வெள்ளி, ஆகஸ்ட் 08, 2014

எஜமான்எஜமான் 

என்னடா சரவணன் முதலாளின்னு உரிமை கொண்டாடற அளவுக்கு யாரு அவரை அப்படி இம்ப்ரெஸ் பண்ணதுன்னு யோசிக்கறீங்களா. எவ்வளவு உழைத்தாலும் இவ்வளவு தான்ப்பா என்று சம்பளத்தை குறைத்து கொடுப்பதை  பார்த்திருக்கோம். அல்லது  நான் அப்படி வேலை செஞ்சேன் இப்படி வேலை செஞ்சேன் என்று சீன் போடற தொழிலாளிகிட்டே முதலாளி பணத்தை அள்ளி கொடுத்திருப்பார். இப்ப நாம பார்க்க போறது வித்தியாசமான ஒரு முதலாளியை வாங்க வேலைக்கு போகலாம் சீ அவரை பத்தி பார்க்கலாம் 

நான்  20 வருடங்களுக்கு முன்பு ஒரு பங்கு சந்தை களத்தில், பங்கு விற்பனை அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்தேன். எனது வேலை பேங்க் சென்று பணம் எடுத்து வருவது மற்ற கம்பெனிகளுக்கு சென்று செக் வாங்கி வருவது மற்றும் ஆபீஸ்  க்ளெர்க் பார்க்க வேண்டிய வேலையும்.அதாவது  ஆள் இன் ஆள் அழகு ராஜா னு  வச்சிக்குங்களேன். என்னுடன் இன்னும் மூன்று பேர் வேலை பார்த்தார்கள் (அதில் ஒருவர் முதலாளியின் மச்சினன் அவர் தான் மேனேஜர்) 

எப்படி பார்த்தாலும்  எட்டு மணி நேர வேலையில்   2 மணி நேரமாவது நாங்கள்  ப்ரீயா  இருப்போம். வேலை என்று வந்தவுடன் அவரவர் பிஸியாகி விடுவோம். அந்த மாதிரி சமயங்களில் முதலாளி எங்களுடன் உலக விஷயங்கள் குறித்து சகஜமாக உரையாடுவார் . அன்றைக்கு செய்தி தாளில் உள்ள விஷயங்கள் குறித்து விவாதிப்பார். அரசாங்கத்தின் சட்ட திட்டங்கள் சரியாக பின் பற்ற வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொள்வார். 

30 ம் தேதி அன்று அலுவலகத்தில் நுழையும் போதே சரவணன் பேங்க் போய் பணம் எடுத்திட்டு வந்திடுங்க எல்லாருக்கும் சம்பளம் கொடுக்கணும் முதல் வேலை அது தான் என்பார். ஒரு நாள் தள்ளி கொடுப்பது கூட அவருக்கு பிடிக்காது. அதே வேலையில் மிகுந்த கண்டிப்பானவர். அதிகமாக லீவ் எடுத்தால் அவருக்கு பிடிக்காது. (எந்த ஓனருக்கும் பிடிக்காது.) நான் ஒரு முறை ஒரு வாரம் போல் லீவ் எடுத்திருந்தேன். அதற்கே முகம் சுளித்து 
இந்த மாதிரி இருந்தால் எனக்கு சரிபடாது சரவணன். என்று சொன்னார்.  . 

அவரது பிறந்த நாள்  வந்து விட்டால் எங்களை சரவண பவன் ஓட்டல் அழைத்து சென்று பார்ட்டி தருவார் .விரும்பியதை வாங்கி கொடுப்பார். ஒரு முறை அப்படி தான் வடபழனி சரவண பவன் சென்று சாப்பிட்டு விட்டு வெளி வந்தோம்.  தியேட்டரில் சூப்பர் ஸ்டார் நடித்த எஜமான் ஓடி கொண்டிருந்தது அலுவலகத்தில் நானும் என் நண்பனும் ஏற்கனவே பார்த்து விட்டோம் என்றாலும் அன்று அலுவலகத்தில் உள்ளவர்கள் எல்லோருடனும்  செல்லலாம் என்ற ஆர்வத்தில் முதலாளியிடம்  தயங்கி தயங்கி கூறினோம்  அவர், வாங்க போகலாம் என்று சொல்லி டிக்கெட் எடுக்க பணம் கொடுத்தார். அடுத்த நிமிடம் நான் தியேட்டர் பறந்தேன். ஆனால் பாருங்கள் படம் ஹவுஸ் புல். ப்ளாக்கில் டிக்கெட் விற்று கொண்டிருந்தார்கள். 


சரி டிக்கெட் வாங்கி விடலாம் என்ற முனைப்புடன் அவரிடம் விஷயம் சொன்னோம். அவர் மறுத்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் . 
பணம் செலவழிப்பது எனக்கு பிரச்னை அல்ல. ஆனால் அது சரியான வழியில் செலவழிக்கப்பட வேண்டும். ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி அதன் மூலம் அதை ஊக்குவிக்க கூடாது என்றார். படம் பார்க்கவில்லை என்ற எங்கள் ஏமாற்றத்தை   அவரது பதில்  விரட்டி அடித்து விட்டது.

இப்படியான முதளியிடத்தில் வேலை பார்ப்பதில் எனக்கு மிகுந்த திருப்தி இருந்தது.  எப்படி பார்த்தாலும் ஒரு மூன்று மணி நேரங்களாவது நான் சும்மா இருக்கும் படி நேரிடும். எனக்கு சும்மா உட்கார்ந்திருப்பது அவ்வளவாக பிடிக்காது. (நிஜமாக தான் சொல்றேன்) மேலும் இன்னொருவரிடம் சம்பளம் பெற்று கொண்டு சும்மா உட்கார்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது.எனவே அவர் வீட்டில் உள்ள வேலைகளை  கூட விருப்பபட்டு செய்து கொடுக்க ஆரம்பித்தேன். காலம் இப்படியே செல்லுமா சென்றால் கடவுளுக்கு போரடிக்குமே. பங்கு சந்தை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. முதலாளியிடம் இருந்த பங்குகள் மூலம் அவர் நஷ்டப்பட நேர்ந்தது. அவர் எங்களை அழைத்து, கம்பெனி நிலைமை சரியில்லை அதனால் வெளியில் வேலை தேடுங்க கிடைச்சவுடன் நீங்க விலகிக்கலாம் என்றார். மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் வேலை தேட ஆரம்பித்தேன். எனக்கு முதலில் வேலை கிடைத்தது. வாழ்த்துக்கள் சொல்லி அனுப்பி வைத்தார் 

இனி தான் கிளைமாக்ஸ் 

நான் வேலை விட்டு வெளியேறி வந்த பின் மூன்று  மாதங்களில் தீபாவளி வந்தது. கூடவே அவரிடமிருந்து போன் வந்தது. நீங்கள் இந்த வருடம்  வேலை பார்த்த மாதங்களை கணக்கிட்டு போனஸ் போட்டு வைத்திருக்கிறேன் வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று. இதை கேட்டவுடன் எனக்கு எவ்வளவு சந்தோஷம் வந்திருக்கும் பாருங்கள். என்னுடன் அங்கே வேலை பார்த்த நண்பர் தெய்வமே தெய்வமே நன்றி சொன்னேன் தெய்வமே என்று நெகிழ்ச்சியில் பாட ஆரம்பித்து விட்டார். அவருக்கு நன்றி சொல்லி எனது போனஸ் பெற்று கொண்டு வந்தேன். அதற்கு பின்  எவ்வளவு போனஸ் வாங்கினாலும் அவையெல்லாம் அந்த போனஸ் எனக்கு கொடுத்த திருப்திக்கு ஈடில்லை. 

 வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் நீ கற்று கொள்ள ஏதேனும் இருக்கும். என்று சொல்வார்கள்.  நான் முதலளியானால் இவரை போல் தான் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இவரிடம் தான் கற்று கொண்டேன். 

FINAL TOUCH 

இப்ப உங்களுக்கு தோணும். நீ வேலை பார்த்ததுக்கு உண்டான சம்பளத்தை தானே கொடுத்துள்ளார். இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று. 
தொழிலாளிகளின் பணத்தை அவர்கள் வேலை விட்டு சென்ற பின் 
எவ்வளவு முதலாளிகள் கொடுக்கின்றனர் என்பது தெரியாது. 

லாபத்தில் இயங்கும் போதே நஷ்டம் என்று சொல்பவர்களின்  இடையே நஷ்டப்பட்ட போதும் கூப்பிட்டு  கொடுத்தாரே போனஸ். அதனால் தான் எஜமான் என்ற பெயரிட்ட இந்த கட்டுரையை  இங்கே தந்திருக்கிறேன். 
அந்த முதலாளியின் பெயர் அருணாசலம்.


ஆர்.வி.சரவணன் 

16 கருத்துகள்:

 1. உங்க எஜமானருக்கு எட்டாத மனசு (அதாவது 'உயர்ந்த உள்ளம்').
  வாழ்க அவர் பல்லாண்டு!

  பதிலளிநீக்கு
 2. 'பல நேரங்களில் சில மனிதர்கள்' வரிசையில் இந்தப் பதிவை சேர்த்துக் கொள்ளலாம்தானே?

  பதிலளிநீக்கு
 3. இதுபோன்ற மனிதர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்

  பதிலளிநீக்கு
 4. இவ்வளவு நல்ல உள்ளம் படைத்தவர் இன்னும் சிறப்பாக வருவார் !

  பதிலளிநீக்கு
 5. நல்ல இதயம் படைத்த இவரைப் போன்ற ஒரு சில முதலாளிகள் இருப்பதால்தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறதோ! முதலாளிகளுக்கு ஒரு முன்னோடி! நல்ல அருமையான அனுபவம் சார் உங்களுக்கு!

  பதிலளிநீக்கு
 6. உண்மையிலேயே நல்ல இதயம் படைத்தவர் அவர்! அருணாசலம் என்ற பெயருக்கு பொருத்தமாக எஜமானராக வாழ்ந்து காட்டியிருக்கிறார்! நினைவு கூர்ந்த உங்களுக்கும் நினைவில் நிற்கும் அவருக்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. முதலாளிய பத்தி நல்லா எழுதியிருகீங்களே உங்களுக்கும் நல்ல மனசு!

  பதிலளிநீக்கு
 8. அந்த நல்ல மனிதரைப் பற்றி பகிர்ந்ததற்கு வாழ்த்துக்கள் அண்ணா....

  பதிலளிநீக்கு
 9. நான் ப்ளாக்கில் பார்த்த ஒரே படம்.. பாபா :-) இதுவே முதலும் கடைசியும்.

  "அதற்கு பின் எவ்வளவு போனஸ் வாங்கினாலும் அவையெல்லாம் அந்த போனஸ் எனக்கு கொடுத்த திருப்திக்கு ஈடில்லை"

  இதை உணர முடிகிறது. சிலது எப்போதுமே மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். சென்ட்டிமென்ட்டாகவும் இருக்கும்

  "தொழிலாளிகளின் பணத்தை அவர்கள் வேலை விட்டு சென்ற பின் எவ்வளவு முதலாளிகள் கொடுக்கின்றனர் என்பது தெரியாது."

  கொடுக்க வேண்டியதையே கொடுக்க மாட்டார்கள்.. இதில் எங்க அழைத்துக் கொடுப்பது :-)

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்