஆட்டோகாரர்கள் கேட்ட தொகையை சொன்னேன். அவர் சிரித்த படி ஆட்டோ ஓட்டுபவர் ஒரு மக்கள் பணியாளன். இப்படி தான் இருக்க வேண்டும். நான் இப்படி இருப்பதையே விரும்புகிறேன் என்றார்.
எனது நண்பரிடம் முக நூலில் இதை பற்றி எழுத வேண்டும் என்று நான் சொன்ன போது அவர் பெயர் என்னன்னு கேட்டு அதையும் எழுதுங்க சார் என்றார். சங்கர நாராயணன் என்று தன் பெயரை சொன்ன படி அவர் எனை கடந்து சென்றாலும் ஞாபகத்தில் என்னவோ இன்னும் அங்கேயே தான் நிற்கின்றார்.அது சரி .ஆட்டோ மீட்டர் எவ்வளவு ஆனது தெரியுமா . 178 ரூபாய்
------
ஜனவரி மாதம் நான் வாங்கிய ஆன்றாய்டு செல் போன் சில மாதங்களிலேயே  (டிஸ்ப்ளே ஓபன் ஆகாமல்) வேலை நிறுத்தம் செய்து விட்டது. வாரண்டி இருக்கும் தெம்புடன் சர்விஸ் சென்டர் சென்றேன்.
அவர்கள் செக் செய்து விட்டு  "செல் போனுக்குள் தண்ணீர் வந்து விட்டதால் போர்டு மாற்ற வேண்டும்". என்றனர். நான் தண்ணீரில் போடவில்லை என்பதை சத்தியம் செய்யாத குறையாய் சொல்லி விவாதித்தும் ஒன்றும் பயனில்லை. (செல் தண்ணீரில் விழுவதும் தண்ணீர் செல்லில் விழுவதும் ஒன்று தாண்டா என்று நடுவில் நுழைந்து சொன்னது என் மைன்ட் வாய்ஸ்). சரி மாத்திருங்க என்றேன். 5000 ரூபாய் ஆகும் என்றனர். போனுக்கு வாரண்டி இருக்கு என்று பதறினேன். "தண்ணீரில் விழுந்தாலோ கீழே விழுந்தாலோ வாரண்டி யில் சேராது" என்றனர்."எததுல எல்லாம் பிரச்னையோ அதுக்கெல்லாம் வாரண்டி கிடையாதுன்னு சொல்லுங்க" என்று கடுப்படித்து முடிவா என்ன சொல்றீங்க என்றேன். ஆரம்பத்தில் இருந்து நாங்க இதை தான் சார் சொல்றோம் என்றனர். அதுக்கு புது போன் வாங்கிடலாமே என்றேன். உங்க விருப்பம் என்றனர். அந்த புது செல் போன் ல பிரச்னை வந்தால் அடுத்த செல் வாங்கனுமா . இப்படியே தொடர்ந்தால் உங்களுக்கு வியாபாரம். எங்களுக்கு ? என்ற படி எரிச்சலுடன் வெளியேறினேன்.11000 ரூபாய் கொடுத்து வாங்கிய போனுக்கு ஏழு மாதத்தில் 5000 ரூபாய் செலவா என்ற படி தொடர்பு எல்லைக்கு வெளியில், கவலையில் அமர்ந்திருக்கும் என்னிடம் எனை பேச வைப்பாயா என்ற  மௌன மொழி பேசிய படி என் எதிரே அமர்ந்திருக்கிறது  செல் போன்.
------
நேற்று படம் பார்க்க தியேட்டருக்கு நான் சென்று சேரும் போது மணி 6.55. படம் ஆரம்பித்த பின் செல்வது எனக்கு பிடிக்காது என்பதால் டிவி ஸ்க்ரீன் பார்த்தேன். ஏழு மணிக்கு என்று போட்டிருந்தத படத்திற்கு டிக்கெட் வாங்கி அவசரமாக உள்ளே நுழையும் போது தான் கவனித்தேன். டிக்கெட்டில் 6.45 மணி என்று போட்டிருந்தது.நான் அதிர்ச்சியாகி டிக்கெட் கிழிப்பவரிடம் கேட்க அவர் படம் போட்டாச்சு என்றார். நான் கடுப்பாகி அப்புறம் ஏன் டிவி ஸ்க்ரீன்ல 7 மணின்னு போட்டுருந்தீங்க என்றேன். இருக்காதே என்றவர் சரி நான் இந்த கம்ப்ளைன்ட் பற்றி டிக்கெட் கவுன்ட்டர் ல சொல்றேன் என்றார். சமாதானமாக. இப்ப எனக்கு கால் மணி நேரம் படம் போயிடுச்சே என்றேன். அதுக்கு என்ன சார் பண்றது என்றார். நான் திரும்ப ஒரு முறை படம் பார்க்க வர முடியுமா இல்ல நீங்க தான் பார்க்காத படத்தோட காசை திரும்ப கொடுப்பீங்களா என்று கடுப்படித்த படி படம் பார்க்க உள்ளே வந்தேன். ஒரு அரிவாள் திரையில் பறந்து வர டார்ச் லைட் ஒலி வழி காட்ட என் சீட் தேடி வந்து அமர்ந்தேன். படம் பார்த்த பின் எதுக்கு டிக்கெட் கிழிக்கிறவர் கிட்டே மல்லுக்கு நின்னோம் எப்ப வந்தாலும் இந்த படம் புரியுமே என்று தான் தோன்றியது
------
"புகழ்ச்சி என்பது முதுகை தட்டிக்கொடுப்பது போல இருக்கனும், முதுகை சொறிந்து விடுறது போல இருக்கக்கூடாது"
முக நூல் நண்பர் தோட்டா ஜெகனின் இந்த நிலை தகவல் படித்த போது, இதற்கு எதிர்பதமாக எனக்கு ஒண்ணு தோணுச்சு.
"தவறை சுட்டி காட்டுவது என்பது தலையில் குட்டுவது போல் இருக்கணும். தலையில் பாறங்கல்லை தூக்கி போடுவது போல் இருக்க கூடாது"

------

ரயில் கிளம்பும் போது வழியனுப்ப வந்தவர்கள்,
"ஊருக்கு போயிட்டு போன் பண்ணுங்க" என்பதும், பக்கத்தில் இருக்கும் பயணிகளிடம் "கொஞ்சம் பார்த்துக்கங்க" என்று சொல்வதும், ரயில் கிளம்பும் வரை நின்ற படி இருப்பதும் என்பதான அவர்களின் பாசத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இருக்கிறது "வழியனுப்ப வந்தவர் நல்ல படியாக வீடு போய் சேர்ந்தாரா" என்ற  நினைப்பிலேயே  ஊருக்கு செல்பவர்களின் பாசமும்


FINAL TOUCH 


எதுக்குமே பயப்படாதவன்  கிட்டே பிரச்னைகள் பக்கத்துல கூட வர பயப்படுது.
ஆனால்  பயப்படறவன் கிட்டே  தான் பிரச்னைகள் சுத்தி சுத்தி வந்து கும்மியடிக்குது

ஆர்.வி.சரவணன் 

7 கருத்துகள்:

 1. முகநூலில் படித்தேன் என்றாலும் இங்கும் படித்தேன் அண்ணா...
  அருமை.

  பதிலளிநீக்கு
 2. செலவு வாரமா...?

  கும்மியடித்தாலும் அதுவும் அனுபவம் தான்...

  பதிலளிநீக்கு
 3. எல்லாமே கலகலன்னு இருக்கு!

  தலைப்பு பிரமாதம்ங்க!

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்