வியாழன், ஜூன் 26, 2014

எது புண்ணியம் (சிறுகதை)
எது புண்ணியம் (சிறுகதை)


கோவிலுக்கு கிளம்பி கொண்டிருந்த தன் முதலாளியிடம் வந்து நின்றான்
வீட்டு வேலையாள் முத்து.

அவன் தலை சொரிந்த படி நிற்பதை பார்த்த அவன் முதலாளி 
"என்னப்பா வேலையை பார்க்காமல் இங்க வந்து நிக்கிறே " என்றார்.


"முதலாளி ஒரு உதவி கேட்க வந்திருக்கேன்" 


"என்னனு சீக்கிரம் சொல்லு"


"பொண்ணுக்கு கல்யாணம் பேசியிருக்கேன் செலவுக்கு கொஞ்சம் பணம் கடனா வேணும்"
அவனின் குரலில் கெஞ்சல்  இருந்தது 

முதலாளி குரல் உயர்த்தும் முன்னே 


"உன் மூத்தபொண்ணு கல்யாணத்திற்கு வாங்கின கடனே நீ இன்னும்
அடைச்சபாடில்லே.அதுக்குள்ளே மறுபடியும் புது கடனா  "என்று சொல்லிய படி அங்கே வந்தார் முதலாளியின் மனைவி


"என்னம்மா பண்றது, வளைகாப்பு , பிரசவம் னு செலவு செய்யவே சம்பளம் சரியா
 போயிடுது"


"உனக்கு இன்னும் எத்தனை பொண்ணு இருக்கு" முதலாளியின் வரிகளில் இருந்த கிண்டலை கவனித்த அந்த வேலையாள் 


"இன்னும் ஒரு பொண்ணு இருக்குங்க" என்றான் சங்கோஜத்துடன் 


"அந்த பொண்ணு கல்யாணத்திற்கும் இங்க தான் காசு கேட்டு வருவியா
அதிர்ச்சியாய் கேட்டார் முதலாளி மனைவி 


"உங்களை விட்டா எனக்கு யாருங்க இருக்கா"


"சரியா போச்சு போ. ஏன்யா அளவா பெத்து குடும்பம் நடத்தறதை விட்டுட்டு
இப்படிஇங்கே வந்து நிக்க உனக்கு வெட்கமா  இல்லையா"

"இதுக்கும் நீங்க இருக்கிற தைரியத்துல தான் பெத்துகிட்டேன் னு  சொல்வான் பாரு 

அப்படி தானே டா"


அவமானம் அவனை தலை குனிந்து கொள் என்று சொன்னது 

"இதோ பார் ஏதோ என்னாலே முடிஞ்சது ஒரு பத்தாயிரம் தான்கொடுக்க முடியும் 
கேசியர்கிட்டே சொல்றேன் வாங்கிட்டு கிளம்பு" என்றார் முதலாளி கறாராய் 


"முதலாளி விலைவாசி இருக்கிற இருப்பிலே இது எப்படி போதும் கொஞ்சம் பார்த்து
 செய்யுங்க"

கெஞ்சும் அவனை சட்டை செய்யாமல் 
"நீ பாட்டுக்கு நின்னு பேசிகிட்டே இரு"

 என்று சொல்லிய படி அவர்கள் இருவரும் டிரைவரிடம் 

" சீக்கிரம் போப்பா டயமாயிடுச்சு"

என்று அவசரமாய் சொல்லியபடியே காரில் ஏறிக் கொண்டனர். கூடவே காரில் வந்து ஏறிய  அவர்களது உறவினர் 

"இந்த மாதிரி ஆளை எல்லாம் வேலைக்கே வச்சிக்க  கூடாது. என்று டிப்ஸ் கொடுக்க அவருக்கு பதில் கொடுத்தார் அந்த முதலாளி 

" என்ன பண்றது. வேலை சுத்தம் கை சுத்தம் இந்த மாதிரி ஆள் கிடைக்க மாட்டானே அதனாலே கேட்கிறப்ப ஏதோ கொஞ்சம் கொடுத்து சரி கட்ட வேண்டியிருக்கு "என்றவர் "கொஞ்சம் சீக்கிரம் போப்பா" விரட்டினார்  டிரைவரை 

"என்னங்க இனிமே யாவது கடவுள் நம்ம பொண்ணுக்கு கண் திறப்பாரா"

"சுவாமிக்கு திருகல்யாணம் பண்ணி வைங்க.முப்பது வயசாகியும் 
 தாமதப்படற உங்க பொண்ணோட  கல்யாணம் கண்டிப்பா முடிஞ்சிடும் நம்பிக்கையா  சொல்லியிருக்கார் ஜோசியர் அதனாலே தானே சுவாமிக்கு இன்னிக்கு திரு கல்யாணம்  நடத்தறதுக்கு அவசரமா போயிட்டிருக்கோம். கடவுள் கண்டிப்பா கண் திறப்பார்"


காரின் உள்ளே ஸ்டிக்கரில் இருந்த முருகன் அவர்களை  பார்த்து சிரித்து கொண்டிருந்தார்.

ஆர்.வி.சரவணன்

8 கருத்துகள்:

 1. நல்ல கதை! சரவணன் சார்! அதுதான் இறுதியில் முருகன்தான் தன் சிரிப்பிலேயே சொல்லிவிட்டரே எது புண்ணியம் என்று!

  பதிலளிநீக்கு
 2. அருமையான கரு! அழகாக சொன்னவிதம் சிறப்பு! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. நன்றி தனபாலன் சார்

  நன்றி துளசிதரன் சார்

  நன்றி சுரேஷ்

  நன்றி வெங்கட் நாகராஜ் சார்

  நன்றி கலையன்பன்

  நன்றி ஜெயக்குமார் சார்

  பதிலளிநீக்கு
 4. இப்படிப் பட்ட மனிதரைகளைப் பார்த்து சிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. நல்ல கதை சரவணன் சார்

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்